உயிரோவியம் நீயடி பெண்ணே – 6

th

உயிரோவியம் நீயடி பெண்ணே – 6

6

ப்ரதாபிடம் பேசிவிட்டு போனை வைத்தவன், அப்படியே சோபாவில் சரிந்து, கண்களை மூடிக் கொண்டான்.. ‘சுஜி.. என்னை மறந்துட்டு வேற ஒருத்தனை கல்யாணம் செய்திருப்பியாடி?’ மனதினில் அவளிடம் கேட்டவன்,    

“ஹ்ம்ம்.. பின்ன? உன்னை அப்படி பேசிட்டு எனக்காக வெயிட் பண்ணுன்னு நான் கேட்கவா முடியும்? நீயாவது சந்தோஷமா இரு. அது போதும் எனக்கு..” அதையும் தானே சொல்லிக் கொண்டவன், தனது மொபைலில் அவளது போட்டோவை எடுத்துப் பார்த்து வருடியவன்,

“நீ இல்லாம பிணமா தான் வாழறேன் சுஜி. எனக்கு நீ வேணும்.. என்னை விட்டுப் போயிடாதே.. நான் தாங்க மாட்டேன்டி.. என்கிட்டே நீ வந்திரு.. நீ இல்லாத இந்த ஊர் எனக்கு வேண்டாம்.. நான் அங்க வந்துடறேன்.. நீ வெளிநாடு பத்தி சொன்னதோட அர்த்தம் எனக்கு இங்க வந்த ரெண்டு மாசத்துலயே புரிஞ்சிடுச்சு.. உங்களை எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்.. ஒரு ஒரு பண்டிகையும் எனக்கு நீ சொன்னதை செருப்பால அடிச்சு புரிய வச்சது.. விசா கிடைக்காம வேலையை மட்டும் வச்சிக்கிட்டு, அங்க வரக்கூட முடியாம மனுஷங்களைப் பார்க்க முடியாம நான் பட்ட போது எனக்கு புரிஞ்சிடுச்சு.. இனிமே அந்த தப்பை செய்ய மாட்டேன்.. நான் அங்கேயே வந்துடறேன்.. உன் கூடவே இருக்கேன்..” என்றவன், தனது அறைக்குச் சென்று, அவளது புகைப்படத்தை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு சுருண்டு படுத்துக் கொண்டான்.

வீட்டிற்குச் சென்ற ப்ரதாப், அவனுக்காக காத்திருந்த ஜைஷ்ணவியின் அருகே சென்று அமர்ந்து அவளது மடியில் சாய்ந்துக் கொண்டான்.. அவனது தலையை வருடியபடி, “என்ன திடீர்ன்னு காபி ஷாப்க்கு எல்லாம் போயிட்டு வந்திருக்கீங்க? ஏன் இங்கயே உங்க மச்சான் கிட்ட பேசினா என்ன? நான் கேட்டு என்ன செய்யப் போறேன்?” ஜைஷ்ணவி கேட்க, அவளது இடையைக் கட்டிக் கொண்டவன்,

“எப்படி கண்டு பிடிச்ச?” அவளது கன்னத்தைக் கிள்ளி அவன் கேட்க,

“அதான் நல்லா வாசனை வருதே.. இதுல தனியா வேற சொல்லணுமா? சரி இப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..” என்றளின் கன்னத்தைத் தட்டியவன்,  

“இங்க பேசலாம் தான்.. ஆனா.. அவன் நீ இருக்கன்னு தெரிஞ்சா சிலது எல்லாம் சொல்ல மாட்டான்னு தோணிச்சு.. அது தான்.. அதோட உன்னோட காபி குடிச்சு போர் அடிச்சுப் போச்சு. அது தான் கோல்ட் காபி குடிச்சிட்டு வந்தேன்..” அவளிடம் வம்பு வளர்த்தவன், அவள் முடியைப் பிடித்து இழுக்கவும்,

அவளது விரலை தனது முடியில் அழுத்திக் கொண்டவன், “கொஞ்ச நேரம் அப்படியே செய்.. உன் தம்பி என்னை மண்டை காய வைக்கிறான்..” என்று சொல்ல, அவனது முகத்தை நிமிர்த்தியவள்,

“என்னப்பா ஆச்சு? உங்க முகமும் சரி இல்ல தான்.. கொஞ்சம் டென்ஷனா இருந்தா தானே இப்படி வந்து படுப்பீங்க? ஏதாவது பெரிய விஷயம் சொல்லிட்டானா?” என்று கேட்க, தலையை மேலும் கீழும் ஆட்டியவன்,

