எங்கே எனது கவிதை – 18

love-3189894_960_720-94640626

எங்கே எனது கவிதை – 18

18                      

“கார்த்திக்.. கார்த்திக்.. டேய் அண்ணா.. என்னடா பண்ணுது? எழுந்திரு. இங்க கண்ணைத் திறந்து பாரு..” கார்த்திக்கின் புலம்பலைத் தொடர்ந்து, அவனுக்கு உடல் வியர்க்கவும், உறக்கம் வராமல் பிரண்டுக் கொண்டிருந்த சரவணன், அதைப் பார்த்து பதறிப் போனான்..

“கார்த்திக்.. கார்த்திக்..” அவன் அழைத்தும் கார்த்திக் கண் விழிக்காமல் கிடக்கவும், அவனது குரல் உயர்ந்தது.. அவனது குரலைக் கேட்டு, விழித்துக் கிடந்த பாலகிருஷ்ணன், வேகமாக அவர்கள் இருந்த அறைக்கு வர, சரவணன் பதட்டத்துடன் அவரைப் பார்த்தான்..

“மாமா.. இவனைப் பாருங்க..” என்றபடி அவன் கார்த்திக்கைத் தட்ட,

“என்னாச்சு தம்பி?” அவரும் கார்த்திக்கைத் தட்டிக் கொண்டே கேட்க,

“என்னவோ தூக்கத்துல புலம்பிட்டு இருந்தான் மாமா.. திடீர்ன்னு நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னான்.. அவனுக்கு உடம்பு வேற வேர்க்குது.. எனக்கு பயமா இருக்கு மாமா..” சரவணன் பதட்டத்துடன் சொல்லவும், பாலகிருஷ்ணன் பதறிப் போனார்..

“கார்த்திக்.. கார்த்திக்.. மாப்பிள்ளை..” அவர் அவனைப் பிடித்து உலுக்க, எதில் இருந்தோ விடுபட்டவன் போல கார்த்திக் ‘ஹான்..’ என்று விழித்துக் கொள்ள, ‘உஃப்’ என்று மூச்சு விட்ட சரவணன், தொப்பென்று அவன் அருகில் அமர்ந்து,

“கார்த்திக்.. என்னடா பண்ணுது? நெஞ்சு வலிக்குதுன்னு சொன்ன? உடம்பு ஏதாவது செய்யுதா?” என்று கேட்க,

“இல்லையே.. வலி எல்லாம் இல்லயே.. ஏன் கேட்கற? நல்லா தூங்கிட்டேன் போல..” என்றவன், முகத்தைத் துடைத்துக் கொண்டு, அருகில் இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடிக்கத் துவங்கினான்..

“இல்லடா.. நீ தூக்கத்துல புலம்பிக்கிட்டு இருந்த.. இப்போக் கூட  சொன்னியே.. நெஞ்செல்லாம் வலிக்குதுன்னு.. சொல்லுடா.. நாம டாக்டர் கிட்ட போகலாமா? உடம்பு வேற வேர்க்குது.. எனக்கு பயமா இருக்கு.. எதுக்கும் ஒரு டெஸ்ட் எடுத்துப் பார்க்கலாமா?” அவனது முகத்தைத் துடைத்துக் கொண்டே கேட்க,

“இல்லடா.. டாக்டர்க்கிட்ட போற அளவுக்கு எல்லாம் ஒண்ணும் இல்யே.. நான் எப்போ நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னேன்?” என்றவன், எழுந்து முகத்தைக் கழுவிக் கொண்டு வந்தான்.. அவனது சோர்ந்த முகத்தைப் பார்த்த சரவணன்,

“இல்ல.. எனக்கு பயமா இருக்கு.. நீ வா.. நாம போகலாம்.. எதுக்கும் ஒரு தடவ எடுத்துடலாம்..” தனது பர்சை எடுத்துக் கொண்டே, அவனை அழைக்க,

