ஆழி சூழ் நித்திலமே 28

ஆழி சூழ் நித்திலமே 28

              ஆழி 28

 

 

 

மீன் பதப்படுத்தும் கூடம் அமைக்கும் வேலை முக்கால்வாசி முடிந்திருக்க, மீதமுள்ள பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் பாரி. அந்நேரம் அலைபேசி இசைத்தது.

வெற்றியின் பெயரைப் பார்த்ததும் தன்னாலே முகம் மலர்ந்தது. தேனிலவுக்காக கயலையும் அழைத்துக்கொண்டு ஊட்டிக்குச் சென்றிருந்த வெற்றி அன்று காலையில்தான் வந்திருந்தான்.

“இன்னாடா, குஜாலாக்கிற போல? ஃபோனுகூட போடல. கயலு எப்புடிக்கிது?”

“ம்ம்ம், அதெல்லாம் சூப்பரா இருக்கா. நானு குஜாலாக்கறது உனக்கு காண்டாவுதோ? வேலையெல்லாம் எப்புடி போவுது?”

“எனக்கு இன்னாடா காண்டு? நீயும் கயலும் சோக்காருந்தா எனக்கு மஜாதான். இன்னும் ஒரு வாரத்துல வேலை முடிஞ்சிரும் வெற்றி. நீ வந்து ஒருக்கா பாரு. இன்னும் இன்னா பண்ணனும்னு சொன்னீன்னா பக்காவா முடிச்சிடலாம்.”

“ம்ம்ம் வரேன். அதுக்கு முன்னாடி ஸ்ரீதர் சார் வரச்சொன்னாரு. கிளம்பி வா. அவரைப் போய் பார்த்துட்டு வந்துடுவோம்.”

நித்திலாவைத் தொல்லை படுத்தும் விதமான நாதனின் நடவடிக்கைகள் முற்றிலும் குறைந்திருந்தது இந்த ஒரு மாதத்தில். ஆரம்பத்தில் அடியாட்களை அனுப்புவதும், வழிமறித்து மிரட்டுவதும் என்று இருந்தவனை பாரி குப்பத்து ஆட்களை வைத்து சமாளித்திருந்தான்.

பாரியின் நலம்விரும்பிகளான தேவா தாமஸ் போன்றோரை கைது செய்து அடித்த அந்த சம்பவத்துக்குப் பிறகு, நாதன் வேறெந்த விதத்திலும் வாலாட்டவில்லை. நித்திலாவும் விடுமுறையில் வீட்டிலேயே இருக்கவும், கிட்டத்தட்ட அவனை மறந்தே போயிருந்தனர் அனைவரும்.

ஸ்ரீதர் கூப்பிட்டார் என்கவும் நாதன்தான் நினைவுக்கு வந்தான் பாரிக்கு.

“இன்னாத்துக்குடா கூப்டாரு. நாதன் மேட்டராவா?”

“தெரியல பாரி. என்கிட்ட எதுவுமே சொல்லல. உடனே உங்களைப் பார்க்கனும் வரமுடியுமானு கேட்டாரு. உன்னையும் கூட்டிட்டு வரச்சொன்னாரு.”

“ம்ம்ம் செரி, எங்க வரனுமுனு சொல்லு. நானு நேரா வந்துடுறேன். நீயும் வந்துடு.” வெற்றி ஸ்ரீதர் வரச்சொன்ன இடத்தைக் கூறவும் பாரி கிளம்பினான்.

இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அந்த உணவகத்தை அடைந்தனர். அது புறநகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய உணவகம். அவ்வளவாக கூட்டமின்றி இருந்தது. அதிலும் மாடியில் இருந்த ரூஃப் கார்டன் அந்த முன்மாலை பொழுதில் காற்றாடியது.

இவர்களுக்கு முன்பே ஸ்ரீதர் அங்கு வந்திருந்தார். இருவரையும் பார்த்ததும் பரஸ்பர விசாரிப்புகள் உணவு உபசரிப்புகள் முடிந்ததும் நேரடியாக விஷயத்துக்கு வந்து ஸ்ரீதர் கூறிய விஷயங்களில் மொத்தமாக ஆடிப்போயிருந்தனர் பாரியும் வெற்றியும்.

