உயிரின் ஒலி(ளி)யே 11

உயிரின் ஒலி(ளி)யே 11

எங்கோ கடலில் நகரும் நிலத்தட்டு இங்கே அருகில் இருக்கும் நிலத்தில் அதிர்வலைகளை உண்டாக்கும்.

அப்படி தான் ஆதினியும், விமலின் வாழ்க்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வைத்திருந்தாள்.

‘என்ன சொல்ல வந்தான்’ என்பதை கூட கேட்காமல் இப்படி விமலின் மீது பழி சுமத்திவிட்டாளே!

எண்ண எண்ண அதிதிக்குள் ஆற்றாமை பெருகியது.

பேருந்து சம்பவத்திற்கு பிறகு ஆதினி சிறிதளவேனும் மாறியிருப்பாள் என்று நம்பியவளின் எண்ணத்தில் பெரும் அடி.

இவள் மாற மாட்டாள்… மாறவே மாட்டாள்!

இயலாமையோடு நினைத்தவள் அதன் பின்பு ஆதினியிடம் முகம் கொடுத்தே பேசவில்லை.

பழகி கொஞ்ச நாட்கள் தான் ஆகியிருந்தாலும் மனதிற்கு நெருக்கமாய் மாறிப் போன அதிதி இன்று முகத்தை தூக்கி வைத்து கொண்டிருப்பது ஆதினிக்கு நெருடலாய் இருந்தது.

கணினியே கதியென கிடந்த அதிதியின் முன்பு வந்து நின்று ஏக்கமாக பார்த்தாள். ஆனால் அதிதியிடம் அசைவு இல்லை.

“இன்னைக்கு ரொம்ப புழுக்கமா இருக்கு இல்லை” சம்பிரதாய கேள்விகள் வைத்து பேச்சை துவக்க முற்பட்டாள்.

அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்காத அதிதி, தொலைப்பேசி ரீசிவரை கையில் எடுத்து “செக்யூரிட்டி, கொஞ்சம் ஏசி டெம்ப்ரேச்சர் இன்க்ரீஸ் பண்ணுங்க” என்று வேகமாய் சொல்லிவிட்டு மீண்டும் வேலை செய்வதில் கவனமானாள்.

ஆதினிக்கு அதிதியின் பாராமுகம் என்னவோ போல் இருந்தது.

“லைட்டா காஃபி குடிச்சுட்டு வந்து வொர்க் ஸ்டார்ட் பண்ணலாமா?” ஆதினியின் கேள்விக்கு வெளியிலிருந்த காஃபி வெண்டிங் மெஷினை சுட்டி காட்டிவிட்டு திரும்பி கொண்டாள்.

தன் இந்த முயற்சியும் முறியடிக்கப்பட்டுவிட்டதை உணர்ந்த ஆதினி சோகத்தில் சுருங்கி போன தன் முகத்தில் புன்னகையை பூசி கொண்டு நிமிர்ந்தாள்.

“அதிதி, ஆதினி ரெண்டு பேரோட பேரும் ஒரே மாதிரி இருக்கு இல்லை. உங்க நேரை தீதி என் பேரை ஆதி னும் வெச்சுக்கலாமா? மீண்டும் ஆதினி பேச்சை வளர்க்க முற்பட அதிதி நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள்.

அந்த பார்வை! குற்ற அம்புகளை வீசும் வில்லாய்…

மௌனியான ஆதினி சோகமாய் சென்று தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

இங்கோ எதிரும் புதிருமாய் ராஜ்ஜும் விமலும்.

அவர்கள் இருவருக்கு இடையில் நின்று தாடையை சொறிந்து கொண்டிருந்தான் விக்ரம்.

“இவர் கீழே என்னாலே வொர்க் பண்ண முடியாது விக்ரம், நான் உங்க டீம்லே ஜாயின் பண்ணிக்கிறான்” முடிவாக உரைத்த விமலை, முறைத்த ராஜ் வேகமாக தட்டச்சு செய்து விக்ரமை நோக்கி நீட்டினான்.

“பட் விமல் உங்க ப்ரொஃபைல் டெவலப்பருக்கானது… எப்படி டெஸ்டரா வொர்க் பண்ணுவீங்க?” ராஜ் கேட்ட கேள்வியை விக்ரம் அப்படியே மொழி பெயர்த்தான்.

“எப்படியோ வொர்க் பண்றேங்க. ஆனால் இவருக்கு கீழே மட்டும் என்னாலே வொர்க் பண்ண முடியாது. அது உறுதி” என்றவனை பார்த்து ராஜ் ஒரு கேலி சிரிப்பு சிரித்தான்.

அது விமலை கீறியது.

“சோ நீ பயந்து பின்வாங்குற?” ராஜ் சொன்னதை விக்ரமின் உதடுகள் பிரதிபலிக்கவும் விமல் வேகமாய் நிமிர்ந்தான்.

“நோ… நேருக்கு நேரா எதிர்க்க போறேன்.
ஒரு டெவலப்பரை சாய்க்க டெஸ்ராலே தான் முடியும். உங்களை சாய்ச்சு காட்டுறேன்” என்றவனைப் பார்த்து ராஜ் ஒரு சிரிப்பு சிரித்தான்.

