இனிய தென்றலே

N3HCAKCMYRCCAGB0BE0CA2SNN7ICA03130KCAP8J5V0CAXKCEONCAZOFKA2CARWF0E6CAA4G50ECAS5BF3HCAMSFZGNCAC1M1IZCAZQ9N61CAMYBMSNCA2LH297CA9EFFSUCAK7OLM8CAAJN0P9CAYVEP0V

இனிய தென்றலே

தென்றல் -1

இனிய தென்றலே

இரு கைகள் வீசி வா…

இளைய தேவதை

இவள் பேரை பாடி வா…

கவி கம்பன் காவியம்

ரவி வர்மன் ஓவியம்

இரண்டும் இவளோ

இனிக்கும் தமிழோ..!

 

காவேரி அன்னையின் சலசல ஓட்டம் பாசமான அரவணைப்பை கொடுக்க, காலைத் தென்றலின் இதமான தாலாட்டில், கொள்ளிடக் கரை பாலத்தை தன் பார்வையால் புன்சிரிப்புடன் கடந்து கொண்டிருந்தாள் வைஷாலி…

ஆயிரம் நகரங்களைப் பார்த்து, பத்தாயிரம் வசதிகளை அனுபவித்தாலும் சொந்த கிராமத்தின் மண்வாசனையை நுகரும் போது ஏற்படும் ஆனந்தமே தனி..!

இயன்ற அளவு கிராமத்துக் காற்றை தன்னுள் இழுத்து சேமித்துக் கொண்டவள், துறையூர் கிராம பேருந்து நிலையம் அடைய இருபது அடி இருக்கும் பொழுதே, பேருந்தை நிறுத்தி கீழே இறங்கிக் கொண்டாள்.

சாலையின் ஒருபுறம் பசுமை வயல் பாய் விரித்திருக்க, அதன் எதிர்புறம் இறங்கி நடந்தால், ஊருக்குள் சென்று விடலாம். ஊருக்குள் பிரியும் பாதையின் ஆரம்பத்தில் இவளின் வீடு அமைந்திருந்ததால், குறுக்கு பாதையில் வீட்டை அடைவது மிக எளிதான வழி.

பேத்தியை வரவேற்க, இவளின் பாட்டி எப்பொழுதும் போல், இறங்கும் இடத்தில் காத்துக் கொண்டிருக்க, பேருந்து நின்றதும், “அன்னபூரணி…” ஆர்பாட்டமாய் அழைத்த வண்ணமே வெளியே குதித்தாள்.

“ஹவ் ஆர் யூ, மை கியூட் ஏஞ்சல்?” நலம் விசாரித்தபடியே, பாட்டியை கட்டிக்கொள்ள,

“என்னம்மா பாட்டிய பேர் சொல்லிக் கூப்பிடுறீங்க?” இவளின் டிராவல் பேக்கை எடுத்துக் கொடுத்த, பேருந்து நடத்துனர் கேட்க,

“என் பாட்டிய, எனக்கு பிடிச்ச மாதிரி கூப்பிடுறேன் வைத்திசார்..! பஸ்ல என்கிட்ட மொக்கை போட்டது பத்தாம, என் வீட்டுக்கும் வந்து அறுவை போடுற ஐடியா இருந்தா, விட்டுட்டு வண்டியில ஏறுங்க… போலாம் ரைட் ரைட்…” சொன்ன வைஷாலி தன் வாயால் விசிலடிக்க,

“நல்ல பொண்ணும்மா நீ… உன்கூட பேசிட்டு வந்ததுல தூக்க கலக்கமெல்லாம், எனக்கு காணாம போயிடுச்சு தங்கச்சி… வர்றேன் பாட்டி!” என்று கூறி இருவரிடமும் விடைபெற்றார் நடத்துனர்.

“என்னடி, நேற்றைய பஸ் சிநேகிதமா?” கேட்ட அன்னபூரணியின் பிசிறில்லாத பேச்சில் எழுபது வயதின் தாக்கம் சிறிதும் இல்லை.

