எனை மீட்க வருவாயா! – 5
“எண்ணியவ(ள்)ன் கடந்தாலும்..
மறந்தாலும்…
உறங்கினாலும்…
எண்ணம் உறங்காது!
செயலுக்காய்
செவ்வனே காத்திருக்கும்!”
கிருபாவின் உரிமையோடுடனான செயல்களில் முகத்தை சுழித்தபடி இருந்தவள், கிருபா எதிர்பாரா தருணத்தில், வாயிக்கு வந்ததைப் பேசி என்பதைவிட, ஏசி நோகடித்திருந்தாள்.
காதலில் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டால், காதலின் சாம்ராஜ்ஜியம் சரிந்து, அதற்கென சரித்திரமே இல்லாமல் அல்லவா போயிருக்க வேண்டும்!
மோதலும், சாதலும், மயக்கமும், கிறக்கமும், சூழலை மறந்த நிலையும், காதலின் காரணியல்லவா!
இருவருக்கிடையே புரிதல் தந்தியடிப்பதை உணர்ந்தவன், ஆரம்பம் முதலே அப்படித்தானே.. என அவள் ஏசியதை, சிரித்தபடியே கேட்டுக் கொண்டிருந்தான்.
“என் நிம்மதியே உன்னால போயிரும்போல!” எனும் திவ்யாவின் இறுதி வார்த்தையில், அவனது சிரிப்பு சட்டென நின்றிருந்தது.
சட்டென எழுந்தவன், அங்கிருந்து நகர்ந்து, அவளின் முன் வந்து நின்றான்.
குனிந்திருந்தவளிடம், “ஒரு நிமிசம் என்னைப் பாரேன்!”
‘என்னத்தைடா இப்ப செய்யச் சொல்லப் போற’ என்பதுபோல அசட்டையாய் நிமிர்ந்தவளின் முகத்தில் கருவிழிகளையே உற்று கவனித்தான்.
கிருபாவின் பார்வைத் தாக்கத்தை தாங்க இயலாது, சட்டென குனிந்து கொண்டாள்.
அவளின் பேச்சிற்கும், அதன் தன்மைக்கு ஏணி வைத்தாலும், எட்டாத நிலையில் இருந்தது.
“இப்போ நீ ரொம்ப டென்சனா இருக்க. இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லாரும் வர ஆரம்பிச்சிருவாங்க. இதப்பத்தி நாளைக்கு டிஸ்கஸ் பண்ணி, ஒரு முடிவுக்கு வந்திரலாம்” என்றவன், அவனது இடத்தில் சென்று பேகை வைத்துவிட்டு, வகுப்பிலிருந்து வெளியில் சென்றுவிட்டான்.
விரைவில் திரும்பி வந்தவன் கையில், சூடான பாதாம் பால் இருந்தது. அவளின் முன் வைத்தவன், “ஆர்க்யூ பண்ணாம எடுத்துக் குடி!” என மீண்டும் வெளியேறிவிட்டான்.
அதுவரை கிருபாவின்மேல் இருந்த கோபம், அவனது செயலால் அப்படியே மாறியிருந்தது. அவன் அறையை விட்டுச் சென்றதும், ஏமாற்றமே எஞ்சியிருந்தது.
‘என்ன மாதிரி மனுசன்டா நீயி, இவ்வளவு தூரம் திட்டியிருக்கேன். எதுவுமே நடக்காத மாதிரி, பாலை வாங்கியாந்து தர! உன்னோட அன்பை ஏத்துக்கற அளவுக்கு, எனக்குப் பக்குவமும் இல்லை. அதை கரை சேக்கிற திறமையும், எங்கிட்ட இல்லையே!’ என மனதிற்குள் மருகியபடி, பாலை எடுத்து அருந்தியிருந்தாள் திவ்யா.
சற்று தெளிந்தாற்போல இருந்தது. தன்னை சரியாகக் கணித்தவனது, கனிவான கவனிப்பை குலைக்கும் முயற்சியில் தான் இறங்கியிருப்பது, வருத்தமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லையே!
