காதல்போர் 25

ei5FULY94102-dbf2b3df

காதல்போர் 25

அடுத்த மூன்று நாட்கள் வேதா யாருடனும் அதிகமாக பேசவில்லை. சாப்பிட மட்டுமே வருபவள், கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிப்பாளே தவிர, முன்னிருந்த உற்சாகம், இயல்பை அவளிடம் காணவே முடியவில்லை.

முகம் இறுகிப்போய் சிரிப்பை தொலைத்து அறையிலேயே இவள் அடைந்துக் கிடக்க, சுற்றியிருந்தவர்களுக்குதான் எதுவுமே புரியவில்லை. அதுவும் தன் மகளைக் குறித்து அதிக வேதனைப்பட்டது என்னவோ நரேந்திரன்தான். அவளுடைய காதலைப்பற்றி அறிந்திருந்தவர் அவர். ஆனால், அவள் மனதின் குறைப் பற்றி ஒரு தந்தையாக கேட்பதில் சங்கடம் அவருக்கு.

நரேந்திரனின் மனநிலை புரிந்து வம்சி, மாஹி வேதாவிடம் பேசச் சென்றாலும், அந்த அழுத்தக்காரி மனதிலிருப்பதை கொட்டி விடுவாளா என்ன? அதுவும், அவளின் தள்ளி நிறுத்தும் பார்வையில் அவர்களாலும் அவளை நெருங்க முடியவில்லை.

இவ்வாறு மூன்று நாட்கள் கழிந்த நிலையில் அன்று,

வண்டியை போர்டிகாவில் நிறுத்தி, “ஏய் ராங்கி… வேதா…” என்று கத்தியவாறு கோபமாக, வீட்டிற்குள் நுழைவதற்காக  ஒரு அடி வைக்கப் போன விக்ரம், “டேய் அங்கேயே நில்லு!” என்ற நரேந்திரனின் குரலில் கால் அந்தரத்தில் நிற்க, அப்படியே நின்றான்.

அவனை முறைத்துப் பார்த்தவர், “யாரைக் கேட்டு இப்போ நீ வீட்டுக்கு வந்த? உன் அப்பாகிட்ட பேசி கல்யாணத்தை முடிவு பண்ணியாச்சுல்ல, அதுவரைக்கும்  வீட்டு பக்கம் வராதேன்னு சொன்னேனா, இல்லையா?” என்று கோபமாகக் கேட்க, “அது நான்…” என்று பேச வந்தவனின் வார்த்தைகள், மாடியிலிருந்து இறங்கி வந்த தன்னவளைப் பார்த்ததும் அப்படியே நின்றன.

‘நம்ம ஆளு…’ மனதிற்குள் உற்சாகமாக நினைத்தவாறு ‘இதுவரை பெண்ணையே பார்த்ததில்லை’ என்ற ரீதியில் ‘ஆ…’ என்று வைத்த கண் வாங்காமல் தன்னவளையே அவன் பார்த்துக்கொண்டிருக்க, தன்னவனைப் பார்த்ததும் பளிச்சென்று புன்னகைத்த மாஹி, அவனின் பார்வையில் வெட்கப்பட்டு குனிந்துக்கொண்டாள்.

இருவரையும் மாறி மாறிப் பார்த்த நரேந்திரனுக்குதான் இந்த காதல் பறவைகளுக்கிடையில் ‘அய்யோ!’ என்றிருந்தது.

“ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற அவரின் செறுமலிலே இடம், பொருள் புரிந்து ஓரக்கண்ணால் அவரைப் பார்த்த விக்ரம், “ஹிஹிஹி…” என்று அசடுவழிந்தவாறு திருதிருவென விழித்து, “வெளியில போடா!” என்ற அவரின் கத்தலில், “அங்கிள், நான் ஒன்னும் என் ஆள பார்க்க வரல்ல. அதான் ஒரு அடங்காத கழுதைய வளர்த்து வச்சிருக்கீங்களே அவள பார்க்கதான் வந்தேன்” என்றான் சிலுப்பிக்கொண்டு.

