உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 13

உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 13

இரண்டரை வருடங்களுக்கு முன்பு….

 

சென்னை விமான நிலையம்

 

மலேஷியாவில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட தங்கள் செக் இன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஆதவனும், கௌசிக்கும் சிரித்துப் பேசிக் கொண்டே படிகளில் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

 

“அப்புறம் ஆதவா நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற?” ஆதவனுக்கும், கௌசிக்கிற்கும் மூன்று வருடங்களே வயது வித்தியாசம் இருந்ததால் அவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் எப்போதும் போல நட்பாக, சாதாரணமாகவே இந்த இரண்டு மாதங்களில் பேசப் பழகியிருந்தனர்.

 

“ஏன்டா? நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா?” முகத்தை சோகமாக வைத்து கொண்டு கேட்ட ஆதவனின் தோளில் சிரித்தபடியே தட்டிக் கொடுத்த கௌசிக்

 

“ஏன்டா கல்யாணம்ன்னு சொன்னாலே இவ்வளவு தூரம் யோசிக்குற? அது ஒரு மேஜிக்கல் பீலிங் தெரியுமா? உன்னை விட மூன்று வயது சின்ன பையன் நான் நானே இன்னும் ஒரு மாதத்தில் குடும்பஸ்தனா ஆகப் போறேன் நீ மட்டும் அப்படியே இருக்கப் போறியா? இந்த முறை லீவு முடிந்து போறதுக்கு இடையில் நீ கல்யாணம் பண்ணிக்கனும் ஓகே வா?” கேள்வியாக அவனை நோக்கினான்.

 

“கௌசிக்! உனக்கு ஒரு விஷயம் புரியலடா இந்த கல்யாணம் எல்லாம் உடனே முடிவு பண்ணி நடந்தா அதில் என்ன த்ரில் இருக்கும் சொல்லு? ஒரு பொண்ணை எதிர்பாராமல் பார்க்கணும் அவளை பார்த்த அந்த கணமே நம்ம மனதுக்குள் தோணனும் இவ தான் நமக்காக பிறந்தவன்னு! அவளைப் பார்த்த அந்த நிமிஷம் எப்படி தெரியுமா இருக்கும்? அப்படியே பூக்களை எல்லாம் கூடை கூடையாக நம்ம மேல கொட்டியது போல ஒரு வித்தியாசமான பீலிங் வரணும் டா! அதை விட்டுட்டு இப்படி எந்த எக்ஸைட்மெண்டும் இல்லாமல் கல்யாணம் எல்லாம் நான் பண்ண மாட்டேன்”

 

“அப்போ நீ சொல்லுறதை எல்லாம் வைத்து பார்த்தால் நீ லவ் மேரேஜ் தான் பண்ணிப்ப போல இருக்கு! பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா?” 

 

“யாஹ்!” கௌசிக்கைப் பார்த்து சிரித்தபடியே கண்ணடித்தவன்

 

“சரி நீ பார்க்கிங்குப் போ அப்பா அங்கே காத்துட்டு இருப்பாரு நான் போய் நம்ம லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு வர்றேன்” என்றவாறே அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

 

தங்கள் இருவரது உடைமைகளை எல்லாம் எடுத்து கொண்டு திரும்பி நடந்து வந்த ஆதவன் அங்கே சற்று நேரத்திற்கு முன்பு கௌசிக் நின்று கொண்டிருந்த அதே இடத்தில் நின்றபடி வெளியே சென்று கொண்டிருந்த கார் ஒன்றை பார்த்தபடியே நின்று கொண்டிருக்க அவனருகில் வந்து நின்று

“டேய்! இங்கே என்னடா பண்ணுற? நான் உன்னை பார்க்கிங்கில் தானே நிற்க சொன்னேன் அப்பா காத்துட்டு இருப்பாரு என்று சொல்லிட்டு தானே போனேன்?” அவனது தோளில் அடித்தபடியே கேட்க

 

“அச்சோ! ஸாரி ஆதவா இழை வந்தாளா அவ கூட பேசிட்டு இருந்தேன் ரியலி சாரி டா” தன் தலையில் தட்டிக் கொண்டபடி கூறவும்

 

“இழை!” ஆதவன் குழப்பமும் கேள்வியுமாக அவனைப் பார்த்து கொண்டு நின்றான்.

