இளைப்பாற இதயம் தா!-7அ
இளைப்பாற இதயம் தா!-7அ
இளைப்பாற இதயம் தா!-7A
தேவகோட்டை ரஸ்தாவில் அந்த தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்து அதற்கான நிறுத்துமிடத்தில் வந்து நின்றதும், அந்த பேருந்திற்காகக் காத்திருந்தவர்கள் நெருங்கினர்.
ஏற்றிவிட வந்தவர்களைவிட அந்த பேருந்தில் பயணம் செய்ய இருந்தவர்கள் எண்ணிக்கை சொற்பமாகமே இருந்தது. தானியங்கி கதவின் பட்டனை ஓட்டுநர் போட்டதும் கதவு தானாகத் திறந்தது.
மொத்தமே மூன்று நபர்கள்தான் ஏறினார்கள். முதலில் ஏறிய இருவருக்கும் முன்புறத்திலேயே அவர்களின் இருக்கை இருக்க, மூன்றாவதாக ஏறிய ஐடா அவர்களது சீட்டைக் கண்டுபிடித்து அமரும்வரை காத்து நின்றாள்.
மூவரும் ஏறி அவரவர் இருக்கையை சரிபார்த்து அமரக் காத்திருந்தார் ஓட்டுநர். தந்தையிடம் விடைபெறாமல் இருந்தது ஐடாவிற்கு நினைவில் வர திரும்பித் தந்தையைத் தேடினாள்.
மகள் தன்னைப் பார்ப்பதைக் கண்டு ஆல்வின் நெருங்கி பேருந்தின் அருகே வந்ததும், “தூங்குமுன்ன அம்மாகிட்ட வீடியோ கால்ல பேசறேன்னு சொல்லுங்கப்பா” என்றபடியே கையை அசைத்து விடைகொடுத்தாள்.
ஐடாவிற்கு எப்போதுமே ஹோம் சிக் உண்டு. அதுவும் இதுபோல வீட்டிற்கு வந்துவிட்டு பணிக்குத் திரும்பும் நாள்களிலெல்லாம் மிகவும் சிரமப்பட்டுப் போவாள்.
அவளால் தாயையும் தந்தையையும் விட்டுப் பிரிவது அத்தனை துன்பமாக உணர்வாள். தந்தையைக் காட்டிலும் தாயோடுதான் அதிக ஒட்டுதல். ஆனாலும் தற்போதிருந்தே தனித்திருக்க பழகினால்தான் பெண்ணைத் திருமணம் செய்துகொடுக்கும்போது பிரச்சனை இருக்காது என்று மகள் சுணங்கிய சமயங்களில் அவளின் போக்கிற்கு விடாமல் வேலைக்குச் செல்லும்படி அனுப்பியிருந்தார் ஸ்டெல்லா.
மற்ற இருவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்ததும், கையில் இருந்த மீடியம் அளவு ட்ராலி பேக்கை தூக்க முடியாமல் தூக்கியபடி அவளின் ஸ்லீப்பரை நோக்கி நடந்தாள். இருக்கை எண்ணை நெருங்கியவள் அதில் அமரத் தடையாய் இருந்தவர்களைக் கண்டு தயங்கி நின்றாள்.
வண்டியில் ஏறியவர்களைக் கவனத்தில் கொள்ளாமல் அவர்கள் மூவரும் வேறொரு முக்கியமான பேச்சில் திளைத்திருந்தனர். அதில் இருவரைப்பற்றி ஐடாவிற்கு எந்தக் கவலையும் இல்லை.
தயக்கத்திற்கான காரணம். அவள் அங்கு வருவதைக்கூட உணராது ஆகிருதியான தோற்றத்தில் அவளின் சீட்டில் அமர்ந்திருந்தவனைப் பார்த்துத்தான்!
