இளைப்பாற இதயம் தா!-8அ
இளைப்பாற இதயம் தா!-8அ
இளைப்பாற இதயம் தா!-8A
சென்னையில் உள்ள ரூபி பாட்டியின் வீட்டிற்கு ரீகன் ஐடா தம்பதியினரோடு மொத்த குடும்பமும் திருச்சியிலிருந்து கிளம்பி வந்தாயிற்று.
ரீகனது தாய் வழிச் சொந்தமான அவனது தாய்மாமன், தன் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்யவில்லை எனும் கோபத்தில் திருமணத்திற்கு வராமல் தவிர்த்திருக்க, அதனைப் பொருட்படுத்தாது யாமினி மற்றும் அவளின் சகோதரி இருவரும் மணமக்களை வந்து சந்தித்து வாழ்த்திவிட்டுச் சென்றிருந்தனர்.
யாமினியோ அவளின் சகோதரியோ எந்த மனச் சுணக்கத்தையும் முகத்தில் காட்டவில்லை. ஆனால் ஐடாவின் குடும்பத்தை, அவர்களின் சீர் மற்றும் ஐடாவைப் பற்றிய விசயங்களை அமைதியாக கவனித்திருந்துவிட்டு வீட்டில் தந்தையிடம் சென்று பகிர்ந்துகொண்டிருந்தனர்.
யாமினி, “அத்தையை நீங்க ஏமாத்தி கல்யாணம் பண்ணிக் குடுத்த மாதிரியே எங்களையும் அனுப்பிருவீங்கனு பயந்துதான் வெளிய போயி பொண்ணை எடுத்திருக்காங்க. அது அத்தையோட பேச்சிலயே தெரியுதுப்பா. இவ்ளோவுக்கும் உங்களோட கருமித்தனம்தான் காரணம். ரீகன் அத்தான் மாதிரி ஒரு மாப்பிள்ளை உங்களுக்கு எங்க தேடினாலும் கிடைக்காது. நான் அவரை ரொம்ப மிஸ் பண்ணறேன்” சொல்லிக் கண்கலங்கினாள்.
அவளின் தாயோ, “அதைத்தான் நானும் ஆரம்பத்திலேயே உங்கப்பாகிட்டச் சொன்னேன். சீலி அண்ணிக்கிட்ட மட்டுமாவாது உங்க கருமித்தனத்தை காட்டாம பெரிய மனுசத்தன்மையோட இருக்கற மாதிரி நடிக்கவாவது செய்யுங்கனு. எங்க கேட்டார்? இப்பப் பாரு!” இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கணவனைத் குத்திக் காட்டி தனது மனதை ஆற்ற முனைந்தார்.
இருவீட்டுப் பெரியவர்களும் வந்திருந்து மணமக்களை புதுக் குடித்தனத்திற்கு வாழ்த்து தெரிவித்த கையோடு மறுநாளே கிளம்பிச் சென்றிருந்தனர்.
ஐடா ரீகனோடு சென்னையில் வசிக்க இருப்பதால் அங்கு அவளுக்கு வேண்டிய அனைத்தையும் ஸ்டெல்லா ஆல்வின் தம்பதியினர் கொண்டு வந்து தந்துவிட்டு, அன்றைய தினம் முழுமையும் செம்மை பூசிய நாண வதனத்தோடு, இதழில் ஒட்ட வைத்த முறுவலோடும் இருந்த மகளைக் கண்ட திருப்தியோடு விடைபெற்றிருந்தனர்.
ஸ்டெல்லா தம்பதியினர் வாங்கித் தந்ததை அத்தனை வசதியிருந்தும், வைப்பதற்கு இடமில்லாத நிலையிலும் அங்கிருந்த பெரியவர்கள் யாரும் மறுக்கவில்லை. அனைத்தையும் ஐடா கவனித்துக்கொண்டுதான் இருந்தாள்.
