எந்நாளும் தீரா காதலாக – 13
எந்நாளும் தீரா காதலாக – 13
💝13
“தம்பி.. ஏங்க… உங்க ரெண்டு பேருக்கும் என்னாச்சு? அவளுக்கு சாப்பாடு கொடுக்க இப்படி எங்க போயிக்கிட்டு இருக்கீங்க?” குழப்பமாக ராதா கேட்க,
“இப்படியும் ஒரு வழி இருக்குன்னு உனக்குத் தெரியாதா? அதுக் கூடத் தெரியாம இத்தனை நாளா இந்த வீட்ல என்ன பண்ணிட்டு இருந்த? எங்க கூட வந்துப் பார்த்தா அந்த வழி தெரிஞ்சிட்டுப் போகுது..” வினய் வம்பு செய்யவும், ராதா அவசரமாக அவர்களுடன் நடந்தாள்.
வினய் கையில் கவரை வைத்திருக்க, அர்ஜுன் இந்த பால்கனியின் சுவரில் ஏறி நிற்க, அதைப் பார்த்த ராதா, பதட்டத்துடன், “தம்பி.. என்னப் பண்றீங்க? பார்த்து..” என்று சத்தமிட, அர்ஜுன் அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு, அந்த பால்கனிக்கு சுவர் தாண்டி லாவகமாக குதிக்கவும், அவளது இதயம் ஒரு நொடி நின்றுத் துடித்தது.
அந்தப் பக்கம் சென்ற அர்ஜுன் கையை நீட்ட, வினய் எட்டி அவனுக்கு பையைக் கொடுக்கவும், “அடப்பாவிங்களா?” என்று ராதா அதிர, அவளைப் பார்த்து சிரித்த அர்ஜூன், அவனது அறையின் பால்கனி கண்ணாடிக் கதவின் அருகே சென்றவன், சிவாத்மிகாவிற்கு கால் செய்தான்.
“சொல்லுங்க அர்ஜுன்.. ஊருக்கு வந்துட்டீங்களா?” போனை எடுத்ததும் ஆவலே வடிவாக அவள் கேட்க, அவளது குரலில் அர்ஜுனின் மனது துள்ளிக் குதித்தது.
“வந்துட்டேன் சிட்டு…” புன்னகையுடன் அவன் சொல்ல,
“ஹ்ம்ம்.. அப்படியா?” என்றவள், அதற்கு மேல் எப்படி கேட்பது என்று புரியாமல் தவிக்க, அவளது தவிப்பு அவனுக்குப் புரிந்ததோ?
“சிட்டு..” மென்மையான குரலில் அவன் அழைக்க,
“ஹ்ம்ம்.. அங்க நம்ம வீட்டுல இருக்கீங்களா? மேல என் ரூம்ல இருக்கீங்களா? எப்போ வந்தீங்க? ஜன்னல் கிட்ட வாங்க.. நான் உங்களைப் பார்க்கணும்..” தன்னைக் காணும் ஆவலும், ஏக்கமும் அவளது குரலில் வெளிப்பட, அர்ஜுன் இதழில் புன்னகையுடன் அவளைக் காணும் நொடிக்குக் காத்திருந்தான்.
“ஆமா.. அங்க தான் இருக்கேன்.. நைட்டே வந்துட்டேன்.. செம டயர்ட்ல நல்ல தூக்கம்.. இப்போ தான் எழுந்து குளிச்சு சாப்பிட்டு வந்தேன்..” என்றவன்,
“சொல்லு சிட்டு அப்பறம் என்ன? நீ தூங்கினயா? உன் டெட்டி ரொம்ப சாஃப்ட்.. ஹக் பண்ணிட்டு தூங்கறதுக்கு நல்லா இருக்கு.. நான் அதை என் கூட தூக்கிட்டு வரப் போறேன்..” அர்ஜுன் அவளை வம்பு வளர்க்க, ‘என்னது? டெட்டியா?’ என்று கூவினாள்.
“ஆமா.. உன் டெட்டி தான்..” என்றவன் முடிப்பதற்குள்,
“ஹையோ என்னோட டெட்டியை என்ன பண்ணினீங்க?” அவள் பதட்டத்துடன் கேட்க,
“அதோட காது ரொம்ப சாஃப்ட்டா இருந்தது.. அதைப் பிடிச்சு ஆட்ட ரொம்ப நல்லா இருந்தது.. அது தான் நான் அப்படி கில்லி கடிச்சு கொஞ்சினேன்..” மேலும் அவனது வம்பைத் தொடர,
“உங்கள.. உங்கள.. நீங்க வாங்க.. உங்களை அப்படி பண்றேன்.. என்னோட மோச்சா டெட்டி பாவம்..” அவள் சிணுங்க, அர்ஜுன் சிரிக்கத் துவங்கினான்.
