ஆழி சூழ் நித்திலமே 11(அ)

1596006291531

ஆழி சூழ் நித்திலமே 11(அ)

11

 

ஹாலில் இருந்த தந்தையின் புகைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் நித்திலா. எப்பொழுதுமே பரசுராமனுக்கு நித்திலாதான் ஸ்பெஷல். அவளைச் சுற்றிதான் அவரது எண்ணங்கள் சுழலும். அவளது விருப்பங்கள் மட்டுமே அவரது பிரதானம்.

தந்தையை நினைத்த மாத்திரத்தில் கண்களில் கண்ணீர் வழிய சட்டென்று துடைத்துக் கொண்டாள்.
கணவரின் நினைவில் அழுதுகரைந்த பாக்கியலஷ்மியை பேசிப்பேசி இப்பொழுதுதான் கொஞ்சமாக சமாதானப்படுத்தியிருந்தாள்.

அதிலும் தானும் நிகிலேஷூம் அழுதால் தாய் மேலும் உடைந்து போகிறாள் என்பதை உணர்ந்ததால் கண்ணீரை தாய்முன் காட்டுவதில்லை இருவரும்.

இனி தனக்கும் தம்பிக்கும் தாய்தானே பிடிமானம். தற்போது அவருடைய உடல்நிலைதான் முக்கியமாகப்பட்டதில் அவரை இயல்புக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்தனர் நிகிலேஷூம் நித்திலாவும்.

 

பரசுராமனின் சேமிப்பு விபரங்கள் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் அவரது அலமாரியில் தெளிவாக அவரது கைப்பட குறிப்பேடு ஒன்றில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

பாக்கியலஷ்மி அவற்றை எடுத்துக் கொடுத்ததும், முதலில் வாரிசு சான்றிதழ் மட்டும் வாங்கிவிட்டாலே போதும், தந்தையின் வங்கி கணக்குகளைத் தங்களால் கையாள முடியும் என்பது புரிந்ததும் சற்று ஆசுவாசமானது நித்திலாவுக்கு.

வீட்டில் அவசரத்திற்கென்று வைத்திருந்த பணமும், அரசு ஊழியர்களின் மறைவுக்காக அரசு தரப்பில் உடனடியாக கொடுக்கப்பட்ட தொகையும் அவரது இறுதி சடங்குக்குப் பெரிதும் உதவியது.

 

சதாசிவம் சாருக்கும் வெற்றிக்கும் அவர்கள் செலவு செய்திருந்த தொகையை உடனடியாகத் திருப்பிக் கொடுத்திருந்தாள் நித்திலா.

 

தட்டுத்தடுமாறியென்றாலும் இனி பரசுராமன் இல்லாத வாழ்க்கையை தாங்கள் வாழ வேண்டும் என்ற நிதர்சனம் புரிந்திருந்தது மூவருக்கும்.

 

நிகிலேஷ் பசிக்கிறது என்று சொல்லவும், அவனுக்காக அடுப்படியில் பாக்கியலஷ்மி தோசை வார்த்துக் கொண்டிருக்க, சோபாவில் அமர்ந்திருந்த நித்திலாவின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தான் நிகிலேஷ்.

 

அப்பொழுது வாசலில் காலிங்பெல் அடிக்கவும், சட்டென்று கடிகாரத்தைப் பார்த்தாள் நித்திலா. மணி இரவு ஒன்பதைத் தாண்டியிருந்தது. அவர்களது ஏரியாவில் ஒன்பது மணிக்கெல்லாம் ஆரவாரம் அடங்கியிருக்கும்.

 

இந்நேரத்திற்கு யார் வந்திருக்கக்கூடும் என்று குழம்பியபடி, நிகிலேஷ் சென்று கதவைத் திறக்க பின்னோடு சென்றாள் நித்திலா. அழைப்புமணி ஓசையில் யாரென்று பார்க்க பாக்கியலஷ்மியும் அடுப்படி வாசலுக்கு வந்திருக்க, மூவருமே வாசலில் நின்ற காவலரைப் பார்த்து சற்று அதிர்ந்தனர்.

