உன் காதல் என் தேடல்

உன் காதல் என் தேடல்

தேடல் – 19

 

“இன்று”

 

நந்தன் கட்டிலில் அமர்ந்திருக்க, மதி அவர் எதிரில் சேரில் உட்கார்ந்து, இமைக்கும் நேரம் கூட வீணாக்காமல் ஒருவரை ஒருவர் ஆழமாக, அர்த்தமாக, ஆனந்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 இத்தனை வருட‌ம் தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும், தன் நினைவுகளின் துணைவனிடம் சொல்லித் தன்னை ஆறுதல் படுத்திக் கொண்ட மதி, நந்தனின் கடந்த காலத்தைப் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார். உடலால் பிரிந்திருந்தாலும், இருவரின் மனதிற்கு இடையில்தான் எத்தனை ஒற்றுமை. இப்படி உள்ளம் ஒன்றுபட்ட காதலர்களைக் காலம் ஏன் பிரித்து வைத்தது என்று எண்ணும்போது காலத்தின் மீது கோபப்படாமல் இருப்பது கடினம் தான்.

 

இயற்கை தோன்றிய போதே உருவானது தான் காதல். எப்படி நாம் நம்ம சுயநலத்திற்காக இயற்கையை அதன் தன்மையில் இருந்து மாற்றி அதன் அழகையும், அமைதியையும் ஆழித்தோமோ அது போல இன்று சில பேர் காதலின் உண்மை அர்த்தம் புரியாது, பார்த்தும் ஒருவரின் புறத்தோற்றம் பிடித்து அவர்கள் மீது வரும் ஆசைக்கு பேர் தான் காதல் என்று தப்பாகப் புரிந்து கொண்டு காதலின் உண்மையையும், நேர்மையையும் கெடுக்கின்றார்களே என்று இப்படி ஒரு காதலை, காதலர்களை உலகிற்குத் தந்து காதல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறதோ என்னவோ?

 

தங்களின் கடந்த காலத்தைப் பகிர்ந்த காதல் உள்ளங்களின் கவலையின் எடை குறைந்து இறகு போல் லேசாக, இதழ் மொழி இல்லாது, இமை மொழி தான் அங்குப் பேசியது.

 

“அபி உங்க வீட்ல நம்ம ரெண்டு பேரை பத்தி” என்று மதி இழுக்க, அவர் என்ன கேட்க வருகிறார் என்று புரிந்து கொண்ட நந்தன் இப்போது மதிக்கு உண்மை தெரிவது சரியாக இருக்காது என்று நினைத்து, “இல்ல யாருக்கும் தெரியாது” என்று தலையை இடவலமாக ஆட்ட, மதி நிம்மதிப் பெருமூச்சு விட்டார். “நல்லவேள அபி, உன் ஃபேமிலிக்கு மட்டும் நா யாருன்னு தெரிஞ்சிருந்தா? நிலா இந்த வீட்டு மருமகளா ஒரு நாளும் ஏத்துட்டு இருக்க மாட்டாங்க இல்ல? நீங்க இப்படிக் கல்யாணம் செஞ்சுக்காம இருக்க நா தான் காரணம்னு தெரிஞ்சா, அவங்க அண்ணா வாழ்க்கையைக் கெடுத்தவ பொண்ணு இந்த வீட்டுக்கு வேணாம்னு சொல்லி இருப்பாங்க தானே.? அதோட நிலாக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சுது வேற வினையே வேணாம். நம்ம ரெண்டு பேரோட காதல், உங்க அப்பாவால தான் நம்ம பிரிஞ்சோம்னு அவளுக்குத் தெரிஞ்சிது இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துட்டு இருக்கவே மாட்டா. அதோட உங்க எல்லாரையும் ஒரு வழி பண்ணிட்டு துருவ்வையும் வேணாம்னு சொல்லி இருப்ப. நல்ல வேளை அப்டி எதும் நடக்கல” என்று மதி நிம்மதி கொள்ள, “அடிப்போடி, நீ சொன்னது எல்லாமே நடந்திடுச்சு. அவ உனக்காக துருவ்வ வேணாம்னு சொல்லி அவன் ஒரு பக்கம் அழுது ஒப்பாரி வச்சு. நாங்க நிலாவை கூப்ட்டு பேச கடைசியா அவ யாருன்னு தெரிஞ்சு இங்க ஒரு ரணகளமே நடந்திடுச்சு. ஆனா, ஒன்னு மதி நம்ம அனுபவிச்ச வலியை விட நிலா அனுபவிச்ச வலி தான் அதிகம். பாவம் அவ துருவ்வை உயிருக்கு மேல விரும்பி இருந்தும் முதல்ல உனக்காக, அப்றம் நமக்காக அவனை விட்டு விலக முடிவெடுத்த. அதுவும் எல்லாரும் அவங்க காதலுக்குச் சம்மதிச்சப் பிறகும் அவ உனக்காகத் துருவ்வை தூக்கிப் போட்டா தயாரா இருந்த. தெரிஞ்சே அவ காதலை தொலைக்க ரெடியா இருந்தவளுக்கு மனசு எப்படி வலிச்சிருக்கும்’ என்று நினைத்த நந்தன் கண்கள் கலங்கிவிட்டது.