அந்த சிரிப்பு உன்னால் வெல்ல முடியாது என்பதை சொல்லாமல் சொல்லி காட்டியது.

“முடியும் ராஜ். நான் உன்னை ஜெயிச்சு காட்டுறேன்” என்று கத்திவிட்டு சென்றவனை கண்டு நெற்றியில் அடித்து கொண்டு தன் வேலையை தொடர்ந்தான் கார்த்திக் ராஜ்.

💐💐💐💐💐💐

நேரம் ஆறரை!

ஆதினி தயக்கமாக எழுந்து அதிதி பக்கத்தில் வந்து நின்றாள்.

“டைம் ஆச்சு ரெண்டு பேரும் கிளம்பலாமா?” என்றவளின் கேள்விக்கு அதிதி தன் கைப்பையை எடுத்து கொண்டு அசட்டையாக எழுந்து நின்றாள்.

“ஏன் என்னை கூப்பிடுறீங்க ஆதினி? உங்க பாடிகார்டை கூப்பிடுங்க. நீங்க கை காட்டுற எல்லாரையும் அடிச்சு மூஞ்சு உடைக்க அவர் தான் சரியா இருப்பார்” கோபமாக வெடித்தபடியே அறை கதவை திறக்க எதிரே கார்த்திக்ராஜ் கை கட்டியபடி நின்று கொண்டிருந்தான்.

அவள் அவனைப் பார்த்து கழுத்தை வெட்டி கொண்டு முன்னே நடக்க முயல வேகமாய் கைப் பற்றி நிறுத்தினான்.

“இன்னைக்கு எல்லாரும் காரிலே போகலாம். எலெக்ஷன் ரிசல்ட் ஈவினிங் அனௌன்ஸ் பண்ண போறாங்க. அந்த டைம்மிலே பஸ்லே போறது சேஃப் இல்லை” என்றவன் சொல்ல பதில் பேசாமல் அவன் காரை திறந்து உள்ளே சென்று அமர்ந்தாள்.

அவள் அருகே ஆதினி நெருக்கமாய் அமரவும் வேகமாய் சீட்டின் நுனிக்கு செல்ல ராஜ் அவர்கள் இருவருக்குமிடையே நடக்கும் ஊடலை புன்னகையோடு பார்த்தபடியே காரை எடுத்தான்.

“என் கிட்டே பேச மாட்டிங்களா? என் மேலே கோவமா?” ஆதினி ஏக்கமாய் கேட்கவும் அதிதி கோபமாய் திரும்பினாள்.

“விமலோட சேர்ந்து மொத்தம் மூனு பேர் ஆதினி” என்று தொடங்கிய அதிதியை விளங்காமல் பார்த்தாள்.

அவள் புரியாத பாவம் கண்டவள், “உன்னாலே பாதிக்கப்பட்டவங்களோட கவுண்ட் ஆதினி இது. முதலிலே அந்த பாவப்பட்ட பர்ஸ் காரர்… அடுத்து விக்ரம்… இப்போ விமல். இன்னும் அடுத்து எத்தனை பேரை ராஜ் கையாலே அடி வாங்க வைச்சு இந்த க்யூலே சேர்க்க போற?” எரிச்சலாய் கேட்கவும் காரை ஓட்டி கொண்டிருந்த ராஜ் ஓரங்கட்டிவிட்டு திரும்பி அதிதியை முறைத்தான்.

“இங்கே என்ன லுக்கு? என் ஃப்ரெண்டு கிட்டே நான் என்ன வேணாலும் பேசுவேன். நீங்க ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டலாம்” சட்டமாக உரைத்தவளை முறைத்துவிட்டு வேகமாய் காரை எடுத்தான்.

அசுர வேகத்தில் காரை இயக்கியவனை கண்டு எப்போதும் போல இப்போதும் நொடிப்பாய் பார்த்து திரும்பியவளின் பார்வை மீண்டும் ஆதினியின் மீது விழுந்தது.

“ஏன் ஆதினி இப்படி பண்ண? நான் எவ்வளவு பொறுமையா எடுத்து சொன்னேன் பட் நீ கொஞ்சமாவது மாறுனியா? எல்லாமே விழலுக்கு இறைச்ச நீராகிடுச்சு. நோ யூஸ்” ஆற்றாமை ஆறாமல் சொல்ல ஆதினியின்  முகத்தில் தயக்கத்தின் தவிப்பு.

“நோ… நீங்க எனக்கு கொடுத்த தைரியத்தாலே தான் நான் அவ்வளவு பயத்திலேயும் அந்த லிஃப்டை விட்டு இறங்கலே. என்னாலே முடியும்ண்ற நம்பிக்கையோட நின்னேன். பட்…” வார்த்தையை முடிக்காமல் நிறுத்தியவளின் குரல் உடைந்திருந்தது.

