இதயம் – 15

eiHJN6N67051-1475791d

இதயம் – 15

தன் அலுவலக கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு பூஜாவின் வருகைக்காக சக்தி அந்த இடத்திலேயே காத்து நிற்க, அவனது நேரத்தை வீணடிக்காமல் ஒரு சில நிமிடங்களிலேயே பூஜா அந்த இடத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்ததும் சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை நோக்கி சென்றவன், “ஹாய் பூஜா, குட் மார்னிங்” என்று கூற,

அவனது குரல் கேட்டு சட்டென்று திரும்பிப் பார்த்தவள் சக்தியைப் பார்த்ததும் சிறு புன்னகையுடன், “குட் மார்னிங் சக்தி சார்” என்றவாறே அவனுடன் இணைந்து நடக்கத் தொடங்கினாள்.

“அப்புறம் வேலை எல்லாம் எப்படி போகுது பூஜா?”

“உங்களுக்குத் தெரியாததா சார்? ஏதோ வேறு ஒரு இடத்தில் வேலை பார்க்கும் ஆளுகிட்ட கேட்கிற மாதிரி கேட்குறீங்க”

“எப்படி இருந்தாலும் நம்ம கிட்ட வேலை பார்க்குறவங்க கிட்ட அவங்க கஷ்டம், இஷ்டங்களைத் தெரிந்து கொள்ள தானே வேணும்?”

“அதுவும் சரிதான் சார். வேலை எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லா போகுது, ஆனா என்ன எம்.டி சார் தான் வேலையாக சொல்லி லீவே தர மாட்டேங்குறாரு” பூஜாவின் கூற்றில் சட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்த சக்தி அவளது குறும்பு நிறைந்த புன்னகை முகத்தில் தன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டபடியே அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டான்.

சிறிது நேரம் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்த பூஜா தனக்குரிய இடத்தை நோக்கி செல்வதற்கு முன்பு சக்தியைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு தன் இடத்தை நோக்கி செல்லப் போக, அவசரமாக அவள் முன்னால் வந்து நின்று கொண்டவன், “பூஜா நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விடயம் பேசணும். இன்னைக்கு சாயந்திரம் ஆபிஸ் முடிந்து போகும் போது ஒரு ஐந்து நிமிடம் இருக்க முடியுமா?” என்று கேட்க,

அவனது கேள்வியில் சிறிது குழப்பத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றவள் சிறிது நேரம் யோசித்து விட்டு, “சரி சார். ஆபிஸ் முடிந்ததும் உங்களுக்காக நான் கீழே வெயிட் பண்ணுறேன்” என்று விட்டு தன் இருக்கையை நோக்கி நகர்ந்து செல்ல, மறுபுறம் சக்தி தன் தடதடக்கும் இதயத்தை தட்டிக் கொடுத்து இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தான்.

“ஒருவழியாக பூஜா கிட்ட பேச நேரம் எடுத்தாச்சு. அதேமாதிரி எந்த பதட்டமும் இல்லாமல் அவகிட்ட என் மனதில் இருக்கும் காதலையும் சொல்லி விட வேண்டும். அவ மனதிலும் எனக்கான ஆசைகள் இருக்குன்னு எனக்குத் தெரியும், ஆனா அப்படி எதுவும் இல்லைன்னு அவ சொல்லிட்டான்னா? சேச்சே, அப்படி எல்லாம் எதுவும் நடக்காது. நல்லதே நடக்கும்ன்னு நம்பு சக்தி” தனது கேபினுக்குள் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டபடியே தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்ட சக்தி அதன் பிறகு வந்த நேரம் முழுவதும் தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விட, அன்று மாலை அவனுக்கு அவன் எதிர்பார்த்த பதிலை பூஜாவிடமிருந்து பெற்றுக் கொடுக்குமா? இல்லையா?

**********

மாலை நேரம் எல்லோரும் தங்கள் வேலை முடிந்து தங்கள் இருப்பிடங்களை நோக்கிச் செல்லத் தயாராகிக் கொண்டு நிற்க, பூஜாவும் எப்போதும் போல தன் கைப்பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறப் பார்த்து விட்டு பின்னர் ஏதோ நினைவு வந்தவளாக தனது தலையில் தட்டிக் கொண்டாள்.

