உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 09

உன்னை நீங்கி நான் எங்கே செல்வது – 09

தேனின் நிறத்தை அள்ளி பூசினாற் போல அதிகாலை வானம் ஜொலிக்க காலைக் கதிரவன் ஒளி பட்டு இழையினி தன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்தாள்.

 

முதல் நாள் வளர்மதி தன்னிடம் கொடுத்த புகைப்படத்தை எவ்வளவு நேரமாக பார்த்து கொண்டிருக்கிறோம் என்றே தெரியாமல் பார்த்து கொண்டு மெய் மறந்து அமர்ந்திருந்தவள் இரவு உணவை சாப்பிட வரச்சொல்லி தேன்மொழி வந்து அழைத்த பின்னரே தன் சுயநினைவுக்கு வந்தாள்.

 

ஆஃபிஸில் இருந்து வந்தது போல் அப்படியே அமர்ந்தவள் கதவு தட்டும் ஓசை கேட்ட பின்பே அவசர அவசரமாக தன் கையில் இருந்த புகைப்படத்தை அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு தனது கை, கால், முகத்தை கழுவி விட்டு வந்து கதவைத் திறந்தாள்.

 

“ஸாரி தேனு கொஞ்சம் வேலையாக இருந்துட்டேன் வா போகலாம்” என்று விட்டு இழையினி அவளைத் தாண்டி செல்லப் போக

 

 அவசரமாக அவளது வழியை மறித்தவாறு வந்து நின்ற தேன்மொழி

“கொஞ்சம் வேலையா? இல்லை போட்டோவில் இருந்த ஆளைப் பார்த்து.. ஆஹ்! ஆஹ்!” கண்ணடித்தவாறே கேட்க அவளது கேள்வியில் பெண்ணவள் முகம் குங்குமமாய் சிவந்து போனது.

 

“அட! அட! கல்யாணப் பேச்சு வந்ததுமே நம்ம இழைக்கு வெட்கத்தைப் பாருடா”

 

“தேனு உதை வாங்கப் போற நீ இப்போ!” 

 

“அதெல்லாம் நான் எப்போதும் வாங்குறது தானே! அதை நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன் ஆனா நாளைக்கு வரப் போகிற மாப்பிள்ளை தான் இந்த குங்ஃபூ  பாண்டா ராணிகிட்ட சிக்கி சின்னபின்னமாகப் போறாரு அய்யோ பாவம்!”

 

“தேனு! உன்னை!” கோபமாக முறைப்பது போல இழையினி தேன்மொழியைப் பார்த்தாலும் அவளது கேலிப் பார்வையில் இவளது முகம் வெட்கத்தையே பூசிக் கொண்டது.

 

அதன் பிறகு இழையினி சாப்பிட்டு முடித்து விட்டு தூங்கச் செல்லும் வரை அவளது அண்ணனும், தேன்மொழியுடன் இணைந்து கொண்டு அவளைக் கேலி செய்ய பெரியவர்களும் சிறியவர்கள் பேச்சில் இணைந்து கொள்ள என்றுமில்லாத சந்தோஷத்தில் அன்று அந்த செந்தமிழ் இல்லம் நிறைந்து போய் இருந்தது.

 

நேற்றைய சம்பவங்களை நினைத்து தனக்குள் சிரித்தபடியே எழுந்து பால்கனியில் சென்று நின்று கொண்ட இழையினிக்கு தன்னை சுற்றி இருக்கும் எல்லா விடயங்களும் அன்று புதிதாக இருப்பது போலவே தோன்றியது.

 

எப்போதும் காலையில் வீசும் இதமான காற்றில் அசைந்தாடும் அவளது பால்கனியில் இருக்கும் ரோஜாக்களும், முல்லை மற்றும் மல்லிகை பந்தல் இன்று அவளைப் பார்த்து வாழ்த்துவது போல அசைந்தாடுவதாய் அவளுக்கு தோன்றியது.

 

தன் மனதிற்குள் நிகழும் மாற்றங்களை எண்ணி வெட்கப் புன்னகை சிந்தியவள் சிறிது நேரத்தில் குளித்து தயாராகி வரவும் அதே வேளை அவளது அன்னை கலைச்செல்வி அங்கு வரவும் சரியாக இருந்தது.

 

அதன் பிறகு சிறிது நேரத்தில் அவளை பெண் பார்க்கும் சடங்கிற்காக பெரியவர்கள் தயார் படுத்த தொடங்கினர்.

 

கலைச்செல்வி மற்றும் எழிலரசியின் உதவியுடன் பட்டுச்சேலை அணிந்து அதற்கேற்றாற் போல ஆபரணங்களுடன், இதமான ஒப்பனையும் ஒன்று சேர பெயருக்கு ஏற்ப தங்கத்தை போன்று வசீகரிக்கும் அழகோடு நின்ற தன் பேத்தியை வாஞ்சையுடன் வாரி அணைத்துக் கொண்டார் வளர்மதி.

