எந்நாளும் தீரா காதலாக!! — 7

எந்நாளும் தீரா காதலாக!! — 7

💝7          

தனது மொபைலை வைத்துக் கொண்டு, சிவாத்மிகா அப்படியும் இப்படியும் நகர்த்தி எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். நெடுநேரமாக எதையோ பார்த்துக் கொண்டே வந்தவள், “பரவால்லக்கா.. அர்ஜுன்க்கு நிறைய கேர்ள் ஃபேன்ஸ் இருக்காங்க.. கமெண்ட்ல எல்லாம் ஒரே லவ், ஹார்ட்டா போட்டு இருக்காங்க.. அதை எல்லாம் பார்த்தா எப்படி இருக்கும் அவருக்கு? லூசுங்கன்னு நினைப்பாரோ?” திடீரென்று அவள் தன் பாட்டிற்கு பேசிக்கொண்டே இருக்கவும், அவளது அருகில் அமர்ந்து கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருந்த ராதா, அவளை குழப்பமாக நிமிர்ந்துப் பார்த்தாள்.

“அர்ஜுனா? யாரு?” ராதா புரியாமல் கேட்க,

“அது தான்.. நம்ம பக்கத்து வீட்டு ஹீரோ சார்.. ஒரே ‘கன்னிப்பெண்கள் நெஞ்சத்தில்’ன்னு பாட்டு எல்லாம் போட்டு இருக்காங்க.. ஹார்ட் ஹார்ட்டா விட்டு இருக்காங்க..” என்று  கேலி செய்ய, ராதா அவள் அருகில் எழுந்து வந்தாள்.

அவனது விதம்விதமான புகைப்படங்களைக் கோர்த்து, வீடியோ தயாரித்து, அதற்கு பாட்டும் போட்டு இருந்தனர், அவனது ரசிகைகள்.. ஒவ்வொரு வீடியோவும் ரசனையுடன் இருக்க, சிவாத்மிகாவிற்கு சற்று பொறாமையாக கூட இருந்தது.. அந்த வீடியோவைப் பார்த்து பழிப்புக் காட்டியவள், அவற்றில் இருந்த கமெண்ட்ஸ்களை பார்த்துக் கொண்டு வந்தாள்.

அவளது கையில் இருந்த மொபைலைப் பார்த்த ராதா, “பையன் பார்க்க நல்லா இருக்கான் இல்ல பாப்பா.. அவங்க அம்மாவுக்கு ஒரே பையன் போல.. அதிகமா வெளிய யார்கிட்டயும் பேச மாட்டாராம்.. ஷூட்டிங்க்கு போனா, தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பார் போல.. நிர்மலாம்மாக்கு அவரு நடிக்க போகணும்னு சொன்னதும் அவ்வளவு ஆச்சரியமாம்.. அவங்க அப்பா அதை விட, ‘உனக்கு அதெல்லாம் சரி வராது.. அதுக்கு எல்லாம் நல்லா பழகணும்’ன்னு சொல்லி இருக்கார்.. 

அதிகமா பேசாத நீ அந்த துறையில என்னடா பண்ணப் போறன்னு அம்மா கேட்டாங்களாம்.. ஆனா.. நடிப்புன்னு வந்துட்டா அப்படி நடிப்பார் போல.. ரெண்டு படம் நடிச்சு முடிச்சு இருக்காரு போல.. நல்ல பேர்ன்னு அம்மா சொன்னாங்க.. இப்போ இன்னும் மூணு படம் கையெழுத்து போட்டு இருக்காராம்.. அது தவிர நிறைய பாட்டு எல்லாம் நடிக்கிறாராம்.. பொண்ணுங்கன்னா எட்டடி தள்ளி நிப்பாரு போல.. எப்படி தான் படம் எல்லாம் நடிக்கிறாரோ? அதுவும் காதல் காட்சி எல்லாம் கூச்சப்பட்டா எப்படி நடிக்கிறது?” என்று வியக்க, சிவாத்மிகாவின் மனது மாலையில் அவனுடன் நடந்த கார் பயணம் நினைவு வந்தது.

