இனிய தென்றலே

இனிய தென்றலே

தென்றல் – 4

 

தென்றலைக் கண்டுகொள்ள மானே

கண்களின் தேவை என்ன தேனே?

உள்ளத்தில் பார்வை உண்டு மானே

உண்மைகள் கண்டு சொல்லும் தேனே!

நெஞ்சின் வண்ணங்களை ஓடும் எண்ணங்களை

காணக் கண் வேண்டுமா?

பேசச் சொல் வேண்டுமா?

மலர் பூத்ததை வாசங்கள் சொல்லுமே…

பெரிய எட்டு மாடிக் கட்டிடத்திற்கு எதிர்புறம் இருந்த காஃபி ஷாப்பில் தோழிகள் மூவரும் அமர்ந்து, அசோக் கிருஷ்ணாவின் வரவினை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

வைஷாலியின் மனதில் காதல் விதையை ஆழமாய் தூவி அவளுக்குள் கலவையான உணர்வுகளையும் சொல்லத் தெரியாத பதட்டத்தையும் வர வைத்திருந்தனர் தோழிகள்.

அதோடு நில்லாமல் வைஷூவின் தாக்கம் அசோக்கிடம் உள்ளதா என்பதைக் கண்டறிய, அவனை சந்திக்க, முன்னறிவிப்பு இல்லாமல் அவனது அலுவலக வாசலில், அவனது வருகைக்கு தவம் கிடந்தனர்.  

“இந்த ஆபிஸ்தானே வைஷூ?” நிஷா ஆரம்பிக்க,

“அவன் பேர் கரெக்ட்தானே?” ஸ்வப்னா கேட்க,

“என்னை என்ன அந்தளவுக்கு மக்குன்னு நினைச்சீங்களா பக்கீஸ்?” முறைத்தாள் வைஷாலி.

“ஒரு வேள, வேற பிராஞ்சோ..?” என்று கேள்வி மேல் கேட்டு வைஷூவை கடுப்பாக்கியபடியே, வந்ததில் இருந்து ஆளுக்கு மூன்று ஐஸ்க்ரீம்களையும் இரண்டு பிளேட் பானிபூரியையும் காலி செய்திருந்தனர்.

“உன்னை திடீர்னு பார்த்ததும், என்ன உளறி வைக்கிறான்னு பார்க்கணும்” யோசனையாய் நிஷா சொல்ல,

“ஏண்டி? நான் அவ்வளவு பயங்கரமாவ இருக்கேன், பார்த்ததும் பயத்துல உளறி வைக்க..!” அப்பாவியாகக் கேட்ட வைஷூவை, வெட்டவா குத்தவா என்ற தோரணையில் பார்த்த ஸ்வப்னா,

“இந்த சாமியாருக்கு போய் லவ் வந்து தொலைக்குதே, கடவுளே! நான் எக்சைடிங் ஃபீல் சொல்றேன், நீ பயத்துலயே உருண்டுகிட்டு இருக்கடி லூசே!” வார்த்தைகளைக் கடித்து துப்பினாள்.

“எனக்கென்னமோ நம்மாளுதான் உளறிக் கொட்டப் போகுதுன்னு நினைக்கிறேன், அத அள்ளுறதுக்கு பெரிய டஸ்ட்பின்(குப்பைகூடை) ரெடி பண்ணுவோமா சிவப்பி?” மேலும் வைஷூவைக் வாரிக் கொண்டிருக்க, நேரமும் கடந்து சென்றிருந்தது.

அசோக் அலுவலக வாசலுக்கு இன்னும் வந்தபாடில்லை. அந்த எரிச்சலில், 

“வீட்டுக்கு வந்திருக்கான்னு சொல்ற… ஒரு மொபைல் நம்பர் வாங்கி வச்சுக்க மாட்டியா? வைஷூ..! சரியான தத்திடி நீ!” நிஷா மீண்டும் கடிக்க ஆரம்பித்தாள்.

“வீட்டு அட்ரஸ் கூட, இவ கேட்டு வைக்கலடி…” என்று ஸ்வப்னாவும் பின்பாட்டு பாட, அதற்கு ஏற்றார்போல்,

“இவன, இப்படி தேடி அலைவேன்னு நான் கண்டேனாடி?” என அலுத்துக் கொண்ட வைஷூவும், நேரமாகி விட்டதென்று தோழிகளுடன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்ற நேரத்தில் அசோக், அவள் எதிரில் வந்தான்.

