நான் பிழை… நீ மழலை..!

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…21

‘ஆனீஸ் ஸ்டார்ட்-அப்’ நிறுவனத்தின் முதல் தொழிற் கூட்டம் அந்த பெரிய ஹோட்டலின் கான்ஃபரன்ஸ் ஹாலில் நடந்து கொண்டிருந்தது.

ரூபம் குழுமத்தின் நிர்வாகிகள், ஆடிட்டர்கள் மற்றும் தற்சமயம் இவர்களோடு இணைந்து கொள்ளப் போகும் சிறிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் என ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் புதிய குழுமத்தின் அறிமுகம் மற்றும் முதல் கலந்தாய்வுக் கூட்டம் அது.

ஹாலின் மேடையில் துணைப் பங்குதாரர்களாக தேஜு, மனுவோடு மேலும் மூன்றுபேர் அமர்ந்திருக்க, ஆதித்யனும் ஆனந்தனும் வந்திருந்தவர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்துக் கொண்டிருந்தனர்.

பாக்கெட் உணவுப் பொருட்கள் வகைகளையும், மசாலாப் பொருட்கள் வகையறாக்களையும் மொத்தமாக கொள்முதல் செய்து ஆனீஸ் பிராண்டட் பெயர் பொறித்த பாக்கெட்டுகளாக மாவட்ட வியாபாரச் சந்தைகளில் விற்பனை செய்யும் முடிவில் அப்போதைய கலந்தாலோசனை நடந்து கொண்டிருந்தது.

கதிரேசனிடம் ரூபம் குழுமத்தின் மொத்த தொழில் பங்குகளையும் ஒப்படைத்து கணக்கை முடித்தவர்கள், புதியதொரு தொழில் தொடங்க முடிவு செய்ததின் முயற்சியாக இந்தத் தொழிலை கையில் எடுத்திருந்தனர்.

முதன்முதலாக ஆனீஸ் ஸ்டார்-அப் தனது பயணத்தை உணவுப் பொருளில் ஆரம்பித்து, சிறுகச்சிறுக மற்ற துறைகளிலும் தடம் பதிப்பதற்கான முன்னெடுப்புக்களை பற்றிய விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த விற்பனையோடு நின்று விடாது, நடுத்தர வர்க்கம் அன்றாடம் கையாளும் வீட்டு உபயோகப் பொருட்களை சந்தையில் முன்னிலைப்படுத்தி விற்பனை செய்வதில் ஆனீஸ் நிறுவனம் முழு கவனத்தையும் செலுத்தப் போகிறது என்ற முடிவு ஒரே மனதாக எடுக்கப்பட்டது.

புதிய நிறுவனத்தின் வருங்கால திட்டங்கள், பங்களிப்புகள், எந்தெந்த துறையில் அடியெடுத்து வைக்கப் போகிறது என்பதை ஒருவர் மாற்றி ஒருவராக தங்களின் ஆலோசனைகளையும் சாதக பாதகங்களையும் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இவை அனைத்தையும், தேஜஸ்வினியும் மனஷ்வினியும் கடனே என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில நாட்கள் கணவனுடன் சேர்ந்து அலுவல் வேலைகளை பார்த்ததின் பலனாக, பெரியவளுக்கு தற்சமயம் நடக்கும் கலந்துரையாடலின் சாராம்சம் ஓரளவு புரிபடத் தொடங்கி இருந்தது.

ஆனால் சிறியவளுக்கோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட கதைதான். அறிமுகம் இல்லாத மனிதர்கள், பரிச்சயமற்ற பேச்சுகள் அவளின் மூளைக்குள் குழப்பப் புதர்களை உருவாக்கத் தொடங்கி இருந்தன.

தொழிலின் அரிச்சுவடியை கூட நுகர்ந்து பார்த்திராதவளை அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் என்ற பதவிசோடு மேடையில் அமர வைத்திருந்தான் ஆனந்தன்.

இரண்டு நாட்களில் பிறந்த வீட்டிற்கு சென்று விடலாமென்ற நினைவில் இருந்தவளின் எதிரே மூன்றாம்நாள் காலை திடுதிடுப்பாக வந்து நின்றான் ஆனந்தன்.

“இன்னைக்கு டிஸ்சார்ஜ்… புறப்படு!” கடமையாகக் கூறி, அவள் கைகளில் அழகான அனார்கலியையும் திணித்து விட்டு,

“இந்த ட்ரெஸ்ஸ போட்டுட்டு வா… க்விக்!” என அவசரப்படுத்தியவனை, மனுவின் உள்மனம் மானசீகமாக பல கொட்டுகளை கொட்டத் தொடங்கி இருந்தது.

