இந்திரனின் சுந்தரியே

இந்திரனின் சுந்தரியே

🏹🏹16💘💘

தண்ணீரின் அடியில் நின்றுக் கொண்டிருந்தவளுக்கு நெஞ்சம் முழுவதும் வலி மட்டுமே நிறைந்து வழிந்தது.. சந்தோஷமாக துவங்கிய நாளும் அந்த இரவும், இறுதியில் முடிந்த விதம் மனதினில் ரணத்தைக் கொடுக்க, சுந்தரி சுவற்றில் முட்டிக் கொண்டு அழத் துவங்கினாள். அதுவும் இந்திரன் கூறிய வார்த்தைகள் அவளைத் அதனுள் புதைத்துக் கொண்டிருந்தது.. 

‘என்னை கொண்டு விடத் தான் அந்த நேரத்துல என்னைப் பத்தி கேட்டீங்களா இந்தர்? உங்களுக்கு அப்போ நான் முக்கியமா இல்லையா? எப்படி இந்தர் உங்களுக்கு என்னை அனுப்ப மனசு வந்தது? எனக்கு புரியவே இல்லையே இந்தர்? உன்னை விட்டு ஒரு நிமிஷம் இருக்க முடியாதுடின்னு சொல்லி கொஞ்ச நேரத்துலையே என்னை போன்னு சொல்லிட்டீங்களே.. எப்படி இந்தர்?’ மீண்டும் மீண்டும் மானசீகமாக அவனிடம் அவள் பேசிக் கொண்டிருக்க, பாத்ரூம் கதவு படபடவென்று தட்டப்பட்டது.. 

‘ச்சே.. குளிக்க கூட நிம்மதியா விட மாட்டாங்க போல..’ மனதினில் நினைத்துக் கொண்டவள், சொட்டச் சொட்ட ஈரம் வழிய பாத்ரூம் கதவைத் திறக்கவும், அவளைப் பார்த்த வத்சலா, அவளை முறைத்து,   

“இங்க இருக்கற ஹோட்டல் காம்ப்ளக்ஸ்ல இருந்து உனக்கு டிரஸ் வாங்கி வச்சிருக்கேன்.. வந்து போட்டுக்கோ.. நீயும்.. நீ போட்டு இருந்த நைட்டியும்.. ஏண்டி உனக்கு நைட்டியே எவ்வளவு விலைல வாங்கித் தருவேன்.. அதுல எல்லாம் இல்லாதது என்னடி அந்த இத்துப் போன நைட்டில கண்ட?” கோபமாக பொறியவும், அமைதியாக நின்று தோளைக் குலுக்கியவள்,  

“அதை வாங்கித் தந்தவங்க அன்பு.. அது எல்லாம் உங்களுக்கு புரியாது.. உங்க டிக்சனரிலையே அந்த வார்த்தை இல்ல.. இப்போ எனக்கு ரொம்ப டயர்ட்டா இருக்கு.. எனக்கு தூங்கனும். இப்படியே நீங்க நின்னுட்டு இருந்தா நான் அப்படியே பாத்டப்ல படுத்து தூங்கறேன்.. இல்ல வழி விட்டா டிரஸ் மாத்திட்டு தூங்குவேன்.. என்ன சொல்றீங்க?” பல்லைக் கடித்துக் கொண்டு அவள் கேட்க, வத்சலா நகர்ந்து வழி விட்டார்..   

அவர் அங்கேயே இருக்கவும், “நீங்க எல்லாம் வெளிய போங்க.. நான் பார்த்துக்கறேன்..” அவள் சொல்லவும், வத்சலா அவளைப் பார்த்துக் கொண்டே அந்த அறையில் இருந்த வரவேற்பறைக்கு சென்று அமர்ந்துக் கொள்ள, பட்டென்று கதவை சாத்திக் கொண்டவள், மீண்டும் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள். தண்ணீரின் அடியிலேயே தவமிருப்பவள் போல நின்றவளுக்கு இந்திரனின் வார்த்தைகள் தான் ஆற மறுப்பதாய்.. 

மீண்டும் கதவு தட்டப்படும் சத்தத்தில் தலையில் அடித்துக் கொண்டு வெளியில் வந்தவள், வத்சலா வாங்கி வைத்திருந்த உடையை பார்க்கவும், இதழ்களில் இகழ்ச்சிப் புன்னகை அரும்பியது.. நவநாகரீகமாக அவர் வாங்கி வைத்திருந்த உடையைப் அணிந்துக் கொண்டவளுக்கு, உடலும் மனதும் வலிப்பதாய்..  

‘இவங்க எல்லாம் எங்க திருந்தப் போறாங்க..’ என்று நினைத்துக் கொண்டவள், தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துவிட்டு, அந்த அறையின் கதவைத் திறக்க, அவளை மேலிருந்து கீழாகப் பார்த்த வத்சலா, 

“இப்போ தான் நீ என் பொண்ணு மாதிரி இருக்க.. இந்த மார்டர்ன் டிரெஸ்க்கு இந்த மஞ்சள் கயிறு கன்றாவியா இருக்கு.. அதை மட்டும் எடுத்துட்டன்னு வையேன்.. நீ ரொம்ப அழகு சுந்தரியாவே இருப்ப..” என்றபடி வத்சலா நைசாக அவளது கழுத்தில் இருந்த மாங்கல்யத்தைக் கழட்டப் போக, சுந்தரி பட்டென்று அவரது கையைத் தட்டி விட்டாள்.. 

