இளைப்பாற இதயம் தா!-2ஆ
இளைப்பாற இதயம் தா!-2ஆ
இளைப்பாற இதயம் தா!-2B
தாய் ஸ்டெல்லாவின் காலை அலைபேசி அழைப்பில் எழுந்தவள், ஜெபம் செய்து காலைக்கடன்களைக் கழித்து, குளித்து கிளம்பி அவசரமாக வந்திருந்தாள் ஐடா.
இதுவரை இத்தனை மெனக்கெட்டதில்லை. ஆனால் தாய், “கிளம்பிட்டேன்னா ஒரு செல்ஃபி போடு” என்று கேட்டதும், ஆர்வமின்றி தன்னை படமெடுத்து அனுப்பியிருந்தாள் ஐடா.
மகளின் தோற்றத்தில் திருப்தி உண்டாகாததால், “இன்னும் கொஞ்சம் தலைய ஒழுங்கா வாரு. இப்டி போனா எனக்கே புடிக்காது.” என்றதோடு தலை முடியை எப்படி என்ன செய்ய வேண்டும் என்பதையும் மகளுக்குக்கூற, ஐடாவும் சிரத்தையோடு தாய் கூறியதைக் கேட்டவள் சற்று தாமதமாகவே கிளம்ப முடிந்தது.
தாமதமாகக் கிளம்பியதால் அவளின் தாய் அவசரப்படுத்தியிருந்தார்.
சாந்தோம் சர்ச்சிற்கு இதற்கு முன்பு இரண்டு முறை வந்திருக்கிறாள். தாயின் பேச்சைக் கேட்டு கேப் புக் செய்து வந்திறங்கியிருந்தவள் சர்ச்சின் வெளித்தோற்றத்தை எப்போதும்போல பரவசமாகப் பார்த்தாள். பார்வையை அதன் ஓங்கி நின்றிருந்த அமைப்பின்மீது செலுத்தியபடி கையில் பைபிளோடு வந்தாள்.
வான் மேகத்தோடு முட்டிக் கொண்டிருந்த சர்ச்சின் தோற்றம் அவளுக்குள் எப்போதும் ஒரு பரவச உணர்வை உண்டாக்கும். அதை இன்னும் உணர்ந்தாள். ஆழ மூச்சை இழுத்து வெளிவிட்டாள்.
அதேநேரம், “ஹாய் ஐடா!” என்னும் சத்தம் கேட்டு பதறித் திரும்பியவள், அவளது அலுவலகத்தில் ஹச்ஆராக இருக்கும் அஸ்வின் ஜோஷ்ஷைக் கண்டு தர்மசங்கடமாக, “ஹாய்” என்றாள்.
இஞ்சியை எடுத்து உண்ட மங்கியைப்போல மாறியிருந்த வதனத்தோடு அஸ்வினை எதிர்கொண்டாள் வஞ்சி. அவளின் இயல்பான முகத்தோற்றம் இதுவல்ல என்பதும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. தன்னைத் தவிர்க்க எண்ணுவாள் என்பது தெரிந்தாலும், இரும்பு மனம் கொண்ட ஐடாவின்மேல் கொண்ட ஈர்ப்பில் காந்தமாக வந்து நின்றான்.
‘இவன் வேற! இதுக்கு முன்ன இங்க ரெண்டு முறை வந்திட்டு இவனோட தொல்லையில இருந்து விடுபட நினைச்சுத்தான் இந்த சர்ச் பக்கமே தலை வச்சிப் படுக்கலை. இன்னைக்கு இவனை மறந்துட்டேனே’ எனும் எண்ணத்தோடு நடந்தவளின் அருகே வந்தவன்,
“ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து!” என்றான்.
“ம்ஹ்ம்” என்று மட்டும் ஆமோதிப்பாய் கூறியவள், “பாக்கலாம்” என்று சர்ச்சினுள் அவசரமாக நுழைய முயன்றாள்.
