இதயம் – 10

eiHJN6N67051-3e1b5b3b

இதயம் – 10

பூஜா கோயம்புத்தூர் வந்து சேர்ந்து அன்றோடு முழுமையாக ஆறு மாதங்கள் நிறைவு பெற்றிருந்தது.

இந்த ஆறு மாத காலத்திற்குள் அந்த புது சூழலுக்கு தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டவள் பழைய நினைவுகளில் இருந்து தன்னை சிறிது மீட்டு எடுத்துக் கொள்ளவும் பழக்கப்படுத்தியிருந்தாள்.

சக்தி தன் வாழ்க்கைக்கு ஒரு புதிய வழியைக் காண்பித்திருக்கிறான் என்ற எண்ணத்தில் அவள் மனதில் அவன் மேல் ஒரு தனி மரியாதை உருவாகியிருக்க, அதேநேரம் சக்தியின் மனதிற்குள் அவ்வப்போது அவன் காதல் நினைவுகள் சுகமான அவஸ்தைகளாய் வந்து அவனைத் தாக்கிச் செல்லாமல் இல்லை.

அலுவலக நேரத்திலோ அல்லது பூஜாவை நேருக்கு நேராக சந்திக்கும் நேரத்திலோ தன் மனதிற்குள் இருக்கும் தன் எண்ணங்களை அவளிடம் காட்டி விடக்கூடாது என்று அவன் எவ்வளவு தூரம் உறுதியாக இருந்ததாலும் அவன் மனது அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளுமா என்ன?

சக்தி எதிர்பார்த்ததை விட இந்த ஆறு மாத காலத்திற்குள் அவனது புதிய தொழில் முயற்சி அவனுக்கு சிறப்பான இலாபத்தை பெற்றுக் கொடுத்திருந்தாலும், அவன் மனது தேடும் இலாபம் என்னவோ பூஜாவின் நினைவுகளிலேயே லயித்திருந்தது.

அவளது வாழ்வில் என்னவெல்லாம் நடந்து முடிந்திருக்கிறது என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்ததனால் தன் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவன் தன்னை எவ்வளவோ கட்டுபடுத்திக் கொள்ள முயன்றான், ஆனால் காதல் கொண்ட மனது அத்தனை எளிதில் அந்த நினைவுகளை மாற்றி விடுமா?

நாட்களின் போக்கில் தன் மன எண்ணங்களும் மாறி விடும் என்கிற எண்ணத்தில் சக்தி தன் நாட்களைக் கடத்த, அவனது மன எண்ணங்கள் நிறைவேறுமா? இல்லையா? காத்திருந்து பார்க்கலாம்.

***************
அன்று வழக்கம் போல தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்து வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த பூஜா, அவளின் முன் பக்கமாக இருந்த இடத்தில் அமர்ந்திருந்த சுலோச்சனா பதட்டத்துடன் அந்த இடத்தில் நடந்து கொண்டு நிற்பதைப் பார்த்து விட்டு சிறிது குழப்பத்துடன் அவள் முன்னால் வந்து நின்று கொண்டாள்.

“என்ன ஆச்சு சுலோச்சனா அக்கா? ஏன் இவ்வளவு டென்ஷனாக இருக்கீங்க?”

“பூஜா, நீயா? நல்லவேளை நீயாவது என்ன என்று கேட்ட. எனக்கு… எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல பூஜா. ஒரே பதட்டமாக இருக்கு”

“அக்கா முதலில் பதட்டப்படாமல் இருங்க. ரிலாக்ஸ் அக்கா, ரிலாக்ஸ். எதற்கு இவ்வளவு பதட்டம்?”