 

“இழைடா! இழையினி நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு!”

 

“ஓஹ்! சிஸ்டரா? என்ன சாரை இரண்டு மாதம் பார்க்கலேன்னு மேடம் ஏர்போர்ட்க்கே வந்துட்டாங்களா?” ஆதவனின் கேள்வியில் கௌசிக் வெட்கத்தோடு தன் தலையை குனிந்து கொள்ள

 

“அய்யோ! நீ வெட்கம் எல்லாம் படுவியாடா கௌசிக்? தாங்க முடியல வா போகலாம்” வாய் விட்டு சிரித்தபடியே அவனது தோளில் கையை போட்டுக் கொண்டு பார்க்கிங்கை நோக்கி நடந்து சென்றான்.

 

அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாம் தன் தாய் தந்தையினுடனே ஆதவனுக்கு இனிதாக கழிந்து செல்ல ஆரம்பித்தது.

 

மூன்று வருடங்களாக தன் தாய், தந்தையைப் பிரிந்து தான் தனிமையில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறப்பது போல அங்கே இருந்த ஒவ்வொரு நாளையும் சந்தோஷத்துடன் அவன் செலவிடத் தொடங்கினான்.

 

பொன் ஆதவன் தன் தாயகம் திரும்பி இரண்டு வாரங்கள் கடந்திருந்த நிலையில் அன்று வெகு நாட்களுக்கு பிறகு தன் நண்பர்களை காணப் போகும் ஆவலுடன் வள்ளியம்மையிடம் கூறி விட்டு தன் வண்டியை எடுத்துக் கொண்டு வெகு சந்தோஷமாக புறப்பட்டு சென்றவன் அவர்களுடன் சேர்ந்து மால், பார்க், தியேட்டர் என்று எல்லா இடங்களையும் ஒரு உற்சாகத்தோடே பார்த்து கொண்டு இருந்தான்.

 

பல வருடங்களுக்கு பிறகு தன் நண்பர்களுடன் மனநிறைவாக அன்றைய நாளை செலவிட்டவன் இறுதியாக ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு செல்லாமல் என்று முடிவெடுத்து கொண்டு அங்கே தன் நண்பர்களுடன் புறப்பட்டு சென்று தன் நண்பர்களை எல்லாம் முன்னே செல்லும் படி அனுப்பி வைத்து விட்டு தன் வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு தன் வண்டி சாவியை விரலில் மாட்டிக் கொண்டு சுழற்றியபடியே நடந்து செல்கையில் அங்கே கௌசிக் ரெஸ்டாரண்டிலிருந்து வெளியேறி வந்து கொண்டிருந்தான்.

 

ஆதவனை அங்கு எதிர்பாராத கௌசிக்

“ஹேய்! ஆதவா! நீ என்னடா இங்கே?” ஆச்சரியத்துடன் வினவவும்

 

அவனது தோளில் தட்டிக் கொடுத்தவன்

“அதை நான் தான் உங்க கிட்ட கேட்கணும் மிஸ்டர் கௌசிக்! நேற்று நைட்டு இன்னைக்கு வெளியே போகலாம் வர்றியான்னு கேட்கவும் ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொன்ன இப்போ என்னடான்னா நல்லா வயிற்றுக்குள்ள கொட்டிட்டு வர்ற மாதிரி இருக்கு” அவனது வயிற்றிலும் அடியொன்றை வைத்தவாறே கேட்க

 