“நீ சரியாகி வா.. அது போல இன்னும் பெரிய டெட்டி வாங்கித் தரேன்..” அர்ஜுன் சொல்ல,
“ஆமா.. எனக்கு கண்டிப்பா வேணும்.. வாங்கித் தரலைன்னா உங்களை கடிச்சிடுவேன்..” என்றவள்,
குரல் குழைய, “இப்போ வினய் அண்ணா எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரு…வா..ங்க…” சட்டென்று அவள் இழுக்க,
“சரி.. அதுக்கு என்ன?” உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் கேட்க,
“நீங்க அம்மாவைப் பார்க்க வேண்டாமா? அம்மாவைப் பார்த்து பதினைஞ்சு நாள் ஆச்சுல்ல.. உடம்பு வேற முடியாம இருந்தாங்க..” எனவும்,
“நான் அம்மாவுக்கு அப்போவே சாப்பாடு கொடுத்துட்டு பார்த்துட்டு வந்துட்டேனே.. அம்மாவுக்கு என்னைப் பார்த்ததும் ரொம்ப சந்தோசம்.. துள்ளிக் குதிச்சாங்க..” அவன் சொல்லவும், ‘ஓ..’ ஏமாற்றத்துடன் அவள் இழுக்க, அவளது குரலில் இருந்த ஏமாற்றத்தில், அர்ஜுனின் மனதை சிறகின்றியே பறக்கத் துவங்கியது.
சில நொடிகள் அவளிடம் அமைதி.. அவளது அமைதியைக் களைக்க, “சிட்டு.. அப்படியே பால்கனி பிரெஞ்சு விண்டோ டோர் கிட்ட போயேன்.. அங்க உனக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு… ஒரு பெரிய டெட்டி..” மென்மையான குரலில் அவன் சொல்லவும், ஏதோ தோன்ற அவசரமாத் திரைச் சீலையை அவள் நகர்த்த, புன்னகை முகமாக நின்றுக் கொண்டிருந்தவன், அவளைப் பார்த்ததும், ‘ஹாய்..’ என்று கையசைத்தான்.
அவனை அங்கு எதிர்ப்பார்க்காதவள், அவனைப் பார்த்ததும், கனவோ என்றுத் தோன்ற, இமைத் தட்டி விழித்து, “அர்ஜுன்..” என்று கூவியபடி, தாயைக் கண்ட கன்று போல அவசரமாக ஓரடி எடுத்து வைத்து, அந்தக் கண்ணாடிக் கதவின் மேல் கை வைத்தவள், கண்ணீருடன்,
“அர்ஜுன் வந்துட்டீங்களா? வந்துட்டீங்களா?” தவிப்புடன் கேட்டவளின் கண்ணீரைக் கண்டவன் தவித்துப் போனான்.
அந்தப் பக்கம் கண்ணாடிக் கதவின் மேல், அவளது கையின் மேல் கை வைத்து, “என்னம்மா? ஏன்மா இப்படி அழற? என்னாச்சு?” தவிப்புடன் அவன் கேட்க, “அர்ஜுன்” என்று கண்ணீருடன் அவனது பெயரை சொல்வது அவளது வாயசைவில் தெரிந்தது.
“சிட்டு.. என்னம்மா? என்ன சொல்ற? அந்த கதவைத் திற” அந்த கதவைத் தட்டி அர்ஜுன் சொல்ல, ஏக்கத்துடன் அவனது முகத்தைப் பார்த்தவள், மடிந்து அமர்ந்து அழத் துவங்க, அர்ஜுன் தவித்துப் போனான்.
அவளுடன் அப்படியே கீழே அமர்ந்தவன், “சிட்டு.. கதவைத் திறம்மா.. நீ என்ன பேசறேன்னே கேட்கலம்மா.. என்ன ஆச்சு?” அவசரமாக போனில் அவளுக்கு அழைத்துச் சொல்லவும்,
“அர்ஜுன்.. அர்ஜுன்.. எனக்கு ரொம்ப தலை வலிக்குது.. உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது.. இப்போ வயிறு வலியும் சேர்ந்துக்கிச்சு. எனக்கு ரொம்ப கோபமா வருது..” சிறு பிள்ளைப் போல போனில் தேம்ப, அவளது கண்ணீரில் தவித்துப் போனவன்,
“சிட்டு.. கண்ணம்மா.. நான் பேசாம வீட்டுக்கு வந்துடவா? நான் உள்ள வந்து ஜாக்கிரதையா இருக்கேன்.. இப்படி அழறயே? நீ அழுதா ரொம்ப கஷ்டமா இருக்கும்மா..” கையாலாகாத்தனத்தின் பரிதவிப்புடன் கேட்க, சிவாத்மிகா கலங்கிப் போனாள்.