 

“என் தங்கமே! என் கண்ணே பட்டுடுடும் போல இருக்குடா! என் கண்ணம்மா!” இழையினியின் நெற்றியில் அழுந்த முத்தமிட்ட வளர்மதி 

 

தேன்மொழியின்

“பாட்டி! பாட்டி! தாத்தா உங்களை சீக்கிரமாக வரச் சொன்னாங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்களாம்!” என்ற சத்தத்தில் அவசரமாக தன் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு

 

“இழையினி! நீ இங்கேயே இருடாம்மா! செல்வி! அரசி! வாங்க நாம கீழே போகலாம்” என்று விட்டு செல்ல அவளோ தடதடக்கும் இதயத்துடன் தன் அறை வாயிலின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

 

கீழே ஹாலில் நடக்கும் எதுவும் அவளுக்கு தெரியாவிட்டாலும் பெரியவர்களின் பேச்சு சத்தத்தில் அங்கே என்ன நடக்கிறது என்று சிறிது சிறிதாக அவளால் யூகித்து கொள்ள முடிந்தது.

 

“தேனு! செல்வியோடு போய் இழையினியை அழைத்துக் கொண்டு வா!” அசோகனின் குரல் அவள் செவிகளுக்குள் எதிரொலிக்க பந்தய குதிரையை விட பன்மடங்கு வேகத்தில் துடித்த தன் இதயத்தை வெகு பிரயத்தனப்பட்டு அவள் அமைதிப்படுத்திக் கொண்டு நின்றாள்.

 

“இழை வாம்மா!” கலைச்செல்வி புன்னகையுடன் இழையினியின் கை பிடித்து அழைத்துக் கொண்டு செல்ல அவளோ பதட்டத்தில் தடுமாறிய தன் கால்களை ஒருவாறாக நிலைப்படுத்தி அவருடன் இணைந்து நடந்து சென்று எல்லோருக்கும் பொதுவாக வணக்கம் கூறி விட்டு எழிலரசி கொடுத்த காஃபி டம்ளர்கள் அடுக்கப்பட்ட டிரேயை வாங்கி கொண்டு அங்கிருந்த எல்லோருக்கும் பரிமாற தொடங்கினாள்.

 

ஒவ்வொருவரையும் இயல்பாக நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவளுக்கு தன் அண்ணன் அருகில் செல்கையில்  தான் வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.

 

ஏனென்றால் மேலே தன் அறையில் இருந்து அவள் வெளியேறி வரும் போதே தேன்மொழி அவளிடம் ரகசியமாக மதியழகன் பக்கத்தில் தான் அவளைச் பார்க்க வந்த மாப்பிள்ளை இருப்பதாக கூறி இருந்தாள்.

 

இப்போது மனதிற்குள் அவனை நிமிர்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தாலும் பெண்ணின் நாணம் அவளைக் கட்டிப் போட மெல்ல மெல்ல தயக்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் இழையினி.

 

புகைப்படத்தில் பார்த்த போது இருந்ததை விட இப்போது அவன் முகத்தில் அத்தனை பிரகாசமும், வசீகரிக்கும் புன்னகையும் இருப்பதாக அவளுக்கு தோன்றியது.

 

இங்கே இழையினி தயங்கி தயங்கி கௌசிக்கைப் பார்க்க அவனோ வீட்டிற்குள் வந்து அசோகன் இழையினியை அழைத்து வரும் படி சொன்ன நொடியில் இருந்து அவளையே தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

பெரியவர்கள் எல்லோரும் அவர்களது பார்வைப் பரிமாற்றத்திலேயே அவர்கள் இருவரது மனதைப் புரிந்து கொண்டாலும் அவர்களுக்கும் சிறிது பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கௌசிக்கிற்கு வீட்டைச் சுற்றி காட்டச் சொல்லி இழையினியையும், அவர்களோடு ‌தேன்மொழி மற்றும் மதியழகனையும் அனுப்பி வைத்தனர்.

 

இழையினி மற்றும் கௌசிக் முன்னால் நடந்து செல்ல தேன்மொழி மற்றும் மதியழகன் சிறிது இடைவெளி விட்டு அவர்களைப் பின் தொடர்ந்து சென்றனர்.

 

இருவருக்கும் இடையே பலத்த அமைதி நிலவ அந்த அமைதியை கலைப்பது போல கௌசிக் தன் பேச்சை ஆரம்பித்தான்.

 

“ஹாய் இழை! என்ன எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கீங்க?” அவனது இழை என்ற அமைப்பில் அவள் சட்டென்று நிமிர்ந்து பார்க்க

 

“இழைன்னு சொல்லலாம் தானே!” கௌசிக் கேள்வியாக அவளை நோக்கினான்.

 

அவனது கேள்விக்கு இவள் ஆமோதிப்பாக தலை அசைக்க

“இதற்கும் அமைதி தானா? சரி பரவாயில்லை நான் என் மனதில் உன் கிட்ட பேச நினைத்து இருந்த விடயத்தை சொல்லுறேன் அதற்கு அப்புறம் நீ பேசணும் ஓகே வா?” என்று கேட்க அதற்கும் அவளிடம் தலையசைவே பதிலாக கிடைத்தது.