அவனது அணுகுமுறையால் ஏற்படப்போகும் பாதகத்தை எண்ணி, அவளை அவனிடமிருந்து விலகச் செய்தாலும், ஆழ்மனம் அவனது செயல்களை, அண்மையை, அடாவடித் தனத்தை விரும்புவதை உணர்ந்தவளுக்குள், திகிலான உணர்வு.
கிருபாவைக் கண்டது முதலே, தனது மனம் போன பாதையை யோசித்துப் பார்த்தாள். அவனை மட்டும் குற்றம் சொல்ல இயலாது என்பதுபோல, அவளின் மனம் சொன்ன செய்தி இருந்தது.
அன்று மாலை வீட்டிற்கு வந்தவள், சித்தியின் மகள்கள், மாமாவின் மகள்கள் வீட்டிற்கு வந்ததைக் கவனியாமல், ‘நாளைக்கு என்ன பேசப் போறான்னு தெரியலையே’ என்பதாக சிந்தனை நீண்டிருக்க, “திவ்யாக்கா..” என யாரோ பிடித்து உலுக்க, நடப்பிற்கு வந்தவள், பேந்தப் பேந்த விழித்தபடியே, அப்போதுதான் நிகழ்வுக்கு வந்து சுற்றம் கவனித்தாள்.
“ஏய், நீங்கள்லாம் எப்ப வந்தீங்கடீ”
“ம்.. நல்லா கேளு டீட்டைலு. வந்து கழுதையா உன் பேரைச் சொல்லிக் கத்தி, தொண்டையே வறண்டுருச்சு” சித்தியின் மகள் ஓரமாய் சென்று சோபாவில் அமர்ந்தபடி கூற
“காது டமாரமாயிருச்சு திவ்யாக்காவுக்கு”
“கண்ணும் போச்சு” ஆளுக்கொன்றாய் கூறி சிரிக்க
“என்னங்கடீ, ஒரேடியாத்தான் என்னைய ஓட்டுறீங்க”
“உனக்கு உண்மையிலேயே என்னாச்சு” மாமன் மகள் வினவ
“நல்லாத்தானே இருக்கேன்” திவ்யா
“இல்லையே ஏதோ பினாத்திட்டு இருந்த” திவ்யாவை உறுத்துப் பார்த்தாள். மாமனின் மகள்.
இந்தக் கூட்டம் சற்று பொல்லாதது. ஒன்றுக்கு இரண்டாக, சித்தி, அத்தையிடம் கூறினால், தனது தாயின் காதுக்கு ஐந்து என வந்து சேரும் என்பதை உணர்ந்து, பதறிப் போனாள் திவ்யா.
“உடம்புக்கு எதுவும் முடியலையா திவ்யாக்கா” என்ற சித்தியின் சின்ன குட்டி வினவ,
“அசைன்மெண்ட் வர்க் நிறைய. அதான் அதைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்” என சமாளித்தாள்.
‘ஈஸ்வரி வரதுக்குள்ள வந்து சொன்னாளுங்க. இன்னிக்கும் முகம் சரியில்லனா, அத்தோட படிப்பு சுவாஹாதான்’ என நினைத்தவள், அத்தோடு தன்னை இயல்பாக இருக்கும்படி காட்ட மெனக்கெடலானாள்.
வந்தவர்களை முதலில் கவனித்து பேக் செய்துவிட்டு, இல்லாத வீட்டு வேலைகளையெல்லாம் இழுத்துப் போட்டு செய்தாள். வீட்டை ஒழுங்குபடித்தி, வாயிலை சுத்தம் செய்து கோலமிட்டவள், தலைவார கண்ணாடி முன் வந்து நின்றாள்.
கிருபா காதலைச் சொன்ன கனம் நினைவுக்கு வந்ததும், தன்னை அறிந்து கொள்ளும் ஆவல் எழுந்தது. இதுவரை மெனக்கெடாதவளுக்கு தன் தோற்றத்தை ஆராயும் எண்ணம் வந்திட, வீட்டில் யாருமில்லா தைரியத்தில், வலப்புறம், இடப்புறமென இரண்டொருமுறை தனது தோற்றத்தை திரும்பிப் பார்த்தவளுக்குள், ‘ரொம்ப மோசமில்ல. அதான் உளறிருக்கு பயபுள்ள’ எனத் தோன்றியது.