அவரோ அவன் ‘கழுதை’ என்றதில் கைக்காப்பை ஏற்றி விட்டவாறு அவனை முறைக்க, “நீங்க நம்பலன்னாலும் அதான் நெசம். புள்ளையா வளர்த்து வச்சிருக்கீங்க? சரியான தொல்லைய வளர்த்திருக்கீங்க. மூனு நாளா கோல் பண்றேன். பதிலே இல்லை. என்ன நினைச்சிக்கிட்டு இருக்கா அவ?” படபடவென அவன் பொரிந்துக்கொண்டே போக, நரேந்திரனின் இரு புருவங்களும் யோசனையில் முடிச்சிட்டன.

ஏனோ தாற்போது விக்ரம் வேதாவுடன் பேசுவது அவருக்கும் சரியென தோன்ற,  “ரூம்லதான் இருக்கா” என்று நரேந்திரன் சொன்னதும்தான் தாமதம், தன் தோழியைத் தேடி சிட்டாய்ப் பறந்திருந்தான் விக்ரம்.

லேசாக திறந்திருந்த கதவை ‘படார்’ என திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவனின் விழிகளில், தன் மடிக்கணினியில் தீவிரமாக ஏதோ தட்டச்சு செய்துக்கொண்டிருந்த வேதாதான் தென்பட்டாள். அவளும் அரவம் உணர்ந்து சட்டென நிமிர்ந்து, தன்னெதிரே நின்றிருந்தவனைப் பார்த்ததும் ஒரு அலட்சியப்பாவனையுடன் மீண்டும் திரையில் புதைந்துக்கொண்டாள். எதுவும் பேசவில்லை. அதிலே கடுப்பாகிவிட்டான் விக்ரம்.

இருந்தும் முயன்று மனநிலையை மாற்றி, “ஏய் வேத் செல்லக்குட்டி, இங்க பாரு!” என்று உற்சாகமாக சொன்னவாறு இன்று வெளியான பத்திரிகையில் தான் வெட்டி எடுத்து வந்த செய்தியை பாக்கெட்டிலிருந்து எடுத்து விக்ரம் காட்ட, அதிலோ இந்தியா முழுவதும் இந்த சடங்குக்கு எதிரான சட்டங்கள் பிறப்பிக்கப்படவுள்ளதாகவும், முன் நின்று இதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட கலெக்டர் ஆதேஷை வாழ்த்தியும் எழுதப்பட்டிருந்தது. அதுவும், இச்செய்தியை வெளியிடச் சொல்லி வேதா ஆரம்பத்தில் போய் நின்ற அதே  பத்திரிகை நிறுவனத்தால் இச்செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

“நீ நினைச்சது நடந்துருச்சி வேதா, ஆனா என்ன இந்த பாராட்டெல்லாம் உனக்கு வர வேண்டியது. அது ஒன்னுதான் என் மனசை குடைஞ்சிக்கிட்டு இருக்கு” சலித்தவாறு விக்ரம் சொல்லிக்கொண்டு வேதாவின் அருகில் அமர, இதற்கெல்லாம் சம்மந்தப்பட்டவளின் முகத்தில் மருந்துக்கும் புன்னகையில்லை.

அந்த கிராமத்தைப் பற்றிய செய்தியை பார்த்ததுமே ராவணுடன் அவளிருந்த நாட்கள் மனக்கண் முன் தோன்ற, இருந்ததை விட முகம் இறுகித்தான் போனாள். “ஓ க்ரேட்!” என்று மட்டும் சொல்லி மீண்டும் தன் வேலையில் அவள் கவனமாக, இவனுக்குதான் சப்பென்றானது.

“என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்க?” விக்ரம் கேட்க, “அதெல்லாம் ஒன்னுஇல்லையே… நல்லாதான் இருக்கேன்” சுருதியே இல்லாமல் அவள் குரல் வர, அவள் பார்வையோ திரையில்தான் படிந்திருந்தது.