 

“நீ ஏன் அபி கண் கலங்குறீங்க? அதான் இப்ப ஒரு பிரச்சனையும் இல்லாம கல்யாணம் முடிஞ்சு போச்சே” என்று மலர்ந்து சிரித்த மதி “ஆனா, ஒன்னு அபி இந்தப் பாட்டி சாகும் போது இவகிட்ட என்னத்த சொல்லி தொலச்சிதோ தெரியல. பாட்டி செத்ததில் இருந்து இவ என்னக் கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லி ரொம்ப இம்ச பண்ணா? தினமும் டார்ச்சர் தான். ஒரு நாள் யாழினி அப்பா, அம்மாகிட்ட எனக்கு நல்ல மாப்புள்ள இருந்த பாத்து சொல்லுங்கன்னு சொல்லி இருக்கா. அவங்களும் என்கிட்ட இது பத்தி பேச நா கோவத்துல அவள அடிச்சிட்டேன். ரெண்டு பேருக்கும் செம்ம சண்ட. அதுல இருந்து மேடம் ஒரு வாரம் என்கிட்ட பேசவே இல்ல. அப்றம் திடீர்னு ஒரு நாள் வந்து நீ யாரையாச்சும் லவ் பண்ணி அது ஃபெயில் ஆகிடுச்சாம்மான்னு கேட்டா பாரு, எனக்கு அப்டியே தூக்கிவாரிப் போட்டுடுச்சு அபி. ரெண்டும் கெட்டான் வயசுல இருக்கப் பொண்ணு கிட்ட நா என்னத்த சொல்றது. எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. ஆனா, நிலா சட்டுன்னு என்னைக் கட்டிப் புடிச்சு அழ ஆரம்பிச்சிட்டா. அதுக்கு அப்றம் அவகிட்ட நெறய சேன்ஜஸ். அவளுக்கு நா அம்மாவா இருந்தது போய், அவ எனக்கு அம்மாவா மாறிட்டா அபி.”

 

அபிநந்தனுக்கு நிலாவின் இந்தக் கேள்வியும், அவளின் மாற்றமும் மதியின் டைரியை படித்ததால் வந்தது என்று நன்கு புரிந்தது. ‘உண்மைகயாவே நிலா உனக்கு இன்னொரு அம்மா தான் மதி. உனக்கு மட்டும் இல்ல எனக்கும் தான். நா தொலைச்ச வாழ்க்கையை எனக்குத் தேடிக் கொடுத்த தேவதை மதி நம்ம பொண்ணு’ என்று நந்தன் நிலைவை நினைத்து உள்ளுக்குள் பெருமை கொண்டார் .