சற்று கனமான சரீரத்துடன், உயர்ரக பருத்தி புடவையில் நிமிர்வாய் இருந்தார் அன்னபூரணி பாட்டி. மகன் வயிற்றுப் பேத்தி வைஷாலியை கடந்த இருபது வருடமாக, ஒற்றை ஆளாக தன்தோளில் சுமந்து, ஒரு பட்டதாரியாக வளர்த்து விட்ட முதியவர்.

தங்களுக்கு சொந்தமான நிலபுலன்களை தனது மேற்பார்வையில் இன்றளவும் பராமரித்து வரும் கிராமத்து பெண்மணி. தனது பேத்தியின் வளர்ச்சியை மட்டுமே தனது முழுமூச்சாக எண்ணி வாழ்ந்து வருபவர்.

சிறியவளிடம், தான்எப்பொழுதும் அவளுக்கு ஒரு நல்லதோழி என்ற எண்ணத்தை உணர வைப்பவர். அந்த தோழமைப் பண்பை, பேத்தியும் தான்பேசும் அனைவரிடத்திலும் கடைபிடிக்க, முன்இரவு பயணம் செய்த பேருந்தின் நடத்துனரை நண்பனாக்கிக் கொண்டு, ஊருக்கு வந்து சேர்ந்திருக்க, அதை குறிப்பிட்டே பேத்தியை விசாரித்தார்.

“நமக்குதான் யாதும் ஊரே! யாவரும் நண்பரேதானே அன்னம்மா..! இதெல்லாம் புதுசா என்ன? அப்புறம், ஊரெல்லாம் நல்லா இருக்கா?” என்று கேட்ட பேத்தியை பார்வையால் சுட்டெரித்தவர்,

“வீட்டுல பேர் சொல்லிக் கூப்பிடுறது பத்தாதுன்னு, இன்னைக்கு வெளியேயும் என்பேர ஏலம் விட ஆரம்பிச்சுட்டியா? அந்த கண்டக்டர் முன்னாடி கூப்பிட்டு என் மரியாதை போச்சு, போடி…” பொய்க் கடுப்பில் முகத்தை திருப்பிக் கொண்டார்.

“என்ன பூரணி? நீயும் நானும் அப்பிடியா பழகி இருக்கோம்? என் ஏஞ்சல, நான் கூப்பிடாம வேற யார் கூப்பிடப் போற? போட்டிக்கு இருந்த தாத்தாவும் மேலே ஷிஃப்ட் ஆகி முப்பது வருசமாச்சு… கமான் பேபி..!” என்று சமாதானம் செய்தபடியே தனது தோளில் இருந்த, ஹாண்ட் பேக்கை பாட்டியின் கைகளுக்கு மாற்றி விட்டாள் வைஷாலி.

“ரெண்டு வாரத்துக்கு ஒருதரம் சென்னையில இருந்து வந்து, ஏதோ எனக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச மரியாதையும் கெடுத்துட்டு, என்னை சமாதானப்படுத்த வேணாம்…” என்று அன்னம் பாட்டி முறுக்கிக் கொள்ள,

“அச்சோ என் சமத்துப் பாட்டி..! கோபம் வந்தா என்ன அழகா இருக்க தெரியுமா? உன்னைப் போயி சீனியர் சிட்டிசன்ல நான் எப்டி சேர்க்க?”

“இப்டி சால்ஜாப்பு பேசியே ஆளைக் கவுத்துடு, போடி… போடி…” பாட்டி வீம்பிற்கே கோபத்தை நீட்டிக்க,

“சரி… சரி… சமாதானம், என் இனிய வெள்ளைபுறாவே..!” பாட்டியின் தாடைப் பிடித்து கொஞ்சியவள்,

“எப்படி இருக்க பாட்டி?” அன்புடன் கேட்க,

“எனக்கென்ன, நான் நல்லாத்தான் இருக்கேன்… நீதான் குண்டாகி வந்துருக்கே!” பாட்டியும் நொடித்துச் சொல்ல,

“என்ன சொன்ன பூரணி?” நொடியில் காளிக்கு தங்கையாக அவதாரம் எடுத்து வைஷாலி கேட்க,

“ம்‌ம்… ஒரு சுத்து பெருத்திருக்கடி, என் சீமை சித்ராங்கி…!” பேத்திக்கு பழிப்பு காட்டியபடியே வம்பு வளர்த்தார் அன்னம் பாட்டி.

