இதயத்தின் ஓசைதான் காதல்!

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 3

“ஓம் பூர்புவ ஸ்ஸவ

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோயோனு ப்ரசோத யாத்

ஓம் பூர்புவ ஸ்ஸவ

பர்கோ தேவஸ்ய தீமஹி” காயத்திரி மந்திரம் கூறியபடியே இன்று கோதைநாயகி பூஜையை ஆரம்பித்திருந்தார்.

கண்களை மூடி அப்படியே நின்றிருந்தாள் வைஷ்ணவி. மிகவும் கஷ்டப்பட்டுப் படித்திருந்தாள். நல்ல மார்க் வரவேண்டும் என்ற வேண்டுதல் நிறையவே இருந்தது.

‘நல்ல மார்க் எடுத்தால், நல்ல இடத்தில் நல்ல சம்பளம் வாங்கலாம். குடும்பத்தைத் தான் நினைத்தது போல் உயர்த்தலாம்’ எண்ணியபடியே வேண்டிக் கொண்டிருந்தாள்.

பூஜை முடிந்து, காலை உணவும் உண்டுவிட்டு, இவள் கிளம்பி தயாராகி வந்தாள்.

“பாப்பா… நான் உன்னைக் கொண்டு விடவா?” அவள் முன் வந்து நின்றார் மாறன்.

“உங்களுக்கு வயலுக்கு நேரமாகுமேப்பா… இன்னைக்கு நீங்க லோடு கொண்டு போறதா சொன்னீங்களே, லேட்டா போனா உங்க முதலாளி திட்டமாட்டாரா?”

“அதெல்லாம் சொன்னா கேட்டுப்பார். நீ வா, நான் உன்னை ஆபீஸ்ல விட்டுட்டு போறேன்” என்றார்.

“சரிப்பா” என்றவள் அம்மாவிடமும், தம்பி, தங்கையுடன் கூறிக் கொண்டு வெளியே வர,

மாறனும், சைக்கிளை ஸ்டாண்ட் எடுத்து தயாராக நின்றிருந்தார்.

வைஷ்ணவி பின்னால் ஏறிக்கொள்ள, மெதுவாகச் சைக்கிளை ஓட்டினார்.

‘உண்மையில் அவருக்குப் பயமாக இருந்தது, அதுதான் தான் கொண்டு விடுவதாகக் கூறினார்.

நேற்று நிறையப் பையன்கள் கூட ஒற்றைப் பெண்ணாக இவள் நின்று வாதிட்டது, அவருக்குப் பயத்தை ஏற்படுத்தியது.

‘யாராவது அளவுக்கு மீறிப் பேசினால், வைஷ்ணவி கையை ஒங்க கூடத் தயங்கமாட்டாள். அடித்துவிட்டு தான் மறுவேலைப் பார்ப்பாள்’ அதற்காகவே மிகவும் பயந்தார்.

பெண்பிள்ளை அடித்து நாளை அது பெரிய பிரச்‌சனையில் போய் நின்றால், அது அவளுக்கு நல்லதல்ல, இதை எண்ணியே அவளைக் கொண்டுவிடும் எண்ணத்துக்கு வந்திருந்தார்.

***

எப்பொழுதும் போல் இன்றும் இவளைப் பார்ப்பதற்காகக் கையில் ஒரு பேப்பருடன் வாசலில் அமர்ந்து விட்டான் ஸ்ரீ.

தூரத்தில் மாறன் சைக்கிள் வருவதையே பார்திருந்தான். அவருக்குப் பின்னே சிகப்பு கலர் தாவணி தெரிய, ‘என்னாச்சு, எப்பவும் நடந்து தானே போவா? இன்னைக்கு என்னாச்சு?’ என்ற யோசனையுடன் அவர்களையே பார்த்திருந்தான்.

அருகில் வந்த மாறன், ஒரு காலை கீழே வைத்து ஊன்றி சைக்கிளை நிறுத்தி, “தம்பி, பாப்பாக்கு இன்னைக்கு ரிசல்ட் வருது, அதுதான் ஆஃபிஸ்ல விட்டுட்டு மில் வாரேன்?” எனக் கூற,

“சரி” என்று தலையாட்டினான் ஸ்ரீ.