“வீட்டில் இருந்து அம்மா கால் பண்ணாங்க. என் பையன் தர்ஷனுக்கு திடீர்னு வாந்தியும், காய்ச்சலுமாக இருக்குதாம், ஹாஸ்பிடல் போகணும்னு வர சொன்னாங்க. இந்த நேரம் பார்த்து என் வீட்டுக்காரரும் சென்னை வரைக்கும் ஒரு ஆஃபிஸ் வேலையாக போய் இருக்காரு, அதோடு இன்னைக்கு கொடுக்க வேண்டிய முக்கியமான பைலும் எனக்கு பார்க்க வேண்டியதாக இருக்கு. ஏற்கனவே அந்த பைலை இரண்டு நாட்களாக லேட் பண்ணேன்னு சக்தி சார் கோபமாக இருந்தாங்க, இப்போ இன்னைக்கு அந்த வேலையை நான் முடிக்கலேன்னா அவரு என்னை ஒரு வழி பண்ணிடுவாரு. எனக்கு எதைப் பார்ப்பது, என்ன பண்ணுறதுன்னு ஒண்ணுமே புரியல” என்றவாறே சுலோச்சனா தன் தலையில் கை வைத்துக் கொள்ள,

அவளது கையை எடுத்து விட்ட பூஜா, “இதற்கு போய் டென்ஷன் ஆகலாமா அக்கா? நீங்க முதல்ல போய் உங்க குழந்தையைப் பாருங்க. நான் இந்த பைல் வேலையைப் பார்க்கிறேன்” என்று கூற,

அவளோ, “உனக்கு ஏற்கனவே நிறைய வேலை இருக்குமே பூஜா?” என்று சிறு கவலையுடன் அவளைப் பார்த்து வினவினாள்.

“அதெல்லாம் நான் சமாளிச்சுக்கிறேன் அக்கா. எனக்கு இன்னைக்கு அவசரமாக முடிக்க வேண்டிய வேலை எதுவும் இல்லை, அதனால உங்க பைலை நான் முடிச்சு சார் கிட்ட கொடுக்கிறேன். நீங்க பதட்டப்படாமல் உங்க பையனை நல்லாப் பார்த்துக் கொள்ளுங்க” என்று கூறிய பூஜாவை தாவி அணைத்துக் கொண்ட சுலோச்சனா,

“ஐயோ! ரொம்ப தாங்கஸ் பூஜா. நீ பண்ணப் போற ஹெல்ப்பை நான் மறக்கவே மாட்டேன். அப்புறம் இன்னைக்கு சார் ஆபிஸில் இல்லை, அவங்க வீட்டில் தான் இருப்பாங்களாம். ஏதோ முக்கியமான வேலை ஒண்ணு இருக்குன்னு சொன்னாங்க, அதனால பைலை அவங்க வீட்டுக்கு கொண்டு வந்து தான் தரச் சொன்னாங்க. இன்னைக்கு கண்டிப்பாக இந்த வேலையை முடிக்கணும்னு சொல்லித்தான் இவ்வளவு அவசரமாக செய்ய சொன்னாங்க. அதனால இந்த வேலையை முடிச்ச அப்புறம் பைலைக் கொண்டு போய் சார் வீட்டில் கொடுத்துடுமா. அப்புறம் வேறு யாருகிட்டயும் இதைக் கொடுத்துடாதே பூஜா, வெரி கான்பிடன்சியல் பைல் இது. அதுதான் சார் அவரோட அசிஸ்டன்ட் கிட்ட கூட கொடுக்காமல் நேரடியாக வீட்டுக்கே கொண்டு வந்து தரச் சொன்னாங்க. நான் ஒண்ணு பண்ணுறேன். சாருக்கு கால் பண்ணி நீ தான் பைலைக் கொண்டு வருவேன்னு சொல்லிடுறேன். சரியா? மறுபடியும் ரொம்ப ரொம்ப நன்றி பூஜா” என்றவாறே தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே செல்லத் தயாராக,

“சாரோட வீடு எனக்குத் தெரியாதே சுலோச்சனா அக்கா” பூஜா சிறிது தயக்கத்துடன் அவளைப் பார்த்து கூறினாள்.

“நான் அவங்க வீட்டு அட்ரஸை உனக்கு அனுப்பி வைக்கிறேன் பூஜா. இங்கே இருந்து கொஞ்சம் பக்கம் தான், உனக்கு எதுவும் சந்தேகம்ன்னா எனக்கு கால் பண்ணு. சரியா?” என்று கூறியபடியே சுலோச்சனா வேக வேகமாக அங்கிருந்து வெளியேறி செல்ல, அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டபடியே தன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டவள் அவர் கொடுத்து விட்டுச் சென்ற பைலை பார்க்கத் தொடங்கினாள்.