‘வாயில குதிரை ஒட்டாம உனக்கு பேசவே வராதா டா! உங்க வீட்டுக்கு வரமாட்டேன்னு நான் சொல்லும்போது சரின்னு தலையாட்டிட்டு, இப்ப என்ன தேவைக்கு கிளம்பி நில்லுன்னு ஆர்டர் போடுற?’ மனதிற்குள் கேள்விகளை அடுக்கி வைத்து, அவளால் பொறுமிக் கொள்ள மட்டுமே முடிந்தது.

“அக்காவை வரச் சொல்லுங்க… நான் அவ கூட வீட்டுக்கு போறேன்!” இறங்கிய குரலில் சொன்னவளை அலட்சியமாகப் பார்த்தான் ஆனந்தன்.

“அக்கா ரெஸ்டுல இருக்கிறது தெரிஞ்சும் வரச் சொல்லுவியா?” வெடுக்கென்று அவன் கேட்க,

நாக்கை மடக்கி, “மறந்து போயிட்டேன்!” அசடு வழிந்தாள் மனஷ்வினி.

அக்காவின் சுபச் செய்தியைக் கேட்டதும் மருத்துவமனை அறையில் இருந்தே துள்ளிக் குதித்து சந்தோஷித்தவள், வருங்கால மருத்துவராக அக்காவை முழுஒய்வில் இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தாள்.

அந்த நேரம், பிறந்த வீட்டில்தான் இனிமேல் இருக்கப் போவதாக தான் எடுத்திருக்கும் முடிவைச் சொல்லவும் மறந்து போனாள் மனு.

தேஜுவும் தனது முடிவை, தங்கையிடம் அப்போதைக்கு கூறவில்லை. இவள் உடல்நிலை சரியாகி வந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று மறைத்திருந்தாள்.

சகோதரிகள் இருவரும் அவர்களின் முடிவினைப் பற்றி பேசிக்கொள்ள மறந்து போயிருக்க, மனைவிகளின் முடிவிற்கு எந்தவித மறுப்பும் கூறாமல் தங்களது புதிய தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தனர் இரட்டைச் சகோதரர்கள்.

அதையொட்டி நடைபெறும் இன்றைய தொழில் ஆலோசனைக் கூட்டத்திற்கு மனஷ்வினியை அழைத்து செல்வதற்காகவே ஆனந்தன் மருத்துவமனைக்கு வந்திருந்தான்.

அக்காவின் நினைவில் தயாராகிக் கொண்டு வந்தவளுக்கு காரில் அமர்ந்த பிறகே, ‘எங்கே செல்கிறோம்?’ எனக் கேட்கத் தோன்றியது.

“எங்க வீட்டுக்கு தானே போறீங்க?” ஆனந்தனைப் பார்த்து கேட்க, பதில் சொல்லாமல் அமைதியாக வந்தான்.

“சரியான முசுடு… பதிலைச் சொன்னா இவன் வாயில இருக்கற முத்து உதிர்ந்தா போயிடும்!” அருகில் அமர்ந்து முணுமுணுத்தவளின் பேச்சினைக் கேட்டும் அமைதியாகவே வந்தான்.

‘இவனிடம் பதிலை கேட்டு வாங்குவதற்கு பதிலாக நமது முடிவை இவனிடம் தெரிவித்து விடுவதே நல்லது!’ என்கிற யோசனையில்,

“வேற எங்கே கூட்டிட்டு போனாலும் நான் காரை விட்டு இறங்க மாட்டேன்!” இவள் கண்டிப்புடன் கூற, அசட்டையாக தோளினை குலுக்கி கொண்டான் ஆனந்தன்.

ஹோட்டலுக்கு வந்ததும் இவள் சொன்னது போலவே இறங்காமல் காரிலேயே அமர்ந்திருக்க, ஹோட்டல் வாயிலில் நின்றிருந்த அருணாச்சலம் வந்து, அவளை கனிவான பார்வையில் இறங்கச் சொல்லி வற்புறுத்தி கூட்டம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

“ஸ்ப்லிட் பெர்சனாலிட்டி மாதிரி உங்க பேரன் ஸ்பிலிட் டெஃப் அன்ட் டம் ஆகிட்டாரா தாத்தா?” ஆனந்தனின் பின்னால் நடந்து வந்த மனஷ்வினி வீம்புக்கென்றே கேட்க, பெரியவருக்கு அவளின் கேள்வி விளங்கவில்லை

“நீ சொல்றது புரியலையே கண்ணு?”

“அப்பப்போ உங்க பேரன் செவிடாவும் ஊமையாவும் மாறிடுறாரு… அதை கேட்டேன் தாத்தா!” தனது கடுப்புகள் அனைத்தையும் அவரிடம் கொட்டி, கணவனைப் பழி தீர்த்துக் கொண்டிருந்தாள் மனஷ்வினி.

