ஆட்டம்-4
ஆட்டம்-4
ஆட்டம்-4
“அரசி எல்லாம் ரெடியா..?” என கேட்டபடி, பல வருடங்ளுக்குப் பிறகு கணவர் தேஜஸுடன் வருவதைக் கண்ட இமையரசி, “ஆச்சுங்க” என்றார்.
“தாத்தா, எல்லாமே பாட்டி சூப்பரா ரெடி பண்ணிட்டாங்க” தங்க நிற பட்டு பாவடையில் அமர்ந்திருந்த, அதியரனின், பத்து வயதின் முடிவில் இருந்த மகள் திலோத்தமை, ஒரு கையில் ஜிலேபியை வைத்துக் கொண்டு, இதழின் நுணியில் சர்க்கரை பாகு தீண்டியிருப்பது கூட அறியாது தாத்தனுக்கு பதில் அளிக்க,
“சரிசரி” என்றவர், “வாயில என்னமா? எத்தனை தடவை தாத்தா சொல்றது.. வாயில ஆகாம சாப்பிடணும்னு” என்றி புன்னையுடன் பேத்தியிடம் சொல்ல, அந்த அரண்மனையின் ஐம்பது பேர் அமரக் கூடிய டைனிங் டேபிளில் இருந்து எழுந்தவள் தாத்தாவிடம் சென்று, அவர் தோளில் இருந்த அங்கவஸ்திரத்தின் பின்பக்கத்தை எடுத்து துடைத்துவிட்டு, “முன்னாடி பக்கம் துடைச்சா தெரியும் தாத்தா” என்று அரிசிப் பற்களைக் காட்டி, தனது இரண்டைச் சிண்டு ஆட சிரிக்க, அவரும் பேத்தியின் அறிவில் வாய்விட்டுச் சிரித்தார்.
ஆம் பொள்ளாச்சி அரண்மனைக்கு ஒரு தசாப்தமே ( Decade ) கடந்த பிறகு குடும்பத்தோடு வருகை தந்திருந்தார்கள் சிம்மவர்ம பூபதியின் குடும்பம்.
“ஏய் வாலு.. தாத்தா மேல இப்படித் தான் பண்ணுவியா?” கோதை மகளை அதட்டியபடி வர, “தாத்தா” என்று சிணுங்கியவள், தாத்தனின் கழுத்தைக் கட்டிக்கொள்ள, அதன் பின் யார் அங்கு சிம்மத்தை எதிர்த்து பேசிட முடியும்.
திலோத்தமை. திலோ என்றால் எள் என்று அர்த்தம். எள் அளவும் அழகு குறையாது பிரம்மனின் ஆணையால், விஸ்வகர்மாவின் கை வண்ணத்தால், படைக்கப்பட்ட அம்பையர்களில் ஒருவர் தான் திலோத்தமை.
அதே போல அன்னையின் அழகும், குணமும் கொண்டு பிறந்தவளை கரத்தில் வாங்கியவுடனே சிம்மவர்ம பூபதி, “திலோத்தமை” என்று பெயர் சூட்டினார்.
தங்கம் பூசிய பொன் மேனியவளின், துறுதுறு மான் விழிகளும், சுட்டித் தனமும், அரிசி பற்கள் தெரியும் வசியச் சிரிப்பும், எப்போதும் எதையாவது செய்து கொண்டிருக்கும் படபட பட்டாசின் சுறுசுறுப்பும், பெரியப்பனுக்கும், தகப்பனுக்கும் இடையில் பேச்சு இல்லை என்றாலும், இரு குடும்பத்திலும் எவரும் பேசிக்கொள்வதில்லை என்றாலும், இவளோ, குரங்கு போல மாளிகை மாற்றி மாளிகையில் தாவி இருக்கும், அனைவரையும் தன்வசம் வைத்திருக்கும் வாயடிச் சுட்டிப்பெண்.
அரிமாவும் தம்பியின் மேல் கோபம் இருந்தாலும், கடைக்குட்டியிடம் அந்த சுவடை காட்டியதில்லை. விக்ரமமிடமும் சரி. அதியரனும் அதே போல. ஆனால், என்ன தந்தை போலவே இரண்டை வேங்கைகளும் சிலுப்பிக் கொண்டு நின்றன.
“மாமா குடுக்குற செல்லத்துல பாருங்க அத்தை இந்த வாலு எப்படி நடிக்குதுனு..” கோதை குறைபட, “அத்தை எல்லாம் ஆச்சா?” என்றபடி அழகியும் அங்கு வந்து சேர்ந்தார்.