ஐடா சிங்கிள் ஸ்லீப்பரின் அருகே வரவும், அதற்குமுன் அவளது சீட்டில் அமர்ந்தபடியே எதிரே இருந்த டபுள் ஸ்லீப்பரில் இருந்த இரண்டு பெண்களுக்கு ஆளுக்கொரு கையைக் கொடுத்துவிட்டு இனிமையாக கடலை போட்டுக்கொண்டிருந்தவனை திசைதிருப்பும் வழி தெரியாமல் பெண்கள் இருவரையும் ஐடா நோக்க… அதில் ஒருத்தி, “ஏய் வின்! அது அவங்க சீட்போல… நீ எழுந்து இடங்குடு!” என்று கூற,
அப்போதும் அவன் திரும்பி ஐடாவைப் பாராமலேயே எழுந்து நின்று இடங்கொடுத்தான். ஒருத்தியின் கையை மட்டும் பிடித்துக்கொண்டு, மற்றவளிடமிருந்து கையை உருவிக்கொண்டு தள்ளி நின்றிருந்தான்.
பேசியவள் ஐடாவைப் பார்த்தபடியே மற்ற இருவரும் பேசுவதைக் கேட்டிருந்தாள். மற்றொருத்தி பேச்சு மும்முரத்தோடு கண்களில் காதலுக்கும்மேல், காமத்திற்கும் கீழான ஏதோ ஒன்று வழிய கையை வின் என்று அழைக்கப்பட்டவனிடம் கொடுத்திருந்தவள் எழுந்தவனின் கையை இன்னும் விடாமல் அவனோடு அவளும் சேர்ந்து எழுந்து நின்று அவன் மேல் ஒட்டியபடி பேச்சைத் தொடர்ந்தனர்.
மணிரத்தினம் மற்றும் பாலு மகேந்திரா படங்களில்கூட இப்படி ஒரு காட்சி இடம்பெற்றிருக்காது. அப்படியொரு காட்சி அது.
‘அப்டி என்னதான்டா பேசுவீங்க? சுத்திலும் நடக்குறதுகூடத் தெரியாம… அப்டி தலைபோற விசயமா? இல்ல தொலைஞ்சுபோற விசயமா?’ அவர்களின் பேச்சு காதில் விழாதவர்களின் மனநிலை இப்படித்தான் இருந்தது.
பேருந்தில் ஏறியது முதலே அதே பண்பேற்றத்தில் முகத்தில் சிரிப்பையும் மயக்கத்தையும் அதற்குமேல் ஏதோ ஒன்றை ஒட்ட வைத்த உணர்வுக் குவியலான மூவரின் பரிபாசையைக் கண்டு புழுங்கிய உள்ளங்களும், புகைந்த உள்ளங்களும் எட்டிப்பார்த்து பெருமூச்சு விட்டது.
பெண்கள் இருவருமே மிகவும் அழகாகவே இருந்தனர். அதாவது புறத்தோற்றத்தில்!
ஐடாவைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் அழகிகள் அல்ல! சாத்தான்கள்!
மூவரின் செயலில் அவளறியாமலேயே ஐடாவின் முகம் சிடுசிடுக்க அந்தக் காட்சியைக் காண அருவெறுப்பாக உணர்ந்தவள் பேருந்தினுள் நீட்டிய தலைகளை நோட்டமிட்டாள்.
பேருந்தில் மிகவும் சொற்பமாகவே ஆட்கள் இருந்தனர். அங்கொன்றும் இங்கொன்றும் இரண்டொரு தலைகள் மட்டுமே திரைச்சீலையை விலக்கி ஐடாவைப்போல அல்லாமல் சுவராஸ்யமாக அந்த மூவரைப் பார்த்திருந்தனர்.
ஃப்ரீ ஷோ!
வீட்டிலிருக்கும்போதுகூட அப்படிப்பட்ட ஆடைகளை ஐடா அணிய விரும்பமாட்டாள். அவளின் தாய் அதற்கு அனுமதிக்கவும் மாட்டார். சிலது அவளின் உள்ளாடைகளை நினைவுபடுத்தியது. ஆனால் அவர்கள் அதையே வெளியில் உடுத்தியிருப்பதாகக் தோன்றியது ஐடாவிற்கு.