சுலோச்சனா ஏற்கனவே அந்த கணக்குகளை ஓரளவிற்கு செய்து முடித்திருந்ததனால் பூஜாவிற்கு அதில் முடிக்க வேண்டிய வேலைகள் எதுவும் பெரிதாக இருக்கவில்லை.

ஓரளவிற்கு மீதமிருந்த வேலைகளை சரியாக செய்து முடித்தவள் சுலோச்சனா குறுஞ்செய்தியில் அனுப்பி வைத்திருந்த சக்தியின் வீட்டு முகவரியைப் பார்த்து விட்டு ஒருவித தயக்கமான மனநிலையுடனேயே அவனது வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றாள்.

சக்தியை அலுவலகத்தில் பார்க்கும் போதும் சரி, வெளியே எங்கேயாவது தற்செயலாக காணும் போதும் சரி பூஜாவிற்கு ஏனோ ஒருவித தடுமாற்றம் இருக்கத் தான் செய்தது.

ஒருவேளை அவன் தனது முதலாளி என்பதனால் இந்த தயக்கம் ஏற்பட்டு இருக்கலாமோ என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்பவள் ஒரு நிலையில் அப்படித்தான் இருக்கும் என்று நம்பவும் தொடங்கியிருந்தாள்.

அவர்களது அலுவலகத்தில் இருந்து இருபது நிமிடப் பயணத்திற்குப் பின்னர் சக்தியின் வீட்டை வந்து சேர்ந்திருந்த பூஜா அந்த வீட்டு வாயில் காவலாளியிடம் தான் வந்திருந்த விடயத்தைக் கூற, அவரும் அவளை உள்ளே செல்ல அனுமதித்திருந்தார்.

ஒரு பெரிய மாளிகையின் தோற்றத்தைப் போல இருந்த அந்த வீட்டை சுற்றிப் பார்த்தபடியே தயக்கத்துடன் பூஜா நடந்து வந்து கொண்டிருக்க, அவள் தங்கள் வீட்டிற்கு வந்தது முதல் இப்போது சிறு குழந்தை போல் சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருப்பது வரை சக்தி மொட்டை மாடியில் நின்று பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஒவ்வொரு நாளும் அவளைப் பார்க்கும் போதெல்லாம் அன்று தான் அவளை முதன் முதலாக பார்ப்பது போல அவனுக்கு இருக்கும்.

என்னதான் தன் மன ஆசைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவன் நினைத்தாலும் அவன் மன எண்ணங்கள் எல்லாம் அவனது கட்டுப்பாட்டிலேயே இல்லை என்பது அவனுக்கு தெரியாது போலும்.

ஒரு வழியாக வாயில் கதவருகே வந்து நின்ற பூஜா காலிங் பெல்லை அழுத்த தன் கையை வைக்க, சரியாக அந்த நேரம் பார்த்து மூச்சு வாங்கியபடி சக்தி அங்கே வந்து நின்றான்.

திடீரென அவனை அங்கே பார்த்ததும் திடுக்கிட்டு போனவளாக பூஜா நின்று கொண்டிருக்க, அவளைப் பார்த்து புன்னகையுடன் தன் கையை அசைத்தவன், “பூஜா, ஹலோ பூஜா, என்ன ஆச்சு?” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவளைப் பார்த்துக் கேட்க,

அவனது குரலில் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள், “ஆஹ், எனக்கு ஒண்ணும் இல்லை சார். உங்களுக்கு?” என்றவாறே அவனை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவளது விசித்திரமான பார்வையில் தன்னை சிறிது நிதானப்படுத்திக் கொண்டவன், “நான் ஜஸ்ட் வார்ம் அப் பண்ணிட்டு இருந்தேன். யூ டோண்ட் வொர்ரி. அப்புறம் என்ன விஷயம் பூஜா, இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க?” தனக்கு எதுவுமே தெரியாது என்பது போன்ற பாவனையில் அவளைப் பார்த்து வினவ,

“இந்த பைல், சுலோச்சனா அக்கா… அவங்க பாப்பாவுக்கு… உங்களுக்கு கால் பண்ணி..” என்று தடுமாற,

“பூஜா ரிலாக்ஸ். என்ன ஆச்சு இப்போ?” அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவளது கையிலிருந்த பைலை வாங்கிக் கொண்டவன் அதைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினான்.

