இளைப்பாற இதயம் தா!-18அ

இளைப்பாற இதயம் தா!-18அ

இளைப்பாற இதயம் தா!-18A

ஐடா தேவகோட்டைக்குச் சென்றிருப்பதாக ரூபி பாட்டி எண்ணிக்கொண்டிருக்க, ஸ்டெல்லா மகளைப் பற்றிக் கேட்டதும் மனம் பதறிப் போயிருந்தார் ரூபி.

ஐடா எங்கிருந்து தன்னோடு அவள் ஊருக்குச் சென்றபின் பேசுகிறாள் என்பதே தெரியாமல் இருந்த தனது மடத்தனத்தை நொந்தபடியே, ஐடா தற்போது இங்குமில்லை அங்கும் செல்லவில்லை என்பதை அவள் தாயிடம் கூற முடியாத தர்மசங்கடத்தோடு, ‘கர்த்தாவே… அந்தப் புள்ளை இப்ப எங்க இருக்கா?’ எனும் கலக்கத்தோடும் நடப்பதை அந்தத் தள்ளாத வயதில் தனித்து எதிர்கொள்ள முடியாமல் அது அவரின் குரலில் வெளிப்பட்டிருந்தது.

ரூபி பாட்டியின் குரலில் தோன்றிய வித்தியாசத்தை உணர்ந்த ஸ்டெல்லா, “என்னம்மா உங்க வாய்ஸ் திடீர்னு டல்லா இருக்கு?”

“ஆன்… அது ஒன்னுமில்ல… ஸ்டெல்லா!  இதுவரை படுத்திருந்தேன்.  படுத்திட்டே பேசினது வாகா இல்லைனு எழுந்து உக்காந்து பேசினதுல வந்த வித்தியாசம்தான் அப்டி உனக்குத் தோணுதுபோல” என்று உளறிச் சமாளித்தவர், ஐடாவின் தாயிடம் உடல் நலனை விசாரித்தார் ரூபி பாட்டி.

ஸ்டெல்லாவோ தனக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த வாரத்தில் மருத்துவனையில் இருந்துவிட்டு அன்றுதான் வீட்டிற்கு வந்ததாக உரைத்தார். 

“என்னம்மா சொல்ற?” என்று அதிர்ச்சியாகத் துவங்கி ஸ்டெல்லாவின் உடல்நலனை தீர விசாரித்து, தற்போது எப்படி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் கேட்டு பேசிச் சமாளித்தவர், “உடம்பைக் கவனிச்சுக்கோம்மா ஸ்டெல்லா.  பேரன் ஐடாவோட அங்க வரும்போது நானும் வந்து உன்னைப் பாக்கறேன்” என்று போனை வைத்துவிட்டார்.

வைத்தவருக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.  அதே பதற்றத்தோடு ஐடாவிற்கு அழைக்க, இத்தனை நாள் அழைப்பை ஏற்றவள் இன்று ஏனோ எடுக்கவில்லை.

பதற்றத்தைச் சமாளிக்க முடியாமல் அடுத்து பேரனுக்கு அழைக்க… எடுத்தவனோ, “சொல்லுங்க பாட்டீ…” என்றான்.

விசயத்தைக் கூறிவிட்டு, “ஐடா அவங்கம்மா வீட்டுக்கும் போகலை!” என்று பதறிக் கூறியதைக் கேட்டும் பதறவோ அதிரவோ செய்யாமல் எந்த மாற்றமும் இன்றி அதே தொனியில் தொடர்ந்து ரீகன் பேச, “உங்கிட்ட நான் சொல்றது உனக்குப் புரியுதுதான…” என்று கடுமையாகக் கேட்டார் பாட்டி.

அப்போதும் அதே நிலையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தவன், அவன் இருந்த இடத்தில் சுற்றத்தை கண்களால் துளாவியபடியே, “அவளுக்கு கால் பண்ணி… இப்ப எங்க இருக்கானு கேளுங்க… பாட்டீ!” என்றான்.

“என்னாச்சு ரீகன்!”