“ஆமா கார்த்திக்.. நேரமே சரி இல்ல.. ஆதிராவை வேற காணும். இந்த நேரத்துல உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நாங்க என்ன செய்வோம்? நாங்க யாரைன்னு பார்க்கறது? வயசான காலத்துல இதெல்லாம் எங்களால தாங்க முடியல கார்த்திக்.. கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறான்னே தெரியலயே. எதுக்கும் போய் நீங்க டாக்டர பார்த்துட்டு வந்திருங்க.. ஆதிரா கிடச்ச அப்பறம் உங்களுக்கு ஏதாவது உடம்புன்னா அவ தாங்க மாட்டா மாப்பிள்ளை.. அவளோட பலமே நீங்க தானே..” அத்தனை நேரம் இருந்த அழுத்தத்தின் வலியில் பாலகிருஷ்ணன் கதறத் துவங்க, கார்த்திக்கின் கண்களிலும் கண்ணீர் வடியத் துவங்கியது..  

சரவணன் இருவரையும் எப்படி சமாதானப்படுத்துவது என்பது புரியாமல் திணற, அங்கு சத்தம் கேட்டு வந்த சுதா, “இப்போ என்ன ஆச்சுன்னு ரெண்டு பேரும் அழுதுட்டு இருக்கீங்க? தம்பி.. என்ன ஆச்சு? சொல்லுங்க.. போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஏதாவது கால் வந்ததா?” பதட்டத்துடன் கேட்க, சரவணன் செய்வதறியாது திகைத்தான்..

சுதாவும் அங்கு வந்து பதறவும், தன்னைச் சுதாரித்துக் கொண்ட கார்த்திக், “மாமா.. என்னோட பலமும் அவ தானே மாமா.. எனக்கு அவளோட நியாபகங்கள் எல்லாம் நேத்து முட்டி மோதிருச்சு.. அவ இல்லாம எனக்கு முடியல மாமா.. அது தான் அப்படி ஏதாவது சொல்லிட்டேன் போல.. மத்தபடி எனக்கு எந்த வலியும் இல்ல.. கண்டிப்பா நம்ம ஆதிரா கிடைச்சிடுவா மாமா.. நீங்க அழாதீங்க..” அவரைச் சமாதானம் செய்தவன்,

“ஒண்ணும் இல்ல அத்தை.. அவ இல்லாம எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு..” சுதாவை அவன் சமாதானப்படுத்த,

“தம்பி.. அவளுக்கு ஒண்ணும் ஆகிடாதுல.. அவ நம்ம கிட்ட பத்திரமா வந்துடுவா தானே.. அவளைக் கொடுமைப்படுத்தினா எப்படி தாங்குவா? கேட்கற செய்தி எல்லாம் எதுவுமே சரியா இல்லையே தம்பி.. அந்த மாதிரி அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவளும் உயிரோட இருக்க மாட்டா.. நாங்களும் எங்க உயிரையே விட்டிருவோம்..” தரையில் மடிந்து அமர்ந்து, அவர் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதற, வித்யாவும் எழுந்து அங்கு வந்தாள்..

கார்த்திக் தலையை நீவிக்கொள்ள, “அத்தை என்ன பேசிட்டு இருக்கீங்க? ஆதிரா எல்லாம் பத்திரமா வந்திருவா. அது தான் ரெண்டு பெரிய ஐ.பி.எஸ். ஆபிசர்ஸ் அவளைத் தேடிட்டு இருக்காங்க.. கண்டிப்பா இன்னக்கு கிடைச்சிடுவா.. இனிமே இப்படி எல்லாம் யோசிக்காதீங்க..” சரவணன் சொல்லிவிட்டு, கார்த்திக்கைப் பிடித்து இழுத்து,

“என்னடா பேசாம இருக்க?” என்று அதட்ட,

“அத்தை.. அவனுங்க அவளை எல்லாம் எதுவும் செய்ய மாட்டாங்க.. இதுல ஏதோ பெரிய மேட்டர் இருக்கு.. அவனுங்க கூடிய வரை அவளை பத்திரமா தான் பார்த்துப்பாங்க..” என்றவன், ஏதோ யோசனையில் நிற்க,

“என்னடா யோசிக்கிற?” சரவணன் கேட்டான்..

