எங்கே எனது கவிதை – 20

எங்கே எனது கவிதை – 20
20
கார்த்திக்கை அழைத்துக் கொண்டு சித்தார்த் ஒரு ஏரிக்கரையின் பக்கம் செல்ல, அந்த இடத்தைப் பார்த்த கார்த்திக்கிற்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.
“சித்தார்த் வேண்டாம் சித்தார்த்.. நான் அங்க வரல.. என்னால தாங்க முடியல.. நான் அதுக்கு செத்தே போயிடுவேன்..” கார்த்திக் புலம்பிக் கொண்டே வர, பாலகிருஷ்ணனுக்கோ நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்வு மெல்ல புரியத் தொடங்கியது..
“என்ன? என்ன? ஆதிராவுக்கு என்ன ஆச்சு? சார்? என் பொண்ணுக்கு என்ன? அவ கிடைச்சிட்டாளா?” அவரது கைகள் நடுங்கக் துவங்க, அவரது மனதோ அதற்கு நேர்மாறாக, எதற்காக போய்க்கொண்டிருக்கிறோம் என்று புரிந்து அடித்துக் கொள்ளத் துவங்கியது..
கண்களில் கண்ணீருடன் கார்த்திக்கின் கைகளை இறுக பிடித்துக் கொண்டவர், “கார்த்திக்.. இப்போ எங்க போயிட்டு இருக்கோம்? ஆதிராவுக்கு ஒண்ணும் இல்ல தானே..” என்று கேட்க, அவரது கையை எடுத்து தனது முகத்திலேயே அடித்துக் கொண்டவன்,
“அதை நான் எப்படி சொல்வேன்?” என்றபடி கதறத் துவங்கினான்..
“என்ன? என்ன சொல்றீங்க கார்த்திக்? ஏன் உங்களால சொல்ல முடியாது? ஆதிரா நம்மளை விட்டு போயிட்டாளா?” பாலகிருஷ்ணன் கார்த்திக்கின் தோளில் சாய்ந்து கதறத் துவங்க, அவரை அணைத்துக் கொண்டவன், தனது தலையிலேயே அடித்துக் கொண்டான்..
“நான் தப்பு பண்ணிட்டேன்.. நான் போனை எடுத்திருந்தா இப்படி நடந்திருக்காதே.. நான் இப்போ என்ன செய்வேன்?” அவனது கதறலைக் கேட்க முடியாமல், சித்தார்த் கண்கள் கலங்க அவனது கையைப் பிடித்துக் கொண்டான்..
“கார்த்திக்.. அது உங்க மேல தப்பு இல்ல கார்த்திக்.. இடம் சரி இல்லாததுனால நீங்க போனை எடுக்கல.. நீங்க அதை எல்லாம் நினைக்காதீங்க..” சித்தார்த் அவனுக்கு ஆறுதல் சொல்ல, சரவணன் முகத்தை மூடிக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தான்..
“நான் போனை எடுத்திருக்கணும்.. என் தப்பு தான்.. இப்போ நான் என்ன செய்வேன்?” கார்த்திக் புலம்பிக் கொண்டே வர,
“இதை எப்படி அவ தாங்கப்போறா? என் பொண்ணு என்ன எல்லாம் கஷ்டப்பட்டாளோ தெரியலையே.. இதைக் கேட்டா அவ அம்மா உயிரையே விட்டிருவாளே.. இனிமே நாங்க என்ன செய்யப் போறோம்? அவளுக்காக தானே நாங்க வாழ்ந்துட்டு இருந்தோம்..” பாலகிருஷ்ணனின் கதறல் சித்தார்த்தைக் கலக்கியது..
“ஆதிராம்மா.. ஏண்டி இப்படி செஞ்ச? எங்களை எல்லாம் தவிக்க விடறியே.. என்னால முடியலயே..” ஆதிராவின் சிரித்த முகம் கண்களில் தோன்ற, தனது நெஞ்சை அழுத்திக் கொண்டான்..
“இல்ல.. அது அவளா இருக்காது.. நல்லா பார்த்தீங்களா சித்தார்த்?” கார்த்திக் சித்தார்த்திடம் கேட்க, மறுப்பாக தலையசைத்த சித்தார்த், அவனைப் பார்க்க முடியாமல் திரும்பிக் கொண்டான்..
