kiyaa-16

coverpage-4c2cb10e

kiyaa-16

கிய்யா – 16

விஜயபூபதியின் அலுவலக அறையில் கதவை தட்டும் ஓசை கேட்க, அவனும் இலக்கியாவும் கதவை நோக்கி திரும்பினர்.

துர்கா அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.

“சார், நாம அடுத்து என்ன பண்ண போறோம்?” அவள் கேள்வி நேரடியாக வேலை விஷயமாக வந்தது .

“நீங்க பேசிட்டு இருங்க. நான் கொஞ்ச நேரத்தில் வரேன்.” இலக்கியா வெளியே செல்ல எத்தனிக்க, “எங்க போறீங்க இலக்கியா? இலக்கியாவோட கணவர் கிட்ட தனியா பேச எனக்கு எதுவும் இல்லை. நான் என் பாஸ் கிட்ட பேசிட்டு இருக்கேன். நீங்க என் பாஸ்ஸோட மனைவி.” துர்கா அவளை அறைக்குள் தடுத்து நிறுத்தினாள்.

காதல் என்ற வார்த்தைக்குள் ஒரு பெண்ணின் தன்மானம் தோற்று போவதில்லை என்பது போல் இருந்தது துர்காவின் பேச்சு.

இலக்கியா துர்காவின் பேச்சில் சற்று ஆடி தான் போனாள்.

‘துர்கா கோபமா இருக்காங்களோ?’ இலக்கியா அவளை ஆராய முற்பட்டாள்.

இலக்கியாவால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘எல்லாம் கொஞ்ச நாளில் சரி பண்ணிடலாம்.’ தன்னை தானே சமாதானம் செய்துகொண்டு மௌனித்தாள்.

“உங்களுக்கு தெரியாமல் உங்க ஹஸ்பேண்ட் கிட்ட நான் என்ன பேச போறேன்?” துர்கா தன் கேள்வியை தொடுக்க, விஜயபூபதியின் இதழ்கள் மெலிதாக வளைந்தது.

விஜயபூபதியின் அந்த புன்னகை பல அர்த்தம் பொதிந்ததாக இருந்தது. மெல்லிய வருத்தம், நிலைமயை எண்ணி சற்று ஏளனம், அதே நேரத்தில் இரு பெண்களையும் மதிக்கும் விதமான புன்னகை. மொத்தத்தில் அவனின் அந்த புன்னகை சற்று கவர்ச்சியாகவும் இருந்தது.

துர்கா அவனை பார்த்தாள். தன்னை மறந்து, அவன் புன்னகையில் அவள் மனம் லயிக்க எத்தனிக்க, அவள் அறிவு அவளுக்கு தடா போட சட்டென்று தன்னை நிதானப்படுத்தி கொண்டாள்.

அதே நேரம் இலக்கியா அவன் புன்னகையை பார்த்து, ‘நாங்க எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கோம்? இப்ப என்ன இப்படி ஆளை மயக்குற சிரிப்பு வேண்டிக் கிடக்கு அத்தானுக்கு?’ அவள் எண்ணம் அவனை நிந்திக்க, அவள் மனமோ அவன் புன்னகையை உரிமையோடு அவள் எண்ணத்தையும் தாண்டி ரசித்து கொண்டது.

“நாம அடுத்து என்ன பண்ண போறோம்?” துர்கா அதே கேள்வியில் நிற்க, “யோசிக்கணும்” தலை அசைத்து கொண்டான் விஜயபூபதி.

“நான் இப்படியே இருந்தா எல்லாம் நாசமா போய்டும். எல்லாருக்கும் நம்ம மேல நம்பிக்கையும் போய்டும். நான் அடிக்கடி இங்க வரணும். இனி வருவேன்.” விஜயபூபதியின் குரலில் உறுதி இருக்க, இலக்கியாவின் முகத்தில் ஒரு சந்தோஷ புன்னகை.

அவனின் பேச்சில் எந்தவித உணர்ச்சிகளுக்குள்ளும் சிக்கி கொள்ளாமல் தன்னை அடக்கி கொண்டாள் துர்கா.

“ஒகே. நான் வர வேண்டிய தேவை இருந்தா சொல்லுங்க வரேன்.” கூறிவிட்டு கிளம்பினாள் துர்கா.