அவளது பேச்சைக் கேட்டவனும், தனது கைத்தடியை அழுத்தமாக தரையில் ஊன்றி, ‘தட் தட்’ என்ற அதீத சத்தத்தில் கோபத்தினை வெளிப்படுத்தினான்.

‘இன்னும் நல்லா பலமா அதிர வைச்சு, ஸ்டிக்கை உடைச்சு போடு ஆனந்தா!’ அசராதவளாக, அவனை முறைத்துப் பார்த்தே பழிப்புக் காட்டினாள் மனஷ்வினி.

‘நீ என்னமும் சொல்லிக் கொள், என் நிலை எப்போதும் ஒரே மாதிரிதான்!’ கடப்பாறையை முழுங்கியவனைப் போல இறுக்கமாகவே நடந்தான் ஆனந்தன்.

‘எதற்காக இங்கே வந்திருக்கிறோம்?’ எனத் தெரியாமல் அந்த பெரிய அரங்கிற்குள் வந்து நின்றவளை தனது அருகில் இருக்கும் நாற்காலியில் அமருமாறு சைகை காட்டினாள் தேஜஸ்வினி.

‘இங்கேயா… எதுக்கு?’ பார்வையால் கேள்வி கேட்டவளை, பிறர் அறியாவண்ணம் தோள் பிடித்து உட்கார வைத்து விட்டே நகர்ந்தான் ஆனந்தன்.

“இவனோட முடியல!” கடுகடுத்தவள், தேஜுவை பார்த்து,

“அக்கா எதுக்காக இங்கே வந்திருக்கோம்? என்ன புரோகிராம் நடக்கப் போகுது?” சின்னக் குரலில் கேட்டவளை, பெரியவள் முறைத்துப் பார்த்து,

“என்ட்ரன்ஸ்ல ஃப்ளக்ஸ் பார்த்தியா இல்லையாடி? கொஞ்சம் ஹாலை சுத்திப்பாரு!” சன்னக்குரலில் சொல்ல, அப்போதுதான் அந்த அரங்கத்தையே சுற்றிப் பார்த்தாள் சிறியவள்.

சுவரில் ஆங்காங்கே புதிய நிறுவனத்தின் பெயரோடு லோகோவும் சேர்த்து பிரிண்ட் செய்யப்பட்ட போஸ்டர்கள் மாட்டப்பட்டிருக்க, தொழிற்கூட்டத்தின் நாள், இடம் என்று அன்றைய தேதி அச்சடிக்கப்பட்டிருந்தது,

“ஏதோ மீட்டிங் போல இருக்கு க்கா! இதுக்கும் நமக்கும் சம்மந்தமே இல்லையே… வா, வெளியே போயி ஃப்ரீயா பேசுவோம். உன்கிட்ட நிறைய பேசணும்!” இறங்கிய குரலில் தேஜுவின் கையைப் பிடித்து இழுத்தாள் மனஷ்வினி.

“மனுமா… இந்த மீட்டிங் முடியுற வரைக்கும் அமைதியா இரு! அப்புறம் பேசலாம்.” தேஜு கிசுகிசுத்து கூறியதை, பெரிய குற்றம் செய்ததைப் போல அவளையே முறைத்துப் பார்த்த ஆதி, மனஷ்வினியிடம் சிறிய குழந்தையிடம் சொல்லும் பாவனையில் வாயில் விரலை வைத்து அமைதியாக இருக்கும்படி சைகையில் கூறினான்.

‘ஏதோ முக்கியமான மீட்டிங் போல!’ என எண்ணிக் கொண்டு, அப்போது பேசாமடந்தையாக வாயில் பூட்டு போட்டுக் கொண்டவள், இப்போது வரை அப்படியே அமர்ந்திருக்கிறாள்.

‘அமாக்ஸிலினுக்கு காம்பினேசன் எழுத வேண்டிய என்னை, இங்கே ஏன்டா இழுத்துட்டு வந்து உக்கார வச்சுருக்கீங்க? பெப்பே… பெப்பே தவிர வேறெதுவும் எனக்கு வாய்ல இருந்து வர மாட்டிக்குதே! என்னங்கடா நடக்குது இங்கே?’ போலிச் சிரிப்போடு கடுப்படித்த பார்வையில் அனைவரையும் உற்றுப் பார்த்தபடியே இருந்தாள் மனஷ்வினி.

இவள் அலட்டிக் கொண்டதை பார்க்க சகிக்காதவனாய் அவளின் கையில் புதிய நிறுவனத்தின் விவரங்கள் அடங்கிய கோப்பினை திணித்தான் ஆனந்தன்.