“என்ன அன்னம்மா? உடம்பு எப்படி இருக்கு?” என்று நெற்றிக் கண்ணைத் திறந்தவள்,

“ஹாஸ்டல் சாப்பாடு பிடிக்காம, பட்டினி கிடந்து, உடம்பு துரும்பா இளைச்சு போய் வந்திருக்கேன்… வா! வந்து ஒழுங்கா சமைச்சு போடு! என்னை ஸ்லிம் பியூட்டி ஆக்குறேன்னு கீரை கஷாயம் வச்சே… ரெண்டு நாள் என் சமையல சாப்பிடுன்னு கொடுமை படுத்துவேன் பார்த்துக்க…” என்ற அதிரிபுதிரியான மிரட்டலுடன் வீட்டிற்கு இழுத்துச் சென்றாள்.

வீட்டு வாசலை அடையும் பொழுதே, “என்ன வைஷாலி, எப்படி இருக்க?” என்று பக்கத்து வீட்டு அக்கா கேட்க,

“பேஷா நன்னாயிட்டு இருக்கேன்க்கா!”

“கொஞ்சம் சதை போட்டுட்ட போல, பார்த்தாலே தெரியுது!” பதிலுக்கு அந்த அக்கா சிரித்தே கலாய்க்க,

“என்னாங்கடா… ஆளாளுக்கு இதையே சொல்லி கண்ணு வைக்கிறீங்க… களத்துல இறங்கு வைஷு…” இடுப்பில் கைவைத்து முறைத்து காட்டியவள், கீழே கிடந்த கல்லை கையில் எடுக்க, அந்த அக்கா சிட்டாக பறந்து விட்டாள்.

“நான்தான் சொன்னேனே… கேட்டியா நீ?” என்று பாட்டியும் எகத்தாளமாய் சிரிக்க, அவரையும் முறைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.

வைஷாலி இருபத்தி நான்கு வயது இளமைப் பட்டாசு…  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத, விஸ்தார மனோபாவம். படபட பேச்சில் அனைவரையும் தன்னருகே கட்டிப்போட்டு மயக்கும் மகுடி… இறுக்கம், கோபம் இரண்டும் எப்படி இருக்கும்? கிலோ என்ன விலை? என்று அப்பாவியாக கேட்கும் உற்சாக மனமுடையவள்.

கிராமத்து நிறத்தையும் தாண்டிய அவளது செழுமை நிறம், பார்ப்பவரை கவர்ந்து இழுக்கும். அழகிய வனப்பிற்கே உரிய அனைத்து அம்சங்களும் சற்று கூடுதல் அழகுடன் பொருந்தியிருக்க, ஐந்தரை அடி மெழுகுச் சிலையாக மிளிர்ந்தாள். 

பிறந்த இரண்டு வருடத்திலேயே பெற்ற தாயை இழந்தவள், தனது ஐந்தாவது வயதில் ஊரையே காவு வாங்கிய விஷக் காய்ச்சலில் தந்தையையும் இழந்தாள்.

பெற்றவர்கள் இல்லாத குறை தெரியாமல், இவளை வளர்க்கும் பொறுப்பை பாட்டி அன்னபூரணி ஏற்க, இவளது பிள்ளைப் பருவமும் கல்லூரிப் பருவமும் எந்தவித தடங்கலுமின்றி மகிழ்ச்சியாக கழிந்தது. பாசத்துடன், கண்டிப்பையும் காட்டி வளர்த்த பாட்டியின் பேரன்பில், இவளும் பெற்றவர்களை இந்தநாள் வரையிலும் தேடியதில்லை.