அவளின் அவசரத்தையும் மீறி அவசரமாகத் தடுத்தவன், “என்ன இன்னிக்கு ஸ்பெஷல். வித்தியாசமா இருக்க?” என்று அவளின் தோற்றத்தில் பார்வையைச் செலுத்தியபடிக் கேட்டவனிடம்,
“நத்திங்” என்றுரைத்துவிட்டு முன்னேற முயன்றவளை அவனது கரங்களை நீட்டி தடுத்து நிறுத்தியிருந்தான் அஸ்வின்.
சட்டென கோபம் மூண்டாலும் அதனை காட்டிக்கொள்ளாது கட்டுப்படுத்தியவள், “என்ன அஸ்வின்?” என்றாள்.
“என்ன விசேசம்னு சொல்லு!” கட்டாயப்படுத்தினான்.
“எங்க ரிலேட்டிவ் ஒருத்தவங்களைப் பாக்கத்தான் இங்க வந்திருக்கேன். வேற ஒன்னுமில்லை!” என்றாள் ஐடா.
“ரிலேட்டிவ்?” புருவம் சுருக்கி ஐயமாக வினவினான்.
“ம்” என்றவள், உள்ளே செல்லட்டுமா என்பதுபோல சைகையால் அஸ்வினிடம் வினவ,
“உங்களுக்கு ரிலேட்டிவ் இங்க இருக்கறதா எங்கிட்ட நீ சொன்னதே இல்லையே” என்றான்.
“இப்பச் சொல்லிட்டேனே!” என்றாள் ஐடா.
“இரண்டரை வருசங் கழிச்சு புதுசா ரிலேட்டிவ்… எப்டி?” அஸ்வினும் விடாமல் கேட்டான்.
“புதுசில்ல… ஏற்கனவே இங்கதான் இருக்காங்க” அவளாகவே வாயிக்கு வந்ததை அடித்து விட்டாள். சமீபமாக இதுபோன்ற இன்னல்களையெல்லாம் சமயத்திற்கேற்ப சமாளிக்க… கடந்து சென்ற வருடங்களில் சென்னை வந்தபின் கற்றுக்கொண்டது இன்று உதவியது ஐடாவிற்கு.
பெண்கள் அமரும் பக்கமாக பார்வையைச் செலுத்தினாள் ஐடா. ரூபி பாட்டி இன்னும் வந்திருக்கவில்லை என்பது தெளிவானது. அதனால் அஸ்வின் புறம் நிதானமாகத் திரும்பியவள், “அம்மாவோட சொந்தம். அப்பப்போ வெளியே பாத்துக்கறதுதான். இன்னைக்கு இங்க வரதா சொன்னாங்க. அவங்களோடதான் இன்னைக்கு ஸ்பெண்ட் பண்ணணும். பாக்கலாம்” என்று அவளது பேச்சைக் கேட்டு அஸ்வின் பதில் கூறுமுன்னே உள்ளே சென்று ரூபி கூறிய இடத்தில் சென்றமர்ந்துவிட்டாள் ஐடா.
ஐடா எந்த மாதிரி ஆடை உடுத்தி வருகிறாள் என்பதை கேட்டறிந்து கொண்டிருந்த ரூபி, அவர் எந்த நிற ஆடை உடுத்தி வர இருக்கிறார் என்பதனையும், சர்ச்சில் எங்கு வந்து அமர வேண்டும் என்பதனையும் முன்பாகவே ஐடாவிடம் கூறியிருந்தார். அதன்படி சென்றமர்ந்திருந்தாள் ஐடா. சற்று நேரத்தில் பிரார்த்தனை துவங்கியிருந்தது.
அஸ்வின் ஜோஷ்!
இருபத்தொன்பது வயது வாலிபன். ஐடாவைப்போல ஞானப் பழமாக இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு ஒழுக்க பழக்கத்தோடு பெற்றோர்களால் வளர்க்கப்பட்டு அவனும் அவர்களது வழிகாட்டுதலை அப்படியே ஏற்று வளர்ந்திருந்தான்.
அஸ்வினும் ஐடாவின் அதே அலுவலகத்தில்தான் பணியிலிருக்கிறான். ஐடாவை முதன் முதலாக அலுவலகத்தில் பார்த்ததுமே அவனுக்கு பிடித்துப் போயிருந்தது.