“ஹ்ம்ம்..” என்று முணுமுணுத்தவள், கையில் இருந்த மொபைலை மீண்டும் உருட்டத் துவங்க, அவன் நடித்த பாடல்கள் வரவும், அவற்றை பார்க்கத் துவங்கினாள்.

“என்ன பாப்பா இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்க? நான் இவ்வளவு பேசறேன்.. நீ எதுவுமே பேசல?” என்று ராதா கேட்டு விடவும், ராதாவின் மடியில் தலை வைத்தவள், அவளது இடுப்பைக் கட்டிக் கொண்டு முகத்தை அவளது மடியில் புதைத்துக் கொண்டாள். 

இன்னமும் அவளது மனதில் அந்த மாலை வேளையின் குறுகுறுப்பு, அந்த நிமிடத்தின் மாயவலை இன்னமும் மிச்சமிருக்க, அந்த உணர்வு புதிதாக இருக்க, ராதாவின் மடியில் தஞ்சம் புகுந்தாள்.  

மெல்ல அவளது தலையைக் கோதிய ராதா, “என்ன பாப்பா? என்னாச்சு? என்னவோ இன்னைக்கு நீ வந்ததுல இருந்தே சரி இல்லையே..” என்று மீண்டும் மீண்டும் கேட்கவும்,   

“ஒண்ணும் இல்லக்கா..” என்றவள், மீண்டும் எழுந்து அமர்ந்து,  மொபைலை பார்க்கத் துவங்க, ராதா அவளைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“ஒண்ணும் இல்லக்கா.. சும்மா தான் இன்டர்நெட்ல பார்த்துட்டு இருக்கேன்..” என்றவள், அர்ஜுனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அலசிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு போட்டோவாக பார்த்துக் கொண்டு வந்தவள், ஒரு பச்சை வண்ண ஃபார்மல் சட்டையும், சந்தன நிற பேண்டும் அணிந்து, ஒரு காரில் சாய்ந்து நிற்பது போல போஸ் கொடுத்திருக்க, அதைப் பார்த்தவளின் கண்கள் அவனிடமே ஒட்டிக் கொண்டது.. அந்த உடை சிம்பிளாக இருந்தாலும், அது அவளை மிகவும் கவர்ந்தது..

அதை அவன் அணிந்திருந்த நேர்த்தியும், அதை அழகாக எடுத்துக் காட்டிய விதமும், அவளைக் கவர, தன்னையே அறியாமல், அந்த புகைப்படத்திற்கு லைக் போட்டு விட்டு, வேறு படங்களை பார்க்கத் துவங்கினாள்.  

சில எளிய உடையில் கூட அவன் தன்னை எடுத்துக் காட்டிய விதம் அவளை மிகவும் கவர்ந்தது.. வேஷ்டி சட்டை அணிந்து ஒரு புகைப்படத்தில் அவன் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு,  கெத்தாக, ஒரு ரவுடி போல போஸ் கொடுத்திருக்க, அதைப் பார்த்தவளின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது..

“பெரிய ரவுடின்னு நினைப்பு..” அவள் முணுமுணுக்க, ராதா அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள். அவளையோ அவளது பார்வையையோ கவனிக்கும் நிலையில் சிவாத்மிகா இல்லை.. நெடுநேரம் அவனது புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவனது ஸ்டோரியைப் பார்க்க, அதில் நடுநாயகமாக ஒரு இதயம் துடித்துக் கொண்டிருக்க,                                                 

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி

அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி

ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே

நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி

நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி                                       

என்ற பாடலும் வரவும், சிவாத்மிகாவின் கைகள் நடுங்கத் துவங்கியது. போனை கீழே வைத்தவள், மீண்டும் ராதாவின் மடியில் தஞ்சம் புக, ராதா புத்தகத்தை கீழே வைத்துவிட்டு, அவளது முதுகை வருடிக் கொடுத்தாள்.

