TholilSaayaVaa9

9

 

பிள்ளைகளின் வாக்குவாதத்தை ரசித்தவாறே அமைதியாக இருந்த வாணியின் மனதில் ஆயிரம் எண்ணங்கள். உள்ளே  குழப்பமும் வெளியே சிரிப்புமென அமர்ந்திருந்தார்.

 

இரவு முழுவதும் பைரவ் இணையத்தின் வழியே மாயாவிற்கு புது அனிமேஷன் கதாபாத்திரம் உருவாக்க உதவிக்கொண்டிருந்தான். வாணியோ தன் அறையில் உறக்கம் வராமல் தவித்திருந்தார்.

 

கணவரின் புகைப்படத்தை செல்போனில் பார்த்தபடி, ’நான் அவசர பட்டுட்டேன். நம்ம பையனை விரும்பி ஒரு பொண்ணே கேட்கும்போது, அவ  ஆசையா அவனை  பார்த்துப்பான்னு நம்பி நிச்சயம் பண்ணி, இப்போ அவன் கல்யாணமே வேண்டாம்னு சொல்லும்படி செய்துட்டேனே’.

 

அவர் கண்களில் மெல்ல நீர் கசிய, ’மாயாவை கேட்கலாம்னா, அவ என் பெஸ்ட் பிரென்ட் அந்த மாதிரிலாம் யோசிக்காதேன்னு, என்னால அப்படிலாம் அவளை பார்க்க முடியாதுனு தர்க்கம் பண்றான். என்னவோ மாயாவை தவிர வேற யாருமே அவனுக்கு பொருத்தமா இருப்பான்னும் படல . நீங்கதான் தெய்வமா இருந்து எங்களுக்கு வழிகாட்டணும். ப்ளீஸ் விஷ்வா ஹெல்ப் மீ’ 

 

புகைபடத்தில் கனிவுடன் சிரித்துக்கொண்டிருந்த விஸ்வநாதன், ‘நான் பார்த்துக்கொள்கிறேன்!’ என்று சொல்வதுபோல் தோன்றியது வாணிக்கு.

 

பைரவின் அறையில்,

“பார் ஆழாக்கு எவ்ளோ அழகா வந்திருக்கு. நீ தூங்கு மீதியை நான் முடிச்சுவைக்கறேன்”

 

“இல்லப்பா இதெல்லாம் போங்காட்டம். என் வேலை நானே பண்ணர்துதான் நியாயம். நீ தூங்கு இப்போவே மணி 2.30 இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சுடும் அப்புறம் தூக்கமே இருக்காது உனக்கு. தூங்கு போ” மாயா சொல்ல 

 

“அப்போ நீயும் தூங்கு” பைரவ் அடம்பிடிக்க 

 

“ சோதிக்காதடா! நீ CEO மறந்து போச்சா? இதெல்லாம் உன் வேலை இல்ல” அவள் மிரட்ட 

 

“எனக்கு பிடிச்ச வேலை இதான்டா, என் ஆசைக்கு வரைய விடேன்” 

 

“படுத்துறே. சரி ரிமோட் ஆப் பன்னிடு, நான் தூங்கறேன்”

 

ஏனோ அவளை நம்ப தோன்றவில்லை பைரவிற்கு, “மாயா…”

 

“ம்ம்”

 

பதில் தராமல் லேப்டாப்பில் வீடியோ கால் செய்திருந்தான்.

“ஹே என்ன இது ? தூங்கறேன்னு சொல்றேன்ல” மாயா கண்களை கசக்கிக்கொண்டு கேட்க, 

 

“நீ அப்படியே லேப்டாப்பை பக்கத்துல வச்சுக்கிட்டே தூங்கு, நீ துங்கறது கணஃபார்ம் ஆனா அப்புறமா நான் தூங்கிடுவேன்” சாதாரணமாய் அவன் சொல்ல, 

 

“லூசாப்பா நீ? தூங்குமா ப்ளீஸ்”

 

“முடியாது!”

 

“இருட்டுல என்ன தெரியும்?” அவள் கிண்டலாக கேட்க, 

 

“நயிட் லயிட் வெளிச்சத்துலயே நல்ல தெரியுது சோ நீ தூங்கு”

 

சிலநிமிடங்கள் வாதாடி தோற்றவள், “என்னவோ பண்ணிக்கோ” என்றுவிட்டு போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள்.