இந்தியக் கடலோர பகுதிகள் மற்றும் துறைமுகங்களில் நடக்கும் சட்டவிரோத செயல்கள், கடத்தல்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், அதில் ஈடுபடும் பெரும்புள்ளிகள், அவர்களுக்கு ஏஜெண்டுகள் போல செயல்படும் நாதனைப் போன்ற ஆட்கள் என அனைத்தையும் விளக்கமாக ஸ்ரீதர் சொல்லி முடிக்கையில் ஒரு மணிநேரம் ஓடிப் போயிருந்தது.

அரசல்புரசலாக சில விவரங்கள் பாரிக்கும் வெற்றிக்கும் தெரியும் என்றாலும் ஸ்ரீதர் கூறியது அவர்களது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

“இவ்வளவு புள்ளிவிபரத்தோட சொல்றீங்க. போலீஸ் டிபார்ட்மென்ட்ல எப்படி சார் சும்மா விட்டு வச்சிருக்கீங்க?”

மெல்ல நகைத்துக் கொண்டார் ஸ்ரீதர். “நேர்மையான போலீஸ் அதிகாரிகள் இருக்கற அதே டிபார்ட்மெண்ட்லதான் நாதனைப் போல ஆட்களும் இருக்காங்க.

எங்க டீம்ல நாங்க மொத்தம் நாலே பேர்தான். அதுல ரெண்டு பேர் ரிடையர்டு ஆபீசர்ஸ். அண்டர் கவர் ஆபரேஷன்தான் இது. கிட்டத்தட்ட ஆறு மாசத்துக்கு மேல சீக்ரெட்டா இவ்வளவு விபரங்கள் சேகரிச்சிருக்கோம். ஆனால் இது போதாது. இன்னும் பக்காவான எவிடென்ஸ் வேணும்.

இதுல சம்பந்தப்பட்ட பெரும்புள்ளிகள் யாருமே சாதாரணமானவங்க இல்ல வெற்றி. அரசியல்வாதிகள், சமுதாயத்துல ரொம்ப பெரிய உயரத்துல இருக்கற தொழிலதிபர்கள், அரசாங்கத்துல உயர்மட்ட அதிரிகள்னு லிஸ்ட் ரொம்ப பெருசு. 

அவங்களை நெருங்க இந்த எவிடன்ஸ் மட்டும்  போதாது. அதுமட்டும் இல்ல எங்களுக்கு தெரிஞ்சவரை இத்தனை பேர். இன்னும் தெரியாம யார் யாரெல்லாம் இருக்காங்களோ தெரியாது.

அதேபோல எங்க டிபார்ட்மென்ட்லயே புல்லுருவிகள் இன்னும் எத்தனை பேர் இருக்காங்கனும் தெரியாது. யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்ப முடியல. பக்காவான எவிடென்ஸ் இல்லாம மேலிடத்துல எங்களால ரிப்போர்ட் பண்ணவும் முடியாது.

இதுல சம்பந்தப்பட்டிருக்கறவங்களுக்கு விஷயம் லேசா கசிஞ்சாகூட இந்த கேஸையே ஒன்னுமில்லாம ஆக்கிடுவாங்க. அதுக்கு அப்புறம் இந்த கேஸ்ல இவ்வளவு தூரம் இன்வெஸ்டிகேட் செய்த நாங்க மட்டும் உயிரோட இருக்க முடியுமா?”

 என்ன பேசுவது என்றே புரியாமல் அமர்ந்திருந்தனர் பாரியும் வெற்றியும். இவ்வளவு பெரிய அதிகாரிக்கே இது இத்தனை சிக்கலான விவகாரம் என்றால் தங்களை எதற்காக வரச்சொல்லியிருக்கிறார்? தங்களால் இதில் என்ன செய்ய முடியும்? என்ற எண்ணம் உள்ளூர ஓடிக்கொண்டிருந்தது.

“என்னடா இது? எதுக்காக நம்மள கூப்ட்டு வச்சு இந்த கதையெல்லாம் சொல்றாருனு யோசிக்கிறீங்களா?” ஸ்ரீதர் புன்னகையோடு வினவ, வெற்றி புன்னகைத்தான்.

பாரியோ, “எங்களால உங்களுக்கு என்னாவோ ஜோலியாவனும். அதுக்காண்டிதான் வரசொல்லிக்கிறிங்கோ. ஆனாக்கா அது இன்னானுதான் சார் புரியல.”