அவளையும் மடிக்கணினியையும் மாறி மாறி கடுப்பாகப் பார்த்தவன், மடிக்கணினியை சட்டென்று மூடி “லுக்,   எவ்வளவு கோல், எவ்வளவு மேசேஜஸ்… எதுக்கும் ரிப்ளே பண்ணாம ஏதோ ஒன்னு பண்ணிக்கிட்டு இருக்க. நீ நீயாவே இல்லை வேதா. ஐ க்னோ யூ வெல். என்கிட்ட நடிக்காத!” அவள் அலைப்பேசியிலிருந்த தவறவிடப்பட்ட அழைப்புக்களைக் காட்டி கோபமாகக் கேட்க,

“இடியட், வேலைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்னு தெரியுதுல்ல, ஏன் என்னை இர்ரிடேட் பண்ற? இப்போ என்ன? நான் நல்லாதான் இருக்கேன். இப்போ கூட இந்தமாதிரியான சடங்குகளை பத்திதான் புத்தகம் எழுதிக்கிட்டு இருக்கேன். எனக்கு ஒரே பிரச்சினைதான்” வேதா பேசுவதையே புருவத்தை சுருக்கி கேட்டுக்கொண்டிருந்த விக்ரம், இறுதியாக சொன்ன வசனத்தில் அவளை கேள்வியாக நோக்கினான்.

“நீ என் பக்கத்துல இருக்கும் போது வேறென்ன பிரச்சினை இருக்க போகுது? ஜஸ்ட் கெட் அவுட்!” வேதா சலிப்பாகச் சொல்ல,  “இவள…” என்று பல்லைக்கடித்தவனுக்கு அவளாக வாய் திறக்காமல் எதையும் வாங்க முடியாது என்று மட்டும் நன்றாக புரிந்து போனது.

நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்டு யோசனையுடன் மாடிப்படிகளில் இறங்கி வந்தவனைப் பார்த்த நரேந்திரன், ‘என்னாச்சு?’ என்ற ரீதியில் விழிகளாலே கேட்க, “தங்களின் புதல்வியை பற்றி தாம் அறியாததா? நோ கமென்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்” என்றவன், அவரின் முறைப்பைக் கண்டுக்கொள்ளாது அங்கு தன்னவனையே பார்த்துக்கொண்டிருந்த மாஹியிடம் ‘இப்போ போறேன். ராத்திரி பால்கனி வழியா உன் ரூமுக்கு வர்றேன்’ என்று சைகையில் சொல்லிவிட்டு, நரேந்திரன் அவனை நோக்கி அடிப்பது போல் வருவதை உணர்ந்து அங்கிருந்து ஓடியேவிட்டான்.

“குசும்பு பிடிச்சவன்” என்றுவிட்டு நரேந்திரன் சிரித்தவாறு அங்கிருந்து நகர, தன்னவனின் செய்கையில் வெட்கப்பட்டுச் சிரித்துக்கொண்டாள் மாஹி.

விக்ரம் வாசற்கதவை தாண்டி வெளியேறப் போக, சரியாக உள்ளே நுழைந்தாள் தீப்தியின் நண்பி வர்ஷா.

அவளைப் பார்த்தவன், சட்டென்று வண்டியை நிறுத்தி “என்ன ஜிகிர்தாண்டா இந்த பக்கம்? அந்த போலி டாக்டர கூப்பிட வந்திருக்கியா? இல்லைன்னா… மாமாவ சைட் அடிக்க வந்தியா?” கேலியாக கேட்டு கோலரை தூக்கி விட்டுக்கொள்ள, அவனை முறைத்தவள், “உன் ஆளு உள்ள தானே இருக்கா? எனக்கு ஹிந்தி நல்லாவே தெரியும்” என்று சற்று மிரட்டலாக சொன்னாள்.

அதில் ஜெர்க்கானவன், “தெரியும்னா தெரிஞ்சிக்கிட்டு போ! இதுக்கெல்லாம் போய் எதுக்கு அவள டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு… ஹிஹிஹி தமாசு” என்றுவிட்டு அசடுவழிந்தவாறு அங்கிருந்து ஓடிவிட்டான்.

அவளும் சலிப்பாக தலையாட்டியவாறு முன்னே நடக்க, சரியாக பால்கெனியில் நின்றிருந்த தீப்தி அவள் விழிகளுக்குள் சிக்கினாள். அவளும் தன் தோழியை கண்டுக்கொண்டு ‘இதோ வர்றேன்’ என்ற ரீதியில் சைகை செய்துவிட்டு உள்ளே ஓட, அவளையேப் பார்த்தவாறு நடந்து வந்த வர்ஷாவோ, சட்டென கால் இடறி தரையில் விழுந்துவிட்டாள்.