 

லேப்டாப் கேமரா அவள் முகத்திற்கு எதிரே இருந்ததால், அவள் தூங்குவதையே அமைதியாய் பார்த்திருந்தவன், தன் மற்றொரு லேப்டாப்பையும் கிராபிக் டேப்லெட்டையும் எடுத்து, மாயாவின் வேலையை தொடர்ந்தான். அவ்வப்போது தூங்கி கொண்டிருக்கும் தோழியை பார்த்துக்கொண்டே வேலையை செய்தவன்,

 

அவ்வப்போது மாயாவின் முகத்தை  திரையில் பார்க்கப்பார்க்க தன்னை அறியாமல், காலை பவித்ராவின் வீட்டில் நடந்தவற்றினால் ஏற்பட்ட மன அழுத்தமும் மெல்ல மெல்ல மறந்து, மனம் ஆழ்ந்த அமைதி கொள்வதை உணர்ந்தான். 

 

காலை கண்விழித்தவள், லேப்டாப் திரையை பார்க்க, பைரவ் அவன் தலையணையை கட்டிக்கொண்டு உறங்குவதை பார்த்து,

 

“உன்ன பார்த்தா CEO மாதிரியா இருக்கு, அச்சோ லட்டு குட்டிடா நீ! கியூட் பேபி மாதிரி துங்கறதா பாரேன்” வாய்விட்டு திரையில் தெரிந்தவனை கொஞ்ச, அவன் முகத்தில் மெல்ல புன்னகை படர்ந்தது.

 

திகைத்தவள் உணரும் முன்னே, “காலங்காத்தால பல்லை கூட தேய்க்காம…சைட் அடிக்கிறியே நியாயமா?” அவன் சொல்ல, விழித்தவள், 

 

“டேய் ஃபிராடு! தூங்கலையா நீ?” 

 

“கண் எரியுதேன்னு கண்ணை மூடிட்டு இருந்தேன், நல்லவேளை தூங்கிருந்தா உன் கொஞ்சல் கேட்டு இருக்காது” அவன் கேலிப்புன்னகையில் நெளிந்தவள்,

 

“நான் ரெடி ஆறேன். பாப்போம் பை!’ லேப்டாப்பை மூட போனாள். 

 

“ஹோய்” அவன்  குரலில் நின்றவள். 

 

“என்ன?”

 

“ஃப்யிலை பார்த்து சொல்லிட்டு அப்புறம் டிஸ்கனெக்ட் பண்ணுடா” 

அவன் சொன்ன ஃப்யிலை பார்த்தவள் “பைரவ்!” என்று கண்கள் விரிய, 

 

“எப்படி இருக்கு, ஓகேவா?” பைரவ் புன்னகைக்க, மாயாவின் கண்கள் கலங்கிவிட்டது. 

 

“ஏண்டா! சொன்னேன்ல? தூங்கவே இல்லையா…” அவள் கண்களில் நீர் மெல்ல வழிய, தான் நன்கு உறங்கிவிட, தன்னால் அவன் இரவு முழுவதும் கண்விழித்து சில மாதிரி உருவங்களை நேர்த்தியாக வரைந்திருந்தை கண்டவள் மனம் அடித்துக்கொண்டது.

 

“நீ மட்டும் என் கைல சிக்கு…” அவள் சொல்ல, 

 

“எதுக்கு கடிக்கவா? குத்தவா?” அவன் போலியாய் அஞ்ச, 

 

“சே இல்லை என் பக்கத்துல இருந்திருந்தா ஹக் (கட்டிப்பிடித்து) பண்ணிருப்பேன். தேங்க்ஸ்!”

 

அவள் சொன்னதில் எதோ தோன்ற, “சரி சரி கிளம்பு, உனக்கு எந்த கேரக்டர் பிடிச்சுருக்கோ அத மேல டெவலப் பண்ணி வரைஞ்சு ரெடி பண்ணு பை” அவள் பதிலை கேட்காமல் அழைப்பை துண்டித்தான்.

 

அவள் சொன்னதில் தனக்கு கோவமா, வருத்தமா, சந்தோஷமா புரியவில்லை அவனுக்கு.