 

“ஆமா நீ எப்டி மதி, இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்ச? அதுவும் உடனே, பொண்ணு கேட்டு வந்த அன்னைக்கே நீ ஓகே சொல்லிட்டனு அகல்யா சொன்ன?. நீ துருவ் யாரு என்னனு கூட விசாரிக்கலயே? ஏன் மதி”? என்ற நந்தனைப் பார்த்து “அவ எம் பொண்ணு அபி. ஒரு நாளும் தப்பான ஒன்னை அவ சூஸ் பண்ண மாட்டா” என்ற தன்னவளை நந்தன் கர்வமாக பார்த்தார்.

 

மதியைத் தவிர நந்தனின் மொத்தக் குடும்பமும் அந்த அறையில் இருந்தது.

 

ரம்யா, “இன்னைக்குத் தான் அண்ணா இந்த வீடு நெறஞ்சு இருக்கு. நம்ம வீட்டுக்கு ரெண்டு பொக்கிஷம் வந்திருக்கு. நிலா ஏஞ்ஜல்னா மதி அண்ணி சாமி மாதிரிண்ணா. அவங்க வயித்துல பொறக்காட்டியும் நிலா அவங்களுக்காக தன் காதலயே தூக்கிப் போட்டுட்டா பாரு இதுதான் உண்மையான அன்பு.” 

 

“மதி அண்ணி மட்டும் என்னவாம் நிலாவை எவ்வளவு ஆழமா புரிஞ்சு வச்சிருக்காங்க தெரியுமா? நா பெத்த புள்ள தான் துருவ் இருந்தாலும் சில நேரத்தில் என்னால அவனைப் புரிஞ்சிக்க முடியுறது இல்ல. ஆனா, அண்ணி ஸ்ப்பா…! சான்சே இல்லண்ணா. அன்னைக்கு நாங்க நிலாவை பொண்ணு கேட்டுப் போன அன்னைக்கு அவங்க பேசுன ஒவ்வொரு வார்த்தையும் அவங்க நிலா மேல வச்சிருக்க அன்புக்கு சாட்சி”.

 

“ஆமாண்ணா, அன்னைக்கு நம்ம வீட்ல இருந்து நிலாவை பொண்ணு கேட்டு போனப்போ அவங்களுக்கு நாங்க உன்னோட சிஸ்டர்ஸ்னு தெரியாது. அவங்க எங்க கிட்ட சொன்னது ஒன்னு தான், எம் பொண்ணு காலேஜ் படிக்கும் போது ஒரு நாள்… காலேஜில எனக்கு ஒரு பையனை புடிச்சிருக்கும்மா. நாளைக்கு அவன் உன்னைப் பாக்க நம்ம வீட்டுக்கு வரான். நீ அவனைப் பார்த்து பேசிட்டு உன் முடிவை சொல்லுமான்னு சொன்னா. அப்ப நா எதுவும் கேக்கல. மறுநாள் அந்தப் பையன் என்னைப் பாக்க வீட்டுக்கு வரல. அப்பவும் நா எம் பொண்ணுகிட்ட ஒன்னும் கேக்கல. இப்ப வரையும் நா அவகிட்ட ஏன் அந்தப் பையன் வரலன்னு கேக்கல. ஏன்னா… அதுதான் நா எம் பொண்ணு மேல வச்சிருக்க நம்பிக்கை. தப்பான ஒருத்தனை எம் மக கண்டிப்பா காதலிச்சிருக்க மாட்டா. அவனுக்காகக் காத்திருக்கவும் மாட்டா. அந்தப் பையனுக்கு அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி என்னையும் நிலாவையும் வந்து பாக்க முடியாதபடி ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கலாம். அதனால்தான் அவன் வரல. கண்டிப்பா ஒரு நாள் அவன் வருவான்னு எம் பொண்ணு காத்திருக்கா! நானும் தான் என்றவர், நீங்க பொண்ணு கேட்டு வர விஷயத்தை நிலா கிட்ட சொல்லி இருந்த அவ இப்ப நா சொன்னத சொல்லி உங்கள வரவேணாம்னு தான் சொல்லி இருப்ப” என்று உறுதியாகச் சொல்ல.

