உன் இம்சைகளை யாசிக்கிறேன் – 4

images (23)

உன் இம்சைகளை யாசிக்கிறேன் – 4

இம்சைகள் – 4

          அந்தஸ்து கெளரவம் இவற்றையெல்லாம் காரணம் காட்டி தாமரை-சந்திரன் திருமணத்திற்கு சம்மதம் தர பட்டீஸ்வரன் மறுத்து விட்டார்.

தந்தை, தன் தங்கையின் வாழ்க்கையைவிட அந்தஸ்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை குணாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதுவும் அவள் ஒருவனை விரும்புகிறாள் என்பது தெரிந்த பின்பும் எப்படி முடியும்? தன்  நண்பன் தனது தங்கையின் கணவன் ஆவதில் அவருக்கு பூரண திருப்தி.

காதலை எதிர்ப்பது பெற்றவர்கள் இயல்பு. அதற்காக அமைதி காக்க முடியுமா? ஒரு ஆவேசத்தில் தன் தந்தையை எதிர்த்து பேசத் துணிந்தார் குணா.

“அந்தஸ்து கெளரவம் பார்த்து நீங்க கண்டுபிடிச்ச மாப்பிள்ளையோட அருமைய தான் இப்போ பார்த்தோமேப்பா. தாமரையோட சந்தோஷம் தான் இப்பாே முக்கியம் அப்பா. அவ சந்திரனை விரும்புறா, அதை ஊருக்கு முன்னாடி சொல்லிட்டா. அவளுக்கு இனி வேற மாப்பிள்ளை பார்க்குறது அவ வாழ்க்கைய கெடுக்குறது பாேல ஆகிடாதா?

‘அவங்க ரெண்டு பேருக்கும் இந்த மேடைலயே கல்யாணம் செய்துடுவோமே… அது தான் நமக்கு மறியாதை. எதிர்த்துப் பேசினதுக்கு மன்னிச்சுருங்கப்பா.” எனத் தலை குனிந்தார் குணா.

தன் மகன் தன்னை எதிர்த்துப் பேசியது பட்டீஸ்வரனுக்குப் புதிது என்றாலும், பேச்சில் இருந்த உண்மை அவருக்குப் புரிந்தது.

ஆயினும், தன் அந்தஸ்தில் இருந்து அவரால் இறங்கி வர இயலவில்லை. தன் மகள் செல்வ நிலையில் தாழ்வதையும் ஏற்க முடியவில்லை.

சற்று நேரம் யோசித்தவர், “சரி .. என் மகளை உன் நண்பனுக்கு கல்யாணம் முடிந்து கொடுக்க  சம்மதம். ஆனா ஒரு நிபந்தனை… ” என இடைவெளி விட்டார்.

சம்மதம் கிடைத்துவிட்டது, நிபந்தனை எதுவாயினும் சமாளிக்கலாமே என மகிழ்ந்த நேரம்,

“கல்யாணத்துக்கு பிறகு சந்திரன் வீட்டோடு மாப்பிள்ளையா வரணும்”

எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செக் வைத்துவிட்டார் பட்டீஸ்வரன்.

‘தன் நண்பனுக்கு சாதாரணமாகவே ரோஷம் வரும். இந்த நிபந்தனைக்கு அவன் உடன்பட வேண்டுமே’ எனத் தவித்தது குணாவின் மனம். தாமரையும் தவிப்புடன் நின்றாள்.

சந்திரனுக்கு இது அந்த நாளின் இரண்டாவது அதிர்ச்சி. இப்போது முடிவு அவர் கையில். என்ன செய்வது… என்ன சொல்வது எனத் தெரியாமல் குழம்பி நின்றார்.

ஊரே சந்திரனைப் பார்க்க, சந்திரனின் கண்கள் தாமரையை நோக்கியது.

தாமரையின் கண்கள் என்ன சொன்னதோ …!!

“எனக்கு சம்மதம்” என்றார் தாமரையையே பார்த்தபடி.

தாமரையின் முகத்தில் தெரிந்த ஆனந்தத்தில் அவர் மனம் நிறைவது போல் இருந்தது.

இதற்கிடையில், ராஜபாண்டியைப் பற்றி முன்பே அறிந்த அவனது பெற்றவர்களால், தாமரை-ராஜபாண்டி திருமணம் வேண்டாம் எனும் போது எதுவும் சொல்ல முடியவில்லை.

