இனிய தென்றலே

இனிய தென்றலே

தென்றல்- 5

வண்ணக் கனவுகளை அள்ளித் தெளித்த காதல், ஒரே நாளில் கானல் நீராய் காற்றோடு கரைந்தே போனது.

தனது திடமான முடிவில் சற்றும் பிசகாமல், விடுதி அறைக்குள் காலடி எடுத்து வைத்த வைஷாலியை, தோழிகள் சூழ்ந்து கொண்டு விசாரிக்க ஆரம்பித்தனர். 

“என்ன ஆச்சு வைஷூ? சக்சஸ்தானே…” என்று ஸ்வப்னா கட்டை விரலை உயர்த்த,

“ம்ப்ச்… அவருக்கு அதிர்ஷ்டமே இல்ல… அவர் குடுத்து வச்சது அவ்வளவுதான்…” வைஷூ அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்னாள்.

“ஏன் மீட் பண்ணலையா?” கேட்ட நிஷாவின் குரலிலும் வருத்தம் தென்பட,

“ம்ப்ச்… அவர் வரவே இல்ல… பட் நான் ஒன்னும் அவர மிஸ் பண்ணல… என் இஷ்டத்துக்கு ஊர் சுத்திட்டு, பாட்டிகூட கொட்டம் அடிச்சுட்டு, என்ஜாய் பண்ணேன்…” வைஷூ தோள்களைக் குலுக்கிக் கொண்டு இலகுவாகச் சொன்னாலும் கண்களும் குரலும், அவள் அனுபவித்த வலியினைச் சுட்டிக் காட்டியது.

“என்னடா வைஷூ, இப்படி ஆகிடுச்சே!?” ஸ்வப்னாவும் வருத்தம் கொள்ள,

“விட்டுத் தள்ளுடா… வீ ஆர் ஆல்வேஸ் ப்ரீடம்…” தோழிக்கு உற்சாகமூட்டினாள் நிஷா. 

“எஸ் கேர்ள்ஸ்..! நான்தான் சொன்னேன்ல… எனக்கும் ரொமான்ஸுக்கும் சம்மந்தமே இல்லன்னு… அவுட் ஃஆப் ரொமான்ஸ், அவுட் ஃஆப் லவ், ஆல்வேஸ் ஃப்ரீடம்…” தனது தாரக மந்திரத்தை சொல்லியவாறு, கையை மடக்கி கண்சிமிட்டி சிரித்தாள்

அசோக் என்பவனை சந்தித்ததையே மறந்தவள், அலைபேசியில் இருந்த அவனது எண்ணையும் அழித்தாள். எங்கே, இதை பார்த்தால் மனம் மீண்டும் சலனப்பட்டு விடுமோ என்ற அச்சம் வர, மூளை வேகமாக அழிக்கச் சொல்லியது.

காலமும் நேரமும் தன் கடமைகளைச் செய்ய, வேலை மற்றும் தோழிகளுடன் ஊர் சுற்றலில் தன்னை பிணைத்துக் கொண்டாள் வைஷாலி. ஸ்வப்னாவின் திருமணத்தை முடித்துக் கொண்டு ஒரேடியாக கிராமத்திற்கு செல்வதற்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தாள்.

நிஷாவும் தன்வேலையை சொந்த ஊருக்கு மாற்றிக் கொள்ள முயன்று கொண்டிருந்தாள். தோழிகள் இல்லாத இடத்தில் தங்கவும் வேலை பார்க்கவும் அவளுக்கும் மனம் ஒப்பவில்லை.

            *************************************

அசோக் கிருஷ்ணா…. கடுகடுத்த முகத்துடன் தன் தந்தையின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான். உள்ளம் எரிமலையாக கொதித்துக் கொண்டிருந்தது.

பெங்களூருக்கு மாற்றலாகி புதிய ப்ராஜெக்ட் பொறுப்பில் இணைந்து கொள்ள அசோக் விரும்பவில்லையென்று, அவன் தந்தை ராமகிருஷ்ணன், அசோக்கின் மேலதிகாரியை சந்தித்து ஒப்புதல் கடிதத்தையும் அளித்து விட, அந்த கோபத்தை தன்தாயிடம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.