“இது எதுவோ பெரிய நெட்வர்க் இருக்கறது போல எனக்குத் தோணுது.. இல்லன்னா இவ்வளவு சீக்கிரத்துல அவளை மாடில இருந்து வேற இடத்துக்கு ஷிஃப்ட் பண்ணிட்டு இருக்க முடியாது.. அதுவும் வீட்டைத் துடைச்சு எடுத்தது போல அத்தனை சாமானையும் காலி செஞ்சு கிளம்பி இருக்காங்க..” தனது யோசனையை அவனிடம் சொன்னவன்,

“அப்போ கண்டிப்பா ஆதிராவை அவனுங்க பத்திரமா தான் வச்சிருப்பாங்க.. ஒருவேளை பொண்ணுங்களை கடத்தி வெளிநாட்டுக்கு விக்கற கும்பல்ன்னா கண்டிப்பா நம்ம சீக்கிரம் ஸ்டெப் எடுத்தா அவளைக் காப்பாத்திடலாம்.. போலி பாஸ்போர்ட் போல ரெடி செஞ்சு.. டாகுமென்ட்ஸ் எல்லாம் ரெடி செய்ய, அவனுங்களுக்கு குறைஞ்சது ஒரு மூணுல இருந்து நாலு நாள் ஆகும்.. இன்னைக்கு ஞாயிறு.. இன்னைக்கு அவனுங்கலால ஒண்ணும் செய்ய முடியாது.

இந்த மாதிரி கேஸ்ன்னா.. வழக்கமா சூட்டோட சூடா வெளிய எங்கயும் அனுப்ப மாட்டாங்க.. ஏன்னா போலீஸ் கேஸ்ன்னு போகும்போது அலர்ட் ரொம்ப இருக்கும்.. அதனால கொஞ்சம் ஆரப் போட்டு தான் ஆளை மூவ் பண்ணுவாங்க.. அதுக்குள்ள நாம பிடிச்சிடணும்.. அதுக்கு கண்டிப்பா இந்த ஒருவாரம் அவங்க கண்டிப்பா எடுத்துப்பாங்க.. நம்ம டைம் மாக்சிமம் ஃபார்ட்டி ஏய்ட் ஹவர்ஸ்.. கண்டுப்பிடிச்சிடலாம்..” யோசனையுடன் சொன்னவன், சரவணன் அதிர்ந்துப் பார்க்கும் பொழுதே,    

“மதி கிட்ட பேசினா தெரியும்.. அவங்களுக்கும் இந்த டவுட் வந்திருச்சுன்னு நினைக்கிறேன்.. அதனால தான் நேத்திக்கே உடனே கமிஷனர பார்க்கப் போயிருக்காங்க..” என்றவன், முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, தனது வண்டி சாவியை எடுத்துக் கொண்டான்..              

“இந்த நேரத்துல எங்க கிளம்பற?” சரவணன் கேட்க,

“நான் அப்படியே கொஞ்சம் எங்கயாவது சுத்திட்டு வரேன்.. நீங்க தூங்குங்க மாமா.. அத்தை.. கண்டிப்பா நம்ம ஆதிரா நம்மக்கிட்ட பத்திரமா வந்திருவா.. அவளை சீக்கிரம் கண்டுப்பிடிக்கறோம்..” என்றவன், வாசலுக்குச் செல்லவும்,

“நானும் உன் கூட வரேன்..” என்ற சரவணன், அவனுடன் செல்ல, பாலகிருஷ்ணன் சுதாவை எழுப்பி, அறைக்குக் கூட்டிச் சென்றார்..  

மணி அதிகாலை நான்கைக் காட்ட, “நாம கொஞ்சம் அவுட்டர் ஏரியாவை எல்லாம் சுத்திப் பார்த்துட்டு வரலாம்.. ரொம்ப நெருக்கமா வீடு இல்லாத இடம் போல ஏதாவது.. டோல் கண்டிப்பா தாண்டி இருக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன்.. டோல் எல்லாம் நேத்திக்கே மதி அலெர்ட் பண்ணிட்டாங்க.. டோல் க்ராஸ் பண்ணி இருந்தா இத்தனை நேரம் பிடிச்சு இருப்பாங்க..” என்றவன், வண்டியை உதைத்துக் கிளப்பி, சென்னையின் புறநகர் பகுதிகளை யோசிக்கத் துவங்கினான்..

“பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை.. கூடுவாஞ்சேரி.. பெருங்களத்தூர்..” சரவணன் பட்டியலிட்டுக் கொண்டிருக்க,

“இல்ல.. அவங்க வீட்டு பக்கம் இருக்கற ஏரியா பக்கம், அது போல இருக்கற இடம் பார்த்து நாம போவோம்.. ஏன்னா வீட்டையும் காலி பண்ணி அவன் ரொம்ப தூரம் போயிருக்க முடியாது.. அதுக்கான டைம் கண்டிப்பா அவன்கிட்ட இல்ல..” தான் கையாண்ட, கேட்ட, படித்த வழக்குகளில் பெற்ற அனுபவத்தில் தெளிவாக கூறியவன், அது போல யோசித்து, அந்த ஏரியாவை நோக்கி வண்டியைச் செலுத்தினான்..

சிறிது தூரம் கார்த்திக் வண்டியைச் செலுத்தவும், “உனக்கு எப்படி அந்த ஃப்ளாட்ல மாடிக்கு போகணும்ன்னு தோணிச்சு?” சரவணன் கேட்க,

“தெரியலடா.. ஏதோ தோணிச்சு போனேன்.. போயும் எந்தப் பயணும் இல்லையே.. அவ்வளவு பக்கம் இருந்தும் அவளைக் கோட்டை விட்டுட்டேனே..” கார்த்திக் நொந்துக் கொள்ள,

“இல்லடா.. நிஜமா உன்னை ஏதோ சக்தி தான் அங்க கூட்டிட்டு போயிருக்கணும்.. கண்டிப்பாடா கார்த்திக்.. நான் சொல்றதை நம்பு.. அந்த நேரம் ஏதோ உன்னை அங்க இழுத்திருக்கு.. அதே போல இப்போ ஏதாவது தோணுதான்னு பாரேன்..” சரவணன் சீரியஸாக சொல்ல, கார்த்திக் பல்லைக் கடித்தான்..

“ஆமாடா நான் மந்திரவாதி.. என்னை அங்க அந்த சக்தி இழுத்துட்டு போச்சு.. போடா.. ஏதாவது பேசின.. அப்படியே பிடிச்சுத் தள்ளி விடுவேன்..” கார்த்திக் மிரட்ட, சரவணன் அவனது தோளில் கையை வைத்தான்..

“இல்லடா அண்ணா.. நான் விளையாட்டுக்கு சொல்லல.. நீ அவ மேல வச்சிருக்கற அன்பும்.. அவ உன் மேல வச்சிருக்கற அன்பும் தான் உன்னை அங்க இழுத்துட்டு வந்திருக்கு.. அது தான் சொல்றேன்.. அப்படி உனக்கு ஏதாவது தோனற இடத்துக்குப் போ.. நிஜமா நான் உங்க லவ் பார்த்துட்டு மலைச்சு போயிருக்கேன்டா அண்ணா.. அதுவும் நீ அவ மேல வச்சிருக்கிற அன்புக்கு.. அது புரியாம நான் உன்னைத் திட்டி இருந்தேன்னா ரொம்ப சாரிடா.. நீ அவளை ரொம்ப பத்திரமா பார்த்துப்ப.. அவ அன்னைக்கே சொன்னது போல நான் தான் உன்னை புரிஞ்சிக்கல.. அந்த கொஞ்ச நாள்ல உன்னை அவ புரிஞ்சிக்கிட்ட அளவுக்கு கூட நான் உன்னை புரிஞ்சிக்கவே இல்லடா அண்ணா..” மன்னிப்பு வேண்ட,

“அவ என்ன சொன்னா?” அவனைத் திரும்பிப் பார்த்து கார்த்திக் கேட்டான்..