விவசாயத்தில் வரும் வருமானம் தடையில்லாமல் மிகுதியாகவே கிடைக்க மேல்தட்டு வசதி வாய்ப்புகளுடன் வளர்ந்தவள் வைஷாலி. ஆனாலும் வெளியுலகம் தெரிந்து கொண்டு, சுயசம்பாத்தியம் செய்ய வேண்டும் என்கிற ஆசை அவளையும் விட்டு வைக்கவில்லை.

அந்த ஆவலுடன், கிராமத்து பெரிய மனிதருடைய உறவுக்காரரின் மேற்பார்வையில் இயங்கி வரும், கைவினை கலைகாட்சிக் கூடத்தில்(ஆர்ட்ஸ் கேலரி) சென்னையில் கடந்த ஒரு வருடமாக, வேலை பார்த்து வருகிறாள். கல்லூரி காலம் தொட்டு விடுதியில் தங்கி வருபவள், இன்னமும் அதனைத் தொடர்கிறாள்.

பி.காம் இளங்கலை படிப்பை முடித்து விட்டு ஓவியக் கலையின் மேலுள்ள ஆர்வத்தால், அதில் ஒரு வருட டிப்ளமோ படிப்பையும் முடித்தவள், கலைகாட்சி விற்பனை கூடத்தில் விரும்பியே வேலைக்குச் சேர்ந்தாள்.

தனது அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு தினமும் அலைபேசியில் பாட்டியுடன் பேசினாலும், இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக்கிக் கொண்டவள்.

அப்படி வரும் நாட்களில் பாட்டியோடு வம்பு வழக்கடித்து அந்த வீட்டையே இரண்டாக்கி விடுவாள். பெரியவரும் பேத்தியின் அலம்பல்களுக்கு சற்றும் குறையாமல் எதிர்வாதம் செய்து, அவளுக்கு கொட்டு வைப்பதில் சளைக்க மாட்டார்.

அன்றைய தினம் பயணக் களைப்பு தீர குளித்து வந்த வைஷாலியின், மூக்கும் நாக்கும் போட்டி போட்டுக் கொண்டு தன்கடமையைச் செய்திட,

“என்ன கமகமன்னு வாசனை தூக்குது? ஏகப்பட்ட ஸ்பெஷல் அயிட்டம் ரெடியாகுது போல…” மோப்பம் பிடித்தவாறே, சமயலறையின் உள்ளே நுழைந்தாள். 

அங்கே வேலைக்கார பெண் ஜெயா அடுப்படியில் நின்று கொண்டிருக்க, பாட்டி, வடை கேசரி செய்யும் அளவுகளை சொல்லிக் கொண்டிருந்தார். வீட்டையும் தோட்டத்தையும்  சுத்தப்படுத்தும் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன.

“என்ன விசேஷம் அன்னம்மா? வடை கேசரி எல்லாம் எனக்காகவா செய்ற?”

“இல்லடி தங்கம்… விருந்தாளிங்க வர்றாங்க…”

“யாரு? உன்னோட முறைபையன் குடும்பமா?” என்ற வைஷுவின் கேள்விக்கு, கரண்டியின் அடி பரிசாகக் கிடைக்க,

“அந்த முறைபையன கட்டியிருந்தா, இந்நேரம் பொறுப்பான பேரன் பொறந்துருப்பான்… என்ன பண்ண..? எல்லாம் என் விதி..! உன் அடங்காத தாத்தன கட்டிக்கிட்டதுக்கு பலனா, இப்படி ஒரு குரங்குக்குட்டி பேத்தியா வந்து வாய்ச்சிருக்கு…” அங்கலாய்த்தபடியே பேத்தியை வாரிவிட்டார் பாட்டி.