அவனோ

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை ஆதவா! நான், இழை அன்ட் அவ கசின்ஸ் மேரேஜ் பர்ச்சேஸ்காக வந்தோம் ரொம்ப நேரமாக வெளியே சுற்றி திரிந்ததில் இழை பசிக்குதுன்னு சொன்னா அது தான் இங்கே சாப்பிட்டு பர்சேஸை முடித்து கொள்ளலாம்ன்னு நினைத்து வந்தோம் நீயும் முன்னாடியே இங்கே தான் வருவேன்னு தெரிந்து இருந்தால் உனக்காக வெயிட் பண்ணி அவளையும் இன்ட்ரோ கொடுத்து இருப்பேன் பட் ஜஸ்ட் மிஸ்!” நிஜமாகவே மனம் வருந்திக் கூறினான்.

 

“ஹேய்! இதற்கு எல்லாம் போய் ஃபீல் பண்ணுறதா? இப்போ இல்லைன்னா இன்னொரு தடவை பார்த்துப் பேசப் போறோம் அதில் என்ன இருக்கு? எப்படியும் இன்னும் இரண்டு வாரத்தில் கல்யாணம் இருக்கு தானே அங்கே பார்த்து பேசுவோம் நோ ப்ராப்ளம்! சரி நீ ஷாப்பிங்கை கன்டினியூ பண்ணு நான் உள்ளே போறேன் பிரண்ட்ஸ் வெயிட் பண்ணுறாங்க” என்றவாறே அங்கிருந்து நகர்ந்து செல்ல அந்த நேரம் பார்த்து சரியாக கௌசிக்கின் தொலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது.

 

“இழை இதோ வர்றேன்ம்மா! ஆதவா வந்தான் அவன் கூட பேசிட்டு இருந்தேன்”

 

“……”

 

“என்ன ஐஸ்கிரீம் சாப்பிட போயிட்டியா? எங்கே?”

 

“……”

 

“சரி அங்கேயே இரு நானும் வர்றேன்”

 

“…..”

 

“அய்யோ! எனக்கு எதுவுமே வேண்டாம் தாயி! இப்போ சாப்பிட்டதே தொண்டைக்குழி வரைக்கும் இருக்கு நீயே என் பங்கையும் சேர்த்து சாப்பிட்டுக்கோ!” என்றவாறே கௌசிக் ரெஸ்டாரண்டிலிருந்து வெளியேறி செல்ல 

 

அவன் பேசுவதை கேட்டபடியே மறுபுறம் நடந்து சென்று கொண்டிருந்த ஆதவன்

‘கௌசிக்கோட வுட்பீ சரியான சாப்பாட்டு ராணி போல இருக்கு! எப்போதும் சாப்பிட்டுட்டே இருப்பா போல!’ தனக்கு இதற்கு முன் தெரியாத ஒரு நபரைப் பற்றி யோசிக்கின்றோமே என்ற எண்ணம் சிறிதும் இன்றி முகம் தெரியாத அவளைப் பற்றி எண்ணி தன் மனதிற்குள் சிரித்தபடியே தன் நண்பர்களுடன் இணைந்து கொண்டவன் அந்த சம்பவத்தைப் பற்றி அதன் பிறகு முற்றாக மறந்தே போனான்.

 

அதற்கு பிறகு வந்த நாட்கள் எல்லாம் திருமண வேலைகளுக்கான நாட்களாக அமைந்து விட ஆதவனும் தன் உடன் பிறவாத தம்பி போல பழகிய கௌசிக்கின் திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கினான்.

 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாட்கள் நகர்ந்து செல்ல கௌசிக்கின் திருமண நாளும் இனிதாக வந்து சேர்ந்தது.

 

அடுத்த நாள் திருமணம் என்ற நிலையில் ஆதவனும் அவன் குடும்பத்தினரும் கௌசிக்கின் குடும்பத்தினருடன் பலவிதமான கனவுகளுடனும், ஆசைகளுடனும் அந்த திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

 

மண்டபம் முழுவதும் உறவினர்களும், நண்பர்களும், சிறு பிள்ளைகளுமென ஒன்று கூடி சந்தோஷமாக சிரித்துப் பேசியபடியே வேலைகளை கவனித்து கொண்டிருக்க ஆதவனும் மண்டபத்தை அலங்கரிக்கும் வேலையில் மற்றவர்களுக்கு உதவி செய்ய தொடங்கினான்.