அவளுக்கு மனதில் தோன்றிய எதையும் மறைத்து வைத்து யோசிக்கும் மனதில்லாததால் திருச்சியில் கணவனிடம் கேட்டதைப்போல அனைவரும் கிளம்பிச் சென்றதும் தன்னிடம் எந்த மாதிரியாக கேள்வி கேட்பாள் என ரீகனும் இன்று தயாராகவே இருந்தான்.
திருமணமான மறுநாள் இரவில் ரீகனிடம், “உங்க அந்தஸ்துக்கு என்னை எப்படி உங்க வீட்ல ஓகே பண்ணாங்க” எனும் ஐடாவின் கேள்வியில் முதலில் திணறிப் போய் நின்றவன்,
சற்று நேரத்தில் தன்னைச் சமாளித்து, “அது… அந்தஸ்தைக் காட்டிலும் குணவதியா ஒரு பெண் வீட்டுக்கு வந்தா, குடும்ப உறவுகள் சீரா இருக்கும்னு பாட்டி அடிக்கடி சொல்வாங்க. அதனால உன்னை ஓகே பண்ணிருப்பாங்கனு நினைக்கிறேன்” என்று பாட்டியின் பேச்சுக்களிடையே தான் யூகித்ததை அவனாகவே பேசி மனைவியின் தலையில் ஆல்ப்ஸ் மலையிலுள்ள ஐசையெல்லாம் மொத்தமாக வைத்திருந்தான்.
எந்தப் பெண்ணுக்குத்தான் முக ஸ்துதி பிடிக்காது. கணவனது பேச்சைக் கேட்டு அதற்குமேல் ரீகனிடம் எதைக் கேட்பது என்றே அவளுக்கு மறந்துபோனதுதான் நிஜம்.
தன்னைக் குணவதி என்று குறிப்பிட்டதிலேயே அவளின் குறி மாறிப் போனதை மறந்து போனாள் ஐடா.
ஆனால் பிறகு, “அந்த யாமினிக்கு உங்களை மேரேஜ் பண்ணிக்கற ஐடியா இருந்த மாதிரித் தெரியுது. சொந்தத்தில அதுவும்… அவங்க அண்ணா பொண்ணை வச்சிட்டே உங்கம்மா எப்படி என்னை ஓகே பண்ணாங்க?” ஐடாவின் தாய் இதை ஏற்கனவே விசாரித்துக் கூறியதை குறுக்கு விசாரணை செய்யும் நோக்கில் கேட்ட ஐடாவிடம், சீலி ஸ்டெல்லாவிடம் கூறியதையே ஐடாவிடம் ரீகன் சொல்ல, இரண்டு பேரும் ஒரே மாதிரியாகச் சொல்லியதில் உண்மை அதுதான் போலும் என பேச்சை அத்தோடு விட்டிருந்தாள் ஐடா.
ஐடா முதன் முறையாக ஒரு கேள்வியை தன்னிடம் கொண்டு வருவாள் என்கிற தொலைநோக்குப் பார்வை இல்லாததால் முதன் முறை அவளின் கேள்வியில் அன்று சற்றுத் தடுமாறியிருந்தான். பிறகு சமாளித்தான்.
ஆனால் சென்னை வந்தது முதலே எது எல்லாம் மனைவியின் கேள்வியாக மாறும் வாய்ப்பிருக்கிறது என்பதை கவனிக்கத் துவங்கியிருந்தான். அப்போதுதானே தன்னால் அவள் கேட்கும் வினாக்களுக்கு தடுமாறாது பதில் சொல்லலாம் எனுமளவிற்கு தன்னை ஐடாவின் போக்கிற்கு மாற்றிக்கொள்ள முன்வந்திருந்தான் ரீகன்.
ரீகனுக்கு பாட்டியின் தாத்தா பெருமையைக் கேட்டு, தாத்தா எட்வர்டு ரீகனைக் காட்டிலும் பேரனான ராபர்ட் ரீகனான தான் எதிலும் முதன்மையானவன் என்கிற பேரை வாங்கியே ஆகவேண்டும் என்கிற வேட்கை பாட்டி ரூபியின் பேச்சினால் உண்டாகி இருந்ததே ரீகனது இத்தனை மாற்றத்திற்கும் காரணம்.
