உருகிடும் உயிர்மெய்கள் 3

IMG-20210305-WA0007-cb5c37b0

உருகிடும் உயிர்மெய்கள் 3

அத்தியாயம் – 3  

 

 

குழந்தை காணாமல் போய் கிட்டத்தட்ட பத்து மணி நேரங்களுக்கு மேல் கடந்திருந்தது.

அதற்குள் அரை உயிராய் ஆகிப் போயிருந்தாள் நேத்ரா.

அதிகாலையிலேயே வழக்கம் போல பேத்தியின் குரலைக் கேட்பதற்காக ஃபோன் செய்திருந்த தாயிடம் கதறலோடு குழந்தை காணாமல் போனதைக் கூறியிருந்தான் ரவீந்தர்.

அலறிப் பதறி ஓடிவந்தவர்கள், குழந்தையைத் தொலைத்து நிற்பவர்களை சரமாறியாய் வசைபாட, மேலும் மேலும் துக்கத்தில் ஆழ்ந்தது வீடு.

“குழந்தைய வெளிய கூட்டிட்டு போனா கவனம் முழுக்க புள்ள மேல இல்லாம இப்படியும் இருப்பாளா ஒருத்தி?

முழுசா தொலைச்சிட்டு நிக்கிறாளே! அய்யோ! ஆண்டவனே எம்பேத்தி எங்க எப்படி கஷ்டப்படறாளோ?

புள்ள வரம் கேட்டு தவியா தவிச்சு வலிச்சு பெத்திருந்தா அருமை தெரியும். கேக்காமலே வரமா வந்த சாமிய அலட்சியமா தொலைச்சிட்டாளே…”

அழுது அரற்றி மருமகளைத் திட்டித் தீர்த்து ரவீந்தரின் தாய் சொர்ணம் தன் ஆற்றாமையை ஆற்றிக் கொள்ள, மனம் தாங்கா வருத்தத்தோடு குழந்தை காணாமல் போனதில் இருந்து நடந்தவற்றை ரவியிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் அவனது தந்தை.

மருமகளின் மேல் அடிப்படையில் இருந்த கோபமெல்லாம் வார்த்தைகளாய் சொர்ணத்திடம் இருந்து வெளிவர, ஏற்கனவே பிள்ளையைத் தொலைத்து அரை உயிராய் இருந்தவள் மனதளவில் குற்றுயிராய் போனாள்.

“ம்மா… ஏம்மா நீ வேற? வேணும்னே யாராவது குழந்தைய தொலைப்பாங்களா? அவளே பாவம் நேத்துல இருந்து விடாம அழுதுகிட்டே இருக்கா. ஆறுதலா இருப்பன்னு பார்த்தா சும்மா டென்ஷனாக்கிட்டு…” ரவி கடுப்படிக்க,

“ஏன்டா, தேவதை மாதிரி பெத்து வளத்த புள்ளய தொலைச்சிட்டு வந்து நிக்கிறீங்களே? மனசே ஆறலயேடா எனக்கு. அப்புடி என்னடா அலட்சியம் உன் பொண்டாட்டிக்கு?

எம்பேத்தி சாப்டாளா? தூங்குனாளா? தெரியலயே… பசி தாங்க மாட்டாளே? நம்மை காணோமேன்னு பயத்துல அழுவாளே? நெனைக்க நெனைக்க நெஞ்சே பதறுதே எனக்கு!”

அவரது புலம்பலையும் அழுகையையும் நிறுத்தவே முடியவில்லை யாராலும். அவர் பேசப் பேச வெடித்து அழுத நேத்ராவையும் சமாளிக்க முடியவில்லை ரவீந்தருக்கு.

“ஆத்தா சோலையூரு மாரியாத்தா! புள்ள நல்லபடியா கிடைச்சிட்டா எடைக்கு எடை காசு காணிக்கை செலுத்துறேன் ஆத்தா!”

ஊரில் உள்ள தெய்வங்கள் அனைத்தையும் துணைக்கு அழைத்து சொர்ணம் வேண்டுதல்கள் வைக்க, ஏதேனும் ஒரு தெய்வம் கண்திறந்து பாராதா என்ற ஏக்கம் அனைவருக்குமே.

காலையிலேயே புகழேந்தி அழைத்து ஏதாவது ஃபோன் கால் வந்ததா என்று விசாரித்திருக்க, இல்லை என்ற இவர்களின் பதில் புகழேந்தியையும் டென்ஷனாக்கியது.