பாரியின் பதிலில் ஸ்ரீதரின் புன்னகை விரிந்தது.

“எக்சாக்ட்லி. இதுவரைக்கும் நான் சொன்னதை வச்சு இந்த விஷயம் நம்ம நாட்டோட பாதுகாப்பு, பொருளாதாரம், எதிர்காலம் சம்பந்தப்பட்டதுங்கறது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு உங்களால ஒரு உதவி ஆகனும்?”

“சொல்லுங்க சார். என்ன பண்ணனும்?”

வெற்றி வினவவும் தொண்டையை லேசாய் செருமிக்கொண்ட ஸ்ரீதர், “இப்ப லேட்டஸ்ட்டா எங்களுக்கு கிடைச்ச தகவல்படி உலக அளவுல ஸ்மக்ளிங்ல ஈடுபடற, உலக அளவுல போலீசால தேடப்படற குற்றவாளிகள் எல்லாரும் ஒரு இடத்துல ஒன்னாக் கூடப் போறாங்க.

இந்த மீட்டிங் வருஷாவருஷம் நடக்குமாம். ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு இடத்துல இந்த மீட்டிங் இருக்குமாம். போன வருஷம் ஆப்பிரிக்க நாடான காங்கோல நடந்திருக்குது. இந்த வருஷம் அவங்களோட மீட்டிங் நடக்கப்போறது இந்தோனேசிய தீவு ஒன்னுல.

அதுக்காக இந்தியாவுல இருந்தும் பல முக்கிய புள்ளிகள் போகப்போறதா எங்களுக்குத் தகவல் கிடைச்சிருக்கு. அவங்க அங்க போறதுக்கான ஏற்பாடுகளை பண்ற வேலையில நாதன் இப்ப தீவிரமா இருக்கான்.”

“இந்தோனேசியாவா?” பாரி வினவவும் தனது லேப்டாப்பைப் பிரித்து இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் வரைபடத்தைப் போட்டுக் காட்டினார் ஸ்ரீதர்.

“இதுதான் இந்தோனேசியா. இது மொத்தம் பதினேழாயிரத்துக்கு மேல தீவுகள் சேர்ந்து இருக்கற தீவுக்கூட்டம். இதுல மக்கள் குடியிருக்கறது கிட்டத்தட்ட எட்டாயிரம் தீவுகள்ல மட்டும்தான். சில தீவுகள்ல எரிமலைகள் இருக்கறதால போக தடைவிதிக்கப்பட்டிருக்கு.

மீதியெல்லாம் சுற்றுலா தலமா இருக்குது. அதுல நிறைய தீவுகள் தனியாருக்கு சொந்தமானது. அதாவது பொதுமக்கள் யாருமே அங்க போக முடியாது. தனிப்பட்ட நபர்கள் தங்களுக்காக வாங்கி வைத்திருக்கும் தீவுகள் அதெல்லாம்.

இப்ப இந்த ஸ்மக்ளர்ஸ் மீட்டிங்  தனியாருக்கு சொந்தமான ஒரு தீவுலதான் நடக்கப்போகுது.  அந்த தீவோட பேரு ஜோயோ. அங்க அவங்க அனுமதிக்கிற நபரைத்  தாண்டி ஈ எறும்பு கூட உள்ள நுழைய முடியாது.”

ஜோயோ தீவின் புகைப்படத்தை லேப்டாப்பில் காட்டினார். வான்வெளியில் இருந்து பறவையின் பார்வையில் அப்புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இதுதான் அந்த தீவு. ரொம்ப சின்ன தீவுதான் இது. மொத்தமே ஐந்து ஏக்கர் நிலப்பரப்புதான். பாறைகள் நிறைஞ்ச கடல் பரப்பின் நடுவுல இருக்கறதால ஜாவால இருந்து சின்ன போட் மூலமாதான் அந்த தீவுக்குப் போக முடியும். தீவை சுற்றிலும் மதில்சுவர் வச்சு உள்ள என்ன நடக்குதுனு வெளிய யாருக்கும் தெரியாத அளவுக்கு இருக்குது.”

