இளைப்பாற இதயம் தா!-9
இளைப்பாற இதயம் தா!-9
இளைப்பாற இதயம் தா!-9
ஒரு மாத விடுப்பிற்குப் பின் தனது கேபினுக்குள் நுழைந்தவளுக்கு அவளுக்கு முன்பாகவே அங்கொரு பெண்ணது கைப்பை இருப்பதைப் பார்த்து யோசனையானாள் ஐடா.
அவள் மட்டுமே பயன்படுத்த ஏதுவாக நிர்வாகத்திடம் சில மாறுதல்களை அந்த கேபினில் செய்திருந்தாள் ஐடா. அந்த இடத்தில் வேறொரு நபரது பொருள்கள் இருப்பதைப் பார்த்ததும், தனதிடத்தை யாரோ பறித்துக்கொண்ட உணர்வு சட்டென மனதில் தோன்றியதை அவளால் இலகுவாகக் கடந்து வர முடியவில்லை.
கேட்டதற்கு பதில் என்றளவில் மட்டுமே அனைவரோடும் ஐடாவின் பழக்கம் இதுவரை. திடீரென்று யாரிடம் சென்று என்னவென்று கேட்பது என தடுமாற்றம் வேறு.
ஒரு மாத காலம் வேறு எந்த சிந்தனையும் இன்றி திருமணம் சார்ந்த நிகழ்வுகளிலும், ரீகன் சார்ந்தும் இருந்துவிட்டு அலுவலகம் செல்ல வேண்டும் என்றதுமே, கோடைகால பள்ளி விடுமுறைக்குப்பின் பள்ளிக்குக் செல்லும் மாணவர்களின் நிலையில்தான் ஐடா இருந்தாள்.
தாயுடன் இருந்துவிட்டு வரும்போது தோன்றும் ஹோம் சிக் உணர்வு திருமணமாகி கணவன் வீடு வந்தும் தொடர்வதை அவள் யாரிடம் சொல்ல முடியும். மனதிற்குள் தோன்றிய ஒரு வித வெறுமை அவளைத் தாக்க, காலை எழுந்தது முதலே அது முகத்தில் தோன்றியதை மறைக்க அரும்பாடுபட்டாள்.
ஏதோ ஒரு வித்தியாசம் ரீகனுக்கு ஐடாவிடம் தோன்றியது போலும். மனைவி கிளம்பி அலுவலகம் செல்ல நிற்பதைப் பார்த்து அருகில் வந்தவன், “ஹனி உடம்புக்கு எதாவது அசௌகர்யமா ஃபீல் பண்றியா?” என்று அவளின் கழுத்தில் தொட்டு, பிறகு நெற்றியில் கைவைத்து ஏமாந்துதான் போனான்.
“இல்லையே. ஏன் கேக்குறீங்க?” என்ற ஐடாவிற்கு குரலே வெளிவரவில்லை.
இதுவரை இப்படி ஐடாவைப் பார்த்திராதவனுக்கு என்ன தோன்றியதோ. அவளை மெதுவாக தன்னோடு அணைத்துக் கொண்டவன், “ஹனி… உனக்காக, நம்ம ஃபியூச்சருக்காக வேண்டிய எல்லாம் எந்தக் குறையுமில்லாம நான் பாத்துக்குவேன். உனக்கு ஜாப் போகணும்னா போ. இல்லைனா தாராளமா வீட்டுல இரு. உன்னை நீ கஷ்டப்படுத்திக்காத…” அவளை தன் அணைப்பிலிருந்து விடுவித்து மனைவியின் முகம் பார்த்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு அவளின் பதிலுக்குக் காத்திருந்தான்.
அதுவரை ரீகனைப் பார்த்திருந்தவள், “லாங்க் லீவ் எடுத்துட்டு ஆபிஸ் போறதால அப்டி இருக்கு ரீகன். இன்னைக்கு மட்டும் அப்டித்தான் இருக்கும். மேனேஜ் பண்ணிக்கறேன்” கணவனைப் பார்த்து கூற முடியாமல் குனிந்தபடியே மெல்லிய குரலில் கூறினாள்.