கிராமத்திற்கு வைஷாலியை பார்க்கவென இவன் சென்ற நேரத்தில் ராமகிருஷ்ணன், மகனின் உத்தியோக தலையெழுத்தை மாற்றி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் அலுவலகத்தை விட்டுச் சென்றதும் அங்கிருந்த நண்பர்கள் மூலம் அசோக்கிற்கு சேதி தெரிய வர, அன்னபூரணி பாட்டியிடம் அவசரகதியில் விடைபெற்று கிளம்பி விட்டான். 

வங்கியின் நிர்வாக அதிகாரியாக இருக்கும் ராமகிருஷ்ணனின் பேச்சிற்கு மறுபேச்சின்றி, அசோக்கின் மேலதிகாரியும் அந்த ப்ராஜெக்ட் சம்மந்தமான ஒப்பந்த கோப்புகளில் இவனை கையெழுத்திட தடுத்தும் விட்டார்.

அசோக் எத்தனையோ முறை விளக்கம் சொல்லியும் பெற்றோரின் அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில், அலுவலக ஒப்பந்தத்தில் ஆணையோ பெண்ணையோ பணியில் அமர்த்திக் கொள்வது இயலாத காரியம் என்று அந்த மேலதிகாரியும் இவனை தவிர்த்துவிட, கொம்பு சீவிட்ட காளையாக தந்தைக்கு எதிராக சிலிர்த்தெழுந்து நின்றான்.

“நான் என்ன கிள்ளுக்கீரையா இல்ல கிளிப்பிள்ளையா? இவர் இஷ்டத்துக்கு தலையாட்ட… என் ப்ரபெஷன்ல தலையிட இவருக்கு என்ன உரிமை இருக்கு?” தன்தாயிடம் வெடித்துக் கொண்டிருந்தான்.

உலக அதிசயமாய் மகன் கிராமத்திற்கு பயணப் பட்டிருக்கிறான் என்ற மகிழ்வில், அவனது தாய் தங்கமணியும் கணவரின் நடவடிக்கையை கவனிக்க தவறி விட்டார்.

மகன் வந்து சொன்ன பிறகே அனைத்தும் தெரியவர, இவனை எவ்வாறு சமாதானம் செய்வது என்ற எண்ணத்திலேயே திண்டாடிப் போனார். ஆனாலும் மனதின் ஓரத்தில் துளிர்விட்ட நம்பிக்கையில், மகனிடம் மனம் திறந்து கேட்கவும் செய்தார்.

“நீ கிராமத்துக்கு போன விஷயம் என்ன ஆச்சு அசோக்? அந்த பொண்ணை பார்த்து பேசத்தானே போன..!” மகனின் மனநிலையை துல்லியமாக அறிந்தவராய் கேட்க,

“எங்கே பார்க்க? அதுக்குள்ள இங்கே என்னென்னமோ நடந்து, எல்லாமே மறந்து போச்சு எனக்கு…” பெருமூச்சு விட்டபடியே சோர்வாய் முடித்தான் அசோக்.

“நான் வேணும்னா பேசிப் பார்க்கட்டுமா தம்பி! நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாலே போதும்டா… உங்கப்பா கோபம் எல்லாம் காணாமப் போயிரும்” என்று தற்போதைய பிரச்சனைக்கு தீர்வினைச் சொல்ல,

“அம்மா! இப்பவும் சொல்றேன்… அந்த பொண்ணு கூட, ஜஸ்ட் பேசத்தான் போனேன். ஃப்ரிண்ட்லி அப்ரோச்க்கு கூட, உங்க கற்பனைய கொடி கட்டிப் பறக்க விடுவீங்களா?” என்று தன்பொல்லாத விருப்பத்திற்கு விளக்கம் கூறியதும், மகனின் மீது கட்டுக்கடங்காத கோபம் வந்துவிட,