“அதெல்லாம் எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல.. ஆனா.. உன் தம்பி சொன்னதைக் கேட்டா நீ கண்டிப்பா அவனை அடிச்சு இருப்ப.. மச்சானை என்னால அடிக்க முடியல அவ்வளவு தான்.. உங்க அம்மா அவளைப் பேசினதுக்கும் அவன் பேசினதுக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்.. அந்தப் பொண்ண பேசியே கொன்னுட்டு தான் போயிருக்கான்…” எனவும்,

“என்ன? என்னங்க சொல்றீங்க? அவனா அவளை அப்படி பேசினான்?”  அதிர்ச்சியுடன் அவள் கேட்க, தலையை மேலும் கீழும் அசைத்தவன்,

“அந்தப் பொண்ணு கல்யாணம் பண்ணி நல்லபடியா வாழ்ந்துட்டு இருந்தா.. நான் கண்டிப்பா அவளை வாழ்த்திட்டு தான் வருவேன். இவனை லவ் பண்ணின ஒரே காரணத்துக்காக அவ இவங்க பேச்சை கேட்கணும்ன்னு இல்ல.. ஒருவேளை சூர்யாவை சுஜி கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு உங்க அம்மா அவளை ஏதாவது பேசினாங்கன்னு வைய்யேன். உங்க அம்மான்னு கூட பார்க்க மாட்டேன்..

உன் தம்பி பண்ணின காரியத்துக்கு அவ உன்னை யாரோ போல நடத்தாம அக்கான்னு கூப்பிட்டு பேசினதே பெரிய விஷயம்.. அவ எல்லாம் அவனைப் பத்தி கேட்பான்னு எல்லாம் கனவு காணாதே.. அந்தப் பொண்ணு அனுபவிச்சது நமக்குத் தெரியாது..” எங்கோ பார்வையை வெறித்துக் கொண்டு சொன்னவன், அவளது முகத்தை நிமிர்ந்துப் பார்க்க, ஜைஷ்ணவி கலக்கமாக அவனைப் பார்த்தாள்..

அவளது முகத்தைத் தனது கைகளில் தாங்கி, “டென்ஷன் ஆகாதே.. இப்போ நாம சுஜியோட வீடு வரை போய் பார்த்துட்டு வரலாமா? சும்மா ஏதாவது சாக்கு சொல்லி அங்கப் போய் பார்த்துட்டு வரலாம்.. அவன் சும்மா போயிட்டு வாங்கன்னு சொல்றான்..  போய் என்னடா செய்யறது? அவ குழந்தைகளைப் பார்த்துட்டு வரவான்னா பரிதாபமா பார்க்கறான். நான் என்ன செய்யட்டும்? எனக்கும் அவன் செஞ்ச காரியத்துக்கு கடுப்பா தான் இருக்கு.

ஆனா.. அவனும் அவளை எதுக்கு உதாசீனப்படுத்திட்டு போனானோ அதுல அவன் சந்தோஷமா இல்லையே.. அப்படியே போன்னு சொல்ல மனசு கேட்க மாட்டேங்குது.. அவன் சொன்ன விஷயங்களை என் மனசுல ஏத்துக்கவே டைம் எடுக்கும். ஆனா.. அதுவரை சும்மாவும் இருக்க முடியாதே.. வரியா போயிட்டு வரலாம்?” என்று கேட்க, இவ்வளவு வெறுப்பாக அவன் பேசியதைக் கேட்டிறாதவள், சூர்யா எதுவோ பெரிதாக செய்திருக்கிறான் என்று புரிந்துக் கொண்டு, கண்ணீருடன் தலையசைத்தாள்..   

“ஆனா.. அவளோட அட்ரஸ் வேணுமே..” சிறு குழந்தையென கேட்க,

“ஹ்ம்ம்.. நீ அவ கூட உள்ள போயிருக்கும் போது நான் டேபிள் மேல இருந்த ஒரு லெட்டர் பார்த்தேன். அதுல ஒரு அட்ரஸ் இருந்தது. அதனால அதுவா தான் இருக்கும்ன்னு ஒரு கெஸ்.. போவோமா?” அவளிடம் சொல்லிவிட்டு, முகத்தைக் கழுவிக் கொண்டு கிளம்ப, ஜைஷ்ணவி படபடக்கும் இதயத்துடன் கிளம்பினாள். 