 

“சோ க்யூட்!” சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்து கண் சிமிட்டியவன் தான் பேச நினைத்து வந்த விடயங்களை அவளிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தான்.

 

இது வரை தன் வாழ்நாளில் எத்தனை வகையான பெண்களை கௌசிக் கடந்து வந்திருந்தாலும் அவர்களுடன் ஒரு நாளும் அவன் தன் எல்லையை கடந்து பழகியது இல்லை.

 

தன் காதல் மொத்தமும் தனக்கு வரப்போகும் மனைவிக்கே என்ற கொள்கையோடு வாழ்ந்து வந்தவன் ஒரு சில வாரங்களுக்கு முன்பு தன் அன்னை கொடுத்த புகைப்படத்தை பார்த்த அடுத்த நொடியே தனக்கு மனைவியாக இழையினி தான் வரவேண்டும் என்று முடிவெடுத்து கொண்டான்.

 

அதன் பிறகு ஒவ்வொரு நாளும் இழையினியின் வீட்டில் இருந்து தகவல் ஏதாவது வந்ததா என்று பார்ப்பதே அவனுக்கு முழு நேர வேலையாகிப் போனது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு அவன் தனது அலுவலகத்தில் ஒரு முக்கியமான வேலையாக தன் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி கொண்டிருந்த வேளை அவனது தந்தையிடம் இருந்து அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

 

“அப்பா நான் ஒரு முக்கியமான வேலையாக இருக்கேன் அப்புறம் கால் பண்றேன்”

 

“டேய்! கௌசிக்! ஒரு முக்கியமான விஷயம் பேசணும்டா! இத்தனை நாளா பொண்ணு வீட்டில் இருந்து தகவல் வந்ததா? வந்ததான்னு கேட்டுட்டே இருந்த இப்போ அதைப்பற்றி கேட்காமலேயே போகப் போற”

 

“அப்பா! இழையினி வீட்டில் இருந்து தகவல் வந்ததா? அவங்க என்ன சொன்னாங்க? அவங்களுக்கு ஓகே வா? இழையினிக்கு ஓகே வா? சீக்கிரம் சொல்லுங்க பா”

 

“டேய்! டேய்! என்னையும் கொஞ்சம் பேச விடுடா இப்போ தான் பொண்ணோட அப்பா கால் பண்ணாரு வர்ற ஞாயிற்றுக்கிழமை நாள் நல்லா இருக்காம் அன்னைக்கே நம்மளை பொண்ணு பார்க்க வரச் சொன்னாங்க”

 

“அப்பா! நிஜமாவா! யாஹூ!” கௌசிக் தான் இருக்கும் இடம், நிலை என எல்லாவற்றையும் மறந்து சத்தம் போட சுற்றி இருந்த அனைவரும் அதிர்ச்சியாக அவனைத் திரும்பிப் பார்த்தனர்.

 

எல்லோரது பார்வையும் தன் மேல் இருப்பதைப் பார்த்து விட்டு அவசரமாக அவர்கள் எல்லோரிடமும்

“ஸாரி கைஸ்!” என்று பொதுவாக கூறிவிட்டு சற்று தள்ளி சென்று நின்று கொண்டு மீண்டும் மீண்டும் அந்த விடயத்தை பற்றி தன் தந்தையிடம் உறுதி படுத்தி விட்டே அவன் தன் தொலைபேசியை கீழே வைத்தான்.

 

அதன் பிறகு வந்த இரண்டு, மூன்று நாட்களையும் இரண்டு, மூன்று வருடங்களுக்கு சமனாக நெட்டித் தள்ளியவன் இப்போது தன் கனவு நனவான மகிழ்வோடு அவள் முன்னால் நின்று கொண்டிருந்தான்.

 

“ஆனாலும் நீங்க ஆபிஸில் அப்படி சத்தம் போட்டு இருக்கக்கூடாது எல்லோரும் உங்களை ஒரு மாதிரியாக லுக்கு விட்டு இருப்பாங்களே!” இழையினி சற்று கேலி கலந்த தொனியில் கௌசிக்கைப் பார்த்து கேட்க அவனோ சிறிது சங்கடத்துடன் புன்னகைத்த படியே தன் தலையை அழுந்த கோதிக் கொண்டான்.

 

“அது பரவாயில்லை நாம வாங்காத பல்பா? ஆனால் நான் பார்க்க வந்த பொண்ணு பேசாமலே என்னை இன்னைக்கு அனுப்பி வைத்திருந்தால் அது தான் பெரிய சோக சம்பவமாக இருந்து இருக்கும்” கௌசிக்கின் கூற்றில் இழையினி வெட்கத்துடன் தன் தலையை குனிந்து கொண்டாள்.