இவளும் சற்றே பெருமூச்சு விட்டவாறே அதை படித்துப் பார்க்க ஆரம்பிக்க, அதில் பங்குதாரர்களின் பெயர்ப் பட்டியலில் தேஜுவின் பெயரோடு, இவளது பெயரும் இணைக்கப்பட்டிருந்தது. அந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் அக்காவை சுரண்ட ஆரம்பித்தாள் தங்கை.

தேஜஸ்வினியோ காரியமே கண்ணாக கூட்டத்தில் நடக்கும் பேச்சுகளை கவனித்துக் கொண்டிருந்தாள். மீண்டும் அவளை சுரண்டிவிட, தங்கையை காட்டமாக பார்த்தாள் தேஜு.

“எல்லாம் முடியட்டும். இப்ப அமைதியா இரு… வீணா நீ சொறிஞ்சு, எனக்கும் திட்டு வாங்கிக் கொடுக்காதே!” என்றுவிட்டு இவள் நிமிர, ஆதியின் காரப்பார்வை மனைவியை தழுவிக் கொண்டிருந்தது.

‘தெய்வமே… இந்த பார்வையில இருந்து எனக்கு விடிவு காலமே கிடைக்காதா?’ தப்பிக்கும் மார்க்கம் தெரியாமல் பெருமூச்சுடன் தேஜூ தலைகுனிந்தாள்.

அக்காவின் நிலையைப் பார்த்த மனுவும் அவஸ்தையுடன் ஆதியிடம் சிரித்துவிட்டு நடப்பதை அமைதியாக கவனிக்க ஆரம்பித்தாள். கூட்டம் முடிந்த பிறகு கேள்வி கேட்க வந்தவளை யாரும் பேச விடவில்லை.

“வீட்டுக்கு போயி பேசிக்கலாம் மனு!” உத்தரவாக கூறிய ஆதி, தேஜுவை பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டுமென்ற காரணத்தைக் கூறி அவளோடு முதலில் சென்று விட்டான்.

இவள் வழக்கம் போல் ஆனந்தனுடன் கோர்த்து விடப் பட்டிருக்க, பெரியவர் இவர்களுடன் இணைந்து கொண்டார்.

“என்ன தாத்தா இதெல்லாம்?” தன் பெயர் உள்ள பக்கத்தை சுட்டிக்காட்டி மனஷ்வினி கேட்க,.

“உங்களையும் தொழில்ல ஒரு பார்ட்னரா சேர்த்திருக்கோம் கண்ணு!”

“ஆனா தாத்தா… எனக்கு இந்த பிசினெஸ் பத்தி ஒன்னும் தெரியாது. நான், இவர் கூட வாழப் போறதும் இல்ல. சோ எனக்கு இதெல்லாம் தேவையே இல்லாத ஆணி!” மனு நேரடியாகவே தனது முடிவினைக் கூறிவிட, பெரியவர் அதிர்ச்சியாக ஆனந்தனைப் பார்த்தார்.

மனைவியரின் முடிவுகளை சகோதரர்களும் தங்களுக்குள்ளாகவே வைத்துக் கொண்டிருக்க, பெண்களின் பிறந்த வீட்டுப் பயணம் இரண்டு ஜோடிகளுக்கு மட்டுமே தெரிந்த வெளிச்சமாகி இருந்தது.

“அதெல்லாம் வீட்டுக்கு போயி பேசிக்கலாம். இப்ப உன் திருவாயை மூடிட்டு வர்றியா?” கடுப்பு குறையமால் ஆனந்தன் அதட்டிவிட, பெரியவரோடு சேர்ந்து இவளும் வாயை மூடிக் கொண்டாள். மேற்கொண்டு பேச்சினைத் தொடர விடாமல் அருணாச்சலத்திற்கும் பார்வையால் தடை விதித்தான் ஆனந்தன்.

வீட்டிற்கு வந்ததும் அவசர அவசியமாக அக்காவை தேடி தங்கை போக முயற்சிக்க, ராஜசேகர் அழைத்து பேச ஆரம்பித்து விட்டார். உடன் நகுலேஷும் அங்கே அமர்ந்திருந்தான்.

“வந்துட்டியா சின்னத் தங்கம். எப்படி டா இருக்க? டாக்டர் என்ன சொன்னாங்க?” வரிசையாக கேள்விகள் கேட்க, பதில் கூறவே திணறிப் போனாள்.

“ஹாங், ஓகே ப்பா… இங்கே எதுக்கு? நீங்க நம்ம வீட்டுக்கு போகலையா?”

“எதுக்கு இவ்வளவு பதட்டம்? கொஞ்சநேரம் அமைதியா உக்காரு!”

“இல்ல ப்பா, நான்… நான் அக்காவை பார்த்துட்டு வந்துடுறேன். அவகூட நான் பேசியே ஆகணும்!”

“அவ ரெஸ்ட் எடுக்கிறா டா… அவளுக்கு முடியல!”