“அறிவுகெட்டவனே! இந்த கருமாந்திர நெனைப்பை எல்லாம் விட்டோழிக்கத்தான் உங்கப்பா உன்னை கட்டிப்போட நினைக்கிறாரு… நம்மள கௌரவமா பார்க்கிற வீட்டுப் பொண்ணுகிட்டயா, உன் நினைப்பு தடம் மாறிப் போகணும். ஒழுங்கா அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டு பெங்களூருக்கு என்ன, அந்த கைலாஷாக்கு கூட போயிக்கோ! யார் உன்னை தடுக்கப் போறா? அது விட்டுட்டு நடக்காத காரியத்தை பேசி, அசிங்கப்படாதே…” கோப அதட்டலுடன் தங்கமணி முடித்தார்.

அப்பொழுது மனைவியின் பேச்சினை ரசித்தபடியே வீட்டுக்குள் நுழைந்த ராமகிருஷ்ணன், மகனின் கொதிநிலையை கண்டுகொள்ளாமல் சோபாவில் அமர்ந்து, நாளிதழைப் புரட்டத் தொடங்கிவிட,

“நான் என்ன குடிச்சிட்டு நடுரோட்ல விழுந்து அசிங்கப் படுத்துறேனா? இல்ல, ஊதாரித்தனமா செலவளிச்சுட்டு திரியுறேனா? ஏன் கல்யாணம் குடும்பம்னு என்னை கட்டிப்போட பார்க்குறீங்க?” மிதமிஞ்சிய கோபத்தில் பெற்றோரின் முன்பு, நெஞ்சை நிமிர்த்தி கொண்டு தன் நியாயத்தை அசோக் கேட்க,

“குடும்ப கௌரவம்னு ஒன்னு இருக்கு… அத காத்துல பறக்க விடுற எல்லா காரியமும் நீ செஞ்சுட்டு இருப்ப… அத நான் கைகட்டி பார்த்துட்டு இருக்கனுமா?” மகனின் கோபத்தை சற்றும் கருத்தில் கொள்ளாமல், அமைதியாக அதே சமயத்தில் காட்டமாக கண்டித்தார் ராமகிருஷ்ணன்.

“கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் அந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுவேன்னு எப்படி நம்புறீங்க?” வீம்பு குறையாமல் அசோக் எதிர்வாதத்தில் நிற்க,

“உன்மேல இருக்குற நம்பிக்கை எனக்கு சுத்தமா போயிடுச்சு… எப்போ பாக்குற பொண்ணுங்க கூட எல்லாம் , உன் ஆசைக்காக மட்டுமே பழகனும்னு நினைக்கிறியோ, அப்பவே உன்னை நம்பி ஒரு பொண்ணோட வாழ்க்கைய ஒப்படைக்கப் போறதில்ல….

இந்த ஜென்மத்துல உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற நினைப்பையும் ஓரங் கட்டிட்டேன்… பொழுதுக்கு ஒரு பொண்ணு கூட சுத்துற வேலைய எப்போ விடுறியோ, அப்போதான், என்கிட்டே இருந்தும் உனக்கு விடுதலை கிடைக்கும்.

அதுவரைக்கும் நீ வீட்டு ஜெயில்லயே கிடந்து செத்தாலும்  பரவாயில்லைன்னு, உன்னை ரூமுக்குள்ள பூட்டி வச்சுருவேன்…” என கோபத்துடன் அவர் எச்சரித்ததில், சொன்னதை செய்தே தீருவேன் என்ற உறுதி இருக்க, இதனைக் கேட்ட தங்கமணியின் மனமும் கனத்துப் போனது.

விரோதிகளாக இருவரும் முறைத்துக் கொண்டு நிற்க, யாரின் பக்கம் நின்று பேசுவது என்று தெரியாத நிலையில், மகனிடம் பேச்சினை வளர்க்காதே என்று அறிவுறுத்தினாலும் அவன் அதை மீறிக்கொண்டு தன்வருத்தத்தில் பேச்சினை வளர்த்தான்.