அந்த இடம் வந்ததும், சித்தார்த் அவனது கையைப் பிடித்து அழைக்க, மதி அவன் அருகில் ஓடி வந்தான்.. அதற்குள் அதியமானும் அங்கு வந்திருக்க, அவனைப் பார்த்ததும் கார்த்திக், “சார்.. கேஸ் விஷயமா பேசணுமா? வாங்க நாம போகலாம்.. இவங்க என்ன சும்மா அலைக்கழிச்சிக்கிட்டு இருக்காங்க..” என்றபடி அதியமானின் கையைப் பிடித்துக் கொண்டவன்,
“மதி.. இதோ நான் ஒரு ரெண்டு நிமிஷம் வரேன்..” என்று அங்கிருந்து நகரப் பார்க்க, மதி ஒரு பக்கமும், அதியமான் ஒரு பக்கமும் அவனது கையை இறுகப் பிடித்துக் கொண்டனர்..
அதியமானின் கண்கள் கலங்கி இருக்க, அவனது கையைத் தட்டிக் கொடுத்த மதி, “கார்த்திக்.. இங்க நான் சொல்றதைக் கேளுங்க..” அவனைப் பிடித்து உலுக்க,
“நான் தப்பு பண்ணிட்டேன் மதி.. அவ இல்லாம நான் இனிமே என்ன செய்யப் போறேன்?” என்று புலம்ப, மதி அவனைப் பிடித்து நிமிர்த்தினான்.
“கார்த்திக்.. நீங்க கொஞ்சம் தைரியமா இருங்க கார்த்திக்.. ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க.. ப்ளீஸ்..” என்று கெஞ்ச, கார்த்திக் மதியின் முகத்தைப் பார்க்க,
“அந்த பாடி..” மதி தொடங்குவதற்குள்,
“இல்ல. இல்ல அப்படிச் சொல்லாதீங்க..” கார்த்திக் அலறத் துவங்கினான்..
தனது அடைத்த தொண்டையை சரி செய்துக் கொண்டவன், “கார்த்திக்.. அவளை இந்த நிலையில அவரு பார்த்தா தாங்க மாட்டார்.. எங்களுக்கு கோவாபரேட் பண்ணுங்க ப்ளீஸ்.. ஒரு ரெண்டு நிமிஷம்..” என்று கெஞ்ச, அவனது சட்டையைப் பிடித்துக் கொண்டவன், அங்கு வெள்ளைத் துணியில் மூடப்பட்டிருந்த சடலத்தைப் பார்த்து, அழுகை வெடிக்க,
“என்னோட ஆதிராவுக்கு ஒண்ணும் ஆகி இருக்காது மதி.. அவ இல்ல அது. நான் பார்க்காமையே சொல்றேனே.. ப்ளீஸ் என்னை விட்டுடுங்களேன்.. எனக்கு நெஞ்சு வலிக்குது..” அந்த இடத்தைக் கைக் காட்டி கார்த்திக் கதறத் துவங்க, பாலகிருஷ்ணன் அந்த சடலத்தின் அருகே ஓடிச் சென்று, நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறித் துடித்தார்..
முட்டி போட்டு அமர்ந்தபடி சரவணன் அழுதுக் கொண்டிருக்க, “டேய்.. இவங்க எல்லாம் தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்காங்கடா.. அது அவ இல்ல.. வா.. நாம வீட்டுக்குக் கிளம்பலாம்.. முதல்ல எழுந்திருச்சு வாடா..” கார்த்திக், சரவணனிடம் எரிந்து விழுந்தான்..
அதற்குள் பாலகிருஷ்ணன் அந்தத் துணியை விலக்கிப் பார்த்தவர், “ஆதிரா..” என்ற அலறலுடன் மயங்கிச் சரிய, சித்தார்த் அவரைத் தாங்கிப் பிடித்தான்.. அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, அவரது வாயில் தண்ணீர் புகட்டி, அவரை அங்கிருந்து நகர்த்தும் முயற்சியில் சித்தார்த்தும், சில காவலர்களும் இருக்க, சரவணனுக்கோ பாலகிருஷ்ணன் விலக்கிய துணியின் அடியில் இருந்த முகத்தைப் பார்த்து நடுக்கம் பிறந்தது.. அவன் முகத்தை மூடிக் கொண்டு அப்படியே நிலத்தில் அமர்ந்து அழுதுக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்த கார்த்திக் திகைத்து நின்றிருந்தான்..
