எங்கே எனது கவிதை – 19

istockphoto-1064120000-612x612-773a3e3f

எங்கே எனது கவிதை – 19

 

19

அந்த இருள் மறைந்து, கதிரவனின் ஒளி வெள்ளம் மெல்ல பூமியில் பரவத் துவங்கிய வேளையில் அந்த இடத்தில், போலீஸ் கார்களின் சைரன் சத்தமும், கையில் இருந்த டார்ச் வெளிச்சத்தின் ஒளியும் அந்த இடத்தைச் சுற்றி காவலர்களின் பேச்சுக் குரல்களும் தான் அந்த ஏரியா மக்களை எழுப்பியது..

காலையிலேயே என்ன பிரச்சனை என்று அவர்கள் வெளியில் வந்து பார்க்க, காவலர்கள் நின்றுக் கொண்டிருந்த இடத்தில் மக்கள் கூட்டமும் கூடத் துவங்கியது.. காவலர்கள் அங்கு நின்றுக் கொண்டிருந்த ஒரு காரைத் திறந்துக் கொண்டிருக்கவும், கூடிய மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  

கார்த்திக் தனது பாக்கெட்டின் உள்ளே இரண்டு கைகளையும் விட்டுக் கொண்டு, தனது படபடப்பை காட்டாமல் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தான்.. அவனது பார்வை அந்த காரிலேயே நிலைக்குத்தி இருக்க, சரவணனோ அழுது விடுவான் போல நின்றிருந்தான்..

அவர்கள் மெல்ல காரின் கண்ணாடியை உடைக்காமல், அந்தக் காரைத் திறக்கும் கருவிகளைக் கொண்டு திறந்துக் கொண்டிருக்க, சரவணனுக்கு பொறுமை பறந்தது..

“என்னடா கார்க் கண்ணாடியை உடைச்சு காரைத் திறக்காம இப்படி பண்ணிட்டு இருக்காங்க? எவ்வளவு நேரம் திறப்பாங்க.. இந்த சினிமால காட்டறது போல எல்லாம் துப்பாக்கில சுட்டு திறக்க மாட்டாங்களா?” சரவணன் அருகில் இருந்த கார்த்திக்கிடம் கேட்க,

“அது எல்லாம் மாட்டாங்க.. இதுல இப்போ எவிடன்ஸ்.. ரொம்ப முக்கியம்.. அதை முடிஞ்ச அளவுல டேமேஜ் செய்யாம தான் திறக்கப் பார்ப்பாங்க..” என்றவன், அந்த அதிகாரி கார்க் கதவைத் திறக்கவும், வேகமாக காரின் அருகே சென்றான்..

அவன் அருகில் செல்ல நகரவும், “கார்த்திக்.. எனக்கு பயமா இருக்குடா..” சரவணன் பதற, அது எதுவும் காதில் வாங்காமல் அவன் அருகில் செல்லவும், அவனைப் பார்த்த சித்தார்த்,

“ஆதிரா இருக்கறது போல இல்ல..” எனவும்,

“எப்படி சார்? ஏன் சார்? ஆதிரா இதுல இல்லாம எப்படி போவா? கார் இங்க தானே இருக்கு..” சரவணனின் பதட்டத்தில், கார்த்திக்,

“கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இரு..” என்று அதட்டிவிட்டு,

“ஏதாவது க்ளூ இருக்கா?” என்று கேட்கவும், அங்கிருந்த தடவியல் நிபுணர்கள்,

“சார்.. இதுல கெரசின் ஸ்மெல் வருது.. சிந்தி இருக்கு சார்.. இங்கப் பாருங்க..” என்று காரின் பின்பக்க இடத்தில் இருந்த எண்ணெயை,  மதிக்கு காட்டி முதல் தடவியல் கண்டுப்பிடிப்பைச் சொல்ல, கார்த்திக்கின் முதுகில் சில்லென்ற உணர்வு.. அவனது உடல் முழுவதும் ஏதோ ஒரு சில்லென்ற உணர்வு தோன்ற, உதட்டைக் கடித்தபடி தனது நடுக்கத்தை மறைத்துக் கொண்டு அவன் நிற்க, சரவணனோ, அந்த பதட்டத்தைத் தாங்க முடியாமல்,

“என்னடா கார்த்திக்.. என்ன என்னவோ சொல்றாங்க?” கார்த்திக்கை உலுக்கிக் கேட்க, கார்த்திக் சிலையென நின்றுக் கொண்டிருந்தான்.