மனைவியின் பேச்சைக்கேட்டு ரீகனுக்கு சிரிப்புதான். ஆனாலும் அதனை அவளிடம் காட்டாமல், “ஓகே ஹனி. ஃபர்ஸ்ட் டே நானே உன்னை ட்ராப் பண்றேன். நாளையில இருந்து டிரைவர் ஏற்பாடு பண்ணிறலாம்”
“எதுக்கு ரீகன்? இந்த ஏரியால ஆபிஸ் வெகிகிள் வந்தா, அதுலயே போயிக்கலாம். இன்னைக்கு மட்டும் ட்ராப் பண்ணுங்க போதும்” என்றபடி பேசிக்கொண்டே கிளம்பி அலுவலகம் வந்திருந்தாள் ஐடா.
ஹோம் சிக்கோடு அலுவலகத்திற்கு வந்தவளுக்கு, தனது கேபினில் கண்ட காட்சி மேலும் பதற வைத்தது.
தனது லேப்பை எடுத்து மெயில் செக் செய்தாள். தனக்கு இதுசார்ந்து எதாவது தகவல் பரிமாற்றம் என வந்திருக்கிறதா என்று. தினந்தோறும் பார்த்திருந்தாலும் அவளுக்கு திடீரென்று தன் மீதே அவநம்பிக்கை. திருமண பரபரப்பிலும், வெளியில் சென்று வந்த அலைச்சல், புது இடம், புது மக்கள் என ஏதோ ஒரு விசயத்தால் தான் கவனிக்காது இருந்தால் என்று.
கடந்து சென்ற ஒரு மாதத்தில் அவளுக்கு வந்த அனைத்து மெயில்களையும் ஒரு முறை பார்த்து, அதில் அப்படி எதுவும் வந்திருக்கவில்லை என்பது தெளிவானது.
நிறுவனம் சார்ந்த மெயில்களில் புதிய கிளை ஹைதராபாத்தில் நிறுவ இருப்பது பற்றியும், அதற்கான ஆள் சேர்க்கை கலந்தாய்வு மூலம் எந்தத் தேதியில் எங்கு நடைபெறுகிறது என்பது பற்றியும், தங்களது கிளைகளில் பணியில் இருப்பவர்களுக்கு அறிமுகமானவர்கள் யாரேனும் தகுதியுடையோர் இருப்பின் கலந்தாய்வில் கலந்துகொள்ள வலியுறுத்தும்படியும் வந்திருந்தது.
அதைத்தவிர மற்றவை அனைத்தும் பொதுவான தகவல் பரிமாற்ற மெயில்கள் மட்டுமே. ஐடாவின் பணி சார்ந்த எந்த தகவலும் அவளுக்கென்று பிரத்தியேகமாக வந்திருக்கவில்லை.
சற்று நேரத்தில் அவளுக்கு சிஇஓவிடமிருந்து அழைப்பு வர, அவரது அறை நோக்கிச் சென்றாள் ஐடா.
புதிய கிளையின் நிர்வாக உறுப்பினர்களை இதற்கு முன்பாகவே தேர்ந்தெடுத்திருந்தனர். ஐடாவோடு சேர்த்து பதினைந்து நபர்கள் மீட்டிங்கிற்கான பிரத்தியேக அறையில் இருந்தனர். அதில் சிலரைத் தவிர அனைவரும் புதுமுகம்.
அஸ்வினும் அங்கு அமர்ந்திருந்தான். அவனுக்கு ஐடாவின் பொலிவான தோற்றம் ஏமாற்றத்தைத் தந்தது. ‘எத்தனை முறை சொல்லியும் அவசரப்பட்டுவிட்டாளே’ என்று தோன்றியது.
ஆனால் ஐடாவின் தோற்றப் பொலிவில் ரீகனின் மீது பொறாமை வந்தது. ‘மச்சக்காரனா இருக்கான். படிக்கும்போது பொண்ணுங்க அவங்கிட்ட படிஞ்சது. வேலைக்கு வந்தும் படிஞ்சது. எப்பவும் இவனுக்கு மட்டும் படியுது. நமக்கு அந்த ட்ரிக் தெரிய மாட்டிங்குது. லோ லோனு இவ பின்னாடி அலைஞ்சதுக்கு அம்மா பாத்த பொண்ணு யாரையாவது கட்டிட்டு செட்டில் ஆகிருக்கலாம்’ என்று காலங்கடந்து தோன்றியது அஸ்வினுக்கு.