ரீகனது பாட்டி ரூபி ஒருமுறை அவனிடம், “பொண்டாட்டி ஒரு தடவை ஒரு விசயத்தைப் பத்திப் பேசறா? கேக்கறான்னா… அடுத்தடுத்து அவளோட விருப்பங்கள் என்னவா இருக்கும்? எது பிடிக்குது? எது அவளுக்குப் பிடிக்கலை? அது எதனால பிடிக்கலை?
அடுத்த முறை அவளுக்குப் பிடித்ததை அவள் கேக்காமலேயே செய்து கொடுக்கணும்னு ஒரு ஆண் தன்னை மாத்திக்க நினைச்சிட்டா… அந்தக் குடும்பத்துல பிரச்சனைங்கறதுக்கு இடமே இல்லாமப் போயிரும். அதேபோல அந்தப் பெண்ணும் இருக்கணும்.
சில நேரங்கள்ல தொழில்ல இருக்கற அதீத நெருக்கடியினால வீட்டை சரியா கவனிக்க முடியாமப் போன நேரங்கள்ல கூட, வீட்டுல வந்து அந்த ஸ்ட்ரெஸ்ஸ என்கிட்டயோ, புள்ளைங்ககிட்டயோ உங்க தாத்தா காட்டினதில்லை.
பெரும்பாலும் என்னோட உணர்வுகளை மதிச்சு நான் கேக்கு முன்னயே எனக்காக செய்யறவர், ஒரு முறை தாமதிக்கும்போது நானே அதைப் புரிஞ்சிக்க முயற்சி செஞ்சேன்.
உங்க தாத்தா என்னை ஒரு மாதத்திலேயே நல்லா ஸ்டடி பண்ணிட்டார். அப்புறம் எதற்காகவும் நான் அவரிடம் எதையும் கேட்டுப் பெறும்படியோ, இல்லை இது எப்படி நடந்திருக்கக்கூடும்னு யோசிக்கும்படியோ ஒரு நிமிசத்தைக்கூட நான் வருத்தமாகவோ, பரிதவிப்போடயோ, குழப்பத்தோடு சந்தேகத்தோடயோ கடந்ததில்லை. அதுதான் எங்களோட வெற்றிகரமான திருமண பந்தத்தின் ரகசியம்.
இதுல, ஆண்களைப்போல பொண்ணுங்களுக்கும் அந்தக் குடும்பத்தை நல்லபடியா நடத்தறதுல சரிபாதியா பொறுப்பு இருக்கு. அந்த மாதிரி ஒரு பொண்ணைத்தான் உனக்காக நான் தேடிட்டு இருக்கேன்.” என்று பாட்டி தனக்காக ஒரு பெண்ணைத் தேடித் தந்தவுடன், பாட்டனைக் காட்டிலும் மேலான வாழ்வினை நடைமுறைப்படுத்திடும் முனைப்பில் ரீகன் மாறத் துவங்கியிருந்தான்.
ஏங்க ஏங்க என்று ஆரம்பத்தில் அழைத்தவளிடம், ‘ஏங்க ஏங்கனு ஏங்காம என்னோட பெயரை ரீகன்னு கூப்பிடு ஹனி’ என்று கணவன் சொல்லியதைக் கேட்டு தனிமையில் மட்டும் அப்படிக் கூப்பிடப் பழகியிருந்தான் ஐடா.
அனைவரும் கிளம்பிச் சென்ற அன்று தனிமையில், “ரீகன்…” என்று கணவனை அழைத்தவள், “இத்தனையும் இந்த வீட்ல இருக்கும்போது, எதுக்கு எங்க வீட்ல இருந்து வரும் சீர் எல்லாம்! அதுக்குப் பதிலா அந்த அமௌண்ட்டை டெப்பாஷிட் பண்ணச் சொல்லியிருக்கலாமே!” கணவனிடம் கேட்டாள் ஐடா.