 

“தம்பி அந்த தட்டில் இருக்கும் பூக்களை எல்லாம் கொஞ்சம் எடுத்து தர முடியுமா?” ஏணி போன்ற படிக்கட்டு ஒன்றின் மீது நின்று கொண்டிருந்த நபரொருவர் அந்த வழியாக வந்த ஆதவனைப் பார்த்து கேட்கவும் அவரைப் பார்த்து சரியென்று தலையசைத்தவன் அவர் கேட்ட பூக்களை எல்லாம் எடுத்து கொண்டு அவற்றை கீழே விழுந்து விடாதபடி மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான்.

 

அப்போது திடீரென்று அந்த மண்டபத்திற்குள் இரண்டு பெண்கள் சத்தமாய் சிரித்துக் கொண்டு கத்தியபடியே ஓடி வரவும் அந்த சத்தம் கேட்டு ஆதவன் திரும்பி பார்க்க அங்கே அவன் கண்ட காட்சியில் அவன் விழிகள் இரண்டும் ஆச்சரியத்தில் விரிந்தது.

 

சிவப்பு நிறத்தில் தங்க நிற இழைகளினால் வேலைப்பாடுகள் நிறைந்த சுடிதார் அணிந்து முகமும் இதழ்களும் புன்னகையில் விரிய ஒரு பெண் ஓடி வந்து கொண்டிருக்க அவனது பார்வை மொத்தமும் அவள் மேலேயே காந்தம் போல் ஒட்டிக் கொண்டது.

 

அன்று தான் சிறகு முளைத்த பட்டாம்பூச்சி போல ஆனந்தமாக பறந்து திரிவதைப் போல அந்த பெண்ணும் சுற்றுப்புறம் மறந்து எந்த கவலையுமின்றி ஓடித் திரிய ஆதவனது பார்வையும் அவள் பின்னாலேயே வட்டமிடத் தொடங்கியது.

 

மனதிற்குள் ஏதேதோ மாற்றங்கள் நிகழ அவளையே விழியகலாமல் பார்த்து கொண்டு நின்றவன் தன்னையும் அறியாமல் அவள் ஓடி வந்து கொண்டிருந்த புறமாக நடக்கத் தொடங்கினான்.

 

அவன் அந்த பக்கமாக வரக் கூடும் என்று எதிர்பாராத பெண்ணவள் சட்டென்று அவன் மேல் மோதி கீழே விழ ஆதவனின் கையில் இருந்த தட்டிலிருந்த பூக்கள் எல்லாம் அவர்கள் இருவரின் மேலும் சாரலாய் தூவ அவன் மனமோ தன் கண் முன்னால் இருந்தவளை வியந்து போய் ரசிக்கத் தொடங்கியது.

 

அவள் யார்? என்ன செய்கிறாள்? எதற்காக இங்கே வந்திருக்கிறாள்? எதையுமே அவன் மனம் அந்த கணம் யோசிக்கவில்லை.

 

தன் மனதிற்குள் இருந்த ஆசைகள் எல்லாம் யதார்த்த வாழ்வில் நடக்குமா? இல்லையா? என்று கூட தெரியாமல் இருந்தவன் இன்று அவை எல்லாம் தன் கண்களின் முன்னால் நடந்து கொண்டிருப்பதை பார்த்து வியந்து தான் போனான்.

 

“குங்ஃபூ பாண்டா விழுந்துட்டா டோய்!” அவள் விரட்டி கொண்டு வந்த பெண் அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே கூறி விட்டு அங்கிருந்து ஓடிச் சென்று விட அந்த குரலில் தன் சுற்றுப் புறம் உணர்ந்து எழுந்து நின்ற ஆதவன் அவளையும் எழுப்பி விடலாம் என்ற நோக்கத்தோடு தன் கையை நீட்ட அதற்குள் அவளே எழுந்து நின்றிருந்தாள்.