அவனைப் பார்த்ததும் சொல்லத் தெரியாத படபடப்புடன் அவனை உள்வாங்கிக் கொண்டு, நேர்பார்வை பார்த்தவளின் மனம் கூடைப் பந்தாக அவனில் விழுந்து எழுந்தது.

“ஹேய்… வாட் எ சர்ப்ரைஸ்..!” பெண்ணின் பார்வைக்கு சற்றும் குறையாமல் பார்த்தவன், விரிந்த புன்னைகையுடன் இவளுடன் பேச ஆரம்பிக்க,

“யாஹ்… ஸ்வீட் சர்ப்ரைஸ்தான்..!” இவளும் பதட்டம் குறையாத மென்மையான குரலில் சிரிக்க, 

“என்ன இந்த பக்கம் ஷாலி?”

“ஜஸ்ட்… சும்மா… வாக்கிங்…” வார்த்தைகள் கோர்வையின்றி இவளுக்கு வெளியேற, சில பல பெருமூச்சுக்களை அவசரமாக வெளியேற்றி தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

“உங்க கேலரி, ஹாஸ்டல் இருக்குற ஏரியால எல்லாம்  வாக்கிங் போக இடமில்லையா?” அவளைக் கண்டு கொண்டவனாய், அடக்கப்பட்ட சிரிப்பில் இவன் கேட்க,

“அது… இந்த பக்கம் சின்ன வேலை இருந்தது…” என்ற பதிலில் சகஜமாகியிருந்தாள்.

“ஓகே… பாட்டி எப்டி இருக்காங்க?”

“நீங்க வந்தா… உதைக்கணும்னு இருக்காங்க…”

“ஹாஹா… ஏனாம்?”

“அவங்க பேத்திய பத்தி, அவங்ககிட்டயே குறை சொல்லிட்டீங்களாம்..!” பரவசச் சிரிப்பில் இவள் புருவம் உயர்த்தி பதிலளிக்க, இப்பொழுது பார்வைப் பந்தில் விழுந்து எழுவது அசோக்கின் முறையானது.

“ஒஹ்… இட்ஸ் மை பிளசர்..! போயி நிறையவே வாங்கிக்கிறேன்… அப்புறம்…” என்றவன் தோழிகளின் புறம் திரும்ப, இவளும் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தாள். 

மேலும் இரண்டு வார்த்தைகள் பேசிய பிறகு, நொடி நேரம் வார்த்தைகள் இல்லாமல் கரைய,

“நீங்க ஹாஸ்டலுக்கு கிளம்பிட்டீங்கன்னு நினைக்கிறேன்… நெக்ஸ்ட் ப்ரீ டைம்ல பார்ப்போம்…” என்றவன், அவளது அலைபேசி எண்ணை மறக்காமல் வாங்கிக் கொண்டு நகன்றான்.

தோழிகளின் விளிப்பும், சீண்டலும் ஒருவித கிளர்ச்சியைத் தர, அதற்கு மௌனத்தையே பதிலாக அளித்து, காதுகளை பஞ்சினை வைத்து அடைத்துக் கொண்டாள் வைஷாலி. இரவு விடுதி அறைக்கு வந்தே காதினில் வைத்த பஞ்சினை எடுக்க, மீண்டும் அவர்களின் கிண்டல் ஆரம்பித்தது.

“நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமே இல்ல… எலெக்ட்ரிசிட்டியும் பாஸ் ஆகல… அவரை விட்டுட்டு வந்ததும் செத்துப் போகணும்னு தோணல… சொல்லப்போனா இன்னும் நிறைய நாள் வாழணும்னு ஆசை வந்திருக்கு. நான்தான் சொன்னேனே..! எனக்கும் ரொமான்ஸுக்கும் ரொம்ப தூரம்னு, கேட்டீங்களா?” வைஷூ தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு பேசி, தோழிகளின் அனைத்து அனுமானங்களுக்கும் மறுப்பு சொன்னாள்.