இது, இதைத்தானே பாலகுமாரா எதிர்பார்த்திருந்தாய் என்பதுபோல உடனே ரீகன், “அண்ணிக்கு அவங்க வீட்ல இருந்து இதுபோல பண்ணிருக்கும்போது, உனக்கு வேணாம்னு சொன்னா நாளபின்ன… உங்க குடும்பத்தைப் பற்றி நம்ம உறவுகள் முன்ன குறைவான மதிப்பீடா தெரியும். அப்படித் தெரிய வேணாமேன்னுதான் எதுவும் சொல்லலை” என்றவன்,
“இப்ப என்ன சொல்வாங்க? மூத்த மருமகளைப்போல இளைய மருமக வீட்லயும் எந்தக் குறையுமில்லாம எடுத்துட்டு வந்தானு பெருமையா சொல்லுவாங்கள்ல!
எப்பவும் ஒரு வீட்டுக்குள்ள வாழ வந்திருந்த ரெண்டு பேரை கம்பேர் பண்ணி ஒருத்தவங்களை உயர்வாகவும் மற்றொருத்தவங்களை குறைவாகவும் பேசிட்டே இருந்தா, அவங்க ரெண்டு பேருக்குள்ள மறைமுகமா மனத்தாங்கல்கள் வர வாய்ப்புண்டுன்னு பாட்டி சொன்னாங்க.
அதான் உங்க பேரண்ட்டோட ஆசைக்கு குறுக்க நிக்க வேணாம்னு அவங்க போக்குல விட்டாச்சு” என்று கூறி மனைவியைச் சமாளித்தான் ரீகன்.
ரீகனது பேச்சு சமாளிப்பாக இருந்தாலும், அது அவளுக்குத் தெரியாத வகையில் ஐடாவின் குடும்ப கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் செய்த அந்தச் செயலை எண்ணி ஐடாவிற்கு சந்தோசமே.
கணவன் மனைவி இருவருக்கும் பொழுதுகள் இனிமையாகக் கழிந்தது. ஐடாவிற்கு தன் கையால் கணவனுக்குப் பிடித்ததை செய்து பரிமாறிட ஆசை. அவளின் நடுத்தர வர்க்க வாழ்க்கை முறைக்கு நடுவே ரீகனது படோபடமான இந்த வாழ்க்கையில் ஏதோ பெரிய இடைவெளி இருப்பதுபோன்ற உணர்வு தோன்றியதால் ஐடா அப்படிக் கேட்டாள்.
அதனையும் ரீகனிடம் கூற, “ஃபர்ஸ்ட் ஹனிமூன் ட்ரிப் போயிட்டு வந்திரலாம் ஹனி. தென் உன்னோட விருப்பப்படி நீ என்ன செய்யணும்னு நினைக்கறியோ அப்படியே செய்துக்க” ஆமோதித்திருந்தான்.
திருமணத்திற்கு ஒரு மாத விடுப்பு எடுக்கச் சொல்லி எடுத்திருந்தாள் ஐடா. திருமணத்திற்குள் முன், பின் என பதினைந்து நாள்கள் விடுப்பு முடிந்து, இன்னும் பதினைந்து நாள்கள் மட்டுமே ஐடாவிற்கு விடுப்பு இருந்தது.
சென்னையில் சில ஆண்டுகளாக பணியின் நிமித்தமாக தங்கியிருந்தவள் இன்னும் பல இடங்களை நேரில் பார்த்ததில்லை என்று கூறியதைக் கேட்ட ரீகனுக்கு ஆச்சர்யம்தான்.
