எந்நாளும் தீரா காதலாக – 18

எந்நாளும் தீரா காதலாக – 18

💝💝18

வினயும் ராதாவும், வினய் புக் செய்திருந்த தனி அறை போல இருந்த அந்த டேபிளில் சென்று அமர, வினய் அவளிடம் மெனு கார்டை நீட்டி, “எனக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணிடு ராதா..” என்று சொல்லிவிட்டு, மிகவும் முக்கியமாக தனது லேப்டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்க, ராதா திருதிருவென விழித்தாள்.

சிறிது நேரம் அவளிடம் எந்தச் சத்தமுமில்லாமல் போகவும், வினய் நிமிர்ந்துப் பார்க்க, அவனையே பார்த்து முழித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன், “என்ன முழிக்கிற? என்னாச்சு?” என்று கேட்கவும்,

“என்ன என்கிட்டே போய் சொல்றீங்க? எனக்கு இதெல்லாம் ரொம்ப தெரியாது.. நானும் சிவாவும், ஏதாவது மாறுதலுக்காக போனா கூட இவ்வளவு பெரிய ஹோட்டல் எல்லாம் போக மாட்டோம்.. அதுல இருக்கற மெனு எல்லாம் நல்லா தெரிஞ்சது.. அதுல ரெண்டு பேரும் சேர்ந்து ஆர்டர் பண்ணுவோம்.. இதெல்லாம் பார்த்தா எனக்கு ஒண்ணுமே புரியல..” ராதா பரிதாபமாக கேட்க, வினய் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளது முகம் அவமானத்தில் சுருங்க, “நாங்க மட்டும் என்ன? அப்படியே பணத்துலயே புரண்டு வளர்ந்தோம்ன்னு நினைக்கிறயா என்ன? இல்ல சின்ன வயசுல இருந்தே கண்ணு முழிச்சதும் இங்க தான் காபிக்கே நிப்போம்ன்னா? நானும் அர்ஜுனும் சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு, சும்மா வந்து அப்படியே ஒண்ணு ஒண்ணா சாப்பிட்டு தெரிஞ்சிக்கிட்டது தான்.. நாம ரெண்டு தடவ வந்து சாப்பிட்டா தெரிஞ்சிடப் போகுது.. அது எதுக்கு முகம் சுருங்குது? நாம இனிமே அடிக்கடி வரலாம் என்ன?” என்று கேட்டபடி, அவளது கையில் இருந்த மெனு கார்டை வாங்கியவன், அவளிடம் மெனுவின் பெயரையும், அது எப்படி இருக்கும் என்று சொல்லி, அவள் சரி என்று தலையசைத்ததும், அதை ஆர்டர் கொடுத்தான்.

பேரரிடம் மெனுவைச் சொல்லி அனுப்பியவன், “ராதா.. நீ என்ன படிச்சிருக்க? உன்னைப் பத்தி சொல்லேன்.. நீ எந்த ஊரு?” என்று கேட்கவும்,

“நான் என்ன பெரிய இவளாங்க.. என்னைப் பத்திச் சொல்ல.. நானெல்லாம் ஒண்ணுமே இல்ல.. சாதாரண வேலைக்காரி தான்.. அவ்வளவு தான்..” அவளது குரலில் என்ன இருந்ததோ? வினய் அவளை முறைத்தான்.

“வேலைக்காரியா? இரு.. இரு.. நான் சிவாகிட்ட நீ இப்படி சொல்றேன்னு சொல்றேன்..” வினய் மிரட்ட,

“ஹையோ.. அவகிட்ட அப்படி எல்லாம் சொல்லிடாதீங்க.. அவ துடிச்சுப் போயிடுவா.. அவளால நான் இப்படி சொன்னேன்ங்கறதை மட்டும் தாங்கிக்கவே முடியாது.. திரும்பத் திரும்ப அவ, ‘நான் உங்களை அப்படியா நடத்தறேன்’னு கேட்பா.. வேண்டாம்ங்க ப்ளீஸ்.. நான் ஏதோ ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன்.. ப்ளீஸ்..” என்று கெஞ்ச,

“நான் இதைச் சொல்லக் கூடாதுன்னா நீ அப்போ சொல்லு..” வினய் விடாப்பிடியாக நின்றான்.

“ஏங்க இப்படி பண்றீங்க? என்னைப் பத்தி சொல்ல என்ன இருக்கு? ஒண்ணுமே இல்லையே..” அவள் சொல்ல மறுக்க,

“சரி.. நீ சொல்லலைன்னா நான் சிவாகிட்ட கேட்கறேன்.. எங்களைப் பத்தி எல்லாம் மட்டும் நீங்க அம்மா சொல்லி தெரிஞ்சிக்கிட்டீங்க இல்ல.. நானும் தயங்காம சொல்றேன் இல்ல.. நீ மட்டும் சொல்ல மாட்டேங்கிற? அப்போ நாங்க எல்லாம் யாரோ தானே..” என்று வினய் வருத்தம் கொள்ள, ராதா அவனைப் பாவமாக பார்த்தாள்.