ஐடாவை திருமணத்திற்குப்பின் இன்றுதான் சந்திப்பதால் வழமையான பொது விசாரிப்புகளுக்குபின், அனைவருக்கும் ஐடாவை அறிமுகம் செய்தார் சிஇஓ.
“இந்த பிரான்ஞ்ல இருக்கறவங்களுக்கு ஐடாவைத் தெரிஞ்சிருக்கும். புதியவங்களுக்காக அவங்களை இங்க அறிமுகம் செய்யறதுல ரொம்ப சந்தோசப்படறேன். அதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு” என்று துவங்கியவர்,
ஐடாவின் அலுவலகத்தில் இதுவரை ஆற்றி வந்த பொறுப்பு நிலை, மற்றும் அவளது வேலையில் இருந்த ஈடுபாடு காரணமாக அடுத்தடுத்து பிரமோஷன், தற்போது அவளின் பணி நிலை அனைத்தையும் கூறியவர் அவளின் பணி நேர்த்தி பற்றியும் அங்கு பெருமையாகப் பகிர்ந்துகொண்டார்.
ஹைதராபாத் கிளைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்ததோடு இறுதியாக, “ஐடா, இவங்க நான்சி” அங்கிருந்தவர்களில் இறுதியாக ஒரு பெண்ணை அறிமுகம் செய்ததோடு, இருவரும் ஒருவரையொருவர் கைகுலுக்கி சினேகபாவத்தோடு தலையசைக்கும் வரை தாமத்தித்தவர் மேலும் தொடர்ந்தார்.
நான்சி இங்கு மேலும் ஒரு மாத காலம் பணியில் தொடருவார் என்றும், அவர் புதிய கிளைக்கு ஐடாவின் பணிப் பொறுப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் விசயத்தைக் கூறியதோடு, “நான்சிக்கு அல்ரெடி ஃபைவ் இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு ஐடா. ஆனா, இடையில ட்டூ இயர்ஸ் பிரேக் எடுத்திருக்காங்க. அதனால அவங்களுக்கு அவங்க சீட் ஓரியண்டட் டவுட்ஸ் எதாவது இருக்கும் பட்சத்தில நீங்கதான் அவங்களை கைட் பண்ணணும்” என்பதையும் கூறியதோடு, மேலும் புதிய கிளை சார்ந்த சில விசயங்களைப் பற்றி ஐடாவோடு கலந்தாய்வு செய்தார்.
மீட்டிங் முடிந்து வந்தவளிடம், திருமண வரவேற்பு என்று சென்னையில் பிரத்தியேகமாக வைக்காததால் ஐடாவின் திருமணத்திற்கு வந்திராதவர்கள் அனைவரும் அவளைச் சந்தித்து வாழ்த்துக் கூறினர்.
அன்று மதியம் ஐடா சார்பில் அனைவருக்கும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தாள். அதன்பின் அன்றைய தினம் சென்றதே தெரியவில்லை. மாலையில் ரீகனே அவளை நேரில் வந்து காத்திருந்து அழைத்துச் சென்றான்.
ரீகன் காத்திருந்தபோது அஸ்வினை சந்திக்க நேர்ந்தது. சாதாரண விசாரிப்புகள், பேச்சுகள், ஐடா வரும்வரை தொடர்ந்தது. அவள் வந்ததும் தம்பதியினர் விடைபெற்றனர்.
அப்போம அஸ்வினிடம் ஐடா எதுவும் சொல்லிக்கொள்ளாமல் ரீகனோடு கிளம்பி வந்திருந்தாள். அனைத்தையும் ரீகன் கவனத்தில் கொண்டாலும், எதையும் கேட்கவில்லை.
ஐடா சில விசயங்களில் இப்படித்தான் என்று தெரிந்தபிறகு அவளிடம் என்னவென்று கேட்பது மடத்தனமாகவே ரீகனுக்குத் தோன்றியது.
