எல்லாம் நன்மைக்கே…

198d4a14b0c4f3185254b1b1e214bb92-f8225d62

எல்லாம் நன்மைக்கே…

எல்லாம் நன்மைக்கே…

முதலிலேயே அதிக மக்களை தன்னுள் அடைத்திருந்த அந்த நகர பேருந்தில்
மேலும் பலர் முண்டியடித்து கொண்டு உள்ளே ஏறினர். அதில் நந்தினியும் ஒருத்தி.

முட்டிமோதி உள்ளே நுழைந்து கிடைத்த சிறு இடத்தில் தன்னை பொருத்தி கொண்டு கம்பியை பிடித்து நின்றவளுக்கு நிம்மதி பெருமூச்சு.

‘அப்பாடி, பஸ் கிடைச்சிடுச்சு, இன்னைக்கு டைமுக்கு இன்டர்வியூக்கு போயிடலாம், கண்டிப்பா இந்த வேலை கிடைச்சிடும், கிடைக்கனும்’ அவளுக்குள் நம்பிக்கை. வேண்டுதல்.

பாதி வழியில் பெரிய குலுக்கலுடன் பேருந்து‌ நின்று விட்டது. என்னவென்று பார்க்க, பேருந்து பிரேக் டவுன்!

அவளுக்கு ‘அய்யோ’ என்றானது.

பஸ்ஸிலிருந்து இறங்கி தெருவோரமாக நின்றுக் கொண்டிருந்தவளின் நெற்றியில் முத்து முத்தான வியர்வைத்துளிகள். நேரம் வேறு காலில் சக்கரத்தை கட்டி விட்டது போல் நிற்காமல் ஓட, அவளுக்கோ நேர்முகத்தேர்வை நினைத்து அத்தனை பதட்டம்!

காலையில் அவசரமாக தயாராகியதில் சாப்பிடாமல் வந்தது வேறு மயக்கத்தை உண்டாக்க, கை நீட்டி வாகனத்தை நிறுத்த முயற்சித்தவளுக்கோ ஏமாற்றம் தான்.

‘இந்த வேலை மட்டும் கிடைக்கலன்னா தம்பியோட ஸ்கூல் ஃபீஸ், அம்மாவோட மருந்து செலவுக்கு பிச்சை தான் எடுக்கனும். அய்யோ கடவுளே!’ என்று மானசீகமாக புலம்பியவாறு வீதியோரமாக வேகவேகமாக நடந்துச் சென்றவளுக்கு கடவுளின் புண்ணியத்தில் ஒரு ஆட்டோ கிடைத்துவிட, அதில் ஏறியவள் போகும் இடத்தை கூறி ‘ஹப்பாடா!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொண்டாள்.

ஆனால், அதுவும் கடவுளுக்கு பொறுக்கவில்லை போலும்!

அந்த ஆட்டோ ஓட்டுனரோ அப்போது தான் வண்டிக்கு பெட்ரோல் போட பெட்ரோல் பங்கிற்கு செல்ல, அங்கே நிறுத்தப்பட்டிருந்த வாகன வரிசையில் இவர்கள் ஐந்தாவது இடம். நந்தினியின் மனநிலையை சொல்லவா வேண்டும்?

“அண்ணா சீக்கிரம், நேரமாகுது.” என்று மட்டும் தான் அவளால் புலம்ப முடிந்தது. எப்படியோ வாகனத்திற்கு பெட்ரோல் இட்டு வண்டி மீண்டும் புறப்பட, மீண்டும் அடுத்த தாக்குதல்!

போக்குவரத்து காவல் அதிகாரிகளின் கண்களில் இவள் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ தென்பட, அடுத்து என்ன? வண்டியை நிறுத்தி கேள்வி மேல் கேள்வி!

இவளுக்கோ நிஜமாகவே மயக்கம் வருவது போல் தலையே சுற்றிவிட்டது. கஷ்டத்தின் போது எல்லாரும் நினைக்கும் அதே கேள்வி! ‘கடவுளே! ஏன் எனக்கு மட்டும் இப்படி?’

அந்த ஓட்டுனர் பேசினாரோ, இல்லையோ? ஏதேதோ பேசி அவர்கள் கேட்ட பணத்தை வேறு கொடுத்தவளுக்கு அத்தனை ஆதங்கம். வயிற்றெரிச்சல்.