 

காலை உணவுடன் மகனுக்காக காத்திருந்த வாணியை அணைத்துக்கொண்டவன், 

“வாணிமா ஒன்னு கேக்கவா?”

 

“ம்ம் என்னடா காலங்கார்த்தால?”

 

மாயா சொன்னதை அன்னையிடம் சொன்னவன், “அவ எதார்த்தமாத்தான் சொன்னா. ஆனா தெரியலை எப்படி எடுத்துக்கணும்னு.”

 

“இதுல உனக்கென்ன குழப்பம்?”

 

“மா! அவ தூங்கறேன்னு நெனச்சு என்ன கொஞ்சரா, கட்டிபிடிச்சுருப்பேனு சொல்றான்றேன், நீ என்னடான்னா” கோவித்துக்கொண்டான்.

 

“டேய் நீ என்ன குழந்தையா? அவ உன் பிரெண்டு தானே நீ நேராவே கேளேன்”

 

“என்னனு? உனக்கு என் மேல ல..” சொல்லமுடியாமல் எதோ தடுக்க, “இல்ல அவ அப்படி நெனைக்க மாட்டா, நான் இப்படி கேட்டாத்தான் வருத்த படுவா” அவனே பதிலும் சொல்லிக்கொண்டான். 

 

“அப்போ எதுக்கு அவளை பொண்ணு பார்க்க வந்தவங்க கிட்ட, ‘என் பைரவ் மாதிரி பாய் பிரென்ட் இருந்தா கல்யாணம் பண்ணிருப்பேன்னு’ சொன்னாளாம்?” வாணி கேட்க, 

 

“அவ மாதிரின்னு தான் சொன்னா, என்ன தன் பாய் பிரென்ட்னு சொல்லலை. நீயும் குழம்பி என்னையும் குழப்பி… பசிக்குது இட்லி போடு சாப்பிட்டு கிளம்புவோம்” பேச்சை மாற்றியவன் மனதில் புதியதொரு குழப்பம் துவங்கியிருந்தது.

 

‘மாயா ஒருவேளை என்னை…?

ச்சே இருக்காது, அவ எதார்த்தமாத்தான் சொல்லியிருப்பா.

அப்படி தெரியலையே!

என் மாயாவை எனக்கு தெரியும்!

 

அவளுக்கே இன்னும் அவ உன்மேல வச்சுருக்க காதல் புரியலையோ என்னவோ!

அவகிட்டவே கேட்கறேன், நீ மூடிட்டு கெளம்பு’

தனக்குள்ளே வாதிட்டுக்கொண்டே காரை ஒட்டிக்கொண்டிருந்த மகனை பார்த்து புன்னகைத்தார் காரில் டேஷுபோர்டில் புகைப்பட பிரேமில் இருந்த விஸ்வநாதன். 

 

பைரவ் வரைந்து கொடுத்த படத்தில் மேலும் மெருகேற்றி கொண்ருந்தாள் மாயா. 

அன்று மதிய உணவு இடைவேளையின் பிறகு வெங்கட்டிடம் அதுவரை முடித்ததை காட்டி அப்டேட் கொடுத்தவள், அதற்கு பைரவ் தான் உதவினான் என்பதையும் சொல்லியிருந்தாள்.

 

“ஒரே நாள்ல அவரால பண்ண முடியும் உன்னால ஒருவாரமா பண்ண முடியல அப்படித்தானே?” வெங்கட் முறைக்க, 

 

“போதும்டா சும்மா எதுக்கு அவளை பொரிச்சுதள்ளறே? உனக்கு வேண்டிய வேலை நடக்குதுதானே?” வினோத் மாயாவிற்கு பரிந்துகொண்டு வர,

 

“நீ இதுல நடுல வராத வினோத்!” 