“நான் பார்த்துக்கறேன் ப்பா!” என்றபடி மீண்டும் அவள் மாடிக்கு செல்ல எத்தனிக்க, தடை செய்தான் ஆனந்தன்.

“நீ என்ன செவிடா? சொல்றது கேட்குதா இல்லையா உனக்கு!” அனைவரின் முன்பும் சத்தம் போட்டு, சற்று முன்னர் இவள் கொட்டு வைத்ததற்கு இப்போது பழி தீர்த்துக் கொண்டான்.

“மாமா… அவளுக்கு ஏதோ எமர்ஜென்சி போல, அதான் இவ்வளவு அவசரப்படுற!” நகுலேஷ் சமாளிப்பில் இறங்க, அதிருப்தியாக முகம் திருப்பினான் ஆனந்தன்.

இவளுக்குமே அந்த நேரம் பொறுமை அவசர அவதியாக விடைபெற்று பறந்து போனது.

“என் கேள்விக்கு நீங்க யாராவது ஒருத்தர் பதில் சொல்லியிருந்தா நான் எதுக்கு அக்காவைத் தேடி போகப் போறேன்? அப்படியென்ன அவளோட உடம்புக்கு வந்தது? சாதாரண மசக்கை தானே… நான் பார்த்துக்கறேன்!” வீராவேசமாக பேசிவிட்டு கிளம்பியவளை இம்முறை கையை பற்றி நிறுத்தினான் ஆனந்தன்.

“உனக்கு என்ன தெரியணும் மனு?” பின்னோடு வந்து நின்ற ஆதியும் கேட்க,

“இன்னைக்கு நடந்த எதுவுமே எனக்கு புரியல? அந்த மீட்டிங்க்கு என்னையும் ஏன் கூட்டிட்டு போனீங்க? என்னோட பேர் எப்படி பார்ட்னர்ஸ் லிஸ்ட்ல வந்தது? இதுக்கெல்லாம் நான் ஓகே சொன்னதா எனக்கு ஞாபகம் இல்லையே!” வரிசையாக அடுக்கிக்கொண்டே போக, ஆதிக்கு கோபம் ஏறியது.

ஆனந்தனை முறைத்து பார்த்தவன், “எல்லா விவரத்தையும் சொல்லி அழைச்சிட்டு வான்னு முன்கூட்டியே உன்கிட்ட சொன்னேனே ஆனந்த்… மனு பேசுறதை பார்த்தா நீ எதையும் சொல்லல போல இருக்கு. எதையும் சரியா செய்ய மாட்டியாடா? நீ கீ கொடுக்குற பொம்மைன்னு நினைச்சியாடா அவளை?” தம்பியை கோபத்துடன் கடிந்து கொண்டு, மனுவை அனுசரணையாகப் பார்த்தான் ஆதித்யன்.

“என்னை எதுலயும் கமிட் பண்ணாதீங்க மாமா… நான் இந்த வீட்டுல இருக்கப் போறதில்ல. அதை சொல்லிட்டு போகத்தான் அக்காவை தேடிப் போறேன்!” தன் முடிவினை ஆதியிடம் கூறியவள்,

ராஜசேகரிடம் திரும்பி, “அப்பா திங்க்ஸ் ரெடி பண்ணி வச்சுக்கோங்க… நம்ம வீட்டுக்கு போயிடுவோம்!” என உறுதியாக கூறி முடித்தாள்.

“வார்த்தைக்கு வார்த்தை இதையே சொல்லிட்டு இருக்கியே ம்மா… அப்படியென்ன கஷ்டம் வந்தது இங்கே உனக்கு?” அருணாச்சலம் கேட்க, ஒரு நிமிடம் தயங்கி நின்றாள்.

பின்னர் ஒரு பெருமூச்சில் தன்னை திடப்படுத்திக் கொண்டு, “எனக்கு இங்கே இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் மூச்சு முட்டிப் போகுது தாத்தா… யாரோட கழுத்துக்கும் கத்தியா இருக்க நான் விரும்பல. என்னைப் போக விடுங்க!” ஆற்றாமையுடன் கூறி முடித்த நேரத்தில், அவளின் முன்வந்து நின்ற ஆனந்தன் கோபத்துடன் முறைத்தான்.

“என்னடி ரெக்கார்டட் வாய்ஸ் மாதிரி ரிபீடட் மோட்ல சொன்னதையே சொல்லிட்டு இருக்க? அப்படியென்ன… கழுத்தை நெரிச்சு உன்னை கொல்லவா பார்த்தேன்? அதான், என்னை தொந்திரவு பண்ணாம உன் இஷ்டத்துக்கு இங்கேயே இருன்னு அன்னைக்கே சொல்லிட்டேனே! திரும்ப எதுக்கு இந்த பேச்சையே பிடிச்சு தொங்கிட்டு நிக்கிற?” கோபம் கொந்தளித்த குரலில் ஆனந்தன் கத்திப் பேச, அவனை சமாதானப்படுத்த பெரியவர் முன்வந்தார். 