தங்கள் மகளான தமிழ்செல்விக்கு இதைவிட ஒரு நல்வாழ்க்கை அமையாது என்று கருதியதால், குணா-தமிழ் திருமணம் மட்டும் நடப்பதற்கும் சம்மதித்தனர்.

ஆக, அண்ணன் தங்கை இருவர் திருமணமும் அவர்கள் மனம் போல் அமைய, ஓரே மேடையில் இருவரது வாழ்க்கைப் பயணமும் இனிதே துவங்கியது.

” யியேயேயே…..” என்று கத்தி விசிலடித்தாள் பரி.

“ஹீராே ஹீரோயின்ஸ் எல்லாம் கிளைமாக்ஸ்ல சேர்ந்துட்டாங்க… சூப்பர்ப் லவ் ஸ்டோரி மா…”எனத் தாமரையைக் கட்டிக்கொண்டாள்.

இதற்கு சின்னதாய் ஒரு புன்னகையை மட்டும் பதிலாய் தந்தாள் தாமரை.

“சினிமாவுல எல்லாம் கல்யாணம் முடியும் போது சுபம்னு பாேட்டுடுறாங்க டா. ஆனா உண்மையிலேயே வாழ்க்கைல கஷ்டங்கள் அதன் பின் தான் ஆரம்பிக்குது”

‘அப்படியும் இருக்குமாே’ என்பது போல் பார்த்தாள் பரி.

தாமரை மேலும் தொடர்ந்தாள்.

பெரியஇடத்துத் திருமணங்கள் பெரும்பாலும் பணத்தால் நிர்ணயிக்கப் படும். ஆனால் தன் வாழ்வு தான் விரும்பியவனுடன் அமைய காெடுத்து வைத்திருக்க வேண்டுமே என அகம் மகிழ்ந்திருந்தாள் தாமரை.

ஆனால் சாேதனைகள் அதன் பின்பு தான் வந்தன.  

முதலாவது, பட்டீஸ்வரனால் சந்திரனைத் தன் மருமகனாக முழுமனதுடன் ஏற்க முடியவில்லை.

சாதாரணமாய் இருந்திருந்தால் எப்படியோ? ஆனால் வீட்டாேடு மாப்பிள்ளையாக இருக்கும் ஒரு மானஸ்தனுக்கு இது அதிகப்படி அவமானம் தானே?

தலைகுனிவு ஏற்படும் சமயங்களில் எல்லாம் எதிர்க்க நினைக்கும் பாேது, தாமரையின் கண்களில் தெரியும் காதலே சந்திரனுக்குப் பாெறுமையும் ஆறுதலும் தந்து காெண்டிருந்தன. இதில் ஒவ்வாெரு முறையும் உள்ளுக்குள் துடித்தாள் தாமரை.

சந்திரன் அதிகம் பேசமாட்டார் தான். ஆனால் ‌அவரது எண்ணங்களைத் துள்ளியமாக படித்துவிடுவாள் அவரது மனைவி. அவரது துன்பங்களை அறிந்து கொண்டும் வாலாவிருப்பது அவளுக்கு மிகவும் கடினமாகவே இருந்தது.

இப்படியே வருடங்கள் உருண்டோட, தாமரை-சந்திரன் காதலுக்கு பரிசாக ஆதித்தனும் பரிநேத்ராவும் பிறந்தனர். இதே பாேல் தமிழ்-குணா இருவருக்கும் சஞ்ஜீவனும், மதுமித்ராவும் பிறந்தனர். ஏறத்தாழ ஆதியும் ஜீவாவும் ஒரே வருடத்தில் பிறக்க, பரியும் மதுவும் ஒரே வருடத்தில் பிறந்தனர்.

“ஆன்ட்டி.. வெய்ட் வெய்ட்… குணா அங்கில்க்கு ஒரு பொண்ணா!!! அட்ரா சக்க… மது…. பேரே செமையா இருக்கே…” என்று குஷியானான் சிவா.

அவன் முதுகில் ஒன்று வைத்த ஆதி, “டேய் ரொம்ப பொங்காத. அவ என் மாமாவுடைய பொண்ணு” என்பதில் ‘என்’ ஐ அழுத்திச் சாென்னான்.