“வயசானாலும் வாய் அடங்குதா பாரு! இதுக்கு பயந்தே எங்க தாத்தா எஸ்கேப் ஆகிட்டாரு… நாந்தான் மாட்டிகிட்டு முழிக்கிறேன்..!” பாட்டியிடம் சிடுசிடுத்தவள்,

“ஜெயாக்கா நீயாவது சொல்லு யார் வர்றா?” கேள்வியை வேலைக்காரியிடம் திருப்ப,

“நம்ம மேலத்தெரு குமராசாமி அண்ணன் குடும்பத்தோட வர்றாங்க… வைஷூ…” என்று அவளும் பதில் சொல்ல,

“அவங்க எதுக்கு நம்ம வீட்டுக்கு வர்றாங்க…” பாட்டியை பார்த்துக் கேட்டாள் வைஷூ.

“அவங்க சித்தப்பா, சித்தியும் கூட வர்றாங்க…” ஜெயாவின் கூடுதலான தகவலில் பாட்டியை விறைப்புடன் பார்த்த வைஷாலி,

“எதுக்கு வர்றாங்க? நீதான் வரச் சொன்னியா பாட்டி? சொல்லு…” என்று அவரின் தோள்களை உலுக்கி எடுத்தாள். அவரும் பதில் சொல்லாமல் நிதானிக்க, அதில் கடுப்படைந்தவள்,

“பொண்ணு பார்க்க வர்றாங்களா?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,

“அப்படிதான் வச்சுக்கோயேன்… அதுக்கென்ன இப்போ..!” வேலையில் தன் கவனத்தை செலுத்தியபடியே அசராமல் பாட்டி பதில் சொல்லி விட, கோபத்துடன் அவரை தன் பக்கம் திருப்பினாள் பேத்தி.

“ம்ப்ச்… உன்னை, யாரு இந்த அதிகப்பிரசங்கி காரியம் எல்லாம் பண்ணச் சொன்னா? எனக்கு கல்யாணம் பண்ணிவைனு உன்கிட்ட நான் கேட்டேனா..!” நொடியில் பேத்தியின் முகம் கடுகடுப்பை எடுத்துக் கொண்டு பாட்டியிடம் கத்த ஆரம்பிக்க,

“சும்மா இருடி… உன் வயசுல நான், உங்கப்பனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டேன்… இன்னும் எத்தனை   நாளைக்குத்தான், நீ தனியா இருக்கபோற..?”

“ஏன்? தாத்தா இறந்த பிறகு, நீ தனியா இல்ல… அது மாதிரி என்னாலயும் தனியா இருக்க முடியும் பாட்டி. எனக்கு கல்யாணமே வேண்டாம்…” கோபத்தில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தாள் பேத்தி.

“அப்படி இல்லடி ராசாத்தி… எனக்கு பிறகு உனக்கு யாராவது ஒருத்தர் துணை வேணுமில்லையா!? அத யோசிடி செல்லம்…” கொஞ்சியபடியே தன்வழிக்கு பேத்தியை இழுக்க…

“அப்படி துணையா இருக்க கல்யாணம்தான் செஞ்சிக்கனும்னு கட்டாயமில்ல பாட்டி… அவ்வளவுக்கு தைரியம் இல்லாதவளா உன் பேத்தி? என்னை புரிஞ்சுக்கோ பூரணி செல்லம்…” கொஞ்சலிலும் கெஞ்சலிலும் ஒருவரையொருவர் மிஞ்சி நிற்க, முடிவில் பாட்டிதான் இறங்கி வர வேண்டியிருந்தது.

“இப்ப என்ன கண்ணு பண்ணச் சொல்ற..? வர்றவங்கள திரும்பிப் போங்கன்னா சொல்ல முடியும்..?” வழி தெரியாத குழந்தையாக, கேள்வியை முன்வைக்க…

“ஏன் இப்டி அவசரகுடுக்க மாதிரி காரியம் பண்றே? கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு ஆயிரம் தடவை சொல்லியாச்சு… உன் மண்டையில ஏறாதா பாட்டி!” சலித்தபடியே வைஷூ குரலை உயர்த்தினாள்.