“எனக்கு.. எனக்கு..” அவள் சொல்லத் தயங்க,
“என்னம்மா? என்னடா ஆச்சு? நீ முதல்ல கதவைத் திற.. நான் வரேன்..” அவன் கதவைத் தட்டவும், தன்னை சுதாரித்து அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டவள்,
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.. இங்க நான் படறது போதாதா? உங்களுக்கு எல்லாம் வந்தா தாங்க மாட்டீங்க..” என்று முகத்தை சுருக்கிக் கொண்டே எழுந்து கதவைத் திறக்க, அர்ஜுன் அவள் அருகில் வர, வேகமாக நகர்ந்தவள்,
“நான் தான் சொல்றேனே.. உங்களுக்கு ஏதாவதுன்னா எனக்கும் கஷ்டமா தான் இருக்கும்.. நீங்க தவிக்கிறதைப் பார்க்க என்னால முடியாது.. நீங்க கஷ்டப்படும்போது அப்பறம் நான் தள்ளி எல்லாம் இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்..” சிவாத்மிகா அவனை மிரட்ட, பயந்தவன் போல அங்கிருந்த டேபிளில் வைத்திருந்த சாப்பாடை நீட்டவும்,
“கையில ஒண்ணும் கொடுக்க வேண்டாம்.. கீழ வைங்க.. நான் எடுத்துக்கறேன்.. நீங்க ரொம்ப நேரம் இங்க இருக்க வேண்டாம்.. முதல்ல வீட்டுக்கு கிளம்புங்க..” என்றவள், அவன் முறைத்துக் கொண்டே பையை கீழே வைக்கவும், அதை எடுத்துக் கொண்டு உள்ளே வந்து, அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவன் இன்னமும் அந்தக் கண்ணாடியின் அருகிலேயே அமர்ந்திருக்கவும், அவனுக்கு எதிரில் இந்தப் பக்கம் அமர்ந்தவள், தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.
“இப்போ எதுக்கு இங்க உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க? ப்ளீஸ் நீங்க கிளம்புங்க.. எனக்கு வேற வேலை இருக்கு..” அவளது தொண்டை அடைக்க, இதோ அதோ என்று அழுகை வெடிக்கக் காத்திருக்க,
“இது என்ன இது வம்பா இருக்கு.. நீ சாப்பிடும் போது கம்பனி கொடுக்கறேன்.. ஏன் கொடுக்கக் கூடாதா?” என்றவனிடம்,
“உங்களுக்கு சொன்னா புரியாதா? நீங்க போனை வைங்க.. எனக்கு அக்காகிட்ட பேசணும்.. நான் அக்காகிட்ட பேசிட்டு கூப்பிடறேன்..” அவஸ்தையாக அவள் தலையை குனிந்துக் கொள்ள, அவளது முகத்தை கூர்ந்து நோக்கியவன்,
“சரி.. பேசு..” எனவும், பட்டென்று போனை வைத்தவள், அவனுக்கு முதுகு காட்டித் திரும்பியபடி, ராதாவிற்கு அழைத்தாள். அவளது முகம் ஒரு மாதிரி இருக்கவும், அர்ஜுன் யோசனையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ராதாவும், வினயும் இவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளது செல்போன் கிட்சனிலேயே அடித்துக் கொண்டிருந்தது.. அர்ஜுன் அவளையே குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, “அந்த ராதா அக்கா, எங்கப் போனாங்க? நான் தேடுவேன்னு தெரியாதா?” ராதாவிற்கு முயன்றுத் தோற்றவள், சட்டென்று கோபமாகக் கேட்க,
“இங்க தான் நின்னுட்டு இருக்காங்க.. என்ன வேணும் சொல்லு.. நான் சொல்றேன்..” என்று அர்ஜுன் கேட்கவும், அவனைத் திரும்பி முறைத்தவள்,
“அர்ஜுன்.. நான் உங்க ரூமுக்குள்ள இருக்கறதுனால என்னால எல்லாமே உங்ககிட்ட சொல்ல முடியாது..” அவனிடம் எரிந்து விழுந்தவள்,
“ராதா அக்கா.. எனக்கு வேணும்..” என்று அழத் துவங்க, அர்ஜுன் சில நொடிகள் செய்வதறியாது திகைத்தான்.