சிறிது நேரம் வருடியவள், “என்ன பாப்பா? என்ன ஆச்சுன்னு சொல்லுடாம்மா..” என்று கேட்கவும், ராதாவின் இடுப்பை இறுக்கமாக கட்டிக் கொண்டவள், கடகடவென்று மாலையில் நடந்ததை ஒப்பித்துவிட்டு,

“அந்த நேரத்துல இருந்து மனசுல என்னவோ பண்ணுதுக்கா.. என்னால வேலைல கவனம் செலுத்த முடியல.. அவர்.. அவர் அப்போ பார்த்த பார்வை என் மனசுல ஏதோ பண்ணிடுச்சு அக்கா.. இன்னமும் எனக்கு அதுல இருந்து வெளிய வர முடியல.. நான்.. நானா இப்படி இருக்கேன்னு இருக்கு. அவர் என்கிட்டே நெருங்கி வராரா? அது என்ன உயிரை உரியற பார்வை? அவருக்கு என்னைப் போய் பிடிச்சிருக்கா? வினய் அண்ணா ரெடி பண்ற டிரஸ் எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டு, அது கூட எனக்குப் பிடிச்சா மாதிரி போடறார்.. இன்னைக்கும் அண்ணா என்கிட்டே கேட்கறாங்க. எனக்கு மதியம் ஒரு மாதிரி ஆச்சு..” என்று அவள் ராதாவின் முகத்தைப் பார்க்காமல், கண்ணீருடன் புலம்ப, ராதா அவளது தலையை மென்மையாக வருடி,

“அது ஒண்ணும் இல்லடா.. அதை எல்லாம் இப்போ எதுவும் நினைக்காதே சரியா? அது அவரு சும்மா கூட பார்த்து இருக்கலாம்ல.. எதுவும் மனசுல வச்சுக்காதே.. இப்போ பேசாம தூங்கு..” என்றவள், அவளது கையில் இருந்து மொபைலை பிடுங்கி வைத்துவிட்டு, அவளது தலையை மெல்ல வருடிக் கொடுக்க, மெல்ல சிவாத்மிகா கண்ணுறங்கினாள்.

இரவு நெடுநேரம் கழித்து வந்த அர்ஜுனின் பார்வை, காரை விட்டு இறங்கும்பொழுதே சிவாத்மிகாவைத் தேடி, அவளது பால்கனியின் பக்கம் சென்றது. அங்கு அவள் இல்லாமல் போகவும், அவனது முகம் சுருங்க, தலையை கோதிக் கொண்டே, வீட்டின் உள்ளே சென்றவன், நேராக அறைக்குச் சென்று, ஜன்னல் திரையை விலக்கி, சிவாவின் அறைப்பக்கம் பார்க்க, அங்கும் எந்த அரவுமின்றி அமைதியாக இருக்கவும், “தூங்கிட்டாலாட்ட இருக்கு..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், மெல்ல, கட்டிலில் விழுந்தான்..

‘இன்னும் அவளைத் திரும்ப பார்க்க பதினைஞ்சு நாள் ஆகும்.. என்ன அவசரம் அவளுக்கு தூங்க? எனக்கு உன்னைப் பார்க்கணும் சிவு..’ மனதினில் அவளிடம் பேசியவனுக்கு ஏனோ உறக்கம் வர மறுத்தது. 

காரில் இருந்து இறங்கியதும் அர்ஜுனின் பார்வை சென்ற திசையையும், உடனே அவன் முகம் மாறிய விதமும் வினய் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். அவனுக்கு அர்ஜுனின் மனது ஓரளவு புரிவதாய் இருந்தது.. அது அவனுக்கு வியப்பையும் கொடுத்தது..

அவளைப் பார்த்து இரண்டு நாட்கள் கூட முழுதாக முடிவடைந்த நிலையில், அர்ஜுனின் மனது சிவாத்மிகாவிற்காக துடிப்பது அவனுக்கு நன்கு விளங்கியது. முன்தினம் அவளைப் பார்த்ததில் இருந்தே அவனில் ஒரு பாதிப்பு இருந்தது. அதுவும் முன்தினம் இரவு அவளைப் பற்றி கேட்டதில் இருந்தே அவனது மனது அவளுக்காக தவித்ததும் அவனுக்கு புரிந்தது.