“ஆங்… ச்சே! ஹீல்ஸ் போட்டு நடக்க தெரிஞ்சா மட்டும் நடக்கணும்னு இதுக்குதான் சொல்வாங்க போல… இடுப்பு சுளுக்கிருச்சு” தரையில் அமர்ந்தவாறு அவள் முணங்கிக்கொண்டிருக்க, சரியாக ஒரு கரம் அவளை நோக்கி நீண்டது. நிமிர்ந்துப் பார்த்த வர்ஷாவுக்கோ, விழிகள் சாரசர் போல் விரிந்தது.

வாயில் நயாகரா அருவி வழியாத குறையாக தனக்கு உதவி செய்ய கரத்தை நீட்டியவனை அவள் பார்த்துக்கொண்டே தன் கரத்தை நீட்ட, புன்னகையுடன் வர்ஷாவை தாங்கிப்பிடித்து நிற்க வைத்தான் வம்சி. அதேநேரம் தீப்தி “வர்ஷ்…” என்ற உற்சாகக் கத்தலோடு அங்கு வந்து பார்த்த காட்சியில் அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள்.

வர்ஷாவை தூக்கிவிட்டு, ” ஆர் யூ ஓகே?” வம்சி அக்கறையோடு கேட்க, அவளிடமோ பதிலேயில்லை. ஏனோ வம்சிக்கே அந்த பெண்ணின் பார்வையில் வெட்கமாகிப் போனது.

“ஹர்ம் ஹ்ர்ம்…” என்று தொண்டையை செறுமியவாறு வம்சியை முறைத்துக்கொண்டே தீப்தி வர, தன்னவளின் முறைப்பை அறியாது விட்டால் போதுமென அவன் அங்கிருந்து ஓடியேவிட, போகும் அவனையேப் பார்த்தவாறு, “யாருடி அது, நோர்த் இந்தியன் மாதிரி இருக்கான்?” ஒருவித ஆர்வத்துடன் கேட்டாள் வர்ஷா.

“தூ… இப்படிதான் அப்பட்டமா சைட் அடிப்பியா? மானமே போச்சு. அவன்தான் என் மாமா பையன். நோர்த் இந்தியாதான்” தீப்தி சற்று பொறாமை கலந்த கோபத்தோடுச் சொல்ல, “செம்மயா இருக்கான்டி. ஒரேயொரு இன்ட்ரோ கொடு தீப், ப்ளீஸ்டி ப்ளீஸ்” வர்ஷா விடாது அவள் காதைக் கடிக்கவும், நெற்றியை எரிச்சலாக நீவி விட்டுக்கொண்டவளுக்கு பிபி எகிறியது.

“வந்து தொலை!” என்றுவிட்டு அவள் உள்ளே செல்ல, வம்சியோ அலைப்பேசியை நோண்டியவாறு சோஃபாவில் அமர்ந்திருந்தான். இருவரும் அவனருகில் செல்ல, தன்னெதிரே நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்துப் பார்த்தவன், இரண்டு முகபாவனைகளில் நின்றிருந்த பெண்களை மாறி மாறி கேள்வியாக நோக்கினான்.

தீப்தியோ வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், “ஹாய் வம்சி, இது… இது என் ஃப்ரென்ட்…” என்று ஆரம்பிக்க, அதற்குள் வர்ஷாவோ அவளை தள்ளிவிட்டு, “ஹாய் வம்சிசார், என் பேரு வர்ஷா” என்று தன்னை அறிமுகப்படுத்த, சட்டென்று திரும்பி தீப்தி அவளை முறைத்துப் பார்த்தாள் என்றால், வம்சிக்கோ முட்டிக்கொண்டு சிரிப்பு வந்தது.

அடக்கப்பட்ட சிரிப்புடன், “ஹாய்…” என்று அவன் சொன்னதும்தான் தாமதம், கிட்டதட்ட அவனை இடிக்காத குறையாக அவன் பக்கத்தில் அமர்ந்து, “யூ க்னோ வாட் வம்சி, உங்க கிராமத்துக்கு ஒன்னுவிட்ட கிராமத்துலதான் என் ஒன்னுவிட்ட அத்தைப் பையனோட பையன் இருக்காங்க. அவங்க பேருகூட ரன்பீர்சிங். உங்களுக்கு தெரியுமா?” என்று வர்ஷா வாயிற்கு வந்த பொய்யை சொல்லி அவனோடு பேச்சை வளர்க்க, ‘அடிப்பாவி!’ என்று வாயிலே கை வைத்துவிட்டாள் தீப்தி.