 

சுற்றிலும் ஒரு தடவை திரும்பி பார்த்துக் கொண்டவன் மதியழகனும், தேன்மொழியும் ஒரு மரத்தின் அருகே நின்று கொண்டு அந்த மரத்தைக் காட்டியவாறே ஏதோ பேசிக் கொண்டு நிற்பதை பார்த்து விட்டு இழையினியின் முன்னால் வந்து நின்று தன் கரத்தை அவள் புறமாக நீட்டினான்.

 

இழையினி என்ன என்பது போல கேள்வியாக அவனைப் பார்க்க

“நான் இதற்கு முன்னாடி எந்த பொண்ணையும் பார்த்தது இல்லை பேசியது இல்லை பழகியது இல்லைன்னு சொல்ல மாட்டேன் ஆனா அது எல்லாம் அளவோடு தான் இருக்கும் எப்போ உன் போட்டோவைப் பார்த்தேனோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் நான் என் எல்லையைக் கடந்து காதலாக, நட்பாக, உரிமையாக எல்லாமுமாக பழக காத்திருந்த அந்த ஒரு பொண்ணு நீ தான்! எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு என் வாழ்க்கையில் இனி வரப்போகும் எல்லா நாளையும் உன்னோடு சரி சமமாக பங்கு போட ஆசைப்படுறேன் உனக்கும் இதற்கு சம்மதம்னா என் கையில் உன் கையைக் கொடுத்து என்னோட சரி பாதியாக வருவியா? இல்லையான்னு சொல்லு இழை!” கண்களில் காதலையும், ஆவலையும் தேக்கி வைத்து அவன் அவள் முகத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

 

பெரியவர்கள் நிச்சயித்த இந்த திருமணத்தில் தான் இத்தனை தூரம் தன் மனதை பறிகொடுக்கக் கூடும் என்று இழையினியும், கௌசிக்கும் நினைத்திருக்கவில்லை.

 

ஆனால் இன்று அது தான் இருவருக்குள்ளேயும் நிகழ்ந்து கொண்டிருந்தது.

 

இழையினிக்கும் அவன் சொன்னது போன்று அதே உணர்வுகள் தான் மனதிற்குள் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது.

 

தன் முன்னால் நின்றவனது முகத்தையும் அவனது கையையும் மாற்றி மாற்றி பார்த்தவள் சிறு புன்னகையுடன் அவன் கையின் மேல் தன் கையை வைத்து அழுத்திக் கொடுத்தாள்.

 

கௌசிக் திரும்பி பார்க்கையில் வேறு எதைப் பற்றியோ பேசுவதை போல பாவனை செய்து கொண்டு நின்ற மதியழகன் மற்றும் தேன்மொழி தூரத்தில் நின்று அவர்கள் இருவரையுமே பார்த்து கொண்டு நின்று விட்டு இழையினி கௌசிக்கின் கையில் தன் கையை வைத்ததைப் பார்த்த அடுத்த நொடியே 

“பொண்ணும், மாப்பிள்ளையும் ஓகே சொல்லிட்டாங்கடோய்!” என்று கூச்சலிட்டவாறே வீட்டிற்குள் ஓடிச் சென்றனர்.

 

அவர்கள் இருவரும் போட்ட கூச்சலில் இழையினி வெட்கத்துடன் அங்கிருந்து நகர்ந்து செல்ல கௌசிக்கும் முகம் நிறைந்த புன்னகையுடனும், மனம் நிறைந்த சந்தோஷத்துடனும் அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

 

இளையவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷமே பெரியவர்களுக்கு முழுத் திருப்தியை அளிக்க அந்த மனநிறைவான தருணத்தில் இழையினி மற்றும் கௌசிக்கின் நிச்சயதார்த்தத்திற்கான நாளை குறிக்கத் தொடங்கினர்.

 

இன்னும் இரண்டு வாரங்களில்   கௌசிக்கிற்கு ஒரு ப்ராஜெக்ட் வேலை தொடர்பாக மலேஷியா செல்ல வேண்டி இருப்பதாலும் திரும்பி வர இரண்டு மாதங்கள் ஆகும் என்று இருந்ததாலும் அடுத்த வாரமே நிச்சயதார்த்தை வைக்க எல்லோரும் ஒரு மனதாக முடிவெடுத்திருந்தனர்.

 

சரியாக அன்றிலிருந்து ஒரு வாரம் கழித்து மிகவும் கோலாகலமாக செந்தமிழ் இல்லத்தில் இழையினி மற்றும் கௌசிக்கின் நிச்சயதார்த்தம் நிறைவு பெற எல்லோர் மனங்களிலும் எல்லையில்லாத ஆனந்தம் அலை பாய்ந்தது.

 

தங்கள் வீட்டிற்கு வருகை தரும் எல்லா சொந்தக்காரர்களிடமும் அசோகன்

‘பையன் ஜமீன்தார் பரம்பரை! எங்க வசதிக்கு ரொம்ப ரொம்ப ஏற்ற பையன்’ திரும்ப திரும்ப அதே விடயத்தை அழுத்தமாக வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்க அதைப் பார்த்து அந்த வீட்டில் இருந்த மற்றவர்கள் எப்போதும் போல சாதாரணமாக கடந்து செல்ல ஆரம்பித்தனர்.