‘நிஜமாவே அவனுக்கு அவளைப் பிடிச்சு இருக்கா? அவ கூட இருந்தா நான் எல்லாம் மறந்து போறேன்னு சொல்றான். அவளும் நானும் மட்டும் உலகம்ன்னு சொல்றானே.. அதோட புதுசா பாட்டு எல்லாம் போட்டு இன்ஸ்டாக்ராம்ல ஸ்டோரி போடறான்.. எல்லாமே புதுசா இருக்கு.. சிவாவும் நல்ல பொண்ணு தான்.. அவளையும் அர்ஜுன் நல்லா பார்த்துப்பான்.. ஆனா.. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே.. அவளும் தானே அவன் கூட போயிட்டு, நான் கேட்க கேட்க, தாவி குதிச்சு ஓடி போனா.. பார்ப்போம் என்ன பண்றாங்கன்னு..’ என்று நினைத்துக் கொண்ட வினய், அடுத்த பதினைந்து நாள் ஷூட்டிங்கிற்குத் தேவையான

 அர்ஜுனின் உடைகளை அனைத்தையும் எடுத்து வைக்கத் துவங்கினான்.

அதிகாலை நேரம், சீக்கிரமாகவே எழுந்துக் கொண்ட அர்ஜுன், தனக்கு தேவையான மற்ற உடைகளையும், பொருட்களையும் எடுத்து வைக்கத் துவங்க, “அர்ஜுன் உன்னோட ஷூட்டிங்க்கு தேவையான டிரஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டேன்.. வேற ஏதாவது வேணுமா?” வினய் கேட்கவும்,

“அப்படியே உன் தங்கையும் கூட வரலானான்னு கேளேன்.. கூட கூட்டிக்கிட்டு போகலாம்” என்று அர்ஜுன் சொல்லவும், அவனை முறைத்த வினய்,

“எனக்கு செருப்படி வாங்கித் தராம நீ அடங்கப் போறது இல்லன்னு நினைக்கிறேன்.. எதுல விளையாடறதுன்னு இல்லையா? பேசாம கிளம்பு.. ஃப்ளைட்க்கு டைம் ஆச்சு.. அவளை கூட்டிக்கிட்டு போற நேரத்துல கூட கூட்டிக்கிட்டு போ.. இப்போ என்னை ஆளை விடு..” எனவும், ஒருமுறை ஜன்னலின் அருகே சென்றவன், திரையை விலக்கி, அவளது அறையைப் பார்த்துவிட்டு, ஒரு பெருமூச்சுடன் கிளம்ப, வினய் தலையில் அடித்துக் கொண்டு கிளம்பித் தயாரானான்.

“அம்மா.. உடம்பைப் பார்த்துக்கோங்க.. நான் உங்களுக்கு அப்போ அப்போ போன் பண்றேன் சரியா? உங்களுக்கு அப்படி ஏதாவது வேணும்ன்னா இல்ல எங்கயாவது போகணும்ன்னா சிவாவை கூப்பிட்டுக்கோங்க.. அவ வருவா.. நான் அவகிட்ட சொல்றேன்..” உரிமையாக அர்ஜுன் சொல்ல, நிர்மலா அவனை சந்தேகமாகப் பார்த்தார்.

“சிவாவா?” என்று அவர் குழப்பமாகக் கேட்க,

“ஹ்ம்ம்.. ஆமா.. அதோ அந்த வீட்ல இருக்காளே.. அவ..” என்றவன், நிர்மலா திகைப்புடன் பார்க்கவும்,        

அவரது பார்வையை டீலில் விட்டு, “சரி வினய்.. நாம கிளம்பலாம்.. ஃப்ளைட்க்கு டைம் ஆச்சு..” என்று பெட்டியை எடுத்துக் கொண்டு,

“அம்மா.. நாங்க வரோம்.. பார்த்துக்கோங்க..” என்றபடி அவன் நகரவும், நிர்மலாவின் கண்கள் அவனை அளவிடத் துவங்கியது..

காரின் அருகே சென்றவன், மாணிக்கம் பெட்டியை உள்ளே வைத்துக் கொண்டிருக்கவும், நிமிர்ந்து சிவாத்மிகாவின் பால்கனியிலும், அறையின் ஜன்னலையும் பார்த்தவன், தலையை கோதிக் கொண்டே, காரில் ஏறி அமர, நிர்மலாவின் பார்வை அவனது பார்வையைத் தொடர்ந்தது.