“மாசம் ஒன்றரை லட்சம் சம்பளம் வர்ற வேலைய கூட விடச் சொல்றீங்களா? எனக்குன்னு எந்த விருப்பமும் இருக்கக் கூடாதா? இந்த காலத்துல பொண்ணுங்க கூட பிரண்ட்லியா பழகுறத கொலை குத்தமா ஏன் பாக்குறீங்க?” ஆற்றாமையுடன் கேட்டவன் பேச்சில் தோல்வியின் சாயல் அப்பட்டமாய் எதிரொலித்தது.

“மானம் மரியாதையோட வாழப் பழகிக்கணும் அசோக்..! நீ, உன் இஷ்டப்படிதான் இருப்பேன்னா, நாளைக்கே உன் ஆபீசுக்கு போயி உன் ராஜினாமா லெட்டரை நானே குடுத்துட்டு வந்துருவேன். கிராமத்துல பொன்னு விளையுற பூமி இருக்கு… நானும் இன்னும் கொஞ்சநாள்ல ரிடையர் ஆகிடுவேன். ரெண்டு பேரும் சேர்ந்தே அங்கே தங்கி விவசாயம் பார்ப்போம். என்ன சொல்ற?” சர்வ சாதாரணமாக ராமகிருஷ்ணன் சொல்ல, அசோக் ஒரு நிலையில் நில்லாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

தனது தந்தை இப்படி கிடுக்கிப்பிடி போட்டு தன்னை சுற்றி வளைப்பார் என்று அசோக் எதிர்பார்க்கவில்லை. தன்மனம் எதை விரும்புகிறது என்ற குழப்பத்தில் இவன் இருக்க, இவனது தந்தையோ மகனை நல்வழிப் படுத்தும் முயற்சியை விடாது செய்து கொண்டிருந்தார்.

இவனும் மனம் தளராமல், திருமணம் வேண்டாம் என்ற பிடிவாதத்திலும் தனது சுபாவத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்ற வீம்பிலும் நிற்க, தந்தையானவர் சாட்டையை கையில் எடுத்து விட்டார்.

‘எந்த வேலையையும் பதவியையும் காட்டி, ராஜாவாக ஊர் சுற்றுகிறாயோ, அதையே உனக்கு இல்லாமல் ஆக்குகிறேன் பார்’ என செயலில் இறங்கியும் விட்டார்.

முதலில் மகனின் அலுவகத்திற்கு சென்று சற்றும் தயங்காமல், அவனது நடவடிக்கைகளை பட்டியலிட்டவர், அவனின் நல்வாழ்விற்காகவே இடமாற்றத்தை தடுக்க வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.

இதற்கும் மசியாமல் மகன் ஆட்டம் காட்டினால், கௌரவம் கொடுக்கும் வேலையை தலைசுற்றிப் போட்டு விட்டு, மகனை தன்மேற்பார்வையில் வைத்துக் கொண்டு, கிராமத்திற்கு சென்று தன்வாழ்க்கையை தொடரும் முடிவையும் எடுத்து விட்டார்.

மகன் மீது கொண்ட பாசம், தந்தையின் அதிரடி செயல்களை  அயராது செய்ய வைக்க, அதை புரிந்து கொள்ள வேண்டியவனுக்கோ, அவரது நடவடிக்கைகள் எல்லாம் வேப்பங்காயாக கசந்து தந்தையை எதிரியாகப் பார்க்க வைத்தது.   

அண்ணன் அருண்கிருஷ்ணா கொல்கத்தாவில் இருந்து, பலவாறு பேசியும் தன்முடிவில் அசையாமல் இருந்தான் அசோக்.

“இந்த காலத்துல கல்யாணம் நடந்த, ஆறு மாசத்துலயே டிவோர்ஸ் அப்ளை பண்ணி பிரியுறாங்க. அப்படி ஏதாவது பிளான் பண்ணி அப்பாகிட்ட இருந்து தப்பிக்க பாருடா!” என்ற அருண், குறுக்கு வழியை நண்பனாக தம்பிக்கு அறிவுறுத்த,

“தெரிஞ்சே ஒரு பொண்ணை ஏமாத்த சொல்றியா? அப்படி செஞ்சா, இத விட கெடுபிடி பண்ணி என்னை ஒரு அக்யுஸ்ட் மாதிரி நடத்த ஆரம்பிச்சிடுவாரு..! அதுக்கு இப்படி இருந்தே நான் போராட்டம் பண்றேன்” என தன்நிலையில் நின்றான்.