 

நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு வாரத்தில் கௌசிக் மலேஷியா சென்று விட அதன் பிறகு போனிலும், குறுஞ்செய்திகளிலும் அவர்கள் இருவரது நாட்களும் நகர்ந்து செல்ல ஆரம்பித்தது.

 

கௌசிக் மலேஷியா சென்று இரண்டு மாதங்கள் கடந்து இருந்த நிலையில் இன்று அவன் ஊருக்கு வருவதாக சொல்லி இருக்க தன் மனம் கவர்ந்தவனை நேரில் சென்று வரவேற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவனுக்கே தெரியாமல் ஏர்போர்ட்டில் சென்று காத்துக் கொண்டு நின்றாள் இழையினி.

 

***************************************************

 

சென்னை விமான நிலையம்

 

விமானங்கள் வந்திறங்கும் சுத்தமும், அவற்றைப் பற்றி கூறும் அறிவிப்புகளின் சத்தமும் நிறைந்திருக்க எப்போதும் போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது சென்னை விமான நிலையம்.

 

இன்னும் ஒரு மாதத்தில் இழையினி மற்றும் கௌசிக்கிற்கு திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டிருக்க தன் இரண்டு மாத வெளிநாட்டு பணிகளை முடித்து விட்டு தன் தாயகத்தில் மீண்டும் காலடி எடுத்து வைத்திருந்தான் கௌசிக்.

 

கௌசிக் புன்னகையுடன் படிகளில் இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கையில் அவனது தோளில் கையை போட்டவாறே இன்னொருவர் நடந்து வந்து கொண்டிருக்க கூட்ட நெரிசலில் அந்த நபர் யாரென்று இழையினியால் சரியாக இனம் கண்டு கொள்ள முடியவில்லை.

 

தன் மனதிற்குள் குடியிருக்கும் மனாளனைக் கண்ட சந்தோஷத்தில் அந்த நபரைப் பற்றி அவள் கண்டு கொள்ளவும் முனையவில்லை.

 

கௌசிக்குடன் பேசிக் கொண்டு வந்த நபர் கூட்டத்தோடு கூட்டமாக வேறு புறமாக சென்று விட அவன் மட்டும் தனியாக வருவதைப் பார்த்த இழையினி கையில் பூங்கொத்தோடும் இதழில் புன்னகையோடும் அவன் முன்னால் சென்று நின்றாள்.

 

“ஹேய்! இழை! வாட் அ சர்ப்ரைஸ்! நீ ஏர்போர்ட் வர்றேன்னு சொல்லவே இல்லையே!” ஆச்சரியமும், வியப்பும் போட்டி போட கேட்ட கௌசிக்கின் புறம் தன் கையில் இருந்த பூங்கொத்தை நீட்டியவள்

 

“உங்க முகத்தில் இந்த ஆச்சரியத்தை பார்க்கணும்னு தான் சர்ப்ரைஸாக வந்தேன் எப்படி என் சர்ப்ரைஸ்?” புன்னகையுடன் தன் புருவம் உயர்த்த அவனோ அந்த பூங்கொத்துகளுடன் சேர்ந்திருந்த அவளது கைகளை பற்றி தன் புறமாக அவளை நிறுத்தி கொண்டான்.

 

“அய்யோ! கௌசிக்! என்ன பண்ணுறீங்க? யாராவது பார்க்கப் போறாங்க” பதட்டத்துடன் இழையினி தன் பார்வையை சுழலவிட்டுக் கொண்டே கூறவும்

 

அவளை மேலும் நெருங்கி நின்று கொண்டவன்

“நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு கிளம்பி போன ஆளு இப்போ தான் இரண்டு மாதம் கழித்து வந்து இருக்கேன் இப்படி எட்டி நின்று பேசவா அவ்வளவு தூரம் இருந்து நீ வந்த இழை?” குறும்பாக அவளைப் பார்த்து கண் சிமிட்ட அவளது முகமோ அவன் கேள்வியில் அந்தி வானமாய் சிவந்து போனது.

 

“போதும்பா! வாங்க கிளம்பலாம் முதல்ல போய் ஃப்ரெஷ்ஷாக ஏதாவது சாப்பிட்டு போகலாம்” வெட்கத்தால் சிவந்து போன தன் முகத்தை மறைத்து கொண்டபடியே இழையினி கூற

 

“அய்யோ! அது இப்போ முடியாதே!” கவலையுடன் மறுப்பாக வந்தது கௌசிக்கின் பதில்.

 

“ஏன்? என்னாச்சு?”