டாப் ஒன் கதாநாயகி அளவிற்கு இல்லையென்றாலும், அழகி படத்தில் வரும் மோனிகாவைப் போன்ற சாயலில் இருந்தாள். நீளமான கூந்தல். அனைத்தும் தாய், ஈஸ்வரியின் மெனக்கெடல்கள்.
அன்றைய நாளை மிகவும் திறமையாகக் கடந்து, அடுத்த நாள் கல்லூரிக்கு வந்திருந்தாள்.
அவளுக்கு முன்பே வந்து காத்திருந்தான் கிருபா. வந்தவளை நோக்கி, “குட்மார்னிங் திவ்யா”
பதிலுக்கு என்றுமில்லாமல் வாயைத் திறந்திருந்தாள். “குட்மார்னிங்”
திவ்யா வந்தமர்ந்து இலகுவானே பின் அருகே வந்தவன், பேராசிரியர் அமர போட்டிருந்த நாற்காலியை எடுத்து, அவளின் முன்னே போட்டு எதிரே அமர்ந்தான்.
யார் முதலில் துவங்குவது என சற்று நேரம் அமைதியாய் இருந்து, இவள் பேசமாட்டாள் என கிருபாவே துவங்கிவிட்டான்.
“உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேனா திவ்யா?”
“…”
“படத்துல வர ஹீரோ கணக்கா, சாஃப்டா லவ்வர்கிட்ட அப்ரோச் பண்ணிட்டு, பின்னாடியே திரிஞ்சி, நீ என்னை நோக்கி எடுத்து வைக்கற ஒவ்வொரு அடியையும், எக்சைட்டடா எதிர்பாக்கற மாதிரியெல்லாம், எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது திவ்யா!”
காலங்காலமாய் காதலின் இலக்கணம் மாறுபட்டிருந்தாலும், பெண்கள் பெரும்பாலும் கதாநாயகனைப் போன்றல்லவா தனது காதலனும் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். அதைத்தான் அவ்வாறு கூறினான்.
“…” ‘ஒரு வேளை அப்டி அப்ரோச் பண்ணியிருந்தா, அமைதியா ஏத்திட்டு இருப்பேனோ’ திவ்யாவின் உள்ளம் கேட்டது.
“எதுலயும் முன்னாடி நின்னு, தைரியமா பேசி, ஒரு கை பாக்கலாம் அப்டிங்கற மாதிரியே வளந்துட்டேன்”
“…”
சுற்றி வளைக்காமல் விசயத்திற்கு நேரடியாக வந்திருந்தான். “வந்த அன்னைக்கு உன்னை எதேச்சையா கவனிச்சேன். நீ அமைதிங்கறது புரிஞ்சது. ஆனா உன்னோட ஆர்வமான பார்வை, எனக்கு தெரியக் கூடாதுங்கறதுக்காக, நீ உன்னையே ஏமாத்திட்டு, வேற விசயதுல கவனமா இருக்க முயற்சி செஞ்சு, அது முடியாம சிரமப்பட்டதையும் பாத்தேன். வேற யாராவது உங்கிட்ட க்ளோஸ்னா இப்டி தர்மசங்கடமா, நீ நெளிய வேண்டிய அவசியமில்லைனு தோணுச்சு. வேற யாருக்கும் உம்மேல கிரஸ், லவ் ஆர் பெஸ்டீனு ஐடியா இருக்கானு வாட்ச் பண்ணேன். அப்டி ஒன்னும் எனக்கு டவுட் வரலை. நாந்தான் அன்னைக்கு புதுசா வந்திருந்தேன். சோ உன்னோட கட்டுப்பாடு எல்லாம், எனக்காகன்னு நானே என்னை சமாதானம் பண்ணிட்டேன்”
“…” ‘அடப்பாவி.. இதெல்லாம் அப்டியே சொல்றானே’ என நிமிர்ந்து பதற்றத்தோடு பார்த்துவிட்டு, பழையபடி குனிந்து கொண்டாள் திவ்யா.
“எழுத அந்த லிஸ்ட நீ வாங்கனதை, நான் பாத்தேன். அதை நீ பாத்துட்ட. ஆனா எதுவும் எழுதல? ஏன்?”