“ஏம்பாட்டி”

“இப்படி எப்போ மாறுன?”

“எப்பவும் போலத்தான் இருக்கேன் பாட்டீ”

“ஐடாவைக் காணாம்னு பதறிப் போயிப் பேசினா… சின்ன வருத்தம்கூட இல்லாம…  ஒட்டாமப் பேசற! இப்ப எங்க இருக்க?”

“இருக்கேன்” சலிப்பாக வந்தது ரீகனிடமிருந்து.

பேரன் பழையபடி தப்பான பாதையில் பயணிக்கத் துவங்கிவிட்டதாக எண்ணிய பாட்டி, “ பழையபடி…” என்று இழுக்க,

“இனி நான் எது சொன்னாலும் யாரும் நம்பப் போறது இல்லை! நீங்க நம்பறவகிட்டயே பேசுங்க!” விரக்தியோடு பேசிவிட்டு பாட்டியின் பதிலுக்குக்கூட காத்திராமல் வைத்துவிட்டான்.

ரூபிக்கு பேரனது குரலில் தொனித்த சங்கடமும், இயலாமையும் புரிந்திட ஐடாவின் இருப்பைத் தெரிந்துகொள்ள வேண்டிய நிர்பந்தமும் மனதை உந்த பேரனை பிறகு கவனிக்கலாம் என்று ஒதுக்கி ஐடாவிற்கு மீண்டும் அழைத்தார்.

அழைப்பு சென்றதே அன்றி தற்போதும் எடுக்கப்படவே இல்லை.

‘முட்டாப் பயலா இருக்கானே இவன்.  அந்தப் பொண்ணுக்கு எதாவது ஒன்னுன்னா நம்மளைத்தானே வந்து அவங்க வீட்டுல கேப்பாங்கனு ஒரு யோசனை இல்லாம… ஏனோ தானோன்னு இப்படிப் பட்டும் படாம பேசினா… என்ன அர்த்தம்!’ என்று புலம்பியபடியே கர்த்தரை நோக்கி தனது வேண்டுதலை வைத்துவிட்டு, குட்டி போட்ட பூனையைப்போல அங்குமிங்கும் அந்தத் தள்ளாத வயதில் நடந்தார் பாட்டி.

***

மூடிய விழிகளுக்குள் தேவகோட்டை கிளம்பிய தினத்தில் நடந்த விசயங்களில் உழன்றபடியே உறக்கமா அல்லது கனவா என்பது புரியாமலேயே அரைத் தூக்கத்தில் ஐடா அந்த மருத்துவனையின் படுக்கையில் படுத்திருந்தாள்.  உடன் உறவுகள் எதுவும் இல்லை.

உடன் அவளோடு வந்திருக்க இசைந்த உறவையும்… உறவாட இசையாமல் தள்ளி நிறுத்தியதன் விளைவு ஐடாவின் இந்த தனிமை!

அவளறிவாள் தன்னவனைப் பற்றி!

இங்குதான் எங்காவது தூரத்தில் இருந்தபடியே தன்னைக் காவல் காத்துக்கொண்டிருப்பான் என்று!

இந்த உறக்கம் கூட அவனுக்காகத்தான்!

அவள் உறக்கத்திலிருக்கும்போது தோன்றாத உணர்வு, விழித்ததும் தோன்றுவது அவளுக்கே புரியாத ஒன்றுதான்.

உறக்கத்தில் அவனை நாடிச்சென்று அவளுக்கான அரவணைப்பையும் அன்பையும் காதலையும் வேண்டி கணவனிடம் விரும்பி ஏற்றுக்கொள்பவள், விழித்ததும் பார்வையாலேயே அவனைக் குத்தீட்டி கொண்டு கிழிப்பதை அவளும் அறிந்தே இருந்தாள்.

கற்பனையிலேயே பெண்களின் வாழ்க்கை சென்றுவிடுகிறதோ!