அவன் அடமாக அமர்ந்திருக்கவும், வேறுவழியின்றி, அவனைப் பார்த்து நொடித்துக் கொண்டு, ஒரு பெருமூச்சுடன் ராதா சொல்லத் துவங்கினாள்.   
“நான் பி.காம். முடிக்கல.. கடைசி வருஷம் படிச்சிட்டு இருக்கும்போதே விதி என் வாழ்க்கையில விளையாட ஆரம்பிச்சிடுச்சு..” என்றவளின் கண்களில் கண்ணீர்.. டேபிளின் மீது இருந்த அவளது கையை வினய் அழுத்த, அவனது கையை இறுக பிடித்துக் கொண்டவள்,

“எனக்கு அம்மா அப்பா யாரும் இல்ல.. நான் தான் வீட்டுல நாலு அண்ணனுங்களுக்கு அப்பறம் பிறந்த கடைசி பொண்ணு.. நான் பிறக்கும்போது எங்க அப்பாவுக்கு நாற்பத்தி அஞ்சு வயசுக்கும் மேல.. அவ்வளவா என்னை அவங்க யாருமே கண்டுக்கிட்டது இல்ல.. ஏதோ அந்த வீட்ல நான் பிறந்தேன், வளர்ந்தேன் அவ்வளவு தான்..

எங்க அம்மாவுக்கு நான் கூட மாட வேலை செய்வேன்.. அந்த நேரம் ஏதாவது ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுவாங்க.. எங்க பாட்டி தான் என் ஆதரவு.. அண்ணனுங்களுக்கு பயந்தே அம்மா என்கிட்டே ரொம்ப வர மாட்டாங்க.. அப்பாக்கு எல்லாம் நான் ஒரு வேண்டாத சுமை.. அண்ணன்களுக்கு நான் ஒரு அவமான சின்னம்..” அவள் சொல்லிக் கொண்டே வர,

“ஏன்?” வினய் அதிர்ச்சியுடன் கேட்டான்..

“ஏன்னா நான் பிறந்த பொழுது எங்க பெரிய அண்ணனுக்கு இருபது வயசு.. எங்க அம்மா அந்த வயசுல உண்டானதுனால அவங்களை எல்லாரும் ரொம்ப கேலி செய்தாங்களாம்.. அண்ணனுங்க எல்லாம் என் கூட பேசினது கூட இல்ல.. அப்படி ஒரு நினைவு கூட இல்ல.. எங்கயாவது குடும்பத்தோட போனா என் கூட நடக்க கூட மாட்டாங்க..

ஏதோ எங்க அப்பா என்னை படிக்கவச்சாங்க.. அதுவும் நான் அடம் பண்ணி தான் படிச்சேன்.. ரொம்ப ஓஹோன்னு படிக்கலைன்னாலும் ஓரளவு சுமாரா படிச்சிட்டு வந்தேன்.. திடீர்ன்னு எங்க அம்மம்மா இறந்துட்டாங்க.. அவங்க போனதுமே நான் அனாதையாகிட்டேன்.. அடுத்து அந்த ஒரே வருஷத்துல எங்க அம்மாவும் போயிட்டாங்க..” அவள் சொல்லச் சொல்ல, அவளது முகம் கசங்க, வினய் அவளது கையை இறுகப் பிடித்துக் கொண்டான்.

“நாம இருக்கற வீட்டுலையே இருக்கலாம். நான் உங்களைப் பார்த்துக்கறேன்னு அப்பாகிட்ட எவ்வளவோ சொல்லியும் கேட்காம.. அண்ணனுங்க கூட தான் இருப்பேன்னு அடம் பண்ணி எங்க அப்பா அண்ணனுங்க கிட்ட எல்லாம் மாறி மாறி இருந்தாங்க.. இருந்த தோட்டம், வீடு எல்லாம் அண்ணனுங்க பேருல எழுதி வச்சிட்டாங்க.. எனக்கு கல்யாண செலவு  செய்வாங்கன்னு எங்க அப்பாவுக்கு அவ்வளவு நம்பிக்கை..” அவள் இகழ்ச்சியாகச் சொல்லவும்,

“ஏன்? என்ன பண்ணினாங்க?” அவளது கதையைக் கேட்டு மனதினில் வருந்திக் கொண்டிருந்த வினய், அவளது இகழ்ச்சியை கண்டு இடைப் புகுந்துக் கேட்க,   

“நானும் அப்பா எந்த அண்ணன் வீட்டுல இருக்காறோ, அங்க இருந்து காலேஜ் போயிட்டு வந்துட்டு இருந்தேன்.. சொத்து அவங்க பேர்ல வரவும், திடீர்ன்னு எங்க அண்ணிங்க எல்லாம் என்னை படிக்க வைக்க கூடாதுன்னு சொல்லி சண்டைப் போட ஆரம்பிச்சிட்டாங்க.. எங்க அப்பாவும், அண்ணனுங்களும், அதுக்கு மறுப்பு சொல்லவே இல்ல.. நானும் வேற வழி இல்லாம படிப்பை நிறுத்திட்டு வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டேன்..