அக்காவும், தங்கையும் பேசிக் கொள்வதில்லை என்பது வெளியில் தான். ஆனால், கணவர்கள் அறியாது சமயம் கிடைக்கும் போது பேசிக் கொண்டிருந்தார்கள். தெரிந்தால் இருவரும் என்ன சொல்வார்கள் என்று தெரியாது. ஏன் சொல்லி வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று சொல்லாது இருந்தனர்.
“எடுத்தாச்சு அழகி.. கோதை மட்டும் பாக் பண்ணிட்டா போதும்..” என்றார் இமையரசி.
அக்கா, தங்கைகள் இருவரும் முகத்தைப் பார்த்துக் கொண்டு மனதுக்குள் புன்னகைத்துக் கொள்ள, “ம்கூம்” செருமிய அவர்களின் மாமியார், “உங்க வீட்டுக்காரனுக ரெடியா.. முக்கியமா அபியும், விக்ரமும் ரெடியானு பாருங்க” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்து சேர்ந்தாள் அவள்.
பதிமூன்று வயதின் இறுதியை எட்டியிருந்த, அஜாந்தா குகையில் இருந்து உயிர் பெற்று வந்த ஓவியமோ என்று அனைவரும் தங்கள் இதழ்களை திறக்கும் அளவிற்கு அழகு. விவரணத்துக்கு அப்பாற்பட்ட சாமுத்ரிகா லட்சணம். அவள் நறுமுகை. நீரஜாவின் மகள்.
மான்விழி அனைவரையும் மயக்க, வாளின் கூர்மையை ஒத்த நாசி பார்ப்பவரின் இதயத்தில் போர் புரிய, எப்போதும் பனிமூட்டம் போர்த்தியது போன்ற வெண் கன்னங்களும், சிந்தித்து பேசும் செம்பவள அதரங்களும், என்று அழகை வரமாய் வாங்கி வந்தவளுக்கு, நீரஜாவை போன்றே பளபளக்கும் ஹனி ப்ரவுன் கருவிழிகள்.
அந்த விழிகள் கனிவையும் வெளிப்படுத்தும்! அக்னியையும் வெளிப்படுத்தும்!
ஆகாய நீல நிறப் பட்டு தாவணியும், அதே நிறத்தில் விலையர்ந்த வொர்க் செய்யப்பட்ட ப்ளவுஸும், அதில் ஆங்காங்க சில்வர் நிற சிறுசிறு டிசைனும், சில்வர் நிற பட்டில் பாவடையும் அதற்கு ஆகாய நீல நிறத்தில் பார்டரும் என கச்சிதமாக தைத்திருந்த பட்டுப் பாவாடை தாவணியில், அந்த இளம் மொட்டு பேரெழிழாய் நிற்க, அனைவரும் அவளை பிரமிப்புடன் பார்த்து வைக்க, அழகியின் விழிகளும் கோதையின் விழிகளும், நறுமுகையை ரசனையாய் தழுவியது.
“ஐ!! அக்கா வந்துட்டாங்க..” என்று டைனிங் டேபிளில் இருந்து ஒரே குதியில் குதித்த திலோத்தமை, நறுமுகையிடம் சென்று நின்றுகொள்ள, “அம்மை பெரிய பொண்ணு ஆகிட்ட.. இப்படியெல்லாம் குதிக்க கூடாது. கை கால்ல அடி பட்டிடும்ல” அழகி கொஞ்சியபடியே கூற,
“போங்க பெரியம்மா. இப்படி சொல்லி சொல்லி தான் நறு அக்கா பெரிய பொண்ணாகி,,, போன வருஷம் ரொம்ப நாள் நீங்க என்கூட விளையாடவே விடல.. அப்புறம் என்னையும் விளையாட விடாம பண்ணிடுவீங்க” என்றிட, அழகி மகளின் பேச்சில் சிரித்தார்.
‘அப்பாவியாக சிறு குழந்தைத்தனத்துடன், எல்லாம் தெரிந்த பெண் போல் பெண் பிள்ளைகள் அந்த வயதில் பேசுவது அழகல்லவா?’
“அப்படியெல்லாம் இருந்தா நல்லாவே இல்ல. இப்படி இருந்தா தான் ஒல்லியா இருப்பனாம். இல்லைனா அப்புறம் பாட்டி மாதிரி ஆகிடுவேன்” என்று இமையரசியை வாரியவள் அங்கிருந்து ஓட, “அடி வந்தேன்னா” இமையரசி குரலை உயர்த்த, சடன் பிரேக் போட்டு திரும்பியவள் கொக்கானி காட்டிவிட்டு மீண்டும் ஓட அனைவரும் சிரித்தனர்.