“விமல் சொல்ல வந்ததை ஒரு தடவையாவது பொறுமையா கேட்டு இருந்து இருக்கலாம்லே. அப்படி பண்ணியிருந்தா இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்து இருக்காதுலே?” இம்முறை கொஞ்சம் அதிதியின் குரலில் மென்மை.

“நான் விமல் பேசுனதை கேட்க தான் ட்ரை பண்ணேன். ஆனால் என் காதுலே அன்னைக்கு அந்த நாய்ங்க பேசுன வார்த்தை தான் திரும்ப திரும்ப விழுந்தது. அதை கேட்க முடியாமல் தான் காதை மூடிக்கிட்டேன். நடுங்க ஆரம்பிச்ச கையை என்னாலே சரி பண்ண முடியலை” அழுகையோடு சொன்னவளின் கரங்கள் இப்போதும் நடுங்கி கொண்டிருந்தது.

அதுவரை கோப கடலில் தத்தளித்து கொண்டிருந்தவள் ஆதினியின் வார்த்தைகளில் வேகமாய் கரையை அடைந்தாள்.

இத்தனை நாட்களாக உள்ளுக்குள்ளேயே பதுக்கி வைத்திருந்த வேதனைகளை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போலிருந்தது ஆதினிக்கு.

அவளுக்கு சின்னதாய் ஒரு தலை கோதல் தேவைப்பட்டது.

“எல்லாம் சரியாகிடும்டா” என்று அன்பில் நனைந்து வரும் ஒரு வார்த்தை தேவைப்பட்டது.

“உன்னால் உலகை எதிர் கொள்ள முடியும்” என்று தைரியமாய் தோளை தட்டிக் கொடுக்கும் ஒரு கரம் தேவைப்பட அதிதியை நோக்கி திரும்பினாள்.

ஆதினியின் மனம் கடந்து வந்த காலத்தின் கொடிய பக்கங்களை மெல்ல திருப்ப ஆரம்பித்திருந்தது.

💐💐💐💐💐💐💐💐

ஆதினி!

துள்ளி திரியும் மாய மான் அவள்.

கண்களில் எப்போதும் ஒரு துருதுருப்பு.

சீரான உடையும் நேர்த்தியான அலங்காரமும் இதழோர சிரிப்பும் என பேரழகியாக இருந்தாள்.

படிப்பில் சுட்டி…

பழகுவதில் இனியாளாய் இருக்க பெங்களூருவில் இருக்கும் கல்லூரியில் அவளுடைய மூன்று வருட படிப்பு சக்கரையாய் கரைந்தது.

ஆனால் அந்த சர்க்கரை நொடிகளில் காலம் மொத்தமாய் கசப்பை கரைக்க துவங்கியிருந்த தருணமது.

அவள் குடும்பம் சிறு கூடு. அதில் அவளும் தகப்பனும் மட்டுமே இப்போது குடும்ப பறவைகளாய்.

ஆனால் அந்த கூட்டை நிர்வகிக்க முடியாத நிலையில் ஆதினியுடைய தகப்பனின் வேலை பறி போய்விட இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் குடும்பம்.

தந்தைக்கு உதவ முடிவெடுத்தவள் பகுதி நேர வேலையை தேட ஒரு பியூட்டி பார்லரில் வேலைக்கு ஆள் தேவைப்படுகிறார்கள் என்ற செய்தி வந்து விழுந்தது.

ஆதினி நேர்த்தியாக அலங்காரம் செய்வாள். தன் அறை தோழிகளுக்கு புருவ திருத்தம் முதற் கொண்டு பெடிக்யூர் வரை அத்தனை கச்சிதமாக செய்திருந்தவளுக்கு இந்த வேலைக்கு சென்றால் என்ன என்று தோன்ற அந்த விலாசத்திற்கு சென்றாள்.

அந்த கட்டிடத்திற்கு வெளியே  ஆளரவமற்று இருக்க புருவம் முடிச்சிட்டபடி மீண்டும் விலாசத்தை ஒரு முறை சரி பார்த்தாள்.

சரியான இடம் தான்… ஆனால் தவறான சூழ்நிலையாக இருக்கிறதே!

தடுமாற்றத்தோடு உள்ளே செல்ல அங்கே ஆபாச உடையணிந்து கொண்டு வலம் வந்திருந்த பெண்களை பார்த்து தவறாகப்பட்டது.

ஏதோ ஒன்று நெருடலாகபட வந்த வழியே திரும்பி செல்ல முயன்றவளைப் பார்த்து “வேலைக்கு ஆள் அங்கே தான் எடுக்கிறாங்க. இந்த பக்கம் இல்லை” என்று சொல்லியபடி வலுக்கட்டாயமாக அறைக்குள் தள்ளிவிட்டு தாழிட்டாள் ஒரு பெண்.

கிட்டத்தட்ட இரவு பத்து மணி வரை அந்த அறைக்குள்ளேயே அடைப்பட்டிருந்த ஆதினியை சரியாக பத்தரை மணிக்கு வேறொரு அறைக்கு கொண்டு சென்றனர்.