சிசிடிவி பதிவுகளைப் பார்க்கும் பணியை முடுக்கி விட்டவர், தானும் கவனமாய் பார்க்க ஆரம்பித்தார்.

நேத்ராவைத் தனியே தாயிடம் விட்டுச் செல்லவும் மனதில்லாமல், குழந்தையின் நிலையை அறிந்து கொள்ள காவல்நிலையம் சென்றே ஆக வேண்டிய சூழலும் இருக்க, தவித்துப் போனான் ரவீந்தர்.

முன்தினமே இருவருக்கும் சண்டை. சர்வ நிச்சயமாய் நேத்ரா எதையும் சரியாய் சாப்பிட்டிருக்க மாட்டாள். இரவிலிருந்து பொட்டுத் தண்ணீர்கூட இருவருமே அருந்தவில்லை.

 கவலையோடு மனைவியைப் பார்த்தவன், சமையறைக்குச் சென்று பால் காய்ச்சி எடுத்து வந்து நேத்ராவைக் குடிக்க வைக்க முயல,

“வேண்டாம் ரவி… என்னால முடியலயே! பாப்பா என்ன கஷ்டப்படறாளோ? என்னாலதான இப்படி ஆகிடுச்சி… நான்தான் அவளைத் தொலைச்சிட்டேன். நேத்து நான் அவளைத் தனியா வெளிய கூட்டிட்டே போயிருக்கக் கூடாது. பாப்பா மட்டும் கிடைக்கலன்னா சத்தியமா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.”

அவன் மார்பில் புதைந்து கதற, அவளது கண்ணீர் உள்ளே வரை சுட்டது.

‘நேத்து நான் மட்டும் உங்களைத் தனியா விட்டுப் போகாம இருந்திருந்தா இது நடந்தே இருக்காதே’ உள்ளுக்குள் புலம்பியவன்,

“என்ன பேசற நேத்ரா…! பாப்பாவும் நீயும் இல்லன்னா எனக்கு மட்டும் என்ன இருக்கு இந்த உலகத்துல? நானும் இல்லாம போயிடுவேன்” வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவன்,

“இனி இப்படி பேசாத! பாப்பாவுக்கு ஒன்னும் ஆகாது. அவ பத்திரமா நம்மகிட்ட வந்துடுவா.  இங்க பாரு அவ நம்மகிட்ட வந்ததும் உன்னைதான் முதல்ல தேடுவா.

அப்ப நீ அவளைப் பார்க்க திடமா இருக்கனும்ல. இந்த பாலை மட்டும் குடிச்சிடும்மா. என்மேல உனக்கு நம்பிக்கை இருக்குல்ல. பாப்பாவ கூட்டிட்டுதான் நான் வீட்டுக்கு வருவேன்.

நீ இப்படி இருந்தா என்னால எப்படி நிம்மதியா வெளிய போக முடியும். நீதான் என் தைரியமே. ப்ளீஸ் நேத்ரா… என்னை நம்பு கண்டிப்பா பாப்பா கிடைச்சிடுவா.”

பேசிப் பேசி ஒருவாறு பாலைக் குடிக்க வைத்தவன் காவல்நிலையம் செல்லக் கிளம்பினான்.

“அம்மா, சும்மா அவளை எதுவும் சொல்லாதீங்க. அவளுக்கு ஆறுதலா இருக்க முடிஞ்சா இங்க இருங்க. இல்லனா உங்க வீட்டுக்கு கிளம்பி போங்க. பாப்பா கிடைச்சதும் சொல்றேன், அப்புறமா கிளம்பி வாங்க.” அன்னையையும் எச்சரிக்க முற்பட,

“புள்ளயத் தொலைச்சிட்டீங்களேன்னு ஆதங்கத்துல நாலு வார்த்தை பேசறதுதான். அதுக்காக என்னைய போகச் சொல்லுவியா நீ? எம்பேத்திய பார்க்காம நான் இங்கேருந்து நகர மாட்டேன்.”

அவரும் அழுது ஆகாத்தியம் செய்ய மண்டை காய்ந்து போனான்.

அந்த நேரம் ஜெகன் அவன் மனைவியோடு ரவியின் வீட்டுக்கு வந்தான். எப்படியும் யாரும் உணவு உண்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் வரும்போதே காலை உணவு வாங்கி வந்திருந்தான்.