இவனைத் தாண்டி அவர்கள் செல்லவும், அவன் ஃபோன் அழைக்க, அதில் ஆழ்ந்து விட்டவனைத் திரும்பி திரும்பி பார்த்தபடியே சென்றாள் வைஷ்ணவி.

‘விக்கி பத்தி இவன்கிட்ட எப்படிப் பேசுறது?’ எண்ணியப்படியே அவனைத் திரும்பி பார்த்து சென்றாள் வைஷ்ணவி.

ஃபோன் பேசியபடியே வீட்டின் உள்ளே வந்தவனை எதிர்கொண்டாள் ஷிவானி.

“ண்ணா” தயங்கித் தயங்கி அழைத்தாள்.

பெரும்பாலும் இவள் அழைத்தால், அவன் இவளை ஏறிட்டுப் பார்ப்பதே இல்லை.

இன்று காலையிலையே அழைக்கவும், ‘என்னவா இருக்கும்?’ யோசனையுடன் அப்படியே திரும்பிய வாக்கிலே நின்றான்.

“டிரைவர் இன்னைக்கு வரல, என்னைக் கொஞ்சம் காலேஜ் வரை கொண்டு விடுறியா?” என்றாள் மிகவும் தயங்கி.

அவளிடம் ஒன்றும் கூறாமல், அப்படியே அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்தான் மேலே சொல்லு என்னும் விதமாக,

‘காலேஜ் லீவ்தானே? இவ எதுக்கு இன்னைக்குப் போறா?’ என்ற யோசனையும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

“மேம் இன்னைக்கு ஃபைனல் இயர் நோட்ஸ் வாங்க வர சொன்னாங்க” அவனது யோசனையான முகத்தைப் பார்த்து மெதுவாகக் கூறினாள்.

அவளிடம் எதுவும் கூறாமல், அங்கிருந்த டேபிள் மேல் ஃபோனை வைத்து தன்னறைக்குச் சென்றான்.

ஃபோனை டேபிள் மேல் வைக்கவும், ‘அவன் வருவான்’ என எண்ணிக் கொண்டாள்.

அடுத்தக் கொஞ்ச நேரத்தில் மேலே ஒரு சட்டையை மட்டும் மாட்டியவன், ஃபோனையும், கார் சாவியையும் எடுத்து முன்னே செல்ல, அவனைப் பின் தொடர்ந்து சென்றாள் ஷிவானி.  

தான் செய்த தவறுக்கு இந்த மூன்று வருட தண்டனையே மிக அதிகம் போல் தோன்றியது ஷிவானிக்கு.

அதிலும் ஸ்ரீயை பேசியது மிகவும் அதிகப்படி என மனம் விடாமல் துரத்த, அவனிடம் பேச பல வழிகளை இந்த மூன்று வருடத்தில் கையாள, அவனோ கண்டுக் கொள்ளவே இல்லை.

அதுதான் இன்று டிரைவரை மதியத்துக்கு மேல் வரக் கூறியவள் இவனை அழைத்து செல்கிறாள்.

அவனுடைய பழைய பாசத்துக்காக மனம் ஏங்கியது. இவள் துச்சமாக எண்ணிய அதே பாசம் இப்பொழுது கிட்ட மிகவும் ஏங்கினாள். 

தன்மானம், சுயகௌரவம் மிகவும் முக்கியம் அவனுக்கு. பத்து வயது வரை அப்படிதான் வளர்க்கபட்டான் சக்ரவர்த்தி.

அவனது பாட்டன், முப்பாட்டன் ரத்தம் அவனில் ஓட அவனறியாமலே அவன் எண்ணத்தில் ஒவ்வொன்றும் பிரதிபலித்தது.

அதுதான் அன்று ஷிவானி, அத்தனை பேர் முன்னும் அவன் ஒரு அனாதை, அண்டி வாழ்பவன் இப்படி எல்லாம் கூறியது அவன் தன்மானத்தை சீண்டியது.

‘அந்த வீட்டில் கால் வைக்கவே கூடாது’ என்று எண்ணித்தான், மோட்டார் அறையில் படுத்துக் கொண்டான்.

ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் அவனை அங்கு இருக்கவிடாமல் அவனோடு வந்து அமர்ந்துக் கொண்டார் ஸ்ரீகரண்.