“துர்கா கோபமா இருக்காங்களோ?” துர்கா வெளியே சென்றதும், இலக்கியா விஜயபூபதியை பார்த்தபடி கேட்க, “நீ பண்ண காரியத்துக்கு, துர்கா என்ன சந்தோஷமாவ இருப்பா?” அவன் புருவம் உயர்த்தினான்.

“நான் என்ன பண்ணேன்? நீங்க தான் அவங்களை கல்யாணம் பண்ணிக்கலை.” இலக்கியா சிடுசிடுத்தாள்.

“நான் துர்காவை கல்யாணம் செய்யாதது பிரச்சனை இல்லை. நீ கடமைக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது தான் பிரச்சனை” விஜயபூபதி நிதானமாக அவளை குற்றம் சாட்டினான்.

“நீங்க தான் என் கழுத்தில் தாலி கட்டிருக்கீங்க? அப்ப நீங்க தானே என்னை கல்யாணம் செய்திருக்கீங்க? என்னவோ நான் உங்க கழுத்தில் தாலி கட்டின மாதிரி நான் உங்களை கல்யாணம் செய்துகிட்டேன்னு சொல்லிட்டே இருக்கீங்க?” அவன் குற்றம் சாட்டியதில் அவனிடம் எகிறினாள் இலக்கியா.

அவள் வியாக்கியானத்தில், அவன் பெருங்குரலில் சிரிக்க, ‘அத்தான் எப்பவும் இப்படி சந்தோஷமா இருக்கனும். எல்லாம் சரியாகணும். நான் எல்லாத்தையும் சரி செய்யணும்.’ உறுதி எடுத்துக் கொண்டாள் இலக்கியா.

துர்கா தன் காரில் பயணித்து கொண்டிருந்தாள். வழக்கமாக இரு சக்கர வாகனத்தில் தான் பயணிப்பாள். நோய் தொற்றின் காரணமாக, பாதுகாப்பு என கருதி இன்று வீட்டில் இருக்கும் காரை எடுத்துக்கொண்டு வேலை செய்யும் இடத்திற்கு வந்திருந்தாள் துர்கா.

‘இனி என்ன?’ துர்கா மனதில் இந்த கேள்வி பூதாகரமாக எழுந்தது.

‘பூபதியின் தொழிலில் முழு நஷ்டம். பூபதி சம்பளம் கொடுக்கிறதே பெரிய விஷயம். என்னால், பூபதிக்கு எந்த உதவியும் இருக்காது.’ அவளின் சிந்தை நிதர்சனத்தை எடுத்துரைத்தது.

‘எனக்கு வேலை முக்கியம் தான். ஆனால், நான் வேலைக்கு போய் தான் சாப்பிடணுமுன்னு என் நிலைமை இல்லை. நான் பூபதிக்கு உதவி செய்யணும்னு நினைச்சா அவன் கிட்ட இருந்து விலகணும்.’ அவள் அறிவு அவளுக்கு அறிவுறுத்த, அவள் மனம் வலித்தது.

“வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது

அது வாழ்வினும் கொடிது

உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன் ” அவள் மனதின் வலியை அதிகரிப்பது போல் காரில் பாடலும் இசைவாய் ஒலித்தது.

அவள் கண்கள் கண்ணீரால் மங்கலாக தெரிய, அவள் கண்மூன் தெரிந்த காட்சியில் அவள் மனவலி எல்லாம் ஒன்றுமில்லை என்று அவள் உணர ஆரம்பித்தாள்.

அவள் சென்ற வழியில் போக்குவரத்து நெரிசல்.

ஜன்னலை திறந்து விட்டு அவள் வெளியே எட்டி பார்க்க, அங்கு இறுதி ஊர்வலம். பெரிதாக கூட்டம் எல்லாம் இல்லை. ஆனால், கொஞ்சம் மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

கொரோனா சாலையில் கோரமாக நடந்து கொண்டிருந்தது உக்கிரமாக. துர்காவின் உடல் நடுங்கியது.

‘எத்தனை மரணங்கள்? எத்தனை இழப்புகள்?’ அவள் மனம் தன்னை தாண்டி, மற்றவர்களுக்காக வருத்தியது.