“அன்னைக்கு நீ லவ் பண்றது தெரிஞ்ச பொழுது, அவளைத் திட்டினேன்.. அதுக்கு அவ ‘ஏன் உங்க அண்ணாவ இப்படி சொல்ற? அவரு நல்லவரு எஸ்.பி. அவரை நீ சீக்கிரம் புரிஞ்சிப்ப.. அப்போ நீ ரொம்ப ஃபீல் பண்ணுவன்’னு சொன்னா.. அதே போல இப்போ ஃபீல் பண்றேன்..” சரவணன் சொல்லவும், கார்த்திக்கின் கண்கள் கலங்கியது..

“அவளை எப்போ நான் விரும்பத் துவங்கினேனோ அப்போவே நான் ஃப்ளாட் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்டா.. அவ கூட சந்தோஷமா வாழணும்ன்னு ஆசைப்பட்டேன்.. எனக்கு மனசு கஷ்டம்ன்னா நான் தேடற முதல் ஆள் அவ தான். ஒரு அம்மா போல.. உனக்கும் அவ அண்ணிய விட அம்மாவா இருப்பா.. நம்ம லைஃப்லையும் இனிமே சந்தோஷமும் சிரிப்பும் இருக்கும்.. நமக்கும் நம்ம பிள்ளைங்களுக்கும் நல்ல குடும்ப சூழல் கிடைக்கும்ன்னு எல்லாம் யோசிச்சு வச்சிருந்தேன்டா..

அதுக்காக அம்மா அப்பாவை அப்படியே விட்டுட்டு வர ஐடியா எல்லாம் இல்ல.. அவங்களுக்கும் வேலைக்கு ஆள் எல்லாம் வச்சிட்டு வந்துடலாம்ன்னு தான் நான் முடிவு பண்ணி இருந்தேன்.. அது சுயநலமா இருந்தா.. இருந்துட்டு போகட்டும்.. இந்த முப்பது வருஷத்துல நான் அனுபவிக்காத சந்தோஷமான குடும்பத்தை அனுபவிக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்.. அது தப்பா?” என்று கேட்க,

“இல்ல கார்த்திக்.. தப்பே இல்ல.. நீ தனியா ஃப்ளாட் புக் பண்ணிட்டன்னு சொல்லவும், நீ அப்படியே எங்களை எல்லாம் விட்டுட்டு சுயநலமா தனியா போறன்னு தான் நினைச்சேன்.. ஆதிராவை மனசுல வச்சு நீ இந்த முடிவு எடுத்தன்னு எனக்குத் தெரியாம போச்சு..” என்று வருந்தியவன், அவனது தோளைத் தட்டினான்..

“எப்பவும் போல இப்போவும் ஐ ம் ப்ரவுட் ஆஃப் மை அண்ணா..” சரவணன் சொல்லவும்,

“என்னது?” கார்த்திக் அதிசயமாகக் கேட்க,

“இல்ல.. நீ நல்லா படிச்சு காலேஜ் ஃபர்ஸ்ட் எடுத்து, ஒரு நல்ல வக்கீலா.. நிறைய கேஸ் ஜெயிக்கவும் எனக்கு பெருமையா இருந்தது.. இப்போ உன்னோட ஒவ்வொரு முடிவும் ஆதிராவை யோசிச்சு.. நல்ல குடும்ப சூழல்க்கு எடுத்திருக்கறது எனக்கு பெருமையா இருக்கு..” என்றவன்,

“எப்படியும் அவளைக் கண்டுப்பிடிச்சிடலாம்ல..” என்று கேட்க,

“கண்டிப்பாடா..” என்றவன், அங்கு நின்று அவளைக் கண்டுபிடிக்க முனைப்பாக வண்டிகளை சோதனை செய்துக் கொண்டிருந்த மதியையும் சித்தார்த்தையும் காட்டினான்..