ரீகன், “என்ன ஹனி இப்படி இருக்க? இந்தக் காலத்துல நீ இப்படி இருக்கறதே அதிசயமாவும், ஆச்சர்யமாவும் இருக்கு எனக்கு”
“வேலைக்குப் போன நேரம் போக மற்ற நேரம் ஹாஸ்டல்ல இருப்பேன். எப்போதாவது அத்தியாவசியத்துக்கு வெளிய போயி வேணுங்கற திங்க்ஸ் வாங்கிட்டு வருவேன். கண்ட்டினியஸ் லீவ் இருந்தா அம்மா அப்பாவைப் பாக்க ஊருக்குப் போயிருவேன். அதனால எங்கயும் போனதில்லை” ஐடா.
வெளியில் அழைத்துச் செல்லலாம் என ஒரு நாள் மேட்னி ஷோவிற்கு ஐடாவை அழைத்துச் சென்றான் ரீகன். படங்கள் பார்த்துப் பழக்கப்பட்டிருக்காதவளுக்கு காதலர்களின் பேச்சு, செயல் அனைத்தையும் பார்த்து, “ரீகன் இதென்ன இப்படி பப்ளிக்ல டீசண்ட் இல்லாம நடந்துக்கறாங்க. எனக்கு இந்த மூவி பாக்க அன்ஈஸியா இருக்கு” சங்கடமாகப் பேசியவளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அப்போதே அவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.
அவள் வளர்ந்த விதம் பற்றி அவள் வாயிலாக கேட்டறிந்து கொண்டவனால் நம்ப முடியவில்லை என்பதைவிட, நம்பாமலும் இருக்க முடியவில்லை எனும் நிலை.
ஸ்டெல்லா, ஆல்வின் தம்பதியினர் மீது நன்மதிப்பு கூடியது. சிற்றின்பத்தினைப் பற்றிய தேடலின்றி, பேரின்பத்தைப் பற்றிய தேடுதலில் தங்களோடு தங்களின் குழந்தையையும் நேர்மறையாக வளர்த்திருந்தவர்களின் மீது அபார மரியாதை வந்திருந்தது.
ஐடாவைப் பற்றிய தெளிவு நாளுக்கு நாள் அதிகரிக்க, அவனால் இப்படியும் ஒருத்தி எனும் உண்மை விளங்க மனைவியை தலைமேல் வைத்து கொண்டாடித் தீர்க்க மனம் துள்ளியது.
அவ்வப்போது ஹனி எனும் வார்த்தையோடு, “மை ப்ரஸ்ஸியஸ் கிஃப்ட்” என்று ஐடாவைக் கொஞ்சத் துவங்கியிருந்தான். அதற்காக உலக ஞானமில்லாமலும் அவள் இல்லையே. இன்றைய தொழில்நுட்பங்களை எளிதாகக் கையாளக்கூடிய வகையில் தனது நிலையை வளர்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டு பெருமிதம்தான் ரீகனுக்கு.
ஐடா பணி புரியக்கூடிய அலுவலகத்தில் அவளின் பணி நேர்த்தி மற்றும் கூரிய மதி நுட்பத்திறன் பற்றிய கருத்துகளை எதேச்சையாக கேட்க நேரிட்டபோது அறிந்துகொள்ள முடிந்திருந்தது ரீகனால்.
பாட்டி ரூபி ஐடாவின் நேர்த்தியான வாழ்வியல் முறைகளை உடனிருந்து பார்த்து புழங்காகிதமடைந்து பேரனிடம் பகிர்ந்துகொண்டிருந்தார்.
அத்தோடு, “இப்படி இன்னும் எத்தனை நாளுக்கு சென்னைய மட்டுமே காட்டி அந்தப் புள்ளைய ஏமாத்தற பிளான்ல இருக்க?” பேரனிடம் கேட்டார் ரூபி.
ரீகனுக்கோ இது என்ன கொடுமை எனும் நிலையில் பாவமாகப் பாட்டியைப் பார்த்தவன், “ஒன் வீல் ஆர் டென் டேஸ்னு பிளான் போட்டது உங்களுக்கே தெரியும். இதுல இப்படியெல்லாம் பேச எங்க இருந்து கத்துட்டு வந்தீங்க திடீர்னு?”