தன்னைப் பார்த்ததும், சந்தோஷத்தில் அவள் முகம் மலர்ந்ததில் இருந்து, திடீரென்று அவள் இப்பொழுது கோபம் கொள்வது வரை இருக்கும் அவளது மனநிலை அவனைக் குழப்ப, ‘என்னாச்சு இவளுக்கு?’ என்று நினைத்த அர்ஜுன் திகைத்து எழுந்து நிற்க,
“எனக்கு ராதா அக்கா வேணும்.. அவங்களைப் பேசச் சொல்லுங்க.. உடனே பேசச் சொல்லுங்க..” அவள் சிறு பிள்ளைப் போல அழவும், பதறிய அர்ஜுன், அவளை சமாதானப்படுத்தும் விதமாக,
“இரு சிவாம்மா.. அழாதே.. கொஞ்சம் வெயிட் பண்ணு..” அவளது திடீர் கோபம், திடீர் அழுகையில் அவனது மனம் பதற, தனது மொபைலில் இருந்து அவளது மொபைலுக்கு அழைத்தவன், அவள் சலிப்புடன் நிமிர்ந்துப் பார்த்து,
“எனக்கு நீங்க வேண்டாம்.. ராதா அக்கா தான் வேணும்.. எனக்கு அக்காகிட்ட பேசனும்.. அவங்களை போன் எடுக்கச் சொல்லுங்க..” என்று கத்த,
“இரும்மா. நான் என்னோட போனை அக்காகிட்ட தரேன்.. நீ பேசு.. அவங்க இங்க தான் இருக்காங்க..” என்றவன், மீண்டும் எட்டி வினயிடம் போனைத் தந்து,
“அக்கா.. அவ ரொம்ப அழறா.. நீங்க வேணும்னு சொல்றா..” என்று சொல்லவும், அதுவரை சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவள், திடீரென்று அழுவதாக அர்ஜுன் சொல்லவும், திகைத்து, ஒரு சில நொடிகள் யோசித்த ராதா,
“ஹையோ பாப்பா.. இப்போ நான் என்ன பண்ணுவேன்? நான் எப்படி அங்க வரது?” ராதா உதடுகள் துடிக்க அழுகையில் கேட்கவும், வினயும், அர்ஜுனும் புரியாமல் குழம்பியப் படி ராதாவைப் பார்த்தனர்.
“அக்கா.. எனக்கு நீங்க வேணும்.. எனக்கு வயிறு ரொம்ப வலிக்குது.. எனக்கு உங்க மடியில படுத்துக்கணும்.. எனக்கு அப்படியே உடம்பு வலி முறுக்கி எடுக்குதுக்கா.. உங்க மடி வேணும்..” அவள் அழ,
“ஹையோ நான் என்ன செய்வேன்? இரு நான் அங்க வரேன்..” என்று ராதா நகர, வினய் அவள் கைப்பிடித்துத் தடுத்தான்.
“இப்போ எங்க போகப்போற?” வினய் கேட்க,
“அவ கொஞ்ச நேரம் என்னைத் தேடுவா.. ஒரு அஞ்சு நிமிஷம்.. சரியாகற வரை நான் அவ கூட இருக்கேனே..” அவள் கெஞ்சவும், வினய் அர்ஜுனைப் பார்க்க, அர்ஜுன் யோசனையுடன் சிவாவைப் பார்த்தான்.
அதற்குள், “அக்கா நீங்க வர வேண்டாம்.. வர வேண்டாம்.. இல்ல.. நான் அழல.. நான் இந்த தடவ சமாளிச்சுக்கறேன்.. நீங்களும் வந்து கஷ்டப்படாதீங்க..” சிறு பிள்ளைப் போலச் சொல்லி அவள் கண்களைத் துடைத்துக் கொள்ள, ராதாவைத் திரும்பிப் பார்த்த அர்ஜுன், மீண்டும் வேகமாக அந்தப் பக்கம் தாவி குதிக்க, அவன் வந்த வேகத்தைப் பார்த்த ராதா,
“ஐயோ தம்பி..” என்று பதற,
அவளது பதறிய குரலில் திடுக்கிட்ட சிவாத்மிகா, “என்ன? என்னாச்சு அர்ஜுனுக்கு? அக்கா சொல்லுங்கக்கா.. அர்ஜுன்..” உடனே சிவாத்மிகா பதறத் துவங்கினாள்.
“இல்ல.. தம்பி இங்க ஏறி குதிச்சாரு..” என்று அவள் சொல்லவும், சிவாத்மிகா ஓடிச் சென்று தலையை மட்டும் நீட்டி வெளியில் எட்டிப் பார்க்க, அர்ஜுன் அவர்கள் வீட்டு பால்கனி சுவரின் கைப்பிடியில் இருந்து குதிப்பதைப் பார்த்தவள், அதிர்ந்து போனாள்.
அங்கு வினயும் ராதாவும், அர்ஜுனைப் பார்த்துக் கொண்டு நிற்க, வேகமாக வீட்டின் உள்ளே சென்றவனைப் பார்த்து மூவருமே குழம்பி நிற்க, சிவாத்மிகாவோ மயங்கி விடும் நிலையில் அங்கு தரையில் அமர்ந்தாள்.
ராதா பதட்டத்துடன் நிற்க, அழுகையை மறந்த சிவாத்மிகா அர்ஜுனை வேடிக்கைப் பார்க்க, உள்ளே சென்றவன், “அக்கா..” என்று குரல் கொடுக்கவும், ராதா அவசரமாக உள்ளே ஓடினாள்.