தயக்கத்தோடு உள்ளே நுழைந்தவளுக்கு அப்போது தான் தெளிவாக புரிந்தது அவர்கள் பாலியல் தொழில் செய்வதற்காக ஆள் எடுக்கிறார்கள் என்று.

அருவருப்போடு எழுந்தவள் வேகமாய் அங்கிருந்து ஓடி வந்து லிஃப்ட் பட்டனை அழுத்தினாள்.

அழுத்திய அடுத்த கணமே லிஃப்ட் திறக்க அதிலிருந்த நால்வரின் பார்வை இவளையே மேய்ந்தது. லிஃப்டிற்குள் ஏறாமல் படியில் செல்ல முயன்றவளை நால்வரும் மடக்கி பிடித்தனர்.

“என்ன பாப்பா… இந்த இடத்துக்கு வந்துட்டு அவ்வளவு சீக்கிரமா வெளியே போயிட முடியுமா?” கன்னடத்தில் கேட்டபடி ஒருவன் அவளது இடையை கடூரமாக பற்றியபடி லிப்டிற்குள் ஏற்றினான்.

முகமெங்கும் பயம் படற, “என்னை விட்டுடுங்க அண்ணா” என்றவள் கெஞ்ச, “ஓ நம்ம தமிழ்நாடு ஐட்டமா” என்றனர் தமிழில் வாய் கூசாமல்.

“நல்லா சிக்குனு சிக்கன் கோழி மாதிரி இருக்கியே. உன் சைஸ் அதானே” மற்றொருவன் அவளது கழுத்தை தடவியபடி  கேட்க கம்பளி பூச்சை உதறுவதைப் போல அவன் கைகளை உதறினாள்.

“இந்த சரக்கை ரேட் பேசுறதுக்கு முன்னாடி அனுபவிச்சுடணும்டா” பெண்களை போக பொருளாக மட்டுமே பார்க்கும் அந்த கொடூரனின் வார்த்தைகளை கேட்டு வேகமாய் காதுகளை மூடினாள்.

“முழுசா அனுபவிச்சுட்டா சரக்கு விற்காது. பாதி அனுபவிச்சுட்டு வித்துடலாம்” என்றபடி இன்னொருவன் அவளது பின்பக்கத்தை பலமாக தட்ட அந்த லிஃப்டிற்குள் தன்னை குறுக்கி கொண்டு நின்றாள்.

“எதுக்கு அழற பாப்பா. உனக்கு பிடிச்சா மாதிரி தான் பண்ணுவோம்” என்று ஒருவன் அவளது கன்னத்தை தட்ட காதுகளை இறுக மூடிக் கொண்டாள்.

அதன் பின்பு அவர்கள் பேசிய கொச்சை பேச்சு ஆதினியை கத்தியில்லாமல் இதயத்தில் குத்தியது.

“நோ” என்றவள் கதறி கொண்டிருக்கும் போதே லிஃப்ட் கீழ் தளத்தை நெருங்கியது.

“என்னை விட்டுடுங்கனு நான் அவ்வளவு கெஞ்சியும் அவங்க கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் காருக்குள்ளே என்னை வலுக்கட்டாயமா ஏத்துனாங்க அதிதி… அப்புறமா” முழுவதாய் முடிக்கும் முன்பே ஆதினியின் குரலை கண்ணீர் மேகங்கள் மறைத்தது.

ஜன்னலின் அருகே அமர்ந்திருந்த அதிதி, வேகமாய் நெருங்கி வந்து ஆதினியின் தோளை ஆதரவாய் பற்றி கொண்டாள்.

அவளுக்கு ஆதினியின் துயரம் புரிந்தது. அவள் கண்ணீரிலிருக்கும் வலியின் அடர்த்தி புரிந்தது.

“என்னை…” கதறியபடி அவள் தேம்பிய நேரம், கார் அவள் வாழ்க்கை திசை மாற பார்த்த அந்த பாதையில் சடன் ப்ரேக் போட்டு நின்றது.

“இதோ இந்த இடத்துலே தான் என்னை…” என்று கண்ணாடி ஜன்னல் வழியே பிரிந்து சென்ற ஒரு கிளை சாலையை சுட்டிக் காட்ட அதிதி புருவங்கள் முடிச்சிட நிமிர்ந்தாள்.

கார்த்திக்ராஜ் கலங்கிய கண்களுடன் ட்ரைவர் இருக்கையிலிருந்து எழுந்து வந்து பின் சீட்டில் அழுது கொண்டிருந்த ஆதினியின் தோளை தொடவும் “ராஜ்” என்ற கதறலோடு அவன் மார்புக்குள் கோழி குஞ்சாய் ஒடுங்கினாள் அவள்.

ஆதினியின் கண்ணீர் அவன் மார்புகளை சுட அவன் கண்களில் வருத்த மின்னல்கள் வெட்டியது.

அரணாய் அவளை சுற்றி கைகளை படரவிட்டவனின் நினைவு கடந்த காலத்தின் நதியில் அடித்து செல்லப்பட்டது.