 

“நானும் பாத்துகிட்டே இருக்கேன் என்ன கோவம் நீ இப்படி இவமேல ஒருவாரமா எரிஞ்சு எரிஞ்சு விழற? மனசுல எதையோ வச்சுக்கிட்டு வெளில வேற எதுவோ சொல்லறே”

 

வெங்கட் எதுவும் சொல்லாமல், மீட்டிங் அறையை விட்டு வெளியேற முற்பட,

 

“நான் சொல்றேன் அவனை எதுவும் கேட்காத” பத்மா சொல்ல பதட்டமாக திரும்பிய வெங்கட், அவளை நோக்கி மறுப்பாக தலை அசைக்க, 

 

“போதும்டா நல்லது பண்ண நெனச்சு நீ கெட்ட பேர் வாங்காத” அவனை அடக்கியவள் 

 

“மாயா உனக்காகத்தான் வெங்கட் எல்லாம் பண்றான்” 

 

“பத்மா ப்ளீஸ், அவ குழந்தை” வெங்கட் பதற, 

 

“போடா!” அவனை அடக்கியவள், 

 

“அந்த அனிமேட்டர் வேதா உன்னைப்பத்தி ஆபீஸ் பூரா புரளி கெளப்புறா. உன் முதல் ப்ராஜெக்ட் ப்ரொடக்க்ஷனுக்கு போக…” தயங்கிவள் தலைகுனிய, 

 

“சொல்லு” மாயா கேட்க, 

 

“வேணாம்டா…” வெங்கட் மறுத்தான். 

 

“இல்லை எனக்கு தெரியணும்” மாயா விடாப்பிடியாய் கேட்க, 

 

“நீ பைரவ்கூட இன்டிமேட் ரிலேஷன் வச்சுருக்கேன்னு… ப்ளீஸ் இதுக்கு மேல கேட்காத” பத்மா கண்கள் கலங்க, மாயா கண்களை மூடி நாற்காலியில் அமர்ந்துவிட,

 

“நேத்தே இதைகேட்டுதான் அழுது தீர்த்த இப்போவும்…” வெங்கட் பத்மாவை சமாதானம் செய்ய, 

 

“கைஸ் நான் வாஷ்ரூம் போயிட்டு வரேன்” விறுவிறுவென வெளியேறிய மாயா, ஒரு டாய்லெட்டிற்குள் சென்று கதவை தாளிட்டு மெளனமாக அமர்ந்துவிட்டாள்.

 

‘ச்சே என்னால பைரவுக்கு இவ்ளோ பெரிய கேட்ட பேரா? அவன் எவ்ளோ கண்ணியமானவன் அவனை போயி இப்படி…” மெல்ல மெல்ல  உடைந்த மனம் கண்ணீராய் வெளியேற சத்தம் வராமல் தேம்பிக்கொண்டிருந்தவள்,

 

‘நீ ஏன் அழனும்? உனக்கு எது உண்மைன்னு தெரியும்தானே? நீ யாரும் எதுவும் ப்ரூவ் பண்ணவேண்டியது இல்லை. போய் வேலைய பார்’ மனம் மறுபடி மறுபடி சொல்ல, முகத்தை அலம்பிக்கொண்டு இருக்கைக்கு திரும்பினாள்.

 

நண்பர்கள் மூவரும் இறுக்கமான முகத்துடன், அமர்ந்திருக்க, மாயா தனக்காக அவர்கள் வருந்துவதை உணர்ந்து.

 

“சாரி காலைல நெறய சாப்டுட்டேன் அதான் வயறு கடாமுடான்னு… இப்போ வயிறு பிரியா இருக்கு. சாப்பிட போலாமா?” புன்னகைக்க,

 

“உட்காரூ” முகத்தில் உணர்ச்சியில்லாமல் வெங்கட் சொல்ல, மெல்ல அமர்ந்தவள்,

 

“யார் என்ன சொன்னாலும் உன்னை பத்தி எங்க மூணு பேருக்கும் தெரியும். இதையெல்லாம் மூட்டைகட்டி வச்சுட்டு, வேலைல கவனம் வை. இந்த டிசைன் அப்ப்ரூவ் ஆகியே தீரணும். இல்லைனா…”

 

“கண்டிப்பா ஆகும்! கண்டிப்பா இந்த முறையும் முதல் டெமோலேயே ஒத்துக்க வைக்கிறேன்” அவள் குரலில் இதுவரை அவர்கள் யாரும் கேட்டிராத தீரமும் உறுதியும்.

 

மறுநொடியே மாயா முகத்தில் பழைய குறும்பு, “இப்படி சோறு போடாம வேலை பண்ண சொன்னா என்னால முடியாது. வண்டி ஓடணும்னா பெட்ரோல் போட்டே ஆகணும்.” தன் வயிற்றை காட்டி சொன்னவள், “பசிக்குது மச்சீஸ்” என்று விழிக்க,

 

“சரி வா, சீக்ரம் கொட்டிக்கிட்டு வந்து வேலையை தொடரனும் புரிஞ்சுதா” என்ற வெங்கட்டின் முகத்தில் மெல்லிய புன்னகை. 