 

முதலில் சுதாரித்த நித்திலா, “எ… என்ன சார்?”

“நீதானம்மா நித்திலா. உங்கப்பாவ யாரோ அடிச்சதா கம்ப்ளைன்ட் குடுத்திருக்கல்ல. ஐயா உன்கிட்ட பேசனுமாம் ஸ்டேஷன் வரச் சொன்னாரு.”

 

“இப்பவா?” அதிர்ச்சியோடு பாக்கியலஷ்மியும் நிகிலேஷூம் வினவ…

 

“ஆமாங்க கையோட கூட்டியாறச் சொன்னாரு. போலாமா?”

“சா… சார் நான் நாளைக்கு காலையில வந்து பாக்கறேனே. இப்ப எப்படி சார் வரமுடியும்?”

 

“சாருக்கு நாள் முழுக்க வேலையிருக்கும்மா… காலையில அவரு ஸ்டேஷன்ல இருக்க மாட்டாரு… இப்ப என்ன? மணி ஒம்போதுதான ஆகுது. நானே கொணாந்து விட்டுடறேன் உன்ன. சீக்கிரம் கிளம்பும்மா.”

 

கான்ஸ்டபிள் அவசரப்படுத்த செய்வதறியாமல் கையைப் பிசைந்தபடி நின்றாள் நித்திலா. அதற்குள் அரவம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்களும் வெளியில் வந்திருக்க, என்னவென்று விசாரித்தனர். அவர்களிடமும் விபரம் சொல்லப்பட்டது.

 

“என்ன சார் இது ஒரு வயசு பொண்ண நைட் நேரம் எப்படி ஸ்டேஷனுக்கு கூப்பிடுவீங்க?” பக்கத்துவீட்டில் குடியிருந்தவர் வினவ.

 

“சார், இப்ப என்ன அரெஸ்ட் பண்ணியா கூட்டிட்டு போறேன். இவங்க குடுத்த கேஸ் சம்பந்தமா ஏதோ பேசனும்னு இன்ஸ்பெக்டர் அழைச்சிட்டு வரச் சொன்னாரு.

இங்க பேசிக்கிட்டு இருந்த நேரத்துக்கு, அங்க வந்து விபரம் கேட்டுட்டு வீட்டுக்கே திரும்ப வந்திருக்கலாம். நேரம் வளர்த்தாம வாம்மா.”

 

கான்ஸ்டபிள் சற்று எரிச்சல் தொனியில் பேச, என்ன செய்வது என்றே புரியவில்லை அவர்களுக்கு. பக்கத்து வீட்டுக்காரர்தான்,

“அப்படிலாம் வயசுப் பொண்ண தனியா உங்ககூட அனுப்ப முடியாதுங்க. நீங்க போங்க. நான் பாப்பாவ கூட்டிட்டு வரேன்.” என்றவர் பரிதவிப்போடு நின்றிருந்த பாக்கியலஷ்மியையும் சமாதானப்படுத்தினார்.

 

“நீங்க பயப்படாதீங்க லஷ்மிம்மா. நானும் நிகிலேஷூம் பாப்பாவ கூட்டிட்டு போயிட்டு வரோம்.” என்றவாறு அவர் கான்ஸ்டபிளை அனுப்பிவிட்டு கிளம்பி வர, தானும் உடன் வருவதாகச் சொல்லி அவர்களுடன் இணைந்து கொண்டார் பாக்கியலஷ்மி.

 

ஏனோ அவருக்கு நடப்பது எதுவும் சரியாய் படவில்லை. நித்திலாவை அனுப்பவும் பிரியமில்லை. ஆனால், வேறு வழியில்லாதுப் போனதால் தானும் உடன் கிளம்பிவிட்டார்.