இருவரும் கிளம்பி, அந்த முகவரிக்குச் சென்று நிற்க, ஜைஷ்ணவி ப்ரதாப்பைப் பார்த்தாள்.. “இவ என்னங்க ஹாஸ்பிடல்க்கு இவ்வளவு பக்கத்துல குடி இருக்கா?” என்று கேட்டவள், அந்த குடியிருப்பின் கேட்டில் தொங்க விடப்பட்டிருந்த ‘வீடு வாடகைக்கு’ என்ற போர்டைப் பார்த்து ஒரு பெருமூச்சுடன்,

“நமக்கு ஒரு வழி கிடைச்சிருச்சு.. பேசாம வீடு நல்லா இருந்தா நாம இங்கயே வந்துடலாமா?” ப்ரதாபைப் வம்பிழுத்துக் கொண்டே உள்ளே செல்ல, ப்ரதாப் அவளைப் பார்த்து சிரிக்க, சரியாக அந்த நேரம் சூர்யாவும் ப்ரதாப்பிற்கு கால் செய்தான்..                        

போனை எடுத்தவன்.. “செய்யறது செஞ்சிட்டு என்னடா அவசரம்?” என்று கேட்க,

அதைக் கண்டுக் கொள்ளாமல்.. “மாமா.. அவ வீட்டுக்கு போயிட்டீங்களா?” படபடப்பாகக் கேட்க, ப்ரதாப்பிற்கு அவனது தவிப்பு புரிந்தது..  

“ஹ்ம்ம்.. போயிட்டேன். நீ அப்போ போலவே அமைதியா இரு.. ஒருவேளை அவ வீட்ல இருந்தா கஷ்டமாகிடும்..” என்றவன், ஹெட்போன்சை மாட்டிக் கொண்டு, அவளது வீட்டின் நம்பரைத் தேடிச் சென்றான்..

“ஜைஷு ஒருவேளை உன்னை அத்தைன்னு கூப்பிட்டுக்கிட்டு ஏதாவது நண்டு சிண்டு ஓடி வந்தா ஷாக் ஆகிடாதே..” ப்ரதாப் கேலி செய்ய, ‘மாமா..’ போனில் சூர்யா பதற,

“என்ன? என்னங்க சொல்றீங்க?” ஜைஷ்ணவியும் பதறிப் போக, ப்ரதாப் நக்கலாக புன்னகைத்தான்..

“என்ன ஜைஷு விளையாட்டுக்கு சொன்னா இப்படி ஷாக் ஆகற? காலையில அவ என்னை அண்ணான்னு கூப்பிட்டா இல்ல.. அப்போ அவளோட குழந்தைகளுக்கு நான் மாமா தானே.. அப்போ நீ அத்தை.. அப்படிச் சொன்னேன்..” என்று சொல்லிக் கொண்டே படிகளில் ஏற,

“இதுக்கு அதுவே பரவால்ல.” சூர்யா புலம்பினான்.

“ஏங்க.. அவ வேற கல்யாணம் பண்ணி இருந்தா சூர்யாவோட செயினை அவ எப்படி இன்னும் போட்டு இருப்பா?” ப்ரதாப் கேலி செய்வது பொருக்காமல் ஜைஷ்ணவி கேட்க,

‘ஹான் அப்படி கேளு ஜைஷு..’ சூர்யா ஒத்து ஊத.

“அதாவது என்னன்னா? தங்கம் விக்கற விலைக்கு அந்த செயினை எதுக்கு வித்துக்கிட்டுன்னு அவ யோசிச்சு இருக்கலாம்.. இல்லையா. அவ இருக்கற பிசில அது அவ கழுத்துல இருக்கறதை மறந்தே போயிருக்கலாம்.. இல்லையா ஒரு துரோகத்தோட நினைப்புல கூட அவ போட்டு இருக்கலாம்ல..” ப்ரதாப் சொல்லவும், சூர்யா தலையில் அடித்துக் கொள்ள, ஜைஷ்ணவி ப்ரதாப்பை கேள்வியாகப் பார்த்தாள்..

“ஒண்ணும் இல்ல.. கொஞ்சம் மனசு ஆறனும் இல்ல..” என்றவன், ஒரு வீட்டின் முன்பு நின்றான்..