“…” ‘கடவுளே… விடமாட்டான் போலேயே’
“அப்ப உன்னோட இந்த சைலண்டான விளையாட்ட, நான் சைலண்டா கண்ட்டினியூ பண்ணியிருந்தா, உனக்கு ஓகேவா இருந்திருக்கும்னு இப்பத் தோணுது”
“…”
“மூனு வருசம் என்ன? முப்பது வருசமானாலும் இம்ரூவ் ஆகவே செய்யாம ஒரே இடத்திலயே இருப்போம். இதனால யாருக்கு, என்ன பிரயோஜனம் சொல்லு”
“…” மிகவும் கீழிறக்கமாய் உணர்ந்தாள் திவ்யா.
“அப்டி வளராத எங்கிட்ட, அதை நீ எதிர்பார்த்ததுதான் தப்பு”
“…”
“லிஸ்ட்ல நீ எழுதல. ஆனா நான் சும்மாதான் வாங்கி வச்சிருந்தேன். உன்னோட பெஞ்ச் பக்கம் வந்தப்போ, உன்னோட பதற்றம், பரிதவிப்பு எவ்வளவு மறைச்சும் எனக்குத் தெரிஞ்சுது. அதுக்குமேல உன்னை சங்கடப்படுத்த வேணானு, எடுத்துக் குடுத்தா, நான் குடுத்ததை தலைவி வாங்கலை!” தலைமுடியை தனது கைகளால் கோதிக் கொண்டான்.
“…” தலைவி என தன்னை அவன் கூறியதில், தலைகால் புரியவில்லை. அதைக் காட்டிவிடக் கூடாதென, மேலும் தலையை குனிந்து கொண்டாள்.
“அடுத்த நாள் கொண்டு வந்து குடுத்ததும், டக்குனு வாங்கலை. இழுத்தடிக்கறது உனக்கு நல்லா வருது. எவனாவது பாத்திருவானோனு வாங்கற”
“…”
“வேணுனு தோணுது. ஆனா வாங்கனுமா, அப்படிங்கற தயக்கம். ரெண்டுக்கும் இடையே மாட்டிட்டு, என்னைய ஆட்டம் காட்டுன அன்னிக்கு! நானும் கடைசிவரை உன்னோட இஷ்டத்துக்கு ஆடி, அதை கொடுத்திட்டேன்” சிரித்துக் கொண்டான்.
“…” ‘எப்டி இவனால இந்தளவுக்கு யோசிக்க முடியுது’
“கண்ணாமூச்சு ஆட எனக்கு இஷ்டமில்லை. நான் இயல்பா வந்து எல்லாம் பண்ணேன். ஆனா உனக்கு என்னோட கைகோர்த்துக்க ஏதோ சங்கடம். சோ அவாய்ட் பண்ண… பண்ற?!”
“…”
“குழப்பத்தினாலயோ, ஏதோ சங்கடத்தினாலயோ, என்னை தவிர்க்க நினைக்கிற, உன் மனசுக்குள்ள நான் இருக்கிறேன்னு எனக்குத் தெரியுது!”
“…” இந்த வார்த்தைகளை அவன் சொல்லும்போது, ‘உண்மைதான்’ என அவனோடு ஒண்டிக்கொள்ள மனம் பரபரத்ததை, அடக்கியவாறு அமர்ந்திருந்தாள் திவ்யா.
“ஆனா அதை ஏத்துக்க ஏன் உன்னால முடியலைனு சொன்னா, நான் உன்னைத் தொந்திரவு பண்ணலை”
“…”
“எதாவது பேசு திவ்யா”
“…”
“இப்டியே மௌன வேசம் போட்டா, எனக்குப் பிடிக்காது. மத்தவங்களுக்கு வேணா நான் செய்தது அதிகப்படியா இருக்கலாம். ஆனா நான் எப்படிவும் இப்டித்தான். உன்னைக் கட்டாயப்படுத்தற ஐடியா கிடையாது. இன்னொன்னு நீ பாத்ததால மட்டும் உன்னை நெருங்கல. பரிதாபமெல்லாம் கிடையாது. எனக்கும் பிடிச்சது. சோ…”
“…”
“நானா இப்டி இருக்கலாம்னு சொல்றது, ஒரு அனுமானந்தான். அது உண்மையா, இல்லையானு உன் மனசுக்கு மட்டுந்தான் தெரியும்!”