அவள் நின்ற இடத்திற்கு அருகே மருத்துவமனை. மருத்துமனை வாயிலில் நாற்பத்தைந்து வயது தக்க உள்ள ஒரு பெண்மணி, மூச்சு விடுவதற்கு சிரமமாக காத்திருக்க, “சாரிங்க… ஹாஸ்பிடலில் பெட் இல்லை.” மருத்துவமனையில் பணி புரியும் ஒருவர் கூற, அதே வாயிலில் அந்த பெண்மணி சிரமத்தோடு அமர்ந்தார்.

“சார், ப்ளீஸ்…” ஐம்பது வயது இருக்கும் மனிதர் காலில் விழாத குறையாக கதறினார்.

‘அந்த பெண்ணின் கணவனாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு துர்காவின் கண்கள் கலங்கியது.

காலில் விழுவது போல் கதறும் கணவனை மூச்சு விட முடியாத பொழுதிலும் அந்த பெண் தடுக்க, “நாங்க இத மாதிரி ஆயிரம் கேஸ் பார்க்குறோம். ஹாஸ்பிடலில் இடம் இல்லை. எங்களுக்கும் கஷ்டமா தான் இருக்கு. நானே கொரானாவில் பாதிக்கப்பட்டு விழுந்து கிடந்தா கூட என் நிலைமையும் இது தான். ஹாஸ்பிடலில் பெட் இருந்தா சேர்த்துக்க மாட்டோமா?” அவர் கூற அந்த இருவரும் வழி தெரியமால் விழி பிதுங்கி நின்றனர்.

“வேற எங்கயாவது கூட்டிட்டு போங்க சார்.” என்று மருத்துவமனையில் பணிபுரியும் நபர் கூற அந்த மனிதர், சட்டையில் இருக்கும் பணத்தை தடவிக்கொண்டு, ஒரு ஆட்டோவை தேட, எதுவும் வரவில்லை.

துர்கா, தன் முக கவசத்தை சரி செய்தாள். சனிடைஸரை கைகளில் தேய்த்து கொண்டாள். அவர்களிடம் பேசி அவர்களை காரில் ஏற்றினாள். ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கினாள். அவர்களை மருத்துமனையில் அனுமதிக்கும் வரை. ஒவ்வொரு மருத்துவமனையிலும் மரண ஓலங்கள்.

‘ஐயோ, இறைவா போதும்.’ என்று கதற வேண்டும் என்று துர்காவின் அணுக்கள் ஒவ்வொன்றும் துடித்தன.

“யாருன்னே, தெரியாத எங்களுக்கு உதவி பண்ணிருக்கியே ம்மா. நீ தான் எங்களுக்கு இன்னைக்கு கடவுள்.” அந்த மனிதர் கை எடுத்து கும்பிட, ‘என்னால் என் வலிகளையே மறக்க முடியலையே. நான் கடவுளா?’ அவள் அந்த மனிதரை யோசனையோடு பார்த்தாள்.

“அம்மாவை பார்த்துக்கோங்க. என் நம்பர். ஏதாவது உதவி வேணுமின்னா கூப்பிடுங்க. என்னால் முடிந்ததை நிச்சயம் செய்யறேன்.” ஏன் செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்று தெரியாமல் செய்தாள் துர்கா.

அவள் வெளியே வருகையில், “ஐயோ…” என்று கதறிக்கொண்டு மீண்டும் மரண ஓலம்.

நடுக்கத்தோடு வெளியே வந்தாள். தன் காரை உயிர்ப்பித்தாள். அதில் பாட்டையும் உயிர்ப்பித்தாள்.

“வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது

அது வாழ்வினும் கொடிது

உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன் “

மீண்டும் பாடல் ஒலித்தது. கடுப்போடு அதை அணைத்தாள்.

“யார் நீங்கினாலும், யார் உயிரும் கரையாது. ஆக்சிஜென் நீங்கினா தான் உயிர் கரையும். ஆக்சிஜன் இல்லைனா தான் செத்து தொலைவோம். காதல் இல்லைனா சாக மாட்டோம்.” அவள் ஸ்டியரிங்கை குத்தியபடி வெறி கொண்டு கத்தினாள்.