ஆறுதல் கூறி பேசி சமாதானப்படுத்தி பெரியவர்களை சாப்பிட வைத்த பிறகு ரவீந்தரையும் சாப்பிடச் சொல்ல,

 மகளைத் தேடி ஓட தெம்பு வேண்டுமே என பசியோ ருசியோ அறியாது இரண்டு இட்லிகளை உண்ட பிறகு ரவீந்தரும் ஜெகனும் கிளம்பினர்.

 இரவு கணவன் கூறிய தகவல்களின் தாக்கம் மனதை விட்டு அகலாமல் வதைக்க, பிள்ளையை தொலைத்த ரவிக்கும் நேத்ராவுக்கும் ஆறுதலாய் இருப்போம் என ஜோவிதாவும் ரவியின் வீட்டுக்கு வந்திருந்தாள்.

ஜெகன் மனைவியையும் ஜோவிதாவையும் நேத்ராவை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்துவிட்டு அவளோடு இருக்கும்படி கூறிவிட்டு ஜெகனும் ரவீந்தரும் புகழேந்தி வரச்சொல்லியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.

காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகம். சென்னை மாநிலத்தில் போலீசாரால் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை பார்க்கும் பணியில் பல போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

 பூஜா காணாமல் போன இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த கேமராக்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார் புகழேந்தி.

பூஜா காணாமல் போன நேரத்தில் நடைபெற்றவைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். சந்தேகப்படும்படி எதுவுமே தோன்றாததில் மேலும் உன்னிப்பாக கவனிக்கத் துவங்கினார்.

தெளிவில்லாத சிறு சிறு உருவங்களாய் மனிதர்களும் விரைந்து செல்லும் வாகனங்கள் தவிர ஏதும் அதில் தெரியவில்லை ரவிக்கும் ஜெகனுக்கும்.

பூஜா விளையாடியது கடற்கரை மணலில் என்பதாலும் அந்த நேரம் இருள் கவிந்து இருந்ததாலும் கேமராவில் காட்சிகள் துல்லியமாக இல்லை.

மேலும் சில நிமிடங்கள் கேமரா புட்டேஜ் பார்ப்பதிலேயே கழிய, புகார் கொடுத்திருந்த காவல்நிலையத்தில் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது புகழேந்திக்கு. அழைத்தவர் இன்ஸ்பெக்டர் பூபாலன்.

அழைப்பை ஏற்று காதில் வைத்ததும் வணக்கம் செலுத்திய இன்ஸ்பெக்டர்,

“சார், அங்க பக்கத்துல குப்பத்து பசங்களை விசாரிக்கச் சொன்னீங்க இல்ல சார். அதுல ஒரு பையன் குழந்தைய பார்த்திருக்கான் சார்.

அதோட அந்த குழந்தைக்கு சாக்லேட் குடுத்து படகு மறைவுக்கு கூட்டிட்டு வரச் சொல்லி யாரோ அவனுக்கு பணம் குடுத்திருக்காங்க. இவனும் குழந்தைய கூட்டிட்டு போய் அங்க விட்ருக்கான்.”

“மை காட்… அந்த பையன் இப்ப எங்க இருக்கான்?”

“ஸ்டேஷன்லதான் சார் இருக்கான்.”

“இன்னும் பத்து நிமிஷத்துல நான் அங்க வரேன்.”

அலைபேசியை வைத்தவர் தகவலை ரவியிடம் கூற, அதிர்ந்து போயினர் ரவியும் ஜெகனும்.

உடன் இருந்த அதிகாரியை சிசிடிவி பதிவுகளை கவனமாக பார்க்கும்படி கூறிவிட்டு, மூவரும் கிளம்பி காவல்நிலையம் வந்து சேர்ந்தனர்.

சற்று கெச்சலாக இருந்தான் அந்த பையன். பதின்மூன்று பதினான்கு வயது மதிக்கத்தக்க சிறுவன். போலீசாரைக் கண்ட பயம் நிறைய இருந்தது அவன் கண்களில். நிறைய அழுதிருக்கிறான் என்பதும் தெரிந்தது.

ஸ்டேஷனில் அமர்ந்திருந்த சிறுவனிடம் சென்றவர்கள், “என்ன படிக்கிற?”

“படிக்கல சார். யாவாரம் பார்க்கறேன்.”

“என்ன வியாபாரம்?”

“பஞ்சு முட்டாய் விக்கிறேன் சார்.”