ஐடாவிடம் வந்து, “நாம மேரேஜ் பண்ணிக்க பேரண்ட்ஸ்கிட்ட பேசலாமா?” என்று அவனது காதலைச் சொன்னபோது,
“எங்க பேரண்ட்ஸ் சொன்ன மாப்பிள்ளையைத் தவிர வேற யாரையும் நான் பண்ணிக்கற ஐடியா இல்லை. சோ சாரி” என்று நேரடியாகப் பதில் சொல்லிவிட்டு,
“இனி இது விசயமா எங்கிட்டப் பேசாதீங்க” என்று கடுமையாகக் கூறிவிட்டு அகன்றிருந்தாள் ஐடா.
ஐடாவைப் பற்றி அஸ்வின் தனது வீட்டில் சொன்னான். அவர்கள் வீட்டுப் பெரியவர்கள், “உனக்கு எந்த மாதிரி பொண்ணு வேணுனு சொல்லு. நாங்க பாத்து கல்யாணம் செய்து வைக்கிறோம்.” என்றனர்.
ஐடாவைப் பற்றி சிலாகித்து அஸ்வின் பேசியதை செவிமடுக்க அவர்கள் தயாராக இல்லை. அதற்குக் காரணம் ஐடாவின் பெற்றோர் இருவரும் அரசுப் பணியில் இருப்பதுதான் காரணம்.
“வேலைக்குப் போயி என்னத்தையோ பொண்ணை வளத்திருப்பாங்க. அப்படி ஒரு இடத்தில இருந்து எப்டி பொண்ணெடுக்க முடியும்? கண்டிப்பா அவங்க மிடில் கிளாஸ் மாதிரிதான் தெரியுது. நம்ம வசதிக்கு ஏத்த மாதிரிப் பாப்போம்” என்று மகனிடம் உரைத்திருந்தனர்.
அஸ்வின் பெற்றோர்களிடம் மன்றாடி அவர்கள் கைவிட்ட நிலையில், தனியனாக ஐடாவின் பெற்றோரை தேவகோட்டையில் சென்று நேரில் சந்தித்துப் பேசினான்.
“தம்பி உங்களோட விருப்பம் புரியுது. ஆனா உங்க வீட்டுப் பெரியவங்களை வந்து எங்களிடம் பேசச் சொல்லுங்க. மேற்கொண்டு பேசலாம். அதைவிட்டுட்டு நீ வந்து கேக்கறதுக்காக எங்க பொண்ணை எப்டிக் கல்யாணம் செய்து கொடுக்க முடியும்? இது சின்னப் புள்ளைங்க விளையாட்டு விசயமில்ல! நீங்க கிளம்பலாம்.” என்று ஒரே வார்த்தையில் திருப்பி அனுப்பிவிட்டிருந்தனர்.
அஸ்வினும் கடந்த இரண்டு வருடமாக பெற்றோரைக் கெஞ்சி, ஐடாவைக் கெஞ்சி, ஐடாவின் பெற்றோரைக் கெஞ்சி யாரும் அவன் பக்கம் நிற்காததால் பெற்றோர் பார்க்கும் பெண்ணையும் எதாவது குறை சொல்லி நிராகரித்து இன்றுவரை தனித்து நிற்கிறான்.
இந்த நிலையில் அஸ்வின் ஜோஷ்ஷிற்கு ஐடாவைப் பெண் பார்க்கவே ரீகன் குடும்பம் இங்கு வரச்சொல்லியிருப்பது தெரிய வந்தால் என்ன செய்யக் காத்திருக்கிறான் என்பதை பொறுமையோடு பார்க்கலாம்!
***
பிரேயர் துவங்கிய அரை மணித் தியாலத்தில் கிரேஸ் ஐடாவின் அருகே வந்தமர்ந்த மூதாட்டி ரூபியை ஐடா உணர்ந்தாலும், இருவரும் பிரேயரில் கவனம் செலுத்தியிருந்தனர்.