“ஐயோ பூஜா, சக்தி சார் தான் இன்னைக்கு சாயந்திரம் உன் கிட்ட ஏதோ முக்கியமான விடயம் பேசணும்னு சொன்னாரே. அது என்னன்னு கேட்காமல் நீ பாட்டுக்கு ஹாஸ்டல் போக கிளம்பிட்ட. கீழே போய் வெயிட் பண்ணி அவங்க கிட்ட என்ன விடயம்ன்னு கேட்டுட்டு போகலாம்” சக்தியின் கேபினைத் திரும்பிப் பார்த்தபடியே படியிறங்கி சென்று கீழே இருந்த தோட்டம் போன்ற ஒரு இடத்தில் நின்று கொண்ட பூஜா அந்த இடத்தில் பூத்திருந்த மலர்களை எல்லாம் மெல்ல வருடிக் கொடுத்தபடியே அந்த தருணத்தை மனதார ரசித்துக் கொண்டு நின்றாள்.

பூஜா தனக்காக கீழே காத்துக் கொண்டு நிற்பாள் என்கிற பூரிப்பான மனநிலையுடன் அவசர அவசரமாக படியிறங்கி தன் அலுவலகத்தின் வெளித்தளத்தை வந்து சேர்ந்த சக்தி பூஜாவைத் தேடி தன் பார்வையை சுழல விட, அவன் தேடலைப் பூர்த்தி செய்வது போல அவன் மனதின் நாயகி அங்கிருந்த தோட்டத்தில் பூக்களை வருடிக் கொடுத்தபடி நின்று கொண்டிருந்தாள்.

சக்தியின் காதல் கொண்ட மனது அந்த ஏகாந்தமான சூழ்நிலையில் பூஜாவைக் கண்டதும் அவளை கண்ணிமைக்காமல் ரசிக்கச் சொல்லி அவனைத் தூண்ட, அவன் கண்களும் அந்த பணியை செவ்வனே நிறைவேற்ற ஆரம்பித்தது.

சூரியன் மறைந்து நிலவைப் பவனி வர வைக்க வானம் அதன் நிறத்தை மாற்ற ஆரம்பித்திருக்க, மெல்ல பூஜாவை நோக்கி அடியெடுத்து வைத்து நடந்து சென்ற சக்தி அவளது தோளில் தன் கையை வைக்க எண்ணி தன் கையை கொண்டு சென்று விட்டு பின்பு சட்டென்று தன் கையை பின்னிழுத்துக் கொண்டான்.

‘கூல் டவுன் சக்தி, கூல் டவுன்’ ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டவனாக பூஜாவின் அருகில் சென்றவன்,

“பூஜா” என்றழைக்க, அவனது குரல் கேட்டதும் வேகமாக அவனது புறம் திரும்பிய பூஜா அவளது வேகத்தில் நிலைதடுமாறி விழப் போக, அதற்குள் சக்தி அவளைத் தன் கைகளில் தாங்கிக் கொண்டான்.

அவர்கள் இருவரது நான்கு விழிகளும் நேருக்கு நேர் மோத, அந்த பார்வைப் பரிமாற்றத்தில் பூஜாவின் மனது வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

சக்தியின் பார்வையில் அவள் மனம் தன்னை இழப்பது போல இருக்கவே அவசரமாக தன்னை சுதாரித்துக் கொண்டு அவனது பிடியில் இருந்து விலகி நின்று கொண்டவள் தன் கண்களை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொள்ள, மறுபுறம் சக்தியும் அதே நிலையில் தான் நின்று கொண்டிருந்தான்.

பூஜாவை ஒவ்வொரு தடவை தன் அருகாமையில் சந்திக்கும் போதும் சக்தியின் மனம் முதன்முதலாக அவளைத் தன் அருகில் பார்ப்பது போல தன் வசம் இழந்து கொண்டு தான் இருந்தது.

மாலை நேரக் காற்று அவர்கள் இருவரையும் தழுவிச் செல்ல தன் பதட்டம் நீங்கியவளாக சக்தியின் புறம் திரும்பிய பூஜா, “நீங்க ஏதோ முக்கியமான விடயம் பேசணும்னு சொன்னீங்களே சார். என்ன விடயம்?” என்றவாறு நேரடியாக பேச வந்த விடயத்தை ஆரம்பித்திருந்தாள்.