வீடு திறந்திருக்க, ப்ரதாப் உள்ளே எட்டிப் பார்த்து, “யாராவது இருக்கீங்களா?” என்று கேட்கவும், உள்ளே இருந்து எட்டிப்பார்த்த ஒரு வயதான பெண்மணி,

“யாருங்க.. யாருங்க வேணும்?” என்று கேட்க,  

“இங்க டாக்டர் வீட்டுக்கு பக்கத்துல வீடு காலியா இருக்குன்னு சொன்னாங்க.. அது தான். இந்த வீடு காலியா இருக்கா என்ன? இல்ல காலி ஆகுதா?” என்று கேட்டுக் கொண்டே, உள்ளே எட்டிப் பார்த்து பார்வையை ஓட்ட, ஹாலில் இருந்த ஒரே சிறிய டைனிங் டேபிளும், சுவற்றில் பொறுத்தப்பட்டிருந்த ஒரு டிவியும் மட்டுமே இருக்க, அந்தப் பெண்மணி மறுப்பாக தலையசைத்தார்.

“இல்லைங்க.. இந்த வீடு டாக்டரம்மாவுது தான்..” அவர் பதில் ப்ரதாப்பிடம் சொல்லிக் கொண்டிருக்க, அதற்குள் வீட்டின் உள்ளே தனது கண்களைச் சுழற்றிய ஜைஷ்ணவி, அங்கிருந்த ஷோகேஸில் சுஜி, தனது தாய் தந்தையுடன் எடுத்துக் கொண்ட பல்வேறு புகைப்படங்களுக்கு நடுவில், அவள் பட்டமளிப்பு விழாவில் இருவருடனும் எடுத்துக் கொண்ட புடைப்படம், அத்துடன் வரையப்பட்டிருந்த ஒரு குழந்தையின் படம் ஒன்றும் இருக்க, ஒரு பெருமூச்சுடன் ப்ரதாப்பைப் பார்த்தாள்.

“ஓ.. அப்போ கீழ கேட்ல டூலட் போர்ட் பார்த்தோமே.. அந்த வீடு எந்த வீடு?” ப்ரதாப் இழுக்க,

“இல்லைங்க இங்க பக்கத்து ஹாஸ்பிடல்ல வேலை செய்யற டாக்டரம்மா இருக்காங்க.. ஆனா மேல வீடும் இதே போல தான் இறும்..” வேலை செய்யும் பெண்மணி சொல்ல, ஜைஷ்ணவி தலையசைத்தாள்..

“இங்க வேலைக்கு ஆள் எல்லாம் இங்க கிடைப்பாங்களா? ஏன்னா என் வைஃப்க்கு பக்கத்துல இருக்கற ஹாஸ்பிடல்ல தான் ட்ரீட்மென்ட் பார்க்கறோம். அதனால அவங்களுக்கு ஹெல்ப்க்கு ஆள் வேணும்..” ப்ரதாப் கேட்கவும்,

“நானே வரேன் சார்? நீங்க எப்போ இந்த வீட்டுக்கு வரீங்கன்னு சொல்லுங்க.. அன்னைக்கே உதவியா நான் வந்துடறேன்.. என்னைப் பத்தி வேணா டாக்டரம்மாகிட்ட கேளுங்க.. என்னை நம்பி அவங்க வீட்டுச் சாவியை கொடுத்துட்டு போயிருக்காங்க..” என்று பெருமையாக அந்த பெண்மணி சொல்ல, ப்ரதாப் புன்னகைத்து,

“இல்ல.. நீங்க இன்னொரு வீட்டுல வேலை செய்தா இவங்களுக்கு பிரச்சனை ஆகாதா? ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?” என்று கேட்க,   

“இல்லைங்க. அவங்க அதெல்லாம் சொல்ல மாட்டாங்க.. டாக்டரம்மா ரொம்ப நல்ல மாதிரி.. எனக்கு இங்க ரொம்ப வேலை எல்லாம் இல்லைங்க.. அவங்க பெரும்பாலும் ராத்திரி தூங்க தான் வருவாங்க. சாமான் கூட எதுவுமே இல்லங்க. எல்லாமே பெட்டியைப் பிரிக்காம அப்படியே டாக்டரம்மா போட்டு வச்சிருக்காங்க..” எனவும், அவர் காட்டிய அறையை எட்டிப் பார்த்தவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