குழந்தையின் புகைப்படத்தை காட்டி, “நேத்து இந்தக் குழந்தைய பார்த்தியா?” என்று புகழேந்தி வினவ…

“ஆமா சார், இந்த பாப்பா மணல்ல தனியா விளையாடிக்கினு இருந்துச்சி. அதை இட்டுக்கினு வரச்சொல்லி ஒருத்தர் துட்டு குடுத்தாரு சார்.

நானும் முட்டாயி குடுத்து பாப்பாவ அவராண்ட இட்டுக்கினு போனேன் சார்.

உடனே பாப்பாவ கையில தூக்கிக்கினு என்னிய போவச் சொன்னாரு. என்னிய அங்கேயிருந்து தொரத்தி வுட்டுட்டு பாப்பாவ தூக்கினு போயிட்டாரு சார்.

துட்டுக்கு ஆசப்பட்டு இப்புடி செஞ்சிபுட்டேன் சார். அழுத பாப்பாவ வாயப் பொத்தி தூக்கினு போவயில பயமாப் பூடுச்சி. ஒரே ஓட்டமா வூட்டுக்கு ஓடிட்டேன்.

யாராண்ட சொல்றதுன்னு தெரியாம பயந்துகினு இருந்தேன் சார். இன்னிக்கு பொழைப்புக்கூட போவல.

இந்த சாரு வந்து பாப்பா ஃபோட்டோ காட்டி கேக்கவும் நடந்ததை சொல்லிட்டேன் சார்.

நெசமா தெரியாம செஞ்சுபுட்டேன் சார்.”

அழுகையோடு நடந்ததை சிறுவன் விவரிக்க, சில நூறு ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு அவன் செய்த காரியத்தின் விளைவு… நினைக்கையிலே எரிச்சலாக வந்தது அனைவருக்கும்.

“அந்த ஆளு எப்படி இருந்தான். அடையாளம் தெரியுமா. பார்த்தா காட்டுவியா?”

“இல்ல சார் அந்த ஆளு தலையில ஹெல்மெட்டு மாட்டிக்கினே இருந்தான் சார். அதை கழட்டவே இல்ல. அவன் மூஞ்சிய நானு பாக்கவே இல்ல சார்.

இந்த சார் மாதிரி பேண்ட் சட்டை போட்டு கால்ல ஷூலாம் போட்ருந்தான் சார்.” என்று ரவீந்தரைக் காட்டினான்.

இவர்கள் சிறுவனை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே கன்ட்ரோல் ரூமில் இருந்து புகழேந்திக்கு அழைப்பு வந்தது.

கேமரா புட்டேஜ்களை பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிதான் அழைத்திருந்தார்.

“சார், குழந்தை காணாம போன இடத்துல இருந்து கொஞ்சம் தள்ளி கார் பார்க்கிங் ஏரியால ஒருத்தன் வித்தியாசமா பெரிய சைஸ் டிராவல் பேக்கை கார் பேக் சீட்ல வைக்கிறது தெரியுது சார்.

அதுல பாருங்க அவன் தலைக்கு ஹெல்மெட் போட்ருக்கான். கார்ல போறவன் ஹெல்மெட் போட்ருக்கறது கொஞ்சம் நெருடலா தோனுது சார்.”

“காட் இட்… நிச்சயம் அவன்தான் குழந்தைய கடத்தியிருக்கான். புட்டேஜ் தெளிவா இருக்கா? கார் நம்பர் பார்க்க முடியுதா? காரை அவனே டிரைவ் பண்ணிட்டு போறானா?”

“இல்ல சார் கார்ல அவன் லெஃப்ட் சைடுதான் ஏறுறான். அவன் ஏறியதும் கார் மூவ் ஆகுது. சோ ஏற்கனவே காருக்குள்ள ஒருத்தரோ அதுக்கு மேலயோ இருந்திருக்கனும்.

புட்டேஜ் அவ்வளவு கிளியர் இல்ல சார். வொயிட் கலர் மாருதி ஸ்விஃப்ட். காரோட நம்பரை ஸூம் பண்ணி பார்க்கற பிராசஸ் போயிட்டு இருக்கு சார்.

கார் போற பாதையில இருக்கற எல்லா சிசிடிவி கேமராவையும் செக் பண்ணிக்கிட்டு இருக்கோம் சார்.

கார் நம்பர் டிரேஸ் பண்ணதும் உங்களுக்கு கால் பண்றேன் சார்.”

அந்த அதிகாரி அலைபேசி இணைப்பை துண்டித்ததும், ரவியை நோக்கிய புகழேந்தி,

 “குழந்தைய கடத்துன காரை டிரேஸ் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டு இருக்காங்க. சீக்கிரம் குழந்தைய கண்டுபிடிச்சிடலாம்” என்க சற்று ஆசுவாசமாய் இருந்தது ரவிக்கு.