“என்ன ஆச்சு பூஜா உங்களுக்கு? எதற்காக இவ்வளவு டென்ஷன்? அதுவும் என்னைப் பார்த்த அப்புறம் தான் இவ்வளவு டென்ஷன்னு நினைக்கிறேன். ஒரு வேளை என்னைப் பார்த்தால் அவ்வளவு பயங்கரமாக எதுவும் இருக்கா என்ன?” சக்தி அவளைப் பார்த்து கேள்வியாக தன் புருவம் உயர்த்த,

அவனைப் பார்த்து அவசரமாக மறுப்பாக தலையசைத்தவள், “இல்லை, இல்லை சார். அப்படி எல்லாம் எதுவும் இல்லை” என்று விட்டு அவனை அப்போதுதான் நன்றாக கவனித்துப் பார்த்தாள்.

இதுநாள் வரை அலுவலகத்தில் பார்க்கும் போதெல்லாம் பார்மலாக ஆடையணிந்து இருப்பவன் இப்போது அதற்கு சற்று மாற்றமாக ஆலிவ் பச்சை நிற டீ சர்ட் மற்றும் கடும் நீல நிற பேண்ட் அணிந்து வெகு இயல்பாக இருந்தான்.

பூஜாவின் பார்வை தன்னைத் தான் ஆராய்ச்சியாக நோக்குகிறது என்பது சக்திக்குப் புரிந்து விட, அவளது கடைக்கண் பார்வைக்காக இத்தனை வருடங்களாக காத்திருந்தவன் இந்த சந்தர்ப்பத்தை தவிர்க்க முயற்சி செய்வானா என்ன?

தன் கையிலிருந்த பைலைப் பார்ப்பது போல தலை குனிந்து நின்றபடியே பூஜாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சக்தி, “சக்தி ண்ணா, அங்கே என்ன பண்ணுற?” என்ற மீராவின் குரல் கேட்டு தூக்கி வாரிப் போட தன் கையிலிருந்த பைலை அப்படியே கீழே போட்டு விட்டு நின்றான்.

“ஐயோ பைல்” என்றவாறே பூஜா கீழே குனிந்து விழுந்து கிடந்த காகிதங்களை எடுக்கத் தொடங்க,

“ஐ யம் சாரி, சாரி” என்று கூறியபடி அவளுக்கு உதவி செய்ய எண்ணிக் கீழே குனிந்த சக்தி,

“சக்தி ண்ணா, உன்னைத் தான் கேட்கிறேன். அங்கே என்ன பண்ணுற?” என்ற மீராவின் அதட்டலான கேள்வியில் சலித்துக் கொண்டே அவளின் புறம் திரும்பிப் பார்த்தான்.

“வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்து இருக்க? எவ்வளவு நேரமாக கேட்கிறேன். வாசலில் நின்னுட்டு என்ன பண்ணுற?” தன் அண்ணனின் திருதிருவென விழித்துக் கொண்டு நிற்கும் தோற்றத்தைப் பார்த்து குழப்பம் கொண்டவளாக அவனின் அருகில் வந்து நின்ற மீரா அவர்கள் முன்னால் கீழே விழுந்து கிடந்த காகிதங்களை அடுக்கிக் கொண்டு நின்ற பூஜாவைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றாள்.

“இவங்க? ஆபிஸில்?” மீரா யோசனையுடன் பூஜாவின் புறம் கை காட்ட,

சட்டென்று அவளது கையை கீழே இறக்கி விட்டவன், “இவங்க பூஜா மீரா. அன்னைக்கு ஆபிஸில் வைத்து பார்த்தியேம்மா. ஒரு பைல் கொடுக்க வந்தாங்க” என்று கூற,

அவளோ அவனை, ‘அப்படியா?’ என்பது போல பார்த்துக் கொண்டு நின்றாள்.

“சார் பைல்” பூஜா மீராவைப் பார்த்து சிறு முறுவல் செய்தவளாக சக்தியின் புறம் தன் கையிலிருந்த பைலை நீட்டவும்,

அவசரமாக அதை வாங்கிக் கொண்டவன், “ஓகே பூஜா, தாங்க்ஸ்” என்று கூற,

“ஓகே சார், நான் கிளம்புறேன்” என்றவாறே அங்கிருந்து அவள் செல்லப் போக, மீரா சட்டென்று அவளது கையை எட்டிப் பிடித்துக் கொண்டாள்.