💐💐💐💐💐💐💐💐💐💐

ஒரு வருடம் முன்பு…

சென்னையிலிருந்து மாதம் ஒரு முறை பெங்களூர் அலுவலகத்திற்கு வந்து நிர்வாகத்தை சரி பார்க்கும் வழக்கம் ராஜ்ஜிற்கு இருந்தது.

அன்றும் அதே போல் தன் வேலையை முடித்துவிட்டு அலுவலக காரை எடுத்து கொண்டு கிளம்பும் போது நள்ளிரவை நெருங்கியிருந்தது.

ஆளரவமற்ற சாலையில் அவன் காரை ஓட்டி கொண்டு வர அதிவேகத்தில் மோதும்படி உரசி சென்ற இன்னொரு காரை கண்டு ராஜ்ஜூக்குள் கோபம் கிளர்த்தெழுந்தது.

கோபமாய்  ஆக்ஸிலேட்டரை அழுத்தியவன், அந்த காரை அசுரவேகத்தில் பின்தொடர்ந்து அருகே வந்துவிட,  இப்போது இரண்டு காரும் ஒரே நேர்கோட்டில் பயணித்து கொண்டிருந்தது.

கோபமாய் திரும்பி பார்த்தவனின் பார்வை, அருகில் வந்து கொண்டிருந்த கார் கண்ணாடியை ஏதோ ஒரு கை உள்ளிருந்து தட்டி கொண்டிருப்பதை கண்டு கூர்மையானது.

ஒருவன் ஆவென்று கத்தி அடங்கும் போது ஒரு பெண்ணின் குரல் “ஹெல்ப் மீ” என்று ஆபத்தின் விளிம்பில் கத்தியது.

“டேய் என் கையை கடிச்சுட்டாடா…”

“அவள் வாயை அடைடா” என்று வரிசையாக பேச்சு சப்தம் கேட்க அந்த காருக்குள் ஏதோ தவறாக நடக்கிறது என்பதை ராஜ்ஜினால் புரிந்து கொள்ள முடிந்த நேரம் ஜன்னலை திறந்து கொண்டு ஒரு பெண் “ப்ளீஸ் ஹெல் மீ” என்று கத்தினாள்.

துரிதமான ராஜ், காரின் வேகத்தை இன்னும் கூட்ட, இவன் பின் தொடர்ந்து கொண்டிருப்பதை அறிந்த அந்த கார் நேராக செல்லாமல் சட்டென்று அந்த ஒருவழி சாலையில் திரும்பியது.

ராஜ்ஜூம் விடாமல் அந்த சாலையில் திரும்பி  காரை தொடர முயன்ற போது அசம்பாவிதமாக எதிரில் வந்த வாகனத்தில் மோதி நின்றது இவன் கார்.

ராஜ் கீழே விழுந்து கிடந்த அந்த வாகனத்தை கவனிக்காமல் மேலும் முன்னோக்கி செல்ல முயன்ற நேரம், ஹெல்மெட்டை கழற்றியபடி முகத்தை சிலுப்பி கொண்டு இறங்கினாள் அவள்.

அதிதி!

அக்னி ஜுவாலையாய் அந்த இரவில் மின்னி கொண்டிருந்தது அந்த முகம்.

இரு கையை பறவை போல விரித்து சாலையின் குறுக்கே மறித்து நின்ற அந்த  பெண்ணை கண்டு தலையில் அடித்து கொண்டு இறங்கினான் கார்த்திக்ராஜ்.

“இது ஒன் வே னு தெரியாதா? ஏன் எதிர் திசையிலே இவ்வளவு வேகமா வந்த? நீ கொஞ்சம் கூட ட்ரைவிங் பண்ண இன்னும் கத்துக்கலையா? அவளிடம் கேள்வி அப்பளம் போல படபடவென பொறிந்தது.

அவள் வார்த்தைகளை கண்டு பல்லை கடித்தவன், வேகமாய் தன் பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து அவள் கைகளில் திணித்துவிட்டு காருக்குள் மீண்டும் அவசரமாக ஏற முயன்றான்.

இந்த தாமதத்தினால் அந்த பெண்ணுக்கு ஏதாவது நிகழ்ந்துவிடுமோ என்ற அவசரமும் பரிதவிப்பும் அவன் ஒவ்வொரு செல்களிலும் ததும்பி கொண்டிருந்தது.

இது புரியாத அதிதி, தன் கைகளில் திணிக்கப்பட்ட, பணத்தையே கோபமாய் பார்த்தாள்.

“மிஸ்டர் என்ன இது?” என்றாள் கேள்வியாக.

அதை கண்டு சலிப்பானவன் இன்னும் சில பல ஆயிரங்களை அவள் கையில் திணித்துவிட்டு ‘இது போதுமா’ என்பது போல அவள் முகத்தைப் பார்த்துவிட்டு காருக்குள் ஏற முயன்றான்.

சட்டென ஆத்திரமான அதிதி, தன் கையிலிருந்த பணத்தை அவன் முகத்தில் விட்டெறிந்தாள்.