நீண்ட நேரம் அமர்ந்திருக்க வேண்டாம் என்று மருத்துவர் அவளைக் கூறியதால் படுக்கையில் படுக்க நினைத்ததும் ஓடி வந்து உதவ நினைத்தவனை பார்வையாலேயே தள்ளி நிறுத்தி, ‘நர்ஸ்… கொஞ்சம் என்னைப் படுக்க வைங்களேன்’ என்று கேட்டது அவனை எத்தனை வருத்தியிருக்கும் என்பதை அறியாதவள் அல்லவே.

இந்த நிலைக்கு அவள் வரக் காரணமான தருணத்தை நினைத்தபடியே படுத்தவளுக்கு தேவகோட்டை செல்வதாகக்கூறி கிளம்பிய தினத்தின் நினைவுகள்…

அன்று அவள் புக் செய்த ஸ்லீப்பர் கோச்சில் சொர்ப்பமானவர்களே முன்பதிவு செய்திருக்க ஒன்றிரண்டு நபருக்காக அத்தனை தூரம் அந்த பேருந்தை நிர்வாகம் இயக்க முடியாத நிலையில், அந்த நபர்களை ஸ்லீப்பர் வசதியில்லாத அவர்களின் மற்றொரு பேருந்தில் சேர்த்து அனுப்பிட முடிவு செய்திருந்ததை ஐடா அறிந்திருக்கவில்லை.

நேரில் சென்றபின் விசயம் தெரிய வந்திட, வேறு வழியின்றி அந்தப் பேருந்திலேயே தேவகோட்டை செல்லும் முடிவுக்கு வந்து தனது பயணத்தைத் துவங்கியிருந்தாள் ஐடா.

தாயிடம் தற்போது தான் கிளம்பி வருவதைக் கூறினால் அதுவும் தனித்து வருவதைக் கூறினால், “ஏன் ஐடா? மாப்பிள்ளை வரலையா?  பஸ்ல எதுக்கு வர?” எனும் கேள்விகள் எழக்கூடும் என்றெண்ணியவள், நேரில் சென்று பேசிக்கொள்ளலாம் எனும் தீர்மானத்திற்கு வந்திருந்தாள்.

அவளுக்கு ரீகனைப் பற்றியும் அவனது ஏமாற்றுத்தனத்தைப் பற்றியும் அலைபேசியில் தாயிடம் பேச விருப்பமில்லை. நேரில் அமர்ந்து தனது மனக்குறைகளை தாயிடம் கொட்டி, அவளின் மனக்குமுறல் தீரும்வரை தாயின் மடியில் படுத்து அழுது ரீகனைத் திருமணம் செய்ததால் உண்டானதாக அவள் எண்ணிக் கலங்கும் அவளின் கறைகளைக் களையும் எண்ணத்தில்தான் அவசர அவசரமாகக் கிளம்பியிருந்தாள் ஐடா.

பேருந்து பயணம் துவங்கி விழுப்புரம் வரும்வரை நடந்துபோன நிகழ்வுகளை அசைபோட்டபடியே விழித்திருந்தவள் அதன்பின் கடந்து போன தினங்களின் அழுத்தத்தால் நன்கு உறங்காதிருந்தமையால் அன்று அவளறியாமலேயே கண் அசந்திருந்த தருணம்!

உறங்காதவரை உறவாடப் பிரியமில்லாதவனோடு உறக்கம் நெருங்கியபின் அவளின் மனமும் நெருங்கிப் போகும் விந்தையை ஐடா துளியும் விரும்பாதபோதும் விரும்பி ஏற்றுக்கொள்ளத் துவங்கிய மேல்மனதின் உறக்க நிலையில் இருந்தாள்.

மனமெங்கிலும் ரீகனைப் பற்றியும் கடந்துபோன பதினோரு மாதங்களில் தான் இருந்ததற்கும், தற்போது தான் இருக்கும் நிலையையும் யோசித்து சோர்ந்து போன நிலையில் உறங்கத் துவங்கியதாலோ என்னவோ ஐடாவின் ஆழ்மனதிலிருந்த ரீகனது அண்மையை வேண்டிய தேடலுக்கு இதமான இளைப்பாறலாக அந்த உறக்கம் மாறியிருந்தது.