 

அவளது செய்கையில் இவனது முகம் சிறிது வாடினாலும் உடனே தன்னை சரி செய்து கொண்டவன் கீழே கொட்டிக் கிடந்த பூக்களை எல்லாம் அள்ளித் தட்டில் போட ஆரம்பிக்க அவளோ கோபமாக அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.

 

சிறு பிள்ளை போல தரையில் காலை உதைத்து விட்டு நடந்து செல்பவளையே ஆதவன் ரசனையோடு பார்த்து கொண்டிருக்க அவன் மன எண்ணத்தை பிரதிபலிப்பது போல பாடல்  அங்கே மண்டபத்தில் ஒலிக்க ஆரம்பித்தது.

 

உன்னை நான்.. உன்னை நான் ..உன்னை நான் ..

கண்டவுடன்.. கண்டவுடன்.. கண்டவுடன்

நெஞ்சுக்குள்ளே.. நெஞ்சுக்குள்ளே..

நெஞ்சுக்குள்ளே ..

லட்சம் சிறகுகள் முளைக்குதே …

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா …

என்னை மெல்ல மெல்ல கொல்ல

வரும் மோகினியா…

 

ஜே ஜே உனக்கு ஜே ஜே

ஜே ஜேய் உனக்கு ஜே ஜேய்….

உன்னை நான்.. உன்னை நான் ..உன்னை நான் ..

கண்டவுடன்.. கண்டவுடன்.. கண்டவுடன்

 

சொக்குபோடி கொண்ட சுடர் விழியா

திக்கி திக்கி வந்த சிறு மொழியா ..

எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி…

எட்டு மில்லிமீட்டர் புன்னகையா…

முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா..

எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி..

முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா ..

மூடி கிடந்த ஜோடி திமிரா…

என்ன சொல்ல எப்படி சொல்ல

..எதுகை மோனை கை வசம் இல்ல

உன்னை எண்ணிக்கொண்டு உள்ளே

பற்றி கொண்டு உள்ளம் நோகுதடி

என் உச்சி வேகுதடி

 

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா..

என்னை மெல்ல மெல்ல கொல்ல

வரும் மோகினியா…

ஜே ஜே உனக்கு ஜே ஜே

ஜே ஜேய் உனக்கு ஜே ஜேய்

கண்டவுடன்.. கண்டவுடன்.. கண்டவுடன்

 

மறு முறை உன்னை சந்திப்பேனா..

மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா..

மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா..

வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே…

ரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே

உயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே..

பதறும் இதயம் தூண்டி எடுத்து

சிதறு தேங்காய் போட்டு முடித்து

உடைந்த சத்தம் வந்திடும் முன்னே

எங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்

என்னை காணும் போது கண்ணை பார்த்து சொல்லு

கண்ணே என் போலே நீயும் காதல் கொண்டாயா..

 

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா..

என்னை மெல்ல மெல்ல கொல்ல

வரும் மோகினியா…

ஜே ஜே உனக்கு ஜே ஜே

ஜே ஜேய் உனக்கு ஜே ஜேய்….

 

உன்னை நான்.. உன்னை நான் ..உன்னை நான் ..

கண்டவுடன்.. கண்டவுடன்.. கண்டவுடன்

நெஞ்சுக்குள்ளே.. நெஞ்சுக்குள்ளே..

நெஞ்சுக்குள்ளே ..

லட்சம் சிறகுகள் முளைக்குதே …

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா …

என்னை மெல்ல மெல்ல கொல்ல

வரும் மோகினியா…

ஜே ஜே உனக்கு ஜே 

 

அந்த பாட்டை ரசித்து கொண்டே அவளைத் தன் பார்வையால் ஆதவன் பின் தொடர அவளோ இது எதையும் கவனிக்காமல் சிறு பிள்ளையாக அங்கே மண்டபத்திற்குள் விளையாட்டோடும், துள்ளலோடும் வலம் வந்து கொண்டிருந்தாள்.