ஊரைப் பற்றி வர்ஷா பேசியதில் ஆர்வமாகி அவளுக்கு பதிலளித்துக்கொண்டுச் சென்ற வம்சியின் பார்வையோ எதேர்ச்சையாக தீப்தியின் மேல் படிய, வர்ஷாவை நோக்கிய அவளின் பொறாமைப் பார்வையில் அவனுக்கோ உள்ளுக்குள் குளுகுளுவென்று இருந்தது.

‘என்ன நம்ம ஆளு முகம்  லொல்லிபொப்ப பிடிங்குன குழந்தை மாதிரி இருக்கு. வாவ் வம்சி! அம்மணிக்கு பொறாமையா இருக்கு போல, பையாவ சைட் அடிச்சி எத்தனை தடவை வெறுப்பேத்தியிருப்ப? அனுபவிடி’ உள்ளுக்குள் குஷியாக நினைத்தவாறு வம்சியும் வர்ஷாவுடன் சிரித்து சிரித்துப் பேச, தீப்தியால்தான் ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்க முடியவில்லை.

எழுந்து விறுவிறுவென தனதறைக்கு அவள் சென்றிருக்க, அதன்பிறகு வர்ஷா பேசியது எங்கு அவன் காதில் விழுந்தது? ‘அவளை வெறுப்பேத்த நாம பண்ணது நமக்கே ரிபீட் ஆகுதே! பகவானே…’ வம்சி கடவுளை அழைத்தது அவருக்கு கேட்டுவிட்டது போலும்!

சரியாக வர்ஷாவுக்கு ஒரு அழைப்பு வர, அதை ஏற்று பேசியவள், “சோரி வம்சி சார், ஒரு முக்கியமான வர்க், போயே ஆகணும். உங்க கூட பேசினதுல நேரம் போனதே தெரியல. தீப்திக்கிட்ட உங்க நம்பர் எடுத்துக்குறேன். ராத்திரி பேசலாம்” என்று குழைந்தவாறு பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருக்க, ‘அப்பாடா!’ நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டான் அவன்.

அவள் சென்றதுமே தீப்தியின் அறைக்குச் சென்றவனுக்கு, குறுக்கும் நெடுக்குமாக வாயிற்குள் எதையோ முணுமுணுத்து கோபமாக நடந்தவாறு இருந்த தன்னவளைப் பார்த்ததும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அவளின் முகபாவனையை நினைத்து வாய்விட்டே வம்சி சிரித்துவிட, சத்தம் வந்த திசைக்கு திரும்பியவளுக்கு அங்கு கேலிச்சிரிப்புடன் நின்றிருந்தவனைப் பார்த்ததும் பிபி ஏகத்துக்கும் எகிறியது.

அவனை முறைத்தவாறு அவள் நின்றிருக்க, “வாவ் வாவ் வாவ்! என்ன அழகு! ஆமா… நிஜமாவே அவ உன் ஃப்ரென்ட் தானா? இல்லை, இவ்வளவு அழகா, புத்திசாலித்தனமா இருக்காளே, அதான்” கேலியாக கேட்டவாறு அவளை நோக்கி நடந்து வந்த வம்சி, “என்னாச்சு? பேபிம்மா முகம் சிவந்து வாடிப் போயிருக்கு. நீ ஒரு போலி டாக்டருன்னு உன் கூட இருக்குறவங்க கண்டுபிடிச்சிட்டாங்களா என்ன?” என்று படுதீவிரமாக கேட்டான்.

அவ்வளவுதான்! பக்கத்திலிருந்த மொத்த பொருட்களையும் அவன் மீது எறிந்து, வாயில் வரும் ஆங்கில கெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டி அடிக்க ஆரம்பித்துவிட்டாள் தீப்தி.