 

அங்கே ஸ்டேஷனிலோ உச்சபட்ச கடுப்போடு அந்த கான்ஸ்டபிளிடம் பொறிந்து கொண்டிருந்தான் நாதன்.

“யோவ், எதாவது ஒரு வேலையாச்சும் உருப்படியா செய்யறியா நீ? அந்தப் பொண்ண தனியா கூட்டிட்டு வான்னு சொல்லி அனுப்புனா, அவங்களா வராங்களாம்னு நீ முன்ன வந்து நிக்கற.
போ… போய் வெளிய நில்லு. யாராயிருந்தாலும் ஸ்டேஷன் உள்ள விடாம, அந்த பொண்ண மட்டும் உள்ளார அனுப்பு. புரியுதா.”

 

‘இவன் போடற அஞ்சி பத்து பிச்சைக்கு என்ன வேலையெல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கு’ உள்ளுக்குள் நொந்து கொண்டாலும் வெளியே தலையாட்டிக் கொண்டான் அந்த கான்ஸ்டபிள்.

 

சற்று நேரத்திலேயே அவர்கள் நால்வரும் பக்கத்து வீட்டுக்காரரின் காரில் வந்து இறங்கவும், ஸ்டேஷன் வாசலிலேயே தடுத்தவன்,

 

“ஐயா, முக்கியமான கேஸ் டீட்டெயில் பார்த்துக்கிட்டு இருக்காரு. நீங்கலாம் இங்கயே நில்லுங்க. நீ மட்டும் உள்ளார போம்மா.” என்று நித்திலாவை மட்டும் அனுப்பி வைத்தான்.

 

நேரம் மணி பத்தை நெருங்கிக் கொண்டிருக்க, ஸ்டேஷனில் வேறு ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடிப் போயிருந்தது. இன்ஸ்பெக்டர் அறையின் கதவைத் தட்டி அனுமதி பெற்று உள்ளே சென்றவளை ஆர்ப்பாட்டமாக வரவேற்றான் நாதன்.

 

“வாம்மா… வாம்மா… உனக்காகதான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். உட்காரும்மா.”

படபடப்பில் லேசாக வியர்த்துப் போயிருந்தவள் தயக்கத்தோடு அங்கிருந்த சேரில் அமர்ந்தாள்.

 

“என்ன விஷயமா வரச் சொன்னீங்க சார்?”

 

“ம்ம்… முக்கியமான விஷயம்தான். நீ கம்ப்ளைன்ட் குடுத்தியே, அவனுக்கு ஜாமீன் கிடைச்சிருச்சிம்மா.”

நாதனின் வார்த்தையில் சற்று ஏமாற்றமாக இருந்தது நித்திலாவுக்கு.

“ஓ…” முகமே கூம்பிப் போயிற்று.

“கவலைப்படாதம்மா, எங்க போயிடப் போறான்? அவனை ஒழிச்சுக்கட்றது என் பொறுப்பு.
அதுல பாரு அவன் உங்கப்பாவ அடிக்கவே இல்லையாம். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்லயும் தெளிவா வந்திருக்கு. அவரோட உடம்புல எங்கயும் அடிச்சதுக்கான தடயங்களே இல்ல.

உங்கப்பா ஸ்கூலுக்குப் போய் விசாரிச்சதுல அங்கயிருந்த பசங்களும் சொன்னாங்க. எதையோ பேசி கோபமா அவரு சட்டைய பிடிச்சி உலுக்கியிருக்கான்.

சட்டையில இருந்து கைய எடுக்கவும் தடுமாறி சேர்ல விழுந்திருக்காரு உங்கப்பா. அதுக்கப்புறமும் சக வாத்தியாருங்களோட பேசிக்கிட்டுதான் இருந்திருக்காரு.

அப்புறமா நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லவும்தான் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. அதுவும் ஹார்ட் அட்டாக்னு சொல்லிதான் அட்மிட் பண்ணியிருக்காங்க.”