அனைவரையும் முறைத்தவர் நறுமுகையிடம் சென்று, “தைச்சு வாங்குனப்ப கூட அவ்வளவா தெரியல.. நீ போட்டதுக்கு அப்புறம் தான் தாவணி இன்னும் அழகா இருக்கு.. ஆனா, உன்னை விட கம்மிதான் தங்கம்” என்று கையால் நெட்டி முறித்து பேத்திக்கு திருஷ்டி கழித்தவர், “அம்மா ரெடி ஆயாச்சா?” கேட்டார்.
“இல்ல பாட்டி. நைட்டெல்லாம் ஏதோ லேப்டாப்ல படிச்சிட்டு இருந்தாங்க. லேட்டா தான் எந்திரிச்சாங்க. ரெடியாக்கிட்டு இருக்காங்க” என்றவள் அருகில் இருந்த தாத்தாவைப் பார்த்து புன்னகைக்க, அவரும் பாசமாய் பேத்தியை விழிகளால் வருடினார்.
நறுமுகையை தத்தெடுக்கும் பொழுது நீரஜா சொன்ன ஒன்றே ஒன்று இதுதான். முதல் முறை வீட்டிற்கு மகளை எடுத்து வந்த நீரஜா, “இவளை நீங்க மனசார ஏத்துக்கிட்டா மட்டும் நான் வர்றேன். இல்லைனா சொல்லுங்க யாருக்கும் சங்கடம் வேணாம். நான் வெளிய இருந்துக்கறேன். யாராவது இவளை ஏதாவது சொன்னா என்னால தாங்கிக்க முடியாது” என்று நீரஜா வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் முன் சொல்ல, இமையரசி மகளையே பார்த்திருந்தார்.
‘தாய் அறியாத சூழ் உண்டோ?’
விழிகள் கலங்க இரு கரத்தையும் அவர் நீட்ட, அன்னையின் விழிகளை பார்த்த நீரஜா தூங்கிக் கொண்டிருந்த மகளை அன்னையின் கரங்களில் வைக்க, அன்றிலிருந்து நறுமுகை அந்த வீட்டுப் பெண்தான். அவளும் அந்த வீட்டின் வாரிசுகளில் ஒருத்திதான்.
ஆனால், அப்போதும் சிம்மவர்ம பூபதிக்கு மகளின் மேல் தன் சொல் பேச்சை கேட்காத கோபம் அகலவில்லை. சொன்னது போல மருத்துவமனை கட்டித் தந்தார். மற்றபடி அதற்கு ஓடி ஓடி உழைக்கத் தொடங்கியது நீரஜா தான். அவர் தலையீடு இன்று வரை எதுவும் இல்லை. அனைத்தையும் நீரஜாவே பார்த்துக் கொண்டார்.
நறுமுகை வளர வளர விவரம் தெரியாது தந்தை என்றெல்லாம் கேட்க சில காலம் சமாளித்தவர், அவளின் பத்தாவது வயதில் நீரஜா தத்தெடுத்ததை பற்றி சொல்ல, அன்று முழுதும் அழுத நறுமுகையை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை. நீரஜா தோற்றுப் போனார். சிம்மவர்ம பூபதியும், இமையரசியும் கூட செய்வதறியாது நின்றனர்.
அவளை இறுதியில் சமாளித்தது ஒரே ஒருவன். அபிமன்யு.
“எதுக்கு அழற?” அவன் கேட்ட கேள்வியில் அவள் கப்சிப் என்றானாள். பயம் என்றில்லை. அவனிடம் மிகவும் நெருக்கமாக இருப்பவளும் அவள் தான்.
“என்னை தத்தெடுத்து தான் கொண்டு வந்தாங்களாம்” படுக்கையில் படுத்தபடியே விழிகளை மட்டும் உயர்த்தி அவள் கூற, கண்ணீரோ விடாமல் வழிந்தது.
“தெரியும்” என்றான் கைகளை கட்டி அவளை பார்த்தபடியே.