“காதல்… காதல்… அப்படினு இந்த சினிமா, சீரியல், கதை எல்லாம் உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் பாதி பேரோட வாழ்க்கை நடு ரோட்டுக்கு வருது.” நடுசாலையில் காரில் அமர்ந்து கொண்டு முகத்தில் மோதிய நிதர்ச்னத்தில் புலம்பினாள் துர்கா.

அவள் மனம் மாறிவிட்டதா? ‘இல்லை…’ என்று அவள் மனதிற்கு தெரியும். ஆனால், அவள் அறிவு அவள் மனம் மாற வேண்டும் என்று விரும்பியது.

அதே நேரம், விஜயபூபதியின் அறையில்.

“வீட்டிற்கு கிளப்புவோமா இலக்கியா?” விஜயபூபதி வினவ, “கோவிலுக்கு போயிட்டு போவோமா?” இலக்கியா கேட்க, “கோவில் திறந்திருக்கா?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.

“ம்… நேத்து தான் திறந்திருக்காங்க” அவள் கூற, அவன் சலிப்பாக, “ம்… ச்…” கொட்டினான்.

“என்ன சலிப்பு?” அவள் கேட்க, “எனக்கு ஏன் இந்த நிலைமைன்னு கடவுள் கிட்ட வந்து சண்டை போட சொல்றியா?” அவன் கடுப்பாக கேட்க, “அத்தான்” அவன் முன் கைகளை இடுப்பில் வைத்து கொண்டு நின்றாள் இலக்கியா.

“அத்தான், உங்களுக்கு அம்மா அப்பாவை கொடுத்த கடவுள் என்கிட்டே இருந்து அவங்களை ஏன் சின்ன வயசில் பிரிச்சி எங்களை அநாதை ஆக்கிட்டான்?” அவள் கேட்க, அவன் அவளை சரேல் என்று பிடித்து இழுத்தான்.

அவள் எதிர்பார்க்காத அந்த நேரத்தில், அவன் இழுத்த வேகத்தில் அவள் அவன் மீது சரிய, அவன் அவளை தாங்கி கொண்டான்.

“அத்தான்….” அவன் இழுத்ததில், அவன் மீது கோபங்கொண்டு, சிணுங்கினாள் அவள்.

அவள் மனமோ அவன் தன்னை தாங்கி கொண்டதில், என் கஷ்டத்தில் எல்லாம் அத்தான் தானே எனக்கு துணை என்று எண்ணம் கொண்டது. ஆனால், தடுமாற்றத்திற்கும் அத்தான் தானே காரணம் இன்று போல்  என்று அதையும் சேர்த்து எண்ணி கொண்டது.

எண்ணம் ஒரு போக்கில் இருந்தாலும் அவளோ, அவன் மடி மீது அவன் கைவளைவிற்குள் பாந்தமாக பொருத்தி இருந்தாள்.

அவன் கைகள், அவள் விழுந்து விடாமல் இருக்க மெல்லிய வெற்றிடையை அழுத்தமாக பிடித்து கொண்டது.

அவன் தீண்டலில் அவள் உடல் எங்கும் சொல்லில் வடிக்க முடியாத உணர்வு. அவள் கண்களில் மெல்லிய பயம். ‘அத்தான்… என்ன பண்றங்க?’ அவன் தீண்டலில் அவள் எண்ணம் தறி கேட்டு ஓட ஆரம்பித்தது.

அவன் முகத்திற்கு அருகாமையில் அவள் முகம். அவன் சுவாசம், அவள் தேகத்தை தீண்ட, அவள் விலகி கொள்ள எத்தனித்தாள்.

ஆனால், பிடிமானமின்றி, அவன் தோள்களில் தன் கைகளை மாலையாக கோர்த்து கொண்டாள்.

அவள் கண்கள், படபடப்போடு சிமிட்டி கொள்ள, அவளை சிறு வயதில் இருந்து அறிந்தவன், “ஏன் பயப்படுற இலக்கியா? அத்தான் உன்னை கீழ போட்டிருவேன்னுனா?” அவன் கேட்க, அவள் எந்தவித உணர்வுமின்றி அவனை வெறுமையோடு பார்த்தாள்.

“நான் முழு நோயாளி இல்லை. ஜஸ்ட் ஆக்சிடென்ட் தான். என் கைகள் பலமா தான் இருக்கு” அவன் பிடிமானத்தை கூட்டினான்.