 

“எதுக்காக அவர்கிட்ட சண்டை போட்டானாம் சார்?”

 

“வெள்ளிக்கிழமை நைட்டு அவனை ஸ்டேஷன்ல வச்சி வெளுத்துட்டேன். ஏதோ கொடுக்கல் வாங்கல் விவகாரம்னான். அதைத்தவிர வேற எதுவும் வாயேத் திறக்கல. உங்கப்பா எதுவும் பணம் வாங்கியிருப்பார் போல.”

 

மறுப்பாக தலையாடியது அவளுக்கு. ஏனென்றால் அவளது அப்பா அப்படி அநாவசியமாக கடன் வாங்குபவர் இல்லை. அதிலும் ஒரு ரௌடியிடம் எதற்கு பணம் வாங்கியிருக்கப் போகிறார்.

 

“இல்ல சார், அப்பா பணமெல்லாம் எதுவும் வாங்கியிருக்க மாட்டாங்க. அப்படியே இருந்தாலும் எதாவது குறிப்பு எழுதி வச்சிருப்பாங்க இல்லையா? அப்படி எதுவுமே இல்ல சார்.”

 

“ஓ… சரி, அது என்னன்னு விசாரிக்கறேன். ஆனா, உங்கப்பாவுக்கு ஏற்கனவே ஹார்ட்ல பிரச்சனை இருந்திருக்கும் போலம்மா. அவரு உங்ககிட்ட சொன்னதே இல்லையா?”

இல்லையென்று பாவமாய் தலையாட்டினாள்.

 

“உங்களுக்குத் தெரிய வேணாம்னு நினைச்சிருக்கலாம், இல்லனா அவருக்கே தெரியாம இருந்திருக்கலாம். ஏதோ ஒன்னு… ஆனா, அவன் போய் கோவமா சண்டை போட்டதுல படபடப்பு அதிகமாகி இறந்து போயிருக்காரு.”

“…”

“போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் நமக்கு சாதகமா இல்லம்மா. இயற்கையான இறப்புன்னுதான் வந்திருக்கு. அவன் உங்கப்பா ஸ்கூலுக்குப் போய் சண்டை போட்ருக்கான். அது ஒன்னுதான் சாதகமான விஷயம்.

ஆனா, ஈசியா அவனுங்க கேஸை உடைச்சிருவானுங்க. அதிகபட்சம் ஆறுமாசம் கேஸ் நடக்குமே தவிர அவனை இந்த கேஸ்ல இனி உள்ள போடறது கஷ்டம்மா.”

 

“வேற எதுவும் செய்ய முடியாதா சார்?”

 

“ஏன் முடியாம? நீ மட்டும் உம்னு ஒரு வார்த்தை சொல்லு அவனை ஆள் அட்ரஸ்ஸே இல்லாம பண்ணிடறேன்.”

நாதனின் வார்த்தைகள் புரியாமல் அவனை குழப்பமாய் பார்த்தாள்.

இருக்கையிலிருந்து எழுந்து அவளருகே வந்தவன்,
“லீகலா போக முடியாத கேஸெல்லாம். நாங்க இல்லீகலா முடிச்சிருவோம். இதுக்குன்னே கைவசம் ஆளுங்க இருக்காங்க. என்ன கொஞ்சம் செலவாகும். பரவாயில்ல செலவ நான் பார்த்துக்கறேன், நீ சரின்னு மட்டும் சொல்லு அவனைப் போட்றலாம்.”

 

“கொலையா…?” அதிர்ந்து எழுந்து நின்றாள்.

யாரோ? எவனோ? அவன் மேல் கொலை வெறி இருக்கிறதுதான். ஆனால் அவனுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித் தரவேண்டும் என்று எண்ணியிருந்தாளே ஒழிய, இப்படி கொல்லச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் யோசிக்கக்கூட முடியவில்லை அவளால்.