அப்படியே வருஷம் எந்த மாற்றமும் இல்லாம ஒடிச்சே தவிர, அப்பா எனக்கு கல்யாணத்துக்கு பார்த்து தள்ளி விட்டுடலாம்ன்னு பலதடவ சொன்ன பொழுது கூட யாரும் அதைப் பத்தி பேச்சே எடுக்கல.. என் சம்பளமும் அவங்களுக்குத் தேவையா இருந்தது.. அதனால அவங்க அதைப் பத்தி யோசிக்கவே இல்ல.. வாழ்க்கையே சலிச்சு போன பொழுது தான் அந்த ஆளை பார்த்தேன்..” என்றவளின் கண்களில் அடக்க மாட்டாமல் கண்ணீர் வழிய, வினய் அவளது அருகில் இருந்த இருக்கையில் மாறி அமர்ந்தான்.

அங்கிருந்த டிஸ்யூவை வைத்து, அவளது கண்களைத் துடைத்து விட, “நான் வேலை செஞ்ச கடைக்கு அவன் புதுசா வேலைக்கு சேர்ந்தான்.. என்கிட்ட ரொம்ப அன்பா இருந்தான்.. தினமும் ஏதாவது வாங்கிட்டு வந்து, ‘இது சாப்பிட்டு பாரு உனக்கு பிடிக்கும்’ன்னு எதையாவது கொண்டு வருவான்.. என்னையே சுத்திச் சுத்தி வந்தான்.. அவனோட அந்த இதுல தான் நான் மயங்கிட்டேன்.. அன்புக்கு ஏங்கிட்டு இருந்த எனக்கு.. அவனோட நடிப்பு அப்போ புரியல.. அந்த சமயத்துல எங்க அப்பாவும் இறந்து போகவும், எங்க அண்ணிங்க என்னை நடத்தின விதம் ரொம்ப மோசமா போயிடுச்சு.. ஒரு வேலைக்காரிய விட மோசமா நடத்தினாங்க..

எந்த அண்ணன் வீட்டுல இருக்கேனோ அங்க, காலையில சீக்கிரமா எழுந்து, வேலை எல்லாம் செஞ்சி வச்சிட்டு, கடைக்கு போய் அங்க கால் ஓடிய சம்பளம் வாங்கிட்டு வந்தா.. அதையும் அவங்க கிட்ட கொடுத்துடணும்.. எனக்கு பஸ் காசும், கூடவே மாச செலவுக்கு நூறு ரூபாய் தருவாங்க.. நான் அவங்களுக்கு வீட்டு வேலை எல்லாம் செய்யணும்.. ரேஷன் வாங்கணும்.. அவங்க பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லித் தரணும்..

என்னை அவங்க அன்பா நடத்தி இதை எல்லாம் செய்யச் சொல்லி இருந்தா கூட நான் செஞ்சிட்டு போயிருப்பேன்.. ஆனா.. எங்க அண்ணன் பிள்ளைங்களுக்கு நான் அத்தைன்னு கூட அவங்க கூப்பிடச் சொல்லித் தரலை.. அவங்களுக்கு என்னை வீட்டு வேலை செய்யற அக்காவா தான் தெரியும்.. எங்க அண்ணனுன்களைப் பொறுத்த வரை நான் அவங்க வீட்டுப் பொண்ணு இல்ல ஒரு வேலைக்காரி..” என்றவள், குலுங்கி அழத் துவங்கினாள்.

அது தாங்காது வினய், அவனது தோளில் அவளைச் சாய்த்துக் கொள்ள, “நான் ஒருநாள் எங்க அண்ணியா முன் வந்து, பாசமா எனக்கு சோறு பிசைஞ்சு டப்பால அடைச்சிக் கொடுத்தாங்க.. கடையில பசியில திறந்தா.. கெட்டுப் போன சாப்பாடு.. அதுல புழு வேற நெளிஞ்சிக்கிட்டு கிடந்தது.. எனக்கு பசியில அவ்வளவு அழுகையா வந்தது..

அதைப் பார்த்ததும், ‘உன்னை மனுஷியா மதிக்காத அந்த வீட்டை விட்டு வந்திரு.. நான் உன்னை கல்யாணம் செய்து ராணி மாதிரி பார்த்துக்கறேன்’னு சொன்னான்.. அதை நம்பி நான் மறுநாளே வேலைக்கு வர மாதிரி வீட்டை விட்டு வந்தேன்.. வந்ததும் ஒரு கோயில்ல எங்களுக்கு கல்யாணம் ஆச்சி.. அவன் என் கழுத்துல தாலியை கட்டி அவன் தங்கி இருந்த வீட்டுக்கு கூட்டிட்டு போனான். அங்க போன போது தான் என்னோட தலையில இடி விழுந்தது..” என்றவளின் உடல் நடுங்க, அவளது நடுக்கத்தை உணர்ந்த வினய், ஆறுதலாக வருட,