“கையை எடுங்க.. இதுல இருந்து கையை எடுங்க..” சுந்தரி உறுமிய உருமலில் வத்சலாவின் கை தானாக விலகியது.. 

அவளை நைசாக பேசி தான் அதை கழட்டச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டவரின் மனதினில் பல கணக்குகள் ஓடத் துவங்கியது.. ‘எப்படியும் இவங்க வீட்லயோ, கோயில்லயோ தானே செஞ்சிருப்பாங்க.. இத கழட்ட வச்சிட்டு இவங்க கல்யாணம் பண்ணின தடயம் இருந்தா அதையும் அழிச்சிட்டா.. இவ என்ன பண்ணுவாளாம்? போயும் போயும் கல்யாணம் பண்ணி இருக்காப் பாரு ஒரு காய்காரனை.. அதுவும் அந்த ஏரியால இருக்கறவனை போய்.. இவ புத்தி ஏன் இப்படி போச்சு? கல்யாணம் பண்ணினதோட நிறுத்தினாளா? இல்ல.. எல்லாமே ஆச்சா? அப்படி ஏதாவது ஆகி இருந்தா.. இப்போ இவன் வேற குதிப்பானே.. ஏற்கனவே முழுசா வேணும்.. முழுசா வேணும்ன்னு அவன் சொல்லிட்டு இருக்கான்.. இவ என்ன ஆப்பிளா? அப்படியே கொடுக்க..’ மனதினில் நினைத்துக் கொண்டவர், சுந்தரியின் கன்னத்தை செல்லமாக தடவத் துவங்கினார். 

சுந்தரி அவரைக் கேள்வியாகப் பார்க்க, “நீ மாடர்ன் டிரஸ் எல்லாம் போடும்போது இப்படி இருந்தா நல்லா இருக்காது.. அதனால தான் சொல்றேன்.. நம்ம கடையில இருந்து நாம வைர முகப்பு வச்ச செயின் எடுத்து, அதுல இந்த திருமாங்கல்யத்தை கோர்த்துக்கலாம்.. உனக்கு வேணும்ன்னா நான் அதுல விதம் விதமா டைமண்ட்ஸ் வச்சுத் தரச் சொல்றேன்.. ஏன் உனக்கு பிடிச்ச கலர் டைமண்ட்ஸ் கூட வச்சுத் தரேன்.. என்ன? அது போட்டா தான் நீ மாடர்ன் டிரஸ் போட்டு போகும்போது.. ஆபீஸ் போகும் போதும் கெத்தா இருக்கும்.. நாம இன்னைக்கு சாயந்திரமே கடைக்கு போய் எடுத்துக்கலாம். இப்போ இது இந்த டிரஸ்க்கு சூட் ஆகல.. அதனால கழட்டி வச்சிடு.. இது இருந்தா தான் நீ கல்யாணம் ஆனவன்னு அர்த்தமா என்ன? எல்லாமே நம்ம மனசுல தான் இருக்கு..” அவர் நைசாக பேசி அவளை மசிய வைக்க நினைக்க, சுந்தரி அவரை நக்கலாகப் பார்த்தாள்.   

“உங்களுக்கு இதோட அருமை தெரியுமா மாம்?” சுந்தரியின் கேள்விக்கு, வத்சலா சுந்தரியை கோபமாகப் பார்த்து, 

“நானும் கல்யாணம் ஆகி உன்னைப் பெத்தவ தாண்டி..” என்ற அவரது பதிலில்,  

“ஓ.. அப்படியா? ஆனா.. நீங்க அதை எல்லாம் பெரிய விஷயமா நினைச்சது இல்லன்னு மட்டும் எனக்குத் தெரியும்.. ஆனா.. நான் அப்படி இல்ல.. நான் திவ்யசுந்தரி இந்திரன்.. இது அவர் கட்டின தாலி.. இதுக்கு மாடர்ன் டிரஸ் சரி இல்லன்னா பரவால்ல.. நான் புடவை கட்டிக்கிட்டு போறேன்.. இதை நான் கழட்ட மாட்டேன்.. நீங்க என்ன ப்ளான் பண்ணி.. எது செஞ்சாலும் ஒண்ணும் நடக்காது.. அதையும் மனசுல பதிய வச்சிக்கோங்க.. நான் இதை என் உயிரா மதிக்கிறேன்.. ஏன்னா நான் ஆசைப்பட்டு கட்டிக்கிட்ட தாலி..” என்றவள், அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்து, ரிசப்ஷனுக்கு அழைத்தாள். 

“ஹலோ.. எனக்கு ஒரு டாக்சி வேணும்.. கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணிட்டு சொல்லுங்க..” என்றவள், வத்சலாவை ஒரு வெறுப்புப் பார்வை பார்த்துவிட்டு, சோபாவின் பின் பக்கம் சாய்ந்துக் கொண்டு கண்களை மூடிக் கொள்ள, அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.. 

அவளது கண்ணீரைப் பார்த்தவர், “அவன் எல்லாம் உன்னோட கண்ணீருக்கு தகுதியானவனே இல்ல சுந்தரி. எப்படி என்னைப் பார்த்ததும், ரெண்டு தட்டு தட்டின உடனே பயந்துக்கிட்டு உன்னை வீட்டுக்கு அனுப்பினான் பார்த்தியா? நாளைக்கு பாரு உன்னை விடணும்ன்னா இவ்வளவு பணம் வேணும்ன்னு பேரம் பேசுவான்.. உன்னை விட்டுட்டு வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் சந்தோஷமா இருப்பான்.. 