“…”

“அங்க வரப்போறவங்க யாரும் சாதாரண ஆளுங்க கிடையாது. சர்வதேச காவல்துறையால தேடப்படறவங்க. அவங்களை மீட் பண்ண அந்த மீட்டிங்க்கு இந்தியாவுல இருந்து யார் யாரெல்லாம் போறாங்கன்ற டீட்டெயில் நமக்கு ஆதாரத்தோட கிடைச்சா, எல்லாரையும் கூண்டோட கைது பண்ண சூப்பரான எவிடன்ஸ்.”

“…”

“ஆனா இந்த தீவுக்கு சாதாரணமா யாரும் போயிட முடியாது. ரொம்ப பாதுகாப்பு வளையம் இருக்கும். அதையும் மீறி உள்ளபோய் அங்க வந்திருக்கறவங்களை ஃபோட்டோவோ வீடியோவோ எடுக்கறதுங்கறது முடியாத காரியம்.

அதுமட்டும் இல்ல சுற்றிலும் கடல்பரப்பு மட்டும்தான்ங்கறதால நாம வேற போட்ல தீவுகிட்டகூட போக முடியாது. சுற்றிலும் கண்காணிப்பு இருக்கும். அதேபோல வான்வழியா கண்காணிக்கறதும் சாத்தியம் இல்ல.”

 பெருமூச்சோடு ஸ்ரீதர் கூறவும், “வேற எப்படிதான் சார் அந்த தீவுக்கு போக முடியும்?” என்றான் வெற்றி.

“அதுக்காகதான் வெற்றி உங்க உதவிய கேட்டு வந்திருக்கேன். அந்த தீவுல இருந்து கிட்டத்தட்ட ஒரு கடல் மைல் தூரத்துல இருக்கற இன்னோரு தீவுக்கு சுற்றுலா பயணிகள் மாதிரி நம்மால போக முடியும்.

 அந்த மீட்டிங் எப்ப நடக்கப் போகுது யாரெல்லாம் வரப்போறாங்கன்ற விபரம் இன்னும் தெரியல. அந்த விபரங்களை சேகரிக்க இன்வெஸ்டிகேஷன் போயிட்டு இருக்கு.

அந்த விபரம் தெரிஞ்சதும், மீட்டிங் நடக்கப்போற நாளுக்கு ஒரு வாரம் முன்னதாவே நாம அங்க போயிடனும்.

இராத்திரி நேரத்துல அங்க இருந்து போட்ல போய் ஜோயோ தீவுக்கு கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்துல போட்ட நிறுத்திட்டு அங்க இருந்து யாராவது ஒரே ஒரு ஆள் மட்டும் ஜோயோ தீவுக்கு நீந்திப்போய் அங்க சுற்றிலும் இருக்கற பாறை திட்டுகள்ல நாள் முழுக்க ஒளிஞ்சிருந்து, அந்த தீவுக்கு வர்ற படகுகள், அதுல வர்ற ஆட்களை அதிநவீன கேமரா வச்சுப் புகைப்படம் எடுக்கனும்.

இந்த ஆதாரம் மட்டும் நமக்குக் கிடைச்சிட்டா இந்தியா முழுக்க நடக்கிற கடத்தல் சாம்ராஜ்யத்தோட ஆணி வேரையே அசைச்சிடலாம்.

இது ரொம்ப ரொம்ப ரிஸ்க்கான வேலைதான். மாட்டிக்கிட்டா உயிருக்கு உத்திரவாதம் இல்ல. துணிஞ்சுதான் செய்யனும். கிட்டத்தட்ட கடல்ல ஒரு கிலோமீட்டர் நீந்தறது எல்லாராலயும் முடியாது வெற்றி. அது உங்களை போல மீனவர்களாலதான் முடியும்.

கடலோர காவல் படையில நிறைய திறமையான வீரர்கள் இருக்காங்கதான். எங்களால அவங்களோட உதவிய வாங்கவும் முடியும். ஆனா இந்த விவகாரத்துல யாரையும் எங்களால நம்ப முடியல. நாங்க நம்பறதாவும் இல்ல.

அதனாலதான் உங்க உதவிய கேட்டு வந்திருக்கேன். உங்களுக்கு நம்பகமான மீனவர் யாரையாவது எங்களுக்குத் துணையா அனுப்ப முடியுமா?”