“ஏய் மீரா! நீ என்ன பண்ணுற?” சக்தி தன் தங்கையைக் குழப்பமாக திரும்பிப் பார்க்க,

“சக்தி ண்ணா, உனக்கு கொஞ்சம் கூட மூளையே இல்லைண்ணா. முதன் முதலாக ஒருத்தங்க நம்ம வீட்டுக்கு வந்து இருக்காங்க. அவங்களை உள்ளே வாங்கன்னு கூட கூப்பிடாமல் அப்படியே அனுப்பி வைக்குற. ஆபிஸ் வேலையாக வந்தால் வீட்டுக்கு உள்ளே கூப்பிட மாட்டியா?” என்ற மீராவின் கேள்வியில் தன் தலையில் தட்டிக் கொண்டவன்,

“சாரி, சின்ன டென்ஷன்” என்று இழுக்க அவனைப் பார்த்து தன் தலையை இடம் வலமாக அசைத்தவள் பூஜாவின் முன்னால் வந்து நின்றாள்.

“பூஜா, உள்ளே வந்து ஒரு கப் காஃபி சரி சாப்பிட்டுட்டு போங்க. இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு உள்ளே வராமல் போகலாமா? எங்க அண்ணனுக்கு இதெல்லாம் யோசிக்க வராது. நீங்க உள்ளே வாங்க” என்ற மீராவின் கூற்றில் சிறிது தயக்கத்துடன் அவளையும், அவள் பின்னால் நின்று கொண்டிருந்த சக்தியையும் பார்த்த பூஜா,

“இல்லை பரவாயில்லை மீரா. நான் இன்னொரு நாள் வர்றேன். ஆபிஸில் கொஞ்சம் வேலை இருக்கு” என்று தயக்கத்துடன் கூறினாள்.

பூஜாவின் மறுப்பைத் தன் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது போல அவளது கையை விடாமல் பிடித்துக் கொண்டு நின்ற மீரா, “இல்லை. நீங்க வரத்தான் வேணும்” என்றவாறே தன் அண்ணனின் புறம் திரும்பி அவளை உள்ளே அழைக்குமாறு ஜாடையில் கூறினாள்.

“சாரி பூஜா. நானும் ஏதோ ஞாபகத்தில் உங்களை உள்ளே கூப்பிடவே இல்லை. ரியலி சாரி. நீங்க கொஞ்ச நேரம் வந்து இருந்துட்டு போகலாமே பூஜா. ஆபிஸில் நீங்க இல்லைன்னா யாரும் எதுவும் சொல்லுவாங்களா?”

“அப்படி எல்லாம் இல்லை சார்” சக்தியின் கேள்விக்கு அவசரமாக மறுப்புத் தெரிவித்தவள் சிறிது தயங்கியபடியே நிற்க,

“அண்ணனும், தங்கச்சியும் அங்கே என்ன பண்ணுறீங்க?” என்றவாறே சந்திராவும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

அந்த இடத்தில் சக்தி மற்றும் மீராவுடன் இன்னொரு பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து குழப்பத்துடன் தன் மகனின் தோளில் கை வைத்த சந்திரா, “சக்தி, யாருப்பா இது?” என்று கேட்க,

“இவங்க பூஜா. என்னோட ஆபிஸில் தான் வர்க் பண்ணுறாங்க ம்மா. ஒரு பைலைக் கொடுக்க வந்தாங்க” என்று கூறவும்,

“அப்படியா?” என்றவாறே அவளைப் பார்த்து புன்னகை செய்தவர் சட்டென்று அவனது தோளில் மீண்டும் தட்டினார்.