அவங்க எல்லாம் அப்படித் தான்.. பொண்டாட்டி செத்த மறுநாளே வேற புது கல்யாணம் பண்ணிப்பாங்க.. இப்போவே கூட அவன் நிம்மதியா கிளம்பி இருப்பான்.. நீ தான் என்னவோ ஃபீல் பண்ணிட்டு இருக்க” அவரின் வார்த்தைகளைக் கேட்டவள், இகழ்ச்சியாக புன்னகைத்து, 

“அப்படியா?” என்று படு நக்கலாகக் கேட்க, அதைப் பார்த்தவர் மேலும் கொதித்து, 

“உனக்கு அவன் சொன்னது கேட்டுச்சா இல்லையா? உன்னை இன்னிக்கு நம்ம வீட்ல கொண்டு விடலாம்ன்னு பார்த்தேன்னு சொன்னான் இல்ல.. கொண்டு விட்டுட்டு பணம் கேட்டு இருப்பான்.. அதுக்குத் தான் இந்த கல்யாண டிராமா எல்லாம்.. நான் சொல்றேன்.. நல்லா எழுதி வச்சிக்கோ.. நாளைக்கு இல்லன்னாலும் இன்னும் ஒரு வாரம் பொருத்து பணம் கேட்டு என்னை ப்ளாக்மெயில் பண்ணுவான் பாரு.. நீ என்னவோ கணவனே கண் கண்ட தெய்வம்ன்னு இந்த கயிற பிடிச்சிக்கிட்டு தொங்கற.. அவன் என்னடான்னா..  உன்னை வச்சு அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்ன்னு பார்த்து இருக்கான்.. அவனை எல்லாம் நம்பிட்டு இருக்கியே.. உன்னை என்ன சொல்றது? அவன் நல்லா பிளான் பண்ணித் தான் உன்னை கவுத்து இருக்கான்.. உன்னைப் பார்த்தாலே பெரிய வீட்டு பொண்ணுன்னு தெரிஞ்சு இருக்குமே.. எப்படியும் ஏதாவது தேறிடும்ன்னு கனிச்சு இருப்பான்.. அந்த கிளாஸ் ஆளுங்களே அப்படித் தான்..” பதிவிசாக பேசி, சுந்தரியை மனம் மாற்ற நினைக்க, பட்டென்று எழுந்து நின்றவள், 

“உங்களுக்கு இந்தரைப் பத்தி எதுவும் தெரியாது.. சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாதே.. அவர் இல்லன்னா நான் எல்லாம் இத்தனை நேரம் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்.. என்னை என்னைக்குமே அவர் கவுக்க நினைச்சது இல்ல.. நீயே கூப்பிட்டு பேசினாலும் எனக்கு பணம் வேண்டாம்ன்னு சொல்ற ஆளு தான் அவரு. உங்க கனவை மூட்டை கட்டி வச்சிட்டு அடுத்த பிளைட்ல மலேசியாக்கு போற வழியைப் பாருங்க.. அங்க உங்களுக்காக பலர் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. அப்பறம் இன்னொன்னு.. நீங்க வேற ஏதாவது அவருக்கு குடைச்சல் கொடுத்து வேற ஏதாவது செய்யலாம்ன்னு பிளான் பண்ணினா அப்பறம் நான் சும்மா இருக்க மாட்டேன்.. நான் எந்த எக்ஸ்ட்ரீம்க்கும் போவேன்.. நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு..” என்றவள், மீண்டும் ரிசப்ஷனுக்கு அழைக்க, சிறிது நேரத்தில் கார் வந்துவிடும் என்று அவர்கள் சொல்லவும், கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள். 

“நான் கிளம்பறேன்..” சுந்தரி நகர, 

“உன்கிட்ட பைசா கூட இல்ல.. நீ பாட்டுக்கு டாக்சி புக் பண்ணிட்ட? அங்க போய் உனக்கு பைசா கொடுக்க அவனுக்கு பைசா இருக்கா என்ன?” நக்கலாக வத்சலா கேட்க, 

“நான் போனா கண்டிப்பா பணம் தந்து டாக்சி கட் பண்ணுவார்.. என்னை சந்தோஷமா வச்சுக்கற அளவுக்கு அவர் சம்பாதிக்கிறார்.. ஆனா.. இப்போ நீங்க அந்த அளவுக்கு எல்லாம் யோசிக்க வேண்டாம்.. நான் போறது நம்ம வீட்டுக்கு..” என்றவள், மீண்டும் போனை எடுக்க, வத்சலா அவளை கேள்வியாகப் பார்த்தார்.. 

போனை எடுத்தவள், “எனக்கு இந்த நம்பருக்கு கனெக்ட் பண்ணிக் கொடுங்க.” ஒரு நம்பரைச் சொல்லிவிட்டு அவள் காத்திருக்க, அந்த நம்பர் கிடைத்ததும், 

“ஹலோ தாத்தா.. நான் தான் சுந்தரி பேசறேன்.. இப்போ வீட்டுக்கு கிளம்பி வந்துட்டு இருக்கேன்.. என் கைல பைசா இல்ல.. நான் வந்ததும் டாக்சிக்கு பணம் கொடுத்து கட் பண்ணனும்.. நான் அங்க வந்து எல்லா விஷயமும் சொல்றேன்..” என்று சொன்னவள், அவர் சொன்ன பதிலில், போனை வைத்து, வத்சலாவைப் பார்த்துவிட்டு, அந்த அறையை விட்டு வெளியில் சென்றாள். 