என்ன சொல்வது என்றே புரியவில்லை வெற்றிக்கு. உயிரைப் பணயம் வைத்து செய்ய வேண்டிய வேலை. யாரை அனுப்ப முடியும்? பாறைகள் நிறைந்த கடலில் நீந்துவதே சவால்தான். அதோடு கடலில் இருக்கும் அச்சுறுத்தலான உயிரினங்கள்.

இவையெல்லாம் தாண்டினாலும் சர்வதேச அளவில் கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களை வேவு பார்க்கச் சென்றுவிட்டு உயிரோடு திரும்ப முடியுமா? என்ன பதில் சொல்வது இவருக்கு? நம்பிக்கையோடு முகம் பார்த்திருக்கும் ஸ்ரீதரை சங்கடமாகப் பார்த்தான் வெற்றி.

பொதுவாக கடலோர காவல் துறை மற்றும் இந்திய கடற்படை ஆகியவை மீனவர்களை இம்மாதிரியான உதவிகளுக்குப் பயன்படுத்துவது வழக்கம்தான்.

கடலில் கப்பல் மற்றும் படகு கவிழ்ந்து விபத்து நேரும் போதும், கப்பல் மற்றும் படகுகள் தீப்பிடித்து எரியும் போதும், கடலில் எண்ணெய் கசிவுகள் ஏற்படும் போதும், இயற்கை சீற்றங்களின் போது மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்கள் மற்றும் படகுகளைத் தேடுவதற்கும் என காவல்துறையில் மீனவர்கள் பங்கு வெகு  அதிகம்.

“சார், போலீஸ் டிபார்ட்மென்ட்க்கு எங்க மீனவர்கள் நிறைய சந்தர்ப்பங்கள்ல நிறைய உதவிகள் செய்திருக்காங்கதான் நான் இல்லேங்கல. நீங்களும் எங்களை ரொம்ப நம்பி வந்திருக்கீங்க. ஆனா, இவ்வளவு ரிஸ்க்கான வேலைக்கு யாரைனு அனுப்பறது…” வெற்றி சற்று இடைவெளி விட ஸ்ரீதரின் முகம் சோர்ந்தது.

பாரியோ, “நான் வரேன் சார் உங்களோட.” சற்றும் யோசிக்காது கூறினான்.

“பாரி, சும்மா விளையாடாத. இந்த விஷயத்தோட சீரியஸ்னெஸ் புரியலயா உனக்கு?” வெற்றி சற்று கோபத்தோடு பாரியை அடக்க முயன்றான்.

“இம்மாம் வெளக்கமா சொல்றாரு புரியாம இன்னா? அதெல்லாம் நல்லாவே புரியிது. எதுலதான் ரிஸ்க் இல்ல வெற்றி? நம்ப தொழில்ல இல்லாத ரிஸ்க்கா? அல்லாத்துலயுமேக்கீது.

நாட்டுக்காக எம்மாம் பேரு இன்னான்னமோ பண்றாங்க. நம்மால முடிஞ்சத நாம பண்ணலாமேடா. மொள்ளமாறித்தனம் பண்ற அத்தினி பயலுவளும் மாட்டுவானுங்கல்ல.”

“இல்ல பாரி, அது சரிவராது.” பாரியிடம் கூறிய வெற்றி, “சாரி சார், இதுல இருக்கற ரிஸ்க் உங்களுக்கே தெரியும். எங்களால இதை செய்ய முடியும்னு தோனல. எதுக்கும் நான் யோசிச்சு சொல்றேன் சார்.”

வெற்றியின் பதிலில் ஸ்ரீதரின் முகம் நம்பிக்கையின்மையை காட்டியது. “ஓகே, வெற்றி.  ஆனா இந்த விஷயம் உங்களைத் தாண்டி வேற யாருக்கும் போகாம பார்த்துக்கோங்க. இட்ஸ் ஹைலி சீக்ரெட்.” வெற்றியிடம் பேசியபடியே பாரியையும் பார்க்க,

“நிச்சயமா எங்களைத் தாண்டி இந்த விஷயம் போகாது சார்.” இருவரும் கூறினர்.

“அந்த நம்பிக்கை உங்கமேல இருந்ததாலதான் இதை உங்ககிட்ட சொல்லி உங்க உதவிய கேட்டேன். இட்ஸ் ஓகே. யோசிச்சு உங்க பதிலை சொல்லுங்க. நாம அப்புறம் சந்திப்போம்.”