தந்தையின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருந்தான் அசோக். வாரம் ஒருநாள் பெண்களுடன் ஊர் சுற்றுவதை, தினமும் என்கிற ரீதியில் மாற்றிக் கொள்ள, போதையில் உழன்று வீட்டிற்கு வரும் நாட்களையும் அளவுகளையும் அதிகமாக்கிக் கொண்டே வந்தான். வைஷாலி என்பவள் அவனது எண்ணத்தில் இருந்தாலும், அவளைச் சென்று பார்க்க வேண்டாமென்ற வீம்போடு இருந்து விட்டான்.

ஆனால் காலமும் நேரமும் இருவரையும் சந்திக்க வைத்து ஒரு நேர்கோட்டில் நிறுத்தி விட, ஆர்வ மிகுதியில் உற்சாகம் கரைபுரள மீண்டும் அவளிடம் தானாகவே பேசச் சென்றான்.

           **********************************

ஸ்வப்னாவின் திருமணத்திற்கென சென்னை தி.நகரில் உள்ள பிரபல மால் ஒன்றில் ஜவுளிகள் எடுக்க, தோழிகளுடன் வந்திருந்தாள் வைஷாலி.

தங்களுக்கு வேண்டியதை எடுத்துவிட்டு, நான்காவது மாடியில் இருந்து லிஃப்டில் இறங்கும் பொழுது, மூன்றாவதுமாடி லிஃப்டில் தன் நண்பனுடன் இணைந்து கொண்ட அசோக், நண்பனை தரைத்தளத்தை அடைந்ததும், தனியே செல்லுமாறு காதில் கிசுகிசுத்து அனுப்பி விட்டான்.

லிஃப்டில் பெண்கள் மூவரும் பார்வையாலேயே ஒருசேர அவனை பார்த்து முகம் சுளிக்க. இவனோ ஆச்சரியம் கலந்த பார்வையில் வைஷாலியைப் பார்க்க,

‘இதென்னடா, இத்தனை வெறுப்பை நம்மீது வளர்த்து வைத்திருக்கிறாள்’ என்ற தவிப்பும் தானாக மனதில் வந்தமர்ந்தது.

தரைதளத்தை அடைந்ததும் வைஷாலியை ஒரு நிமிடம் நிற்குமாறு சைகையில் சொல்ல, இவளோ ‘வேண்டாம் இந்த வம்பு’ என்ற முடிவில், தோழிகளுடன் அவனைக் கடந்து செல்ல ஆரம்பித்தாள்.

இவள் செல்வதைப் பார்த்தே அசோக், விரைவாக பின்னே வந்து வம்படியாக அவளின் கைகளைப் பிடித்து, வண்டிகள் நிற்கும் தளத்தில் இழுத்துக் கொண்டு வந்து நின்றான்.

அசோக்கின் செயல் சற்றும் பிடிக்கவில்லை என்றாலும் பொது இடத்தில் இவனை அதட்டி, மற்றவர்களின் பார்வைக்கு கேலிகூத்தாகாமல் இருக்க, வேண்டா வெறுப்பாக இவனின் பின்னே சென்றாள்.