“ஏய்.. ஏய் நில்லுடி.. நீ பாட்டுக்கு கிளம்பிப் போற?” வத்சலா அவளைத் தடுக்க, அங்கு அவர்களைப் பார்த்துக் கொண்டு, அடுத்த அறையில் அமர்ந்திருந்த ராஜீவ், சுந்தரியின் கையைப் பிடித்து தடுக்க, அவனைப் பார்த்து முறைத்தவள், அவனது கையை தனது பலம் கொண்ட மட்டும் வேகமாக தட்டி விட்டவள், அதே வேகத்துடன் அந்த அறையை விட்டு வெளியில் சென்றாள். 

“இவளுக்கு என்ன திமிரு பார்த்தியா?” ராஜீவிடம் வத்சலா கேட்க, 

“திமிரா.. உடம்பு முழுக்க கொழுப்பு.. உன் பொண்ணுக்கு ரொம்ப கொழுப்பு கூடிப் போச்சு.. என்ன திமிரா பேசறா தெரியுமா? அந்த ஆளு நல்லா இவளுக்கு இடம் கொடுத்து வச்சிருக்கான்.. எப்படி புள்ளைப் பூச்சி போல இருந்தவ.. இப்போ எப்படி இருக்கா பாரு.. கையை என்ன கோபமா தட்டி விடறா தெரியுமா?” ராஜீவ் பொருமிக் கொண்டிருக்க, வத்சலா அவனைப் பார்த்தார்.. 

“இங்கப் பாரு.. அவன் மேல இவளும் கொஞ்சம் கோபமா இருக்கான்னு நினைக்கிறேன்.. இந்த சான்ஸ் பயன்படுத்தி எப்படியாவது நீ அவளை சரி பண்ணற வழியைப் பாரு.. இப்போ போய் அவளை வீட்டுல நீயே விடறேன்னு கொண்டு விடு. மெல்ல அப்படித் தான் நீ அவ மனசுல நல்ல விதமா பதிய முடியும்.. முன்ன போல அவளை போர்ஸ் பண்ண நினைக்காதே.. மெல்ல தான் நீ அவளை கவுக்க முடியும்..” வத்சலா சொல்லச் சொல்ல, அவன் தாடையைத் தடவிக் கொண்டு அங்கிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டான்.. 

“நான் என்ன அந்த ஆளை விட பர்சனாலிட்டியா இல்லையா? ஒட்டடை குச்சிக்கு கைக் கால் முளைச்சா போல இருக்கான்.. அவனைப் போய் எப்படி உன் பொண்ணுக்கு பிடிச்சது? நீ போர்ஸ் பண்ணாதே.. பண்ணாதேன்னு சொல்றதுனால தான் விடறேன்.. அவளும் அவ டேஸ்ட்டும்.. அவ மட்டும் என் கைக்கு கிடைக்காம போனா.. உன்னை என்ன பண்ணுவேன் தெரியும்ல.. இப்போ எனக்கு வெளிய வேலை இருக்கு.. நான் கிளம்பறேன்..” என்றவன், அங்கிருந்து நகர்ந்து செல்ல, வத்சலா தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தார். 

“இவன் நம்ம பொழப்பையே கெடுத்துடுவான் போல.. நான் பாட்டுக்கு அப்படி இப்படின்னு பிசினசையும் பார்த்துக்கிட்டு சந்தோஷமா சுத்திட்டு இருந்தேன்..  இவன்கிட்ட மாட்டிக்கிட்டு இப்படி முழிச்சிட்டு இருக்கேனே.. எல்லாம் என் விதி..” என்று நொந்துக் கொண்டவர், ஒரு மதுக் கோப்பையை எடுத்து நிரப்பி தனது தொண்டையில் சரித்துக் கொண்டார்..

ஹோட்டல் லாபியில் காருக்காக சுந்தரி அமர்ந்திருக்க, அவள் அருகில் சென்ற, “என்ன இங்க வந்து உட்கார்ந்துட்ட? வா டார்லிங். நான் உன்னை கூட்டிட்டு போய் வீட்ல விடறேன்.. எனக்கு அதை விட என்ன வேலை இருக்கு சொல்லு? நான் இருக்கும் போது எதுக்கு வெளிய இருக்கற கார்ல எல்லாம் போய்க்கிட்டு இருக்க.. என் கார் கப்பல் மாதிரி இருக்கும்போது என் கூட வரலாம்ல.. என்ன இந்த நாலு மாசத்துல உனக்கு சுகமான கார் எல்லாம் மறந்து போச்சா? வேணா உன்னோட மனசு சேஞ்காக கொஞ்ச தூரம் எங்கயாவது லாங் டிரைவ் போயிட்டு வரலாமா?” அவள் அருகில் அமர்ந்தபடி ராஜீவ் கேட்க, அவனைப் பார்த்துக் கொண்டே கால் மீது கால் போட்டுக் கொண்டவள், 

“எனக்கு சுகமான சொகுசு கார் எல்லாம் மறக்கல.. அந்த சுகமான கார் சவாரி எல்லாம் வேண்டாம்ன்னு தானே நானே போனேன்.. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த கார் சவாரியை விட பைக் சவாரி அவ்வளவு சுகம் தெரியுமா? அதுவும் மனசுக்கு பிடிச்சவங்க பின்னால உட்கார்ந்து கதை பேசிட்டு போறது எவ்வளவு சுகமா இருக்கும் தெரியுமா? இந்த கார்ல கிடைக்காத பாதுகாப்பு எனக்கு அதுல கிடைக்கும்..”என்றவளின் தொண்டை அடைக்கத் துவங்கியது.. 