ஸ்ரீதரிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர் பாரியும் வெற்றியும். நேராக பாரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். நித்திலாவும் ஆயாவும் குப்பத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றிருக்க வீடு காலியாக இருந்தது.

“அம்மாம் பெரிய ஆபிசரு. நம்பளாண்ட ஒரு ஹெல்ப்புனு வந்துக்கிறாரு. செய்ய முடியாதுனு சொல்லிக்கினு வந்தது இன்னமோ போலக்கிது வெற்றி. கடல்ல நீந்தறதுலாம் அசால்ட்டு மேட்டருடா. நம்மளால முடியாதா?” வீட்டினுள் நுழைந்ததும் பாரி ஆதங்கமாக வினவினான்

“ம்ப்ச், கடல்ல நீந்தறதுலாம் பெரிய விஷயம் இல்லதான் பாரி. ஆனா அந்த கடல்பரப்பு முழுக்க முழுக்க பாறைகள் நிறைஞ்சது. எப்படிப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் இருக்கும்னு கூடத் தெரியாது.

இதெல்லாம் சமாளிச்சாகூட, அங்க வர்றவனுங்கலாம் சாதாரண ஆளுங்க இல்ல. இன்டர்நேஷனல் கிரிமினல்ஸ். மாட்டிக்கிட்டோம்னுவை தடம் தெரியாம ஆக்கிருவானுங்க.

இவ்வளவு ரிஸ்க் இருக்கற இடத்துக்கு எப்படி போக முடியும்? யாரைனு அனுப்ப முடியும்?”

“யாரையும் அனுப்ப வேணாம் வெற்றி. நான் போறேன்டா.”

“கிறுக்கனாட்டம் உளறாத பாரி. அதெல்லாம் என்னை மீறி எங்கயும் நீ போகக்கூடாது. அப்படி போயே ஆகனும்னா நான் வேணும்னா போறேன்.”

“டேய், இப்பதான் கண்ணாலம் ஆயிக்கிது. நீ ஏன்டா ரிஸ்க் எடுக்கனும்? அதெல்லாம் நீ போவ வேணாம்.” பாரி படபடத்தான்.

“நான் போறேன்னு சொன்னதும் அதுல இருக்கற ஆபத்து புரியுதுல்ல? வேணாம்னு படபடக்குற. அதேபோலதான எனக்கும் இருக்கும். உன்னை எப்டிடா அனுப்புவேன்? இனி இதைப்பத்தி எதுவுமே பேச வேண்டாம் புரியுதா.” வெற்றி கூறவும் நித்திலா வீட்டினுள் நுழையவும் சரியாக இருந்தது.

அவர்கள் பேசியதை அரைகுறையாக காதில் வாங்கியிருந்தவள், “எங்க போகறதை பத்திப் பேசறீங்க அண்ணா?” என்று வெற்றியிடம் வினவினாள். இருவரது முகமும் இயல்பாக இல்லாதது போலத் தோன்றியது அவளுக்கு. இருவரையும் மாற்றி மாற்றி பார்த்திருந்தாள்.

நித்திலாவின் கேள்வியில் சற்று சுதாரித்திருந்த வெற்றி, “அ… அது ஒன்னும் இல்லமா. இவன் கடலுக்குப் போய் ரொம்ப நாளாகுதுல்ல. அதைப்பத்திதான் பேசிக்கிட்டு இருந்தோம்.” என்று கூறவும் சரியென்பது போலத் தலையசைத்தவள், அறைக்குள் சென்றாள்.

“ஸ்ரீதர் சார் ஒரு ஹெல்ப்புனு நம்மகிட்ட கேட்டாருதான் ஆனா அது நம்மால முடியாத காரியம். அதனால நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். நாம இல்லனாலும் அதை எப்படி முடிக்கனும்னு அவருக்குத் தெரியும். இனி நாம இதைப்பத்தி யோசிக்கக்கூட வேண்டாம் சரியா” மீண்டும் ஒருமுறை பாரியிடம் எச்சரித்துவிட்டுக் கிளம்பினான் வெற்றி.