“திட்டுடி… நல்லா திட்டு…! ரொம்ப திட்டுனா நான் செத்துப் போயிடுவேன்..! அப்புறம் நீ உன் இஷ்டத்துக்கு இருக்கலாம்தானே…” என்று பாட்டி அழுகையில் கரைய ஆரம்பிக்க,

“ஐயோ பாட்டி… எத்தன தடவ இந்த மாதிரி செத்துடுவேன்… செத்துடுவேன்னு சொல்லி பயமுறுத்தப் போற?”

“எனக்காக… இந்த ஒரே ஒரு தடவ மட்டும்… பையன் வெளிநாட்டுல வேலை பார்த்துட்டு வந்திருக்கான்… ராஜாவாட்டம் இருக்கான்… ப்ளீஸ்டி தங்கம்… உன் அன்னபூரணி பாவம் இல்லையா..?” சமாதன கெஞ்சல்களை, பேத்தியிடம் அவிழ்க்க, 

“திருந்தவே மாட்டியா பாட்டி? எல்லாம் உன்னிஷ்டம் தானா? என்னவோ பண்ணு போ…” மெல்லிய முறுவலில் பெரிய மனதுடன் ஒத்துக் கொண்டாள்.

எப்பொழுதும் தன்பாட்டியின் முகமும் மனமும் வாடாமல் பார்த்துக் கொள்வதில் வைஷாலி மிகுந்த கவனம் கொள்வாள். எந்த இடத்திலும் அவரை விட்டுக் கொடுக்காதவள்.

அது போலவே அன்னம் பாட்டியும், பேத்தியின் விருப்பமில்லாத எந்த காரியத்திலும் இறங்க மாட்டார். ஆனால் திருமண விசயத்தில் பேத்தியின் பிடிவாதத்தை ஆதரிக்க அவரின் மனம் ஒப்பாமல், அவ்வப்பொழுது இந்த மாதிரியான ஏற்பாடுகளை செய்து விடுவார்.

ஆண்களின் தயவில்லாமல் பாட்டியின் நிழலில் வளர்ந்த வைஷாலிக்கு, திருமண பந்தத்தின் மூலமாக ஒரு ஆண் மகனோடு தன்வாழ்வை பிணைத்துக் கொள்வதில் சற்றும் விருப்பமில்லை.

இத்தனை ஆண்டுகள் காணாத மகிழ்ச்சியையா திருமண வாழ்வு தந்து விடப் போகிறது என்ற மேம்போக்கான நினைவில் முடிந்த வரையில் அதற்கான ஏற்பாடுகளை தவிர்த்து விடுவாள்.

ஆனால் பாட்டியின் நியாயமான ஆசைகள் எட்டிப் பார்க்கும் வேளையில் பேத்தியின் விருப்பங்கள் செல்லாக்காசாகி விடும். அந்த சமயங்களில் பாட்டியின் மனம் நோகாமல் நடந்து கொண்டு, முடிவில் ஏதோ ஒரு தகுந்த காரணத்தை சொல்லி, முடிவு தன் கைமீறிப் போகாத வண்ணம் தவிர்த்து விடுவாள்.    

இருவருக்கும் இடையேயான பாசப்பிணைப்பு மிகவும் அலாதியானது. இந்த எல்லைதான் என்ற வரையறையை இவர்களுக்கிடையில் கணித்து விட முடியாது.

அன்றைய மாலைப்பொழுது… மனதையும் உடலையும் வருடிய இளந்தென்றலில் அனைவரும் லயிக்க, அன்னபூரணி வீட்டுத் தோட்டத்து விஸ்தாரமான அறையில் பெரியவர்கள் சூழ, பெண்பார்க்கும் வைபவம் நடந்து கொண்டிருந்தது.