“ம்ம்ம்ம்ம், ஆமா பூஜா ரொம்ப முக்கியமான விடயம். இரண்டு பேரோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம்”

“இரண்டு பேரோட வாழ்க்கையா? யாரு அந்த இரண்டு பேர்?”

“நீங்களும், நானும் தான் பூஜா”

“என்ன?” சக்தி சொன்ன விடயத்தைக் கேட்டு அவனை அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டு நின்றவள்,

“நீங்க… நீங்க என்ன சொல்லுறீங்க?” சிறிது தடுமாற்றத்துடன் அவனைப் பார்த்து வினவினாள்.

“ஆமாம் பூஜா. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். என் வாழ்க்கை முழுவதும் நீங்க என் கூட இருக்கணும்னு நான் ஆசைப்படுகிறேன். நீங்க என்னோட வாழ்க்கையில் என் வாழ்க்கைத் துணையாக வந்தால் அதை விட வேறு எதுவும் எனக்கு சந்தோஷம் தராது. எனக்கு உங்க வாழ்க்கையில் இதுவரை நடந்த விடயங்களைப் பற்றி எல்லாம் எந்தவொரு கவலையும் இல்லை, இனி வரப்போகும் நாட்களில் உங்களை நான் சந்தோஷமாக வைத்துக் கொள்ளணும்னு ஆசைப்படுறேன். உங்க மனதிலும் என் மேலே காதல் இருக்குதுன்னு எனக்குத் தெரியும் பூஜா. இத்தனை நாட்களாக என் மனதிற்குள் வைத்து மறைத்து மறைத்து வாழ்ந்த விடயத்தை இப்போ நான் உங்க கிட்ட சொல்லப் போறேன். நான் உங்களை காதலிக்கிறேன் பூஜா, என்னை விடவும் உங்களை நான் ரொம்ப ரொம்ப காதலிக்கிறேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதமா பூஜா?” சக்தி தன் காதலை சொல்லி விட்ட திருப்தியான மனநிலையுடன் பூஜாவின் பதிலை எதிர்பார்த்து காத்து நிற்க, அவன் தன் காதலைப் பற்றி தன்னிடம் கூறக் கூடும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத பூஜா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவனைத் தவிப்போடு பார்த்துக் கொண்டு நின்றாள்.

வெகு நேரமாக பூஜாவிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்பதை உணர்ந்த சக்தி அவளது கையைத் தொடப் பார்க்க, அவளோ தன் கையை சட்டென்று பின்னிழுத்துக் கொண்டு அவனை விட்டு சிறிது அடி தள்ளி நின்று கொண்டாள்.

“பூஜா நான்…” சக்தி பேச ஆரம்பிப்பதற்குள் தன் கையை காட்டி அவனைப் பேச வேண்டாம் என்பது போல சைகை செய்தவள் சோர்ந்து போனவளாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, சக்திக்கு தான் அவளது செய்கையைப் பார்த்து மனம் மிகவும் துவண்டு போவதைப் போல இருந்தது.

பூஜா அவளாகவே யோசித்து ஏதாவது பதில் பேசட்டும் என்று எண்ணியபடி சக்தி தன் கைகளைக் கட்டிக் கொண்டு அமைதியாக நிற்க, தன் கைகளில் தன் முகம் புதைத்து அமர்ந்திருந்தவள் சிறிது நேரம் கழித்து விருட்டென்று எழுந்து கொண்டு அந்த இடத்தில் விட்டு வேகமாக வெளிப்புறம் நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

பூஜா கோபமாக வெளியே செல்வதைப் பார்த்து விட்டு அவசர அவசரமாக அவளை நோக்கி ஓடிச் சென்ற சக்தி அவளது வழியை மறித்தவாறு வந்து நின்று கொள்ள அவனை முறைத்துப் பார்த்தவள், “வழி விடுங்க. நான் போகணும்” என்று கூற, அவனோ அவள் சொன்னது தன் காதிலேயே விழவில்லை என்பது போல நின்று கொண்டிருந்தான்.

“சக்தி சார் உங்களைத் தான் சொல்லுறேன். வழி விடுங்க. நான் போகணும்”

“நான் உங்களைப் போகவே கூடாதுன்னு சொல்லல பூஜா, ஆனா நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி விட்டு போகலாமே?”

“உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லலைண்ணா உங்க கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல இஷ்டம் இல்லைன்னு அர்த்தம் சார். அது உங்களுக்குப் புரியலையா?”

“அது தான் ஏன் பிடிக்கல?”

“பிடிக்கலைன்னா பிடிக்கல. அவ்வளவு தான்”

“நிஜமாகவே என்னை உனக்குப் பிடிக்காதா பூஜா?” சக்தியின் குரல் வழமைக்கு மாறாக கலக்கத்தோடு ஒலிக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனது கலங்கிய கண்களைப் பார்த்து விட்டு சட்டென்று தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

‘இல்லை பூஜா, இல்லை. இது சரியில்லை. சக்தி சாருக்கு நீ கொஞ்சம் கூட சரியான ஆள் இல்லை. அவரோட நல்ல மனதுக்கு அவருக்கு நல்ல ஒரு பொண்ணு மனைவியாக வரணும், அதை விட்டுவிட்டு நான் எப்படி? எனக்கு ஏற்கனவே கல்யாணம் நடந்து முடிந்த விடயம் தெரிந்தும் அவரால் எப்படி இப்படி ஒரு கேள்வியைக் கேட்க முடியும்? இங்கே இதற்கு மேலேயும் நின்றால் நான் ரொம்ப பலவீனமாக மாறிடுவேன். சக்தி கவலையாக இருப்பதைப் பார்க்க என்னால் முடியல. இங்கே இருந்து போ பூஜா, போ’ அவள் மூளை அவளை அங்கிருந்து அவசரமாக விலகிச் செல்லும் படி அவளுக்கு கட்டளையிட, சக்தியை தாண்டிச் செல்லப் போனவளின் கைகள் இப்போது அவன் வசமானது.

அவன் இவ்வாறு நடந்து கொள்ள கூடும் என்று எதிர்பார்க்காத பூஜா அதிர்ச்சியோடு அவனைத் திரும்பிப் பார்க்க, அவளது பார்வை மாற்றத்தில் அவள் கையிலிருந்த தன் கையை விலக்கி கொண்டவன், “நீங்க தாராளமாக இந்த இடத்தை விட்டு போகலாம் பூஜா, ஆனால் அதற்கு முன்னாடி என் கேள்விக்கு பதில் சொல்லி விட்டு போங்க. ஒண்ணு ஆமா என்னைப் பிடிக்கும்ன்னு சொல்லணும், இல்லையா என்னைப் பார்த்தாலே பிடிக்காதுன்னு சொல்லணும். அதை விட்டுட்டு இப்படி எதுவுமே சொல்லாமல் ஓடி ஒளியப் போனால் என்ன அர்த்தம்?” என்று கேட்க, முன்பை விட இன்னமும் அதிக கோபத்தோடு அவனை முறைத்துப் பார்த்தவள் அதே கோபப் பார்வையோடு அவன் முன்னால் வந்து நின்று கொண்டாள்.

“நான் இத்தனை நாட்களாக நீங்க செய்த உதவிகளுக்கு எல்லாம் பின்னால் ஒரு நல்ல உதவி செய்யும் எண்ணம் இருக்கும்னு தான் நினைத்து இருந்தேன், ஆனா இப்போ தான் தெரியுது அது எல்லாம் உங்க சுயநலத்திற்காக நீங்க செய்தது. இப்படி உதவிகள் எல்லாம் செய்தால் நான் நீங்க சொல்லும் எல்லா விடயங்களையும் கேட்டு உங்க பின்னாடி…”

“பூஜா ஸ்டாப் இட்”

“எதற்காக நான் நிறுத்தணும்? நீங்க தானே பதில் கேட்டீங்க. அப்போ நான் சொல்ல வருவதை எல்லாம் நீங்க கேட்டுத் தானே ஆகணும்?”