“இது தேறாத கேசுடி! கடைசி வரைக்கும் காவி கட்டிட்டு அலையப் போறா…” ஸ்வப்னா கடுப்பில் கடிக்க,

“உன்னால ஹாஃப்டே வேஸ்டடுடி!” என்று நிஷாவும் கரித்துக் கொட்டும் வேளையில், வைஷூவின் அலைபேசி இனிமையான இசையில் முழுமையாக அழைத்து நின்றது.

“யாருடி இந்த நேரத்துல? புது நம்பரா இருக்கு… பாட்டி இவ்ளோ லேட்டா கூப்பிட மாட்டாங்களே!?” பதட்டத்துடன் ஸ்வப்னா அலைபேசியைப் பார்க்க, 

“இவ நம்பர அசோக் வாங்கினார்… இவ அப்படி வாங்கினாளா?” நிஷா கேள்வியாய் முடித்தாள்.

“எஸ்… இது அசோக்காத்தான் இருக்கும்… உன் ட்ரு காலர்ல போட்டு பாரு நிஷூ!” என்று ஸ்வப்னா சொல்லும் பொழுதே மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்துவிட, வைஷாலி அலைபேசியை பிடுங்கிக் கொண்டு, வெளி வராண்டாவிற்கு சென்று விட்டாள்.

“ஹலோ… யாரு?” மூச்சிறைத்தபடியே இவள் பேச,

“கூல் ஷாலி..! நாந்தான்… என் நம்பர் வாங்க மறந்துட்ட நீ! அதான் கால் பண்ணேன்…” அசோக், அழைத்த விவரத்தை சொல்ல,

“ஓ… தாங்க்ஸ்…”

“எதுக்கு?”

“நான் கேக்காம நம்பர் குடுத்ததுக்கு, அசோக்!”

“வாவ்..! ஒரு வழியா என்னோட பேர் உனக்கு ஞாபகம் வந்துருச்சு போல…”

“அது… முன்னே பின்னே தெரியாதவங்கள, பேர் சொல்லி கூப்பிட்டு பழக்கம் இல்ல…” என இழுத்துச் சொல்ல,

“சோ சாட்… கொஞ்சம் முன்னாடி சொல்லியிருந்தா, என்னை நல்ல்ல்லா சுத்திப் பார்க்க சொல்லி இருப்பேனே..! முழுசா நீயும் தெரிஞ்சிருக்கலாமே…” இவன் கேலி மத்தாப்புகளை கொளுத்திப் போட,

“நெக்ஸ்ட் டைம் மீட் பண்றப்போ, கழுத்துல உண்டியலோட நில்லுங்க… சுத்தி பார்த்துட்டு காசும் போட்டுட்டு போறேன்…” இவளும் வம்பை பற்ற வைத்தாள்.

“தட்ஸ் த ஷாலி ஸ்ப்ரிட்… ஐ லைக் இட்…”

“ஆஹான்… அப்புறம் வேறென்ன?” கேட்டவளின் குரல், தண்ணீராய் குழைந்து ஓடியது.

“ம்… வேற… நான் இந்த வாரம், தாத்தாவ பார்க்க ஊருக்கு போவேன்… உங்க பாட்டிக்கிட்ட ஏதாவது சொல்லனுமா?”

“ஒன்னுமில்ல… நானும் இந்த வாரம் போவேன்…”

“ஓ… நீயும் வர்றியா? எப்போ?”

“அஸ் யூஷுவல் வீக் எண்ட்…”

“நான் அதுக்கு முந்தின நாள் கிளம்புவேன்… எதுவும் சொல்லனுமா?” பேச்சை வளர்க்கவென இவன் கேட்க, 

“சரி… பாட்டிகிட்ட மாவடுவும் அரிசி வடகமும் போட்டு வைக்க சொல்லுங்க…” இவளும் வெகுநாள் பழக்கம் போல பேசினாள்.

“ஷ்யூர்… அப்போ ஊர்ல பார்க்கலாமா?” கேட்டவனின் குரலில் பார்க்க வாவென்ற அழைப்பு அப்பட்டமாய் இருக்க, 

“ஓ பார்க்கலாமே… ஆனா இந்த தடவ பஜ்ஜி, கேசரி எல்லாம் கிடைக்காது. மோர் மட்டும்தான் குடுப்போம்…” என்று சொல்லி சத்தமாக சிரிக்க,

“அந்த மாவடு, அரிசி வடகத்துல கொசுறு கூட கிடைக்காதா மேடம்?”   