பற்களை கடித்து பொருத்துக் கொண்டவள், அடுத்து அந்த ஓட்டுனர் வண்டியை ஓரமாக நிறுத்தி விடாது வந்துக் கொண்டிருந்த அழைப்பை ஏற்று பேசவும் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள்.

நேரத்தை பார்க்க, அதுவோ வெறும் ஐந்து நிமிடங்கள் தான் மிச்சம் என்று பற்களை இழித்துக்கொண்டு காட்டியது. கிடைத்த சந்தர்ப்பமும் கைவிட்டு நழுவுவது போல் பிரம்மை அவளுக்கு!

அவளின் சோர்ந்த முகத்தை பார்த்து அந்த ஓட்டுனர் என்ன உணர்ந்தாரோ? வண்டியை வேகமாக செலுத்தியவர், அந்த நகரத்தின் வாகன நெரிசலை சமாளித்து எப்படியோ அவள் சொன்ன இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.

பயணத்திற்கான பணத்தை நந்தினி கொடுக்க, அந்த ஓட்டுனரிடமோ சில்லறை இல்லை. “உங்ககிட்ட ச்சேன்ஜ் இருக்கா ம்மா?” என்று அவர் கேட்டதும், முகத்தை பாவமாக வைத்துக் கொண்டவள், “நீங்களே வச்சிக்கோங்க அண்ணா.” என்றுவிட்டு விறுவிறுவென நேர்முகத்தேர்வு நடைபெறும் இடத்திற்கு ஓடினாள்.

ஆனால், பலன் என்னவோ பூச்சியம் தான்.

அங்கே நேர்முகத்தேர்வுக்கு கலந்துக் கொள்வதற்கான நேரம் கடந்திருக்க, மனதால் மொத்தமாக சோர்ந்து போனவளுக்கு மீண்டும் தோற்ற உணர்வு! அதிக பணத்தேவைக்காக இந்த வேலையையே நம்பியிருந்தவளுக்கு ஏமாற்றம்!

சோர்ந்துப் போய் அந்த அலுவலகத்திற்கு பக்கத்திலிருந்த பூங்காவில் போய் அமர்ந்துக் கொண்டாள் நந்தினி. ‘இனி என்ன? எதுவுமில்லை. அவ்வளவு தான். பணத்திற்கு யாரிடமாவது கையேந்துவதை தவிர வேறுவழியில்லை.’ என்ற வார்த்தைகளே அவளுக்குள் சுழன்றுக் கொண்டிருந்தன.

ஆனால், கடவுளின் செயலை நிர்ணயிக்க முடியுமா என்ன? எத்தனை இழப்புகளை கொடுத்தாலும் அதற்கேற்ற பலனையும், நன்மையும் வைத்திருப்பவன் தானே அவன்!

சரியாக அவளுக்கு ஒரு மின்னஞ்சல் வர, அந்த சின்ன சத்தத்தில் சலித்தவாறு திரையை பார்த்தவளின் விழிகளில் பலவிதமான உணர்ச்சிகள்!

முதலில் குழப்பம், பின் ஆச்சரியம், வியப்பு, சந்தோஷம், நம்பமுடியாத நிலை என்று அவளுடைய விழிகளில் அடுத்தடுத்தென பாவனைகள் மாற, இறுதியில் விழிகளிலிருந்து கன்னத்தினூடே விழிநீர் வடிந்து அந்த புற்தரையை தொட்டது.

அவளின் இதழில் பூத்திருந்த புன்னகையே அது ஆனந்த கண்ணீர் என்று சொல்லாமல் சொல்லியது.

சில மாதங்கள் முன் இணையத்தளத்தில் நடைபெற்ற நாவல் போட்டியில் பங்கேற்றிருந்தவள் கிட்டதட்ட அந்த போட்டியில் தான் கலந்துக்கொண்டதை மறந்தே விட்டிருந்தாள். இப்போது கடவுளின் செயலாக அந்த போட்டியில் இவளுடைய நாவல் வெற்றி பெற்றிருக்க, முதல் இடத்திற்கு ஐந்து இலட்சம் பரிசுத்தொகை.

‘ஒன்றை இழந்தால் இன்னொன்று நிச்சயம். எல்லாம் நன்மைக்கே…’ இவை என்னவோ உண்மை தான் போலும்!

***முற்றும்***

ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!