“பூஜா உங்களுக்கு என்னைப் பிடிக்குமா? பிடிக்காதா? இது தான் என்னுடைய கேள்வி. உங்க கிட்ட அதற்கான பதிலைத் தான் நான் எதிர்பார்த்தேன், ஆனா நீங்க என்னோட காதலையும், என்னோட மனிதாபிமானத்தையும் மட்டம் தட்டுவது போல பேசுறீங்க. இதற்கு மேலேயும் நான் உங்களை கட்டாயப்படுத்த மாட்டேன். காதல் ஒரு அழகான உணர்வு. அதை எந்தக் காலத்திலும் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது.
நீங்க இதுவரைக்கும் பேசியதை வைத்தே உங்க மனதில் என் மேல் எந்த ஒரு ஆசையும் இல்லைன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு. உங்க நேரத்தை வீணடித்ததற்கு மன்னிச்சுடுங்க. இனிமேல் நீங்க எப்போதும் போல இங்கே வேலை பார்க்கலாம், என்னால் உங்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் வராது. அப்படி என்னையும் அறியாமல் ஏதாவது தவறுகள் நடக்குமாக இருந்தால் என்னை நீங்க மன்னிச்சுடுங்க” பூஜாவை நிமிர்ந்தும் பார்க்காமல் படபடவென்று பேசி முடித்தவன் அங்கிருந்து வேகமாக நடந்து சென்று தன் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட, மறுபுறம் பூஜா அந்த இடத்தில் புயலடித்து ஓய்ந்தது போல நின்று கொண்டிருந்தாள்.

“ஐ யம் சாரி சக்தி, எனக்கு இதைத் தவிர வேறு வழி தெரியலை. என்னால் இதுவரைக்கும் எல்லோரும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. உங்களுக்கும், உங்க குடும்பத்திற்கும் என்னால் எந்த சிரமமும் வந்து விடக்கூடாது. நீங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க சக்தி, உங்க வாழ்க்கையில் உங்களுக்கு எல்லாமே பெஸ்ட்டான விடயங்கள் தான் கிடைக்கணும். என்னை மாதிரி விடயங்களை எல்லாம் உங்க வாழ்க்கையில் இருந்து தள்ளி வைப்பது தான் உங்களுக்கு நல்லது” சக்தியின் கார் சென்ற வழியைப் பார்த்து விரக்தியாக புன்னகைத்த படியே பூஜா நடந்து சென்று கொண்டிருக்க, பல்வேறு மன உளைச்சலில் நடந்து சென்று கொண்டிருந்தவளுக்கு அவளைப் பின் தொடர்ந்து ஒரு கும்பல் வந்து கொண்டிருந்தது தென்படவே இல்லை.

சக்தியைப் பற்றி சிந்தித்தபடியே பூஜா நடந்து சென்று கொண்டிருக்க, அவளைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நபர்கள் தங்கள் கைகளில் கத்தியையும், துப்பாக்கியையும் பிறர் அறியாத வண்ணம் மறைத்து மறைத்து எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.

பூஜா தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்கு செல்வதற்கு இரண்டு கிலோமீட்டர் முன்னால் ஒரு ஆள் நடமாட்டம் அற்ற பாதை இருக்கும்.

அந்த பாதையில் எப்போதாவது தான் சில வாகனங்கள் கடந்து செல்லும், ஏனெனில் அந்த பாதை சிறிது குன்றும் குழியுமாக இருப்பதால் பெரும்பாலும் நடந்து செல்பவர்கள் மாத்திரமே அந்த பாதையை அடிக்கடி பயன்படுத்துவர்.

மீதி நேரங்களில் எல்லாம் அந்த பாதை வெறிச்சோடிப் போய்த் தான் இருக்கும். இப்போது கூட பூஜா அந்த பாதையில் உள் நுழையும் போது அந்த தெரு வெறிச்சோடிப் போய்த் தான் கிடந்தது. அந்த தெருவில் கடைகளும் இல்லை, வீடுகளும் இல்லை. மாறாக பெரிய பெரிய மரங்களும், பாழடைந்து இடிந்து போன கட்டடம் ஒன்றும், அதோடு ஒட்டினாற் போல ஒரு பழைய கோயில் கட்டடமும் தான் அங்கே இருந்தது.

வழக்கமாக பூஜா சிறிது நேரத்திற்கு முன்பே வேலை முடிந்து வந்து விடுவதால் அந்த பாதையால் செல்லும் போது அவளுக்கு அத்தனை பயம் ஏற்படுவதில்லை, ஆனால் இன்று சிறிது நேரம் தாமதித்து அவள் புறப்பட்டு வந்ததால் என்னவோ ஏற்கனவே மாலை மங்கிக் கொண்டிருந்த வானம் அந்த தெருவில் செல்லும் போது வெகு இருட்டானது போல இருந்தது.