“அப்போ சரிங்க.. நீங்க தான் இங்க எல்லா வேலையும் செய்வீங்களா? இல்ல வீடு பெருக்கி துடைக்கிறது மட்டும் தானா?” ஜைஷ்ணவி கேட்கவும்,

“இல்லைங்க.. எல்லாமே சுத்தமா செய்வேன். டாக்டரம்மா வாரத்துல பாதி நாள் பெரும்பாலும் ஹோட்டல்ல சாப்பிடுவாங்க.. தினமும் பாத்திரம் தேய்க்க எனக்கு ஒரு கப் தான் வரும். ஞாயித்துக்கிழமை தான் ஏதோ நேரமிருந்தா சமைப்பாங்க. அன்னிக்கு தான் எனக்கு பாத்திரமே வரும். நான் வர அப்போ அவங்க வீட்ல இருந்தா பார்த்தா தான் உண்டு.. இல்லையா மாச சம்பளம் வாங்கிக்கும் போது அவங்களை ஹாஸ்பிடல்ல பார்த்து வாங்கிப்பேன்.. இதுல நான் கேட்டா வேண்டாம்ன்னு சொல்லப் போறாங்க..” என்றவர்,

“என்னவோ போங்க.. அந்தப் பொண்ணு ஹாஸ்பிடலே கதின்னு இருக்காங்க.. ரொம்ப நல்லப் பொண்ணு” என்று புலம்பியவர், இருவரும் பதில் பேசாமல் அவரைப் பார்த்துக் கொண்டு நிற்கவும், தான் அதிகப்படியாக பேசியதை உணர்ந்து,  

“மேல இருக்கற வீடுங்க.. போய்ப் பாருங்க.. ஓனரும் நல்ல மாதிரி.. நல்ல இடம் தான்..” என்று அவர் சொல்ல, சரியென்று தலையசைத்தவர்கள், அமைதியாகவே அவர்கள் காட்டிய வீட்டைப் பார்த்துவிட்டு வந்தனர். அந்த ப்ளாட்டை விட்டு வெளியில் வரும்வரை இருவருமே அமைதியாகவே இருந்தனர்.  

அதற்குள் வேலை முடித்து அவளது வீட்டைப் பூட்டிக்கொண்டு அந்தப் பெண்மணியும் வர, “என்னங்க வீட்டைப் பார்த்துட்டீங்களா? பிடிச்சு இருக்கா?” என்று கேட்க,

“ரொம்ப பிடிச்சிருக்குங்க.. நாங்க வீட்ல போய் கலந்து பேசிட்டு அட்வான்ஸ் கொடுக்கறோம்..” ப்ரதாப் பதில் சொல்ல, அவரும் சம்மதமாக தலையசைத்துவிட்டுச் சென்றார்.

“மாமா அந்த வீட்டை வாடகைக்கு பேசிடுங்க..” சூர்யாவின் குரல் ஒலிக்க, ஒரு பெருமூச்சுடன்,

“வீட்டுக்கு வந்து கூப்பிடறேன் சூர்யா..” என்றவன், ஜைஷ்ணவியுடன் அருகில் இருந்த கோவிலுக்குச் சென்றான்.    

ப்ரதாப் அமைதியாக கோவிலைச் சுற்றி வர, “என்னங்க? என்ன ஆச்சு? ஏன் இப்படி அமைதியா வரீங்க?” ஜைஷ்ணவி குழப்பமாகக் கேட்க,

“இல்ல.. அந்த ஷோகேஸ்ல இருக்கற போட்டோல எனக்கு அந்த வரஞ்ச குழந்தையோட படம் கொஞ்சம் மனசுல என்னவோ பண்ணுது.” என்றவன், ஒரு பெருமூச்சுடன்,

“சரி.. அவளும் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கா. அடுத்து என்ன செய்யலாம்? சூர்யா இங்க வரேன்னு சொல்லிட்டு இருக்கான். வந்து அவளை மீட் பண்ணினா ஏதாவது நடக்குமா? அவனைப் பார்த்தா சுஜி எப்படி ரியாக்ட் பண்ணுவா? இன்னும் மனசுல எனக்கு நிறைய ஓடுது.. இப்போதைக்கு நாம எல்லாத்தையும் இந்த கடவுள் கிட்ட தான் விட முடியும்.. நல்லா வேண்டிக்கோ.. எல்லாமே நல்லபடியா முடியனும்ன்னு வேண்டிக்கோ..” என்றவன், கண்களை மூடி கடவுளை வேண்டிக் கொள்ளத் துவங்கினான்.