“கார்த்திக்.. ப்ளீஸ்.. என் கூட வாங்க.. உடல் முழுசுமே தீயில எரிஞ்சு இருக்கு கார்த்திக்.. முகத்தை சரியா அடையாளம் காண முடியல.. ஒரு காலுல கார்ல பார்த்த ஆதிராவோட இன்னொரு கொலுசு இருக்கு.. அது மட்டும் தான் மிச்சம் இருக்கு..” மதி அவனது காதில் சொல்லிக் கொண்டே, அவன் திகைத்து நின்றதைப் பயன்படுத்தி, அவனை இழுத்துக் கொண்டு அந்த இடத்திற்குச் சென்றான்..
அங்கு துணியின் அடியில் ஒரு பெண்ணின் சிதிலமடைந்த உடல் கிடக்க, அதைப் பார்த்த கார்த்திக், கதறத் துவங்கினான்.. அவனது குரல் கேட்டதும் அவனது அருகில் தள்ளாடி எழுந்து வந்த பெரியவர்,
“என் ஆதிராவைப் பார்த்தீங்களா கார்த்திக்? முகத்தைக் கூட கடைசியா பார்க்க முடியாத அளவுக்கு இப்படி செஞ்சு இருக்கானுங்களே.. என் குழந்தையை கடைசியா பார்க்க முடியாத அளவுக்கு செஞ்சிட்டாகளே..” கார்த்திக்கைப் பிடித்துக் கொண்டு அவர் கதற, பதில் சொல்ல முடியாமல், அந்த இடத்தையே பார்த்துக் கொண்டு கார்த்திக் நின்றான்..
“உடம்புல சூடு படும்போது அவ எப்படி தவிச்சாளோ? படுபாவிங்க அவளை என்ன கஷ்டப்படுத்தினாங்களோ தெரியலையே.. என் பொண்ணு சின்ன காயம் கூட தாங்க மாட்டாளே..” என்றவர், கார்த்திக்கின் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு,
“கடைசியில கஷ்டப்பட்டு இருக்க மாட்டா இல்ல..” பாலகிருஷ்ணன் கேட்கக் கேட்க, கார்த்திக்கின் கைகள் நடுங்கத் துவங்கியது..
ஒரு கையால் பாலகிருஷ்ணனைத் தாங்கியவன், மறுகையால் மதியின் சட்டையை கெட்டியாக பிடித்துக் கொண்டு, “நான் அவளை காப்பாத்தாம விட்டுட்டேன் இல்ல.. அவ என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தா.. நான் அவளை ஏமாத்திட்டேன்.. நான் தான் அவளைக் கொன்னுட்டேன்.. நான் செஞ்சத் தப்புக்கு இப்படி பெரிய தண்டனையத் தந்துட்டாளே..” கார்த்திக் கதற, மீண்டும் அந்த உடலைப் பார்த்த பெரியவரும் துடித்து கதறத் துவங்கினார்.
சரவணன் அந்த பெண்ணின் உடலைப் பார்த்து வாயைப் பொத்திக் கொண்டு, “ஆதிரா.. எழுந்திரு.. ஆதிரா..” என்று கத்திக் கொண்டிருந்தான்.
“எங்களை எல்லாம் ஏமாத்திட்டு போயிட்டியேடா என் செல்லமே. நீ இல்லாம நாங்க என்ன செய்யப் போறோம்? இப்படி பார்க்கவா உன்னை நாங்க அருமை பெருமையா பெத்து எடுத்தோம்?” பாலகிருஷ்ணன் ஒரு பக்கம் கதற, சித்தார்த் அவரைத் தாங்கிப் பிடித்தான்..
“கார்த்திக்..” அதியமான் அழைக்க, மதியின் சட்டையை விடுத்த கார்த்திக், இறந்து கிடந்த அந்த பெண்ணின் முகத்தில் இருந்து துணியை மீண்டும் விலக்கிப் பார்த்து, தரையில் மடிந்து சரிந்தவன், தனது முகத்திலேயே அடித்துக் கொண்டான்..