மேலும் அவள் பிற ஆண்களோடு பேசினால் தன்னால் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியுமா என்கிற கேள்வியும் முதன் முறையாக வந்தது. ஏனென்றால், ஐடா அப்படி அஸ்வினைத் தவிர்த்ததுகூட ரீகனுக்கு தனித்துவமான சந்தோசத்தினைத் தந்தது. அதை உணர்ந்தவனுக்குள், ‘ரீகனுக்கு பொசசிவ்வா?’ ஆச்சர்யமாக இருந்தது.
இரவு ஒன்பது மணியளவில் வீடு திரும்பும் ரீகன் இன்று தன்னை அழைக்க வந்திருப்பதைக் கண்ட ஐடா, “உங்க வேலையெல்லாம் பெண்டிங் வச்சிட்டு என்னைக் கூப்பிட வந்திட்டீங்களா?”
“அப்படியெல்லாம் இல்ல ஹனி”
“நாளையில இருந்து கம்பெனி வெகிகிள்ள போயிக்குவேன்” இப்படித் துவங்கிய பேச்சு, அன்று மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தது பற்றிச் சென்றது.
“நல்லா இருந்ததா? அவங்கதான் இப்ப கேட்டரிங் நல்லா பண்ணிட்டு இருக்காங்கனு அங்க சொன்னேன்.” ஐடாவிடம் வினவ, அனைவரும் திருப்தியாக இருந்ததாகச் சொன்னதைப் பற்றிக் கூறினாள் ஐடா. அதைப்பற்றிய பேச்சுக்களோடு வீடு வந்து சேர்ந்திருந்தார்கள்.
வந்தவன் ஐடாவை வீட்டில் விட்டுவிட்டு வெளியில் கிளம்பிவிட்டான். அவன் இரவு திரும்பும்வரை பாட்டி ரூபியோடு அன்றைய அவரின் பகல் வெறுமையை விரட்டும் வகையில் அவரோடு செலவளித்தாள்.
ரூபி, “வேலைக்குப் போயிட்டு வந்த டயர்டல இருக்க. நீ போயி ரெஸ்ட் எடும்மா”
“இல்ல பாட்டி. நைட் டின்னர் முடிச்சிட்டு போறேன்” தீர்மானமாக உரைத்துவிட்டாள் ஐடா. அத்தோடு தாமஸோடு சேர்ந்து இரவு உணவிற்கு வேண்டிய பணிகளையும் பார்த்தாள்.
ரூபிக்கு ஐடாவின் பொறுப்பு சார்ந்த சிந்தனை செயல்பாடுகள் பிடித்திருந்தது. “தாமஸ்ட சொல்லிட்டு நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ஐடா. அவன் பாத்துப்பான்”
“இல்ல பாட்டி. எனக்கு அங்க நின்னு நானே பண்ணாதான் திருப்தியா ஃபீல் ஆகுது” என்றுரைத்துவிட்டாள் ஐடா.
இரவில் திரும்பிய பேரனிடம் ஐடாவின் பெருமிதங்களை ரூபி பேச, “நான் எவ்ளோ பண்றேன். அதையெல்லாம் இப்படிப் பெருமையா யாருகிட்டயாவது சொல்லியிருக்கீங்களா? ஆனா எதுக்கெடுத்தாலும் ஐடா ஐடானு” என பாட்டியிடம் கூறினாலும் ரீகனுக்குள்ளும் ஐடா சார்ந்த நெகிழ்ச்சியான தருணங்கள் நிறைவைத் தந்ததென்னவோ உண்மை.
அலுவலகத்தில் நான்சியோடு ஒரே கேபினுக்குள் இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்தினால் பணி சார்ந்து இருவரும் ஒருவரையொருவர் சார்ந்திருந்ததால் இருவருக்கிடையே சிறு ஒட்டுதல் வந்திருந்தது.
அந்த ஒட்டுதல் நான்சிக்கு கூடுதலாகவும், ஐடாவிற்கு நான்சியின் தொண தொணத்த பேச்சுகளை பொறுத்துக்கொள்ளுமளவிற்கும் இருந்தது.