 

“நீ இப்படி சர்ப்ரைஸா வருவேன்னு தெரியாமல் நான் என் மாமா வீட்டுக்கு வர்றதாக போனில் சொல்லிட்டேனே! என் கூடவே ஒரு பையன் வந்தானே நீ கவனித்தாயோ தெரியல என்னோட மாமா பையன் தான் அவன் மூணு வருஷம் மலேஷியாவில் வேலை பார்த்துட்டு இருந்தான் இப்போ நம்ம கல்யாணத்துக்காகத் தான் அவனைக் கூட்டிட்டு இல்லை இல்லை இழுத்துட்டு வந்தேன் இப்போ அங்கே போகாமல் வர முடியாதே! ஸாரிடா இழை!”

 

“அய்யோ! இதற்கு எதற்குங்க ஸாரி? நானும் உங்க கிட்ட கேட்டுட்டு பிளான் போட்டு இருக்கணும் பரவாயில்லை நீங்க முதலில் மாமா வீட்டுக்கு போங்க வர்றேன்னு சொல்லிட்டேன் போகாமல் இருந்தால் நல்லா இருக்காது இல்லையா? நாம இன்னொரு நாள் மீட் பண்ணுவோம்”

 

“ஸ்யூர் டா! இன்னொரு நாள் இல்லை நாளைக்கே மீட் பண்ணுவோம் ஓகே வா?”

 

“ஓகே ஓகே! அப்போ நான் கிளம்புறேன் கௌசிக் நீங்களும் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க”

 

“எப்படி போகப் போற இழை? நான் வேணும்னா வீட்டில் டிராப் பண்ணிடவா?”

 

“இல்லைப்பா நான் என் காரில் தான் வந்தேன் நான் போயிடுவேன் நோ ப்ராப்ளம் நான் வர்றேன் பாய்!” இழையினி புன்னகையுடன் கௌசிக்கைப் பார்த்து கையசைத்தவாறே அங்கிருந்து நகர்ந்து செல்ல அவனும் புன்னகையுடன் அவள் செல்லும் வரை கண் இமைக்காமல் அவளைப் பார்த்து கொண்டு நின்றான்.

 

அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாம் இறக்கை கட்டி கொண்டு பறக்க ஆரம்பிக்க இழையினி மற்றும் கௌசிக்கின் வீட்டினர்கள் அனைவரும் திருமணத்திற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கினர்.

 

பெரியவர்கள் எல்லோரும் ஒரு புறம் சடங்கு, சாஸ்திர சம்பிரதாயங்களைப் பார்த்து பார்த்து வேலை செய்து கொண்டிருக்க மறுபுறம் இளையவர்கள் எல்லோரும் உற்சாகத்தில் திளைத்துப் போயிருந்தனர்.

 

செந்தமிழ் இல்லத்தில் வெகு வருடங்களுக்கு பிறகு நடைபெறும் முதல் திருமணம் என்பதனால் அசோகன் பணத்தை வாரி இறைத்து தன்னால் முடிந்த மட்டும் அந்த திருமணத்தை கோலாகலப் படுத்திக் கொண்டிருந்தார்.

 

முதல் நாள் திருமணம் என்றும் அடுத்த நாள் மாலை ரிஷப்சன் நடத்துவது என்றும் முடிவெடுத்திருக்க திருமணத்திற்கு முதல் நாள் இரு வீட்டினரும் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மண்டபத்தை நோக்கி புறப்பட்டனர்.

 

தான் காண்பது எல்லாம் கனவா? நனவா? என்ற நிலையில் அமர்ந்திருந்த இழையினிக்கு இன்று தான் முதன் முதலாக கௌசிக்கின் புகைப்படத்தை வளர்மதி அவளிடம் கொடுத்தது போல் இருந்தது.

 

அதற்குள் மூன்று மாதங்கள் கடந்து நாளை காலை அவனது மனைவியாக வலம் வரப்போகிறோமே என்று எண்ணிப் பார்த்தவள் முகமோ பன்மடங்கு பிரகாசத்தோடு ஜொலித்து கொண்டிருந்தது.

 

வீட்டில் இருந்து புறப்பட்ட நொடி முதல் மண்டபத்திற்கு வந்து சேரும் வரை மதியழகனும், தேன்மொழியும் அவளைக் கேலி செய்து கொண்டே இருக்க 

“வேணாம்! ரொம்ப கலாய்க்காதீங்க! அப்புறம் நடக்கப் போற சேதாரங்களுக்கு நான் பொறுப்பெடுக்க முடியாது” என்று பலமுறை அவர்களை கண்டித்தவள் ஒரு நிலைக்கு மேல் பொறுத்து கொள்ள முடியாமல் காரில் இருந்து இறங்கிய அடுத்த நொடியே தேன்மொழியை துரத்தி கொண்டு ஓடத் தொடங்கினாள்.

 

“அய்யோ! அம்மா! குங்ஃபூ பாண்டா விரட்டுதே!” மண்டபமே அதிரும் படி சத்தமிட்ட வண்ணம் தேன்மொழி ஓட

 

“நான் குங்ஃபூ பாண்டான்னா நீ டோராவில் வர்ற மங்கி புச்சிடி! அடியேய்! தேனு! உன்னை இன்னைக்கு நசுக்கு நசுக்குன்னு தூக்கிப் போடல என் பேரு இழை இல்லை டி!” பதிலுக்கு இழையினியும் அவளை விரட்டி கொண்டு ஓடத் தொடங்கினாள்.