மிகவும் குறைவான அவர்களின் அங்கத்தினை மறைக்கப் போட்டிருந்த மறைக்காத ஆடைகள்! அது அவர்களின் அங்கங்களை மறைக்க முடியாமல் எடுப்பாக எடுத்துக்காட்டி காண்பவரின் கற்பனைக்கு விருந்தாக்கி… அதனை சுவைத்திட முடியாத ஏக்கத்தினை உண்டு பண்ணி மோசம் செய்தது.
இருவரின் எழிலான தோற்றங்களில் மயங்கிப் போயிருந்தவன் இருவரைத் தவிர வேறு எதையும் பார்க்கும் நிலையில் இல்லை.
அத்தனை மயக்கத்தில் இருந்தான்.
பேச்சுகள் குறைந்த ஒலியெழுப்பினாலும் ஐடாவின் காதுகளை அவள் விரும்பாமலேயே அடைந்தது. மூவரின் பேச்சுகளில் அவர்கள் கடற்கரை ஒட்டிய பகுதிக்குச் சென்று திரும்புவது புரிந்தது.
“அந்த ரிசார்ட்ல ட்டூ டேஸ் போனதே தெரியலை. ரிசார்ட்ல இருந்து சீ ஷோர் வ்யூ செம… எந்தப் பக்கம் எந்த திசையின்னே தெரியாம அவ்ளோ ஃபாஸ்ட்டா ட்டூ டேஸ் லீவ் முடிஞ்சிருச்சி. மார்னிங் சன் ரைஸ்ஸெல்லாம் என் லைஃப் டைம்ல பாப்பேன்னு கனவுலகூட நினைச்சதில்ல. அதெல்லாம் அமேசிங்கா அமைஞ்சது. ஐ காண்ட் பிலிவ் தட் வண்டர்ஃபுல் மொமெண்ட். ரியல்லி ஐ என்ஜாய்ட் திஸ் ட்ரிப்” என்று ஒருத்தி கூற,
மற்றொருத்தி, “இந்த மாதிரி ப்ளேஸ்ஸெல்லாம் எங்க இருக்குன்னு எப்டித்தான் உனக்கு தெரியுதோ? எங்கேனாலும் உன்னை நம்பி வரலாம்னு லாஸ்ட் ரெண்டு ட்ரிப்லையும் ஃப்ரூவ் பண்ணிட்ட… வின். நெக்ஸ்ட் மன்த் எங்க போலாம்னு யோசிச்சு சொல்லு…” என அவனை உத்வேகப்படுத்துமாறு பேசினாள்.
“நெக்ஸ்ட் மன்த்தா” என்று தனது தாடையை தொட்டு யோசித்தபடியே இழுத்தவனிடம்,
“உங்க ஆஃபீஸ்ல உள்ளவங்களை எப்படி சமாளிக்கணும்ங்கற வித்தை தெரிஞ்ச நீயே இப்டி சொன்னா… அப்ப எங்க நிலைமையெல்லாம் என்னாகும்னு யோசி மேன்” என்று சிரித்தாள் ஒருத்தி.
வாய்ப் பேச்சு பேச்சாக இல்லாமல், மூவரும் ஒருவர் மீது ஒருவராக ஒட்டி உரசியபடி தோளோடு சாய்ந்தபடி நின்றிருந்த தோரணையே எரிச்சலை உண்டு செய்தது ஐடாவிற்கு.
இரு பெண்களும் அவனோடு நின்றபடி பேச்சைத் தொடர்ந்தனர். நெடுநெடுவென வளர்ந்திருந்தவனைப் பார்த்தவளுக்கு சட்டென அந்த உருவம் மனதில் பதிந்தது.
வாட்ட சாட்டமாக மன்மதனுக்குப் போட்டியான தேகத்தோடும் இளநகையை இதழில் ஒட்ட வைத்தபடியும் நின்றிருந்தான்.
ஃப்ரென்ச் பியட்ர்டில் அசரடித்தான்.
ஐடாவிற்கு சுற்றம் மறந்து தன்னை மறந்து நிற்கும் அவனது நிலை கோபத்தைக் கொடுத்தது.