மதி கார்த்திக்கைத் திரும்பிப் பார்க்க, அவனோ அந்தக் காரையே வெறித்துக் கொண்டிருந்தான். “ஏண்டா இவனுக்கு இப்படி இருக்கு? எப்படி இவன் இதை எல்லாம் தாங்கப் போறான்? ம்ப்ச்.. அன்னைக்கு போனை எடுத்துத் தொலைஞ்சு இருக்கலாம்ல..” சித்தார்த் புலம்பிக் கொண்டிருக்க, அந்த தடயவியல் நிபுணர், அந்தக் காரை சோதனை செய்ததில், பின் சீட்டின் அடியில் ஒரு கொலுசு கிடைக்க, அதை எடுத்தவர், மதியிடம் அதை காட்டினான்..

மதியின் பார்வை மெல்ல கார்த்திக்கை நோக்கித் திரும்ப, அதே நேரம் சித்தார்த்தின் பார்வையும் அவனை நோக்கித் திரும்ப, அங்கிருந்த வெளிச்சத்தில் அந்த ஒற்றை கொலுசைப் பார்த்த கார்த்திக்கிற்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது..

“கார்த்திக்.. கார்த்திக்.. ஏதாவது பேசுடா.. இது நீ ஆதிராவுக்கு கொடுத்த கொலுசு தானே.. எனக்கு நல்லாத் தெரியும்.. இந்த ஹார்ட் டிசைன்ல சலங்கை வச்சது நீ தந்ததுன்னு ஆதிரா சொல்லி இருக்கா. அந்த டான்ஸ் போது நீ வராததுக்கு நான் உன்னைத் திட்டினேன்.. அதுக்கு அவ இதைக் காட்டி. நீ வந்து அவளுக்கு இதை கிஃப்ட் செஞ்சன்னு பெருமையா சொல்லி எனக்கு காட்டி இருக்கா.. ஏதாவது வாயைத் திறந்து சொல்லேன்டா.. இது அவளுது தானே..” சரவணன் அவனைப் பிடித்து உலுக்க, அந்த கொலுசில் கண்கள் நிலைக்குத்தி இருக்க, மெல்ல மேலும் கீழும் மண்டையை அசைத்தவனுக்கு இதயம் வெடித்து விடும் போல இருந்தது..

மதியின் தொண்டையும் அடைக்க, அதை சரி செய்துக் கொண்டவன், “ஹ்ம்ம்.. வேற ஏதாவது இருக்கான்னு பாருங்க..” எனவும், அந்த காரின் முன் பக்க சீட்டின் அடியில் ஒரு வாட்ச் கிடைக்கவும்,  அந்த வாட்ச்சைப் பார்த்த கார்த்திக் நொறுங்கிப் போனான்..

கார்த்திக்கின் அதிர்ந்து நொறுங்கிய முகத்தைப் பார்த்த சித்தார்த்தின் மனதும் நடுங்கத் துவங்கியது.. முன்தினம் காலையில் இருந்தே தெய்வாவும் விடாமல் அவனுக்கு அடிக்கடி போன் செய்து, ஆதிராவைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.. அதோடு முன்தினம் இருந்து எப்பொழுதும் கூடவே இருக்கும் கார்த்திக்கின் காதலும், நல்ல குணமும் புரிய, அவனது காதல் கொண்ட மனமும், கார்த்திக்கின் நிலைமைக்கு பரிதாபப்பட்டது..