“அவளுக்கு என்ன வேணுமோ அதை எடுத்துத் தாங்க..” எனவும், ராதா புரியாமல் பார்க்க,
“அவளுக்கு இப்போ எது தேவையோ அதை எடுத்துக் கொடுங்க..” அழுத்தமாகக் கூறியவனை பார்த்த ராதா, அவளது தேவையை புரிந்து அவன் கேட்ட விதத்தில் திகைத்து, அவன் கேட்ட பொருளை நினைத்து முகம் சிவந்து,
“நீங்க எப்படித் தம்பி அதெல்லாம்” என்று இழுக்க
“அது எல்லாம் பரவால்ல.. அங்க அவ ரொம்ப ரெஸ்ட்லஸ்சா இருக்கா.. அதுவே அவளுக்கு இப்போ ஸ்ட்ரெஸ்சா இருக்கு.. ஏற்கனவே உடம்பு முடியாததுனால மூட்ஸ்விங்ஸ் ரொம்ப இருக்குன்னு நினைக்கிறேன்.. ரொம்ப டிலே பண்ணாம.. ஆராய்ச்சி பண்ணாம கொடுங்க..” அர்ஜுன் சிவாவின் நிலைமைய எடுத்துச் சொல்லிக் கேட்கவும், வேகமாக சென்று, ஒரு துணியில் சுற்றி அவளது மாதவிடாய் காலதிற்கு தேவையான பேடைத் தரவும், அதை வாங்கி தனது சட்டையின் உள் சொருகிக் கொண்டவன், மீண்டும் அதே போலவே தாவி இந்தப் பக்கம் வர, சிவாத்மிகா அதிர்ந்து அப்படியே கதவில் சாய்ந்தாள்.
“அர்ஜுன்.. பார்த்து.. பார்த்து..” அவள் கத்த,
அவளுக்கு அருகில் வந்தவன், “இந்தா..” என்று தனது சட்டையின் உள் இருந்த கவரை நீட்ட, விழிகள் விரித்து சிவாத்மிகா அவனைப் பார்த்து, தலைகுனிய, அவளுக்கு முன்பு முட்டிப் போட்டு அமர்ந்தவன்,
“சிவா.. இங்கப் பாரு.. இப்போ முகத்தை நிமிர்த்தி என்னைப் பாரு..” அழுத்தமான குரலில் சொல்ல, தயங்கியபடி அவள் நிமிர்ந்துப் பார்க்க,
“சிவா.. இப்போ இது தான் வேணும்ன்னு சொன்னா நான் அதுக்கு ஏற்பாடு பண்ணப் போறேன்.. உனக்கு செய்யாம நான் யாருக்கு செய்யப் போறேன்.. அதை விட்டுட்டு இப்படி அழுதுட்டு இருக்க? இனிமே இப்படி எல்லாம் அழாதே சிவும்மா.. இப்படி நீ அழறதைப் பார்க்க என்னால முடியலடி.. நீ அழுதா என் மனசு எவ்வளவு கஷ்டப்படுதுன்னு உனக்குத் தெரியுமா? அக்கா இங்க வர வேண்டாம். எல்லாருமே ஒருத்தர் மாத்தி ஒருத்தர் படுத்தா நாங்க என்ன செய்யறது? உனக்கு மடியில தானே படுத்துக்கணும்.. என் மடியில வேணா படுத்துக்கறியா? நான் மெல்ல தலைப் பிடிச்சு விடறேன்.. உனக்கு கொஞ்சம் இதமா இருக்கும்..” இதமாக அவன் கேட்க, அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டே,
“இல்ல.. வேண்டாம்.. நான் சமாளிச்சுக்கறேன்..” அவள் சொல்ல,
“சரி.. அப்போ அழ மட்டும் செய்யாதேம்மா.. எனக்கு தாங்க மாட்டேங்குது.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா.. என்னையும் கொஞ்சம் நினைச்சுப் பாரேன்..” அவனது அந்த காதல் ததும்பும் பார்வையும், கனிவு நிறைந்த பேச்சும், தனக்காக அவன் ஒவ்வொன்றையும் யோசித்து செய்யும் விதமும், அவளது மனதை அமைதிப்படுத்த,
“இனிமே அழல.. சரியா? நீங்க கஷ்டப்படாதீங்க..” அவனை சமாதானப்படுத்தி, அவன் தந்த கவரை எடுத்துக் கொண்டு உண்பதற்காக அவன் முன்பு அமர்ந்தாள்.