தாய் அறியாத சூல் உண்டோ? பெட்டியை அடுக்கி விட்டு அவரிடம் விடைப்பெற வந்த வினயிடம், “என்னடா? அஜ்ஜுவோட கண்ணு அந்த வீட்டையே சுத்தி வருது? என்ன விசேஷம்?” என்று கேட்க,

“ஓ.. அப்படியா? இந்தப் பையன் அந்த வீட்டைப் பார்க்கறானா? தெரியலையேம்மா..” என்றவன்,

“நாங்க வரோம்மா.. ஃப்ளைட்டுக்கு டைம் ஆச்சு” என்றபடி காரில் ஏறிக் கொள்ள, நிர்மலா இருவருக்கும் பார்த்து தலை அசைத்தார்..

கார் கண்ணுக்கு மறைந்ததும், வீட்டின் உள்ளே சென்றவர், “வாங்கடா.. எங்க போகப் போறீங்க? கடைசியில என்கிட்ட தானே வரணும்.. அப்போ நான் பேசிக்கறேன்..” என்று கருவியவரின் மனதில் சந்தோஷச் சாரல்..

உடனே சிவாத்மிகாவைப் பார்க்க வேண்டும் போல எழுந்த ஆவலை அடக்கிக் கொண்டவர், “விடியட்டும்.. நல்லா தூங்கிட்டு இருக்கா போல..” என்று நினைத்துக் கொண்டவர், பூஜைக்கு பூக்களைப் பறிக்கத் துவங்கினார்.

விடிந்ததும், தனது காலை வேலைகளை முடித்த சிவாத்மிகா, டைனிங் டேபிளில் அமர்ந்து, காபியை பருகிக் கொண்டே மொபைலை பார்த்துக் கொண்டிருக்க, “சிவாம்மா..” என்ற குரல் கேட்கவும், வாசலில் பார்த்தவள், அங்கு நிர்மலா நின்றுக் கொண்டிருக்கவும், அவசரமாக சென்று கதவைத் திறந்தாள்.

“வாங்கம்மா.. என்னாச்சும்மா?” அவரை உள்ளே அழைத்தவள்,  அவர் உள்ளே வரவும், குழப்பமாகக் கேட்க, உள்ளே வந்தவர், அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு, அவளது எதிரில் இருந்த சேரில் அமர்ந்து, 

“சும்மா தான்ம்மா.. தனியா இருக்கேனா? கொஞ்சம் போர் அடிச்சது.. அது தான் உங்ககிட்ட பேசிட்டு போகலாம்ன்னு வந்தேன்..” எனவும், சிவாத்மிகா அவரை கேள்வியாகப் பார்க்க, அதற்குள்,

“வாங்கம்மா…” ராதாவும் அவரை அழைத்தாள்.

“காபி குடிக்கறீங்களாம்மா? என்னாச்சும்மா? ஏதாவது ஹெல்ப் வேணுமா? அவங்க ஷூட்டிங்க்கு காலையில கிளம்பிட்டாங்களா?” அவர் திடீரென்று வந்திருக்கவும், சிவாத்மிகா புரியாமல் கேட்க, நிர்மலா அவளைப் பார்த்து ஆதரவாக புன்னகைத்தார்.  

“அதெல்லாம் இப்போ வேண்டாம் சிவா.. ஏதாவது வேணும்னா கேட்கறேன்.. என் பையன் ஏதாவது எனக்கு வேணும்ன்னா இல்ல எங்கயாவது போகணும்ன்னா உன்னைக் கேட்க சொல்லி சொல்லிட்டு போய் இருக்கானே..” என்று சொல்லவும்,  

“என்னது?” என்று சிவாத்மிகா திகைக்க, ராதாவிற்கு அவளது முகத்தைப் பார்த்து சிரிப்பு வந்தது.