வசீகரனாக அவளை தன் கைவளைவில் கொணர்ந்து அரவணைத்தான்!

ஐடாவைத் தாங்கிக் கொண்டான்!

அவன் மார்பில் படுத்திருந்தவளை இரு கரங்களால் இருகக் கட்டியபடியே, ‘ஹனி… நேத்துக்கு ஒரு ஹாஃப் கேஜி குறைஞ்சிட்ட மாதிரி ஃபீல் ஆகுதே’ இந்தக் குரல் அவள் மீதான அவனது அக்கறையைக் காட்டியது.

இதமாக அணைத்தவாறே அவள் உச்சந்தலையில் அவன் தலையை சாய்த்தபடியே, ‘இப்படியே இருந்தா சாப்பாடெல்லாம் வேணாம்!’ எனும் ரீகனது மோகனக் குரலால் ஐடாவின் இதயத்திற்கு இனிமை தந்தான்!

யாருமில்லாமல் தனித்து அனாதையாக விடப்பட்ட உணர்வோடு உறங்கிப் போனவளுக்கு அந்த கனவுக் காட்சிகள் ஈடில்லாத இனிமையோடு தைரியத்தைத் தந்தது.

தனது வாழ்வு இனி என்னாகுமோ எனப் பதறிய நெஞ்சத்தில் பதற்றம் குறைந்து நிம்மதி வந்திருந்தது.

இந்த நிலை நிரந்தரமாக நீள… வானளவு வருந்தியிருந்த ஐடாவின் மனம் ஏங்கியது.

அன்று அவர்களின் வீட்டில் நடந்தது அனைத்தும் கனவுபோலவும், அந்த கனவில் தற்போது நடப்பது மட்டுமே நிஜம்போலவும் ஐடாவை நம்பச் செய்தது.

ஆழ்மனப் பிதற்றலோடு, ரீகனது அருகாமை அவளின் அனைத்து துயரங்களையும் துக்கங்களையும் துடைத்தாற்போன்றதொரு மனநிறைவோடு உறக்கம் அவளைத் தழுவிக்கொண்டிருந்தது.

ரீகன்!

கடந்துபோன அவளின் நாள்களை குத்தகைக்கு எடுத்துக்கொண்டவன்!

ஐடாவின் சந்தோசம், இனிமை, சிரிப்பு, காத்திருப்பு, காதல், அன்பு, நேசம் அனைத்திலும் பங்குதாரன்!

இருவரும் பேசிச் சிரித்து மகிழ்ந்திருந்த தருணங்கள் எதுவும் பொய்யில்லை என்பதை அவளால் உணர முடிந்தது!   

ஆனால் அவனது பழைய வாழ்வை அவளால ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

‘அந்த விசயங்கள் எல்லாம் பொய்யென்று மாறினால், என் ரீகனைப்போல அன்பாளன், அரவணைப்பாளன், ஆதரவாளன், நேசத்திற்குரியவன், கருணை மிகுந்தவன் வேறு யாரும் இருக்கவே முடியாது’ என்று ஐடாவின் மனம் ஆணித்தரமாக உறக்கத்திலும் நம்பியது.

ரீகனோடுடனான இணக்கமான நிமிடங்கள் நினைவில் வந்து நிம்மதியை மீட்டுத் தந்திருக்க… ஐடா மிகுந்த மன உளைச்சலிலிருந்து விடுபட்டுக் கொண்டிருந்தாள்.

நிச்சலனமாக சில நொடிகள் நீண்டிருந்தது!

ஏதோ வேகமாக வந்து மோதியது போன்ற பேருந்தின் குலுங்கல்! பெருஞ்சத்தம்! ஏதேனும் வெடித்ததோ!

அமர்ந்திருந்தவள் இருந்த இடத்திலிருந்து எங்கோ நழுவிய உணர்வு!

அதே நேரத்தில் ஆங்காங்கு புரியாத சப்தங்கள்!  வேதனையின் ஓலங்கள்!