கார்த்திக்கின் முகத்தைப் பார்த்தவன், மதியைப் பார்த்து தலையை அசைக்க, தானும் கார்த்திக்கின் முகத்தைப் பார்த்த மதியும் ஒரு பெருமூச்சுடன், மேலும் சோதனைகள் செய்ய, அதில் காரின் பின் பக்கத்தில், ஸ்டெப்னி டயர் இருக்கும் இடத்தில் இருந்து ஆதிராவின் ஹான்ட்பேக் கிடைக்கவும், கார்த்திக் வேகமாக, தனது பைக்கின் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டான்..  

அந்தக் காரை முழுவதுமாக சோதனை செய்த பல நிமிடங்களுக்குப் பிறகு, கார் ஸ்டேஷனுக்கு சாட்சிக்காக இழுத்துச் செல்லப்பட, தனது அருகில் இல்லாத கார்த்திக்கைப் பார்த்த சரவணன் அவன் அருகில் சென்று, “டேய் அது எல்லாம் ஆதிராவுது தானே. நீ ஏன் இங்க வந்து உட்கார்ந்துட்ட? அங்கப் போய் ஏதாவது செய்.. ஏதாவது பேசுடா.. சொல்லு.. சொல்லு.” என்று உலுக்க, கார்த்திக் மறுப்பாக தலையசைத்து, தனது தலையைக் கைகளில் தாங்கிக் கொண்டு, அங்கேயே அமர்ந்தான்..

பல காவலர்கள் இணைந்து, அந்த இடத்தைச் சுற்றி இருந்த இடங்களில் தேடத் துவங்கினர்.. விடிந்தும், கார்த்திக்கை வெகுநேரம் காணாமல் பாலகிருஷ்ணனுக்கு கவலையாக இருந்தது.. மகளைக் காணாத தவிப்பு ஒருபுறம் இருந்தாலும், ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவராய், வெளியில் சென்று வீட்டிற்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தவர், அப்பொழுதும் கார்த்திக்கும் சரவணனும் வராமல் போகவும், மிகவும் கவலைக் கொண்டார்..  

“என்னங்க போனவங்க ஏதாவது தகவல் சொன்னாங்களா?” அவர் கொடுத்த பொருட்களை வாங்கிக் கொண்டு சுதா கேட்க,

“அவங்க போய் ரொம்ப நேரம் ஆகுதேப்பா? ஏதாவது ஆதிரா இருக்கற இடம் க்ளு கிடைச்சி இருக்குமோ? அது தான் அவளைக் கையோட கூட்டிக்கிட்டு வந்துடலாம்ன்னு நினைக்கிறாங்களோ?” வித்யா தனது யூகத்தைக் கேட்க, பெரியவரோ உதட்டைப் பிதுக்கினார்.. 

“எனக்கு என்னவோ நேரம் ஆக ஆக பயமா இருக்கு.. மாப்பிள்ளைக்கு ரெண்டு தடவ போன் பண்ணி பார்த்துட்டேன்.. அவரு ஃபோனை எடுக்கவே இல்ல.. அவரு போனை எடுக்காததே எனக்கு பயமா இருக்கு..” பாலகிருஷ்ணன் கவலையாகக் கூறிக் கொண்டே, டைனிங் டேபிளில் அமர்ந்து, சரவணனின் நம்பருக்கு அழைக்கத் துவங்கினார்..  

கார்த்திக்கின் அருகில் பயத்துடன் நின்றுக் கொண்டிருந்த சரவணனின் செல்போன் குரல் கொடுக்க, கார்த்திக் “ம்ப்ச்.. அந்த போனை கொஞ்சம் சைலென்ட்ல போடேன்.. இப்போ யாரு உனக்கு கால் செய்யறது?” என்று கடுப்பாகக் கேட்க,

போனை எடுத்த சரவணன், அதில் தெரிந்த பாலகிருஷ்ணனின் பெயரைப் பார்த்து, பதட்டத்தில், “மாமா.. இங்க அந்த ஆளோட கார் கிடைச்சிடுச்சு..” என்று அவசரமாகச் சொல்ல ஆரம்பித்து, கார்த்திக் சுதாரித்து அவனிடம் இருந்து போனை பிடுங்குவதற்குள், அனைத்தையும் அவரிடம் உளற, அவசரமாக அவனிடம் இருந்து போனைப் பரித்தவன்,