“என்ன ஆச்சு?” ஏதேதோ கற்பனை கண் முன் விரிய, பதட்டத்துடன் வினய் கேட்க,

“இனிமே எனக்கு நல்ல காலம் விடியப் போகுதுன்னு நினைச்சு, அவனோட அந்த வீட்டுக்கு போனா.. அந்த ஆளோட நடத்தை சரி இல்லன்னு கேள்விப்பட்டு, அந்த ஆளோட பொண்டாட்டி வீட்டுல இருந்து, அந்த ஆளை இழுத்துட்டு போக வந்திருந்து காத்துக்கிட்டு இருந்தாங்க.” அவள் சொல்லி முடிப்பதற்குள்,

“என்ன? என்ன சொல்ற? அவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவனா?” வினய் குழப்த்துடன் கேட்க,

“ஆமா.. அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்காம்.. அந்த ஆளோட சொந்தக்காரங்க என் கழுத்துல இருந்த தாலியைப் பார்த்ததும்,   என்னை அவ்வளவு அசிங்கமா பேசி.. என்னை ரோடுல போட்டு அடிச்சாங்க.. இங்க இருந்து போகலைன்னா என்னை.. என்னை.. புடவையை..” என்று சொல்ல முடியாமல் திணறியவள்,  

“துரத்திட்டாங்க..” கதறலுடன் சொன்னவளை வினய், அணைத்து கொண்டான்.

அவளது உடல் அன்றைய நாள் நினைவினில் அருவருப்பில் குறுக, “அவ்வளவு அசிங்கமா பேசினாங்க.. அந்த ஆளும் அவன் பொண்டாட்டியைப் பார்த்த உடனே என்னை மறந்துட்டு, அவ கிட்ட கெஞ்சிக்கிட்டு என்னை கண்டுக்காம போயிட்டான்.. அவங்க சொந்தக்காரங்க என் கழுத்துல இருந்த தாலியை பிடுங்கிட்டு, என்னை அடிச்சு விரட்டிட்டாங்க.. எனக்கு அவமானம் பிடுங்கித் தின்னுச்சு.. திரும்ப எந்த முகத்தை வச்சுக்கிட்டு வீட்டுக்கு போவேன்?

அதுக்கும் மேல அந்த வீட்டுக்கு போய் மேலும் எங்க அண்ணிங்க வாயில விழாம இருக்கறதுக்கு உயிரை விடறது தான் வழின்னு கிளம்பி இங்க வந்துட்டேன்.. ரயிலோ, கடல்லையோ விழுந்து செத்துப் போகலாம்ன்னு நினைச்சேன்.. அன்னிக்கு இருந்த வேகத்துல பீச்சுக்கு போற பஸ்சைக் கேட்டு ஏறி, பீச் ஸ்டாப்ல இறங்கி, நேரா கடல்ல இறங்கி நடக்க ஆரம்பிச்சிட்டேன்.. அப்போ தான் அங்க தனிமையில உட்கார்ந்து இருந்த சிவா என்னைப் பார்த்து, காப்பாத்தி வீட்டு கூட்டிட்டு வந்தா..” என்றவள், அவனது தோளிலேயே ஆதரவாக புறாக்குஞ்சு போல ஒண்டினாள்.

‘என்ன மனுஷங்க..’ மனதினில் நொந்துக் கொண்டே, அவளது ஒரு கையை ஆறுதலாக வருடிக் கொடுத்துக் கொண்டு அமர்ந்திருந்த வினய், மறுகையால் அவளது தோளை ஆறுதலாக வருடிக் கொண்டிருக்க, பேரர் கதவைத் தட்டும் சத்தத்தில், அவனிடம் இருந்து அவசரமாக நகர்ந்தவள், “சாரி..” என்ற முணுமுணுப்புடன் நிமிர்ந்து அமர, வினய், அவளது கையில், அங்கிருந்து டிஷ்ஷு பேப்பரை எடுத்துக் கொடுத்துவிட்டு பேரரை உள்ளே அழைத்தான்.

உள்ளே வந்த பேரர், உணவை இருவருக்கும் பரிமாற, தனது லேப்டாப்பை எடுத்து உள்ளே வைத்தவன், “சிவா வரலைன்னா என்ன ஆகி இருக்கும்..” என்று கேட்க,

“அவ வரலைன்னா அன்புன்னா என்னன்னு தெரியாமையே செத்துப் போயிருப்பேன்..” நொந்துக் கொண்டு சொன்னவளை, அமைதியாக பார்த்துவிட்டு,

“சரி.. சாப்பிடு.. சாப்பிட்டு டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்லு..” என்றபடி உணவை உண்ணத் துவங்கினான்.