இவனது செயல்களால் வைஷாலியின் முகத்தில் ஆயிரமாரயிரம் கோபபாவங்கள் வெடிக்கத் தொடங்கியிருக்க, அசோக் தனக்கு உண்டான படபடப்பில் நிதானம் விலகாமல், இவர்களின் பின்னோடு வந்த தோழிகளைப் பார்த்து,

“ஒரு “ஃபைவ் மினிட்ஸ் தனியா பேசணும் ப்ளீஸ்…” என்று சொன்னாலும் அவர்கள் அகலாது நிற்க,

“ஷாலி சொல்லு! ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்…” என்று கண்களால் சுருக்கி கெஞ்ச,

அந்த இடத்திலேயே அவனை தவிர்த்துவிட்டு, சென்று விடத்தான் வைஷாலி நினைத்தாள். ஆனாலும் இவளது இயல்பான இரக்க சுபாவம், அவனது கெஞ்சலில் இளகச் செய்ய, தோழிகளை பார்வையில் விலகி நிற்கச் சொன்னாள்.

நொடி நேரம் அமைதியில் கரைந்த அசோக், “ஹாய் ரொம்ப பிஸியா?” என பேச்சை ஆரம்பிக்க,

“இத கேக்கதான், இங்கே கைய பிடிச்சு நிப்பாட்டுனீங்களா?” என்றவளின் கேள்வியில் அத்தனை காட்டம் வெளிப்பட்டது.

“ஒஹ்… சாரி, சாரி… ஷா… நான் என்ன சொல்ல…” என்ற அசோக்கின் பேச்சை தடை செய்தவள்,

“லுக் மிஸ்டர்… என் பேரு வைஷாலி… உங்க இஷ்டத்துக்கு ஷாலி… ஷான்னு சுருக்க, உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது…” என்ற அதட்டலில்,

இவன் நாக்கை கடித்துக் கொண்டு ‘சாரி’ என்று மீண்டும் கண்களால் கெஞ்ச, பெருமூச்சு விட்டபடியே தன்னை சமன் படுத்திக் கொண்டவள்,

“என்ன விஷயம்?” என்று கடுப்புடனேயே கேட்டாள். 

“இங்கே நின்னு பேச வேணாமே..! காஃபி ஷாப் போவோமா?”

“தேவையில்ல… சொல்ல வந்தத சொல்லுங்க…”

“அது… சாரி… அன்னைக்கு… எப்படி சொல்றதுன்னு தெரியல…” அசோக் தவிப்பாய் வார்த்தைகளில் தந்தியடிக்க,

“என்ன சொல்லணும்?” முறைப்பாகவே இவள் மேலும் கேட்க,

“அன்னைக்கு ஊர்ல இருந்து சீக்கிரமா திரும்பி வந்ததுக்கு காரணம் என்னன்னா…” என்று வைஷூவின் முகம் பார்க்க,

‘நாலு பேர் பார்க்குற இடத்துல, சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்கான்… இடியட்’ மனதிற்குள் வசைமாறிப் பொழிந்தவள், சுற்றும் முற்றும் பார்த்து மேற்கொண்டு சொல் என்னும் பார்வையில் நிற்க,

“உன்னை இங்கே நிக்க வச்சுக்கிட்டு சொல்றது சரியில்லதான்… ஆனாலும் சொல்லிடுறேன்…” என்று அவளைப் பார்த்து புன்னகத்தவன்,

“லைஃப் லாங் உன்கூட ஃப்ரண்டா இருக்க ஆசைப்படுறேன்னு சொல்லத்தான், உன்னைத் தேடி கிராமத்துக்கு வந்தேன். ஆனாலும் உன்னைப் பார்க்க முடியல…” என்று இவன் மிக எளிதாகச் சொல்லி முடிக்க, அதிர்ச்சியில் உறைந்தே போனாள் வைஷாலி.

என்ன வார்த்தை சொல்லிவிட்டான்? கடைசியில் தான்நினைத்தது சரிதான்! ஆசை வார்த்தைகளை பேசி மயக்கவில்லை என்றாலும், பழக்கம் இல்லாத பெண்ணிடம் தானாக வந்து சிரித்துப் பேசுவதை எப்படி நட்பாக எடுத்துக் கொள்ள முடியும்?