“ஒழுங்கா ட்ரைவிங் பண்ண தெரியாதா உனக்கு? உன்னோட தப்பான ட்ரைவிங்காலே இழந்த எல்லாத்தையும் பணத்தை கொடுத்து சரி பண்ணிட முடியாது” என்று ஒரு மாதிரி குரலில் சொன்னவள் “இப்படி வண்டியை வெச்சு சர்க்கஸ் காமிக்காம, முதலிலே ஒழுங்கா ட்ரைவிங் க்ளாஸ் போயிட்டு வந்தப்புறம் வண்டியை எடு” என்றவளை வெட்டும் பார்வை பார்த்தான்.

அவசரகதியில் இருக்கும் போது இவளுடைய பிரசங்கத்தை வேறு கேட்க வேண்டுமா?

உள்ளுக்குள் எழுந்த கோபத்தோடு காரை எடுக்க முயன்றான். ஆனால் அதிதி விடவில்லை.

அவள் இடையில் புகுந்து அவனை ஒவ்வொரு முறையும் தடுத்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன் வேகமாய் அவள் கையை தட்டிவிட முனையும் போது தற்செயலாய் அவள் கன்னத்தை பதம் பார்த்திருந்தது இவன் கரம்.

நொடி பொழுதில் நடந்தேறிய அசம்பாவிதத்தை விளக்க முடியாமல் தவித்தபடி சங்கடமாக நிமிர்ந்தவனின் கன்னத்தில் அடுத்த நொடியே இடியென இறங்கியது அதிதியின் கரம்.

அந்த செயலில் ஆத்திரமாய் ராஜ் நிமிர, அதிதியும் ஆத்திரமாய் இவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

தன் கன்னத்தில் பதிந்திருந்த அவளது கைவிரல்களின் அச்சை கோபமாய் தேய்த்தவனின் பார்வை அதிதி மீது அக்னியாக விழுந்தது.

அதிதியை விரல் நீட்டி எச்சரித்தவன் படுவேகமாய் சென்று காரை எடுத்தான்.

அவன் முன்னேறி செல்ல முடியாதபடி அதிதி மீண்டும் கார் இடையே வந்து நிற்க, இம்முறை ராஜ் யோசிக்கவே இல்லை. சட்டென்று காரை விட சாலையில் நின்று கொண்டிருந்த அதிதி பட்டென்று பயந்து விலகினாள்.

தன்னை கடந்து மின்னல் வேகத்தில் பறந்தவனை வார்த்தைகளால் அர்ச்சித்தபடி அவன் விரல்கள் பதிந்த தன் கரத்தை வலியோடு தேய்த்தவாறே அவன் சென்ற திசையையே வெறித்து நின்றாள்.

இங்கோ ராஜ் அந்த கார் எந்த பாதையில் சென்றிருக்கும் என்ற யோசனையோடே வர அந்த கிளை சாலை அருகே வரும் போது தயக்கமாய் தன் காரை நிறுத்தினான்.

ஒரு வேளை இந்த சாலையில் சென்றிருந்தால்?

அவன் கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் அந்த சாலையை ஒட்டியிருந்த மரத்திலிருந்து பறவை கூட்டங்கள் அந்த நள்ளிரவிலும் பறந்து வேறொரு இடத்திற்கு புலம் பெயருவதை அவனால் கண்டு கொள்ள முடிந்தது.

ஆக இங்கு மனித நடமாட்டம் இருக்கின்றது.

யோசனையோடு இறங்கியவன் அந்த ஆளரவமற்ற சாலையில் வேகமாய் நடக்க ஒரு குட்டி புதரின் அருகே ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை கண்டு அவன் புருவங்கள் உயர்ந்தது.

சட்டென்று துரிதமானவன், வேகமாய் அடியெடுத்து வைத்து புதரின் உள்ளே நடக்க அங்கே அந்த பெண்ணை சின்னா பின்னமாக்கி சிதைத்து கொண்டிருந்தனர் நால்வரும்.

கந்தல் ஓவியமாய் கீழே  கிடந்த ஆதினியைப் பார்த்தவனின் நரம்புகள் துடித்தது.

அந்த நால்வரையும் சரமாரியாக தாக்கியவன் கோழி போல அவர்களை உறித்தெடுத்து காருக்குள் கட்டிப் போட்டுவிட்டு நிமிர்ந்தவன் வேகமாய் ஆம்புலன்ஸிற்கு தகவல் அளித்துவிட்டு
ஆதினியின் அருகே வந்தான்.

முதன்முறையாக தான் அந்த பெண்ணை வாழ்க்கையில் சந்தித்திருந்தாலும் அவளுக்கு ஏற்பட்ட துயரங்கள் தனக்கு சொந்தமானவர்களுக்கு ஏற்பட்டதை போல அவன் இதயத்தில் அத்தனை வருத்தம்,பாரம்.

வண்ணமிழந்த ஓவியமாய் ஒளியற்று போய் கிடந்தவளின் அருகே அமர்ந்தவனின் உள்ளத்தில் வேட்டையாடப்பட்ட மிருகத்தின் ஓலம்.