திடீரென்று, “ஹ்ம்ம்.. எங்க அம்மாவும் எங்க அப்பாவை விரும்பி வீட்டை விட்டு வெளிய வந்தவங்க தான்.. எங்க அப்பா எங்க அம்மாவை நல்லா பார்த்துக்கிட்டார்.. அப்பா கார் டிரைவர்.. அப்பப்போ அர்ஜுனோட அப்பாவுக்கு ஸ்டடியோவுக்கு கார் ஓட்டுவார். அப்படித் தான் அர்ஜுன் அப்பா எங்களுக்கு பழக்கம்.. ஆனா.. விதி.. நான் அஞ்சு வயசா இருக்கும்பொழுது ஒரு விபத்துல அப்பா இறந்துட்டார்.. விஷயம் கேள்விப்பட்டு அர்ஜுனோட அப்பா வந்து எங்களை இங்க அழைச்சிட்டு வந்துட்டார்.. வாழற வழி தேடி தான் அம்மாவும் அர்ஜுன் வீட்டுல வேலைக்குச் சேர்ந்தாங்க.. அப்பாவும், நிர்மலா அம்மாவும், வேலை செய்யறவங்கன்னு தானேன்னு இல்லாம.. எங்க அம்மாவையும் என்னையும் ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க.. அப்பா நடுவுல படம் இல்லாம இருந்த பொழுது கூட எங்களை வெளிய அனுப்பாம அவங்க வீட்டு ஆளுங்க போல பார்த்துக்கிட்டார்..

அவங்க பெரிய மனசு… இப்போ என்னையும் அந்த வீட்டு பிள்ளையா தான் அம்மா பார்த்துட்டு இருக்காங்க.. அர்ஜுன் நான் சொன்னா மறுவார்த்தை பேச மாட்டான்.. அந்த விஷயத்துல எனக்கு அவங்க எல்லாம் கிடைச்சதுல நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கேன்.. இப்போ எனக்கு என்ன தோணுதுன்னா.. நாங்க அங்க வீட்டை வாங்கிட்டு வந்ததே உங்க ரெண்டு பேரையும் எங்க கூட சேர்க்கத் தானோன்னு? அர்ஜுன் சிவாவைப் பார்க்க, நான் உன்னை.. ஹ்ம்ம்..” என்றவன், அவனது உணவில் கவனம் போல, தலையை குனிந்துக் கொள்ள, அவனது இறுதி வாக்கியம் புரியாமல் குழம்பியவள், அதற்கு விளக்கம் கேட்க தைரியமின்றி, தனது உணவை உண்ணத் துவங்கினாள்.

இருவரும் உண்டுவிட்டு வெளியில் வந்த பொழுது, அங்கு அர்ஜுனை சுற்றி வளைத்திருந்த ரசிகர் கூட்டத்தைப் பார்த்த வினய் சிரிக்க, ராதாவின் கண்கள் சிவாத்மிகாவைத் தேடியது..

அவள் ஒரு ஓரமாக அமர்ந்திருக்கவும், “அவ ஏன் அங்க போய் உட்கார்ந்து இருக்கா?” புரியாமல் ராதா கேட்க,

“எங்க?” வினய் கேட்கவும், ராதா சிவாத்மிகா இருந்த இடத்தைச் சுட்டிக் காட்டினாள்.

“அதானே ஏன் போய் அங்க உட்கார்ந்து இருக்கா?” என்று வினய் கேட்டுக் கொண்டே அர்ஜுனைப் பார்க்க, அவன் சிரித்துக் கொண்டே அவர்களிடம் இருந்து விடைப்பெறுவதும், அவனது நடையின் வேகத்தையும் பார்த்தவன்,

“ஹையோ அர்ஜுன் கொஞ்சம் கோபமா இருக்கான்னு நினைக்கிறேன்.. அவனுக்கு சிவா அப்படி போய் உட்கார்ந்தது பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.. ரெண்டு பேரும் ஏதோ ஆர்கியூ செய்யறாங்க..” என்று வினய் சரியாக அர்ஜுனை கணிக்க, ராதா திகைத்து வினய்யைப் பார்த்தாள்.

“எப்படி சொல்றீங்க? உங்களுக்கு எப்படித் தெரியும்..” அவள் பதட்டமாகக் கேட்க,

“அது அவன் போற ஸ்பீட்லையே தெரியுதே.. அவனைப் பத்தி எனக்குத் தெரியாதா? சிவா முகமும் சரி இல்ல..” என்றவன், ராதா அவனை பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கவும்,

“அட.. நீ ஏன் பயப்படற? அர்ஜுன் கோபம் எல்லாம் இங்க இருந்து வாசல் போற வரை தான்.. அதுக்கும் மேல எல்லாம் அவனுக்கு கோபத்தை இழுத்து வைக்கத் தெரியாது.. அவன் அவளைப் பார்த்துப்பான்.. நீ வா.. டைம் ஆச்சு..” என்றவன், நேராக ராதாவை அழைத்துக் கொண்டு, தனது ஆடை வடிவமைப்பு இடத்திற்குச் சென்றான்.