நட்பிற்கும் ஆசைக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாத மடையனிடத்தில் காதலை எதிர்பார்த்தது, தனது முட்டாள்தனமே என மனதிற்குள் தலையிலடித்துக் கொண்டவள்,

“ஐயாம் சாரி மிஸ்டர்… உங்க அளவுக்கு நான் ஓபன் டைப் கிடையாது. என்னோட ஃப்ரண்ட்ஷிப் எல்லாம் கேர்ள்ஸ் கூட ஸ்டாப் ஆகிடும். நீங்க எதிர்பாக்குற பொண்ணு நான் இல்ல…” என்றதோடு பேச்சு முடிந்தென அவனை விட்டு கிளம்ப எத்தனிக்க, தான்பேசிய பேச்சின் வீரியம் புரியாமல் அவளின் கையை வீம்பாக பிடித்து இழுத்து நிறுத்தினான் அசோக்.

“எடுங்க கைய… இன்னும் ஒருதடவ இப்படி கைய பிடிச்சு இழுத்தா, உங்ககை, உங்ககிட்ட இருக்காது சொல்லிட்டேன்…” அவனது அத்துமீறலில் அடங்காத கோபம் வர, அருவெறுப்புடன் அவனைப் பார்த்து எச்சரித்தாள் வைஷாலி.

“எதுக்கு இவ்ளோ கோபம் ஷா…” என்றவனின் பேச்சினில் இடையிட்டவள்,

“பேர் சுருக்குற வேலையையும் தூக்கிப் போடச் சொல்லியாச்சு… சொல்றத கேக்காம போனா, உங்க வாய் வெத்தலபாக்கு போடுறதுக்கு, என் கையோ, என்னோட கால் செருப்போ காரணமாகிடும். பக்கா கிராமத்து பொண்ணு நானு… அடிக்கிறதும் அடக்குறதும் என் ரத்தத்தில ஊறிப் போயிருக்கு.

ஹாஸ்டல்ல தங்கி வேலை பாக்குற பொண்ணு… கல்யாணம் வேண்டாம்னு சொல்றவ… வேற மாதிரி பழக தோதா இருப்பான்னு நினைச்சு, என் பின்னாடி வர்றத இதோட நிப்பாட்டிக்கோங்க… இனி ஒரு வார்த்தை என்கிட்ட பேசுறதுக்கும் நூறு தடவ யோசனை பண்ணிட்டு வாங்க…” படபட பேச்சில் அதீத கோபத்துடன், முகத்தில் காரி உமிழாத குறையாக அடிக்குரலில் சீறி முடித்தவள், தோழிகளுடன் சென்று விட்டாள்.

பிடித்து வைத்த பொறுமைகள் எல்லாம் காற்றில் பறக்க, தன்நிதானத்தை ஒட்டு மொத்தமாக கைவிட்டு, ஏகத்திற்கும் அவனை திட்டியவள், தன்மனதை சமன்படுத்த மிகவும் பிரயத்தனப்பட்டாள்.

விடுதி அறைக்கு வந்த பிறகும் தனது கோபத்தின் அளவு குறையாததைப் பார்த்து அவளுக்குமே அதிர்ச்சிதான். தனக்கு இத்தனை கோபம் வருமா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.  

வாழ்வில் முதன்முறையாக ஒருவனிடத்தில், அதுவும் தன்மனதிற்கு விருப்பமானவன் என்று நினைப்பவனிடத்தில் கோபப்பட்டிருக்கிறாள் என்பதை உணரும் பொழுதே, அந்த தாக்கத்தின் அறிகுறியாக பதட்டமும் நடுக்கமும் கைகளில் தென்பட, தன்னை முழுவதும் வெறுத்து கொண்டாள்

ஒரு ஆணின் மனதில் பொழுதுபோக்கு பாவையாக சித்தரிக்கப்படும் அளவிற்கா தான்தரம் தாழ்ந்து நடந்து கொண்டோம் என்ற வேண்டாத நினைவுகள் அவளை, தன்நிலையில் இருந்து கீழிறக்க ஆரம்பித்தது.

எந்த அசைவும் இல்லாமல் அறையின் சுவற்றை வெறித்துப் பார்த்தவளை தோழிகள் கவனத்தில் கொண்டு, ஆதரவாய் தோள் சாய்த்துக் கொண்டனர்.

