உனக்காக ஏதும் செய்வேன் – 18.3

உனக்காக ஏதும் செய்வேன் – 18.3
அத்தியாயம் – 18.3
அவர்கள் அனைவரும் சென்றது மாரியம்மன் கோவிலுக்கு தான்.
அன்று கோவிலுலில் ஏதோ விஷேச நாள் என்பதால் வெளியே சிறு சிறு கடைகள் இருந்தது.
சூர்யா அவளுக்கு அங்கிருந்த பூக்கடையில் அரைமுலம் மல்லிகைப்பூ வாங்கி அவளிடம் தர, அவள் பார்க்கவும் அதன் அர்த்தத்தை உணர்ந்தவன் புன்சிரிப்புடன் அவளுக்கு வைத்து விட ஆசையாக வைத்துக்கொண்டாள்.
அங்கிருந்த கடைகளைத்தான் அவள் பார்த்துக்கொண்டே வந்தாள்.
அதை உணர்ந்த சூர்யா, ‘எதுக்கு இப்படி கடையெல்லாம் பாத்துட்டே வரா… பொம்மை பலூன் வாங்க நினைக்குறாளோ!’ என அவளை சந்தேகமாக பார்த்துக்கொண்டே வந்தான்.
அவள் கண்கள் அங்கிருந்த ஒரு கண்ணாடி வளையல் கடையில் வந்து நின்றது.
அதை உணர்ந்தவன் அவளிடம், “பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்கிட்டு வரேன் உள்ள போ” எனக்கூற, அவனிடம் வளையல் வாங்கித்தர சொல்லி வாயை திறக்க நினைத்தவள் ‘என்ன சொல்ல வரோம்னு கேக்கறதே இல்ல’ என முனகிக்கொண்டே உள்ளே சென்றாள்.
பூஜைக்கு வாங்கிய பொருளுடன், பச்சை நிறத்தில் சற்று வேலைப்பாடு செய்த அழகிய வளையல் ஒரு டசன் வாங்கினான். அவளுக்கு பிடித்த நிறம் அவன் அறிவானே! மேலும் இன்று அவள் அணிந்திருந்த சீலையும் அதே நிறம்தான்.
அவள் கோவிலுக்குள் நுழையும் இடத்தில் ஒரு திட்டின் பக்கத்தில் அவனுக்காக காத்திருந்தாள்.
அவளருகே சென்றவன், அந்த திட்டில் வாங்கிய பொருளை வைத்து விட்டு, அவளை கைபிடித்து திருப்ப, ஏதோ ஒரு நினைப்பில் இருந்தவள் நிகழ்வுக்கு வந்து என்ன என்பது போல நோக்கினாள்.
தன் பாக்கெட்டில் கவனமாக வைத்திருந்த வளையலை எடுத்தான். அதைக்கண்டதும் அவள் முகம் பிரகாசமாக உடனே அவனை சற்று முறைத்து பார்த்தாள்.
அந்த வளையலை சுற்றியிருந்த பிளாஸ்டிக் கவரை நீக்கியவன், அவள் கைகளுக்கு மென்மையாக வளையலை அணிவித்துக் கொண்டே,
“எதுக்குடி முறைக்குற? வளையல் டிசைன் புடிக்கலையா?” என வினவினான்.
கண்டிப்பாக அவளுக்கு பிடிக்கும் என அறிவான். ஆனாலும் கேட்டான்.
“அப்போ நீங்க நான் அந்த கடையை பாக்குறத பாத்திங்க?”
“ஆமா”
“அப்பறோம் ஏன் என்ன உள்ள போக சொன்னீங்க?”
“உனக்கு நீ நெனச்சத சொல்லாமலே வாங்கி கொடுத்தா இப்படி அழகா ரியாக்ட் பண்ணுவல அதுக்குத்தான்.” என வசீகரமாக புன்னகை செய்ய, அவனை காதலாக பார்த்தாள்.
பதிலுக்கு காதலாக பார்த்தாலும், “நீ என்ன நெனச்ச?” என கேட்டான்.
“நான்… என இழுத்தவள் நான் என்ன சொல்ல வரேன்னு கேக்காம புரிஞ்சிக்காம, உள்ள போக சொல்லறீங்கனு நெனச்சி கொஞ்சம் கடுப்பாயிட்டேன்” என அசடு வழிய,
அதைக் கண்டு சிரித்தவன், அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று அர்ச்சனைக்கு “கீர்த்தி” பெயரைக்கூற, அப்போது அவனை இயல்பாகவே பார்த்தாள்.
பூஜை முடித்தவர்கள் சற்று நேரம் உட்கார்ந்து விட்டு செல்வோமென முடிவு செய்து ஒரு இடத்தில் அமர்ந்தனர்.
“உனக்கு எதும் கேக்க தோணலையா மகா…?”
“என்ன கேக்கணும்?”