கனவா? இல்லை நிஜமா என்று புரியாத குழப்பம்!

உடலில் ஆங்காங்கு வலியுணர்வு!

ஆனால் விழித்துப் பார்க்க முடியாமல் ஐடாவை ஏதோ அழுத்தியது!

சூடான ஏதோ திரவம் அவளின் உடலில் ஆங்காங்கு தெளித்தாற் போன்ற உணர்வு!

அமைதி!

சற்று நேரம் கழிந்தபின் அவளின் அருகே நெருங்கிய பேச்சு சத்தங்கள், கூக்குரல்கள்! இதுவரை அவள் கேட்டிராதது!

ஓலங்கள்!

ஆணின் குரலா அல்லது பெண்ணின் குரலா என்று பிரித்தறியத் தோன்றிடாத அவளின் நிலை என்னவென்பதே அவளுக்குப் புரியவில்லை!

நீண்ட நேரம் ஆங்காங்கு கேட்ட பேச்சுச் சத்தம் அவளின் அருகே நெருக்கமாகக் கேட்டது.

‘இவங்களைப் பாத்து வெளிய இழுங்க’ என்ற குரல் பரிச்சயமில்லாதது.

அவளின் கரங்களை, கால்களை உடலை அவர்கள் அசைத்தபோது வலித்தது.  ஆனால் ஐடாவால் அதற்கு எதிர்வினையாற்ற முடியாத நிலை. வலித்தாலும் அழவில்லை. ஆனால் வலி தாள முடியவில்லை.

அமர்ந்திருந்தவள் எப்படி இடுபாடுகளுக்கிடையே இருந்து இழுக்கப்படுகிறாள் என்பதே அவளுக்கு விளங்கவில்லை.  மனதோரத்தில் வயிற்றுப் பிள்ளையின் நினைவு வர உள்ளம் பதறியது அவளுக்கு.  ஆனால் அவளால் எதுவும் பேச முடியவில்லை. 

என்ன நடக்கிறது என்பதை அறிய மனம் ஆவல் கொண்டாலும் அவளால் அவளின் நினைப்பிற்கு ஏற்ப நடக்க முடியவில்லை. கனவிலிருந்து எழுந்துவிடலாமா என்று எண்ணி அவள் அதிலிருந்து வெளிவர முயன்றாலும் அவளால் வெளிவர முடியாத ஏதோ ஒரு தடை.  எது கனவு, எது உண்மை கலக்கத்தோடே நேரம் செல்கிறது.

அவளுக்கு அந்த நிகழ்வுகளைத் தொடர்வதில் விருப்பமில்லை.  ஆனால் மாறாக அந்த நிகழ்வுகளோடு சிக்கிகொண்டு திணறினாள்.

இது அத்தனையும் எதனால் என்பதே புரியாத மயக்கநிலையில் ஐடா!

அதன் பின் நடந்தது அனைத்திலும் ரீகனைத் தேடுகிறாள்.  அங்கு ரீகனோ அவனது குரலோ கேட்கவே இல்லை.  சற்று நேரம் முன்பு தன்னோடு இருந்தவன் தற்போது எங்கு சென்றானோ? என்று தோன்றியதுமே திருமணத்திற்கு முந்தைய அவனது செயல்பாடுகள் நினைவில் வந்து அந்நேரம் அவளைக் கொன்றது.

மனம் பதறியது!  தன்னை விட்டுவிட்டு பழையபடி யாரை நாடிச் சென்றிருப்பான் என்று.

அவளால் இனியும் அப்படியொரு நிகழ்வை நேரில் பார்க்கும் அல்லது கேட்கும் சக்தியில்லை.  அதற்கு தான் மரணிப்பதே மேல் என்று தோன்றியது.  அப்படியானால் அவனது தவறை மறந்து, மன்னித்து அவனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறாயா என்று கேட்டது மனம்.

அதற்கும் ஐடாவின் மனம் ஏற்க மறுத்தது!