வழமைக்கு மாறாக அவள் மனம் பயத்தில் வேகமாக துடிக்க ஆரம்பிக்க, எதுவோ சரியில்லை என்று தனக்குள் சிந்தித்தபடியே வேக வேகமாக பூஜா தன் அடிகளை எடுத்து வைக்க, திடீரென ஒரு கறுப்பு நிற ஜீப் அவள் முன்னால் வந்து நின்றது.

தன் முன்னால் திடீரென வந்து நின்ற வாகனத்தைப் பார்த்து பயந்து போனவளாக பூஜா தன் கைப்பையை தன்னோடு இறுக்கிப் பிடித்துக் கொள்ள, அவள் பயத்தை இன்னும் அதிகரிப்பது போல அந்த ஜீப்பில் இருந்து ஒரு நபர் இறங்கி நின்றான்.

ஜீப்பில் இருந்து இறங்கி நின்ற அந்த நபரைப் பார்த்ததுமே பூஜாவின் உடல் நடுங்கத் தொடங்க, அதற்குள் அவளைச் சுற்றி அந்த நபரின் ஆட்கள் வளைத்து நின்றனர்.

‘இது, இது விஷ்வாவைக் கொலை செய்தவன் ஆச்சே? இவன் எதற்காக இங்கே வந்து இருக்கிறான்? இவனுக்கு எப்படி நான் இருக்கும் இடம் தெரியும்? இத்தனை நாட்கள் கழித்து மறுபடியும் இவன் எதற்காக நான் இருக்கும் இடத்திற்கு வரணும்?’ பூஜா தன் முன்னால் நின்று கொண்டிருந்த அந்த நபரைப் பார்த்து பயத்தோடும், பதட்டத்தோடும் தன் பார்வையை சுழல விட,

அவளைப் பார்த்து வாய் விட்டு சிரித்தபடியே அவள் முன்னால் வந்து நின்ற அந்த நபர், “என்ன மேடம்? திருமதி. விஷ்வா அவர்களே, எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. அன்னைக்கு கடைசியாக உன் புருஷனைக் கொல்லும் போது பார்த்தது, அதற்கு அப்புறம் இதோ இன்னைக்கு தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்து இருக்கு. எப்படி இருக்கீங்க மேடம்” என்று கேட்க, அந்த நபரின் கேள்வியிலும், பார்வையிலும் பூஜாவிற்கு வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.

“என்ன மேடம் கேள்வி கேட்டால் வாய் திறந்து பேச மாட்டீங்களா? பேச மாட்டியா?” அந்த நபர் இம்முறை அதட்டலாக பூஜாவைப் பார்த்து வினவ, அந்த நபரின் அதட்டலில் தன் கையிலிருந்த தன் கைப்பையை தவறவிட்டவள் தன் காதுகளை தன் இரு கைகளாலும் இறுக மூடிக் கொண்டாள்.

“அன்னைக்கு உன் புருஷன் ரொம்ப புத்திசாலித்தனமாக உன்னைக் காப்பாற்றி விட்டதாக நினைத்து இருப்பான் இல்லையா? இன்னைக்கு யாரு உன்னை வந்து காப்பாற்றுவாங்கன்னு நானும் பார்க்கிறேன். அந்த விஷ்வா என் அண்ணனோட குடும்பத்தில் ஒருத்தர் விடாமல் உருத்தெரியாமல் அழித்து ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டான். அவன் பண்ண தப்புக்கு அவனுக்கு தண்டனை கிடைத்து தானே ஆகணும்?
அந்த விஷ்வாவோட சம்பந்தப்பட்ட யாரையும் நான் உயிரோடு விடமாட்டேன். அவனுக்கு உதவியாக இருக்கும் எவனையும் விடமாட்டேன். உன் மேலே எனக்கு எந்த கோபமும் இல்லை, உன்னை இத்தனை நாளைக்கு அப்புறமும் தேடி வந்து கொல்லணும்னு நிற்கிறேன் இல்லையா? அதற்கு ஒரே ஒரு காரணம் தான். நீ அந்த விஷ்வாவோட மனைவிங்குற அந்த ஒரு அடையாளம் தான். அது மட்டும் தான் காரணம்” என்றவாறே தன் கையிலிருந்த கத்தியை ஒற்றை விரலால் நீவி விட்டபடியே அந்த நபர் பூஜாவை நோக்கி நகர்ந்து வர, அந்த நபரைப் பார்த்து அச்சத்துடன் பூஜா மெல்ல மெல்ல பின்னால் நகர்ந்து செல்ல ஆரம்பித்தாள்.