 

வெளியே புன்னகைத்தாலும் உள்ளே எனோ பைரவ் கௌரவம் கெட தான் ஒரு காரணமாக இருக்கக்கூடாதென்று அவள் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.

 

அன்றும் மாயா இரவு வரை வேலையிலேயே கவனமாக இருந்ததால் அவள் கடிகாரத்தை கவனிக்கவே இல்லை.

 

“இதே வேலையா உனக்கு?” கோவமாக வந்த குரலில் நிமிர்ந்தவள் முன் முறைத்துக்கொண்டு நின்றிருந்தான் பைரவ்.

 

“நான் தான் பேசிக் ஸ்கெட்ச் போட்டு கொடுத்தேன்ல? அப்புறமும் இப்படி…” 

 

“இரு இரு இரு…” மாயா அவனை கைகாட்டி அடக்கி, 

 

“அல்மோஸ்ட் முடிச்சுட்டேன் ஒரு 30 நிமிஷம் அப்புறம் நாளைக்கு டெமோக்கு ரெடி. நீயே என்னை ட்ராப் பண்ணிடு அப்போ. மாதவனுக்கு நான் உன்கூட வர்றதா கால் பண்ணி சொல்லிடறேன்” அவள் வரைந்துகொண்டே சொல்ல, 

 

காலையில் அவள் பேசியது நினைவுக்கு வர, என்ன தோன்றியதோ,

 

“இல்ல எனக்கு வேலை இருக்கு, மாதவனை வர சொல்லிடு, வீட்டுக்கு ரீச் ஆனதும் மெசேஜ் பண்ணு. ரொம்ப நேரம் இங்க இருக்காத. பை” அவள் நிமிர்ந்து பார்த்த பொழுது அவன் தூரத்தில் சென்று கொண்டிருந்தான்.

 

‘மாதவன் வேண்டாம் நானே கூட்டிகிட்டு போறேன்னு சொல்லுவான்? இன்னிக்கி எதுக்கு இப்படி? ஒரு வேளை வேதா கிளப்பிவிட்டு புரளி இவனுக்கு…’ 

 

அவள் என்ன ஓட்டமே அவளுக்கு பயத்தை கிளப்ப, யோசனையுடன் வேலையை முடித்தவள், மாதவனை அழைக்க கைபேசியை எடுக்க அது பேட்டரி இன்றி அணைந்திருந்தது. 

 

தானே போய்க்கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஸ்கூட்டியை கிளப்பிக்கொண்டு புறப்பட்டவள் அப்பொழுதும் நேரத்தை பார்க்கவில்லை.

 

சாலையில் போக்குவரத்து வெகுவாய் குறைந்திருக்க, இயந்திரம் போல் வண்டி ஒட்டிக்கொண்டிருந்தவள், திடீரென்று வண்டி நடு ரோட்டில் நின்றுவிட, சுய நினைவிற்கு வந்தாள். 

 

வண்டியை ஓரமாக தள்ளிச்சென்றவள், அருகில் ஏதாவது பி.சி.ஓ இருக்கிறதா என்று தேட, அப்படி எதுவுமே கண்ணில் படவில்லை, 

 

‘அடியே வயதுக்கு பெட்ரோல் போட்டியே வண்டிக்கு போட்டியா? அதான் கோச்சுக்கிட்டு நின்னுபோச்சு’ தன்னை தானே நொந்தவள்,

 

சாலையில் போகும் வாகனத்தை கைகாட்டி நிறுத்தி மொபைல் இருந்தால் கால் செய்ய கேட்க நினைத்தாள், ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதாக மூளை அலாரம் அடிக்க,

 

‘முண்டம் முண்டம் சே நடந்தே போகலாம்னு பார்த்தா குறைஞ்சது முப்பது நாற்பது நிமிஷமாகும். இந்த நேரம் பாத்து ரோட்ல ஒரு ஆட்டோ கூட இல்ல! என்னடா எங்கடா போனீங்க எல்லாரும்”

 

“ஹேய் பாப்பா வண்டி நின்னு போச்சா, நான் வேணா லிப்ட் தரவா?” வெகு அருகில் ஒரு குரல் கேட்க, உடல் விறைத்தவள், திரும்ப கேவலமாக இளித்தபடி ஒருவன் பைக்கை நிறுத்திக் கேட்க,

 

“ஒன்னும் வேண்டாம் ரோட்டை பார்த்து போ, அப்புறம் மேல லிப்ட் ஏறிடப்போற” அவனை முறைத்தாள்.