“ஆமா சிவா.. அஜ்ஜு தான் சொல்லிட்டு போனான்.. அவன் வர பதினஞ்சு நாள் ஆகும்.. ஷூட்டிங்க்கு கோயம்பத்தூர் பக்கம் போயிருக்கான்..” என்று சொல்லவும், சிவாத்மிகா திகைப்புடன் பார்க்க, அவளது திகைப்பில் இருந்தே அர்ஜுன் அப்படி எதுவும் அவளிடம் சொல்லவில்லை என்று புரிந்துக் கொண்டு,

‘படவா.. என்ன ரூட்டு போட்டுட்டு இருக்கியா? நீ வாடா உன்னை நான் கவனிச்சுக்கறேன்..’ என்று மனதினில் நினைத்துக் கொண்டவர்,         

“நீ ஷாக் ஆகறதைப் பார்த்தா அவன் உன்கிட்ட ஒண்ணும் சொல்லல போலயே..” என்று கேட்கவும்,

“இல்லைம்மா.. அவர் என்கிட்டே ஒண்ணும் சொல்லல.. அவரு கோயம்புத்தூர் போற விஷயமே எனக்குத் தெரியாது..” என்று அவள் அவசரமாக அவள் சொல்லவும், அவளது கன்னத்தைத் தட்டியவர், ராதாவைப் பார்க்க, ராதா அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா அவங்க ரெண்டு பேரும் இல்லாம போர் அடிக்குதா?” ராதா கேட்கவும்,

“அப்படி இல்ல.. பழகின விஷயம் தானே.. இப்போ பேசிட்டு இருக்க நீங்க ரெண்டு பொண்ணுங்க இருக்கீங்கன்னு கொஞ்சம் சந்தோஷமா இருக்கு.. அது தான் வந்தேன்.. சரி இவ பிசியா இருந்தாலும் உன்கூட பேசலாம்ன்னு நினைச்சேன்..” என்றவர், ராதா கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு,

“சிவா.. எனக்கு உன்னோட போன் நம்பர் தாம்மா.. ஏதாவது வேணும்ன்னா கேட்க எனக்கு வேணும்ல..” என்றவர், கையோடு அவளது போன் நம்பரை வாங்கிக் கொள்ள, சிவாத்மிகா அவரைப் பாரிதாபமாகப் பார்த்தாள்.

“சிவாம்மா.. அவன் இதுவரை அப்படி எல்லாம் என்கிட்டே சொல்லிட்டு போனது இல்ல.. அதுவும் உரிமையா உன்னை கேட்க சொல்லி காலைல அப்படி சொல்லிட்டு போனான்.. உன் மேல அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை..” என்று சொல்லவும்,

“இருக்கும்.. இருக்கும்..” ராதா உடன் சேர்ந்து பாட, சிவாத்மிகா ராதாவைப் பார்த்து முறைக்க, இருவரின் பார்வையைப் புரிந்துக் கொண்டவர்,

“என்ன ஏதாவது விஷயம் இருக்கா?” என்று கேட்கவும், அவசரமாக சிவாத்மிகா தலையசைக்க, அவர் கேலியாகப் பார்க்கவும், சங்கடமாக புன்னகைத்தாள்.

அவளது முகத்தைப் பார்த்தவர், அதற்கு மேல் சோதிக்காமல், “என்ன ராதா இன்னைக்கு என்ன சமையல்?” என்று பேச்சை மாற்றவும், ராதா அதற்கு பதில் சொல்ல, அவர்களது பேச்சு சமையல் பக்கம் சென்றது..

சிவாத்மிகா மொபைலைப் பார்த்துக் கொண்டிருக்கவும், “என்ன சிவா நீ சமைப்பியா?” திடீரென்று நிர்மலா கேட்க,

“ரொம்ப ஆஹா ஓஹோன்னு இல்லம்மா.. ஓரளவு சமைப்பேன்.. நான் ஹாஸ்டல்லையே இருந்ததுனால ரொம்ப எனக்குத் தெரியாது.. லீவ்ல போர் அடிக்கும்.. அப்போ வார்டன் வீட்ல அவங்க சமைக்கிறத வேடிக்கைப் பார்த்து கத்துக்கிட்டேன்..” என்று அவள் சொல்லவும்,

“ஹாஸ்டல்ல இருந்து படிச்சியாம்மா? லீவ்ல நீ ஏன் அங்க இருக்கணும்? உங்க அம்மா அப்பா வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வர மாட்டாங்களா? ஆமா.. அவங்க எல்லாம் எந்த ஊர்ல இருக்காங்க?” என்று இயல்பாக நிர்மலா கேட்கவும், சிவாத்மிகாவின் உடல் இறுகியது..