“என்ன சொல்ற? நான் இங்க அப்படியே உட்காரறேன்.. கொஞ்ச நேரம் என் மடியில படுத்துக்கறியா?” அர்ஜுன் இதமாகக் கேட்க,
“நான் எப்படி? அதுவும் உங்க மடியில..” முகத்தில் தோன்றிய செம்மையை மறைக்க தலைகுனிந்தபடி அவள் கேட்க,
“இனிமே அழுதா நான் உன் தலையை பிடிச்சு அமுக்கி என் மடியில வச்சிப்பேன்.. என் மடியில உனக்கு இல்லாத உரிமை யாருக்கும் இல்ல..” என்றவனின் பதிலில் அவனது முகத்தைப் பார்த்தவள்,
அந்த அன்பில் கண்களில் கண்ணீர் கோர்க்க, “வேண்டாம்.. நான் அழ மாட்டேன்..” என்றபடி, உணவைப் பிரிக்கப் போக,
“நீ அங்க சோபால உட்கார்ந்து சாப்பிடு.. நான் இங்க ஊஞ்சல்ல உட்கார்ந்துக்கறேன்.. நான் கொஞ்ச நேரம் இங்க உன் கூட இருக்கேன்.. சோசியல் டிஸ்டன்ஸ்ல..” என்றவன், அங்கு பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்துக் கொள்ள, அவள் சாப்பிடத் துவங்கவும், சில நிமிடங்கள் அவளையேப் பார்த்தவன், பாடத் துவங்கினான்.
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே,
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன்
இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னை தேடும்..
என்று பாட, சிவாத்மிகா அவனை அதிர்ந்துப் பார்க்க, அவளைப் பார்த்து மெல்லிதாக புன்னகைத்தவனின் கண்களில் அவனது மனதில் இருந்த மொத்த அன்பும் வெளிப்பட்டது.
“அர்ஜுன்..” அவளது கண்கள் குளம் கட்டி, வாயின் அருகின் எடுத்துச் சென்ற கை அப்படியே நிற்க,
“உனக்கு ஒண்ணு தெரியுமா.. பாடல் வரிகள் நம்ம மனச அப்படியே எடுத்துச் சொல்லும்.. எனக்கும் அப்படித் தான்.. இப்போ இந்த பாட்டை எல்லாம் ரொம்ப கேட்கறேன்..” என்றவன்,
உயிரே உயிரே உன்னை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உன்னை விட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி.
என்று பாடியவன், தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டி, அவளைப் பார்த்து இரண்டு கையையும் கோர்த்து இதய வடிவத்தைச் செய்து காட்டியவன்,
“ஊட்டி விடவா?” என்று ஆசையாகக் கேட்க, முகம் சிவக்க, சிவாத்மிகா அவனிடம் இருந்து கண்களை அவசரமாக அகற்றி, உணவை உண்ணத் துவங்க,
என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதற்குள்ளே வந்தாயே
நான் தேடி தேடிதான் அலஞ்சுட்டேன்
என் தேவதைய கண்டு பிடிச்சுட்டேன்
நான் முழுசா என்ன தான் குடுத்துட்டேன்
அட உன்ன வாங்கிட்டேன்
நீ தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
பாடிக் கொண்டே ஊஞ்சலில் ஆடியவனைப் பார்த்த சிவாத்மிகா ‘இவருக்கு இன்னைக்கு என்னாச்சு? அவருக்கு என்னை அவ்வளவு பிடிச்சு இருக்கா? மனசை சொல்லும்ன்னு சொல்றார். அப்போ.. இந்த பாட்டுக்கு எல்லாம் என்ன அர்த்தம்? ப்ரபோஸ் பண்றாரா?’ என்று யோசித்தபடி, உண்டுக் கொண்டிருக்க, மனதிலோ சொல்ல முடியாத உணர்வுகளின் வலியில் நடுக்கம்.
அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தவன், அவள் விழுங்கவே கஷ்டப்படவும், தனது தலையை கோதிக் கொண்டு, இதழில் வழிந்த புன்னகையுடன் கண்களை மூடி தன்னை நிதானித்துக் கொண்டான்.
அவன் அவ்வாறு ஓய்வாக ஆடத் துவங்கவுமே, சிவாத்மிகா அங்கு அமைதியாக இருக்கிறாள் என்று புரிந்த ராதா, வினயைப் பார்க்க, வினய் அவளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தான்.
“அவன் அவளை சமாளிச்சிருவான்..” வினய் சொல்ல,
“என் மடியில படுத்தா தான் இது போல நேரத்துல அவ கொஞ்சம் சமாதானம் ஆவா.. சில சமயம் பொட்டிக்ல இருந்து கூட ஓடி வருவா.. இன்னைக்கு தம்பி ஏதோ சொல்லச் சொல்லவே அவ அமைதியா இருக்காளே..” ராதா ஆச்சரியத்துடன் சொல்லவும்,
“என்ன பொறாமையா?” அவன் வம்பிழுக்க,
“எனக்கு என்னத்துக்கு பொறாமை.. அவ சந்தோஷமா இருந்தா.. எனக்கு அதுவே போதும்.. அவ சொல்லாமையே தம்பி அவளோட தேவை புரிஞ்சிக்கறது, தம்பி அவ மேல எவ்வளவு அன்பு வச்சிருக்காருன்னு காட்டுது. எனக்கு மனசு நிறைஞ்சு இருக்கு..” என்று சொன்னவள்,
“சரி.. நான் உள்ள போய் வேலையைப் பார்க்கறேன்..” என்று நகர, வினய் அவளுக்கு உதவ உடன் சென்றான்.