அவன் அங்கு செல்லும்வரை அமைதியாகச் சென்றவள், அவன் காரை நிறுத்தவும், “நிஜமா தம்பி பாப்பாவை ரொம்ப கோவிச்சுக்க மாட்டாரே.. அவ பாவம்.. அவ தம்பிக்கு கெட்ட பேரு வந்துடப் போகுதுன்னு ஒதுங்கி உட்கார்ந்து இருப்பா.. தம்பியோட கோபத்தை எல்லாம் அவ தாங்க மாட்டா..” என்று ராதா சொல்லவும், அவளைப் பார்த்து இதமாக புன்னகைத்த வினய்,

“அது தான் அவனுக்கு இன்னும் கோபம் வந்திருக்கணும்.. ஏன்னா அன்னைக்கு அம்மா இந்த ஒளிஞ்சு மறஞ்சு சுத்தற வேலையே வேண்டாம்ன்னு சொன்னதுக்கே கோபப்பட்டான்.. அவனும் அது போல எதுவுமே செய்யலையே.. அவன் இப்போ கூட அவ போட்டோ போடறதோ.. செய்யறதோ ஒண்ணும் சொல்லலையே.. அவன் இப்போ போடற போட்டோவோ ஸ்டோரியோ ஏதோ ஒரு வகையில அவ சம்பந்தப்பட்டு இருக்காளே.. அவ குரல்.. அவ நிழல்.. ஏதோ ஒண்ணு இருக்கும்.. அவன் தான் நான் கமிட்டன்னு சொல்லாம செயல்ல செஞ்சிட்டு இருக்கானே..” என்ற வினய் சொல்லிக் கொண்டே போனை எடுத்து அர்ஜுனுக்கு அழைத்தான்.

“யாருக்கு கூப்பிடறீங்க?” ராதா கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, போன் எடுக்கப்பட,

“அர்ஜுன்.. என்ன சாப்பிட்டு வீட்டுக்கு போயாச்சா?” வினய்யின் கேள்விக்கு,

“ஹ்ம்ம்.. இப்போ தான் என்னோட ஸ்வீட்ட கொண்டு போய் அவ பொட்டிக்ல விட்டுட்டு கிளம்பறேன்.. அவ டிரஸ் ரெடி பண்ணிக் கொடுத்துட்டா.. வீட்டுக்கு அவ திரும்ப வந்த அப்பறம் தான் டரையல் பார்க்கணும்.. உனக்கும் சொல்றேன்னு சொல்லி இருக்கா..” அர்ஜுன் சொல்லவும்,

“சரி.. உனக்கு என்ன அவ மேல கோபம்?” வினய் கேட்கவும்,

“ஹேய்ய்.. நீயும் அங்க தான் லஞ்ச்சுக்கு வந்திருந்தியா? உன்னை நான் பார்க்கவே இல்லையே.. எங்க இருந்த? சரி.. உங்களுக்கு ப்ரிவசி வேணும்ல.. நாங்க எதுக்கு நந்தி மாதிரி..” என்று கிண்டல் செய்தவன்,

“அவ மேல எனக்கு என்னடா கோபம்?” என்று கேட்க, வினய் அர்த்தத்துடன் ராதாவைப் பார்த்தான்..

“இல்ல.. அவ ஓரமா போய் உட்கார்ந்தது..” வினய் கேட்டு முடிப்பதற்குள்,

“அது கோபம் எல்லாம் இல்ல.. கொஞ்சம் வருத்தமா இருந்தது.. என்னோட இமேஜ்ன்னு அவ சொல்லவும் எனக்கு ஒரு மாதிரி ஆச்சு.. நான் என்ன அவளை சும்மா சுத்திட்டு விட்டுட்டு போகவா நினைச்சு இருக்கேன்.. அப்படி இருந்தா தானே இமேஜ் பத்தி நான் கவலைப்படணும்.. இவளா ஒண்ணு நினைச்சிக்கிட்டு, சும்மா இமேஜ் இமேஜ்ன்னு.. அப்போ வருத்தமா இருக்கு சிவான்னு சொன்னேன்.. கொஞ்ச நேரம் எதுவும் பேசல.. ஆனா.. அவ முகத்தைப் பார்த்தா நான் எங்க வருத்தத்தை கூட இழுத்துப் பிடிக்கிறது.. என் செல்லம் பாவம்.. முகம் வாடிப் போயிட்டா..” என்றவனின் கூற்றைக் கேட்ட வினய் சிரிக்க, ராதாவிற்கு அர்ஜுனை நினைத்து மனம் கனிந்தது.

“இங்க நீ கோபமா போறன்னு சொல்லவும் உங்க அக்கா தான் ரொம்ப பயந்துட்டா..” வினய் சொல்லவும், சத்தமாக சிரித்த அர்ஜுன்,

“ஹையோ.. ஹையோ.. சரி.. விடு.. கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்த உடனே நாங்க பண்ற அலப்பறையைப் பார்த்து அக்கா சிரிக்கப் போறாங்க..” என்றவன்,  

“அப்பறம் நீ சொல்லு வினய்.. எப்படி போச்சு லஞ்ச்? ஹே சண்டைக்காரா தானா? இல்ல.. கோழி கோழி இது சண்டை கோழியா?” என்று கேலி செய்ய, அவசரமாக போனை ஸ்பீக்கரில் இருந்து போனிருக்கு மாற்றியவன், ராதாவின் பார்வையை கிடப்பில் போட்டு,

“அடேய்.. லஞ்ச் எல்லாம் நல்லா வயிறு முட்ட சாப்பிட்டாச்சு.. வெளிய வந்த பொழுது தான் உங்க ரசிகைகள் கூட்டத்துக்கு நடுவே பார்த்தேன்.. நான் கோபம்ன்னு சொல்லவும் ராதா பதறிட்டா.. அது தான் கூப்பிட்டேன்..” என்று தாங்கள் பேசியவற்றை கூறி, ராதா தன்னுடன் இருப்பதையும் வினய் சொல்லவும், ராதாவின் முகம் நாணத்தில் சிவந்தது..