முதலில் விரும்பியே அவள் அடிகளை வாங்கிக்கொண்டவன், பின் அவளிரு கைகளையும் பிடித்து “ஐ லவ் யூ” சட்டென்று சொல்ல, அதிர்ந்து விழித்தவளுக்கு பின் வெட்கத்தில் கன்னங்கள் சிவந்தது. கோபத்தை இழுத்துப் பிடித்து, “ஓஹோ! இது எப்போதிலிருந்து? பட், எனக்கு உங்கமேல நொட் இன்ட்ரஸ்டட்” சிலுப்பிக்கொண்டுக் சொன்னாள் தீப்தி.

அவளைப் பிடித்திழுத்து தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன், “அப்படியா…” என்று இழுத்தவாறு அவள் காதில் ஏதோ ரகசியம் சொல்ல, அவன் சொன்னதில் திகைத்து வாயில் கை வைத்துக்கொண்டு, “உங்களுக்கு எப்படி…?” திகைத்துப்போய் கேட்டாள் அவள்.

“இல்லை…  டாக்டரம்மா அப்படி என்ன படிக்கிறீங்கன்னு அவங்களோட புக்க திறந்தேன், என் ஃபோட்டோவ வச்சி காதல் பாடம் படிச்சிக்கிட்டு இருக்கீங்கன்னு  அப்போதான் தெரிஞ்சது” வம்சி குறும்பாகச் சொல்ல, சங்கடம், வெட்கம் என  உணர்வுகளுக்கிடையில் சிக்கித் தவித்தாள் தீப்தி.

அவளோ திருதிருவென விழிக்க, அவனுக்கோ அவளுடனான முதல் சந்திப்பின் போது இதே போல் அவள் விழித்ததுதான் நியாபகத்திற்கு வந்தது. சட்டென்று அவள் விழிகளில் அவன் அழுந்த முத்தம் பதிக்க, அவளோ விழி விரித்தாள்.

அவளின் அதிர்ந்த விழிகளை பார்க்கப் பார்க்க ஏனோ வம்சிக்கு தன்னிலையை இழப்பது போன்ற உணர்வு!

அவள் நெற்றியில் காதலாக முத்தமொன்றை பதிந்தவன், மேலும் விரிந்த அவளின் விழி அழகினை கண்களால் பருகிக்கொண்டே அவளிதழில் அழுந்த முத்தம் பதிக்க, அந்த மயக்கத்தில் அவள் விழிகள் தானாகவே மூடிக்கொண்டன.

அதில் மெல்லியதாக சிரித்தவன், “மத்ததெல்லாம் கல்யாணத்துக்கு அப்றம் பார்த்துக்கலாம். மேரா ஜான்” என்றுவிட்டு தன் மார்போடு அவளை அணைத்துக்கொள்ள, “லவ் யூ அத்தான்” அத்தனை சந்தோஷத்தோடு சொன்னவாறு தன்னவனை இறுக அணைத்துக்கொண்டாள் தீப்தி.

“அத்தான்?” என்று புரியாமல் கேட்டு, தீப்தி சொன்ன அர்த்தத்தில் வாய்விட்டுச் சிரித்த வம்சி, எவ்வளவுநேரம் தன்னவளை அணைத்தவாறு நின்றிருந்தானோ? நொடிகள் பல நிமிடங்களாக கடந்திருக்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற செறுமலில் அடித்துப் பிடித்துக்கொண்டு விலகி நின்ற இருவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.

‘என்ன நடக்குது இங்க’ என்ற ரீதியில் அவர்களுக்கெதிரே நரேந்திரனோ, ஒற்றை புருவத்தை உயர்த்தி இருவரையும் உக்கிரமாகப் பார்த்தவாறு நின்றிருக்க,

“அப்பா…” அதிர்ந்து அழைத்தவாறு தீப்தி உறைந்துப்போய் நின்றாள் என்றால், “இப்போதானேடா ஆரம்பிச்சேன். அதுக்குள்ள மாட்டிக்கிட்டேன். உலகத்தோட ஷோர்டஸ்ட் லவ் ஸ்டோரி என்னோடதாதான் இருக்கும்” அந்த சந்தர்ப்பத்திலும் கேலியாக நினைத்தவாறு பெக்க பெக்கவென விழித்துக்கொண்டு நின்றிருந்தான் வம்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!