நான்சி திருமணம் முடிந்து பணியை விட்டிருந்ததாகவும், ஒன்றரை வருடத்திலேயே விவாகரத்துப் பெற்று மீண்டும் பணிக்கு வந்ததையும் அறிந்து ஐடாவிற்கு வருத்தம்தான். ஆனால் அதைப்பற்றி மேலும் கிளறி அறியும் ஆர்வம் ஐடாவிற்கு இல்லை.
ஆனால் நான்சி அதற்காக வருந்தவில்லை என்பது அவளின் பேச்சிலேயே தெரிந்தது. “காலுக்கு ஒத்து வராத செருப்பை கழட்டி வீசறதுதானே முறை. அதைச் செய்ய ஒன்றரை வருசம் அதிகந்தான்” இப்படி அவளைப்பற்றிய விசயங்களை ஐடா கேளாமலேயே கூறினாள் நான்சி.
ஐடா நான்சியின் பேச்சுகளை வளர்க்கவிடாமலே பணியில் திசை திருப்பி அந்தப் பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் கெட்டிக்காரி. அதேசமயம் தன்னைப் பற்றியோ, தனது திருமண வாழ்க்கை பற்றியோ யாரிடமும் மூச்சு விடவில்லை ஐடா.
நான்சி சில நேரங்களில் துருவுவதுண்டு. ஆனால் ஐடா சிரித்து அந்த பேச்சை விடுத்து வேறு பேசி அதில் கவனமாகிவிடுவதை வாடிக்கையாக்கியிருந்தாள்.
ஒரு மாத நிறைவில் நான்சி அங்கிருந்து ஹைதராபாத் கிளைக்கு பணிக்காகச் சென்றுவிட்டாள். ஐடா அவளின் பிரிவையெண்ணி வருத்தம்கொள்ளவில்லை. ஒட்டியும் ஒட்டாத பாவனையோடு ஐடா இருந்தமையால் நான்சியின் பிரிவு அவளுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கவில்லை.
நான்சி அப்படியில்லாமல் ஐடாவின் பிரிவையெண்ணி அந்த ஒரு மாத காலத்தை மனதில் உருவேற்றி அவ்வப்போது அதனைப் பேசி வருத்தத்தோடு அங்கிருந்து கிளம்பிச் சென்றிருந்தாள்.
ஐடா நான்சிக்கு அழைத்து பிரத்தியேகமாக எதுவும் பேச முனையாத நிலையில், நான்சியே அவ்வப்போது அலுவல் சார்ந்தும், தனித்து தனது திருப்திக்காகவும் ஐடாவோடு பேசுவதை வாடிக்கையாக்கியிருந்தாள். மாதங்கள் உருண்டோடியது.
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்றெல்லாம் இல்லாமல் ஆறு மாதங்கள் கடந்தும் ரீகன் ஐடாவின் மீது பித்தாக இருந்தான்.
ஐடா முன்பைக் காட்டிலும் ரீகனோடுடனான இல்வாழ்க்கையை ரசித்து வாழத் துவங்கியிருந்தாள். ஐடா, ரீகன் தனக்காகவே ஆண்டவனால் அனுப்பப்பட்ட பிரேத்தியேக புருசன் என்று நம்பினாள்.
கணவனது உடை அவனது புறத்தோற்றத்தினை தான் ரசிக்கும் அளவிற்கேற்ற வகையிலும், உணவில் அவனுக்கு பிடித்தமானதை இருக்கும்படியாகவும் பார்த்து பார்த்துச் செய்வதில் ஐடா தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள். அதில் பெருமகிழ்ச்சி கொண்டாள்.
ஐடா, ரீகன் இருவரது அன்னியோன்யத்தைப் பார்த்த பாட்டி ரூபிக்கு மகிழ்ச்சிதான். ஆனால் ரீகனது தாய் சீலி அதையெல்லாம் கவனித்தில் கொள்ளும் நிலையில் இல்லை. அவருக்கு அவரது தொழில் தொய்வடையாதவரை எதையும் அலட்டிக்கொள்ள மாட்டார்.