‘அவனிடம் எதுவும் கேட்கவில்லை, நீ எப்பொழுது வீட்டுக்கு வருவாய்?’ என்று எதுவும் கேட்கவில்லை.

‘நீ இங்கிருக்கும் வரை நானும் இங்கிருப்பேன்’ என்று செயலால் உணர்த்திக் கொண்டிருந்தார்.

அந்த ஒரு மனிதருக்காக மீண்டும் வீட்டை நோக்கி வந்தான். அன்றோடு ஷிவானிக்கும் அவனுக்குமான பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்தது.

 அன்று ஏன் ஸ்ரீ கோபப்பட்டான், ஏன் வீட்டை விட்டு சென்றான் இப்படி எதுவும் இன்று வரை அவர் கேட்கவில்லை.

ஆனால், ஷிவானியைக் கண்டு ஒதுங்கிப் போவதைக் கண்டு அவரே அறிந்துக் கொண்டார். 

ஆனால், நன்கு தெரியும் அவன் இவளை கைவிடமாட்டான் என்று!

இந்த பத்து வருடத்தில் அவன் மீது அப்படி ஒரு நம்பிக்கை. அவனை கண்ட நொடி முதல் ஏற்பட்ட நம்பிக்கை.

அவன் யார்? எங்கிருந்து மதுரைக்கு வந்தான் இப்படி எதுவும் அவனிடம் இதுவரை அவர் கேட்டதில்லை. அவனும் சொன்னதில்லை.

அவனது பதினெட்டு வயதுவரை அவன் எங்கிருந்தான்? அவனது பிண்ணனி என்ன இப்படி எதுவும் அறிந்துக் கொண்டதில்லை.

அவர் நினைத்திருந்தால், என்றோ அறிந்திருக்கலாம். ஆனால் அவர் அவனைப் பற்றி அறிய முற்படவில்லை.

என்றாவது ஒருநாள் அவனே கூறுவான்… எதற்கோ பிரிந்து வந்திருக்கிறான் என்றே இப்பொழுதும் எண்ணுகிறார்.

அவனது, உடை நடை பாவனையில் அவன் ஒரு கோடீஸ்வர வீட்டு பிள்ளை என்று மட்டும் தெரிந்துக் கொண்டார். அப்படி இருந்தும் அவரிடம் அவன் தொழிலாளியாக இருக்கிறான்.

அவரிடம் உழைப்பதற்க்கு சம்பளம் வாங்குகிறான். மிகவும் வித்தியாசமான ஆளுமையை அவனிடம் கண்டார் அவர்!

அதனால்தான் அவரிடம் இருந்த எல்லா ஆளுமை பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்தார். இன்றுவரை அதில் விசுவாசமாய் இருக்கிறான் ஸ்ரீ சக்ரவர்த்தி!

***

“வைஷால்லிலிலிலி…” வீட்டின் நடுவாசலில் நின்று கத்தினான் வசந்த்.

“ஏண்டா இப்படிக் கத்தி தொலைக்கிற?” கத்தியவாறே வந்தார் கோதைநாயகி.

“அவளை எங்கம்மா?”

“எதுக்கு? அவ பின்னாடி இருப்பா” என்றவர் அப்பொழுதுதான் அவனை முழுதாகப் பார்த்தார்.

”என்னடா இது சட்டையெல்லாம் இப்படி அழுக்கா இருக்கு, இது துவைச்சா போகுமா?” என்று கத்தி அருகில் இருந்த குச்சியை எடுக்க,

“ம்மா, இப்போ ஏன் நீ குச்சியை எடுக்க, இந்தச் சட்டைதானே அழுக்கா இருக்கு, நானே இதைத் துவைச்சுக்கிறேன், நீ ஒண்ணும் துவைக்க வேண்டாம் போ” என்றான் ரோசமாக.

“நாளைக்கு இந்தச் சட்டை வெள்ளையா இருக்கணும் அவ்ளோதான்” மிரட்டலுடன் உள்ளே சென்றார் கோதைநாயகி.

“என்னடா சத்தம் வேகமா கேட்குது?” என்றபடி பின்கட்டில் இருந்து அவன் முன் வந்தாள் வைஷாலி.