“அவங்கள விட்டு விலகி இருக்க நினைச்சுட்டு இப்படி வந்து அவ பேருக்கு அர்ச்சனை பண்றேன். இதுலாம் சரியா அப்டினு தோணல?” என்றான் கொஞ்சம் தவிப்பான குரலில்.
“அப்டிலாம் எதும் தோணலங்க.” என்றாள் இலகுவாக.
அவளுக்கு பொதுவாக யாரோட பிறந்தநாள் என கேள்விப்பட்டால் நினைவுப்படுத்த மொபைலில் ஈவென்ட்டில் சேவ் செய்து வைப்பது பழக்கம். எனவே என்றோ ஒருமுறை அவன் கூறியதை கேட்டு நாத்தனார்/அண்ணி பிறந்தநாளை மொபைலில் சேவ் செய்திருந்தாள்.
எனவே அவன் கூப்பிடும்போதே அறிவாள். வருடாவருடம் இதுபோல அவன் தங்கை பிறந்தநாளுக்கு கோவில் சென்று வருவது அவன் வழக்கம் தான். ஆனால் அதை பெரிதாக கீர்த்தியிடம் காட்டிக்கொள்ள மாட்டான். பிரசாதத்தையும் ப்ரீத்தி மூலமே கொடுத்து விடுவான்.
அவள் விளக்கம் கேட்காமல் இருப்பது இதமாக இருந்தாலும், அவன் மனதிலிருப்பதை கூறினான்.
“மகா… ஒரே ஒரு டைம் எப்படி அவங்க லைப்ல இருக்காங்கனு தெரியணும். எப்படியும் நல்லாதான் இருப்பா… உங்க அண்ணன் ஒன்னும் அவ்ளோ கெட்டவர் இல்லனு தெரியும்” என அவன் கூற,
அவனை பார்த்தாள் மேலும் பேசு என்பது போல,
“அதான்… ஜஸ்ட் அவங்கள அவங்களுக்கே தெரியாம ஒருவாட்டி பாத்துட்டு கிளம்பிடலாம்.” என்றான்.
ஏனோ மகாவிற்கு குற்றவுணர்வாக இருந்தது. தன்னால்தானே இதுவெல்லாம் என!
அவள் முக கலக்கம் புரிந்தவன் அவளை பார்த்து ஆறுதலாக புன்னகை செய்ய, அவளும் புன்னகைத்தாள்.
******
கோவிலுக்குள் நுழைந்தனர் கீர்த்தியும் அகத்தியனும்.
புன்னகையுடனான அவள் முகத்தையும், அவளை ரசனை பார்வை பார்த்துக்கொண்டு வரும் அவன் முகத்தையும் கண்ட சூர்யாவிற்கு மனதிலிருந்த பெரிய பாரம் இறங்கியது போன்ற உணர்வு.
இதில் மேலும் அவன் புருவம் உயர்த்துவது போன்ற நிகழ்வு நடந்தது. அவள் பின் சில அடிகள் வந்தவன் அவளின் புடவையின் பின் பக்கம் சற்று மடங்கி இருக்க,
“நில்லு” என்ற அவன் குரலுக்கு அப்படியே நின்றாள்.
குனிந்தவன் அவள் புடவையை மெதுவாக சரிசெய்ய, ‘என்ன செய்கிறார் இவர்?’ என அவள் தான் பதறி கொஞ்சம் விலக பார்க்க, அவன் நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்கவும் ஏதும் கூறாமல் நின்று கொண்டாள்.
அவன் பாட்டிற்கு சரிசெய்து விட்டு, வா என்பது போல முன்னே செல்ல அங்கிருந்த சிலரின் குறுகுறு பார்வையைக் கண்டவள், “அச்சோ…” என நினைத்தவாரு அவன் பின் ஓடினாள்.
தரிசனம் முடிந்து அவர்கள் வெளியே வர, ஒரு திட்டில் அமர்ந்தனர்.
வரும் வழியில் கார் சற்று மக்கர் செய்த காரணத்தால் கொஞ்சம் தாமதமாக வந்த கீர்த்தி குடும்பத்தினர், சாமி கும்பிட்டு விட்டு அவர்களுடன் அளவளாவ, அகத்தியனும் அவர்களிடம் இயல்பாகவே பேசினான்.
அவர்களும் அவன் பேச்சில் சற்று நிம்மதியடைந்தனர்.
அப்போது அவனுக்கு ஒரு முக்கியமான போன் கால் வர சொல்லிவிட்டு நகர்ந்தான்.
இங்கோ…
அவர்களை ஒட்டுகாக குடும்பமாக பார்த்து இருவருக்கும் சிறு ஏக்கம் வந்தது. முக்கியமாக சூர்யாவிற்கு. திரும்பி மகாவை நோக்கியவன் அவள் கைகளை பற்றிக்கொண்டான். ‘அவள் இருக்கிறாளே எனக்கு’ என்பது போல!