அவளது முகம் சுருங்க, “அவங்க எல்லாம் இருக்காங்க ஆனா இல்ல.. நான் ஒரு அனாதை போல” என்றவள், நிர்மலா குழம்பிக் கொண்டிருக்கும் போதே, 

“நான் போய் கிளம்பி ரெடி ஆகி வரேன்.. எனக்கு டைம் ஆச்சு..” என்றவள், அவசரமாக அறைக்கு ஓடிச் செல்ல, நிர்மலா புரியாத குழப்பத்துடன் ராதாவைப் பார்த்தார்.

“இவ என்ன சொல்றா ராதா? இருக்காங்க ஆனா இல்ல.. அனாதைன்னு எல்லாம் சொல்றா? என்ன அர்த்தம்?” ராதாவிடம் கேட்க, அவசரமாக அவளைப் பற்றி சொன்ன ராதா, நிர்மலா தவிப்புடன் ராதாவைப் பார்க்கும்பொழுதே, 

“அவளைப் பெத்தவங்க ரெண்டு பேருக்கும் இப்போ வேற குடும்பம் இருக்கு.. அவங்க குடும்பம் அமைச்சிக்கிட்டு இந்த பொண்ணை அப்படியே விட்டுட்டாங்க. பணத்தை மட்டும் அனுப்பிட்டா போதும்ன்னு இந்த பொண்ணை கண்டுக்கறதே இல்ல.. இவ ஏதோ நல்லபடியா அதை வச்சு படிச்சு இன்னைக்கு கௌரவமா ஒரு தொழில் பண்ணிக்கிட்டு இருக்கா.. அவங்க முன்னால இவ போய் நின்னா கூட அவங்களுக்கு அடையாளம் தெரியாது.. அப்படி ஒரு பெத்தவங்க.. சிவாவும் அவங்களைப் பத்தி நினைக்கிறது இல்லம்மா..” என்றவளைப் பார்த்த நிர்மலா அதிர்ந்து போனார்.

“குழந்தை பாவம்.. எப்படி எல்லாம் கஷ்டத்தைத் தாங்கினாளோ?” என்று மனமாகாமல் புலம்பியவர்,

“இந்தப் பொண்ணு என்ன பாவம் பண்ணினான்னு அவளை இப்படி தனியா விட்டு இருக்காங்க.. லீவ்ல கூட கூட்டிட்டு போக முடியலைனா அந்த குழந்தை தனியாவா இருந்தது? என்ன கொடும இது?” ராதாவைக் கேட்க,

“அவ அதெல்லாம் இப்போ கண்டுக்கறதே இல்லம்மா.. நான் சம்பாதிக்கிறேன்.. நான் பார்த்துக்கறேன்னு அவ தைரியமா இருக்கா.. அப்போ அப்போ கொஞ்சம் மனசு ஒடஞ்சு போயிடுவா.. பாவம் தான்மா..” ராதா கூட சேர்ந்து புலம்ப, நிர்மலா தனது கண்களில் துளிர்த்திருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு,

“இனிமே அவளை நான் பார்த்துக்கறேன்.. என் பொண்ணா.. அவளுக்கு அம்மா நான் இருக்கேன்..” என்றவர், ராதா அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே,  

“என் பிள்ளையும் அவளை பத்திரமா பார்த்துப்பான்..” என்று கூறியவர், ராதா திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,

“சரி.. நான் வரேன் ராதா.. அப்பறம் வேலை முடிச்சிட்டு வா.. அஜ்ஜு போன் பண்ணுவான்..” என்றபடி வெளியில் செல்ல, அவர் இறுதியாக கூறிய வாக்கியத்தை கேட்ட சிவாத்மிகா திகைத்து நிற்கும்பொழுதே, அவளது செல்போன் ஒலி எழுப்பியது.