“ஏன்டா, வீட்டுக்கு ஒருத்தங்க வந்தால் இப்படித்தான் வாசலிலேயே நிற்க வைத்து பேசுவீங்களா? அண்ணனுக்கும், தங்கச்சிக்கும் விவரமே இல்லை. ஒருத்தங்க வீட்டுக்கு வந்தால் உட்கார வைத்து பேசணும்னு உங்க இரண்டு பேருக்கும் சொல்லித் தரணுமா என்ன?” என்றவாறே மீராவின் தோளிலும் தட்டிய சந்திரா,

பூஜாவின் புறம் திரும்பி, “இந்த பசங்க இரண்டுக்கும் ஒருத்தர் கூட ஒருத்தர் சண்டை போடவே நேரம் போதாதும்மா. அதனால கொஞ்சம் இப்படித்தான் நடந்துக்குவாங்க. நீ அதெல்லாம் தப்பாக எடுத்துக்க வேண்டாம்மா. நீ உள்ளே வாம்மா. வீடு தேடி வந்தவங்களை இப்படியே வாசலிலேயே வைத்து திருப்பி அனுப்புவது எனக்குப் பிடிக்காது. நீ வாம்மா, வந்து ஒரு கப் காஃபி சரி சாப்பிட்டு விட்டு போகலாம்” என்றவாறே அவளது கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல,

அவளோ, “இல்லை, ஆன்டி. அது..” என்றவாறு சிறிது தயக்கத்துடன் சக்தியைத் திரும்பிப் பார்த்தபடியே நடந்து சென்றாள்.

அவளது பார்வைக்கான அர்த்தம் புரியாமல் சிறிது நேரம் குழம்பிப் போனவனாக நின்று கொண்டிருந்தவன் சிறிது நேரம் கழித்தே அவளது தயக்கத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யூகித்துக் கொண்டான்.

அவள் இங்கே வந்த நேரத்திற்கும் அவளைத் தான் தானாக தங்கள் வீட்டுக்குள் வரும்படி அழைக்காததால் தான் வந்தது அவனுக்கு விருப்பம் இல்லை போலும் என்கிற எண்ணம் தான் அவளது தயக்கத்திற்கான காரணமாக இருக்கக் கூடும் என்று யூகித்துக் கொண்டவன் பூஜாவின் முன்னால் சென்று, “பூஜா, ஆர் யூ ஓகே?” என்று கேட்கவும்,

“நான்… நான் கிளம்புறேன் சார். ரொம்ப நேரம் ஆச்சு” என்றவாறே எழுந்து நிற்க, அவனோ சட்டென்று அவளது வழியை மறித்தவாறு வந்து நின்று கொண்டான்.

“என்ன ஆச்சு பூஜா? எங்க வீட்டுக்கு வந்தது உங்களுக்கு விருப்பம் இல்லையா?”

“ஐயோ! அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார்”

“அப்போ எதற்காக இந்த தயக்கம்? ஒரு வேளை நான் உங்களை கூப்பிடலேன்னு தயக்கமா?” சக்தியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பூஜா தன் கையைப் பிரிப்பதும், கோர்ப்பதுமாக நின்று கொண்டிருக்க,

அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன், “ஐ யம் சாரி பூஜா. நான் ஏதோ யோசனையில், சரி அதை விடுங்க . நீங்க முதலில் தயங்காமல், பதட்டப்படாமல் இருங்க பூஜா. அப்புறம் ஒரே ஒரு வேண்டுகோள். எனக்காக, என்னோட ஆசைக்காக கொஞ்ச நேரம் இருந்துவிட்டு போகலாமே” என்று கூற, அவனை நிமிர்ந்து பார்த்தவள் சிறிது நேரம் கழித்து ஆமோதிப்பாக தலையசைக்க, அவனுக்கு அந்த தருணம் நிஜம் தானா? என்பது போல இருந்தது.

“நீங்க இங்கேயே இருங்க பூஜா. நான் இதோ இந்த பைலை என் ரூமில் வைத்து விட்டு ஐந்து நிமிடத்தில் வர்றேன்” என்றவாறே இரண்டு இரண்டு படிகளாக ஏறி தன்னறைக்குள் வந்து சேர்ந்த சக்தி கையிலிருந்த பைலை அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு தன் இரு கைகளையும் விரித்துக் கொண்டு அங்கிருந்த ஷோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