“ஹையோ. ஹையோ.. ஆதிராம்மா..” முகத்தில் முகத்தில் அடித்துக் கொண்டு கதற, அவனது அருகில் குனிந்த மதி,
“முகம்ல இருந்து கால் வரை அடையாளம் தெரியாதது போல எரிக்க ட்ரை பண்ணி சிதைச்சு இருக்காங்க.. ஒரு கால் மட்டும் தான் தப்பிச்சு இருக்கு.. அவனுங்களா விட்டாங்களா.. இல்ல கவனிக்களையான்னு தெரியல.. ஆனா.. அதுல இருந்த கொலுசை வச்சுத் தான் அடையாளம் கண்டு பிடிச்சோம்.. நீங்களும் கன்ஃபார்ம் பண்ணிட்டீங்கன்னா மீதியைப் பார்க்கலாம்..” மதி அவனைத் தடுத்துச் சொல்லவும்,
நெஞ்சில் அடித்துக் கொண்ட கார்த்திக், வேகமாகத் தவழ்ந்து அந்த கால்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.. பாதி உருகி உருகாமல் இருந்த கொலுசை வருடியவன்,
“ஆதிராம்மா.. என்னை இப்படி ஏமாத்திட்டயேடி.. எவ்வளவு ஆசையா நீ வரதை தெரிஞ்சிக்க போட்ட கொலுசு இது.. கடைசியில இதுக்காடி யூஸ் ஆகணும்?” நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதவன், எப்பொழுதும் அவளது பாதத்தைப் பிடித்து விடுவது போல பிடித்து விட்டு, வருடியபடி, தனது தலையை அதிலேயே இடித்துக் கதறியவன், ஒரு சில நொடிகளில் பட்டென்று அழுகையை நிறுத்தி, சட்டையைத் தூக்கி தனது முகத்தைத் துடைத்துக் கொண்டவன், அந்தப் பாதத்தை மெல்ல ஒவ்வொரு இன்ச்சாக பிடித்துப் பார்த்தான்..
சட்டென்று அவனது அழுகை நின்று, அவன் அந்த சடலத்தின் பாதத்தை ஆராய்ந்துக் கொண்டே, அவனது முகம் மெல்ல இயல்புக்குத் திரும்பவும், மதியும், சித்தார்த்தும் திகைப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“மாமா.. மாமா.. இந்த காலைத் தொட்டுப் பாருங்களேன்..” என்று பரபரப்பாக அழைக்க, அழுவதை நிறுத்தி பாலகிருஷ்ணன் அவனை நிமிர்ந்துப் பார்க்க,
“மாமா. இது ஆதிரா இல்ல மாமா.. இது ஆதிராவோட கால் இல்ல.. நல்லாத் தொட்டுப் பாருங்க..” என்றவன், அங்கிருந்து எழுந்துக் கொண்டு, வேகமாக ஒரு புதரின் பின்னால் சென்றான்..
“என்னாச்சுடா இவனுக்கு? ஏதாவது டிப்ரஸ் ஆகிட்டானா? ஏதாவது பண்ணிக்கப் போறான்..” மதி பதற, பாலகிருஷ்ணன் அவன் உறுதியாக சொன்னதைக் கேட்டு, மெல்ல அந்தப் பாதத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்க,
“நான் போய் பார்த்துட்டு வரேன்.. நீ இவங்களைப் பாரு” என்ற மதி, ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வேகமாக அவன் இருக்கும் இடத்திற்கு அருகில் செல்ல, அங்கு கார்த்திக்கைப் பார்த்த மதி, திகைத்து நின்றான்..
அவன் திகைத்து நிற்கவும், சித்தார்த் அங்கு ஓடி வர, அவனும் கார்த்திக்கைப் பார்த்து திகைத்துப் போனான்.. அவன் வரிசையாக வாங்கிக் குடித்த சோடாக்களும், தண்ணீரின் பலனும் சேர்ந்து, வயிறு முட்டிக் கொண்டு வரவும், புதரின் பின்னால் ஓரமாக ஒதுங்கி இருந்தவனைப் பார்த்து இருவருமே திகைத்துத் தான் போயினர்..
“கார்த்திக்..” மதி திகைத்து அழைக்க,
“ஒரு ரெண்டு நிமிஷம் வரேன்.. அப்போ ஏதோ இதுல சோடாவா குடிச்சிட்டேன்.. அது இப்போ வயிறு முட்டுது..” என்றவனை மதி திகைப்பாகவே பார்த்தான்..
“மதி.. ஒருவேளை ஷாக்ல ஏதாவது ஆகிருச்சா?” சித்தார்த்திற்கும் பதறியது..