பாட்டிலை வைத்து அவள் உடலில் பல்வேறு இடங்களில் அந்த மிருகங்கள் கீறியிருக்க ராஜ்ஜின் இதயம் எம்பி துடித்தது.

வீங்கிப் போய் இருந்த அவள் உதடுகளை மிருதுவாக வருடிவிட்டவன் “எல்லாம் சரியாகிடும்டா. நான் உன்னை காப்பாத்திடுவேன்” என்று வாயசைத்தான். ஆனால் அவன் மௌன ஓசை அவளுக்கு கேட்கவில்லை.

அவள் அங்கங்களை தழுவியிருந்த உடை தாறுமாறாய் கிழிக்கப்பட்டிருக்க கீழே சிதறி கிடந்த மணல், கீறலாகியிருந்த அவள் தேகத்துக்குள் புகுந்து வலியை ஏற்படுத்தி கொண்டிருந்தது.

வேகமாய் தன் சட்டையை கழற்றி ஆதினியின் மீது போர்த்திவிட்டு அவள் கீழாடையை சரி செய்ய முனைந்தவனின்   கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் உடைப்பெடுத்தது.

“ராஸ்கல்ஸ் ராஸ்கல்ஸ்” என்று தலையில் அடித்து கொண்டவனது உதடுகள் விடாமல் துடித்து கொண்டிருந்தது.

ஆதினியை மருத்துவமனையில் சேர்த்தவனின் இதயத்தில் அவள் கண் விழிக்கும் வரை தவிப்பு அடங்கவே இல்லை.

அவள் எப்போது கண் திறந்தாளோ அப்போது தான் இவன் முகத்தில் கொஞ்சமாய் வெளிச்சம் வந்திருந்தது.

தன் தலையை வாஞ்சையாய் வருடி கொடுத்தபடி அருகிலேயே அமர்ந்து கொண்டிருந்த ராஜ்ஜை கண்டு ஆதினியின் கண்கள் பனித்தது.

அவள் தொண்டையில் வார்த்தைப் பந்துகள் சிக்கி கொள்ள மொழியின்றி அவனைப் பார்த்தாள்.

அதீத சோகம் அவள் உதடுகளின் வார்த்தைகளை முடமாக்கியிருக்க கண்களில் வழிந்த கண்ணீரோடு தன்னையே பார்த்து கொண்டிருந்த, ஆதினியின் தலையை வாஞ்சையாக கோதிவிட்டான்.

அவளுக்கு அந்த ஸ்பரிசம் ஆதூரமாக இருந்திருக்க வேண்டும்… விழநீரோடு மௌனமாய் இமைகளை மூடி கொண்டாள்.

அவள் கைகளை மென்மையாய் பற்றி நம்பிக்கை கொடுத்தவன் மருத்துவமனை முகப்பிற்கு வந்து பில்லை அடைத்துவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைய முற்பட்டான்.

ஆனால் அங்கோ கண்ணீரோடு ஆதினியின் கரங்களை வருடியபடி நடுத்தர வயதோடு ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

“ஆதினிமா, அப்பா உன்னை நல்லா பார்த்துக்கலைடா. என்னாலே தானே நீ அந்த வேலைக்காக போயி இவ்வளவு கஷ்டம் அனுபவிச்சே!” கண்ணீரோடு கதறியவரை கண்டு ராஜ்ஜின் கால்கள் வேர் விட்டு நின்றது.

“உன்னை இந்த இக்கட்டான சமயத்துலே காப்பாத்துன அந்த மனுஷனை  பார்க்கணும்டா. அவர் காலிலே விழுந்து நன்றி சொல்லணும்டா.எங்கே அவர்?” என்று அந்த பெரியவர் கேட்க ராஜ்ஜின் கால்கள் தன்னிச்சையாய் பின்வாங்கியது.

அவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பூமியை ஈரத்தால் நனைக்கும் மேகமாக தான் இருக்க விரும்புகின்றான்.

இந்த நன்றிகடன் என்னும் வார்த்தை உள்ளுக்குள் கனத்தை ஏற்றும் என்று உணர்ந்தவன் ஆதினியை அவள் தந்தையின் பொறுப்பில் விட்டுவிட்டு தடயமில்லாமல் அவள் வாழ்க்கையின் திசையிலிருந்து வெளியே வந்துவிட்டான்.

ஆனால் மீண்டும் காலம் ஆதினியை அவன் வாழ்க்கையில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.

வல்லூறுகளின் பிடியிலிருந்து அவளை காக்கும் அரணாய் காலம் தன்னை நியமித்திருக்கிறது.

பொக்கிஷமாய் அவளை பாதுகாக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதை உணர்ந்து அவளுக்கு அரணாக நிற்கின்றான் என்பதை உணர்ந்த அதிதிக்குள் எதுவோ பிசைந்தது.

ஆதினி இறங்கியதோ சரி இல்லை வீட்டிற்குள் கார் வந்து நின்றதையோ எதையும் உணராதபடி அவள் சிந்தனையின் பிடியில் அகப்பட்டிருந்தாள்.