 

மண்டபத்தில் குழுமியிருந்த பெரியவர்கள் எல்லோருமே அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டு நிற்க அவர்கள் இருவருமோ அதை எதையும் கவனிக்காமல் விடாமல் ஓடிக் கொண்டே இருந்தனர்.

 

ஒரு கட்டத்தில் தேன்மொழி தன்னால் ஓட முடியாமல் நின்று விட 

“மாட்டினியாடி புச்சி!” சிரித்துக் கொண்டே அவளை நோக்கி ஓடி வந்த இழையினி திடீரென தன் முன்னால் பூக்கள் நிறைந்த தட்டுடன் வந்த நபரைக் கவனியாமல் அவன் மேல் மோதி நிலை தடுமாறிக் கீழே விழுந்தாள்.

 

“அய்யோ! குங்ஃபூ பாண்டா விழுந்துட்டா டோய்! மீ எஸ்கேப் டோய்!” தேன்மொழி கை தட்டி சத்தமாக சிரித்துக் கொண்டே கூறிவிட்டு அங்கிருந்து ஓடிச் சென்று விட

 

இழையினியோ மூச்சிறைக்க கோபத்துடன் எழுந்து நின்று

“யோவ்! ஆளு வர்றது தெரியாமல் இப்படி தான் வானத்தை பார்த்தபடி வருவியா? ஆளும், மண்டையும்” கீழே குனிந்து கொட்டிக் கிடந்த மலர்களைத் தட்டில் அள்ளிப் போட்டபடி இருந்த நபரைப் பார்த்து சத்தமிட்டு விட்டு தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையை நோக்கி சென்றாள்.

 

“சே! கையில் சிக்கப் போன அந்த புச்சி எஸ் ஆகிட்டா! எல்லாம் அந்த பூ கொண்டு வந்த ஆளால் வந்தது அந்த ஆளு வேணும்னே வந்து மோதியது போல இருந்ததே! அப்படியா? சேச்சே! இருக்காது அந்த புச்சி தான் வேணும்னு அந்த பக்கம் என்னை வர வைத்து இருப்பா!  இருக்கட்டும் இன்னைக்கு மெஹந்தி போடும் நேரம் அந்த புச்சி சிக்குவா தானே!” அறைக்குள் குறுக்கும், நெடுக்குமாக நடந்த படி வில்லன் போன்ற பாவனையோடு நின்று கொண்டு முடிவெடுத்த இழையினி அதன் பிறகு மருதாணி போடும் சடங்கிற்காக தயாராகத் தொடங்கினாள்.

 

உறவினர்கள், நண்பர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக தன் செல்ல எதிரி தேன்மொழி என பல பெண்கள் படை சூழ இழையினிக்கு மருதாணி போடும் சடங்கு ஆரம்பிக்க விளையாட்டோடும், பலவிதமான கேலிப் பேச்சுக்களோடும் அந்த நாள் இனிமையாக கடந்து சென்றது.

 

அதற்கிடையில் இழையினி தன் எண்ணம் போல் தேன்மொழியைப் பழி வாங்கும் படலத்தையும் சிறப்பாக, கச்சிதமாக முடித்தும் இருந்தாள்.

 

பலவிதமான கனவுகளோடும், ஆசைகளோடும் மனம் எங்கும் கல்யாண கனவுகள் நிறைந்திருக்க இரவு நேரம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு இருந்த இழையினி பொழுது புலரும் நேரமே சிறிது கண்ணயர்ந்தாள்.

 

காலையில் எட்டிலிருந்து பத்து மணிக்குள்ளாக நல்ல முஹூர்த்தம் என்று நேரம் குறிக்கப்பட்டிருக்க அந்த நேரத்திற்குள் ஒருவழியாக அவளை கெஞ்சி கெஞ்சி கலைச்செல்வியும், எழிலரசியும் எழுப்பி தயார் படுத்த தொடங்கினர்.

 

மெரூன் நிறத்தில் தங்க நிற இழைகளினால் நெய்யப்பட்ட ஜரிகையும், அதே தங்க நிறத்தினால் அகலமான பட்டிகளும் பிடிக்கப்பட்டிருந்த சேலையில் இழையினி பெயருக்கு ஏற்றார் போல் தங்கமாக ஜொலித்து கொண்டிருந்தாள்.

 

இதமான ஒப்பனையும், திருமணப் பெண்ணிற்கான அலங்காரங்களும், ஆபரணங்களும் ஒன்று சேர எல்லாவற்றுக்கும் மேலாக அவளது புன்னகையும் அவளை மேலும் மெருகேற்ற தன் மகளைப் பார்த்து திருஷ்டி கழித்து கொண்டார் கலைச்செல்வி.