நாட்கள் யாருக்கும் நிற்காமல் தனது ஓட்டத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தது. அவரவரின் மணித்துளிகள் காற்றில் கற்பூரமாய் கரைய, பூமிப் பந்தின் ஓட்டத்துடன் அவர்களும் ஓடிக் கொண்டிருந்தனர்.

சூர்யா, ஜைஷ்ணவி இருவரின் வேண்டுகோளின்படி,  அவர்கள் அன்று சுஜிதாவின் வீட்டைப் பார்ப்பதற்காக சென்று, பேச்சிற்காக பார்த்துவிட்டு வந்த ப்ளாட்டிற்கு ப்ரதாப்பும் ஜைஷ்ணவியும் குடி வந்திருந்தனர்.. அன்று காலை தான் பால் காய்ச்சி, அனைவரது வாழ்க்கையும் சிறக்க வேண்டிக் கொண்டு அந்த வீட்டில் அடி எடுத்து வைத்திருந்தனர்.     

பொருட்களை அடுக்கிக் கொண்டே, “நாம எந்த நம்பிக்கையில இங்க குடி வந்திருக்கோம்ங்க? சுஜி சூர்யாவை ஏத்துப்பாளா? எனக்கு என்னவோ நீங்க இன்னும் முழுசா என்கிட்ட எல்லாமே சொல்லலைன்னு தோணுது. என்னவோ மனசு நெருடுது..

அவனால அவளைப் பார்க்காம, பேசாம ஒரு நாள் கூட இருக்க முடியாது.. அதுல அவன் குடிச்சிட்டு சண்டை போட்டுட்டேன்னு சொன்னான். எனக்கு அதுவே ஷாக்கா தான் இருந்தது. ஆனா.. நீ சொல்றதைப் பார்த்தா எதுவோ நான் நினைக்கிறதை விட ரொம்ப பெருசுன்னு தோணுது.. அப்படி தானே.” கேட்டுக் கொண்டே ஜைஷ்ணவி கவலையுடன் ப்ரதாப்பின் முகத்தைப் பார்க்க, அவளது கவலைப் புரிந்தவன் போல, அவளது தலையை வருடினான்.

“அதைப் பத்தி நீ முழுசா தெரிஞ்சிக்க வேண்டாம்.. தாங்க மாட்ட.. இப்போ எனக்கு உன்னோட அமைதியான மனநிலை தான் வேணும்.. அவங்களைப் பத்தி எல்லாம் நீ கவலைப்படாதே.. அதை நான் பார்த்துக்கறேன்.. நான் இங்க வந்ததுக்கு அவனை விட நீ தான் காரணம். நாம இனிமே அடிக்கடி ட்ரீட்மெண்ட்டுக்கு ஹாஸ்பிடல் போகணும்.. உனக்கு அங்க அந்த வீட்டுல இருந்து இவ்வளவு தூரம் அலைச்சல் வேண்டாம்ன்னு தான் நான் இங்க குடி வந்ததுக்கு முதல் காரணம். நல்லபடியா ட்ரீட்மெண்ட் போச்சுன்னா நாளைக்கு செக்கப்க்கு எல்லாம் போகணும் இல்ல.. இங்க குடி வந்தா எல்லாத்துக்குமே ஈசியா இருக்கும் இல்ல.. அது தான்.. மத்த எல்லாம் கடவுள் விட்ட வழி..” என்றவன், அவளது கன்னத்தில் இதழ் பதித்து,

“எனக்கு என் பொண்டாட்டி தான் முக்கியம்..” என்று அவளைக் கொஞ்ச, அவனது கையைத் தட்டியவள்,

“முதல்ல அடுக்கி முடிங்க.. நாளைக்கு நீங்க ஆபீஸ்க்கு போகணும்.. அப்பறம் நான் தனியா மாட்டிப்பேன்.” என்று சொல்லி விட்டு, ஒரே மூச்சில் இருவருமாக பொருட்களை அடுக்கி முடித்தனர்.  