வெற்றி கிளம்பிய பிறகு வெளியே வந்து கயிற்றுக் கட்டிலில் அமர்ந்த பாரிக்குதான் மனதே சரியில்லை. சூழலும் மழை வரும்போல அவ்வளவு இறுக்கம்.

இதுவரை உதவி என்று கேட்டு வந்த எவருக்கும் இல்லையென்று சொன்னதில்லை. முதல்முறையாக மறுத்துவிட்டு வந்தது என்னவோ போலிருந்தது. சூழலுக்கேற்ப மனதிலும் இறுக்கம்.

செய்ய முடியும் செய்ய முடியாது என்பதைத் தாண்டி அதிலிருக்கும் ஆபத்துகளைத் தாண்டி, உதவியென்று கேட்டு வந்தவருக்கு இல்லையென்று சொல்லிவிட்டு வந்ததுதான் அவனை பாதித்திருந்தது. வெற்றியை மீறி இதுவரை எதுவுமே செய்ததில்லை என்பதால் மௌனமாக வந்திருந்தான்.

கடலையே பார்த்திருந்தவனின் முன் தேநீர் கோப்பை நீட்டப்பட்டது. நித்திலாதான் தயாரித்து எடுத்து வந்திருந்தாள்.

“அண்ணா எங்க? கிளம்பிட்டாங்களா?”

ஆமென்று தலையசைத்தபடி தேநீர் கோப்பையை வாங்கிக் கொண்டான். ‘எப்படியும் சர்க்கரையைக் கொட்டியிருப்பாள்’ அவனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப உள்நாக்கு வரை இனித்தது தேநீர்.

வெற்றிக்கு என தயாரித்ததை தான் அருந்தியபடி வெளியே இருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள் நித்திலா.

“ஆமா, ஏன் இப்பலாம் நீ கடலுக்குப் போறதே இல்ல?” ஒரு மிடறு தேநீரை விழுங்கியபடி கேட்க,

“குடோனு கட்ற வேல நடக்குதுங்க. அதப் பாக்கனும். நானு கடலுக்குப் போனா திரும்ப வர ஒரு வாரம் ஆவும். நீங்களும் காலேசுக்கு போயிக்கினு இருந்தீங்க. எப்புடி தனியா வுட்டுட்டுப் போவ முடியும்? அதான் தேவாவையும் மணியவும் அனுப்பிக்கிறேன்.”

“ஓ…” ஒற்றை எழுத்தை உதிர்த்தபடி அவன் கூறியதைக் கேட்டுக் கொண்டாள்.

“ஒருதடவை என்னையும் கடலுக்குக் கூட்டிட்டு போயேன். எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. இப்ப எனக்கு லீவுதான, அடுத்து போட் போறப்ப நாம போகலாமா? ஒரு வாரம் போட்லயே தங்கலாம்.” குதூகலமாக வந்தன வார்த்தைகள்.

“அதுக்கென்னாங்க. கூட்டினு போறேன். ஒரு வாரமெல்லாம் தாங்காது. ஒரு நாள் வேணா போவோம்.”

“ஏன் ஒரு வாரம் வேணாங்கற?” முகத்தைச் சுருக்கியபடி நித்திலா வினவ,

“ஒத்துக்காதுங்க. மொத மொத போட்ல போயி கடலுல தங்கறது நெறய பேருக்கு ஒத்துக்காது. தலசுத்தும் வாந்தி மயக்கம் வரும். உப்புக்காத்து பட்டு ஒடம்புக்கு முடியாம போகும்ங்க. அதனாலதான் வேணாங்கறேன்.”

“அதெல்லாம் எனக்கு ஒன்னும் ஆகாது. நாம போகலாம். அப்படியே எதாவது ஆனா திரும்ப வந்துடலாம்.”

மெல்ல சிரித்துக் கொண்டான். “அது இன்னா டவுன்பஸ்ஸா? ஒடனே திருப்பினு வர்றதுக்கு? ஒரு தபா போட்டு எடுக்கனுமினா  இட்டுனு போற ஆளுங்க கூலி, சாப்பாடு, டீசலு, ஐஸ்கட்டினு லட்சக்கணக்குல செலவாவும்.