மனைவியின் ஓயாத குறைபாட்டு கணவனது சுயமரியாதையை தட்டி எழுப்பி விட்டிருந்தது. எவராக இருந்தாலும் இளக்காரமான பாவனையில் மட்டுமே பார்த்து பழக்கபட்டவனின் மீது, இன்று அதே பார்வையில் தன்னை ஒரு பெண் அதிலும் மனைவியானவள் படரவிடும் போது, ஆணின் ரத்தம் சூடேறி தனது உரிமையை நிலைநாட்டத் தொடங்கி இருந்தது. 

“பொறுமையா பேசுங்க தம்பி! இதே மாதிரி கோபப்பட்டு பேசித்தான் அன்னைக்கு பெரியதம்பி மருமக மேல கையை நீட்டினாரு! நீங்களும் அதே தப்பை பண்ணிடாதீங்க!” பெரியவர் மெதுவாக எடுத்துக் கூற,

அதைகேட்ட மனு திகைத்துப் போய் ராஜசேகரையும் நகுலையும் பார்க்க, அவர்களும் பதில் சொல்லத் திராணியின்றி தலைகுனிந்தனர்.

இவர்களின் முன்புதான் அந்த சம்பவமும் நடந்திருப்பதை இவர்களது பாவனையில் தெரிந்து கொண்டவள், அந்த நேரமே தந்தை, தம்பியின் மீதும் ஒருவித கடுப்பான பார்வையை படரவிட்டாள்.

ஆக மொத்தம் அங்கு இருந்த ஆண் வர்க்கத்தினர் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்களுக்கு அநியாயம் செய்து விட்டதாகவே உணர்ந்தாள்.

“என் அக்காவை யார் அடிச்சாங்க தாத்தா? இத்தனை பேர் இருந்தும் அவளுக்கு இந்த அநியாயம் நடந்ததா?” அழுத்தமாகக் கேட்க, தானாகவே பதிலளிக்க முன்வந்தான் ஆதி.

“நான்தான் மனு!” வருத்தமான குரலில் ஒப்புக் கொண்டவன், 

“சின்ன மனஸ்தாபத்துல என்னையும் மீறி அடிச்சிட்டேன்!” மெதுவாகக் கூறிவிட்டு,

“சாரி மாமா!” என ராஜசேகரிடம் மன்னிப்பையும் வேண்டினான் ஆதித்யன்.

“இந்த மன்னிப்பை என் அக்காகிட்ட கேட்டீங்களா மாமா?” மனு கேட்க, இல்லையென மறுப்பாக தலையைத்தான்.

“எங்களோட வந்து பழகறவங்களைக் கூட ரெண்டுநாள் பழகிப் பார்த்துட்டு தான் நண்பர்களா ஏத்துக்கறோம். ஆனா தாலி கட்டின ஒரே காரணத்துக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாம உங்களையே நம்பி வாழ வர்றோமே… அதுக்கு நீங்க சிலை வைச்சு விழா எடுக்க வேணாம். அட்லீஸ்ட் எங்க தன்மானத்தை கால்ல போட்டு மிதிக்காம இருக்கலாம் இல்லையா!” ஆதங்கமாக தனது மனதில் இருப்பதை கொட்டி முடித்து, ஆனந்தனை காட்டமாகப் பார்த்தாள் மனஷ்வினி.

‘உன் வார்த்தை சவுக்கடிகளை மனதில் வைத்துதான் இப்படி கூறியது.! என இவள் ஓரப்பார்வை பார்க்க, அவன் கடுப்புடன் நின்றிருந்தான்.

அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையிலும் நியாயம் இருப்பதை உணர்ந்தவர்களாக அனைவரும் அமைதியாக நிற்க, ஆனந்தனே முறுக்கிக் கொண்டு பதிலளித்தான்.

“ரொம்ப நியாயமா கேள்வி கேக்கறதா நினைக்காதே! அன்னைக்கு உன் விசயமா என்கிட்டே எக்குதப்பா கேள்வி கேக்கப் போயிதான் உங்க அக்காவுக்கு இந்த நிலைமை. இப்ப நீயும் அதே நிலைமையில தான் நிக்கிற!” என வெகுண்டு கூறவும்,

“கொஞ்சநேரம் நீயும் வாயை மூடேன்டா!” ஆதி சற்றே உரத்த குரலில் பேசி தம்பியின் பேச்சினை தடை செய்ய, அனைவரும் அவனது முகம் பார்த்தனர்.