“எதுக்கும் அந்த இன்னொரு ரூமை ரெடி பண்ணி வை.. உன் தம்பி எந்த நேரம் வேணாலும் வந்து குதிக்கலாம்.. இதுவரை சார் ப்ளைட் டிக்கெட் போட்டதைப் பத்தி எல்லாம் எதுவுமே இன்னும் சொல்லவே இல்லையே.. ஒருவேளை அடி விழும்ன்னு பயந்து அங்கேயே இருக்கானோ?” என்று கேலி செய்ய, அவனது தோளில் தட்டியவள்,

“உங்களுக்கு அவனைப் பார்த்தா எப்படி இருக்கு? சும்மா அவனை வம்பு வளர்த்துக்கிட்டே இருக்கீங்க?” என்று கேட்க, அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டவன்,

“உன் தம்பி செஞ்சதை முழுசா நான் சொன்னா அவனை ப்ளைட்டை விட்டு கீழ இறங்கவே விட மாட்ட.. அப்படியே பேக் பண்ணி அமெரிக்காவுக்கே திருப்பி அவனை அனுப்புவீங்க மேடம்.. தெரிஞ்சிக்கோங்க..” அவளது நெற்றியில் முட்டியவன், கிண்டலாக சொல்லிக் கொண்டே மற்றொரு அறையையும் தயார் செய்து முடித்தான்.

அன்றைய தினம் காலையில் இருந்தே பரபரப்பாக சுஜிதாவிற்கு சென்றுக் கொண்டிருந்தாலும், மனதில் ஒரு வித தவிப்பு இருந்துக் கொண்டே இருந்தது.. பேஷன்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும்   சுஜிதாவிற்கு, மனதினில் ஏனோ ஒரு வெறுமை..

எவ்வளவு தள்ளிவிட்டு திரையை இழுத்து மூடினாலும், மனதில் முட்டி மோதிக் கொண்டு வந்த அவனது நினைவுகளை கஷ்டப்பட்டு தள்ளிவிட்டு, ஒரு பேஷண்டைப் பார்த்து முடித்தவளுக்கு அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது..

உள்ளுக்குள் நடந்த போராட்டத்தில் தலை விண் விண்னென்றுத் தெறிக்க, தலையைப் பிடித்துக் கொண்டவள், “சிஸ்டர்.. ஒரு அஞ்சு நிமிஷம் பிரேக் கொடுங்க.. அப்படியே எனக்கு ஒரு காபி சொல்லிடுங்க சிஸ்டர்.. சூடா வேணும்..” என்று சொல்லிவிட்டு, ஒரு தலைவலி மாத்திரையை போட்டுக் கொண்டு, தனது டேபிளில் கவிழ்ந்துக் கொண்டாள்.

அவளைப் அப்படிப் பார்த்திராத அந்த நர்ஸ், “என்னாச்சு மேடம்?” என்று கேட்க,

“ஒண்ணும் இல்ல.. ரொம்ப தலை வலிக்குது.. ஒரு அஞ்சு நிமிஷம்.. நான் உங்களைக் கூப்பிடறேன். அதுக்குள்ள ஒரு காபி மட்டும் ப்ளீஸ்..” என்றவள், நர்ஸ் விலகிச் செல்லவும், தனது கழுத்தில் இருந்த செயினைப் பிடித்துக் கொண்டு சேரில் சாய்ந்துக் கொண்டாள்..

அவனது நினைவுகளின் அணிவகுப்பு மனதினில் தொடர்ந்துக் கொண்டிருக்க, அவனை நினைத்து ஒரு மூச்சு அழுது தீர்த்தவள், முகத்தைக் கழுவிக் கொண்டு, ஒரு சாக்கலேட்டை எடுத்து சுவைக்கத் துவங்கினாள். அது அவளது அந்த மனநிலையை மாற்ற ராஜேஸ்வரி சொல்லிக் கொடுத்த யோசனை.. மெல்ல அந்த சாக்கலேட்டை உண்டாலும், அவளது கண்கள் ஜன்னலின் வழியே தெரிந்த வானத்தை வெறித்தது.

வருடங்கள் உருண்டோடி இருந்தாலும், இன்றும் மனதினில் பசுமையான நினைவுகள். புதிதாக கட்டி இருந்த வீட்டிற்குத் தேவையான பொருட்களை தாய் மகள் இருவருக்கும் பிடித்தது போல அவளது தந்தை வாங்கி இருந்தார்.. புது வீடு வந்த மகிழ்ச்சியும்.. தங்களுக்கு பிடித்தது போல வாங்கி இருந்த பொருட்கள் வந்திறங்கவும் ஆவலாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அவள் நின்றிருந்தாள்..