படுக்கையில் இருந்து மின்னல் வேகத்தில் எழுந்தவள், “என்னோட அம்மா, அப்பா?” அவள் கேட்க,
“நீரஜா அத்தை தான் உன் அம்மா. அப்பாவும் அவங்கதான்” அவன் கூற, அவளுக்கோ விம்மல் தான் வந்தது. திடீரென இப்படி ஒரு செய்தியை கேட்ட பிஞ்சு மனதால், அதை ஏற்க முடியவில்லை. இதற்கு மிகவும் பக்குவமாக சொல்லியிருந்தார் நீரஜா.
“எல்லாருக்கும் தெரியுமா?” அவள் கேட்க, “ம்ம்” என்ற பதில் மட்டும் தான் வந்தது அபிமன்யுவிடம்.
“விக்ரமுக்கு?” நறுமுகை கேட்க, அவளை தன் கூர்மையான விழிகளைக் கொண்டு அபிமன்யு துளைக்க, மாமன் மகனின் விழிகள் தன்னை ஊடுருவி ஆராய்வதை உணர்ந்தவள், “சும்மாவே கிண்டலா பாப்பான் அவன். அதுதான்..” அவள் இழுத்தாள்.
பத்து வயதில் அவளுக்கு அப்படித்தானே தோன்றும்.
பதினேழின் இறுதியில் இருந்த அபிமன்யுவுக்கு அவளின் கேள்வி விக்ரமை நினைவு படுத்த, ‘ஆம்’ என்பது போல தலையாட்டியவன், “ஆனா இப்ப வரைக்கும் யாருமே உன்னை பிரிச்சு பாத்தது இல்ல. அத்தையோட பொண்ணு தான் நீ. சிம்மவர்ம பூபதி பேத்தி தான் நீ” என்றவன் கிளம்ப, அபிமன்யுவின் வார்த்தைகள் அவளை சமாதானம் செய்திருந்தது. யோசிக்கவும் வைத்தது.
இதையே தான் மற்ற அனைவரும் சொன்னார்கள். இதற்கு மேலேயும் கூட விதவிதமாக கூறினார்கள். ஆனால், ‘சொல்பவன் சொன்னால் தான் காதில் விழும்?’ என்றிருந்தது அவன் சென்றபின்.
அழுகையை நிறுத்தியவள் அன்னையைத் தேடிச் செல்ல, நீரஜா அவருடைய தனிப்பட்ட வேலைக்கான அறையில் மருத்துவ சம்மந்தமான எதையோ படித்துக் கொண்டிருந்தார். கதவைத் திறந்து உள்ளே ஓடியவள் அன்னையை பின்னிருந்து அணைத்து, அவரின் கன்னத்தில் அழுத்த முத்தமிட்டு, “ஸாரி அன்ட் லவ் யூ ம்மா” என்று கூறி அவரை இறுக அணைத்துக் கொள்ள, புன்னகைத்த நீரஜா, “லவ் யூ டூ அம்மு” என்று தலையைத் திருப்பி மகளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டார்.
மனிதனின் உள்மனம் அதிக சக்திவாய்ந்தது. உள்மனமே செயலாகிறது. அதுவே உணர்வாகிறது. இங்கு நறுமுகை தன் அன்னை நீரஜாதான் என்று உள்மனதில் ஏற்றுக்கொண்டதால், தாய்மையோடு அன்னை காட்டிய உணர்வை அவள் உள்மனம் ஏற்றது. அபிம்னயு சொன்னதை போல நீரஜாவை தன் அன்னையும் தந்தையுமாய் பார்க்க ஆரம்பித்தாள்.
“நறுமுகை அம்மா ரெடி ஆகிட்டாளானு பாத்துட்டு வா?” இமையரசி கூற, தலையாட்டியவள் காலுக்கு கீழ் வழிந்த பாவடையை நளினமாய் தூக்கியபடி செல்ல, செல்பவளையே அனைவரும் புன்னகையுடன் பார்த்துவிட்டு, தட்டை காரில் எடுத்து வைக்க ஆயத்தமாகினர்.
அலங்காரம் கலைந்துவிடக்கூடாது, ஹேர் ஸ்டைல் சிறிதும் மாறிவிடக் கூடாது, தாவணி சிறிதும் விலகி விடக்கூடாது என்று பார்த்துப் பார்த்து புன்னகையுடன் படியேறியவளின், பளீர் நிற வெல்வட் போன்று மென்பூம்பட்டு போன்று இருந்த பாதங்கள் படியில் இறங்கிக் கொண்டிருந்தவனை பார்த்து, கால்களில் பாறாங்கல்லை கட்டி வைத்து போன்று நின்றுவிட்டது.