அவர்கள் திகைத்து நிற்கையில், “மதி.. அந்த பாட்டிலை தூக்கிப் போடுங்க..” அவர்கள் அங்கு வந்ததைப் பார்த்து கார்த்திக் கேட்கவும்,
“கார்த்திக்.. என்ன இது? என்ன ஆச்சு?” மதி கேட்டுக் கொண்டே, அவனிடம் தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போட, தனது முகத்தை நன்றாக கழுவிக் கொண்டு, அந்த பாட்டிலைத் தூக்கிப் போட்டவன், மதியின் அருகில் வந்து நின்றான்..
“மதி.. அது ஆதிரா இல்ல.. நிஜமா சொல்றேன்.. அந்தக் கால் ஆதிராவோட கால் இல்ல.. ஆதிரா எங்கயோ பத்திரமா இருக்கா..” கார்த்திக் சொல்லவும், சித்தார்த்தும் மதியும் ஒருவரை ஒருவர் கவலையாகப் பார்த்துக் கொண்டனர்..
“கார்த்திக்.. அது எப்படி உறுதியா சொல்றீங்க?” அவனைப் பாவமாகப் பார்த்துக் கொண்டு மதி கேட்டான்..
“எனக்கு என் பேபிடாலோட பாதம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதா? அவ கால் அப்படியே மொது மொதுன்னு அவ்வளவு சாஃப்ட்டா இருக்கும். இந்த பாதம் ஃப்ளாட்டா இருக்கு.. அது அவ கால் இல்ல மதி.. நான் இதைச் சொல்றதுக்கு என்னை லூசுன்னு கூட நினைச்சிக்கோங்க.. ஆனா.. நான் சொல்றது தான் உண்மை.. அது என் பேபிடால் இல்ல.. அவங்க நம்மளை டைவர்ட் பண்றாங்க..” என்ற கார்த்திக், சித்தார்த்தும் மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே,
“நீங்க வேணா டி.என்.ஏ டெஸ்ட் பண்ணிப் பாருங்க.. நான் சொல்றது புரியும்.. இது சத்தியமா என்னோட ஆதிரா இல்ல.. இது நம்மளை டைவர்ட் பண்ண அவங்க செஞ்ச வேலை.. கண்டிப்பா இது வேற யாரோ.. ஆதிரா இல்ல மதி.. சொன்னா புரிஞ்சிக்கோங்க..” என்றவன், தனது முகத்தைத் துடைத்துக் கொண்டு, தனது பாக்கெட்டில் கையை விட்டு, தனது மொபைலை வெளியில் எடுத்தான்.. அதில் ஆதிராவின் கொலுசிட்ட பாதத்தின் புகைப்படத்தைக் காட்ட, மதி அதைப் பார்த்துவிட்டு, சித்தார்த்திடம் நீட்டினான்..
“மதி.. போய் அந்த கார் நின்ன இடத்துலேயே சுத்தி நல்லாத் தேடச் சொல்லுங்க.. ஆதிரா அங்க தான் இருப்பா.. என் மனசு பொய் சொல்லல.. அது எப்படி பொய் சொல்லும்?” என்று கேட்டவன், அதே புன்னகை முகத்துடன், அந்த சடலத்தின் அருகில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனைப் பிடித்துத் தூக்கி,
“மாமா.. இது நம்ம ஆதிரா இல்ல.. வாங்க நாம வீட்டுக்கு போகலாம்.. ஆதிரா எங்கயோ பத்திரமா இருக்கா.. அவங்க ஆதிராவோட கொலுசைப் போட்டு நம்மளை திசை திருப்பப் பார்க்கறாங்க..” என்று நம்பிக்கையாகச் சொல்ல, அழுதுக் கொண்டிருந்தவர் அவனை திகைப்புடன் பார்க்க, சரவணன் அவசரமாக எழுந்துக் கொண்டு, அவனது கன்னத்தில் தட்டினான்..