“ஹலோ.. மாப்பிள்ளை.. என்ன சரவணன் என்னென்னவோ சொல்லிட்டு இருக்கார். எனக்கு பயமா இருக்கு.” என்று பதறவும்,

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல மாமா. இப்போதைக்கு கார் கிடைச்சு இருக்கு.. அதுல அவளோட பொருள் எல்லாம் சிலது இருக்கு.. அவ்வளவு தான்.. அதை வச்சு எல்லாம் எதுவும் முடிவுக்கு வராதீங்க.. நம்ம ஆதிரா நமக்கு கிடைப்பா..” கார்த்திக் அவருக்கு ஆறுதலாகச் சொல்ல,

“இல்ல மாப்பிள்ளை.. எனக்கு இங்க இருக்க முடியல.. நான் வரேன்.. எந்த இடத்துல இருக்கீங்கன்னு சொல்லுங்க..” என்று கேட்கவும், இடத்தைச் சொன்ன கார்த்திக்,

“மாமா கவலைப்படாதீங்க.. நான் உங்களுக்கு கால் டாக்சி புக் பண்றேன்.. இப்போதைக்கு வீட்டுல எதுவும் சொல்ல வேண்டாம்.. நீங்க மெதுவா வீட்டுக்கு சாமான் வாங்க போறதா சொல்லிட்டு கிளம்பி வந்திருங்க..” என்று சொல்லவும்,

“சரி” என்று போனை வைத்து, மீண்டும் அவர் கண்களில் வடிந்த கண்ணீரை மறைக்க முகத்தைக் கழுவிக் கொண்டு தயாரானவர்,

“நான் போய் வீட்டுக்குத் தேவையான சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்துடறேன்..” என்றபடி, வாசலுக்குச் செல்ல, சுதா அவரது கையைப் பிடித்து நிறுத்தினார்..

“இப்போ தானே ஏதோ சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்து என்கிட்டே தந்தீங்க? இப்போ மறுபடியும் எங்க போறீங்க?” கவலையாக அவர் கேட்க, தனது தலையில் தட்டிக் கொண்டவர், அவரைப் பார்த்து விழித்த சில நொடிகளுக்குப் பிறகு,

“இல்ல.. மாப்பிள்ளை நான் வாங்கினது தெரியாம ஏதோ கடையில ஆர்டர் செஞ்சு இருக்காராம். இப்போ அது தான் அதை வாங்கச் சொன்னார்.. அவருக்குத் தெரிஞ்ச ஆட்டோவை அனுப்பறாராம்.. அது தான் நான் ரெடியா கீழப் போய் நிக்கறேன்..” என்றவர், அடுத்தக் கேள்வியை சுதா கேட்பதற்குள் கதவை சாதிக் கொண்டு லிப்டினுள் சென்றார்..

பாலகிருஷ்ணன் வருவதற்காக டாக்சியை புக் செய்துவிட்டு,    சரவணனை முறைத்த கார்த்திக், “கொஞ்ச நேரத்துக்கு கையும் வாயையும் வச்சிட்டு பேசாம இரு.. மேல மேல குழப்பாதே..” என்றுவிட்டு, மீண்டும் தனது முகத்தை கைகளில் தாங்கி அமர்ந்தான்..

அவனது மனது ஆதிராவிற்காக துடித்துக் கொண்டிருந்தது.. “கார்ர்ர்..” சரவணன் துவங்க, நிமிர்ந்து அவனை முறைத்தவன்,

“ப்ளீஸ்.. கொஞ்ச நேரம் பேசாம இருடா.. இல்ல கிளம்பி வீட்டுக்குப் போ.. நான் என்ன மனநிலைமைல இருக்கேன்னு தெரியல.. ஏதாவது சொல்லிடப் போறேன்..” என்று அவனை அடக்கியவன், தனது மனதின் படபடப்பை அடக்க முடியாமல் எதிரில் காவலர்கள் ஒவ்வொரு இடமாக தேடுவதையே வெறித்துக் கொண்டிருந்தான்..