“என்ஜாய்டா மச்சான்.. நான் போய் தூங்கறேன்.. ரொம்ப டயர்டா இருக்கு..” என்ற அர்ஜுன் இணைப்பைத் துண்டிக்க, ராதா வினையை முறைக்க,

“எனக்கு மட்டும் இல்ல.. அவனுக்கும் என்னோட ஒவ்வொரு  அசைவும் அத்துப்படி.. கூட்டுக் கலைவானிங்க.” என்று கண்ணடித்த வினய், அவள் அடுத்த கேள்வி கேட்பதற்குள்,

“சரி.. வா அப்படியே இங்க சுத்திப் பார்த்துட்டு வரலாம்.. ஒரு ஒருமணி நேரம்.. என் வேலை முடிஞ்ச உடனே நாம வீட்டுக்குப் போகலாம்..” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு, தனது இடத்தைச் சுற்றிக் காட்டினான்.

“பாப்பாவுது போலவே இருக்கு..” ராதா சொல்ல,

“ரெண்டு  பேருமே ஒரே வேலை தானே செய்யறோம்.. என்ன நான் ஜென்ட்ஸ்க்கு அதிகமா செய்யறேன்.. சிவா லேடீஸ் அன்ட் கிட்ஸ்க்கு.. அது தான் வித்தியாசம்..” என்றவன், தனது இடத்தில் அமர்ந்து, விரைவாக வேலைகளை முடித்து, அடுத்து செய்ய வேண்டியவற்றை சொல்லிவிட்டு, அர்ஜுனின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு தயாராக இருந்த உடைகளை எடுத்துக் கொண்டு, ராதாவுடன் வீட்டிற்குப் புறப்பட்டான்..  

“தம்பின்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?” ராதா கேட்க,

“ஆமா ராதா.. எனக்கு கூடப் பிறந்தவங்க, ப்ரெண்ட்ஸ்ன்னு எல்லாம் யாருமே இல்ல.. அவன் தான் எனக்கு எல்லாமே.. அவனுக்கும் அதே போல தான்.. என்னோட ஒவ்வொரு அசைவும் அவனுக்குத் தெரியும்.. அவனை நம்பி நான் எவ்வளவு பெரிய ரகசியம் வேணும்னாலும் சொல்லுவேன்.. அது வெளிய போகவே போகாது. அவனும் என்கிட்ட தான் எல்லாமே சொல்லுவான்.

நான் அவனுக்கு டிசைனர் மட்டும் இல்ல.. அவனோட மேனேஜரும் கூட.. என்னை நம்பி அவன் படம் சைன் பண்ணுவான்.. என் மேல அவ்வளவு நம்பிக்கை.. நானும் அந்த நம்பிக்கையை காப்பாத்திட்டு வரேன்.. அவன் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கிறதுக்கும் முன்னால நான் அதை அவ்வளவு ஜாக்கிரதையா பார்த்துப்பேன்.. ஏற்கனவே அவன் பட்ட அடி இனிமே படாம பார்த்துக்கணும்ன்னு நான் ஒரு சபதமே எடுத்திருக்கேன்.. எனக்கு அவன் அந்த அளவு முக்கியம்.. அந்த அளவு எனக்கு அவனைப் பிடிக்கும்.. என் உயிர்..” என்றவன், ராதாவைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தான்.  

“தம்பி ரொம்ப நல்ல மாதிரி.. எனக்கு முதல் தடவ தம்பியைப் பார்த்த போதே ரொம்ப பிடிச்சது..” ராதா சொல்லவும்,

“என்னை?” என்று வினய் கேட்க,

“உங்களையும்..” என்று தொடங்கியவள், அப்படியே மீதியை வாய்க்குள் விழுங்க, வினய் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, வண்டி ஓட்டுவதில் கவனம் பதித்தான்.

வீட்டிற்கு வந்த அர்ஜுன், நிர்மலா தனது அறையில் உறங்கிக் கொண்டிருக்கவும், கதவைத் திறந்த மாணிக்கத்திடம், “நான் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரேன் மாணிக்கம்.. அம்மா எழுந்தா சொல்லிடு.. நீயும் கொஞ்ச நேரம் படு..” என்றவன், தனது அறைக்குச் சென்றான்.