குமாரசாமி, அன்னபூரணி பாட்டிக்கு நெருங்கிய குடும்ப நண்பர். தொழில் முறையிலும், ஊர் மனிதர் என்கிற முறையிலும் நன்கு பரிச்சயமானவர். அவரின் சித்தப்பா மகனுக்கென வைஷாலியை பெண் பார்க்க, தனது குடும்பத்துடன், மாப்பிளையையும் அழைத்து வந்திருந்தார். அவரின் சித்தப்பா ராமகிருஷ்ணனும் இதே கிராமத்தில் பிறந்து வளர்ந்தவராதலால், பாட்டியுடன் ஊர் கதையை அலசிக் கொண்டிருந்தார்.

“என்ன இருந்தாலும் கிராமம் மாதிரி வராது பெரியம்மா… எங்களுக்கு பிறகு வர்ற வம்சத்துக்கு, கிராமம்னு ஒன்னு இருந்தத படத்துலதான் அடையாளம் காட்டனும் போல இருக்கு…” மாப்பிள்ளையின் தந்தை, உலகவியலை பற்றிய கவலைகளை அலசிக் கொண்டிருக்க,  

“சித்தப்பா நாட்டு நடப்ப அடுத்து பேசலாம். இப்ப புள்ளைங்கள பேச வைச்சு, ஆக வேண்டிய காரியத்த பாப்போம்…” என்று குமாரசாமி அடுத்த கட்ட நடவடிக்கையை கைகளில் எடுக்க, பெண்ணையும் மாப்பிளையையும் தனியாக அனுப்பி வைத்தனர். 

தோட்டத்தில் மல்லிகைப் பந்தலின் கீழ் உள்ள சிமென்ட் பெஞ்சில் மாப்பிள்ளையுடன் தனியாக பேசவென,   அமர்ந்திருந்தாள் வைஷாலி.

லாவண்டரும் பச்சையும் கலந்த சில்க் காட்டனில், மல்லிகை பூவை இருபுறமும் தோள்களில் தவழ விட்டவாறு மை தீட்டிய விழிகளோடு, தன்னை ஏறிட்டவளை ஒரு நிமிடம் கண் அகலாது பார்த்தான் மாப்பிள்ளை அசோக்கிருஷ்ணா…

ஆறடி உயரத்திற்கு சற்றே குறைவு… எப்பொழுதும் முகத்தில் கொஞ்சமாய் குடி கொண்டிருக்கும் அளவான நேர்த்தியாக ட்ரீம் செய்யப்பட்ட தாடி, முகத்தின் பொலிவை மெருகூட்டிக் காட்டிட, தனக்கு பொருத்தமாய் அணிந்திருந்த டீ-சர்ட், ஜீன்ஸ் பாண்ட்டில், உறுதியான உடற்கட்டை அடக்கிக் கொண்டிருந்தான் அசோக் கிருஷ்ணா.

சமீபத்தில்தான் வெளிநாட்டு வாசம் முடித்து வந்தவன் என்பதை அவனது வெளிர் சிவப்பு நிறமும், அலட்டலான பார்வையும் சொன்னது.

அவனது பார்வையில் துணுக்குற்றவள், சளைக்காது எதிர்பார்வை பார்த்தாள். ‘நீ யாராயிருந்தால் எனக்கென்ன? இப்போதைய என் லட்சியம் எல்லாம் உன்னை நிராகரிப்பதே’ என்னும் ரீதியில் அவளும் பார்க்க, இருவரின் பார்வை பரிமாற்றத்திலேயே நொடிநேரம் கடந்தது.

முதலில் தனது முடிவினை தெரிவித்துவிடும் நோக்கோடு, எந்தவிதமான மேற்பூச்சுகளும் இல்லாமல் பேச ஆரம்பித்தாள் வைஷாலி.

“எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்ல…” என்று சொல்லி மாப்பிள்ளையாக வந்தவனின் முகம் பார்க்க,

“எனக்கும் இஷ்டம் இல்ல…” சந்தோஷக் குரலில் தனது தோள்களை குலுக்கியபடியே பதில் சொல்லி, நங்கையின் பேச்சிற்கு ஜோடி சேர்ந்தான்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!