 

“நான் உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன் பாப்பா” அவன் முகத்தில் எள்ளல்.

 

பதில் ஏதும் தராமல், வண்டியை தள்ளிக்கொண்டு வேகமாக நடந்தாள்.

 

“ஏ பாப்பா…” அவன் அழைத்தபடி பின்தொடர, பொறுமை இழந்தவள்,

 

“அடேய் பாப்பா பீப்பான்னே மண்டைய ஒடைச்சுடுவேன்” மிரட்டியபடி நடக்க,

 

“உஉஉ” ஓசை எழுப்பிக்கொண்டே அவன் கடந்து செல்ல, 

 

“நரி ஊளையிடுது! பக்கி பரதேசி பன்னாடை…” அவள் அவனை முணுமுணுத்தபடி திட்டிக்கொண்டே நடக்க,

 

‘அந்த நரி மறுபடி வந்தா?’ கை கால்களில் மெல்ல நடுக்கமெடுக்க, ‘இப்படி போவோம்’ பிரதான சாலையை விட்டு ஒரு சின்ன தெரிவிற்குள் நுழைந்தாள்.

 

“ஆண்டவா என்னை பத்திரமா வீட்டுக்கு கொண்டுபோய் சேர்த்துடு ப்ளீஸ்” வேண்டிக்கொண்டே நடக்க,

 

ஒருவர் கடையை பூட்டிக்கொண்டிருப்பதை பார்த்தவள், தயங்கி “சார்!” மிக ஈனஸ்வரத்தில் அழைக்க

 

பதறி திரும்பியவர், “என்னமா இப்படி இருட்டுல வந்து, கடை சத்தியாச்சு நாளைக்கு வாங்க” கோவமாக சொல்லிக்கொண்டே, தன் இருசக்கர வாகனத்தில் சாவியை நுழைக்க

 

“சார் என் போன் ஆப் ஆகிப்போச்சு. உங்ககிட்ட போன் இருந்தா ஒரு கால் பண்ணிக்கலாமா?”

 

அவர் கைபேசியை நீட்ட, மாதவனை அழைத்தாள், அவன் கைபேசியோ பிஸியாகவே இருக்க, லேண்ட்லைனும் எடுக்கலை. 

 

‘என்னத்தடா அப்படி பேசுவீங்க எல்லாரும்? ஒரு பொண்ணு வீட்டுக்கு வரலயேன்னு கவலையே இல்ல’ 

 

“சீக்ரம் எனக்கு நேரமாச்சு ராத்திரி 10 மணிக்கு வந்து… ரோதனை!” அவர் அலுத்துக்கொள்ள.

 

“10 மணியா!” அதிர்ந்தவள், “ஒரு நிமிஷம் ப்ளீஸ்…” கெஞ்சியவள், பைரவிற்கு அழைக்க அவன் அழைப்பை ஏற்க வில்லை, கைபேசியை ஏமாற்றத்துடன் திருப்பித்தர அவள் எத்தனிக்க, பைரவ் அந்த மொபைலிற்கு அழைத்தான்.

 

“எஸ்!”

 

“மாயா பேசறேன், நான்…” 

 

“மாயா! எங்க இருக்க? இது யார் நம்பர்?” அவன் பதற, விஷயத்தை சொன்னவள், அந்த கடைக்காரரிடம் கேட்டு விலாசத்தை தெரிவித்தாள்.

 

“அங்கேயே இரு, இதோ வரேன். ஃபோன் கொடுத்தவர் கிட்ட ஃபோன் கொடு” அவன் பதற்றம் குறைய வில்லை.

 

என்ன பேசினான், மாயா அறியவில்லை, 

 

“சரி சார் சீக்கிரம் வந்துடுங்க, என்னால ரொம்ப நேரம் நிக்க முடியாது சுகர் பேஷண்ட் சார். மாத்திரை போடணும்” என்றவர் அழைப்பை துண்டித்தார்.