‘இவனெல்லாம் என்ன மனுசன்? கொஞ்சம்கூட இருக்கற இடம் உணராம எப்டி இருக்கான்? அவன் ஆம்பிளை! ஆனா இந்தப் பொண்ணுங்க! ச்செய்…’ என்று தோன்றியது.
பிறகு அந்த இரு பெண்களைக் கவனித்தாள். ‘நம்ம அம்மா மாதிரி அவங்க அம்மாவெல்லாம் நல்லா அவங்களை வளக்கலியோ!’ இப்படித்தான் எண்ணத் தோன்றியது ஐடாவிற்கு.
‘ஆளு கொஞ்சம் ஸ்மார்ட்டா இருந்ததும் ஒருத்தவனை பாத்து இரண்டு லூசுங்களும் இப்டி உருகுதுங்க! ஒருத்தவனோட ரெண்டு பேரும் இப்படி பழக அருவெறுப்பாத் தோணாது?
நார்மலா… நல்ல புத்தி… இருந்திருந்தா இன்னொருத்திகூட இருக்கறவனை விட்டு ஒருத்தி விலகிப் போயிருப்பா… இல்லை நீ எனக்கு மட்டுந்தான்னு அவங்கூட உரிமைச் சண்டை போட்டுருப்பா.
இதை ரெண்டையும் பண்ணாம ஆளுக்கொரு கையப் புடிச்சிக்கிட்டு ஈனு நிக்குதுங்கன்னா நிச்சயமா ரெண்டும் சரியான பைத்தியங்களாத்தான் இருக்கும்!’ இப்படித் தோன்றிய நேரத்தை விரையமாக்குவதைவிட, அவர்களின் அந்த நிலையைக் காணப்பிடிக்காமல் சட்டென அவளின் ஸ்லீப்பருக்குள் சென்று அமர்ந்துகொண்டாள் ஐடா.
அதேநேரம் பேருந்து கிளம்ப, ஐடாவின் ஸ்லீப்பரின் திரைச்சீலையை இழுத்துவிடத் திரும்பியவள் சட்டென பேருந்து கிளம்பியதும் அந்தப் பெண்கள் நிலைதடுமாறி அவன்மீது விழுவதும், விழுந்தவர்களை தனது கரங்களால் அவனோடு அணைத்துக் கொள்வதையும் கண்டிருந்தாள் ஐடா.
‘ஆண்டவரே!’ என்று மனதிற்குள் அலறி பார்வையைத் திருப்பிக்கொண்டாள் ஐடா.
பெண்கள் அவன்மீது விழுந்ததற்காக வருந்தாது கலுக்கென்று குலுங்கிச் சிரிப்பை உதிர்ப்பதும் நீண்ட நேரம் ஐடாவின் காதில் நாரகாசமாய் கேட்டது.
அவன் ஐடா திரும்பி நோக்கியபோது முதுகு காட்டி நின்றிருந்தான்.
‘கண்றாவி… என்ன ஜென்மங்களோ! பொது இடத்தில இப்டி நடந்துக்கலாமாங்கற அறிவுகூட இல்லாம… பாக்கறவங்களை கொஞ்சம்கூட சட்டை செய்யாம அதுங்க போக்கில இப்டி இருக்குதுங்க!’ ஐடா மனதிற்குள் திட்டியபடியே தனது ஹெட்செட்டில் கர்த்தரின் அதிசயங்கள் எனும் உரையை கேட்க முயன்றாள்.
ஆனாலும் அதைவிட அவனது பேச்சைக்கேட்டு இரு பெண்களும் அவ்வப்போது குலுங்கிச் சிரிக்கும் சிரிப்பு இவளின் காதை எட்டி, மேலும் அவளைக் காண்டாக்கியது.
அவசியத்திற்குக்கூட இதழை சற்று விரிப்பாலே அன்றி இப்படி சத்தம் போட்டுச் சிரித்து ஐடாவிற்கு பழக்கமில்லை. அவளின் தாய் அப்படித்தான் பொது இடங்களில் நடக்கவேண்டும் என்று அவள் பெரியவளான போது கூறியதை இன்றுவரை கடைபிடிக்கிறாள்.