அதை அவன் முன்பு காட்டிவிடாமல், சாதாரணம் போல காட்டிக் கொண்டவள், அவனைப் பார்க்க, “உன்னை அவன்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்தும் உனக்கு என்ன திமிரு பாரு.. உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகும்ல.. அப்போ உனக்கு இருக்குடி..” அத்தனை நேரம் அவளிடம் பதிவிசாக பேசிக் கொண்டிருந்தவன், இப்பொழுது அவளை மிரட்ட,     

“ஒருநாளும் நீயும் எங்க அம்மாவும் நினைக்கிறது நடக்காது.. நீ எந்த லாங்டிரைவ்க்கு கூப்பிடறன்னு எனக்குத் தெரியும்.. அது நான் உயிரோட இருக்கற வரை நடக்காது புரியுதா? இந்த ஜென்மத்துல என்னோட புருஷன் இந்தர் மட்டும் தான்.. நான் அவருக்கு மட்டும் தான்.. என்னோட உயிர் அவர் தான்.. அதை உங்களால மாத்த முடியாது.. திரும்பவும் சொல்றேன்.. வேற ஏதாவது இடக்கா செஞ்சு அவங்களுக்கு குடைச்சல் கொடுத்தீங்கன்னு எனக்குத் தெரிஞ்சது.. நான் என்ன செய்வேன்னே தெரியாது.. அது தான் நினைச்சதை சாதிச்சுட்டீங்க இல்ல.. என்னையும் அவரையும் பிரிச்சாச்சு இல்ல.. அவர் வாயில இருந்தே என்னை போகச் சொல்லிட்டீங்க இல்ல.. அதோட விட்டு உங்க பிசினசைப் பாருங்க.. எனக்கும் அடுத்த வேலை இருக்கு..” பல்லைக் கடித்துக் கொண்டு அவன் மீதான வெறுப்பை அவள் உமிழ, ராஜீவ் அவளை நக்கலாக பார்த்து சிரித்துக் கொண்டே நின்றான்.. 

அவனது பார்வை அவளது உடலில் மேய, சுந்தரி முகத்தை அசூசையாக வைத்துக் கொள்ள, “என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு புருஷனோட சந்தோஷமா வாழ முடியலைன்னு வருத்தமா இருக்கா? நான் எதுக்கு இருக்கேன்?” என்றவன், 

“அந்த ஆளு உன்னை நல்லா தான் கவனிச்சுக்கிட்டான் போல.. நேத்து செம ஜாலியா? பின்ன உன்னைப் போல பொண்ணு கிடைச்சா சும்மா விட்டா அவன் எல்லாம் ஒரு ஆளே இல்ல.” அவன் தங்களது அந்தரங்கத்தைப் பேசத் துவங்கவும், சுந்தரி முகத்தை சுளித்து, 

“கொஞ்சம் உன்னோட வாயை மூடிக்கிட்டு எங்கயோ அவசரமா போயிட்டு இருந்தீங்களே.. அங்க போங்க.. என்னையும் என் புருஷனையும் பத்தி பேச வேண்டாம்.. அதுக்கு உனக்கு எல்லாம் தகுதி இல்ல.. கிளம்பு.. இடத்தை காலி பண்ணு..” பல்லைக் கடித்துக் கொண்டு வார்த்தைகளை துப்ப, அதற்கும் அசராமல் நின்றவன்,   

“ஹ்ம்ம்.. உன்னை அவன் நல்லா பார்த்துக்கிட்டு.. நல்ல கும்முன்னு ஆக்கி வச்சிருக்கான் டார்லிங்.. அப்படி என்ன உன்னை அவன் கவனிச்சுக்கிட்டான்.. அந்த ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லேன்.. நானும் கொஞ்சம் கத்துப்பேன் இல்ல.. நிஜமா எனக்கு புரியவே இல்ல.. அவன் எல்லாம் எப்படி உனக்கு பிடிச்சது?” அவனது கேள்விக்கு, உதட்டைப் பிதுக்கியவள், 

“உனக்கு அது எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது.. விடு..” என்றவள், கை மறைவில் ஒரு கொட்டாவியை வெளியேற்றினாள்.   

“ஹ்ம்ம்.. உன் முகம் எல்லாம் நிஜமாவே எவ்வளவு அழகா இருக்குத் தெரியுமா? கொஞ்சம் என் கூடையும் தான் வாயேன்.. கார்ல அப்படியே போயிட்டு வரலாம்.. அப்பறம் சொல்லு கார் சொகுசா? இல்ல பைக் சொகுசான்னு..” ராஜீவின் இரட்டை அர்த்தப் பேச்சில் அவனைப் பார்த்து முறைத்தவள், 

“உன்னை எல்லாம் திருத்த முடியாது.. நீங்க எல்லாம் மனுஷப் பிறவியே இல்ல..” என்று உருமியவள், 

“இந்தர் கூட நடந்து போனாலும் நான் சந்தோஷமா போவேன்டா.. அந்த இது எல்லாம் உனக்கு சுட்டுப் போட்டாலும் வராது.. முதல்ல ஒரு பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கணும்ன்னு தெரிஞ்சிக்கோ.. அப்பறம் கார்ல பிக்கப் பண்றதைப் பத்தி பேசுவியாம்.. ஆனா.. அந்த பொண்ணா நான் இருக்க முடியாது.. பை..” கடுப்புடன் சொன்னவன்,  வேகமாக அங்கிருந்து நகர்ந்து ரிசப்ஷனுக்குச் சென்று காரைப் பற்றி விசாரித்துவிட்டு, ஹோட்டலை விட்டு வெளியில் செல்ல, ராஜீவ் தோளைக் குலுக்கிக் கொண்டு, அவனது காருக்குச் சென்றான்.          