“நீ எங்கே தான் போனாலும் உன் உயிர் இன்னைக்கு என் கையால் தான் போகும். அந்த விஷ்வாவோட பழகியதற்கு உனக்கு இது தான் பரிசு” என்றவாறே தன் அடியாட்களைப் பார்த்து பூஜாவைப் பிடிக்கும் படி அந்த நபர் ஜாடை காட்ட, அவளின் இரு புறமும் இரண்டு நபர்கள் வந்து நின்று கொண்டு அவளது கையை இறுகப் பிடித்துக் கொண்டனர்.

“ப்ளீஸ் என்னை எதுவும் பண்ணிடாதீங்க. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க” பூஜா கண்ணீர் மல்க அவர்களைப் பார்த்து கெஞ்ச, அவளது கெஞ்சல் எதையும் காதில் வாங்காதது போல அந்த நபர்கள் நின்று கொண்டிருக்க, அவளது மனம் முதன்முதலாக சக்தியின் அருகாமையை எண்ணித் தவித்தது.

‘சக்தி நீங்க எங்கே இருக்கீங்க? ப்ளீஸ் என்னை காப்பாற்றுங்க சக்தி. எனக்கு எப்போ எந்த கஷ்டம் வந்தாலும் என் முன்னால் வந்து நிற்பீங்களே சக்தி, இப்போ மட்டும் ஏன் என்னைத் தேடி நீங்க வரவேயில்லை?’ பூஜாவின் ஒரு புற மனம் சக்தியின் வருகையை எண்ணி ஏங்க,

மறுபுற மனதோ, ‘அவனை அத்தனை தூரம் மனதளவில் காயப்படுத்தி விட்டு இப்போது அவன் வரவேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி வருவான்?’ என அவளைப் பார்த்து நக்கலாக கேட்டது.

தன்னைச் சுற்றி எல்லா வழிகளும் அடைக்கப்பட்டு விட்டது, தன்னால் இனி இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது என்று நினைத்துக் கொண்டு பூஜா தன் கண்களை மூடிக் கொள்ள, சரியாக அந்த தருணம் பார்த்து, “பூஜா” சக்தியின் குரல் அந்த இடம் முழுவதும் எதிரொலித்துக் கேட்டது.

சக்தியின் குரலைக் கேட்டதுமே பூஜா தன் இமைகளைத் திறந்து கொள்ள, சுற்றியிருந்த அத்தனை நபர்களும் அந்த குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தனர்.

திக்குத் தெரியாத காட்டில் தனியாக விடப்பட்ட நபருக்கு ஒரு வழி கிடைத்ததைப் போல இனி பார்க்கவே முடியாதோ என்று ஏங்கிப் போய் இருந்த பூஜாவிற்கு சக்தியைப் பார்த்ததும் வேறு எதுவுமே தெரியவில்லை.

தன் கையைப் பிடித்துக் கொண்டு நின்ற நபர்களை தன்னால் முடிந்த மட்டும் பலம் கொண்டு தள்ளி விட்டவள், “சக்தி” என்ற கூச்சலோடு அவனை நோக்கி ஓடிச் செல்ல, அந்த அடியாட்களும் அவளைப் பின் தொடர்ந்து துரத்த ஆரம்பித்தனர்.

சக்தியைப் பார்த்து விட்ட தைரியத்தில் அத்தனை வேகமாக அவனை நோக்கி ஓடி வந்தவள், “சக்தி” என்றவாறே அவனைத் தாவி அணைத்துக் கொள்ள, அவளைத் துரத்திக்கொண்டு வந்த நபர்கள் மட்டுமின்றி சக்தி கூட அவளைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்றான்……..

**********
இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்து நீயும் விலக
தத்தளித்து நானும் மருக
என்ன செய்வேனோ
**********

Leave a Reply

error: Content is protected !!