கார்த்திக், வண்டியை கொண்டு சென்று மதியின் அருகில் நிறுத்தினான்.. அந்த நேரத்தில் அவனை எதிர்ப்பார்க்காத மதி, “கார்த்திக்.. என்ன இந்த நேரத்துல இங்க? தூங்கலையா?” என்று கேட்க,

“இல்ல மதி.. தூக்கம் வரல.. அது தான் அப்படியே ரவுண்ட் அடிச்சு பார்க்கலாம்ன்னு வந்தேன்..” என்றவனைப் பார்த்த மதி,

“ஹ்ம்ம்.. கார்த்திக். நாங்க கமிஷனர்கிட்ட பேசிட்டோம்.. எல்லா ஏர்போர்ட், ரெயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட் எல்லாம் அலெர்ட் பண்ணி இருக்கோம்.. நம்ம எல்லா டோல்ஸ்லையும் வெஹிகள் சர்ச் பண்ண சொல்லி இருக்கு.. எல்லா போலீஸ் ஸ்டேஷன்லயும் சொல்லி வச்சிருக்கோம்.. ஆதிராவோட போட்டோவை அனுப்பி இருக்கு.. எனக்கு என்னன்னா..

அவங்க அவ ஃப்ளாட் இருக்கற இடத்துல இருந்து ரொம்ப தூரம் போயிருக்க மாட்டாங்க.. இதுல பெரிய நெட்வர்க் இன்வால்வ் ஆகி இருக்கணும்ன்னு நாங்க சந்தேகப்படறோம்.. கண்டிப்பா சீக்கிரம் கண்டுப்பிடிச்சிடலாம்..” சொல்லிக் கொண்டே வந்தவனை சரவணன் ஆச்சரியமாகப் பார்க்க, அவனது பார்வையைப் பார்த்த மதி, என்னவென்று கேட்டான்..

“கொஞ்ச நேரம் முன்னால அண்ணா அதைத் தான் சொன்னான்.. அது தான் இந்தப் பக்கம் வந்தோம்..” என்றவனைப் பார்த்து புன்னகைத்த மதி,

“உங்க அண்ணா கிரிமினல் லாயர் இல்ல.. இது போல எவ்வளவு கேசஸ் அவரும் பார்த்து இருப்பாரு..” என்றவன்,

“சரி.. நீங்க அப்படியே அந்தப் பக்கம் போய் ஏதாவது உங்களுக்கு தோணுதான்னு பாருங்க.. நாங்க அப்படியே பின்னாலயே வந்து அதைக் கேட்ச் பிடிச்சுக்கறோம்..” என்ற மதியைப் பார்த்த கார்த்திக் தலையில் அடித்துக் கொள்ள, சரவணன் சிரிக்கத் துவங்கினான்..

“எதுக்கு சிரிக்கறீங்க சரவணன்?” சித்தார்த் கேட்கவும்,   

“இப்போ மதி சார் சொன்னதைத் தான் நானும் சொன்னேன்.. அதுக்கு அவன் என்னை பைக்ல இருந்து என்னைப் பிடிச்சுத் தள்ளி விடறேன்னு சொல்றான்.. சார் ப்ளீஸ் என்னைக் காப்பாத்துங்க…” என்ற சரவணனின் தோளைத் தட்டிய மதி,

“அவர் செய்யலைன்னா நான் செய்வேன்..” என்று கேலி செய்ய,  

“சரி.. நேரமாகுது.. வா.. நாம போகலாம்.. நீ பாட்டுக்கு வண்டியை ஓட்டு.. எங்க போகணும்னு தோணுதோ போய் நில்லு. அங்க நின்னுட்டு சார்க்கு கால் பண்ணிடலாம்..” எனவும், சரவணனை முறைத்துவிட்டு, மதியைப் பார்த்தவன், தலையை அசைத்து விட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றான்..

வண்டியை ஓட்டிய கார்த்திக், ஆதிராவின் வீடு இருக்கும் இடத்திற்கு பக்கம் இருந்த ஏரியாக்களின் பக்கம் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.. வண்டியை மெல்ல ஊர்ந்து செல்லும்படி ஓட்டிக் கொண்டே, அங்கும் இங்கும் பார்வையை செலுத்திக் கொண்டே சென்றான்..