“அது, உன்கிட்ட ஒன்னு காட்டணும்” மிகவும் தயங்கி அவளைப் பார்த்துக் கூறினான்.

“உன் சட்டை ஏன் இவ்ளோ அழுக்கா இருக்கு?”

“அது கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கும் போது, பந்து எடுக்கப் போனப்பா அங்க விழுந்துட்டேன்”

“நீ விளையாடிட்டு இருந்த அதை நான் நம்பணும், அங்க விளையாடிட்டு இருந்தவங்களுக்குக் கீப்பர் வேலை பாக்க போயிருப்ப, அத வந்து என்கிட்ட விளையாட போனேன்னு சொல்லுற அப்படிதானே?” முறைக்க,

“அது என்கிட்ட பேட் இல்லைதான, அதுதான் பத்து நேரம் பந்து எடுத்து குடுத்தா எனக்கும் பேட் தருவேன்னு சொன்னாங்க அதுதான் போனேன்”

“அக்கா எத்தனை நாள் சொல்லிருக்கா அங்க விளையாட போகாதன்னு, பேட் வாங்கித் தந்த பிறகுதான் அங்க போகணும்னு சொல்லிருக்கால்ல ஏன் போன?”

“எனக்கு ஆசையா இருந்திச்சி அதுதான் போனேன்” என்றான் மெதுவாய்.

வீட்டில் வசந்த்க்கு அதிகச் செல்லம். ஒற்றை ஆண் மகன் என அதிகச் செல்லம் குடுத்து வளர்க்க, அவனது செய்கைகளும் செல்லமாய், சிறுகுழந்தையாய் இருக்கும்.

ஆண் பிள்ளை இப்படி இருப்பது சரியாகாது என்று இப்பொழுது கொஞ்ச நாட்களாய் கோதைநாயகி கோபம் காட்டுகிறார்.

யாராவது கோபத்தில் ஏதாவது கூறினால் மட்டும் இவனுக்கு ரோஷம் வர, ரோசமாய்ப் பதில் கூறுவான் அதுவும் அந்த நொடி மட்டுமே அடுத்த நிமிடம் மாறிவிடுவான்.

“சரி இனி பேட் வாங்கின பிறகுதான் அங்க போகணும்… அவங்க உன்னை ஏமாத்துறாங்கடா வசந்த். எப்பவும் நீ இப்படி இருக்கக் கூடாது சரியா?”

‘சரி’ என வேகமாகத் தலையாட்டியவன், ”நீ கொஞ்சம் வெளிய வா” மிக மிக மெதுவாய் அழைத்தான்.

“என்னடா பண்ணி வச்சிருக்க நீ?”

“கத்தாத, வா வெளிய” எனக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

வாசலில் பப்பி நாய் ஒன்று வைஷாலியைப் பார்த்துக் கண்களை உருட்டி பார்த்தது.

“டேய்! என்னடா இது, எங்க இருக்கு தூக்கிட்டு வந்த?”

“அது ரோட்டுல பாவமா சுத்திட்டு இருந்திச்சா, நான் விளையாடி முடிச்சு வீட்டுக்கு வந்துட்டு இருந்தனா, அதுவும் என் பின்னாடியே வந்துட்டு” என்றான் கதையாய்.

“அம்மா பார்த்தா நீ இன்னும் வளரவே இல்லைனு உன்னைதான் திட்டுவாங்க, ஏன் இந்த வேலை எல்லாம் பாக்குற?” இன்னும் சிறுபிள்ளையாய் இருக்கிறானே என்ற கடுப்பு வந்தது.

“நான் ஒன்னும் வளராம இல்ல, நல்லா வளந்துட்டேன், நானே இதை வளத்துகிறேன். நீ ஒன்னும் வேண்டாம் போ” என்றான் ரோசமாய்.

“இந்த ரோசத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” கடுகடுத்தவள், “நீ இங்கையே இரு வாரேன்” அவனிடம் கூறி வீட்டின் உள்ளே சென்றாள்.