 

“நிலாக்கு நாங்க அவளைப் பொண்ணு கேட்டு வரோம்னு தெரியுங்க” என்று ரம்யா சொல்ல, மதி திரும்பி நிலாவைப் பார்க்க, நிலா ஆமாம் என்று தலையாட்ட, மதி இழுத்து மூச்சு விட்டவர்… துருவ்வைப் பார்த்து “ஆனாலும் நீ ரெண்டு வருஷம் எம் பொண்ணைத் தவிக்க விட்டிருக்கக் கூடாதுப்பா” என்று மென்மையாகச் சிரிக்க அனைவரும் அதிர்ச்சி. “உங்களுக்கு எப்டி அந்தப் பையன் துருவ் தான்னு தெரிஞ்சுது. நாங்க இப்ப வரை அதைச் சொல்லலயே. நிலா கூட உங்ககிட்ட சொல்லலன்னு தானே சொன்னா” என்று ரம்யா வியப்பாகக் கேட்ட.

 

மதி மீண்டும் சிரித்தவர், “சிம்பிள் நீங்க பொண்ணு கேட்டு வரீங்கன்னு தெரிஞ்சு அவ சும்மா இருக்கானா, பொண்ணு கேட்டு வந்திருக்கிறது அவ இத்தனை நாள் யாருக்காகக் காத்திருந்தாளோ அவனா தான இருக்க முடியும்” என்று சொல்ல நிலா “அம்மா” என்று கத்தியவள் மதியைத் தாவி அணைத்துக் கொண்டாள்.

 

துருவ் மதி காலில் விழந்து வணங்கியவன் “நீங்க சொன்னது சரிதான் அத்த. நிலா காதலிச்சது என்னைத் தான்” என்றவன் அன்று மதியைப் பார்க்க வரும் போது தனக்கு விபத்து நடந்ததையும் அதற்குப் பிறகு நடந்ததையும் தெளிவாகச் சொல்ல மதிநிலா முகத்தில் நிம்மதி பரவியது. “எனக்கு இந்தக் கல்யாணத்தில் முழுச் சம்மதம்” என்று மதி மனம் நிறைந்து சொல்ல.

 

“அது எப்டிங்க என் பையன் பக்கம் இருக்க உண்மை தெரியாமயே அவன் மேல இவ்வளவு நம்பிக்கை. ஒருவேள இவன் தப்பானவனா இருந்திருந்தா நிலா லைஃப் வீணா போயிருக்குமேங்க” என்று அகல்யாவைப் பார்த்துச் சிரித்த மதி “அவ எம் பொண்ணு” என்று கர்வமாகச் சொல்ல அந்த ஒரு வார்த்தை நிலா மேல் அவருக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையைச் சொல்லிவிட்டது.

 

கல்யாணம் முடிந்து முழுதாக ஒரு நாள் முடிந்து விட்டது. துருவ் திருட்டுத்தனமாக சொந்த பொண்டாட்டியை சைட் அடித்துக் கொண்டிருக்க, கார்த்திக் யாழினியைப் பார்த்தபடி சோககீதம் பாடிக் கொண்டிருந்தான். “உனக்காக வாழ நெனைக்குறேன்” என்று கார்த்திக் பாட, “நீ இங்கன வாடி, உன்னைத் தூக்கிப் போட்டு நா மிதிக்கிறேன்” என்று யாழினி பதில் பாட்டுப் பாட நிலாவும், துருவ்வும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

 

“டேய் அண்ணா, இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன் ஆமா. நீ என் நிலா டார்லிங்கை காதலிச்சு இப்ப கல்யாணமும் பண்ணிக்கிட்ட. அது மாதிரி நானும் காதல், கல்யாணம்னு டெவலப் ஆக வேணாமா? கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா. நிலா டார்லிங் நீயாச்சு இந்த யாழ் பிசாசு கிட்ட என்னைக் கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ணு” என்று கெஞ்ச, 

 

“அடி செருப்பால, நானே எம் பொண்டாட்டியா டார்லிங்னு கூப்பிட்டது இல்ல. நீ என்னன்னா டார்லிங் டார்லிங் சொல்லிட்டு இருக்க, கொன்னுடுவேன். ஒழுங்கா அண்ணின்னு கூப்புடுடா” என்று துருவ் கார்த்திக்கை மிரட்ட.