கார் செல்லச் செல்ல சுந்தரியின் மனம் இந்திரனிடம் சென்று விடத் தவித்தது.. ‘இப்படியே நான் உங்க கிட்ட வந்துடறேன் இந்தர்? ஆனா.. நான் தவிக்கிற அளவுக்கு கூட நீங்க தவிக்கல இல்ல. என்னை வேண்டாம்ன்னு அனுப்பிட்டீங்க இல்ல.. எனக்கும் நீங்க வேண்டாம் இந்தர்.. உங்களால என்னை விட்டு இருக்க முடியும் இல்ல.. என்னாலயும் இருக்க முடியும்..’ வீம்பாக நினைத்துக் கொண்டவளின், ஒரு மனம் முரண்டுப்பிடித்துக் கொண்டிருக்க, இன்னொரு மனம் அவனிடம் சென்றுவிடத் தவித்துக் கொண்டிருந்தது.. 

கார் ஜன்னலின் வழியே வெறித்துக் கொண்டிருந்தவளின் மனதில் இந்திரனை சந்தித்த தினத்தில் இருந்து ஓடத் துவங்கியது.. அணுஅணுவாக அந்த நிமிடங்களை அசைப்போட்டுக் கொண்டு வந்தவளுக்கு, அவனது கைகளில் தவழ்ந்து குழைந்தது நினைவு வரவும், மீண்டும் கண்களில் கண்ணீர் துளிர்த்து.. அனிச்சை செயலாக வயிற்றின் மீது கை வைத்தவளுக்கு ஒரு விரக்திச் சிரிப்பே மிஞ்ச, ஒரு பெருமூச்சுடன் கண்களைத் துடைத்துக் கொண்டு, மீண்டும் சாலையை வெறிக்கத் துவங்கினாள். 

பின்பக்கக் கண்ணாடியின் வழியே அவளது முகக் கசங்கல்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்த அந்த டிரைவருக்கு, அவளது கழுத்தில் இருந்த புது மஞ்சள் தாலியும், அவள் கையில் பை கூட இல்லாமல் காரில் ஏறியதும் ஒரு மாதிரி விஷயத்தை உணர்த்த, அவளது நிலையைப் பார்த்து மனதில் வருந்தினார். 

அவள் சொன்ன இடம் வந்ததும், டிரைவர் அவளைத் திரும்பிப் பார்க்க, வந்த இடம் கூட அவள் உணராமல் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவருக்கு அவள் மீது இறக்கம் சுரந்தது..  ‘மேடம்..” அவர் மென்மையாக அழைக்கவும், கண்களைத் திருப்பி கேள்வியாக அவரைப் பார்த்தவளிடம், 

“நீங்க சொன்ன இடம் வந்துடுச்சு.. எந்த வீடுன்னு சொல்லுங்க..” அவர் சொல்லவும், ஓரு பெருமூச்சுடன், 

“அதோ அந்த வீட்டுக்கு போங்க..” என்று கைக் காட்டவும், கண்கள் விரிய அவளைப் பார்த்தவர், அமைதியாக அந்த இடத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினார்.. 

வெளியில் இருந்த வாட்ச்மேன் காரில் சுந்தரி இருப்பதைப் பார்த்து கதவை அவசரமாகத் திறந்து விட, உள்ளே சென்று வண்டியை நிறுத்திய டிரைவர், “மேடம்.. வயசுல பெரியவனா சொல்றேன்.. தப்பா எடுத்துக்காதீங்க.. எல்லாமே சீக்கிரம் சரியா போயிடும்.. கண்ணத் துடைச்சிக்கிட்டு உள்ளப் போங்கம்மா.. தைரியம் தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப முக்கியம்.. அதை மட்டும் தளர விடாதீங்க.. எல்லா கஷ்டமும் தூசா போகும்..” பொதுப்படையான ஒரு அறிவுரையை வழங்கியவர், இறங்கி அவளுக்கு காரைத் திறக்க வர, அதற்குள் தானே கீழே இறங்கியவள், அங்கு நின்றிருந்த பெரியவரைப் பார்த்ததும் கண்களில் கண்ணீர் தளும்பியது.. 

அவளைப் பார்த்ததும் அவளது அருகில் வந்தவர், அவளது தலையை ஆதரவாக வருடி, “வாடாம்மா..” என்று அவளை அணைத்துக் கொள்ள, அவளது கன்னத்தைத் தட்டியவர், 

“இரு.. நான் போய் அவருக்கு காசு கொடுத்துட்டு வந்துடறேன்..” என்று அவளை நிறுத்திவிட்டு, டாக்சி டிரைவரின் அருகே செல்லவும், 

“தேங்க்ஸ்ண்ணா..” என்றவள், வாசல் படியில் நிற்க, கார் டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தவர், மீண்டும் அங்கு நின்றுக் கொண்டிருந்த சுந்தரியிடம் சென்று அவளது தலையை பாசமாக வருடிக் கொடுத்தார்.. 