காவலர்களின் ஒரு பிரிவினர் அங்கிருந்த வீடுகளில் விசாரித்துக் கொண்டிருக்க, இன்னொரு பிரிவினர் மழையின் சேற்றில் அந்த காரில் இருந்து தெரிந்த சில கால் தடங்களைத் தொடர, வேறு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்க்க, அந்த இடத்தைச் சுற்றி ஒரு பிரிவினர் தேடிக் கொண்டிருக்க, மதியும், சித்தார்த்தும், அந்த கார் நின்ற இடத்தில் இருந்து கண்ணுக்கு எட்டும் தூரம் வரை இருந்த வீடுகளில் விசாரித்துவிட்டு, பைக்கின் அருகே கண்களில் வழிந்த கண்ணீருடன், தனது கன்னத்தை கைகளில் தாங்கிக் கொண்டு அமர்ந்திருக்க, விசாரணை முடித்த மதியும், சித்தார்த்தும் கார்த்திக்கின் அருகில் வந்தனர்..   

“என்னடா வீடு வீடா தேடாம இங்க இருக்கற புதருல என்ன தேடிட்டு இருக்காங்க?” சரவணன் கடுப்பாகக் கேட்க, அதைக் கேட்டுக் கொண்டே வந்த மதி,

“வேற ஏதாவது எவிடன்ஸ் இருக்கான்னு பார்க்கறாங்க..” அவனுக்கு சமாதானம் சொன்னவன், கார்த்திக்கின் தோளை அழுத்தினான்.. அவனது கையை கார்த்திக் பிடித்துக் கொள்ள, மற்றொரு தோளைத் தட்டிக் கொடுத்த சித்தார்த்,

“நல்லதே நினைப்போமே கார்த்திக்..” எனவும், கார்த்திக் பதில் பேசாமல் அமர்ந்திருந்தான்..

அந்த நேரம் ஒரு கார் வரவும், “கார்த்திக்.. மாமா வந்தாச்சு..” என்று சரவணன் அறிவித்து, அவருக்கு தங்கள் இருக்கும் இடத்தைக் கை காட்ட, அந்த காரில் இருந்து இறங்கிய பாலகிருஷ்ணனைப் பார்த்த கார்த்திக்கிற்கு ‘ஹோ’ என்று இருந்தது..  

அவன் அவசரமாக கண்களைத் துடைத்துக் கொள்ள, “என்ன மாப்பிள்ளை? ஏன் இவ்வளவு போலீஸ் இங்க இருக்காங்க?” பதட்டமாக கேட்டுக் கொண்டே தள்ளாடி நடந்து வர, அவர் அருகில் வேகமாக எழுந்துச் சென்று அவர் கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டவன்,  

“ஒண்ணும் இல்ல மாமா.. அந்தக் கார் இங்க இருந்தது. அதுல ஆதிராவோட சில திங்க்ஸ் இருந்தது.. அது தான் வேற ஏதாவது ஆதாரம் கிடைக்குதான்னு பார்த்துட்டு இருக்காங்க..” அவரை சமாதானப்படுத்திய கார்த்திக், அவரை மெல்ல அழைத்துச் சென்று,

“இவரு தான் மாமா காலையில நான் சொன்ன ஆபிசர்ஸ்.. இவரு மதிநிலவன் ஐபிஎஸ்.. இவரு சித்தார்த் ஐபிஎஸ்..” என்று அறிமுகப்படுத்த, மதி அவரைப் பார்த்து தலையசைத்தான்..

“தம்பி.. எப்படியாவது என் பொண்ணை கண்டுப்பிடிச்சுத் தந்திருங்க.. உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்..” என்று கையெடுத்து கும்பிட, மதி அவரது கையைப் பிடித்துக் கொண்டான்..

“கண்டிப்பா சார்.. எங்களால முடிஞ்ச முயற்சி செய்யறோம்..” என்ற மதி, ஆகாங்கு தெரிந்த காவலர்களை பார்த்து, பாலகிருஷ்ணனை நினைத்து கவலை பிறந்தது..