“அது… நீங்க, நல்ல பிள்ளையா அங்கே தங்கி இருக்கிறதப் பொறுத்து ஆபீசர்!”

“கெட்ட பையன்கிட்ட, நல்லத தேடித் பார்க்கலாமே ஷாலி..!”

“நான் வேணும்னு நினைக்கிறவங்க, நல்லபையனா மாறித்தான் என்னைத் தேடி வருவாங்க அசோக்..!”

இருவரின் வார்த்தைகளும் சளைக்காமல் கோர்த்திட,  மேற்கொண்டு சில பேச்சுக்களை பேசி முடிக்கும் பொழுது அரைமணிநேரம் கடந்திருந்தது.

புரியாத உணர்வுக் குவியல்கள் உண்மையிலேயே வைஷாலியைப் பந்தாட, உடலெங்கும் சிலிர்த்தபடியே விலகாத புன்னகையுடன் அறைக்குள் நுழைந்தவளை, தோழிகள் மேலும் கீழும் பார்த்து,

“புரிஞ்சு போச்சு… எங்களுக்கு புரிஞ்சு போச்சு…” என்று ராகம் போட,

“அப்பிடி எல்லாம் ஒன்னுமில்லடி…” கோபமாய் சொல்ல வந்தவளுக்கு, வார்த்தைகளும் சதி செய்ய கூச்சத்தில் மென்னகையோடு முடித்தாள்.

“நோ… நோ… நன்றாக மாட்டிக் கொண்டாய் பெண்ணே! உனக்கா ரொமான்ஸ் வராது?” என்று ஸ்வப்னா வம்பிழுக்க ஆரம்பிக்க, 

“மொபைல பிடுங்கிகிட்டு அப்படி ஓடுற நீ..!” தாடையை பிடித்து பொய்க் கண்டிப்பில் கேட்டாள் நிஷா.

“நானா? ஓடி போனேனா..? சேச்சே…” அப்பாவியாய் முகத்தை வைத்து வைஷூ மறுக்க,

“அடியேய்… எங்ககிட்டயே பொய் சொல்றியா? இவள…” என்றவர்கள் தலையணை கொண்டு தாக்கத் தொடங்க, அன்றைய இரவின் ஆட்டம் அதனுள் அடங்கிப் போனது. 

மறுநாள் காலையிலும் விடாமல் வைஷாலியிடம் வம்பை வளர்த்தார்கள் தோழிகள். 

“ஏய் வைஷூமா..! ஆர் யூ இன் லவ்? என் காதுல மட்டும் உண்மைய சொல்லுடா…” தலையை தடவி வாஞ்சையுடன் ஸ்வப்னா கேட்க,

“அதெல்லாம் ஒண்ணுமில்ல சிவப்பி…” அடக்கப்பட்ட சிரிப்பில் பதில் அளித்தாள் வைஷூ.

“ஷாலின்னு அவர் கூப்பிடுறது என்ன? இவளும் போன் வந்ததும் ஓடிப் போறதென்ன? இன்னும் என்னென்ன மறைச்சு வைச்சாளோ?” என்று நிஷா பட்டியலிட, வைஷாலிக்கு பெரும் அவஸ்தையாகிப் போனது.

“ஊருக்கு போனதும் பார்க்க பிளான் பண்ணியிருக்கீங்க… அந்த ரோமியோவும் உனக்கு என்ன வேணும்னு இப்பவே வழியுறான்… அரைமணி நேரம் போனதும் தெரியாம ரெண்டு பேரும் ஸ்வீட் நத்திங்ஸ் பேசுறீங்க… இதுக்கெல்லாம் பேரு என்னவாம்?” ஸ்வப்னா சிரிப்புடன் சொல்லிக் காண்பிக்க,

“இப்போ என்னடான்னா… அவர் ஊர்ல இருக்காருன்னு, நீயும் லீவு போட்டுட்டு ஒருநாள் முன்னாடியே கிராமத்துக்கு போற… இதெல்லாம் எதுல சேர்க்க..?” விடாமல் நிஷாவும் கேட்க,

“அதான் தெரியலடி… இத எந்த கணக்குல சேர்க்க…” என்று புரியாத பாவனையில் குழம்பித் தவித்தாள் வைஷூ. 