“கார்த்திக்.. என்னடா சொல்ற? என்ன சொல்ற? இந்த இது.. காலுல நீ அவளுக்கு கொடுத்த கொலுசு இருக்கே?” சரவணன் அவனைப் பிடித்து உலுக்க,
“அந்த கொலுசு இருந்துட்டா அது ஆதிரா ஆகிடுமா? இது கண்டிப்பா ஆதிரா இல்லடா.. வேற ஏதோ பாடில என் ஆதிராவோட கொலுசை எடுத்து போட்டு இருக்காங்க.. நான் சொல்றதை நம்பு.. உடம்பு மொத்தமும் சிதைஞ்சு இருக்கும் போது இந்த கால் மட்டும் சிதையாம இருக்கறது கடவுள் நமக்கு அடையாளம் காட்டத் தான்..” என்றவன்,
“மாமா.. ஆதிராவுக்கு இடது காலுக்கு பின்னால மச்சம் இருக்கும் இல்ல..” என்று கேட்க, பாலகிருஷ்ணன் கண்களைத் துடைத்துக் கொண்டு,
“ஆமா.. கார்த்திக்..” என்றவர், அந்த சடலத்தின் காலை எடுத்துப் பார்த்துவிட்டு,
“இல்லையே.. இதுல மச்சம் இல்ல..” என்றவர், குழப்பத்துடன் மதியையும் சித்தார்த்தையும் பார்த்தார்.
“மாமா.. நான் சொல்றதுல நம்பிக்கை இருக்கு இல்ல.. இது நம்ம ஆதிரா இல்ல.. எழுந்திருங்க அங்க இருந்து முதல்ல..” என்று அவரைப் பிடித்து எழுப்ப, அவரும் அவனது சொல்படி எழுந்து நின்றார்..
“டேய் நிஜமா அது ஆதிரா இல்லையா?” சரவணன் மீண்டும் கேட்க,
“இல்லடா..” என்ற கார்த்திக்,
“மதி.. நீங்க அடுத்த ஃபார்மாலிட்டி எல்லாம் பாருங்க. இது கண்டிப்பா ஆதிரா இல்ல. டி.என்.ஏ டெஸ்ட்ல கன்ஃபார்ம் பண்ணுங்க..” என்றவன்,
“எதுக்கும் அந்த ஏரியாவை கொஞ்சம் பார்த்துக்கோங்க.. மஃப்டில கொஞ்சம் அலர்ட்டாவே வைக்கச் சொல்லுங்க.. அந்த லேடிக்கிட்ட ஒரு மூணு வயசு குட்டிக் குழந்தை இருந்தது.. அது போல குழந்தை யாராவது பார்த்தா கொஞ்சம் கண்காணிக்கச் சொல்லுங்க.. வேற ஏதாவது டி.என்.ஏ. டெஸ்ட்க்கு மாமா வரணும்ன்னா சொல்லுங்க.. நான் மாமாவைக் கூட்டிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டு, பாலகிருஷ்ணனைப் பார்க்க,
“ஆமா தம்பி.. சொல்லுங்க.. நாங்க வரோம்.. எங்களுக்காக இந்த அளவுக்கு பார்க்கறதுக்கு ரொம்ப நன்றி தம்பி.. உங்களை என்னிக்குமே மறக்க மாட்டேன்.. மாப்பிள்ளை சொல்றது போல கொஞ்சம் அந்த ஏரியால பாருங்க சார்.. என் பொண்ணை கண்டுப்பிடிச்சு தாங்க சார்.. எங்க உலகமே அவ தான்..” என்றவரின் கையைப் பிடித்துக் கொண்ட மதி,
“கண்டிப்பா செய்யறேன் சார்.. இதுல ஒரு கையெழுத்து போட்டுக் கொடுங்க..” என்று அருகில் இருந்த ஒரு காவலரின் கையில் இருந்த ஒரு ஃபார்மில் கையெழுத்து போடச் சொல்லி வாங்கிக் கொண்டவன்,
“சரி சார்.. எங்க கூட வந்து நீங்க ப்ளட் டெஸ்ட் கொடுங்க.. அதோட ஆதிராவோட ஆதார் கார்ட் நம்பர் வேணும்..” சித்தார்த் கேட்கவும், மனப்பாடமாக சொன்ன கார்த்திக்,
“நான் ஏற்கனவே கம்ப்ளைன்ட் கொடுத்தேனா என்னன்னு தெரியல.. ஆனா.. இன்னும் அவளை அடையாளம் கண்டுப்பிடிக்கிற அடையாளம் சொல்றேன்..” என்றவன்,
“ஆதிராவோட கடவா பல்லுல கேப் ஃபில் பண்ணி இருக்கு.. அதோட அவளோட லெஃப்ட் சைட் ப்ரீமோலார் பல்லு பாதி தான் இருக்கும்.. அன் ஈவனா இருக்கும்..” என்று அவசரமாக அங்க அடையாளங்களைச் சொல்ல, பாலகிருஷ்ணன்,
“ஆமா.. ஆமா.. சின்ன வயசுல கீழ விழுந்து உடைஞ்சது.. தெத்துப் பல்லு போல இருக்கும்..” என்று உறுதிப்படுத்தவும், அதனைக் குறித்துக் கொண்ட மதி,
“சரி கார்த்திக்.. நாம போகலாம்..” என்று அவர்களை அழைத்துக் கொண்டு, குறிப்பிட்ட ரத்த பரிசோதனை நிலையத்திற்குச் செல்ல, அதியமான் கார்த்திக்கின் முதுகைத் தட்டிக் கொடுத்தான்..