“அன்னைக்கு இவங்க குடும்பத்தைப் பத்தி, நீ ஏதேதோ சொல்லப் போயிதான் எங்களுக்குள்ள பெரிய சண்டையே வந்தது. அதை தொடர்ந்து பல பிரச்சனையில அவளை கை நீட்டி அடிச்சு பெரிய தப்பு பண்ணிட்டேன்!

என்ன சொல்லி அவளை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு வழி தெரியாம திண்டாடிட்டு இருக்கேன். எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகுதுங்கிற சந்தோசத்தை கூட என்னால முழுசா அனுபவிக்க முடியலடா ஆனந்த்…

எல்லாத்துக்கும் தொடக்கப்புள்ளி நீ அன்னைக்கு அவளைப் பத்தி பேசின பேச்சுதான்னு நினைக்கும்போது உன்னை விட்டுக் கொடுத்து அவளை சமாதானபப்டுத்த என்னால முடியலடா… சபை நாகரீகம் தெரியலன்னாலும் அடுத்தவங்களை அனாவசியமா பேசுறதை நிறுத்திக்கோ! அது உனக்கு மட்டுமல்ல… உன்னை சேர்ந்த எங்களுக்கும் நல்லது!” மனதில் இருப்பதை சொல்லி முடித்தவனாக பெருமூச்சு விட்டு நிமிர்ந்தான் ஆதி.

இவனது பேச்சை கேட்டவர்களுக்கும் ‘அச்சோ பாவமே!’ என அவனின் மேல் பரிதாபம் தோன்றியது. ஆனால் இதுதான் சமயமன்று ராஜசேகரும் தன் பங்கிற்கு பேச ஆரம்பித்தார்.

“புருஷன் பொண்டாட்டிக்குள்ள இதெல்லாம் சகஜம்னு எதார்த்தமா பார்த்தாலும் ஒரு தகப்பனா நீங்க செஞ்சதை சரின்னு நான் சொல்லமாட்டேன் தம்பி… அன்னைக்கு இருந்த சூழ்நிலை எங்களால உங்களுக்கு எதிரா எதையும் சட்டுன்னு பேச முடியல!” குற்றச்சாட்டினை முன்வைத்தவர்,

“என் பொண்ணுங்களை கொஞ்சநாள் அவங்க போக்குல இருக்க விடுங்க மாப்பிள்ளைங்களா… ரெண்டுபேர் முகத்துலயும் நிறைஞ்ச சிரிப்பை பார்த்து ரொம்ப நாளாச்சு! சின்னவ இங்கே இருக்கவே மூச்சு முட்டுதுன்னு சொல்றா… பெரியவ மனசுல என்ன பாரம் இருக்கோ தெரியல!

எல்லாத்துக்கும் மேல உங்க அஜாக்கிரதையால என் பொண்ணு பணயமா போயி பத்திரமா அதிர்ஷ்டவசமா திரும்பி வந்திருக்கா… உங்க குடும்பத்துக்கு பலியாடா நேந்து விடத்தான் என் புள்ளைகளை இந்த வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைச்சேனா?” ஆற்றாமையும் கோபமும் போட்டிபோட கேள்வி கேட்ட ராஜசேகரின் குரலும் கரகரத்து அழுகையின் விளிம்பை தொட்டு விட்டது.

இயல்பிலேயே மென்மையான சுபாவம் கொண்டவர் ராஜசேகர். ஆண் பெண் பேதமில்லாமல் தனது மூன்று பிள்ளைகளின் மீதும் உயிரையே வைத்திருக்கும் சராசரி தந்தையின் மனம் மகள்களின் துன்பங்களைக் கேட்டதும் வெகுவாக கலங்கிப் போய்விட்டது.

அதற்கு காரணமானவர்களை தாளமுடியாமல் கேட்டும் விட்டார். அவரால் முடிந்ததும் அது மட்டுமே! பணமும் அந்தஸ்தும் தன் வசத்தில் இருந்திருந்தால் இந்நேரம் இவர்களை ஒரு கை பார்த்திருப்பார்.

அதற்கு கொடுப்பினை இல்லாத துரதிஷ்டசாலியாக ராஜசேகர் அழுதபடி நின்றது அனைவரின் மனதையும் கலங்க வைத்தது.

“இங்கே இருக்க முடியலன்னு சொல்றவளை கட்டயப்படுத்தாதீங்க தம்பி… உங்களுக்கு புண்ணியமா போகும்.” மகளின் முடிவினை ஒட்டியே அவரும் பேச,

“எனக்குமே இங்கே இருக்க முடியலப்பா… என்னையும் கூட்டிட்டுப் போயிடுங்க!” மெதுவாக கூறியவாறே அங்கே வந்து நின்றாள் தேஜஸ்வினி.