இடையில் ஸ்டெல்லா, ஆல்வின் தம்பதியினர் இருமுறை சென்னையில் வந்து மகளைப் பார்த்துச் சென்றனர். ஒருமுறை தம்பதி இருவரும் தேவகோட்டை சென்று வந்தனர்.
திருச்சியில் இருந்து அவ்வப்போது அலைபேசி பேச்சுகள் மட்டுமே. முன்பைவிட ரீகன் திருச்சி பயணத்தைக் குறைத்துக் கொண்டிருந்தான். மாதமொருமுறை என்றாலும் திருச்சி சென்றாலும் அங்கு தங்குவதில்லை.
இந்நிலையில் பங்களூர் கிளையில் ஐடாவிற்கு பணி நிமித்தம் ஒரு மாதம் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை. வீட்டில் வந்து ஐடா விசயத்தைச் சொல்ல, “வேலையே வேணாம் ஐடா” என்றுவிட்டான் ரீகன்.
கணவனை தாஜா செய்ய ஐடாவிற்கு இன்னும் தெரியவில்லை. அதனால் சாதாரணமாக, “ஒன் மன்த் தான ரீகன். கிளம்பிப் போனா வேலை பிஸில நாள் போறதே தெரியாது. முன்னெல்லாம் நான் அடிக்கடி போவேன். அதைவச்சித்தான் சொல்றேன்” என்று கூறினாள்.
திருமணத்திற்குப்பிறகு ரீகனைப் பிரிந்திருக்கும் சூழல் இதுவரை அமைந்திராததால் ஐடா அதன் தாக்கம் என்னவென்று புரியாமல் கணவனிடம் பேசினாள். ரீகன் எத்தனை கூறியும் அவளின் முடிவில் மாறாமல் கிளம்பிச் சென்றிருந்தாள் ஐடா.
ரூபி தம்பதியினரின் எந்த முடிவிற்குள்ளும் தலையிடாமல் ஒதுங்கிவிட்டார். பாட்டியிடம் கூறிக்கொண்டு இரவு பயணத்தை மேற்கொண்டவள் காலையில் அலுவலக வேலையில் பிஸியாகிவிட்டாள்.
அவள் சென்றது முதலே ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்று ரீகன் அழைக்க, பேருந்தில் சென்று கொண்டிருந்தவள் தான் தற்போது எங்கு சென்று கொண்டிருக்கிறேன் எனும் செய்தியைப் பகிர்ந்துகொண்டாளே அன்றி கணவனது நிலையை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அலுவலகப் பணி முடிந்து விடுதிக்கு திரும்பி ரெஃரெஷ் செய்து அமர்ந்தவளுக்கு அப்போதுதான் வீட்டு நினைப்பும், ரீகனது அருகாமையும் வேண்டியிருந்தது.
பகல் முழுவதும் அவளுக்கு அழைத்துப் பேசியவனிடம் ஒன்றிரண்டு வார்த்தைகளோடு, “இங்க பிஸியா இருக்கேன். முடிச்சிட்டு லன்ஞ் டைம்ல கூப்படறேன்” என்று சொன்னவள், அவள் அழைக்கவில்லை.
அப்போதும் ரீகன்தான் அழைத்திருந்தான். இப்படி மனைவியின் அருகாமையை தேடிக் களைத்து ஓய்ந்தவன் முன்னிரவில் மனைவியின் அழைப்பை ஏற்கவில்லை.
ரீகனாக அடிக்கடி அழைத்துப் பேசியபோது தோன்றாத உணர்வு அவன் தனது அழைப்பை ஏற்காதபோது தோன்றியது. ‘என்னாச்சு… ஏன் ரீகன் போனை எடுக்க மாட்டிங்கறாங்க?’ இப்படி தலையைப் பிய்த்துக் கொண்டவள், பாட்டி ரூபிக்கு அழைத்தாள்.
சாதாரண விசாரிப்புகளுக்குப்பின், “அவன் காலையில ஆஃபிஸ் போனதுதான். இன்னும் வீடு வரலை” என்றவர், “எதாவது வேலையா இருந்ததால போனை எடுக்காம இருந்திருப்பான். ஃபீரியாயிட்டு கூப்பிடுவான். அதுக்காக வர்ரி பண்ணாத. உடம்பைப் பாத்துக்கோ. நல்லா சாப்பிடு” என்று வைத்திருந்தார்.