“நீங்க ஏன் சார் வெய்யில்ல இருக்கீங்க? நீங்க வீட்டுக்குப் போங்க.. நாங்க கண்டிப்பா ஆதிராவை கண்டுபிடிக்கறோம்..” சித்தார்த் அவரை அங்கிருந்து அனுப்ப முயல,

“இல்ல தம்பி.. மாப்பிள்ளை வீட்டை விட்டு கிளம்பின நிலையே எனக்கு பயமா இருந்தது.. இங்க வந்து பார்த்தா உலகமே இடிஞ்சு விழுந்தா போல உட்கார்ந்தது இருக்கார்.. நான் அவருக்கு துணையா இருக்கேன்..” என்றவர், கார்த்திக் அமர்ந்திருந்த இடத்தில் அமர, கார்த்திக் அவர் அருகில் அமர்ந்தான்..

“மாமா வெயிலா இருக்கு.. நீங்க வீட்டுக்கு போங்களேன்” காவலர்கள் வேறு ஏதாவது செய்தியைச் சொல்லி விடுவார்களோ.. அவர் அதை எப்படித் தாங்குவார்களோ.. என்ற பயத்தில் அவரை அங்கிருந்து அனுப்ப முற்பட, அவர் விடாப்பிடியாக அங்கேயே அமர்ந்தார்..

மீண்டும் கார்த்திக்கின் கண்கள் அந்த இடத்திலேயே நிலைகுத்தி இருக்க, மதி அங்கிருந்த கடை ஒன்றில் இருந்து அவருக்கு தண்ணீரை வாங்கிக் கொண்டு வரக் கூறி ஒருவரை அனுப்பி வைத்தான்..

மீண்டும் இருவரும் காத்துக்கிடந்த பல நிமிடங்களுக்குப் பிறகு, “மாமா.. நீங்க வீட்டுக்குப் போங்களேன்..” வெயில் உச்சியில் ஏறவும், கார்த்திக் கேட்க, பாலகிருஷ்ணன் மறுப்பாக தலையசைத்துவிட்டு,

“நான் இங்கயே இருக்கேன் கார்த்திக்.. எனக்கு அங்க போனாலும் ஒண்ணுமே ஓடாது..” என்றுக் கூறியவர், அவனுடனேயே இருந்தார்..

அப்பொழுது மதியின் செல்போன் இசைக்க, அதை எடுத்து காதிற்குக் கொடுத்தவன், “என்னது? என்ன சொல்றீங்க? நான் இதோ வரேன்..” என்றவன், சித்தார்த்திற்கு கண் காட்டிவிட்டு,

“கார்த்திக்.. நாங்க ஒரு வேலை விஷயமா இங்க பக்கத்துல போயிட்டு வரோம்.. இங்க இவங்க சர்ச் பண்ணிட்டு இருப்பாங்க..” என்றவன், சித்தார்த்துடன் அவசரமாக பைக்கில் ஏறிச் செல்ல, மதியின் பார்வை பரிமாற்றத்தைக் கண்ட, கார்த்திக்கிற்கு மீண்டும் உள்ளுக்குள் சுளீர் என்ற உணர்வு..

அந்த உணர்வை முறித்துக் கொண்டு ஏதோ ஒரு எண்ணம் மனதினில் தோன்ற, மதிக்கு தலையசைத்துவிட்டு அமைதியாக அந்த இடத்தில் அமர்ந்திருந்தான்..

“இன்னும் எவ்வளவு நேரம் தாண்டா தேடுவாங்க?” கார்த்திக்கிடம் சரவணன் கேட்க, அவன் எந்த பதிலையும் சொல்லாமல்,

“அவங்க ஒரு முடிவுக்கு வர வரை தேடுவாங்க..” என்றவன், அங்கு இருந்த சிறிய கடையில் சென்று, ஒரு குளிர் பானத்தை வாங்கிக் மடமடவென்று குடிக்க, அதன் சோடா புரையேறி, கண்கள் கலங்கும் அளவிற்கு இரும்மத் துவங்கினான்.. இருந்தும் மீண்டும் அடுத்த சோடாவை வாங்கியவன், அதே போலவே குடிக்க, சரவணன் கார்த்திக்கை பயத்துடன் பார்த்தான்..