 

அவளது தோளில் கைவைத்து அழுத்தி அமர வைத்த நாதன்,
“ஏன்ம்மா பயப்படற? இதுல என்ன தப்பிருக்கு? உங்கப்பா சாவுக்கு காரணமானவன பழிவாங்கனும்ல. நீ எதுவுமே செய்ய வேணாம். உன் பேருகூட வெளிய வராது. உனக்காக நான் செய்யறேன். உனக்காக நான் என்ன வேணா செய்வேன். ஏன்னா எனக்கு உன்னை அவ்வளவு பிடிச்சிருக்கு.”

 

அதுவரை அதிர்ச்சியில் சிலையாய் அமர்ந்திருந்தவள், நாதனின் கடைசி வார்த்தையிலும் தன் தோளின் மீது ஊர்ந்த அவனது கரத்தின் அழுத்தத்திலும் தன்னிலைக்கு மீண்டவள், சட்டென்று அவனது கையைத் தட்டிவிட்டு எழுந்து நகர்ந்து நின்றாள்.
அவ்வளவு நேரமாக புரிந்து கொள்ள முடியாத நாதனின் கேவலமான பார்வை புரிந்ததும் உடம்பே கூசிப்போனது அவளுக்கு. உள்ளுக்குள் பயம் தடதடக்க ஆரம்பித்தது.

 

“அ… அதெல்லாம் எ…எதுவும் வேணாம் சார். சட்டப்படி என்ன நடக்கனுமோ அது நடக்கட்டும். இ… இனி இது சம்பந்தமா எ… எதுனாலும் நான் கோர்ட்ல லாயர்கிட்ட பேசிக்கிறேன் சார். இப்பக் கிளம்பறேன்.”
என்றபடி வெளியேற யத்தனித்தவளின் குறுக்கே கைகளை நீட்டியவன்,

 

“அட இரும்மா, இதுலாம் டம்மி கேஸூ. இதுக்குலாம் நான் எப்ஐஆரே போடமாட்டேன். ரெண்டு பக்கமும் உக்கார வச்சி பேசினா லம்ப்பா அமௌண்டு தேறும் எனக்கு.
அதைவிட்டு உனக்காகதான் நான் கேஸே போட்டது. உன்னைய அன்னைக்குப் பார்த்ததுமே அசந்து போயிட்டேன். எங்கயோ பார்த்தமாறியே இருக்கேன்னு நினைச்சேன்.
இந்த டிக்டாக்ல இன்ஸ்ட்டாகிராம்லலாம் நிறைய வீடியோ போட்ருக்கல்ல நீ. இப்ப நாலு நாளா உன் வீடியோங்க கூடதான் என் பொழுதே ஓடுது.”

 

அசிங்கமான இளிப்போடு சொல்லவும் வெலவெலத்துப் போனது அவளுக்கு.

பொழுது போக்காய் போட்ட வீடியோக்கள் இந்த மாதிரி எத்தனை கழிசடைகளின் கைகளில் இருக்கிறதோ. நினைக்க நினைக்க அருவெறுப்பாய் போனது அவளுக்கு.

 

சமூக வலைதளங்களை நல்லவர்கள் மட்டுமா பயன்படுத்துகின்றனர். இன்று பயன்படுத்தாத நபர்களே இல்லை என்ற அளவில் அனைத்து மக்களிடமும் இருக்கிறது. ஒரு வீடியோவோ ஃபோட்டோவோ வைரலாகிப் போனால் சில நொடிகளில் பல்லாயிரக்கணக்கான ஃபோன்களுக்கு பயணிக்கிறது.

இதனால் வரும் பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. நாம் விளையாட்டாய் உபயோகிக்கும் இது போன்ற தளங்கள் யாரோ சிலர் தங்களது வக்கிரத்தை தணித்துக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது.
அதிலும் இளம்பெண்கள் வெகு எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய காலகட்டம் இது.