“ஹி ஹி… சும்மாண்ணா… பரி பாேல எனக்கு இன்னொரு ஃப்ரெண்டு கிடைச்சுட்டாளேன்னு ஒரு சந்தோஷம். அவ்ளாே தான்” என வெளியில் சமாளித்தவன்,

‘உடனே வந்துருவாங்களே. மாமன் பொண்ண காப்பத்துறதுக்குன்னு.. ம்க்கும்ம்’ என வழக்கம் போல் மைன்ட் வாய்சில் அவனை திட்டிக் கொண்டான்.

அவனைப் பார்த்து வாய் பாெத்திச் சிரித்தாள் பரி.

தாமரை, தன் பிள்ளைகள் குழந்தைகளாய் இருந்த பாேது நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள். தங்கள் குழந்தை பருவ கதைகளைக் கேட்பதில் பரிக்கும் ஆதிக்கும் அவ்வளவு ஆர்வம்.

“இப்படி தான், குழந்தையா இருக்கும் போதே ஆதி மது மேல அவ்ளோ உரிமையா இருப்பான். பரியையும் மதுவையும் முக்கால்வாசி நேரம் பார்த்துக்கிட்டதே ஆதி தான். மதுவும் இவன் கிட்ட தான் அதிகம் ஒட்டுவா. ஆனா பரியும் ஜீவாவும் எலியும் பூனையுமா இருப்பாங்க.

‘அந்த ஊர்ப்பக்கம் எல்லாம் குழந்தைகளுக்கு சாமி பேருன்னு ஒன்னு வைப்பாங்க. குழந்தை பிறந்தவுடன் முதல் முறை குலசாமி கோயிலுக்கு கொண்டு போறப்போ… குழந்தையை சாமி பாதத்துல வச்சு… பெரிய பூசாரி ஒரு பேரு வைப்பாரு.  பரிக்கு வச்ச சாமி பேரு பரிமேலழகி. மதுவாேட பேரு மதுரமாதேவி.

‘அப்போ ஆதிக்கும் ஜீவாவுக்கும் ஒரு அஞ்சு வயசு இருக்கும். பரிக்கும் மதுவுக்கும் இரண்டரை இல்ல மூணு வயசு இருக்கும்.

‘பரிமேலழகினு கூப்பிட்டா பரிக்கு அந்த வயசுலயே பயங்கரமா கோபம் வரும்… கண்டதையும் எடுத்துப்போட்டு உடைப்பா. காலை உதைச்சுட்டு அழுவா. இவளை அப்படி சொல்லி அழ வச்சு பார்க்கறதுல ஜீவாவுக்கு அப்படி ஒரு சந்தோஷம். எப்பப்பாரு சொல்லி அழவச்சுட்டே இருப்பான். அப்புறம் அவ கிட்ட செமையா அடியும் வாங்குவான். ஆதி தான் நடுவுல வந்து சமாதானப் படுத்துவான். ஆனா சில நேரம் பாசத்த பொழியுரதுல பரியும் ஜீவாவும், ஆதி மதுவுக்கு மேல இருப்பாங்க.”

இதனை சொல்லி முடிக்கும் போது வயிற்றைப் பிடித்து சிரித்துக் கொண்டிருந்தான் சிவா.

“ஹா ஹா ஹா…. பரிமேலழகி…. ஹா ஹா” என பரியைப் பார்த்து பார்த்துச் சிரித்தான்.

“நிறுத்தடா… கண்ணுல தண்ணி வர சிரிக்குற அளவுக்கு இது பெரிய ஜோக் கிடையாது” என பரி கடுப்பாக,

“பரிமேலழகி… ஹா ஹா” அவன் சிரிப்பதை இன்னும் விடவில்லை.

பத்ரகாளியாக அவள் மாறி அருகில் இருந்த தலையணையை எடுத்து அவனது முகத்தில் வைத்து அழுத்தினாள்.

மூச்சுக்கு திணறியவன் “சரி சரி… சிரிக்கல… ” என்று கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினான்.

“ம்ம்.. அது. நீ சாெல்லுமா. அப்புறம் ஏன் நீங்க சென்னை வந்தீங்க?” என்றாள்.

“அதுவாம்மா…” எனும் பாேது தாமரையின் முகத்தில் அந்த நாளைய துன்பம் சாயலாய் தெரிந்தது.

 

இம்சைகள் தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!