 

பலமுறை அவளிடம் பேச்சுக் கொடுத்து பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு அவளை நெருங்கி சென்றவன் பின் ஏதோ ஒரு தயக்கத்துடன் அவளை தொலைவில் இருந்தபடியே ரசித்து கொண்டிருக்க தொடங்கினான்.

 

அடுத்த நாள் கௌசிக்கின் திருமணம் எந்த குறையும் இல்லாமல் முடிவடைந்ததும் அவளைத் தேடி சென்று பேசி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் அவளைப் பற்றி நினைத்துக் கொண்டே அன்றைய பொழுதை கழிக்க தொடங்கினான்.

 

முதல் பார்வையிலேயே ஒரு பெண்ணை பிடித்து போக வேண்டும் என்று எண்ணி இருந்தவன் தான் ஆதவன் ஆனால் அது எந்தளவுக்கு யதார்த்தமானது என்று அவனுக்கு அந்த தருணத்தில் தெரிந்திருக்கவில்லை ஆனால் இப்போது ஒற்றை பார்வையிலேயே தன்னை முழுமையாக சுழற்றிப் போட்ட அந்த பெண்ணை தன் வாழ்நாள் முழுவதும் தன் அருகிலேயே வைத்து பார்த்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவன் மனதிற்குள் மெல்ல மெல்ல வியாபிக்க ஆரம்பித்தது.

 

முதலில் அவளிடம் பேச வேண்டும் தன்னைப் பற்றி எல்லாம் சொல்ல வேண்டும் அதன் பிறகு தன் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை, காதலை எல்லாவற்றையும் அவளிடம் சொல்லி அதற்கு அவளை மெல்ல மெல்ல சம்மதிக்க வைத்து அந்த ஒவ்வொரு தருணத்தையும் அழியாத காதல் சுவடுகளாக தன் மனச்சிறைக்குள் சேர்த்து கொள்ள வேண்டும் என்று பலவாறான ஆசைகள் சூழ கனவுலகில் மூழ்கியபடியே அடுத்த நாள் விடியல் தனக்கு தரப் போகும் அதிர்ச்சிகளைப் பற்றி அறியாமல் ஆதவன் தூக்கத்தை தழுவிக் கொண்டான்.

 

அடுத்த நாள் கௌசிக்கின் திருமணத்திற்கான நாள் திருமணத்திற்கே உரித்தான ஆரவாரத்துடனும், பரபரப்புடனும் இனிதாக புலர்ந்தது.

 

காலையில் நேரத்திற்கே எழுந்து குளித்து சந்தன நிற சர்ட் மற்றும் பட்டு வேஷ்டி அணிந்து தயாராகி வந்த ஆதவன் அந்த மண்டபம் முழுவதும் தன்னை ஒரே நொடியில் வீழ்த்திய அந்த கன்னி எங்கேயாவது இருக்கின்றாளா? என்று பார்வையினாலேயே சல்லடை போட்டு தேடத் தொடங்கினான்.

 

அவன் எவ்வளவு நேரமாக தேடியும் அவன் பார்வையின் தேடலுக்கான முடிவு அவனுக்கு அங்கே கிடைக்கவில்லை.

 

‘எங்கே போயிட்டா? இங்கே தானே எங்கேயாவது பசங்களோடு பசங்களாக விளையாடிட்டு இருப்பா!’ ஆதவன் யோசனையுடன் தன் பார்வையை சுற்றிலும் சுழல விட அப்போது சரியாக அவனது தோளில் ஒரு கரம் பதிந்தது.