“வொயிட் மாருதி ஸ்விஃப்ட்  உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது வச்சிருக்காங்களா ரவி?”

சற்று யோசித்தவன், “ஆஃபீஸ்ல நிறைய பேர்கிட்ட இருக்கு சார்.”

“ஒரு லிஸ்ட் குடுங்க. செக் பண்ணிடலாம். அப்புறம் நேத்து உங்க வொய்ஃப் பீச்க்கு போற விஷயம் யார் யாருக்கெல்லாம் தெரியும்? இதை நேத்ராகிட்டயும் கேக்கனும்.”

“எனக்கு பீச் போறதா நேத்ரா மெஸேஜ் பண்ணியிருந்தா சார். நான் யார்கிட்டேயும் இதை சொல்லல.

ஆனா என் ஃபிரெண்ட்ஸ் கொலீக்லாம் எதுக்கு சார் என் குழந்தைய கடத்தப் போறாங்க?”

“வழக்கமா இந்த ஏரியாவுல குழந்தைங்களை கடத்துற ஆளுங்களை எல்லாம் விசாரிச்சாச்சு. பணத்துக்காக குழந்தைய கடத்தியிருந்தா இந்நேரம் பணம் கேட்டு ஃபோன் வந்திருக்கும்.

ஆனா இதுவரை அப்படி ஃபோன்கால் வரல. சோ யாரோ நல்லா தெரிஞ்ச ஒருத்தர்தான் குழந்தைய கடத்தியிருக்கனும்.

காரணம் என்னவா வேண்டும்னாலும் இருக்கலாம். உங்க வளர்ச்சியை பிடிக்காதவங்க யாராவது செய்திருக்கலாம்.

உங்க மேல கோபம் இருக்கற யாராவது உங்களை மிரட்றதுக்காக கூட செஞ்சிருக்கலாம்.

கார் நம்பர் கிடைச்சதும், அது போலி நம்பர் பிளேட்டாவே இருந்தாலும் ஓரளவு யார்னு டிரேஸ் பண்ணிடுவோம்.”

புகழேந்தியின் வார்த்தைகளில் அவ்வளவு நம்பிக்கை இருந்தது.

 ஜோவிதாவுக்கும் உடனே அழைத்து நேத்ரா நேற்று கடற்கரைக்குச் சென்றது யாருக்கெல்லாம் தெரியும் என்று விசாரிக்கச் சொல்லியிருந்தார்.

“யாருக்குமே தெரியாது. நான் யாருக்கும் சொல்லல ஜோவிதா. ரவிக்கு மட்டும் ஒரு மெஸேஜ் போட்டுட்டு நான் கிளம்பி போனேன். ஃபிளாட் செக்யூரிட்டிக்கு நான் வெளியே கிளம்பினது தெரியும். ஆனா அவருக்கும் நான் எங்க போறேன்னு தெரியாது.”

“ஃபேஸ்புக்ல இன்ஸ்ட்டால லொக்கேஷன் எதுவும் ஷேர் பண்ணீங்களா? ஸ்டேடஸ் ஏதும் போட்டீங்களா? ஏன்னா இப்ப பலபேர் அதை செய்யறாங்க. நாம எங்க போறோம் என்ன செய்யறோம்னு பகிரங்கமா காட்டிக்கிறது எவ்வளவு ஆபத்துன்னு நிறைய பேருக்கு புரியறதில்ல.”

“இல்ல, அப்படி எதுவுமே நான் செய்யல. காலையில எனக்கும் ரவிக்கும் சின்ன மனஸ்தாபம். அவர் கோபத்துல என் ஃபோனைகூட எடுக்கல. அதனால ஒரு மெஸேஜ் மட்டும் அவருக்கு போட்டேன். வேற யாருக்கும் நான் பீச் போனது தெரியாது.”

நேத்ராவின் பதில்கள் உடனடியாக புகழேந்தியிடம் வந்து சேர்ந்தன.

சற்று நேரத்தில் காரின் நம்பர் டிரேஸ் செய்யப்பட்டு அந்த நம்பருக்கு உரிய நபரும் யாரென்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட, குழந்தையைக் கடத்தியது யார் என்று தெரிந்ததும் ரவி பெரிதாய் அதிர்ந்து போனான்.

 

— தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!