“…”
“மூனு அக்காவுக்கு நான் ஒரே தம்பி. அவங்களோட ஒவ்வொரு அசைவும் எதுக்கு, ஏன்னு, ஸ்டடி பண்ணதை வச்சி, உனக்கும் அப்டி இருந்திருக்கலாம்னு யூகிச்சு சொன்னது உண்மையா இருக்கணும்னு, எந்தக் கட்டாயமும் இல்லை. எதாவது வாயத் திறந்து பேசு திவ்யா”
“…”
பெஞ்சின் மீது வைத்திருந்த அவளது கை விரல்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா. கிருபாவின் கவனமும் அதில் செல்ல, பதில் பேசாதிருந்தவளின் வாளிப்பான நீள விரல்களை, பொக்கிசம்போல கைகளுக்குள் கொண்டு வந்தான்.
பதற்றத்தோடு கிருபாவைக் கவனிக்க, அவன் விரல்களை இறுகப் பற்றியபடியே அதனை நோக்கிக் குனிய, அதேநேரம் திவ்யா கைகளை இழுக்க, விடாமல் அதில் தனது முதல் முத்திரையைப் பதித்தான்.
இதழ் ஸ்பரிசத்தில் எழுந்த மேனியின் சிலிர்ப்பை உள்வாங்க இடங்கொடாது, அவன் நிமிருமுன், கைகளை உருவிக் கொண்டவள், ஓங்கி கிருபாவின் கன்னத்தில் அறைந்திருந்தாள்.
“இப்டி எதாவது நான் பண்ணாத்தான் பேசற, இல்லைனா… இப்டி எதாவது ரியாக்ட் பண்ற” கன்னத்தைத் தேய்த்தபடியே, இதழில் தோன்றிய இளநகையோடு பேசினான் கிருபா
“…” கை எரிய, அவனையும் கையையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தாள் திவ்யா. ‘மடையா உன்னை அடிச்சதை ஏதோ கிஸ் பண்ணமாதிரி ஈஸியா எடுத்துட்டு இன்னும் பேசிட்டே போற’ என்பதாக இருந்தது திவ்யாவின் பார்வை.
“கையால சொல்லச் சொல்லலை. வாயால பதில் சொல்லு” விடாமல் கேட்டான்.
“அப்டியெல்லாம் எதுவும் என் மனசுல இல்லை. இனி என்னைத் தொந்திரவு பண்ணாத. மீறி பண்ணா ஹராஸ்மெண்ட்னு கம்ப்ளைண்ட் பண்ணுவேன்” குனிந்தபடியே, தான் அவனிடம் கூற எண்ணியதைக் கூறிவிட்டாள்.
“…”
“…”
“தேங்க்ஸ் திவ்யா” அவளது வலக்கையை தானாகவே பிடித்துக் கைகுலுக்கியவன், எழுந்து வகுப்பறையை விட்டு வெளியே சென்று விட்டான்.
கிருபாவிற்கு அவன் சொற்ப நாளில் வளர்த்த நேசத்தை கரையேற்ற இயலாத வலி. அதைச் சரிசெய்ய வேண்டிய, ஆயத்தங்களைத் தேடி வெளியே விரைந்தான்.
நெஞ்சை அடைப்பதுபோல உணர்வு தோன்ற, மூக்கால் மட்டுமன்றி, வாயாலும் காற்றை உள்வாங்கி, தன்னை ஆசுவாசப்படுத்தினான்.
முகத்தைக் கழுவி வந்தவன், கேண்டின் சென்று, ஒரு டீயை வாங்கி மெதுவாக அருந்தினான்.
வகுப்பறையில் மாணவர்கள் வரும்வரை வளாகத்தினுள் வளைய வந்தான். ஒரு முடிவோடு வகுப்பறையை நோக்கி வந்தான் கிருபா.
திவ்யா இனி என்ன செய்யப் போகிறாள். கிருபாவின் முடிவு என்னவாக இருக்கும்?
…………………………
ஜெகன், தனது பயணத்தை துவங்கியிருந்தான்.