 

“அவரு வாராறாம், துணைக்கு இருக்க சொன்னார்” அலுத்துக்கொண்டவர், தன் பைக்கில் சாய்ந்து அமர்ந்து கொள்ள,

 

என்ன சொல்வதென தெரியாமல் விழித்தவள், மெளனமாக காத்திருந்தாள்.

 

ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை பைரவின் கார் சீறிப்பாய்ந்து வந்து நின்றது.

 

புயலென இறங்கிவன் அவளை நெருங்க நெருங்க கார் வெளிச்சத்தில் அவன் கண்கள் ரத்தமாய் சிவந்திருப்பதை பார்த்தவள் மனம் பயத்தில் அடித்துக்கொண்டது.

 

‘நானே ஆடிப்போயிருக்கேன், நீ ஏண்டா இப்படி முறைக்கிறே. ஐயோ அறைஞ்சு வச்சுடுவானோ?’ உறைந்து நின்றாள்.

 

“எங்கடி போய் தொலைஞ்ச? விட்டேனா தெரியும்!” கோவமாக கையை ஓங்கியபடி அவளை நெருங்கியவன், அவள் கண்களில் தெரிந்த பயத்தை கண்ட நொடி, கோவத்தை கட்டுப்படுத்திக்கொண்டு,

“கார்ல ஏறு!” கர்ஜித்தான்.

 

மந்திரத்திற்கு கட்டிப்பட்டவள் போல, மறுவார்த்தை பேசாமல் நேராக காரில் ஏறி அமர்ந்தாள்.

 

கடைக்காரனிடம் எதோ பேசிவிட்டு அவள் ஸ்கூட்டியை அங்கேயே ஓரமாக நிறுத்தியவன். அவரிடம் பணத்தை கொடுத்து எதோ சொல்லிவிட்டு, காருக்குள் வந்து அமர்ந்தான்.

 

ஸ்டேரிங் வீலை பற்றி இருந்த அவன் கைகள் நடுங்கி கொண்டிருந்தன.

 

“பைரவ்…” அவள் வாயெடுக்க, 

திடுமென திரும்பியவன் அவளை அமர்ந்தபடியே அணைத்துக்கொண்டான்!

 

இருவரின் இதயத்துடிப்பும் அந்த அமைதியான காருக்குள் சிறிது சத்தமாகவே அவர்களுக்கு கேட்டது, சில நொடியில் சுதாரித்தவன் மெல்ல விலகினான்.

 

“மாதவனுக்கு ஃபோன்…” அவளை பார்க்காமல், மாதவன் செல் பிசிஎன்று வர, கிருஷ்ணனுக்கு கால் செய்தவன், மாயாவை, சிறிது நேரத்தில் வீட்டில் ட்ராப் செய்துவிடுவதாக தெரிவித்தான். 

 

மாயா மெதுவாக, “நான் டைம் பாக்கலை, போன் ஆஃப் அதான்…”

 

“எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? திரும்ப ஆபீஸ் போகவேண்டிது தானே? நீ வண்டி நின்னதா சொன்ன இடத்திலிருந்து ஆபீஸ் பக்கம்தானே, அதுவும் மெயின் ரோடு! ஆமா இந்த சந்துக்குள்ள எதுக்கு நுழைஞ்ச?” அவன் காரை ஒட்டியபடி கேட்க,

 

சாலையில் அவளை சீண்டிய பைக் காரனை பற்றி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, எதிரே அதே பைக் காரன் வருவதை கண்டவள், அவனை காட்டி “அந்த நரிதான்” அவள் சொன்ன மறுநொடியே காரினால், அவனை இடிப்பதை போல பைரவ் காரை திருப்ப,

 

அவனோ பயத்தில் நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் ரோடை தேய்த்துக்கொண்டு விழுந்தான்.

 

“பைரவ்! ஐயோ அவன்” மாயா பதற,

 

“கொல்லாம வெறுமனே தள்ளி விட்டேன்னு சந்தோஷ படு, எனக்கிருக்க கோவத்துக்கு அடிச்சு…” அவன் முகத்தில் இருந்த ரௌத்திரம் அவளை மிரள செய்தது.

 

“பைரவ் அவன் வெறுமனே சீண்டத்தானே… என்னமோ..” 