“இதுக்கு பேருதான் லவ் வைஷூகுட்டி… பியூர் ரொமான்ஸ்..!” கண்களை மூடி, ஸ்வப்னா சிலாகித்து சொல்ல,

“எனக்கென்னமோ அப்படித் தோணல…” என்று அப்பொழுதும் நம்பிக்கை இல்லாமல் அலைபாய்ந்தாள் வைஷாலி.

“சரி… நீ இப்டி மாட்டிக்கிட்ட… அவர்கிட்ட அதே பீலிங்க்ஸ் இருக்கான்னு எப்படி தெரிஞ்சுக்கப் போற..?” என்று நிஷா கேட்க, 

“ஊர்ல போய் நேருக்குநேரா கேக்கப் போறியா?” ஆர்வக்கோளாறில் ஸ்வப்னாவும் சேர்ந்து கொள்ள,

“மே பீ… ஆர், மே நாட் பீ…” அசட்டையாய் ஆரம்பித்த வைஷூ, “இன்னமும் என்னன்னு பிடிபடாத விஷயத்தை நம்பி, எப்டி முடிவெடுக்க முடியும்?” தீவிரமாய் கூறி முடித்தாள்.

அவள் மனதில் குழப்ப அலைகள் ஓயாமல் எழும்பி  கொண்டிருந்தது.

“ரொம்ப குழப்பிக்காதடா வைஷூ… நேர்ல பார்க்கிறப்போ, தன்னால கிளியர் ஆகிடும்..!” நிஷா சமாதானம் சொல்ல,

“ஆமாடி… பட் அவருக்கு, உன்னை பிடிக்கலன்னா என்ன செய்வ வைஷூ?” முக்கியமான கேள்வியில் நிறுத்தினாள் ஸ்வப்னா.

“அவர் குடுத்து வச்சது அவ்வளவுதான்… என்கூட வாழ, அவருக்கு அதிர்ஷ்டம் இல்லன்னு நினைச்சு, கிளம்பி வந்துருவேன்…” சர்வ சாதரணமாக தோள்களைக் குலுக்கிக் கொண்டு வைஷாலி சொல்லி முடிக்க, வாயில் அடித்தாள் ஸ்வப்னா.

“நோ… நோ… நல்லதே நினைப்போம்… உங்க ஜோடிப் பொருத்தம் அவ்ளோ பெர்ஃபெக்டுடி… வைஷூ!” என்று ஸ்வப்னா சொன்னதை, வைஷாலி கற்பனை செய்து பார்க்க, அது திகட்டாத ஆனந்தத்தைக் கொடுத்தது.

“எஸ்… ஆல் த பெஸ்ட் வைஷூ!” என்று நிஷாவும் வாழ்த்துச் சொல்ல, வைஷாலியும் இது காதல்தான் என்ற உறுதியான முடிவில் தன்மனதை நிலைப்படுத்திக் கொண்டாள்.  

தோழிகளின் வாழ்த்துக்களோடு, காதல் கனவுகளை மனம் நிறைய அள்ளிக் கொண்டு கிராமத்திற்கு வந்திறங்கிய வைஷாலி, ஆர்பாட்டமாய் பாட்டியோடு வீட்டிற்குள் நுழைய, வாசலில் அரிசி வடகம் காய்ந்து கொண்டிருந்தது.

“ஹேய் சூப்பர்! அசோக் வந்து சொன்னாரா பாட்டி? அரிசி வடகம் எனக்குத்தானே… மாவடு ரெடி பண்ணிட்டியா?” சிறு குழந்தையாக மனம் குதூகலிக்க கேட்க, 

“ஆமா… வேற யாருக்கு செஞ்சு வைப்பேன்… அம்புட்டும் உனக்குதான்! அந்த தம்பி வந்து சொன்னதும் கிளம்பி போயிடுச்சு!” என பாட்டி விளக்கம் கூறிவிட, அவள் மனம் மிகுந்த ஏமாற்றம் அடைந்தது.