மெரூன் நிற ஸ்கர்ட்டும் வெள்ளை நிற டாப்புமாக, தனது நீண்ட கூந்தலை நன்றாக மேலே தூக்கி குதிரைவால் போட்டு, மதிய வெயிலுக்கு இதமாக கூலிங் கிளாசும், காலில் ஹீல்ஸ் ஷூவுமாக, குட்டித் தக்காளிப்பழம் போல நின்று அவள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளது அருகில் பைக் ஒன்று வேகமாக வந்து சடன் ப்ரேக் அடித்து நின்றது..

அருகில் பைக் வந்து க்ரீச்சிட்டு நிற்கவும், பதறி விலகியவள், அந்த பைக்கில் வந்த இளைஞனைப் பார்க்க, அவனது பார்வை அவளது முகத்தில் ஆர்வத்துடன் பதிந்து இருந்தது..

அவள் பயந்து நகர, அவளை மேலிருந்து கீழாக ஒருமுறைப் பார்த்தவன், விசில் அடித்துக் கொண்டே தனது பைக்கைக் கிளப்பிக் கொண்டு, அவர்களது வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டில் சென்று வண்டியை நிறுத்திவிட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான்..

சுஜிதாவின் பார்வையும் அவன் மீதே இருக்க, அவளைப் பார்த்து கண்ணடித்து, பைக்கில் இருந்து ஸ்டைலாக இறங்கியவன், தனது பையை எடுத்து மாட்ட, அவனையே கண்ணிமைக்காமல் சுஜிதா  பார்த்துக் கொண்டு நின்றாள்.

மீண்டும் அவளைத் திரும்பிப் பார்த்தவன், விசில் அடித்துக் கொண்டே, ஸ்டைலாக சாவியை சுழற்றியபடி அவனது வீட்டின் உள்ளே சென்றவன், மீண்டும் அவளை எட்டிப் பார்த்து, கையசைக்க, அதில் சுதாரித்தவள், வேகமாக வீட்டின் உள்ளேச் சென்றாள்..

அன்று தான் இருவரின் முதல் சந்திப்பு. அதுவரை குடும்பமாக தனது தந்தையுடன வெளிநாட்டில் இருந்தவள், தனது படிப்பிற்காக, தனது அன்னையுடன் இந்தியாவிற்கு திரும்பி வந்திருந்த ஏழாவது நாள்..

பள்ளியில் அட்மிஷன் முடித்து, வீட்டின் புதுமனைப்புகு விழாவும் அந்த ஏழே நாளில் முடிந்திருக்க, இன்று பொருட்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தது.. அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது தான் அவனை முதன்முதலில் பார்த்தது. பதினாறு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு.. இன்றும் மனதினில் அப்படியே பசுமையாக இன்று நடப்பது போல கண் முன்னால் விரிந்தது..      

பன்னிராண்டாம் வகுப்பிற்கான ஸ்பெஷல் க்ளாஸ் துவங்கி இருந்த சமயம் அது.. ப்ரவுன் நிற கால்சட்டையும், வெளிர்பழுப்பு நிற சட்டையுமாக, கழுத்தில் டை அணிந்துக் கொண்டு, வகுப்பிற்கு சென்று வந்தவனை தான் முதன்முதலில் சுஜிதா சந்தித்தது. நெடுநெடுவென்று வளர்ந்திருந்தவனின் அரும்பு மீசையும், மெல்லிதாக முளைத்திருந்த தாடியும், அந்தப் பருவத்திற்கே உரித்தான குறும்புக் கண்களுமாக, புத்தகப் பையுடன் பைக்கில் இருந்து இறங்கியவனின் உருவம் இன்றும் மனதில் கல்வெட்டாய்..   

அவனது நினைவினில் அமிழ்ந்திருந்தவள், சாக்கலேட் தீர்ந்துப் போகவும், மீண்டும் முகத்தைக் கழுவிக் கொண்டவள், “சிஸ்டர்..” என்று குரல் கொடுக்க, அவள் காபியை கொண்டு வந்து வைக்கவும்,

“அடுத்த பேஷண்டை வரச் சொல்லுங்க..” என்று குரல் கொடுக்க, இரண்டு நிமிட இடைவேளையில் அடுத்த பேஷன்ட் உள்ளே வரவும், காபியைக் குடித்து முடித்தவள், மீண்டும் தனது மனதை வேலையில் செலுத்தி, வெற்றிகரமாக அவனது நினைவுகளைத் துரத்தியடித்தாள்.

error: Content is protected !!