ஈஸ்வரியைச் சந்தித்து, “அத்தாச்சி, போன தடவை மாதிரியே, இந்தத் தடவையும் அம்மா பேருல பணத்தை அனுப்புறேன். அது கொண்டு வந்து தந்திரும்”
“உங்க தோதுப்பா. நீங்க அனுப்புங்க. அத்தை குடுக்கறதை, நான் கட்டிறேன்”
“சரி அத்தாச்சி”
“நல்ல சம்பளமா அங்க”
விசயத்தைக் கூற, சட்டென்று இரண்டாண்டுக்கு கணக்கு போட்ட ஈஸ்வரிக்கு, கையில் இன்னும் தொகை இவ்வளவு இருக்க வேண்டுமே என்று தோன்றியது.
பெண் ஒரு விசயத்தை அறிந்து கொள்ள அணுகினால், அதில் அவளுக்கோ, அவளைச் சார்ந்தவர்களுக்கோ ஆதாயம் கிட்டுமா என்கிற நோக்கத்தைத் தவிர வேறு என்ன இருந்துவிட வாய்ப்பிருக்கிறது.
ஈஸ்வரிக்கும் அதே எண்ணந்தான். உடனே செயலாக்க எண்ணவில்லை.
காளியம்மாள் இல்லாமல் தனித்து வந்திருந்த ஜெகனிடம், “தம்பி, நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. அத்தைகிட்ட இதப்பத்தி எதுவும் கேட்டுக்க வேணாம்” பீடிகையோடு ஆரம்பிக்க
“சொல்லுங்க அத்தாச்சி”
“அத்தைகிட்ட நகை இருந்தா, அடகு வச்சிட்டு, பயணம் போனபின்ன, காசு வந்ததும், திருப்பியிருக்கலாம்ல. இந்தத் தடவையும், ஏன் கடன் வாங்கி போகணும்னு நினைச்சீங்க”
“அதுகிட்ட இருந்தா தராம, என்ன செய்யப் போகுது அத்தாச்சி”
“வெளிநாட்டுல இருந்த பணங்காசை அனுப்புங்க. அதுக்காக உங்க கையிலயும், கொஞ்சம் காசு பணம் போட்டு வச்சிக்கங்கப்பா”
“சரி அத்தாச்சி”, என்றவன், “ஏந்தாச்சி, கடன் கேக்குமுன்ன இதப்பத்தி சொல்லாம, இப்பச் சொல்றீங்க”
“மொத தடவை பாத்தப்ப, அத்தை கழுத்துல மூனு செயினு பாத்தேன். அடுத்த தடவை கடன் வாங்க வந்தப்ப, தாலிச் செயினைத் தவிர, வேற எதுவும் போடாம வந்தாக”
“…”
“…புள்ளைக சூது வாதில்லாம இருக்குதுன்னு ஒரேடியா நாமத்தைப் போட நினைக்கிற பெத்தவுகளும் இருக்காக”
“…”
“அப்பன் ஆத்தா சம்பாத்தியம் பண்றாகன்னு, வேலைக்கே போகாம, ஏமாத்திட்டு திரியற புள்ளைகளும் இருக்கு”
“…”
“அதான் சூதனமா இருக்கச் சொல்றேன். ஆத்துல போட்டா மட்டும் அளந்து போடணும்னு இல்லைப்பா. எங்கையுமே அளந்துதான் செய்யணும். கணக்கு வச்சிக்கங்க. இதை அத்தைகிட்ட கேட்டுக்கிற வேணாம்” சிரித்தபடியே ஈஸ்வரி விடைகொடுத்தார்.
ஈஸ்வரியின் வார்த்தைகளை யோசித்தபடியே, பயணத்தைத் துவங்கியிருந்தான் ஜெகன்.
கடனை அடைத்தபின், வீடு வேலை ஆரம்பிக்க எண்ணியிருந்தார்கள் அவனது பெற்றோர். வெளிநாடு சென்றதும், பயண முடிவை பகிர்ந்து கொண்டிருந்தான்.
சில யோசனைகளும், ஈஸ்வரியின் பேச்சிற்குபின் மனதில் எழ, அதற்கேற்ப முடிவெடுத்திருந்தான் ஜெகன்.
…………………