திருமணத்திற்குப் பிறகான தனிமையான இரவு கொடுமையாக இருந்ததை அப்போதுதான் ஐடா உணர்ந்தாள். ரீகன் ரீகன் என ரீங்காரமிட்ட அவளது மனதும், உடலின் ஒவ்வொரு செல்லும் அவனைக் காண ஏங்கியது.
ஏக்கங்களால் தூக்கம் கெட்டது. தொடர்ந்த இரவுப் பொழுது தொந்திரவாக இருந்தது. விடியல் வந்தாலும் தன்னவனைக் காண முடியாதே என்கிற எண்ணம் இதயத்தில் இரணத்தைத் தந்தது.
இரவு முழுவதும் எத்தனை முறை ரீகனுக்கு அழைத்தும் அவன் எடுக்காதது மேலும் ஐடாவிற்குள் சங்கடத்தைத் தந்தது. பத்து மணிக்குமேல் ரூபிக்கு அழைக்க தயங்கினாள்.
முதன் முதலில் பிஜி படிப்பிற்காக விடுதிக்குச் சென்று தங்கிய அன்றைவிட இன்று அதிகம் படுக்கையில் அழுதாள். அவளால் உறங்கவே முடியவில்லை.
அழுதது, உறங்காதது இரண்டோடு, ரீகன் இரவு முழுவதும் அழைப்பை ஏற்காதது அனைத்தும் சேர்ந்து மறுநாள் உடல்நலக் குறைபாடு உண்டாகியிருந்தது.
தலை பாரமாக இருக்க, அன்றே விடுப்பு எடுக்க முடியாத நிலை வேறு. ஆனால் உடல் ஒத்துழைக்காமல் அங்கு சென்று என்ன செய்வது என்று புரியாமல் இருந்தவளுக்கு ரீகன் ஏன் தனது அழைப்பை ஏற்கவில்லை எனும் கேள்வியியேலே மனம் நிலைத்திருந்தது.
இதற்கிடையில் நான்சி வேறு அழைத்திருந்தாள். இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு வைத்துவிட்டாள்.
கணவனது கரங்களுக்குள் சென்று தஞ்சமடைய உள்ளமும், உடலும் ஏங்கியது. அவனைக் காணாமல் வேறு எதிலும் நாட்டமில்லை. பசி எனும் உணர்வே அவளுக்குத் தெரியவில்லை.
சங்க கால தமிழ் பாடல்கள் தமிழாசிரியர் நடத்தியபோதெல்லாம் கேலியாக தெரிந்த விசயம் இன்று முதன் முதலாக தனது வாழ்வில் நடப்பதைக் கண்டு ‘அதெல்லாம் உண்மைதான்போல’ என்று மனம் சிந்தித்தது.
எழ முயன்றாலும் முடியாதபடி உடல் சோர்ந்து கிடந்தாள். இப்படியே படுத்திருந்தாள் மேலும் உடல்நலன் கெடும் என்றெண்ணி எழுந்தவளுக்கு தலையைச் சுற்றியது.
‘ஒரு நாள் நைட்டு சாப்பிடாததுக்கே தலையை சுத்துதே’ என சமாளித்து பிரஸ் செய்ய முயன்றவளுக்கு ஏதோ வித்தியாசமான உணர்வு. அந்த பேஸ்டின் சுவையும், மணமும் அருவெறுத்து வந்தது.
பெற்றோரைக்கூட இத்தனை தான் தேடியதில்லை எனும் உண்மையும் சுட்டது ஐடாவை. ஆனால் ரீகனைத் தேடும் மனம்… ‘நான் அவங்க சொன்னதை மீறி பங்களூர் வந்திட்டேனு போனை எடுக்காம கோபமா இருக்காங்களோ’ சிந்தனை சென்றது.
அவள் சிந்தனையை கலைத்தது… வந்த அழைப்பு! யாரிடமிருந்து…?
***