“சக்தி, சக்தி. எல்லாம் கனவு மாதிரி இருக்கேடா. பூஜா இப்போ உன் வீட்டில் இருக்காடா, அதுவும் உனக்கு ரொம்ப பக்கத்தில். இப்படி எல்லாம் நடக்கணும்னு தானே இவ்வளவு நாளாக காத்திருந்தேன். நான் நினைத்தது பூஜா என் மனைவியாக என் வீட்டுக்கு வரணும்னு, ஆனால் இப்போ வந்து இருப்பது…” பூஜாவின் கடந்த கால நினைவுகள் எல்லாம் அவன் முன்னால் காட்சியாக விரிய, தன் ஒட்டுமொத்த சந்தோஷமும் ஒரே நொடியில் காணாமல் போய் விட்டதைப் போல உணர்ந்தவன் தன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

“நான் என்ன தான் என்னோட மனதிற்குள் பூஜாவை பற்றி நினைக்கவே கூடாதுன்னு முடிவெடுத்தாலும் அதை கடைப்பிடிக்கவே முடியலையே. அவளைப் பார்க்கும் போதெல்லாம் நான் நானாகவே இல்லை. என்னோட காதல் எனக்கு கிடைக்காது என்று தெரிந்தும் நான் வீணாக ஆசையை வளர்க்கிறேனா?” தனக்குள்ளேயே யோசித்தபடி சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவன் பின்பு சட்டென்று தன் கண்களைத் திறந்து கொண்டான்.

“ஏன் நடக்காது? என்னோட காதல் ஏன் எனக்கு கிடைக்காது போக வேண்டும்? ஒரு வேளை என்னோட காதல் எனக்கு கிடைக்க கூடாது என்று இருந்திருந்தால் நான் திருச்சிக்கு போயிட்டு திரும்பி வர நினைத்த நேரமெல்லாம் எதற்காக என்னோட முடிவுகள் மாறணும்? எதற்காக ஒவ்வொரு தடவையும் பூஜாவை என் கண் முன்னால் காட்டணும்? அவளோட உயிர் போகும் நேரத்தில் எதற்காக அந்த இடத்திற்கு நான் போகணும்? அத்தனை பேரு அந்த ஊரிலிருந்தும் மறுபடியும் மறுபடியும் எதற்கு பூஜா என் கண்ணுக்கு மட்டும் தெரியணும்? அப்படின்னா… அப்படின்னா எனக்கு என்னோட காதலை சேர்த்து வைக்கத் தான் இவ்வளவு விடயங்கள் எல்லாம் நடந்ததா? பூஜாவிற்கு வாழ்க்கை முழுவதும் நான் துணையாக இருக்கணும் தான் அந்த கடவுள் அவளுக்கு உதவி செய்ய என்னை அனுப்பி வைத்தாரா?” தன் மனதை இத்தனை நாட்களாக தான் ஏமாற்றிக் கொண்டு இருந்திருக்கிறோமே என்ற நிதர்சனம் சக்திக்கு மெல்ல மெல்ல பிடிபடத் தொடங்க,

சந்தோஷம் தாளாமல் துள்ளிக்குதித்தவன், “இனி எத்தனை தடைகள் வந்தாலும் சரி, என்ன பிரச்சினைகள் வந்தாலும் சரி. என்னோட காதலை பூஜாவுக்கு நான் புரிய வைப்பேன். அவளோட பூரண சம்மதத்துடன் அவளை என் வாழ்க்கைத் துணையாக நான் ஏற்றுக் கொள்ளுவேன்” என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டவனாக சந்தோஷம் பொங்க தன்னறையிலிருந்து வெளியேறிச் சென்றான்.

சக்தி எந்த நேரத்தில், ‘எந்த தடைகள் வந்தாலும் சரி, என்ன பிரச்சினைகள் வந்தாலும் சரி’ என்று நினைத்தானோ தெரியவில்லை, அவன் காதலை அடைய அவன் உண்மையிலேயே நிறைய போராட்டங்களை சந்திக்கத் தான் வேண்டியிருந்தது…..

**********
யாரோ நீ யாரோ நான்
என்றே நாம் இருந்திடுவோமா
நீயே நான் நானே நீ
ஒன்றாகி இணைந்திடுவோமா
இங்கே நான் இருப்பேனா
உயிர் கொடுப்பேனா
உனைக் காதலிப்பேனா
அன்பாலே ஜெயிப்பேனா
உன்னை மணப்பேனா
யுகம் காத்திருப்பேனா
இதுவும் கடந்து போகுமா
இதயம் கடத்தி போகுமா
உருகுதே உருகுதே மனம்
**********

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!