அன்று மட்டும் தான் காரை வழி மறிக்காமல் சரியான நேரத்தில் செல்லவிட்டிருந்தால் இந்த அசம்பாவிதம் நேராமல் தடுத்திருக்க முடியுமோ!

கேள்வி நூல்கள் அவள் தொண்டையை இறுக்க அவளுக்கு மூச்சு மூட்டியது.

கலக்கத்தோடு வீட்டிற்குள் நுழைந்தவளை வருத்தமாக பார்த்தான் கார்த்திக்ராஜ்.

அவனுக்கு அவளது வேதனை புரிந்தது.

வேகமாய் நிமிர்ந்தவன்,
“அதிதி அன்னைக்கு நான் கவனமா வந்திருந்தா உன் வண்டியை இடிக்காம இருந்திருப்பேன் ஆதினியை கொஞ்சம் சீக்கிரமா காப்பாத்தி இருக்கலாம். உன் மேலே எந்த தப்பும் இல்லை” என்று ஆதரவாய் சொன்னவனை வருத்தமாய் பார்த்தாள்.

அவள் உதடுகளில் இருந்து வார்த்தை உதிரவே இல்லை. குற்றவுணர்வு மனதை தைத்திருக்க தலை சரிந்திருந்தாள்.

அவள் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன், “நடந்து முடிஞ்சதை நினைச்சு வருத்தப்படுறது தப்பு” என்று வாயசைக்க மௌனமாய் தலையாட்டினாள்.

“நான் ஆதினி விஷயத்திலே ரொம்ப ஓவரா பண்றா மாதிரி உனக்கு தோணலாம் அதிதி. ஆனால் அவளை அந்த நிலையிலே பார்த்த அப்புறம் மனசு எப்படி துடிச்சுடுச்சுது தெரியுமா? மறுபடியும் அவளுக்கு அந்த வலி ஏற்படக்கூடாதுனு ரொம்ப ஜாக்கிரதையா இருக்கேன்… அது தப்பா?” அவன் கேள்வியாய் வாயசைக்க அதிதி நெகிழ்வாய் தலையசைத்தாள்.

“குழந்தை அதிதி அவள். அவளைப் போய்… அவளோட…” மேலும் பேச முடியாமல் அவன் உதடுகள் துடித்தது.

கண்கள் சிவக்க கைகளில் குத்தியவன்,
“அங்கே பாட்டிலை குத்தி வெச்சு இருந்தானுங்க அதிதி. அதை எடுக்கும் போது எனக்கே நரக வேதனையா இருந்துதுனா அவள் எவ்வளவு வலி அனுபவிச்சு இருப்பா?” கண்ணீரோடு கேட்டவனின் விரல்கள் லேசாய் நடுங்க அதிதி ஆதரவாய் பற்றி கொண்டாள்.

“ஆதினி இனியாவது தன் வாழ்க்கையிலே சந்தோஷத்தை பார்க்கணும்… அதுக்காக என்ன வேணாலும் செய்வேன்” அவன் முகத்திலிருந்த தீவிரம் அவளை பிரம்மிப்பாய் பார்க்க வைத்தது.

“ஆதினியை யார் அழ வைச்சாலும் நான் சும்மா விட மாட்டேன் அதிதி” வாயசைத்தபடி கை முறுக்கியவனை கண்டு இயலாமையோடு பார்த்தாள்.

“ஆதினியை பார்த்துக்கிறேனு சொல்லி எதிரிலே இருக்கிற எல்லாரையும் அடிச்சு அவளுக்கு எதிரியா ஆக்கிடாதீங்க ராஜ்” அவள் வேகமாக சொல்ல கார்த்திக்ராஜ் சடக்கென்று நிமிர்ந்து பார்த்தான்.

“அப்போ என்னை ஆதினியை பத்திரமாக பார்த்துக்க கூடாதுனு சொல்றீயா?” என்றான் கோபமாக.

“அப்படி சொல்லைலை. ஆனால் ஆதினியாலே தன்னையே பத்திரமா பார்த்து முடியணும். அவளுக்கு அதுக்கான நம்பிக்கையை கொடுக்கணும்னு சொல்றேன்” என்றவளை புருவம் உயர்த்தி பார்த்தான்.

“நீங்க கொஞ்சம் நாள் அவள் விஷயத்துலே தலையிடாதீங்க… அவளை மீட்டு கொண்டு வர என்னாலே முடியும். நான் கொண்டு வந்துடுவேன் ” என்றாள் நம்பிக்கையாக.

அவன் கண்கள் ‘எப்படி’ என்ற கேள்வியை வரைந்தது.

“அவள் உடைஞ்சு போய் இருக்கா ராஜ். உடைஞ்சு போன ஒரு பொண்ணை உடைஞ்சு போன இன்னொரு பொண்ணாலே தான் மீட்டு கொண்ட வர முடியும்” என்றவளின் பதில் அவன் இதயத்திற்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

“நீ அப்போ இதுக்கு முன்னாடி உடைஞ்சு போய் இருந்தியா?” அவன் அதிர்வாய் கேட்க அவள் இதழ்களில் உடையாத ஒரு விரக்தி புன்னகை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!