 

“என் பொண்ணு முகத்தில் இந்த சந்தோஷமும், சிரிப்பும் எப்போதும் நிறைந்து போய் இருக்கணும் நீ இப்போ வேற வீட்டுக்கு வாழப் போகப் போற அங்கே எல்லோரையும் பொறுப்பாக பார்த்து கொள்ளணும் சரியாடா இழைம்மா?” தன் அன்னையின் கலங்கிய கண்களும் அவர் கேட்ட கேள்வியும் அவளையும் அறியாமல் அவளைக் கண் கலங்க செய்ய 

 

“அம்மா!” கேவலோடு அவரை இறுக அணைத்து கொண்டாள்.

 

சுற்றி நின்ற பெண்களும் அவர்களைப் பார்த்து கண் கலங்க தன் கண்களை யாரும் பார்க்காத வண்ணம் துடைத்து கொண்ட தேன்மொழி

“அய்யோ! என்ன இது? நல்லது நடக்கப் போகும் நேரத்தில் ஒரே அழுகாச்சியா இருக்கு? இழை! காலையில் இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டு உனக்கு மேக்கப் பண்ணோம் இப்போ நீ உன் டாமைத் திறந்தா மாப்பிள்ளை பயந்து ஓடிடப் போறாரு க்ளோஸ் தி டேம்” இழையினியின் கண்களைத் துடைத்து விட்டபடியே கூறவும் அவளோ புன்னகையுடன் அவளது கன்னத்தில் தட்டிக் கொடுத்தாள்.

 

“சரி! சரி! வாங்க போகலாம்! அப்புறம் மாப்பிள்ளை பொண்ணைக் காணோம்னு இங்கேயே தாலியோட வந்துடப் போறாரு” அங்கு நின்ற பெண்களில் ஒருவர் சிரித்துக் கொண்டே கூற அங்கிருந்த மற்ற எல்லோரது முகங்களிலும் அந்த புன்னகை வந்து தொற்றிக் கொண்டது.

 

“சரி வாங்க பொண்ணை கூட்டிட்டு போகலாம்” எழிலரசி ஒரு புறமும் கலைச்செல்வி மறுபுறமும் வந்து நின்று இழையினியை அழைத்து செல்ல அவளோ தடதடக்கும் இதயத்துடன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடந்து சென்றாள்.

 

“என்ன இது? பொண்ணு வந்தாச்சு மாப்பிள்ளையை இன்னும் மேடைக்கு வரக் காணோம்?” மண்டபத்தில் குழுமியிருந்த ஒன்றிரண்டு நபர்கள் சலசலக்கும் சத்தம் கேட்டு இழையினி மேடையை நிமிர்ந்து பார்த்தாள்.

 

அய்யர் மாத்திரம் அமர்ந்திருந்து மந்திரங்களை சொல்லிக் கொண்டிருக்க கௌசிக் அமர வேண்டிய இடம் வெறுமையாக இருந்தது.

 

“கலை என்ன இது?” எழிலரசி பதட்டத்துடன் கலைச்செல்வியைப் பார்க்க அவரோ குழப்பமாக சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்டார்.

 

அங்கே மேடையின் முன்னால் அசோகனைத் தவிர்த்து அந்த வீட்டின் ஆண்கள் எல்லோரும் நின்று கொண்டிருந்தனர்.

 

“எழில் நீ இழையை மேடைக்கு அழைச்சுட்டு போ நான் இப்போ வர்றேன்”

 

“அம்மா எங்கே போறீங்க?” இழையினி பதட்டத்துடன் தன் அன்னையின் கையைப் பிடித்துக் கொள்ள

 

கலைச்செல்வியோ

“இழைம்மா! ஒண்ணும் இல்லை டா நீ மேடைக்கு போ அம்மா இப்போ வந்துடுவேன்” புன்னகையுடன் அவளது இல்லைடா அம்மா இப்போ வந்துடுவேன் எழில் நீ இழையினியை மேடைக்கு அழைச்சுட்டு போ!” அவளது கன்னத்தில் தட்டிக் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

 

தன் அன்னை சென்ற வழியையே திரும்பி திரும்பி பார்த்தபடி நடந்து சென்று மேடையில் அமர்ந்து கொண்ட இழையினி கலக்கத்தோடு தன்னை சுற்றி நின்றவர்களை மாறி மாறி பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.

 

நேற்றிலிருந்து சந்தோஷத்துடன் ஆரம்பித்த நிகழ்வுகள் எல்லாம் இப்போது இழையினிக்கு காரணமே இல்லாமல் பாதியில் சந்தோஷத்தை தொலைத்து நிற்பது போல இருந்தது.

 

நேரம் ஆக ஆக பயத்தில் நெஞ்சம் படபடக்க இழையினி

“அத்தை அம்மா எங்கே?” எழிலரசியைப் பார்த்து பயத்தோடு கேட்கவும்

 

“இந்த கல்யாணம் நடக்காது நிறுத்துங்க” என்றவாறே அசோகன் கோபமாக அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது……..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!