“நமக்கு யாருடா வாட்ஸ்சப்ல மெசேஜ் அனுப்பி இருக்கா?” என்று தனக்குள் பேசிக் கொண்டே அதைப் பார்த்தவள், அதில் தெரிந்த புகைப்படத்தைப் பார்த்து, விழி விரித்தாள்.

“அர்ஜுன்..” அவள் அவசரமாக சொல்லிக் கொண்டே படிகளில் இறங்க, ராதா அவள் சொன்ன வார்த்தையைக் கேட்டு குழப்பத்துடன் பார்க்க,

“குட் மார்னிங் சிவு.. நல்லா தூங்கி எழுந்தியா? ரீச்ட் கோயம்புத்தூர் சிவு.. அம்மாவை அப்போ அப்போ பார்த்துக்கோ.. அவங்ககிட்ட ஏதாவது ஹெல்ப் வேணும்ன்னா உன்னை கேட்க சொல்லி, சொல்லி இருக்கேன்.. மிஸ்ட் சீயிங் யூ இன் தி மார்னிங்.. உன்னைத் தேடினேன்.. நீ கண்ணுல படல.. அது தான் உன்கிட்ட சொல்ல முடியல.. அப்பறம் கால் பண்றேன்.. டேக் கேர்.. மிஸ் மீ..” என்று அர்ஜுன் மெசேஜ் செய்திருக்க, அதைப் பார்த்தவள், ராதாவைப் பார்த்து, திருதிரு என்று விழித்து, அப்படியே தொப்பென்று டைனிங் டேபிள் சேரில் அமர்ந்தாள். 

ராதா அவளது அருகில் வரவும், தனது போனை அவளிடம் நீட்டியவள், எச்சிலை கூட்டி விழுங்கி அவளைப் பார்க்க, அதைப் பார்த்த ராதா சிரிக்கத் துவங்கினாள். “’மிஸ் மீ’ யாம்ல.. மிஸ் பண்ணுங்க.. மிஸ் பண்ணுங்க. நல்லா மிஸ் பண்ணுங்க..” என்று கேலி செய்ய,

“அக்கா…” என்று சிவாத்மிகா அவளைப் பார்த்து சிணுங்க,

“ஏதோ பையனுக்கு மனசுல இருக்கு போலேயே.. கால் வேற பண்றாராம்.. அதுவரை மிஸ் பண்ணுங்க..” என்று கேலி செய்த ராதா, 

“பதில் அனுப்பு.. பாவம் உன்னைத் தேடி இருக்கார் போல..” என்று சொல்லி போனை அவளது கையில் கொடுக்க, சிவாத்மிகா பதில் பேசாமல் விழிக்கத் துவங்கினாள். 

“பண்ணு..” என்று ராதா விரட்ட, 

“பண்றேன்..” என்றவள், அவனது பெயரை தனது போனில் பதிந்துவிட்டு,   

“ஓகே.. பார்த்துக்கறேன்.. நீங்களும் டேக் கேர்..” என்று அவள் பதில் அனுப்பிவிட்டு, ராதாவைப் பார்க்க, ராதா அவளை கவனிக்காதது போல தனது வேலையைச் செய்ய, அவளது மனதினில் ஒரு ரகசிய புன்னகை..

மெல்ல போனை தனது தலையில் தட்டிக் கொண்டவள், அவனது புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, ‘கிரேசி..’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே, ராதா வைத்திருந்த இட்லியை பிட்டு வாயில் போட்டுக் கொள்ளத் துவங்கியவள்,

இதயம் துடிப்பது நின்றாலும்

இரண்டு நிமிடங்கள் உயிருக்கும்

அன்பே என்னை நீ நீங்களினால்

ஒரு கணம் என் உயிர் தாங்காது..

என்று பாடலை முணுமுணுத்துக் கொண்டே உண்டு விட்டு, தனது வேலைக்கு கிளம்பிச் செல்ல, நாட்கள் அதன் வேகத்தில் ரக்கை கட்டி பறக்கத் துவங்கியது.

 

Leave a Reply

error: Content is protected !!