முதல்முறையாக தன்னை சார்ந்த விடயத்தில் எதிர்மறையான கண்ணோட்டத்தை அவள் சந்திக்க, உற்சாகக் குமிழிகள் கரைந்து மனம் கலவரம் கொண்டது. பாட்டிக்குத் தெரியாமல் அதனை மறைத்துக் கொண்டவள்

“வந்துட்டு… போயிட்டாரா…” இறங்கிய குரலில் கேட்க,

“அவசர வேலையிருக்குன்னு போயிடுச்சு அந்த தம்பி! நான் நினைச்ச மாதிரி அப்டி ஒன்னும் கெட்டவன் இல்ல… ரொம்ப நல்லா பேசினான். எவ்ளோ பாசமா என்னை விசாரிச்சான் தெரியுமா?” என்று பாட்டி சொல்லிக் கொண்டு வர, தன்மனதில் ஏமாற்றத்தின் அளவு கூடிக்கொண்டு வருவதை இவளால் தடுக்க முடியவில்லை. அதுவே அவன்மேல் கோபம் கொள்ள காரணமாய் அமைய,

“அய்யய்ய… என்ன பூரணி? கட்சி மாறிட்டியா… அவர் ரொம்ப மோசம்னு நீதானே சொன்ன… அவன் வந்து நின்னா, நீ ரெண்டு சாத்து சாத்துவேன்னு நான் நினைச்சேன்… சுலபமா தப்பிக்க வைச்சுட்டியே..!” பழிப்பு காட்டியபடியே பாட்டியை பொய்யாய் கடிந்து கொண்டாள்.

“பட்டணத்து பிள்ளைக்கு, கிராமத்துல இருப்பு கொள்ளல… வந்தவுடனே போயிட்டான்… இதுல எங்கே இருந்து அவனை நான் சாத்துறது..!” பாட்டியும் தன் இயலாமையை பேச, அதோடு அமைதியாகி விட்டாள்.

தான்இருக்கும் நாட்களில் வீட்டை கலகலப்பாக்கி, பாட்டியை வம்பிழுக்கும் பேத்தி, அந்தவார விடுமுறையில் காணாமல் போனாள்.

மனமெங்கும் வெறுமை படர, அவளால் சகஜமாய் வீட்டில் நடமாட முடியவில்லை. அசோக்கின் பேச்சும், நடவடிக்கையும் அவளுக்கு நம்பிக்கை கொடுத்திருக்க, தன்னைப் பற்றிய அப்பிராயத்தைகூட அவனிடம் கேட்க தயாராயிருந்தாள்.

அவளது லட்சியங்கள், ஆசைகள் அனைத்தும் அந்த நேரத்தில் அவளுக்கு மறந்தும் போயிருந்தது. திருமண வாழ்க்கைக்கு எதிராகக் கொடிபிடித்தவளின் மனம், இன்று காதலுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஆயத்தமாகி இருந்தது. 

நிலவுமகள் தன்உலாவை ஆரம்பித்து தடையின்றி வானில் நடந்து போகும் நேரம்… முதன் முதலாய் அவர்கள் பேசிக்கொண்ட மல்லிகைப் பந்தலின் கீழ் தன் கைகளை தலையணையாக்கி, சிமென்ட் பெஞ்சில் ஒருக்களித்துப் படுத்திருந்த வைஷாலி, அந்த தோட்டத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

உடல் துளைக்கும் குளிர் காற்றும் அவளைப் பெரிதாக பாதித்து விடவில்லை. மேகக் கூட்டத்தை இன்னும் உற்றுப் பார்த்தாள். மழை மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சூழ்ந்து, சிதறிக் கிடந்த நட்சத்திரக் கூட்டத்தையும் மறைத்துக் கொண்டது.

இருள் சூழ்ந்த வெற்று வானம், தன் சிதிலமடைந்த எண்ணங்களைப் பிரதிபலிப்பதைப் போல் அவளுக்குத் தோன்றிட, யாரையாவது கட்டிக் கொண்டு கதற வேண்டும் போல மனம் பரிதவித்தது.

பெற்றவர்கள் இல்லாமல் வளர்ந்தாலும், தன் பாட்டியின் செல்வச் சீமாட்டியாக, ஒற்றை பேத்தியாக, அவரின்  அன்பையும், அரவணைப்பையும் ஒட்டுமொத்தமாக அள்ளிக் கொண்டவள் வைஷாலி.