 

‘அய்யய்யோ! நான் அந்த பொண்ணை பார்த்ததை யாரும் பார்த்துடாங்களோ? பார்த்தால் என்ன? நான் ஒண்ணும் தப்பான எண்ணத்தோடு அவளை பார்க்கலயே!’ தனக்குத்தானே சமாதானப் படுத்திக் கொள்வது போல எண்ணிக் கொண்டே சிறிது தயக்கத்துடன் ஆதவன் திரும்பி பார்க்க அங்கே அசோகன் புன்னகை முகமாக நின்று கொண்டிருந்தார்.

 

“தாத்தா நீங்களா? நீங்க எங்கே இங்கே?” தனக்கு தெரிந்த நபர் ஒருவர் தான் நிற்கிறார் என்ற எண்ணத்தோடு அவன் அவரைப் பார்த்து இயல்பாக வினவ 

 

பதிலுக்கு அவனைப் பார்த்துப் புன்னகைத்து கொண்டவர்

“மாப்பிள்ளை ரெடியாகிட்டாரான்னு பார்க்க வந்தேன் இங்கே உங்களைப் பார்த்ததும் பேசிட்டு போகலாம்னு வந்தேன் ஆமா நீங்க இங்கே என்ன பண்ணுறீங்க தம்பி? யாராவது தெரிந்தவங்க வர்றாங்களா?” என்று கேட்டார்.

 

“சேச்சே! அதெல்லாம் இல்லை தாத்தா! கௌசிக் ரெடியாகிட்டு இருந்தான் அவன் ரெடி ஆகி வர்ற வரைக்கும் சும்மா வெளியே வந்தேன் நீங்க முன்னாடி போங்க தாத்தா நான் அவனைக் கூட்டிட்டு வர்றேன்” என்றவாறே ஆதவன் அவரைக் கடந்து செல்ல 

 

சிறு புன்னகையுடன் அவனுடன் இணைந்து நடந்து வந்த அசோகன்

“அப்புறம் தம்பி உங்களுக்கு எப்போ கல்யாணம்?” என்று கேட்கவும்

 

நேற்று நடந்த சம்பவத்தை எண்ணி ஒரு முறை புன்னகைத்து கொண்டவன்

“கூடிய சீக்கிரம் பண்ணிடுவோம் தாத்தா இன்னும் இரண்டு வாரத்தில் மறுபடியும் மலேஷியாவிற்கு போக வேண்டி இருக்கு அந்த வேலை முடிந்து வந்து அடுத்த முஹூர்த்தத்திலேயே கல்யாணம் பண்ண வேண்டியது தான்!” மனதிற்குள் தன்னை கொள்ளை கொண்டவளைப் பற்றி நினைத்துக் கொண்டே கூறினான்.

 

“இரண்டு வாரத்தில் மறுபடியும் போகணுமா? ஏன் தம்பி இங்கேயே இருந்து வேலையை செய்யக்கூடாதா? அம்மா, அப்பா கூட சந்தோஷமாக இருக்கலாம் தானே?”

 

“எனக்கும் ஆசை தான் தாத்தா ஆனா என்ன பண்ணுவது? வேலையும் முக்கியமானது தானே?”

 

“உங்களுக்கு எதற்கு தம்பி இவ்வளவு கஷ்டம்? உங்க சொத்து, பத்தே பல இலட்சக்கணக்கில் இருக்குமே அதை பராமரித்து கொண்டு இருக்கலாம் இல்லையா?”

 

“இலட்சக்கணக்கான சொத்தா?” அசோகனின் கூற்றில் சட்டென்று தன் நடையை நிறுத்திய ஆதவன் குழப்பமாக அவரைப் பார்க்க

 

“என்ன தம்பி ஒண்ணும் தெரியாத மாதிரி பேசுறீங்க? ஓஹ்! ஒருவேளை கோடிக்கணக்கான சொத்து இருக்கு போல!” பதிலுக்கு அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவர் கூற அவனோ அவரது கூற்றில் மேலும் மேலும் குழப்பமடைந்து போனான்.