அடுத்தக் கொஞ்ச நேரத்தில் சின்ன அட்டை பெட்டி ஒன்றை எடுத்து வந்த வைஷாலி,

“இதுக்குள்ள கொஞ்ச நேரம் சத்தம் போடாம இருக்கணும், அப்போதான் நீ இந்த வீட்டில இருக்க முடியும்” மெதுவாகப் பப்பியிடம் கூறி உள்ளே பப்பியை வைக்க,

அவள் முகத்தையே பார்த்திருந்த பப்பியும் சமத்தாக உள்ளே படுத்துக் கொள்ள வீட்டின் பின்னே கொண்டு வைத்து வந்தாள்.

“இங்க பாருடா வசந்த், அம்மாகிட்ட எதுவும் சொல்லாத அக்காவும், அப்பாவும் வரட்டும் நான் சொல்லிக்கிறேன், நீ போ முத இந்தச் சட்டையைத் துவைச்சு போடு” அவனை அப்புறபடுத்தியவள் சமத்தாக வீட்டின் உள்ளே வந்து அமர்ந்துக் கொண்டாள்.

வைஷ்ணவியைப் பார்க்காமல் இருப்பது என்பது விக்ரமுக்கு பெரிய மலையைப் புரட்டுவது போல் மிகவும் கடினமாக இருந்தது.

அவளை, அவனுக்கு அத்தனை பிடிக்கும். இந்தக் காலப் பெண்கள் எல்லாரும் அல்ட்ரா மாடலாக இருக்க, அவளோ பாவடை தாவணி அணிந்து பாந்தமான அழகுடன் மிளிர்ந்தாள்!

அவன் கண்களுக்கு அவள் வித்தியாசமாய்த் தெரிந்தாள்!

அவளின் வித்தியாசத்தில், தனித்துவத்தில் விழுந்தவன்தான் இன்னும் எழவில்லை!

எழவில்லை என்பதல்ல எழ மனதில்லை!

அவளை எதற்கும், யாருக்கும் விட்டுதர மனதில்லை அவனுக்கு!

அவளிடம் பேச அவனுக்கு நிறைய ஆசை உண்டு. ஆனால், ஏதோ ஒரு தயக்கம் அவனை ஆட்கெள்ள தூரத்தில் அவளைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டான்.

அவனும், அவளைப் போல்தான் சி.ஏ படித்தான். அதிலும் இருவரும் ஒரே கல்லூரி. ஆனால், அவனோ இவளுக்கு முந்தின பேட்ச்.

கல்லூரியில் அங்கு… இங்கு நின்று பார்ப்பதோடு சரி, அதற்க்கு மேல் பார்க்கமாட்டான். ஆனால், அவன் படிப்பை முடித்ததும் அவளது கடைசி வருடத்தில் இருந்து தொடர்ந்தான்.

அத்தனைக்கும் இருவரும் ஒரே ஊர்தான்.

அவள் அவனைக் கவனிக்கமாட்டாள். அவனை மட்டுமல்ல யாரையும் கண்டுக்கொள்ளமாட்டாள்.

அவளுக்குப் பொறுப்புகள் அதிகம். அதுவே மனதில் ஒட அவன், அவளைத் தொடர்வது தெரியாமலே போனது.

கடந்த இரண்டு மாதமாகதான் அவள் கண்ணில் அவன் பட்டான். பார்த்தால் அவளின் ஃப்ரோபசர் மகன் என்ன சொல்லுவது அவனிடம்? கண்டும் காணமல் சென்றுவிட்டாள். இதற்குமேலும் அவன் தொடர்வது சரியல்ல என்று எண்ணித்தான் அவனிடம் பேசினாள்.

இப்பொழுது எண்ணினாலும் அவனுக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது. காதலை அவளிடம் கூறிவிட்டானே!

அவளிடம் மட்டுமல்ல ஸ்ரீயிடமும் கூறியாகிவிட்டது. இனி அவள் வீட்டுல் அவனே பேசிவிடுவான். தன் காதல் இத்தனை சீக்கிரம் கைக்கூடும் என அவனே நினைத்துப்பார்க்கவில்லை.

‘வைஷ்ணவி வீட்டில் சம்மதம் வாங்கிவிட்டால், தன் தாய், தந்தையருடன் போய் பேசலாம்’ சந்தோஷ மனநிலையுடன் தன் அறையில் கனவுகள் வலம்வர படுத்துக் கொண்டான் விக்ரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!