“கார்த்திக்.. கார்த்திக்.. ஏண்டா இப்படி செய்யற?” சரவணன் பதற, மீண்டும் ஒரு சோடாவை அவன் கேட்க, கடைக்காரர் கார்த்திக்கைப் பார்த்துக் கொண்டே அதை எடுத்து நீட்டவும், மீண்டும் கடகடவென்று குடித்தவன், தனது வாயைத் துடைத்துக் கொண்டு, அமைதியாக சரவணனைப் பார்த்தவன்,

“உனக்குத் தெரியுமா? எனக்கு அவளைப் பார்க்காம ஒரு நாள் போகாது.. காலைல கண் விழிச்சதும் அவக்கிட்ட வீடியோ கால்ல பேசிட்டு தான் நான் ரூமை விட்டே வெளிய வருவேன்.. அந்த வீக் என்ட் எப்போ வரும். அவளைப் பார்க்கலாம்ன்னு அந்த ரெண்டு நாளுக்காக அந்த வாரம் முழுதும் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்.. என்னைப் பத்தி முழுசா புரிஞ்சிக்கிட்டவ அவ..

இந்த ரெண்டு நாளா அவளைப் பார்க்காம நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு உனக்குத் தெரியுமா? அதை விட அவ என்ன கஷ்டப்படறாளோன்னு இருக்கு.. அவ பசி தாங்க மாட்டா சரவணா.. அதோட அவ வாட்ச்.. அந்த வாட்ச் அவ டென்த்ல டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் வாங்கினதுக்கு அவ அப்பா வாங்கித் தந்தது.. நான் அவளுக்கு ஒரு வாட்ச் வாங்கித் தந்ததுக்கு கூட.. ‘அப்பு சாரி அப்பு.. செண்டிமெண்ட்டா நான் இது தான் போட்டுப்பேன் அப்பு.. ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க’ன்னு கெஞ்சினா..” என்று தனது கண்களில் வழிந்த தண்ணீரை துடைத்துக் கொண்டவன்,

“எனக்கு நேரம் ஆக ஆக பயமா இருக்கு.. அவ கிடைச்சிடுவா இல்ல..” சரவணனின் கையைப் பிடித்துக் கொண்டு கதறியவன், மீண்டும் தண்ணீரை வாங்கிக் குடித்தான்.. மனதினில் இருந்த அந்த வருத்தம் அடங்கும் என்று எண்ணியவன், அதில் தோற்று, மதிக்கு அழைக்க, அவனது செல்போன் எடுக்கப்படாமல் போய்க் கொண்டிருந்தது..                               

“மதி போனை எடுக்க மாட்டேங்கிறாரே..” என்ற கார்த்திக், சோர்ந்து போய் அந்தக் கடையின் முன்னாலேயே அமர, பாலகிருஷ்ணன் செய்வதறியாது நின்றார்..

“மாமா.. நீங்க வீட்டுக்குப் போங்களேன்..” என்று கார்த்திக் கெஞ்ச,

“இல்ல மாப்பிள்ளை.. நான் போக மாட்டேன்.. இங்க தான் இருப்பேன்..” என்று அடம் பிடிக்க, அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாமல், திக் திக் நிமிடங்களுடன் இருவரும் அந்த இடத்தில் அமர்ந்தனர்..

அந்த இடத்தை சோதனை செய்த காவலர்கள், எதுவும் கிடைக்காமல் ஒரு இடத்தில் கூட, அந்த நேரம் கார்த்திக்கிற்கு மதியிடம் இருந்து கால் வந்தது..

“ஹலோ..” கார்த்திக்கின் குரல் கரகரக்க,

“நான் மதி பேசறேன்.. நான் உங்க நம்பருக்கு ஒரு லொகேஷன் அனுப்பறேன்.. கொஞ்சம் நீங்க வரீங்களா?” மதியின் குரல் தயக்கத்துடன் ஒலிக்க, கார்த்திக்கின் இதயம் வெடித்துவிடும் போல இருந்தது..