வண்டியில் இருந்து இறங்கிய பாட்டி, “சீக்கிரமா நீயும் உள்ள வர்ற. வராம வெளிய நிக்கக்கூடாது” என்று பேரனைப் பற்றித் தெரிந்ததால் கண்டிப்போடு கூறிவிட்டு உள்ளே வந்திருந்தார். ஆனால் ரீகன் உள்ளே வந்ததுபோலத் தெரியவில்லை.
அடுத்தடுத்த தேவாலய நிகழ்வுகள் நடைபெறும் வேளையில் இருவரும் ஒருவரை ஒருவர் இன்முகமாகப் பார்த்து சிரித்துக் கொண்டனர். ஆனால் பேச முனையவில்லை.
அனைவரும் அமைதியாக அவரவர் பிரார்த்தனைகளை முன்வைத்து ஜபித்த வண்ணமிருக்க, முதல் பார்வையிலேயே பிடித்துப் போன ஐடாவையே பேரனுக்கு மணம் முடித்து வைக்கும் தீவிர சிந்தனையோடு தனது பிராத்தனையாக வைத்திருந்தார் ரூபி பாட்டி.
பாட்டி அவ்வப்போது ஆண்கள் புறம் திரும்பி பேரனைப் பார்ப்பது ஐடாவிற்குப் புரிந்தது. ஆனால் அவரின் முகம் சிந்தனை வயப்பட்டிருந்ததோடு, பிரார்த்தனையை விடாமல் ஜபித்தார். உண்மையில் ரீகன் சர்ச்சினுள் இன்னும் வரவில்லை.
ரீகனின் தாய் வழி உறவான மாமன் வீடு சென்னையில்தான். அவருக்கு இரண்டு மகள்கள். முதலில் மூத்தவனைத் திருமணம் செய்ய எண்ணி அது ஈடேறாமல் போயிருக்க, அடுத்து ரீகனை தனது வீட்டின் மருமகனாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற ரீகனின் மாமா மற்றும் அவரின் மக்களின் வேட்கையை ரூபியும் அறிந்தேயிருந்தார்.
அது அவர்களிடம் இருக்கும் சொத்திற்காக என்பது ரூபி பாட்டியின் எண்ணம். மருமகளுக்குமே அண்ணன் மகள்களை எடுப்பதில் விருப்பமில்லை என்பது தெரிந்திருந்தாலும் சில விசயங்களை சீலியின் அண்ணன் வீட்டிற்கு மறைத்தே செய்ய பழகியிருந்தார் ரூபி.
அவர்களுக்கு இந்த தேவாலயம் அதிக தூரம். ஆகையால்தான் இன்று இங்கு ஐடாவைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார் பாட்டி. ஆனால் பேரனைக் காணவில்லை என்றதும் பாட்டிக்கு ஏதேதோ குறுக்கீடுகள்.
‘இங்க பக்கத்தில ரீகனுக்கு தெரிஞ்ச யாரு இருக்கா?’ என்பதுபோல
அதனாலேயே பாட்டியின் முகம் சிந்தனை வயப்பட்டிருந்தது. அதை அறியாதவளோ பேரனிடம் ஏதேனும் சொல்லி அழைத்து வந்திருப்பதால் அதனை அவனிடம் தெரிவிக்க எண்ணி அடிக்கடித் திரும்புகிறாரோ என்று எண்ணியிருந்தாள். ஐடா எங்கும் திரும்பவில்லை.
அன்றைய நிகழ்வுகள் அனைத்தும் முடிந்ததும், வந்திருந்த அனைவரும் கிளம்பிச் செல்லத் துவங்கியிருந்தனர். அதேநேரம் கூட்டம் சற்று ஓயும்வரை காத்திருந்த பாட்டி… ஐடாவை நோக்கி இரண்டொரு வார்த்தைகள் அவளின் கையைப் பிடித்தபடியே அன்பாகப் பேசினார்.
ஐடாவும் மிகுந்த மரியாதையோடும் அன்போடும் பாட்டியின் கேள்விகளுக்கு குறைவான குரலில் பதில் கூறினாள். அத்தோடு, “வா கூட்டம் நல்லா குறைஞ்சிருச்சு. வெளியே போயிறலாம்” என்று ஐடாவை அழைத்துக்கொண்டு வெளியேறினார் ரூபி.