 

“முடியாது போடா, அவ உனக்குப் பொண்டாட்டி ஆகுறதுக்கு முன்னையே எனக்கு டார்லிங் ஆகிட்டா. நா அப்டி தான் கூப்புடுவேன். அதோட அவ எம் தாய்மாமன் பொண்ணு எனக்குப் புஃல் ரைட்ஸ் இருக்கு. என்ன நிலா டார்லிங்”? என்று நிலாவைத் துணைக்கு அழைக்க அவளும் “ஆமா ஆமா” என்று மண்டையை ஆட்ட கடுப்பான துருவ் ‘இருடி உன்னை அப்றம் கவனிச்சுக்குறேன்” என்று நிலாவை செல்லமாக முறைத்தவன் “யாழினி இவன் எக்ஸ் கேர்ள்ப்ரண்ட் குலசாமி பூமரத்து பிச்சாத்தா பத்தி நீ ஏதோ கார்த்திக் கிட்ட கேக்கணும்னு சொன்னயே அது என்னன்னு கேட்டயா?” என்று கார்த்திக்கை வசமாக மாட்டிவிட, 

 

கார்த்திக் “ஏன்டா? ஏன்?” என்று துருவ்வை முறைத்தவன் யாழினி கையில் கிரிக்கெட் பேட்டை எடுப்பதைப் பார்த்து தாவிக் குதித்து எகிறி ஓட, யாழினி அவனைப் பிடிக்க ஓட, அவள் சண்டை போட்டு, கார்த்திக் மண்டை உடைந்து ஒருவழியாக அவர்களின் காதல் யுத்தம் கன்னத்து முத்தத்தில் முடிவடைந்து.

 

 துருவ், “நீ வாடி” என்று நிலா கையைப் பிடித்து இழுத்தவன் “அவன் சொல்றதுக்கெல்லாம் மண்டயா ஆட்ற நீ.. உன்னஆஆஆஆ” என்று அவளை அணைத்தவன் ஒரு ரொமாண்டிக் கிஸ்சை முழுதாக முடித்து விட்டு தான் அவளை விட்டான்.

 

சிறுசுகள் தங்கள் காதலில் பிசியாக இருந்தாலும், பெருசுகள் காதலை கல்யாணத்தில் கொண்டு சேர்ப்பதற்கான‌ வேலைகளையும் தீயாகச் செய்தனர்.

 

ஒரு ப்ராஜெக்ட் வேலையில் அபிநந்தனுக்கு உதவி தேவைப்படுவதாக துருவ் ஒரு பொய்யை சொல்ல, நிலா “எங்கம்மா கூட ஆர்க்கிடெக்ட் தான். அவங்க அப்பாக்கு ஹெல்ப் பண்ணுவாங்க” என்று மதியை நந்தனோடு கோர்த்து விட மதியும் வேறு வழி இல்லாமல் அதற்கு ஒத்துக் கொண்டார்.

 

“அப்பா இனி எல்லாம் உங்க கையில தான் இருக்கு. அம்மாவை மடங்கி எப்டியாது கல்யாணத்துக்கு ஓகே வாங்கிடுங்கப்பா. இது தான் கடைசி சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க அப்றம் வருத்தப்படுவீங்க.”

 

“டோன்ட் வொரி டா மகளே. நீ என்னை நந்தனா தானே பாத்திருக்க. மதியோட அபியா பார்த்ததில்லயே. இனிமே பாப்ப” என்றவர் தன் கூலர்ஸை சர்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து ஸ்டைலாக அதைக் கையில் சுற்றிக் கொண்டே போக நிலாவும் மற்றவரும் வாய்பிளந்து நின்றனர்.