மனுவிடம் ஆனந்தன் கோபமாக பேசும்போதே கீழே வந்து விட்டிருந்தாள். மாடிப்படியில் இறங்கி வராமல் லிஃப்டில் வந்ததால் பின்வழியாக வந்தவளை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

விஷயம் இதுதானென்று புரிந்து கொண்ட போதும் எதுவும் பேசாமல் ஆதியை மட்டுமே உற்றுப் பார்த்தாள் தேஜஸ்வினி. கணவனுடன் காதல் வாழ்க்கையை வாழத் தொடங்கியதில் இருந்து உடன்பிறப்பாக ஒட்டிக் கொண்டு வந்த கரிசனமும் அன்பும் அத்தனை எளிதாக அவனை கருவிக்கொள்ள மனம் கொடாமல் முட்டுக்கட்டை போட்டது.

இத்தனை நாட்கள் தன்னை ஒரு பொருட்டாகவே இவன் மதிப்பதில்லை என்று கருதிக் கொண்டிருந்த பெண்ணவளின் மனதில் சிம்மாசனமிட்டு, ‘என்னை எப்படி அவ்வாறு நினைக்கலாம்? என்னை விட்டு விலகி நிற்கவும் உன்னால் முடியுமா?’ கேள்விகளை கேட்டபடி கனகம்பீரமாக அமர்ந்திருந்தான் ஆதித்யன். 

‘உன் முடிவை மாற்றிக் கொள்ளக் கூடாதா?’ அயர்ச்சியான பார்வையில் ஆதி, தேஜுவைப் பார்க்க,

அதைப் புரிந்து கொண்டவளாக, “எனக்கு இடமாற்றம் வேணும். ஏதோ ஒரு சங்கடம் மனசுல இருந்துட்டே இருக்கு. அது சரியாகற வரைக்கும் நான் அப்பா கூட போறேன்!” முடிவாகக் கூறிவிட, அரைகுறை மனதோடு சரியென்று தலையசைத்து சம்மதித்தான்.

இப்பொழுது குற்றவாளியாக ஆனந்தன் நின்று கொண்டிருக்க, சண்டைக்கோழியாக வீம்புடன் அவனைப் பார்த்தபடி இருந்தாள் மனஷ்வினி. அவனைப் பார்க்க பார்க்க கொன்று போடும் ஆத்திரம் வந்தது அவளுக்கு!

என்ன நடந்ததென்று அவளுக்குத் தெரியாது. ஆனால் இவனால்தான் தனது அன்பு அக்காவிற்கும் மாமாவிற்கும் ஏழாம் பொருத்தமாகிப் போனதை உணர்ந்து அவனை அருவெறுப்பாகப் பார்த்து முகம் சுளித்தாள். சட்டையை உலுக்கி அவனை அடித்துப் போடும் ஆவேசமும் வந்துவிட, இயலாமையுடன் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்.

நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த  அருணாச்சலம், “எல்லாருக்கும் அவங்கவங்க நியாயம் மட்டுமே பெருசா போயிடுது! வாழ்க்கையோட நெளிவு சுளிவுகளை தெரிஞ்சுக்கத்தானே கல்யாணம் பண்ணி வைக்கிறோம். எல்லா விசயத்துலயும் பக்குவமா நடந்துக்கற மனுஷன் இந்த உலகத்துல யாருமே இல்லை.

எடுத்தோம் கவுத்தோம்னு உறவுகளை உதறித் தள்ளிட்டு போறதை விட்டுட்டு, இனிமே இப்படி நடக்காம இருக்கணும்னு முடிவெடுத்து வாழப் பாருங்க… எதுலயும் நிதானமா இருந்தா மனசங்கடமோ அழுத்தமோ அனுபவிக்க வேண்டிய அவசியமே இல்லை.” பொதுவாக கூறிவிட்டு அமைதியானார்.

புரிதல் இல்லாத இடத்தில் பிரிவும், உறவுகளின் முறிவும் சகஜமானதுதான். ஆனால் அதனையே பற்றிக்கொண்டு துணையில்லாமல் பயணிக்கும் வாழ்க்கை சுவாரசியமற்றதாகி விடுகிறது.

இதை வார்த்தையால் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அனுபவித்து பார்க்கும் போதுதான் பிரிவாற்றமையின் வலி மனதை வேதனைப்படுத்தி துணையின் அவசியத்தை உணர வைக்கும்.

அத்தகைய வலியை தனது குழந்தைகளுக்கு வேண்டாமே என்ற ஆதங்கத்தில் பொதுவான அறிவுரையாக அனைவரின் மத்தியில் கூறிவிட்டார் அருணாச்சலம்.

ஆரம்பித்த தர்க்கங்கள் விடை காணப்படாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, பெரும் அமைதி அனைவரின் மனதிலும் நிலவியது.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!