“நீ அனாதையா?” அவன் கேட்க, அவன் முகத்தின் அருகாமையில், அவன் மற்றதை மறந்து அது தான் முக்கியம் என்பது போல கேட்க, ‘ஐயோ, இப்படி விஜயபூபதி கிட்ட இப்படி சொல்லி மாட்டிக்கிட்டனே. அத்தான் விட மாட்டாங்களே’ அவள் விழிகள் பெரிதாக விரிந்தது.

“இப்படி திருட்டு முழி முழிச்சா என்ன அர்த்தம்?  நீ….” அவன் குரல் உயர, அவள் தன் கைகளால், அவன் வாயை மூடினாள்.

“அப்படி எல்லாம் இல்லை அத்தான். எங்களுக்கு தான் நீங்க இருக்கீங்களே” அவனோடு சமரசத்தில் இறங்கினாள்.

இருவரும் பேச்சு சுவாரஸ்யத்தில், அவர்கள் அமர்ந்திருந்த நிலையை மறந்தனர்.

“ஆனால், நான் சொல்ல வர்றதை நீங்க கேட்கவே இல்லையே அத்தான்” அவள் கோபமாக முகம் திருப்பி கொள்ள, அவள் முகத்தை அவன் பக்கம் திருப்பி, “சொல்லு…” என்றான் அவன் புன்னகையோடு.

அவளும் முகம் திருப்பி வாகாக அமர்ந்து கொண்டாள்.

“என்னால சமாளிக்க முடியுமுன்னு, அந்த கடவுளுக்கு நம்பிக்கை. அதே மாதிரி தான், உங்களால் எல்லாத்தையும் சமாளிக்க முடியும். எல்லாத்தையும் தாண்டி நீங்க ஜெயிப்பீங்கன்னு அந்த கடவுளுக்கு நம்பிக்கை. அது தான், உங்களுக்கு இந்த நிலைமை. இந்த சோதனை” அவள் கண்களை சிமிட்டி சிறுகுழந்தைக்கு விளக்குவது போல் அவனுக்கு விளக்கினாள்.

“ஓ…” அவன் அசுவரசியமான கதை கேட்பது போல தலை ஆட்ட, “எல்லாம் சரி ஆகும் அத்தான்.” அவன் தலையில் தட்டி அவள் அழுத்தமாக கூறினாள்.

அவன் புன்னகைத்து கொண்டான்.

“நீ சின்ன வயசிலிருந்து மாறவே இல்லை இலக்கியா?” அவன் ஆழமான குரலில் கூற, “ம்… அதே தைரியம், அதே நம்பிக்கை. அப்படித்தானே?” அவள் பெருமையாக கேட்க, அவன் நமட்டு சிரிப்போடு மறுப்பாக தலை அசைத்தான்.

அவள் புரியாமல் கண்களை சுருக்க, “சின்ன வயசில், எங்க அப்பா மடியில் இப்படி தான் ஏறி உட்கார்ந்துட்டா, இறங்கவே மாட்ட. ஏதோ சோபாவில் உட்கார்ந்த மாதிரி ஜாலியா உட்கார்ந்துப்ப.” அவன் கேலியாக கூறி கலகலவென்று சிரித்து சூழ்நிலையை சமாளித்தான்.

‘ஐயோ, இலக்கியா நீ எப்படி இப்படி மாறிப்போன?’ அவள் பதறிப்போனாள். ஆனால், தன் பதட்டத்தை மறைத்து கொண்டு, “நீங்க கையை எடுத்தால் தானே நான் எழுந்திருக்க முடியும்? நீங்க தான் என்னை இப்படி பிடிச்சி வச்சிருக்கீங்க. நான் உங்க அன்பு மனைவி மாதிரி.” அவன் கைகளை உருவிக்கொண்டு படக்கென்று எழுந்தாள் இலக்கியா.

‘இலக்கியா என்ன பண்ணிட்டு இருக்க? விலகி ஓடிடு’ அவள் மனசாட்சி அவளை இடித்துரைக்க, அவன் கண்கள் அவளை இடுங்கி பார்த்தன.

இருவரிடமும் மெல்லிய மௌனம்!

சிறகுகள் விரியும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!