இந்த மன ஓட்டங்களுக்கு இடையிலிருந்து வெளிவர முனைந்தாலும் அவளால் முடியாமல் ஏதோ துன்பத்தில் இடையில் சிக்கிக்கொண்ட உணர்வு.

குழப்பமும், நிம்மதியற்ற நிலையில் தொடர்ந்த நிகழ்வுகளுக்கிடையே ஏதோ வாகனத்தில் தன்னை ஏற்றுவதுபோலத் தோன்றியது.  தன் அனுமதியில்லாமல் தன்னை யார் எங்கு அழைத்துச் செல்வது என்று மனம் முரண்டினாலும் அவளால் அதனை மறுக்கவோ தடை செய்யவோ முடியாமல் போனது.  வாகனத்தில் தன்னை இட்டுச்செல்வது போன்றிருந்தது.

கசகசவென்று இருந்த பேச்சுச் சத்தம் குறைந்திருந்தது. உடன் யாருமில்லாமல் தனித்தொரு பயணம். ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டபடியே இருந்தது.

படுத்த நிலையில் பயணிப்பதுபோலத் தோன்ற, அதே நேரம் தான் ஸ்லீப்பர் கோச்சில் பயணிக்கவில்லையே என்றும் நினைவில் வர, எழுந்து அமர முயற்சித்தாலும் அவளால் முடியவில்லை.

கண்களைத் திறந்திருப்பதுபோலத் தோன்றினாலும் கண்ணைத் திறக்கவே முடியாத நிலை!

முன்னுக்குப்பின் முரணான நிலை!

வாகனம் நின்றாற்போலிருந்தது.  எந்த இடம் என்பதைப் பார்க்க நினைத்தவளுக்கு முடியவில்லை.  சற்று நேரத்திற்குப்பின் அந்தரத்தில் இருப்பது போன்ற உணர்வு. 

பிறகு மருத்துவமனையின் நெடி!

மருத்துவனைக்கு சில காலமாகச் சென்று வந்தாலும் இந்த நெடி மிகவும் வித்தியாசமாக இருந்தது.

அடுத்த மாதம் செக்கப்பிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தவளுக்கு, அதற்குள் மருத்துவமனைக்கு எதற்காக வந்திருக்கிறோம் புரியாத புதிராகத் தொடர்ந்தது.

இந்நிலை எத்தனை மணிநேரம் தொடர்ந்தது என்பதே புரியவில்லை.

அதன்பின் ஆழ்ந்த உறக்கமெல்லாம் இல்லாமல் அப்படியே நேரம் போனது.

பல மாறுபட்ட குரல்கள்!

எழ கண்ணைத் திற என்று மூளை உத்தரவிட்ட நிலையிலும் அவளால் எழ முடியவில்லை.

நீண்டதொரு அமைதி!  எவ்வளவு நேரமென்பது தெரியவில்லை.

பேச்சுக் குரல் அருகே கேட்டது.

‘இவங்களா பாருங்க!’

சற்று நேரத்தில் யாரோ வந்தவரைப் பிடித்து இழுத்து நிறுத்துவது போன்ற சத்தங்கள்.

‘நீங்க அவங்களை இப்ப டச் பண்ணாதீங்க சார்.  கண்ட்ரோல் பண்ணிக்கங்க.  வெளிய வயிட் பண்ணுங்க’ கடுமையாக ஒலித்தது.

‘ப்ளீஸ்… பக்கத்துல நின்னு பாக்க அலோவ் பண்ணுங்க சார்.  நான் டச் பண்ணாமப் பாக்கறேன்’ எனும் குரலை நீண்ட நேரத்திற்குப்பின் பரிச்சயமாக உணர்ந்தாள் ஐடா.

‘மயக்கத்துல இருக்காங்களா சார்.  எவ்வளவு நேரமா இப்படி இருக்காங்க?’

‘அவங்க வந்ததில இருந்தே அப்படித்தான் இருக்காங்க.  கொஞ்சம் பிளட் லாஸ்.  அதிர்ச்சி.  அதனால அப்படி இருக்காங்க.’