 

ஆனால், எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதன் சாதக பாதகங்கள் அறியாமல் இருப்பவர்கள்தான் அநேகம் பேர்.

 

நித்திலாவுக்கு தானும் தம்பியும் இணைந்து விளையாட்டாய் போட்ட வீடியோக்கள் இப்படி ஒருவன் கைக்குப் போகும், அதை கேவலமான நோக்கத்தோடு பார்ப்பான் என்பதே உடலைக்கூசச் செய்ய வெகுவாய் பயந்து போனாள்.

 

மேலும் மேலும் அசிங்கமாகத் தன் கேவலமான எண்ணங்களை நாதன் பேசிக்கொண்டே போக, அவனது பேச்சைக் காதுகொடுத்துக் கேட்க முடியாமலும், அவனைத் தாண்டிச் செல்ல முடியாமலும், பயத்திலும் அழுகை பெருகியது அவளுக்கு.

 

உள்ளே சென்ற நித்திலா வெகுநேரமாகியும் வராததால் ஸ்டேஷன் வாசலில் தவிப்போடு நின்றிருந்தனர் மூவரும். அப்போது ரோந்து பணியை முடித்துவிட்டு மேலும் இரண்டு கான்ஸ்டபிள்கள் வந்து சேர்ந்தனர்.

அவர்களில் ஒருவர் வெற்றிக்கு வேண்டிய நபர். அரசு மருத்துவமனையில் பரசுராமனின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக எடுத்து வந்தவர். சற்று வயது முதிர்ந்தவர்.

 

வெளியில் நின்றிருந்தவர்களிடம் என்ன விபரமென்று விசாரிக்க, விபரத்தைச் சொன்னதும் வெகுவாய் கடிந்து கொண்டார்.

 

“ஏம்பா? படிச்சவங்கதான நீங்கலாம். இந்த நேரத்துக்கு வயசுப் பொண்ண வரச் சொல்றாங்களேன்னு யோசிக்க மாட்டீங்களா? மனசாட்சியத்த ஆளுங்க இருக்கற ஊரும்மா. நாமதான் சூதானமா இருக்கனும்.

உங்க புருஷன அடிச்சிட்டான்னு ஒருத்தன் மேல கேஸ் குடுத்திருக்கே உங்க பொண்ணு, அவனைக்கூட நம்பலாம். உள்ள இருக்கற இன்ஸ்பெக்டர நம்பக்கூடாது.

பொணத்துக்குப் பொடவை கட்டியிருந்தாகூட அந்த ஆளு விடமாட்டான்.

முதல்ல பொண்ணக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போங்கம்மா. முடிஞ்சா அந்த ஆளு சங்காத்தமே இல்லாம ஒதுங்கி இருங்க.”

என்றவர், நித்திலாவை அழைத்து வந்த கான்ஸ்டபிளையும் கடிந்து கொண்டார்.

 

“ஏன்ய்யா உனக்குலாம் மனசாட்சியே கிடையாதா? காசு குடுத்தா அந்தாளுக்காக எது வேணாலும் செஞ்சிருவியா?”

 

“என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? உயரதிகாரிய பகைச்சிக்க முடியுமா? உங்களுக்கென்ன அடுத்த மாசம் ரிட்டையராகப் போறீங்க. நீங்க பேசலாம். நான் எதிர்த்துப் பேச முடியுமா? அவரு சொல்றத செய்ய வேண்டியதா இருக்கு.”

 

“ஓ… உனக்கும் ஒரு பொண்ணு இருக்குல்ல. நாளைக்கு அதையும் கூட்டியாறச் சொல்லுவான். இப்படிதான் கூட்டியாந்து உள்ள விட்டு வெளிய காவலுக்கு நிப்பியோ? போய்யா போய் அந்தப் பொண்ணக் கூப்பிடு.”

 

அந்தக்காவலர் சென்று பார்க்க இன்ஸ்பெக்டரின் அறை உட்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!