வார்த்தைகள் சொல்லாத ஆயிரம் ஆறுதல்களை அந்த வருடல் அவளுக்கு உணர்த்த, அவரது தோளில் சாய்ந்தவள், தேம்பி அழத் துவங்கினாள். “இந்த தாத்தா இருக்கறதையே மறந்துட்டயே.. உனக்காக இந்த தாத்தா எப்பவுமே இருப்பேன்னு உனக்குத் தெரியாதா? உன் கல்யாணத்தை பார்க்க வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த என்னை கூட உன் கல்யாணத்துக்கு கூப்பிடலையே.. நான் என்னம்மா அவ்வளவு தப்பு செஞ்சேன்?” என்று கேட்டவர், மெல்ல அவளை அழைத்துக் கொண்டு, வீட்டின் முன்பக்கம் இருந்த அலுவலக அறைக்குள் நுழைந்தார்.. 

அங்கிருந்த சோபாவில் அவளை அமர்த்தியவர், “என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லணும்ன்னு கூட உனக்குத் தோணலையாம்மா?” மீண்டும் அவர் கேட்கவும், மீண்டும் வார்த்தைகளற்று கண்ணீர் பெருக்கெடுக்க, அவளது மனதின் பாரம் குறையட்டும் என்று அவள் அழுது முடிப்பதற்காக அவர் காத்திருக்க, சுந்தரியின் கண்ணீர் நின்ற பாடில்லாமல் தொடர்ந்துக் கொண்டிருந்தது.. 

அறையை விட்டு வெளியில் சென்றவர், சிறிது நேரத்தில் மீண்டும் உள்ளே வர, “இப்போ எதுவுமே பேச வேண்டாம்.. ரொம்ப ஓஞ்சு போய் இருக்க.. காபி கொண்டு வரச் சொல்லி இருக்கேன்.. அதைக் குடிச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்கு.. அப்பறம் எதா இருந்தாலும் பார்த்துக்கலாம்..” எதுவும் கேட்காமல் அவர் கூறியதில் மேலும் அவளுக்கு கண்ணீர் பெருகியது.. 

மெல்ல எழுந்துக் கொண்டவள், “எனக்கு எதுவும் வேண்டாம்.. தூங்கனும்.. ரொம்ப டயர்டா இருக்கு..” என்றவள், தனது அறைக்குச் சென்று முதல் வேலையாக, அந்த உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் விழ, மீண்டும் அவளது மனம் இந்திரனிடம் தாவியது.. 

‘இப்போ அவர் என்ன பண்ணிட்டு இருப்பாரு? நான் இல்லன்னு ஃபீல் பண்ணுவாரா? இல்ல.. எப்பவும் போல கடையைப் பார்க்கப் போயிருப்பாரா?’ இந்திரன் தன்னைத் தேடி வர வேண்டும் என்று மனதில் எழுந்த ஆசைகளின் விளைவில் இந்தக் கேள்விகள் உதிக்க, அவளது கண்களும் உடைப்பெடுத்து. 

கண்களை இறுக மூடிக் கொண்டவளின் கண்களுக்குள் இந்திரன் வந்து சிரித்தான்.. அவளது முகமெங்கும் முத்தமிட்டு, அவளது இதழ்களில் அமுதைப் பருகி, அவளது பெண்மைக்கான அர்த்தம் கண்டவன், அவளுக்கும் உணர்த்திய தருணங்கள் அனைத்தும் அவளது எண்ண அடுக்குகளில் அலை மோதியது.. முன்தினம் இருந்து உறங்காததும், கூடலின் பொழுதில் அவனது கை அழுத்தங்கள் கொடுத்த வலியும் சேர்ந்து அவளுக்கு இப்பொழுது வேதனையைக் கொடுத்தது.. உடலை முறுக்கி, சோம்பல் முறித்து, அந்த வலிகளை போக்கி உறங்க முயற்சித்தவள், அது முடியாமல், தலை வலியில் சென்று முடிந்தது.. 

உறங்க முடியாமல் எழுந்தவள், பெரியவரைத் தேடிச் சென்றாள். ஏதோ கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர், நிமிர்ந்து அவளைப் பார்க்க, “தாத்தா என்னால தூங்க முடியல.. எனக்கு ஒரு தூக்க மாத்திரை வேணும்.. தலை வலி மண்டையைப் பிளக்குது.. இப்படியே இருந்தா நான் பைத்தியமாகிடுவேன் போல.. ப்ளீஸ்.. எனக்கு தூங்கியே ஆகனும்.. என்னால முடியல..” உதடு துடிக்க சொன்னவளின் நிலையைப் பார்த்தவர், தன்னுடைய தூக்க மாத்திரை ஒன்றை எடுத்து, ஒரு டம்பளர் பாலை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துவிட்டு கொடுக்க, அதை வாங்கி விழுங்கியவள், தனது அறையில் சென்று விழுந்தாள். மீண்டும் இந்திரனின் நினைவுகளில் மூழ்கியவள், அவனது நினைவுகளுடனே, மாத்திரையின் உதவியுடன் அந்த நினைவுகளுக்கு தாற்காலிக விடை கொடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள்.      

செயற்கை சுகமான நித்திரையில் சுந்தரி உறங்கிக் கொண்டிருக்க, அங்கு இந்திரனோ, அவளது பெட்டில் படுத்துக் கொண்டு, மேலே விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.. அவனது நிலையைப் பார்த்து வருந்திய ராணி, அவனைத் தேற்ற எண்ணி, “தம்பி.. சாப்பிட வா.. இப்படியே படுத்துக் கிடந்தா என்ன செய்யறது? கடையை திறந்து ரெண்டு நாள் ஆகுது.. மாமா இன்னைக்கு காய்கறி ஆர்டரை கொண்டு போய் கொடுத்துட்டாங்க.. அடுத்து நம்ம பிழைப்பை பார்க்கணுமே.. எழுந்திரு தம்பி.. கொஞ்சம் சமாளிச்சிக்கோ.. நீ எதுக்காக அவளை அனுப்பினயோ, அதை செய்ய வேண்டாமா? இப்படி படுத்துக்கிடந்தா ஆச்சா? இனிமே தான் நீ தைரியமா இருக்கணும்.. உழைக்கணும். கடவுளை நம்புவோம்.. நாம யாரோடயை பிழைப்பையும் கெடுக்கல.. அதனால நம்மளை கடவுள் கண்டிப்பா கை விட மாட்டார். எழுந்திருடா..” ராணி அவனை அழைக்க, தாஸ் அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான். 

“எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குக்கா.. என்னை நம்பினவள நான் ஏமாத்தி அனுப்பிட்ட மாதிரி இருக்கு.. அவ பாவம்க்கா.. அவ கிளம்பிப் போகும்போது என்னைப் பார்த்தா பாரு ஒரு பார்வை.. அது என்னை கண்ண மூட விட மாட்டேங்குதுக்கா.. அப்படியே நெஞ்சை அறுக்குது.. அங்க போய் அவ சமாளிச்சுப்பாளா? அந்த பெரியவர் பத்திரமா பார்த்துப்பார் இல்ல.. அந்த முகம் தெரியாத மனுஷனை நம்பித் தான் நான் என் உயிரையே அங்க அனுப்பி வச்சிருக்கேன்..” புலம்பிக் கொண்டே எழுந்து அமர்ந்தவன், ராணி கொடுத்த உணவை வாயில் வைத்து, 

“அவ சாப்பிட்டு இருப்பா இல்லக்கா? இல்ல அழுதுட்டே இருப்பாளா? எனக்கு அவளைப் பார்க்கணும் போல இருக்குக்கா.. கூடவே இந்தர் இந்தர்ன்னு சுத்திட்டு இருப்பாளா.. ரொம்ப வெறுமையா இருக்கு.. அதுவும் தாலி கட்டின கையோட போன்னு அனுப்பிட்டேனே..” அவனது புலம்பலைக் கேட்ட ராணிக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.. 

அதே நேரம் உள்ளே வந்த சூர்யா.. “என்ன இந்தர்.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று குரல் கொடுக்க, அவனைப் பார்த்த இந்திரனுக்கு முகம் மலர்ந்தது.. 

“சார்.. வாங்க சார்.. வாங்க.. சுந்தரி வீட்டுக்கு போயாச்சா? பத்திரமா போயாச்சா? எப்படி சார் இருக்கா? நீங்க அவளைப் பார்த்தீங்களா? ரொம்ப அழுதாளா சார்? சாப்பிட்டாளா? எங்களை எல்லாம் கேட்டாளா?” வரிசையாக அவன் கேள்விகளை அடுக்க, 

“இல்ல.. அவ சாப்பிடலையாம்.. வீட்டுக்கு போனதும் பெரியவரைப் பார்த்து ஒரே அழுகை போல.. எனக்கு தூங்கனும்ன்னு சொல்லி அடம் பண்ணி தூக்க மாத்திரை வாங்கி சாப்பிட்டு தான் ரெண்டு நாளா தூங்கறா போல.. இன்னும் வெளிய வரலன்னு இப்போ தான் பெரியவர் கவலையா போன்ல சொன்னார்..” சூர்யாவின் பதிலில், 

“அவங்க அம்மா இழுத்துட்டு போனாங்களே.. அவங்க ஒண்ணும் சொல்லலையா? இப்படியுமா ஒரு அம்மா இருப்பாங்க? பிள்ளை ரெண்டு நாளா சாப்பிடாம இருக்காளேன்னு ஒரு வாய் சோறு ஊட்டி விட வேண்டாமா?” அங்கலாய்ப்பாக ராணி கேட்க, 

“அவங்க இன்னும் வீட்டுக்கே வரல.. சுந்தரி மட்டும் ஏதோ டாக்சில வந்தா போல..” அவர் சொல்லவும், பொங்கி எழுந்த ராணி, 

“சார்.. எங்க வீட்டு பொண்ணை எங்களுக்கு கண்ணால ஒரு தடவ பார்க்கணும்.. ஏதாவது செய்ங்க.. இப்படி எல்லாம் அந்த பொண்ணு சாப்பிட்டுச்சா.. என்ன ஏதுன்னு பார்க்காம எங்களால இங்க நிம்மதியா இருக்க முடியாது.. பேசாம அவளை இங்க கூட்டிட்டு வந்துடுங்க.. வேற நல்ல ஏரியாவா பார்த்து நாங்க குடி போயிக்கறோம்.. எங்களுக்கு அவ தான் முக்கியம்.. இப்படி எல்லாம் அவ கஷ்டப்பட வேண்டாம்.. என்ன வேலை இருந்தாலும் பொண்ணு சாப்பிட்டாளான்னு கூடப் பார்க்காம.. ஆறுதலா இருக்க முடியாத அம்மா என்ன அம்மா?” கோபமாக ராணி பேசிக் கொண்டே போக, 

“அப்போ நீங்க அந்த வீட்டுக்கு அவளைப் பார்த்துக்கப் போறீங்களா?” சூர்யா பட்டென்று கேட்க, அங்கிருந்த இருவருமே அதிர்ந்து அவனைப் பார்த்தனர்.. 

மனதைத் தருவாள்.. 💔💔💔💔💔

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎻🎻🎻🎻🎻🎻🎻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

 

Leave a Reply

error: Content is protected !!