ரூபி பேரனைத் தேட இதுவரை புகைப்படத்தில்கூட பார்த்திராத ரீகனைக் காண ஐடாவும் ஆர்வம் எதுவும் இல்லாதபோதும், தனது பயண நோக்கம் அதுதானே என கடமையாக கடனே எனக் காத்திருந்தாள்.
அஸ்வின் இன்னும் ஐடாவையும் அவளோடு இருக்கும் பாட்டியையும் பார்த்தபடியே கிளம்பும் மனமில்லாமல் தொலைவில் நின்றிருந்தான்.
‘இன்னும் கிளம்பாம ரெண்டு பேரும் யாருக்காக வயிட் பண்றாங்க?’ என்பது அஸ்வினின் எண்ணமாக இருந்தது.
வெளியில் வந்த பாட்டி ஐந்து நிமிடம் பேரனுக்காக காத்திருந்தவர் ரீகன் இன்னும் வராமலிருப்பதை உணர்ந்தவராக தனது அலைபேசியை எடுத்து பேரனுக்கு அழைத்து அவன் எடுத்ததும், “எங்க இருக்க ரீகன்?” கணீர் குரலில் கேட்டார்.
எதிர் முனையில் இருந்தவன், “இதோ வரேன் பாட்டி. நீங்க எங்க இருக்கீங்க?” என்று கேட்டான்.
இடத்தை பாட்டி சொன்ன நான்கு நிமிடங்களில் பாட்டியின் முதுகை ஆதரவாகத் தொட்டவனைப் பார்த்த ஐடாவிற்கு பரிச்சயமான அவனது முகத்தைக் காட்டிலும் அவனது தோளோடு தொங்கியபடி நின்றிருந்தவளை அசூசையோடு வினோதமான பார்வையைத் தேக்கி நோக்கினாள்.
ரிங்கிள் ரெசிஸ்ரெண்ட் மீடியம் ப்ளூ ட்வில் ஃபுல் கம் சர்ட், ஃப்ராங் சாலிட் ஸ்ட்ரெட்ச் இண்டிகோ ஜெனிமில் தனக்கெதிரே நின்றவனை இமைக்கும் பொழுதிடையே மட்டும் பார்த்தவள், அவனோடு நின்றிருந்தவளைத்தான் அதிகம் கவனித்தாள் ஐடா.
ஐடாவின் பார்வை வேறுபாட்டை உணர்ந்த ரூபி பாட்டி திரும்பி பேரனையும் அவளோடு ஒட்டிக்கொண்டு நின்றிருந்தவளையும் அதிருப்தியோடு பார்த்தார்.
அஸ்வின் தூரத்திலிருந்தவாறே அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான். ஐடாவோடு நின்றிருந்த பாட்டியின் அருகே வந்து நின்றவனைப் பார்த்ததுமே அவன் உள்ளம் கொதித்தது.
‘இவனை எப்டி இவளுக்கு தெரியும்? இந்தப் பொறுக்கியப் பாக்கவா இவ இங்க வந்தா? அவனுக்காகவா இவ்ளோ நேரம் வயிட் பண்ணா?’ எனும் அதிர்ச்சியோடு கூடிய சிந்தனையில் அஸ்வின்.
‘யாரிவ?’ எனும் பார்வையோடு ஐடாவைப் பார்த்தபடியே ரீகனை நிமிர்ந்து நோக்கியபடி அவனது தோளைத் தொட்டபடி நின்று கொண்டிருந்தவள்…
ஐடாவின் பார்வையைக் கண்டுகொண்டவன், ‘இப்ப என்னவாம் இவளுக்கு’ என அலட்சியமாக எதிர்கொண்டபடி ரீகன்!
பேரனது செயலில் தனது மொத்த திட்டமும் என்னவாகப் போகிறதோ என்கிற குழப்பத்தோடு கூடிய அதிருப்தியில் ரூபி பாட்டி!
அடுத்த அத்தியாயத்தில் இதற்கான விளக்கங்களோடு…
***