‘ரொம்பக் காயமா சார்? வேற ஹாஸ்பிடல் அழைச்சிட்டுப் போகலாமா?’ பதறியது குரல். அந்தப் பதற்றம் ஏனோ அவளுக்குள் ஒரு நிம்மதியைத் தந்தது.

தன்னைத் தேடி வந்த ஜீவனைக் காண பரபரத்தாலும் அவளால் முடியவில்லை!

‘சின்னச் சின்ன காயந்தான்.  பயப்பட ஒன்னுமில்ல.  அவங்க முழிச்சதும் டிஸ்சார்ஜ் பண்ணி நீங்க பிரைவேட் ஹாஸ்பிடல்கு கொண்டு போயிரலாம்’ எனும் குரலோடு பேசிய பரிச்சயக் குரலுக்குச் சொந்தக்காரனை நினைத்து அவளுக்குள் அந்நேரத்திலும் நிம்மதியாக இருந்தது.

‘அவங்க சிக்ஸ் மன்த்ஸ் பிரக்னென்ஸி.  பேபிக்கு…’ என பதறிய குரலின் தொனி அவளுக்குப் புரியவே செய்தது. அவனது பதற்றம்போக்க எண்ணினாலும் அவளால் முடியாத நிலை.

‘பர்ஸ்ட் எயிட் மாதிரிதான் இங்க பண்ணிருக்கோம்.  மார்னிங் டாக்டர்ஸ் வந்தபின்னதான் செக்கப் போவாங்க.  வயிட் பண்ணிப் பாக்கறதா இருந்தாலும் இங்கயே பாக்கலாம்.  இல்ல… நீங்க வேற ஹாஸ்பிடல் மாத்திரதா இருந்தாலும் மாத்திக்கலாம்’

‘மற்ற டாக்டர்ஸ் எப்ப வருவாங்க?’

‘செவன்கு எல்லாம் வந்திருவாங்க?’

‘அதுக்கு இன்னும் த்ரீ அவர்ஸ் இருக்கே!’

‘அதுவரை வயிட் பண்ணத்தான் சார் செய்யணும்.’

‘இப்ப இங்க இருக்கற டியூட்டி டாக்டரைப் பாக்கலாமா?’ 

‘கேசுவாலிட்டில இருக்கற டாக்டர்ஸ் மத்த பேசண்ட்ஸை அட்டெண்ட் பண்ணிட்டு இருக்காங்க… கொஞ்சம் வயிட் பண்ணுங்க சார்’

இப்படிப் பேச்சுகள் தொடர்ந்தது.  அதன்பின் நீண்டதொரு அமைதி.

அவளின் உடல்நிலை பற்றி மருத்துவர் கூறுவதும், அவளை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக வந்திருந்த நபர் முயல்வதுமாக பேச்சுகள் சிறிதுநேரம் நடந்தது.

மீண்டும் அமைதி.

அவளை எங்கோ ஸ்ட்ரக்சரில் அழைத்துச் செல்வது போன்றிருந்தது.

மீண்டுமொரு வாகனப் பயணம்.

அவளோடு அருகே அமர்ந்து அவளின் கைகளை தனது கரங்களுக்குள் வைத்துப் பிடித்தபடியே அந்த நபர் வருவதை அவளால் உணர முடிந்தது.

ஆனால் அந்தக் கரங்களுக்குரியவரின் விழியின் ஈரம் அவளை அசைத்தது.

சில மணித்துளியில் வாகனம் நின்றது.  பரபரப்பான செயல்பாடுகளுக்கு இடையில் மீண்டும் மருத்துவனைக்குள் நுழைந்த உணர்வு.

மீண்டும் பரபரப்புகள் துவங்கி அது மறைய நீண்ட நேரமெடுத்தது.

அடுத்து வந்த ஒரு மணித்தியாலத்திற்குப்பின் ஆழ்ந்த அமைதி!

கனவுகள் அனைத்தும் கலைந்து கண் விழித்தவள் நேரில் கண்டது என்ன?

***

Leave a Reply

error: Content is protected !!