இங்கு உணவை உண்டவளோ, அவனது முகத்தைப் பார்க்காமல் மெல்ல உண்டு முடிக்க, “மதியம் உனக்கு என்ன லஞ்ச் வேணும்? ஏதாவது சாப்பிடணும் போல இருக்கா? ஆனா.. ஹெல்தியா டேஸ்டியா செஞ்சித் தரேன்.. சொல்லு. என்ன வேணும்?” என்று கேட்க,
“எனக்கு ஸ்வீட் சாப்பிடணும் போல இருக்கு..” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் கேட்க, அர்ஜுன் என்ன செய்வதென்று யோசித்தான்.
“கொஞ்சம் பொறுத்துக்கோ.. நெகடிவ் வந்த உடனே நான் செஞ்சுத் தரேனே..” அவளை சாமாதானப்படுத்த அர்ஜுன் கேட்க,
“இல்ல.. எனக்கு வேணும்.. ரொம்ப சாப்பிடனும் போல இருக்கு..” கண்களைச் சுருக்கி கெஞ்சலுடன் அவள் கேட்கவும், என்ன செய்வதென்று யோசித்து,
“ஸ்வீட்டா வேணும் அது தானே.. அது எப்படி இருந்தாலும் ஓகே தானே.” என்று அவன் கேட்கவும், சிவாத்மிகா தலையாட்ட,
“சரி.. லஞ்ச்க்கு செஞ்சு எடுத்துட்டு வரேன்.. வேற ஏதாவது?” என்று கேட்க, அவள் யோசிக்கவும்,
“இன்னைக்கு அவ்வளவு தான்.. எதா இருந்தாலும் ஹெல்தியா தான்.. இப்போ மாத்திரை போடு..” கண்டிப்புடன் சொல்லவும், அவனது முகத்தைப் பார்த்தவள், அவனுக்கு பழிப்பு காட்டி,
“சரி.. நான் மாத்திரை போட்டு படுக்கறேன்.. நீங்களும் ரொம்ப டயர்டா இருக்கீங்க.. போய் தூங்குங்க..” அவனை அவள் கவனிக்கவும், தலையசைத்தவன்,
“கதவை மூடிக்கோ.. பெட்ல படுத்துக்கோ.. கையில போனை எடுத்துக்கோ.. அதுல அர்ஜுன்னு ஒரு தடியன் நம்பர் சேவ் பண்ணி வச்சிருப்ப இல்ல.. அவனுக்கு கால் பண்ணி கொஞ்ச நேரம் பேசிட்டே இரு.. அவனும் அப்படியே தூங்குவானாம்.. நீயும் அப்படியே தூங்குவியாம்.. எப்படி?” என்று கேட்டவன், அவள் விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,
“கதவை மூடிக்கோ..” என்றபடி, மீண்டும் சுவர் தாண்டிக் குதிக்க, சிவாத்மிகாவின் இதயம் தொண்டைக் குழியில் துடித்தது.. அந்தப் பக்கம் சென்றதும், தனது செல்லை கையில் எடுத்தவன், சிவாவைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே அழைக்க,
போனை எடுத்ததும், “ஏன் இப்படி ஏறி குதிச்சு வரீங்க? எங்கயாவது விழுந்து வச்சா என்ன ஆகறது?” என்று பதற,
“அதெல்லாம் பார்த்து தான் நான் வரேன்.. பயப்படாதே.. சரி.. சொல்லு.. அப்பறம்.. அந்த கதை படிச்சியா? எந்த கதை எல்லாம் பிடிச்சது..” என்று பேசிக் கொண்டே கீழே சென்றவன், அவள் தான் படித்த கதையை சொல்லிக் கொண்டிருக்க, தான் தூங்கி விட்டு சமைப்பதாக வினயிடம் சைகையில் சொல்லிவிட்டு, மறுபடியும் அறைக்கு வந்தவன், மாஸ்கை கழட்டி விட்டு, கைகளை கழுவிக் கொண்டு, பெட்டில் விழுந்தான்.
“உனக்கு அந்தக் கதை பிடிச்சதா?” அர்ஜுன் கேட்க,
“இதுவரை எனக்கு கதை பிடிச்சது.. இன்னும் முழுசா முடிக்கல.. முடிச்சிட்டு சொல்றேன்..” என்றவள்,
“உங்களுக்கு ஷூட்டிங் எப்படிப் போச்சு?” என்று கேட்கவும்,
“அது நல்லா போச்சு.. டைரெக்டர் இன்னைக்கு காலைல ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பலாமேன்னு சொன்னாரு.. நான் தான் ‘என் வருங்காலத்துக்கும்.. எங்க அம்மாவுக்கும் உடம்பு சரி இல்ல..” அவன் சொல்வதற்குள்,
“என்னது.. என்னது? என்ன சொன்னீங்க?” அவசரமாக அவள் கேட்க,
“என்னோட வருங்..காலத்து..க்கும்.. எங்க அம்மாவுக்கும்..” அவன் அழுத்திச் சொல்ல, சிவாத்மிகாவின் முகம் நாணத்தில் சிவந்தது..