அழுகையில் கரைபவர்களை வேற்று கிரகவாசி போலவே இதுநாள் வரையிலும் எண்ணிக் கொண்டவள், இன்று அழுகையின் பிடியின் நின்று துடித்தாள்.

‘இங்கு வந்த பிறகு சந்திக்கலாம் என்று சொல்லி விட்டு, ஏன் என்னைத் தவிர்த்து ஓட வேண்டும்? என்னிடம் இவன் எதை எதிர்பார்க்கிறான்?’ போன்ற கேள்விகள் மனதைக் குடைய ஆரம்பித்தது.

‘ஒருவேளை வாரக் கடைசியில் அவனுடன் ஊர் சுற்றும் பெண்களின் வரிசையில், என்னிடம் பழக நினைத்தானா?’ என்ற நினைவே இதயத்தில் அமிலத்தை சுரக்க வைக்க முதன்முதலாய் அசோக்கை வெறுத்தாள் வைஷாலி.

அந்த வெறுப்போடு கலந்த ஏமாற்றத்தின் எதிரொலி அவளை முற்றிலும் பந்தாடி, அதல பாதாளத்தில் தள்ளியிருக்க, எந்த சமாதானப் பூச்சைக் கொண்டு அந்த பள்ளத்தை சரிசெய்வது என்று தெரியாமல் தவித்தாள்.

மனதின் ஓரத்தில் மெல்லியதாய் எழுந்த அசோக்கின் நினைவலை, ஆழிப் பேரலையாய் அவள் உள்ளம் எங்கும் ஆர்ப்பரிக்கத் தொடங்கி, அடக்க வழியில்லாமல் ததும்பி நின்றது.

அன்றொரு நாள் உயிர்த் தோழியின் காதல் தோல்வியை கொண்டாடிக் கழித்தவள்தானா இந்த வைஷாலி என்ற சந்தேகம், மலையளவு மனதை வியாபிக்க, பித்து பிடித்தவளைப் போலவே மாறியிருந்தாள்.

எந்த நேரமும் தனிமையில் தன்மனதினை அசை போட்டபடி தவித்தவளை புரியாத புதிராக நோக்கிய பாட்டி, வாஞ்சையுடன் பேத்தியின் அருகில் அமர்ந்து கொண்டு,

“வரும்போது கலகலன்னுதானே வந்த… என்ன ஆச்சு உனக்கு? உடம்பு சரியில்லையா ராசத்தி?” அன்புடன் கேட்க,

“நான் நல்லா இருக்கேன் பாட்டி..!” என்ற உடைந்த குரலே பேத்தியின் மனவாட்டத்தை தெளிவாக உணர்த்த,

“எதையோ போட்டு மனசுல மருகிட்டு இருக்கேடாம்மா… என்னாச்சுன்னு என்கிட்டே சொல்லுடி தங்கம்…” என்றவர், அவளின் தோள் அணைத்துக் கொள்ள, 

“பாட்டி! நான் உன் மடியில படுத்துக்கவா?” கழிவிரக்கத்தில் உழன்று கொண்டிருந்தவள், தாள இயலாமல் பெரியவரின் மடி சாய்ந்து விட்டாள்.

“இப்படியெல்லாம் என்கிட்டே கேக்குற ஆள் இல்லையே, கண்ணு..!” என்றவர் பேத்தியின் முதுகை தட்டி கொடுத்தே, ஆறுதல் அளித்தார்.

ஒருமுறை ஏற்பட்ட ஏமாற்றமே தனக்கு இத்தனை வலிகளை கொடுக்க, தன் பாட்டியின் நிலையை அந்த நேரத்தில் நினைத்துப் பார்த்தாள்.

வாழ்க்கை முழுவதும் கணவன், மகன், மருமகள் என்று அனைவரின் அரவணைப்பையும் எதிர்பார்த்து பொய்த்துப் போன, தன் பாட்டியின் ஏமாற்றம் எத்தனை வலிகள் நிறைந்ததாய் இருக்கும் என்று வைஷூவால் நினைத்துப் பார்க்கவும் தைரியம் இல்லை.