அவள் கண்கள் தந்தையை தேடினாலும் அவர்களைக் கண்டதில் ஒரு மகிழ்ச்சி எழத்தான் செய்தது.
திடீரென கண்கள் மீது ஏதோ விழ, கண்கள் கலங்க ஆரம்பித்தது.
“கிளம்பலாமா?” என கேக்க வந்தவன் அவள் கண்ணீரைக் கண்டு,
“என்னாச்சு மகா?” என அக்கறையாக வினவ,
“கண்ணுல… தூசி…” என கண்ணை தேய்க்கவும்,
“இரு… இரு…” என்று விட்டு ஊதினான்.
அவர்கள் இருந்த இடம் சற்று மறைப்பாக இருந்தது. அவளை நெருங்கி அவன் கண்களை ஊதிக்கொண்டிருந்ததை கொஞ்சம் தொலைவில் இருந்து பார்த்தாள் அவர்களிருவரும் முத்தமிடுவது போலத்தான் இருக்கும்.
போன் பேசிவிட்டு திரும்பிய அகத்தியன் கண்களில் பட்ட காட்சி இதுவே!
பார்த்ததுமே யாரென அடையாளம் கண்டு கொண்டவன் தாடை இறுகியது.
“கோவிலில் வந்து…” என பல்லைக் கடித்தவன் ஆத்திரத்துடன் ஒரு அடி வைக்க, மகா கையிலிருந்த செல் கீழே விழுந்தது.
அவள் கண்ணிலிருந்த தூசியை மெதுவாக கர்ச்சீப் கொண்டு எடுத்தவன், போன் விழுந்த சத்தத்தில் குனிந்து எடுத்தப்பின், அவளிடம், “இப்போ ஓகேயா?” என்றவாரு அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
அவளும் கண்களை லேசாக சுருக்கியவாரு, “ம்ம்…” என்றாள்.
“இருந்தாலும் ஒரு டைம் முகம் கழுவிக்கோ” என அங்கிருந்த ஒரு தண்ணீர் பைப்பை காட்ட, முகம் கழுவிக்கொண்டாள்.
அவள் முந்தானையால் முகத்தை துடைத்தவாரு அவனை நோக்க,
“இப்போ ஓகே தான… கிளம்பலாமா?” என அவன் தலையை நீவியவாரு கேட்கவும்,
புன்னகையுடன், “ம்ம்” தலையாட்டினாள்.
அவன் கண்களைத்தான் ஊதிக்கொண்டிருக்கிறான் என அறிந்ததுமே அகத்தியன் அப்படியே நின்றுவிட்டான்.
அகத்தியன் முதலில் அவர்களை அப்படிக் கண்டதும் இதேபோன்ற முந்தைய நிகழ்வுக்கு கூட்டிச்சென்றது.
அன்றைய ஆத்திரம் இன்றும் பலமடங்காக வரவே… அனைத்தையும் மறந்தவன் அவர்களை நோக்கி செல்ல பார்த்தான்.
ஆனால் இப்போது?
‘அப்போ அன்னைக்கும் இப்படிதானா… ஒருவேள தப்பா புரிஞ்சிட்டு இருக்கமோ?’ என அவன் சூர்யாவை அத்தனை வெறுப்பதற்கான காரணம் ஆட்டம் காண, யோசனையாக நின்றான்.
அவன் காதல் உண்மையாக இருக்காது என நினைத்தவனின் எண்ணங்கள், அவன் அக்கறையாக அவள் கண்களை துடைத்து விட்டதிலும், அவர்களிடயே இருந்த ஒரு வித அன்யோன்யத்திலும் தன் நினைப்பு தவறு என கூறுவது போல் இருந்தது.
சற்று நேரமாகியும் வராத தன் கணவனைத் தேடி வந்த கீர்த்தி அவனை அழைக்கும் முன், அவன் பார்வை இருந்த திசையை நோக்கித் திரும்ப அவர்களைக் கண்டாள்.
பலநாட்கள் கழித்து தன் தமையனைக் கண்டவள் மனம் என்ன என தெரியாத உணர்வில் தத்தளிக்க அவனை பார்த்தாள்.
அவர்களும் ஏதேச்சையாக திரும்ப அவர்களைக் கண்டுவிட்டனர்.
நால்வர் மனதிலும் வெவ்வேறு வகையான உணர்வுகள்.
அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தான் தொலைவில் இருந்தனர். ஆனால் மனதளவில் வெகு தொலைவு!
அவர்களின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
தொடரும்….
( FB நல்லா எழுதுவேனா னு எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. அதானோ என்னவோ எபியே எழுத வரல…
ரொம்ப expect பண்ணாதீங்க… ப்ளீஸ்… என்னால முடிஞ்ச அளவு நல்லா FB தரேன்… ப்பா… நன்றி )