அதுக்கேத்தாபோல மீனு புடிச்சாதான சம்பாதிக்க முடியும்? மீன்பாடு சரியில்லனா பத்து நாளுகூட கடல்ல தங்குவோம்ங்க.” என்று துவங்கி அவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் தூரம்  அவர்கள் மீன் பிடிக்கும் முறை என்று அத்தனையையும் கூற கதை கேட்கும் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.

அவர்களது தொழிலில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் இடர்பாடுகள் சவால்கள் அத்தனையும் ஆச்சரியம் அளித்தது. இயற்கையோடு இயைந்து வாழ்பவர்களை சில நேரங்களில் இயற்கையும் வஞ்சிப்பது குறித்து அவன் கூறியபோது மிகவும் வருத்தமாக இருந்தது.

அத்தகைய இயற்கை பேரிடர் காலங்களில் மகேந்திரன் வெற்றி துணையோடு அந்த எளிய மக்களின் வாழ்வாதாரம் மீட்க செய்யும் உதவிகளைக் கூறியபோது அவன்மீது பெரு மதிப்பு வந்தது.

“எங்க ஜனங்களுக்கு இன்னும் நெறையா செய்யனுங்க? எங்கப்பாரு இருந்தப்ப ஐயாவும் அவரும் கட்ட நெனைச்சதாம் நாம இப்ப கட்டினுக்கிற குடோனு.

மீன்பாடு நெறக்க கெடச்சா சல்லீசா வாங்கினு பூடுவானுங்க ஏஜெண்ட்டுங்கோ. நமக்கு பெருசா லாபமில்ல. ஆனாக்க இனி அத்து நடக்காது. நாம்ப புடிக்கிற மீன குடோனுல சேப்டி பண்ணி வச்சுக்கலாம். என்னிக்கும் ஒரே வெல வச்சு விக்கலாம். வெளிநாட்டுக்கும் அனுப்பலாம்.

 நியாயமா பார்த்தா அரசாங்கத்துல கட்டனும்ங்க இந்த குடோன. எங்க? ஓட்டு கேட்டுனு வரசொல்ல வாக்குறுதிய மட்டும் அள்ளி வீசறானுங்களக்கண்டி ஒன்னியும் செய்யக்காணோம். அதான் நாங்களே குடோனக்  கட்றோம்.

இன்னும் ஒரு ஆசக்கீதுங்க”

“என்னது?”

“நம்ப குப்பத்து ஆளுங்களுக்கு புயலு மழைனு எது வந்தாலும் அசைக்க முடியாதபோல கல்லு வூடு கட்டி தரனுமுங்க.”

தான் சம்பாதிப்பதைக் கொண்டு தனக்கென பெரிதாக எதையும் செய்து கொள்ளாது தன் மக்களின் மேம்பாட்டுக்காக செலவு செய்பவனை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு. தான் பார்த்த மனிதர்களில் இவன் நிரம்ப வித்தியாசமானவன் என்பதும் புரிந்தது.

“சத்தமே இல்லாம எவ்ளோ பெரிய பெரிய விஷயமெல்லாம் பண்ற. எல்லாருக்கும் ஹெல்ப் பண்ற. கிரேட்தான் நீ.”

அவளது வாயில் இருந்து வந்த முதல் பாராட்டு தானாக முகம் மலர வைத்தது பாரியை. அதேநேரத்தில் ஸ்ரீதர் கேட்ட உதவியை மறுத்துவிட்டு வந்தது உறுத்தியதும், 

“ஏங்க, நம்பளாண்ட ஒருத்தவங்க ஒரு ஹெல்ப்புனு கேட்டு வந்துக்கறாங்க. அது கொஞ்சம் ரிஸ்க்கான வேலதான். ஆனாக்க நம்மால செஞ்சு முடிக்க முடியுமுனு நம்பிக்கை இருக்குனு வைங்க. அப்ப அத செய்யனுமா வேணாமாங்க?” நித்திலாவிடம் கேட்டான்.

அவன் கேட்பது தலையும் புரியாது வாலும் புரியாது இருப்பினும், “நீ இதுவரைக்கும் யாரும் ஹெல்ப்னு கேட்டு வந்தா செய்யாம இருந்ததில்லயே. அதனால கட்டாயம் செய். ஆனா கவனமா செய்.” என்று கூறவும் பாரியின் முகம் நன்றாக மலர்ந்து புன்னகை விரிந்தது.

 

 

___தொடரும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!