 

ப்ராஜெக்ட் என்ற சாக்கில் நந்தன் மதியை எப்போதும் தன் அருகிலேயே வைத்துக் கொண்டார். நந்தன் தன் ஒவ்வொரு அசைவிலும் தன் காதலை வெளிப்படுத்த மதிக்கு அது நன்றாகப் புரிந்தது. ஆனால், அதை ஏற்றுக் கொள்ளத் தான் முடியவில்லை. இன்றும் மதி நந்தனை உயிருக்கு உயிராக விரும்புகிறார் தான். ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்லத் தான் அவரால் முடியவில்லை. அது அவரின் தவறு இல்லை. நாம் வாழும் இந்தச் சமுகத்தின் தவறு. மனைவியை இழந்த ஒரு ஆண் எந்த வயதிலும், ஏன் பிள்ளைகள், பேரன், பேத்தி எடுத்திருந்தாலும் அவனுக்குக் கடைசிக் காலத்தில் ஒரு துணை தேவை. அதற்காக அவன் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவன்‌ செயலை நியாயப்படுத்தும் இந்தச் சமுகம், அதையே ஒரு பெண் செய்தால், “இந்த வயசுல இவளுக்குப் புதுப் புருஷன் கேக்குது பாரு” என்ற அசிங்கமான வார்த்தைகளைத் தான் கொடுக்கிறது. பொதுவாக உடல் அளவில் பலமான ஒரு ஆணுக்கே மென்மையான ஒரு பெண்‌ணின் துணை தேவை இருக்கிறதெனில், இயல்பிலேயே மென்மையான குணம் கொண்ட ஒரு பெண்ணிற்கு ஒரு ஆணின் துணை தேவைப்படுவதில் என்ன தவறிருக்கு முடியும்? ஒரு செயலை ஒரு பெண் செய்வது தவறென்றால் அதை ஒரு ஆண் செய்தாலும் தவறு தான். ஒரு விஷயத்தை ஆண் செய்வது சரி என்றால் அதை ஒரு பெண் செய்வதில் தவறில்லையே. நல்லது கெட்டது என்பது நடக்கும் செயலினால் ஏற்படப்போகும் விளைவுகளைப் பொறுத்ததே தவிர அதைச் செய்தது ஆணா? பெண்ணா? என்பதை வைத்து இல்லை. ஆனால், இந்த உண்மை இன்னும் இங்கு சிலருக்குப் புரியவில்லை என்பது தான் கவலைக்குறிய விஷயம்.

 

தான் தனியாக தவிக்கும் போது துணையாக வராத சமுகத்தை எண்ணி தனக்கு வழித்துணையாக, வாழ்க்கைத் துணையாக கை கோர்க்க, தன் கரம் வேண்டி நிற்கும் தன்னவனைத் தன்னை விட்டு தள்ளி வைத்தார் மதிநிலா. அதெப்படி, மதி நினைத்தால் விதி விலகிடுமா? மதிநிலா ஒரு அடி அபியை விட்டு தள்ளிச் சென்றால், நந்தன் மதியை நோக்கி பத்தடி முன்னேறிச் சென்றார். மூன்று மாதங்கள் இருவருக்கும் இடையே இப்படியே கண்ணாமூச்சி ஆட்டம் நடக்க, இருவருமே கண்ணைக் கட்டிக் கொண்டு ஆடும் இந்த ஆட்டத்தில் யாரிடம் யார் தோற்கப் போகிறார்களோ?

 

இதில் எழுதும் என் விருப்பம் மதியும், தோற்கக் கூடாது. அபியும் தோற்கக் கூடாது. இருவரும் திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்து அவர்கள் காதலில் ஜெயிக்க வேண்டும் என்பது தான். இதில் உங்களின் விருப்பம் என்ன..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!