“இருக்கற இடமறிந்து எப்பவும் சிரிக்கலாம். ஆனா… பிறரோட குறிப்பா… ஆண்களோட கவனத்தை ஈர்க்கற மாதிரி சத்தமா சிரிக்கறது கூடாது ஐடா” என்று தாய் கூறியதை தற்போது நினைவு கூர்ந்தாள் ஐடா.
அத்தனை களேபரத்திலும் வின் என அவர்களால் அழைப்பட்டவன் அந்த இரண்டு பெண்களோடு மட்டுமே தனது கவனத்தைப் பதித்திருந்தான்.
ஒருத்தி தன்னைத் திட்டித் தீர்ப்பதையும், அந்த இருவரைக் காட்டிலும் அவள் பேரழகி என்பதையும் மதி மயக்கிய மாதுகளின் அருகாமையினால் காணாமல் விட்டிருந்தான்.
சற்று நேரத்தில் காரைக்குடிக்கு முன்பாகவே இரவு உணவிற்காக பேருந்தை நிறுத்தியிருந்தார் ஓட்டுனர்.
சிலர் இறங்கி உண்ணச் செல்ல, தாய் கையில் கொடுத்து விட்டதை ஐடா உண்டுவிட்டு சற்று நேரம் பேருந்தைவிட்டு வெளியில் இறங்கி நின்றாள்.
மற்ற பேருந்துகளில் இருந்த பயணிகளும் அந்த மூவரையே வித்தியாசமாகப் பார்ப்பதும், சிலர் கவனியாது இருந்தாலும் அழைத்து அவர்களின் கவனத்தை இங்கு கொணர்ந்ததையும் கண்டு ஐடாவும் அவர்களைக் காண நேர்ந்தது.
அந்த மூவரின் உலகை மறந்த நடவடிக்கைகள் ஐடாவின் கண்களில் விழுந்து மேலும் எரிச்சலை உண்டு செய்திட, ‘இதுங்களை பாக்கறதே பாவம். ஆண்டவரே… காலையில சென்னை போறவரை இதுங்க பண்ற எதையும் என் கண்ணுலயே இனி காட்டாதீரும்! காதுல இதுங்க பேசறதோ சிரிக்கறதோகூட கேக்காமல் செய்யும்’ வேண்டுதல் வைத்துவிட்டு ஸ்லீப்பரில் சென்று அமர்ந்து தாயிக்கு அழைத்தாள்.
ஸ்டெல்லா எடுத்ததும், “என்ன ஐடா! எப்பவுமே நைன்-கு மேலதான் கூப்பிடுவ! இன்னைக்கு இப்பவே கூப்பிட்டுருக்க?” என்று கேட்டதும், சம்பந்தமே இல்லாமல் எதையோ தாயோடு உறக்கம் வரும்வரை பேச எண்ணி அழைத்திருந்தாள்.
ஸ்டெல்லாவோ, ‘வீட்டுக்கு வந்துட்டுப் போறதால ஹோம் சிக்கா ஃபீல் பண்ணி இவ்ளோ நேரம் பேசுது புள்ள’ என்று நினைத்துக்கொண்டார்.
முன்பெல்லாம் இதைச் சொல்லலாமா என்றெல்லாம் யோசிக்காமல் அனைத்தையும் தாயிடம் பகிர்ந்து கொள்பவள் சற்று மாறியிருந்தாள். அவள் சார்ந்த விசயங்களை மட்டுமே பகிர்ந்துகொள்வது என்பதுதான் அது.
பிறர் பற்றிப் பேசும்போது அந்த இடத்தில் மகள் இருக்க சிரமமாக எண்ணுவாளே என்று ஸ்டெல்லா அடுத்தடுத்து அவளிடம் விசாரிப்பதில் அவரது கவலையும், கவனிப்பும் கரிசனையையும் மகளால் புரிந்துகொள்ள முடிந்தது. தன்னால் தாய் கவலைப்படுவதை விரும்பாதவள் அதன்பின் அதுபோன்றவற்றைச் சொல்வதை தவிர்க்கப் பழகியிருந்தாள்.
பேருந்து சென்னையை நோக்கிப் பயணமானது!
***