“யார் அந்த வருங்காலம்?” மெல்லிய குரலில் அவள் கேட்க,
“அவளோட வாய் பேசாத மொழிகளை கூட, அவளோட கண்ணைப் பார்த்து புரிஞ்சு, என்னோட ஹார்ட் யாருக்காக துடிக்குதோ அவங்க தான் என்னோட வருங்காலம்.. என் ஹார்ட் துடிக்கிறது உனக்கு கேட்குதா?” அர்ஜுன் தனது நெஞ்சில் போனை வைத்து காட்ட, அவனது அன்பில் சிவாத்மிகா கரைந்தே போனாள்.
“என்ன கேட்குதா?” ரகசிய குரலில் அவன் கேட்க,
“எனக்கு தூக்கம் வருது..” அவள் சிணுங்க,
“என் வருங்காலத்துக்கு உடம்பு முடியல.. அவ என்னைத் தேடுவா.. நான் போயே ஆகணும்னு சொல்லி அடிச்சு பிடிச்சு ஓடி வந்து இருக்கேன்.. தூங்க போறேன்னு சொல்ற? உனக்கும் உடம்பு சரி இல்லன்னு சொன்னதுல இருந்து எனக்கு அங்க இருக்கவே முடியல சிட்டு.. பல்லைக் கடிச்சிக்கிட்டு இந்த ஒருநாளை ஓட்டிட்டு, ஓடி வந்து ஃப்ளைட் பிடிச்சேன்..” அவன் கதை சொல்ல,
“ஏன்? ஷூட்டிங்ல லேட் ஆச்சா?” என்று அவள் கேட்க,
“இல்ல.. ஃப்ளைட் டைமிங் அப்படி.. ரொம்ப நேரம் எல்லாம் எனக்கு வெயிட் பண்ண முடியாது.. எனக்கு உன்னைப் பார்க்கணுன்னு மட்டும் தான் இருந்தது.. ஷூட் முடிஞ்ச உடனே ஃப்ளைட்க்கு ரெண்டு மணி நேரம் தான் இருந்தது.. அடிச்சு பிடிச்சு டிக்கெட் புக் பண்ணி தொங்கிட்டே வந்தேன்…” என்றவளின் சிரிப்புச் சத்தம் கேட்டவன், புன்னகைத்துக் கொண்டே அர்ஜுன் அப்படியே உறங்கி விட,
“அர்ஜுன்.. அர்ஜுன்…” சிவாத்மிகா அழைக்க, அவனது அமைதியே பதிலாகக் கிடைக்க, போனை அனைத்து தலையில் தட்டிக் கொண்டவள்,
“இதுக்குப் பேர் தான் பேசிக்கிட்டே தூங்கறதா அஜ்ஜூ..” என்று கேட்டு விட்டு, மீண்டும் அந்தக் கதையை எடுத்துக் கொண்டு அமர்ந்தவளுக்கு, அவன் பாடிய பாடல்கள் நினைவில் வந்தது. அவளிடம் அவனது மனதைச் சொன்ன பொழுது, இதயம் பெரிதாக எந்த வெறுப்பையும் காட்டாமல், ஏதோ ஒருவகையில் இதத்தைத் தந்து, அவனிடம் நெருக்கத்தையும் கொடுத்ததைப் போல உணர்ந்தவள், தனது இதயத்தின் துடிப்பு அர்ஜுனின் பெயரைச் சொல்லியே துடிப்பது போலத் தோன்ற, சிவாத்மிகா தவித்துப் போனாள்.
‘அது எப்படி நான் சொல்லாமையே என்னைப் புரிஞ்சிக்கறீங்க? நான் உங்களுக்கு ஏத்தவளா அர்ஜுன்?’ என்ற கேள்வியை அவளது மனம் கேட்க,
“இல்ல.. அப்படி இல்ல..” என்று மனதை அடக்கிவிட்டு, கதையைப் படிக்கத் தொடர்ந்தவளுக்கு, இப்பொழுது அந்த கதையின் நாயகனாக அர்ஜுனின் முகமும், நாயகியாக தன்னுடைய முகமும் தெரியவும், திடுக்கிட்டு கதையை கீழே வைத்து, கண்களை இறுக மூடி படுத்துக் கொண்டவளின் மனது, அர்ஜுனின் பெயரை உரக்கச் சொல்லியது.