‘என் பாட்டி எத்தனை வலிகளைத் தாங்கிக் கொண்டிருந்தால், இந்த வயதிலும் திடமாய் நின்று என்னை வழிநடத்த முடியும்? அவரின் கைவளைவில் வளர்ந்த நான், இந்த சிறு நிகழ்விற்கும் இத்தனை கலக்கம் கொள்வதா?’ என்ற எண்ணமே மனதில் அலைகழிக்க,

“நீ ரொம்ப தைரியமானவ பாட்டி… உன்னை விட்டா, எனக்கு யாருமே இல்ல! நீ இல்லாம போயிருந்தா, நான் செத்துப் போயிருப்பேன் பாட்டி… எனக்கு நீ மட்டுமே போதும்..! வேற யாரும் வேண்டாம். என்னை எங்கேயும் அனுப்பாதே பாட்டி!” என்று அழுகையில் கரைய, அவளை தேற்றும் வகை அறியாது, அணைத்துக் கொண்டார். 

“நான் இருக்கேன்டா தங்கம்… உனக்காக ஆயிரம் வருஷம் உசுர கையில பிடிச்சுட்டு இருப்பேன்… என் பக்கத்திலேயே இருடாம்மா” பொங்கிய அன்பில், நெகிழ்வுடன் கரகரத்தவர், இரவு உணவினை ஊட்டி விட்டு, இரவு முழுவதும் மடிதாங்கி அரவணைத்துக் கொண்டார்.

மறுநாள் காலையில், முதல் வேலையாக கருப்பண்ணசாமி கோவிலில், பேத்தியோடு சென்று அவளுக்கு மந்திரித்து, தாயத்தும் போட்டு விட்டே, அடுத்த வேலையை கையில் எடுத்தார்.

“ஊர் சுத்தாம பத்திரமா இருன்னு சொன்னா கேக்கிறதில்ல… எங்கேயாவது போயி, எதையாவது பார்த்துட்டு பயந்து அழுகுறது…” என்ற திட்டில் பேத்தியை நிகழ்விற்கு இழுக்க,

“நான் ஒன்னும் அவ்வளவு பயந்தவ கிடையாது” வைஷாலியும் முறுக்கிக் கொள்ள,

“நேத்து ராத்திரி மடியில படுத்தது, யாரு உன் தங்கச்சியாடி? என் மனசு பட்டபாடு எனக்கில்ல தெரியும். போதும் நீ, வேலை பார்த்து கிழிச்சது..! சென்னைக்கு போறவ, ஒழுங்கா மூட்டை முடிச்ச கட்டிட்டு வந்து சேரு…” அதட்டலோடு உத்தரவிட்டவர், அவளின் மறுப்பினை கவனத்தில் கொள்ளவில்லை.

பாட்டியின் பேச்சும் பேத்திக்கு சரியென்று தோன்றியது. இனி எந்த ஒரு சலனமும் மனதை ஆட்கொள்ளாமல் இருக்க, கிராமத்தில், தன்பாட்டியுடன் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும் என்பதை அறிந்தவள், சென்னை வாசத்தை முடித்துக் கொள்ளும் முடிவிற்கு வந்து விட்டாள்.

மறந்தும் கூட அசோக்கின் நிழலைச் சந்திக்கவும் அவள் விரும்பவில்லை. மீதம் இருந்த ஒருநாளில், பழையபடி வீட்டை சுற்றிவந்து பாட்டியிடம் வம்பு வளர்த்தாள்.

அசோக்கின் தற்செயலான வரவும், தோழிகளின் பேச்சுமே, இல்லாத ஒன்றை கற்பனை செய்து, தன்னை முழுவதுமாய் தடம் புரள வைத்தது என்ற ஸ்திரமான எண்ணத்தை, தன் மனதில் ஆணித்தரமாய் பதிய வைத்தாள்.

காதல் என்ற நினைவை வேரோடு அழித்து, தெளிந்த மனதோடு சென்னைக்கு சென்றவளை, அசோக் தேடி வந்து சந்தித்தானா? அடுத்த பதிவில் காண்போம்… 

 

உன்னை நான் எண்ணுகின்ற நேரம்

உள்ளுக்குள் மார்கழி மாதம்…

அன்பே நான் உன்னைக் காணும் நேரம்

கண்ணுக்குள் கார்த்திகை தீபம்…

கண்கள் இன்றி என்னைக் கண்டுகொள்வாய்

என்று நீ என் காதல் கண்டுகொள்வாய்?

அந்த நாள் எந்த நாள் என்று நீ சொல்லு…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!