“ஹ்ம்ம்.. இல்ல.. நான் வரலை..” என்றவன், மெல்ல எழுந்துக் கொண்டு, மதி அனுப்பி இருந்த லொகேஷனைப் பார்த்து,

“மதி.. என்னை எங்கேயோ வரச் சொல்றார்.. எனக்கு அங்க எல்லாம் போக வேண்டாம்..” என்றவன் அப்படியே அமர்ந்துக் கொண்டான்..

“எழுந்திரு கார்த்திக்.. அவர் எங்கயோ வரச் சொல்றார் தானே. போகலாம் வா…” சரவணன் அவனைப் பிடித்து எழுப்பினான்..

“இல்லடா நான் போக மாட்டேன்.. எதா இருந்தாலும் அவங்க பார்த்துக்கட்டும்.” என்று கார்த்திக் அடம் செய்துக் கொண்டு நிற்க, பாலகிருஷ்ணன் அவனைப் புரியாமல் பார்க்க, சரவணனும் அதே நிலையில் தான் இருந்தான்..

“அவர் வரச் சொல்றார்ன்னா ஏதோ ரீசன் இருக்குன்னு தானே அர்த்தம்?” சரவணன் கேட்டுக் கொண்டிருக்க, அதற்குள் அங்கிருந்த ஒரு ஜீப் கார்த்திக்கின் அருகில் வந்து நிற்க, கார்த்திக் அதை நிமிர்ந்துப் பார்த்தான்..

“மதி சார் உங்களைக் கூட்டிக்கிட்டு வரச் சொன்னார்..” அந்த ஓட்டுனர் சொல்லவும், பாலகிருஷ்ணன் அதிர்ச்சியுடனும் பயத்துடனும் கார்த்திக்கைப் பார்க்க, கார்த்திக் மறுப்பாக தலையசைத்துக் கொண்டு நின்றான்..

அதற்குள் சித்தார்த்தும் அங்கு வந்திருக்க, அவனைப் பார்த்த கார்த்திக், “இல்ல நான் எங்கயும் வரல.. என்னை விட்டுருங்களேன்.. என்னால எதையும் பார்க்க முடியாது.. நான் அதைப் பார்க்கறதுக்கு செத்திருவேன்..” சிறுபிள்ளை போல சித்தார்த்தைப் பார்த்து அவன் கெஞ்ச,

“ப்ளீஸ் கார்த்திக்.. வாங்க.. ஒரு பார்மாலிட்டிக்கு தான்.. வந்து.. இல்லைன்னா இல்லைன்னு சொல்லிட்டு போங்களேன்..” சித்தார்த் சொல்ல,

“தம்பி.. என்ன ஃபார்மாலிட்டி? என்ன வந்து பார்க்கணும்?” நடுக்கத்துடன் பாலகிருஷ்ணன் கேட்க, அவரைப் பாவமாகப் பார்த்தவன், ‘ஒன்றும் இல்லை’ என்பது போல தலையசைத்து,

“கார்த்திக்.. அவரோட நிலைமையை யோசிச்சுப் பாருங்க.. உங்களுக்கே தெரியும்.. நீங்க ஒரு லாயர்.. ப்ளீஸ்.. வாங்க கார்த்திக்..” சித்தார்த் கெஞ்ச, பாலகிருஷ்ணனைப் பார்த்தவன், அமைதியாக ஏறி காரில் அமர்ந்தான்..

சித்தார்த்தைப் பார்த்துக் கொண்டே பாலகிருஷ்ணன் குழப்பமாக காரில் ஏற, சரவணன் ஒன்றுமே புரியாமல் அவர்களைத் தொடர்ந்து வண்டியில் ஏற, சித்தார்த் முன் பக்கம் ஏறிக் கொண்டு கைக் காட்ட, வண்டி அந்த இடத்தை நோக்கி நகர்ந்தது..

Leave a Reply

error: Content is protected !!