அப்படியே ஓட்டிக்கொண்டே ஒரு ஏரியாவிற்குள் நுழைந்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ பரபரப்பு.. அந்த ஏரியாவை மெல்லச் சுற்றி வந்தவன், “இந்த ஏரியாவ பார்த்தியா? ஒரு மாதிரி அக்கம் பக்கம் ரொம்ப வீடு இல்லாம.. அங்க இங்கன்னு இருக்கு.. இதுலயும் அங்க அங்க கேப் விட்டு நிறைய ஃப்ளாட்ஸ் இருக்கு பாரு..” கார்த்திக் சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்ட,

“அப்போ இந்த சைட்ல இருக்க சேன்ஸ் இருக்கா என்ன?” சரவணன் ஆவலாகக் கேட்க,

“தெரியல.. ஆனா.. இது அவ வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற ஒரு ஏரியா.. அதும் ரொம்ப அடர்த்தி இல்லாம அங்க அங்க வீடு இருக்கற ஏரியா.” கார்த்திக் இழுக்க,

“அப்போ மதி சார்கிட்ட சொல்லி இங்க ஒருதடவ தேடித் பார்க்கச் சொல்லலாமா?” என்று கேட்கவும்,

“ஹ்ம்ம்.. பார்ப்போம்.. அந்த ஆதவனோட கார் போல ஏதாவது இருக்காப் பாரு..” என்றவன், அந்த ஆதவனின் காரைப் பற்றிய விவரத்தைக் கூறினான்..   

சரவணின் பார்வையும் அங்கும் இங்கும் அலசிக் கொண்டிருக்க, அங்கு ஒரு இடத்தில் ஆதவனின் கார் போன்ற ஒரு கார், காலி நிலங்களுக்கு நடுவில், முட்கள் படர்ந்த காடுகளுக்குப் பின்புறம் நிற்கவும், கார்த்திக் வண்டியை சடன் பிரேக் பிடித்து நிறுத்தினான்.

அவன் பிரேக் போட்ட வேகத்தில், சரவணன் அவனது மண்டையில் முட்டிக் கொண்டு, தலையைத் தேய்த்துக் கொண்டு நிமிர்ந்தவன்,

“ஏண்டா சொல்லிட்டு பிரேக் போட மாட்ட?” என்று கேட்க,

“சரவணா.. அங்கப் பாரு.. ஆதவனோட கார்..” என்றவன், தனது பைக்கை முறுக்கி, தனது ஹெட்லைட்டின் வெளிச்சத்தில் அந்த முள்மரத்தின் பின்னால் காட்ட, சரவணன் திகைத்துப் போனான்.

“இது தான் அவன் காராடா?” ஆச்சரியத்துடன் கேட்க, மண்டையை அசைத்த கார்த்திக்,

“அப்படி தான் நினைக்கிறேன்.. இதே கலர் தான்..” என்றவன், மெல்ல அந்த காலி நிலங்களுக்கு நடுவில் இறங்கி, தனது செல்லின் வெளிச்சத்தில் நடக்கத் துவங்கினான்..

அருகில் செல்லச் செல்ல,  அவனுக்கு உள்ளுக்குள் திக்திக்கென்றது.. அவனுடன் நடந்த சரவணனோ, “கார்த்திக்.. இது அவன் கார் தானா? இதுல ஆதிரா இருப்பாளா?” என்று கேட்டுக் கொண்டே அவனுடன் நடக்க,

“கொஞ்சம் வாய மூடிக்கிட்டு வாடா..” மனதின் பதட்டமும், ஆதிரா இருக்க வேண்டுமே என்ற பயமும் சேர்ந்து அவன் சரவணனிடம் கடுப்படிக்க, அதைக் கண்டுக் கொள்ளாமல்,

“எனக்கு பயமா இருக்குடா கார்த்திக்.. ஆதிரா கிடைச்சிடுவா தானே..” மீண்டும் கேட்க,

“பேசாம வாய மூடிக்கிட்டு வா.. இல்ல உன்னை இங்க தள்ளி விட்டுடுவேன்..” என்ற கார்த்திக், மெல்ல திக்திக்கென்று வாயில் வந்து துடித்துக் கொண்டிருந்த இதயத்தை அடக்கிக் கொண்டு, தனது மொபைலின் வெளிச்சத்தில் அந்தக் காரைப் பார்த்தவன், அதிர்ச்சியுடன் சரவணனைப் பார்த்துவிட்டு,

“இது அவனோட கார் தாண்டா சரவணா.. இது அவனோட கார் தான்..” என்றவன், உடனே மதிக்கு அழைத்தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!