அவனைப் பார்த்து புன்னகைத்தவன், “இது என் ஆதிரா இல்ல சார்..” என்று மீண்டும் சொல்ல,
“கண்டிப்பாடா.. நாம அவளைத் தேடலாம்..” என்ற அதியமான்,
“வீட்டுக்குப் போய் குளிச்சு, சாப்பிட்டு நல்லா தூங்கு..” எனவும், மண்டையை அசைத்தவன்,
“சரவணா நீ டாக்சி புக் பண்ணி போயிரு.. நாங்க போயிட்டு வந்திடறோம்.. நாங்க வீட்டுக்கு வர வரை எதுவுமே வீட்ல சொல்ல வேண்டாம்..” அவனை எச்சரித்து அனுப்ப, ‘ஓகே டா.. பார்த்து..’ என்ற சொல்லுடன் சரவணன் கிளம்ப, கார்த்திக்கும் பாலகிருஷ்ணனும் அவர்களுடன் கிளம்பினர்..
மதியுடன் சென்று தனது ரத்தத்தை மாதிரிக்காக கொடுத்துவிட்டு, கார்த்திக் பாலகிருஷ்ணனை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தான்.. சுதாவும் வித்யாவும் அவர்களுக்காக காத்திருக்க, சரவணன் அமைதியாக அமர்ந்திருக்க, உள்ளே வந்த இருவரின் முகத்தையும் பார்த்த சுதாவிற்கு பதறத் துவங்கியது..
“என்ன ரெண்டு பேர் முகமும் வாடிக் கிடக்கு? ரெண்டு பேர் முகமும் சரி இல்லையே.. ஏதாவது சொல்லுங்க. வீட்டுல இருந்துக்கிட்டு எனக்கு ஒண்ணுமே புரியல.. சரவணன் வரும்போதும் அப்படித் தான் முகம் இருந்தது..” கண்ணீருடன் கேட்கவும்,
“ஒண்ணும் இல்ல சுதா.. ஒரு ஏரியால அந்தக் கார் இருந்தா போல இருந்தது.. அது தான் தேடிட்டு இருக்காங்க.. நாங்களும் அதுக்குத் தான் போனோம். ரெண்டு போலீஸ் ஆபிசரும் ரொம்ப சின்சியரா ஆதிராவைத் தேடிட்டு இருக்காங்க.. அவ சீக்கிரம் கிடைச்சிருவா..” என்றவர்,
“நானும் மாப்பிள்ளையும் குளிச்சிட்டு வந்துடறோம்.. சாப்பாடு எடுத்து வை.. பசிக்குது..” என்று கூறிவிட்டு, அவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று பாத்ரூமில் மறைய,
“நீ குளிச்சிட்டயாடா?” என்று கேட்டுக் கொண்டே கார்த்திக் தனது அறைக்குச் செல்ல,
“ஹ்ம்ம்.. குளிச்சிட்டேன்.. சீக்கிரம் குளிச்சிட்டு வா.. பசிக்குது சாப்பிடலாம்..” என்றவன், அவனது பின்னோடு வர, கார்த்திக் அவனைப் பார்த்துவிட்டு,
“அவங்கக்கிட்ட எதுவும் சொல்லிடாதே.. பேசமா அமைதியா இரு.. ரொம்ப பயந்திருவாங்க..” என்றவன், குளித்துவிட்டு வந்து, டவலோடு பொத்தென்று கட்டிலில் விழுந்தவன், அப்படியே உறங்கியும் போக, அவனை உண்ண அழைக்க வந்த பாலகிருஷ்ணன், அவன் உறங்கும் நிலையைப் பார்த்து, அவனது தலையை வருடிவிட்டு, போர்வையை போர்த்திவிட்டு, கதவை அடைத்துக் கொண்டு நகர்ந்து சென்றார்..