பைரவின் முறைப்பில் வாயை மூடிக்கொண்டாள். ஆனால் சில நொடிகள்தான்.

 

“வேலை இருக்குனு போனே? இப்போ எப்படி?” அவள் முடிக்கும் முன்பே,

 

“போனேன் ஆனா உன் போன் வரலை, மாதவனும் போன் பண்ணான், நீ என் கூட இருக்கியான்னு கேட்டான்! அப்படியே ஒரு நிமிஷம்…” மௌனமானவன்,

 

“ஆஃபீஸ் செக்யூரிட்டி உன் அக்சஸ் கார்டு என்ட்ரி பார்த்து நீ கிளம்பி 30 நிமிஷம் ஆச்சுன்னு சொன்னான். மாதவனும் உன்னைத்தேடி அலைஞ்சுக்கிட்டு இருக்கான். போ வீட்டுக்கு, இருக்கு உனக்கு!” அவன் மிரட்ட,

 

“ஹலோ! வேணும்னேவா பண்ணேன்? என் நேரம்” கோவமாக திரும்பிக்கொண்டாள்.

 

அவன் பதில் தரவில்லை, தானே அவளை வீட்டில் விட்டிருக்கலாமோ என்ற குற்ற உணர்வு.

 

“பாஸ்…”

 

“…”

 

“பைரவ்…”

 

“என்ன?” அவன் குரலில் எரிச்சல்.

 

“சாரி அண்ட் தேங்க்ஸ்” 

 

ஒருநொடி அவளை பார்த்தவன், மீண்டும் சாலையில் கவனம் வைத்து, “என்னத்துக்கு?” கோவம் குறையவில்லை.

 

“சாரி, உன் பேச்சை கேட்காம தனியா ராத்திரி கிளம்பினதுக்கு. 2 தேங்க்ஸ், 1 என்னை இப்போ கூட்டிட்டு போறியே இதுக்கு, இன்னொன்னு நான் தர நினைச்ச ஹக் நீயே கொடுத்துக்கு”

 

உணர்ச்சிவசப்பட்டு அவளை அணௌத்துக்கொண்டதை நினைத்து தன்னையே கடிந்து கொண்டிருந்தவன் இப்பொழுது முழுவதும் தனக்குள் சுருங்கி, ‘என் மேல தான் தப்பு. ச்சே!”

 

மாயா குற்றம் சாட்டும் குரலில் “உன் மேலதான் தப்பு!” என்றதும் திடுக்கிட்டு திரும்பியவன், “நான்…வேணும்னே..”

 

“விடு இனிமே நேரமானா நீதான் என்னை டிராப் பண்ணனும். எனக்கு பல்ப் கொடுத்துட்டு போனால?  அதான் நல்லா சுத்திருக்கே, இன்…” அவள் பேசிக்கொண்டே போக, அவன் காதில் எதுவும் விழவில்லை.

 

‘அவ கட்டிப்பிடிப்பேன்னு சொன்னதே தப்புன்னா அவளை நீ கட்டிபிடிச்சது சரியா? உனக்கொரு நியாயம் அவளுக்கு ஒரு நியாயமா? 

 

‘நான் பிரெண்ட்லியா தான் , அதுவும் பதட்டத்துல…’

 

‘அவளும் பாசத்துல தான் சொன்னா, அதுக்கு காதல் கத்திரிக்காய்னு பேரை வச்சு அவளை இன்னிக்கி பூரா அவாய்ட் பண்ணி, யு ஆர் செல்ஃபிஷ்! ( நீ ஒரு சுயநலவாதி)’ குற்ற உணர்வு அவனை மௌனமாகியது.

 

“…அதான் இப்படி…” அவன் கவனிக்கிறானா இல்லையா என்பதுகூட உணராமல் பேசிக்கொண்டிருந்த மாயா. அவள் வீட்டின் வாயிலில் பைரவ் வண்டியை நிறுத்த, 

 

“போச்சு மாதவன் கொலகாண்டுல இருக்கான்” பயத்தை வெளிக்காட்டாது கீழே இறங்கியவள்.

 

“டேய் அது…” அவள் பேசும் முன்னே அவளை நோக்கி வேகமாக ஓடிவந்த மாதவன் அவளை அறைந்திருந்தான்!