“அப்பவாவது உன்னோட பிளானை எங்கிட்டச் சொல்லுறியானு பாக்கத்தான் போட்டு வாங்கறேன்” என்று சிரித்தார்.
“நானும் பாத்திட்டேதான் இருக்கேன். ஐடா வந்ததில இருந்து என்னை டீல்ல விட்டாச்சு” பொய் வருத்தத்தோடு பேரன் பேச,
“அவதான் என்னைக் காட்டிலும் உன்னை நல்லா கவனிச்சிக்கறாளே பேராண்டி. அப்புறமென்ன?” பேரனைச் சீண்டினார் பாட்டி.
“அதுக்காக?” ரீகனது உரிமைப் போராட்டம். ஆனால் அது உண்மைப் போராட்டமல்ல.
“பேத்தியைப் பாத்ததும் பேரன் பின்னுக்குப் போயிடுவானா?” சிரித்தார் பாட்டி.
“பேச்சு ஒன்னா இருக்கு. ஆனா…”
“என்ன ஆனா?” ரூபி.
இப்படி பாட்டிக்கும் பேரனுக்கும் ஐடாவுக்காக பொய் முறைப்புகளும், உரிமைச் சண்டைகளும் அவ்வப்போது வந்தது. ஐடாவை வைத்துக்கொண்டு இப்படி பேசினால் அதனை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் அவளிடம் இல்லை என்பது இருவருக்கும் திண்ணம். ஆகையினால் அவளின் முன் அப்படிப் பேசுவதைத் தவிர்த்திருந்தனர். அவள் உண்மை பேசுவாள். எதையும் மறைத்தோ, திரித்தோ பேசிப் பழகியிராதவள் என்பது பற்றியும் இருவரும் கணித்திருந்தனர்.
***
எங்கு செல்லலாம், தற்போது எங்கு மழைக்காலம் இல்லாமல், ஆனால் அந்த இயற்கை சூழலை பெரிதும் ரசிக்கும்படி இருக்கும் சில இடங்களை மனைவியிடம் கேட்டபொழுது, “நீங்க எங்க சொன்னாலும் எனக்கு ஓகேதான்.” கணவனிடம் தனது முடிவை ஒப்புவித்திருந்தாள் ஐடா.
ரீகனோ தானாக முடிவெடுக்காமல் மனைவியிடமே சில இடங்களின் பெயரைச் சொல்லும்படி கூறி அதை எழுதிப் போட்டு ஐடாவை எடுக்கச் சொன்னதில் சிம்லா செல்வதாக முடிவானது.
ரீகனது இதுபோன்ற செயல்கள் ஐடாவிற்குள் இருந்த குறைந்தபட்ச அவன் மீதான சந்தேகத்தை மேலும் மறைத்து வைத்திருந்தது. கணவன் மீது அவளறியாமலேயே ப்ரியம் உண்டாகத் துவங்கியிருந்தது.
ரூபிக்கு, பேரனது இந்த திடீர் மாற்றம் ஆச்சர்யத்தோடு ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும் தந்திருந்தது. தனியாக ரீகன் இருந்த வேளையில், “இப்பத் தெரியுதா? பாட்டி இந்த பியூட்டிய ஏன் மேரேஜ் பண்ணிக்கச் சொன்னேனு” என ஐடாவைக் காட்டி மெதுவாகக் கேட்டார்.
முகம் முழுவதும் சந்தோசத்தில் விகர்சிக்க புன்முறுவலோடு, கைகள் இரண்டையும் பேண்டலுனுக்குள் நுழைத்தபடியே தோளைக் குலுக்கியவனைக் கண்ட பாட்டிக்கு அத்தனை நிறைவு.
தாங்கள் ஒரு வார காலம் ஹனிமூனுக்கு செல்லும் இடத்தை ரீகன் கூறியதும், மணமக்களை இன்முகத்தோடு அனுப்பிவைத்திருந்தார் ரூபி.
***