“ரிலாக்ஸா இருடா வைஷூ! நடந்தத மறக்க பாரு. இதெல்லாம் இப்போ சகஜமாயிடுச்சு… அதான் அவன் ஈசியா கேட்டுட்டான்” என்று ஸ்வப்னா சமாதானம் செய்ய,

“இப்போ எல்லாம் பிக்கப்பு, ட்ராப்பு மாதிரி, லிவிங் டுகெதர் பாலிசி சிம்பிள் மேட்டர் ஆகிடுச்சு. நீ ஸ்டடியா இருடா..! வொர்ரி பண்ணிக்காதே!” என்று நிஷாவும் ஆசுவாசப்படுத்த சற்றே நிகழ்விற்கு வந்தாள் வைஷாலி

“இன்னைக்கு நடந்தது மட்டும் எங்க பாட்டிக்கு தெரிஞ்சது என்னைக் கொன்னு போட்ருவாங்க நிஷூ! அவன் இப்படி இறங்கி வந்து பேசுற அளவுக்கா, நீ மோசமா பழகி இருக்கேன்னு என் மேலதான் பழி போடுவாங்க சிவப்பி!” என பயத்தில் பிதற்றவும் ஆரம்பித்தாள் வைஷாலி.

“லீவ் இட் வைஷூமா! எதையும் மனசுல போட்டு உளப்பிக்காதே! அவன் செஞ்ச தப்புக்கு நீ எப்படி காரணமாக முடியும். நாங்க உன்ன மோடிவேட் பண்ணாம இருந்தா, நீயும் உன் போக்குல நிம்மதியா இருந்திருப்ப… இதுல எங்க தப்பும் இருக்கு… சாரிடா!” என்று ஸ்வப்னா, தோழியின் இன்னல்களுக்கு தங்களையே காரணமாக்கிச் சொல்ல,

“எஸ் டா! அவனோட ஒவ்வொரு ஆக்சனுக்கும் நாங்க ரியாக்சன் செய்யாம இருந்திருந்தா, உனக்கு இந்த சிக்கலே வந்திருக்காது” என்ற நிஷூ,

“எனக்கு அசோக் மேல சந்தேகமா இருக்குடி. மே பீ அவனோட தயக்கமும் பயமும்தான், உன்கிட்ட லவ் சொல்ல தயங்கி, ஃப்ரண்ட்ஷிப்னு ஆரம்பிக்கிறானோ?” என சந்தேகத்தில் நிறுத்த, மற்ற இரண்டு பெண்களுக்கும் லேசாய் பொறி தட்டியது.

ஒருவேளை இப்படியும் கூட இருக்குமோ? திருமணமே வேண்டாமென நின்றவன், காதலைச் சொல்கிறான் என்ற கேலிப்பார்வை தன்மேல் படராமல் இருக்க, இருவரின் உறவிற்கான முதற்படியாய் தோழமையை கையில் எடுத்து விட்டானோ, நான்தான் அதனைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற குழப்ப எண்ணங்கள் வைஷாலியை மீண்டும் அலைகழிக்க, இறுதியில் இவன் அத்தனை பயந்தவனா? என்ற கூடுதல் கலக்கமும் மனதில் எழ, மிகவும் நொந்து போனாள்.

தோழிகளின் சமாதானங்களும், இரவின் அமைதியும் வைஷாலியை அமைதிப்படுத்த முயற்சித்தும் தோல்வி அடைந்தது. இனி ஜென்மத்திற்கும் இந்த அசட்டு புத்திசாலியின் முகத்தை பார்க்கக் கூடாது என்ற உறுதியுடன் மன இறுக்கம் அகலாமல் உறங்கச் சென்றாள்.

இறுக்கம், கோபம் இரண்டும் எப்படி இருக்கும்? கிலோ என்ன விலை? என்று அப்பாவியாக கேட்பவளை, உணர்வுபூர்வமாக அவற்றை ஒரே நேரத்தில் அனுபவிக்க வைத்திருந்தான் அசோக்கிருஷ்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!