அந்த வார வேலைபலுவின் காராணமாக, படுத்ததும் உறங்கி விட, அவன் கோபத்துடன் கடையில் விட்டுச் செல்லவும், அதற்கு மேல் வேலை ஓடாமல், அன்றைய வேலைகளை வேகமாக முடித்துக் கொண்டு வந்த சிவாத்மிகா, அர்ஜுனின் அறை பால்கனியில் வந்து பார்க்க, ஸ்க்ரீன் இழுத்து விடப்பட்டு இருக்கவும்,

“நல்லா தூங்கிட்டு இருக்கார் போல..” என்று முணுமுணுத்துக் கொண்டு, மெல்ல இறங்கி கீழே வந்தவள், அப்பொழுது தான் ராதா சுடிதார் மாறி இருக்கவும்,

“என்ன அக்கா எங்கயாவது வெளிய போனீங்களா? சொல்லவே இல்லையே..” என்று ஆச்சரியமாகக் கேட்க,

“ஆமா சிவா.. நான் போனேன்.. அவரு என்னை மதியம் சாப்பிட வெளிய கூட்டிட்டு போனார்.. உங்களைக் கூட நாங்க பார்த்தோம்..” ராதாவின் முகம் சிவந்ததோ? அவளது முகத்தைப் பார்த்த சிவாத்மிகா,

“அக்கா.. என்னக்கா நடக்குது? ஹே.. ஹே.. சொல்லுங்க சொல்லுங்க..” அவளது கன்னத்தைப் பிடித்து கேலி செய்ய,

அங்கு வந்த வினய், சிவாத்மிகாவின் கேலியில், “ஒண்ணும் நடக்கல.. நீ தான் ரொம்ப நேரமா பால்கனில நடந்துட்டு இருக்க? என்ன விஷயம்?” கேலி செய்துக் கொண்டே உள்ளே வரவும், சிவாத்மிகா விழிக்கத் துவங்கினாள்.  

“அது.. அது.. ஒண்ணுமே இல்லையே..” என்று அவள் திக்கித் திணற,

“ஒண்ணும் இல்லாம தான் ரொம்ப நேரமா அவன் பால்கனிலயும், உன் பால்கனிலையும் நடந்துட்டு இருந்தியா? ஒருவேளை எவ்வளவு டிஸ்டன்ஸ்ன்னு அளந்து பார்த்தியோ?” என்று கேட்க, அவள் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் தலையசைக்க, வினய், ராதாவைப் பார்த்து கேலியாக சிரிக்கத் துவங்கினான்.   

“என்ன ரெண்டு பேரும் என்னை கேலி செய்யறீங்களா?” அவள் சிணுங்க,

“நாங்க எங்க கேலி செய்தோம்? நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்கவே கூடாதா?” வினய் விடாமல் வழக்கடிக்க,  

“ஹாய்யடா.. இது நல்லா இருக்கே.. நீங்க நல்லா உட்கார்ந்து பார்த்துக்கிட்டே இருங்க..” அவனது கேலியில் சிவாத்மிகாவும் இணைந்துக் கொள்ள, சிறிது நேரம் அங்கு அவர்களைப் பார்த்ததை வினய் சொல்லி கேலி செய்து சிரிக்க, நேரம் விரைவாகக் கடந்தது..

சிவாத்மிகா மணியை மணியைப் பார்க்கவும், “என்னம்மா ஏதாவது வேலை இருக்கா? டைம் இப்படி பார்த்துட்டு இருக்க?” வினய் மீண்டும் கேட்க,

“அவளுக்கு அவங்க அவரு இல்லாம நேரம் போகவே மாட்டேங்குதாம்.. அது தான் போல..” ராதா தன் பங்கிற்கு கேலி செய்ய, இருவரையும் பார்த்து அவள் முறைத்தாள்.  

“சரி சொல்லு.. என்ன அவனை இப்படித் தேடற?” விளையாட்டை விட்டு வினய் கேட்கவும்,      

“இல்லண்ணா.. அவரு இன்னும் எழுந்துக்கலையா? உடம்பு ஏதாவது முடியலையா? டிரஸ் டரையல் பார்க்கணும். லஞ்ச் போகும்போது அவர்கிட்ட கொடுத்தேன்.. அது தான்..” அவள் சொல்லவும்,

“ஓ.. அப்படியா? அவனுக்கு நல்ல டயர்ட்ன்னு சொன்னான்.. நான் சும்மா கூட இருந்ததுக்கே எனக்கு அவ்வளவு டயர்ட்.. அவனுக்கு ரொம்ப அலைச்சல் வேற..” அவன் சமாதானம் செய்யவும்,

“ரொம்ப வேலையா அண்ணா..” கவலையுடன் அவள் கேட்க,

“அது இருந்தது தான்.. கேப்பே விடாம போச்சுல்ல.. சரி.. என் கூட வா.. அவன் முழிக்கிற வரை நாம அம்மாகிட்ட பேசிட்டு இருக்கலாம்.. அவன் முழிச்சதும் நாம அவனைப் போடச் சொல்லி பார்க்கலாம்..” என்றவன், அவளை கையோடு அழைத்துக் கொண்டு, தனது அலுவலக அறைக்குச் சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!