 

ஆதவன் இங்கே முற்றாக குழப்பமடைந்து போய் நிற்கையில்

“அப்பா அங்கே எல்லாம் சரியா?” என்றவாறே கதிரரசன் அவர்களை நோக்கி வர

 

“இதோ வர்றேன் கதிர்” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்ற அசோகன் ஆதவனின் முகமாற்றத்தைப் பார்த்து சற்று குழப்பமடைந்து போனார்.

 

‘தாத்தா என்ன சொல்லுறாங்க? ஏதோ சரியில்லை கௌசிக் கிட்ட பேசணும்’ அவசரமாக தனக்குள்ளேயே கூறிக் கொண்டவன் 

 

“கௌசிக்!” என்று சத்தமிட்டவாறே அவனது அறையை நோக்கி சென்றான்.

 

ஆதவனின் குரல் கேட்டு அங்கிருந்த அனைவரும் என்னவென்பது போல அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்டவன் அங்கே தனது பெற்றோரையும், கௌசிக்கின் பெற்றோரையும் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அவன் முன்னால் சென்று நின்றான்.

 

“என்னாச்சு ஆதவா? ஏதாவது பிரச்சினையா?” கௌசிக்கின் கேள்வியில் அவனை கூர்மையாக அளவிடுவது போல பார்த்தவன் 

 

சிறிது நேரத்திற்கு முன்பு அசோகன் தன்னிடம் கூறிய விடயங்களைப் பற்றி கூறி விட்டு

“தாத்தா என்னென்னவோ பேசுறாங்க? இதற்கு எல்லாம் என்ன அர்த்தம்? அப்படி என்றால் நீ நாம இன்னும் அந்த ஜமீன்தார் பரம்பரை அளவுக்கு வசதியாக தான் இருக்கோம்னு சொல்லி தான் இந்த கல்யாண ஏற்பாடுகளை எல்லாம் பண்ணிருக்கியா?” கேள்வியாக அவனை நோக்கினான்.

 

“நா.. நான் எதுவும் சொல்லல ஆதவா! அவராகவே தான் நாம் பணக்காரங்கன்னு நினைத்து இருக்காரு போல அதற்கு நாம எதுவும் செய்ய முடியாது” கௌசிக் எங்கே ஒரு மூலையைப் பார்த்தபடி ஏனோ தானோ என்பது போல பதிலளிக்க

 

அவன் முகத்தை பற்றி தன் புறமாக திருப்பியவன்

“இது ரொம்ப தப்பு கௌசிக்! எல்லா உறவுகளுக்கும் அடிப்படையான விடயம் நம்பிக்கை அது இல்லைன்னா எந்த உறவும் நிலைத்து இருக்காது தாத்தா தப்பாக புரிந்து இருந்தால் நாம தான் அவங்களுக்கு அந்த உண்மையை எடுத்து சொல்லி புரிய வைக்கணும் அதை விட்டுவிட்டு நாமும் அதை மறைத்து வைத்திருப்பது ரொம்ப தப்பு 

 

நாம அவங்க அளவுக்கு பணக்காரங்க இல்லைன்னு சொல்லுவதால் என்ன மாறிடப் போகுது வெறும் பணம் தான் வசதியை தீர்மானிக்குமா? இல்லைடா ஒரு மனிதனோட நல்ல குணம் தான் அவங்களோட விலை மதிக்க முடியாத சொத்து அது உன்கிட்ட நிறைய இருக்கு  உன்னை அவங்க மறுக்க எந்த காரணமும் இருக்காது இப்போதும் ஒண்ணும் கெட்டுப் போகல இப்போவே தாத்தாவை கூப்பிட்டு பேசி இந்த குழப்பத்தை சரி செய்துடலாம் வா” அவன் கையை பிடித்து கொண்டு அங்கிருந்து செல்லப் போக 

 

“இரண்டு பேரும் அங்கேயே நில்லுங்க” அதட்டலாக சத்தமிட்டு கொண்டே தன் சேலை முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகி கொண்ட படி விஜயதேவி அவர்கள் இருவரின் முன்னாலும் வந்து நின்றார்………

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!