காதல் சதிராட்டம் – 11
காதல் சதிராட்டம் – 11
சுற்றி இருந்த மொத்த கூட்டத்தின் ஆரவாரத்தையே அகமகிழ்ந்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா.அவளின் அருகே வினய் வந்து நின்றான். கூடவே அவனது நண்பர்களும் வந்து நின்றார்கள்.
மெதுவாக ஆதிராவின் விரல்களைப் பற்றினான். அவள் திகைத்து திரும்பிய நேரம் சுற்றி இருந்த மொத்த நண்பர்களும் மற்ற நண்பர்களின் விரலைப் பற்றிக் கொண்டு தலையை குனிந்து சுற்றி இருந்த கூட்டத்தினருக்கு தங்களின் நன்றியை செலுத்தினர். அதைப் புரிந்து கொண்ட ஆதிரா தானும் வினய்யின் கையைப் பிடித்துக் கொண்டு தன் தலையை குனிந்து நன்றி சொன்னாள்.
சுற்றி இருந்த கூட்டத்தின் ஆரவாரம் அவர்கள் பாடி முடித்த பிறகும் சற்றும் குறையாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.
“Early bird early bird ” என்று சுற்றி இருந்தவர்கள் கத்திக் கொண்டே இருக்க வினய் மெதுவாக குனிந்து ஆதிராவின் காதுகளில் இந்த “early bird பறவைக்கூட்டத்துல நீயும் ஒரு பறவையா சேர்ந்துக்க விருப்பமா?” என்று கேட்டான்.
அவன் அப்படிக் கேட்டதும் ஆதிராவுக்கு கால்கள் தரையிலேயே நிற்கவில்லை. அவள் அப்போதே பறவையாக மாறி பறக்கத் துவங்கி இருந்தாள்.
தான் சேர்ந்த முதல் மாதத்திலேயே அந்த கல்லூரியின் முதன்மை பட்டியலில் இருக்கும் இசைக்குழுவில் இணைய வாய்ப்பு கிடைப்பதென்பது அவ்வளவு எளிதா?அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிடுவாளா என்ன?
புன்னகையுடன் திரும்பி சம்மதம் என்று சொல்ல வினய்யும் அதே புன்னகையை சிந்திவிட்டு கைகளில் மைக்கை எடுத்தான்.
“ஓய் பிள்ளைங்களா போதும் போதும். நீங்க போடுற கைத்தட்டல் சப்தமும் ஆரவார சப்தமும் நம்ம ஹாஸ்டல் வார்டனை தட்டி எழுப்பிட போகுது. அதனாலே கொஞ்சம் வால்யூமை கம்மி பண்ணுங்க பார்க்கலாம்.” என சொல்ல மொத்த கூட்டமும் உஸ் என்றபடி வாயின் மீது கைவைத்து அமைதியானது.
ஆனால் அந்த கூட்டத்தினில் இருந்த வார்டனோ வினய்யை கோபமாக முறைத்தார். அவனோ பதிலுக்கு கண்ணடித்து அவரை மேலும் வெறுப்பேற்றிவிட்டு மீண்டும் பேச்சை தொடர்ந்தான்.
“உங்க கைத்தட்டல் சப்தமும் ஆதரவும் தான் எங்களோட வெற்றிக்கான காரணம் மக்களே. ரொம்ப தேங்க்ஸ். உங்களோட கைத்தட்டல்ன்ற எனர்ஜி கொடுத்து எங்களை நல்லா பாட வச்சதுக்கு. அதே மாதி இந்த Early bird group இல் புதுசா சேரப் போற ஆதிராவுக்கும் இதே ஆதரவு கொடுப்பீங்கனு நம்புறேன். ” என சொல்ல ஒட்டு மொத்த கூட்டமும் ஆரவாரம் இட்டு ஆம் என்று ஆமோதித்தது.
அப்போது தான் கோபத்துடன் முடுக்கிக் கொண்டு போன ஐஸ்வர்யா திரும்பி வந்து இருந்தாள்.
அவள் காதுகளில் விழுந்த வினய்யின் வார்த்தைகள் அவளை இன்னும் கோபத்திற்கு உள்ளாக்கியது. கோபித்துக் கொண்டு போனால் பின்னால் வந்து கெஞ்சி சமாதானப்படுத்தி தன்னை அழைத்துக் கொண்டு வருவார்கள் என்று தான் கோபமாக போனாள். ஆனால் இப்படி தன்னையே மொத்தமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு புதியதாக வந்த அந்த பெண்ணை இந்த குழுவில் இணைத்துவிடுவார்கள் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
கோபமாக ஆதிராவைத் திரும்பி பார்த்தாள்.
அதே சமயம் வினய்யும் திரும்பி ஆதிராவைப் பார்த்தான். அவளுடைய கண்கள் புன்னகையுடன் அவனுக்கு நன்றி சொன்னது. இவனும் பதிலுக்கு இமைகளை மூடி அவளது நன்றியை ஏற்றுக் கொண்டு மீண்டும் கூட்டத்தின் முன்பு திரும்பினான்.
இவர்கள் இருவரது சம்பாஷனைகளைக் கண்டு கோபத்தில் தத்தளித்துக் கொண்டு இருந்தது ஐஸ்வர்யாவின் மனம்.
“மக்களே வார்டன் … ” என்று மீண்டும் வினய் கூட்டத்திற்கு நியாபகப்படுத்திவிட்டு வார்டனை பார்த்து கண்ணடித்தான்.
அவர் கடுப்பாகி கோபமாக வெளியேறிக் கொண்டு இருந்த அந்த சமயம் மீண்டும் ஒரு முறை மொத்தக் கூட்டமும் உஸ் என்ற சப்தம் எழுப்பி உதட்டின் மேல் வாயை வைத்துக் கொண்டது. அதைக் கண்டு புன்னகைத்தவன் மனநிறைவுடன் நன்றி சொல்லிவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கினான்.
அவனை கோபத்துடன் எதிர் கொண்டாள் ஐஸ்வர்யா.
“Congrats வினய்… உங்க early bird group க்கு அருமையான புது பாடகி கிடைச்சு இருக்காங்க மனதார வாழ்த்துக்கள்… இனி இந்த பழைய பாடகி தேவைப்பட மாட்டாள் இல்லை… வாழ்த்துக்கள் வினய்.. வாழ்த்துக்கள்… ” என்று வார்த்தை சொன்னாலும் குரலில் அந்த வாழ்த்து கொஞ்சமும் ஒட்டவில்லை.அவளது வார்த்தைகளை கேட்ட வினய் வருத்தமாக ஐஸ்வர்யா என்றழைத்தான்.
“ஐஸ்வர்யா எதுக்காக இப்படி பேசுற. நீயும் இந்த குழுவுல ஒருத்தி தான், ப்ளீஸ் இப்படி பழசு புதுசுனு பேசாதே. நம்ம குருப்ல முன்னாடி ஒரே ஒரு female singer தான் இருந்தாங்க. இனி இரண்டு singer இருக்கப் போறீங்க. அவ்வளவு தான் வித்தியாசம். ”
“இனி தான் நிறைய வித்தியாசமே வரப் போகுது வினய்… ” என்றாள் அப்போதும் கோபம் குறையாமல்.
“ஐயோ பேருல மட்டும் தான் ஐஸ் இருக்கு… குணத்துல அது கொஞ்சம் கூட கிடையாது… எப்போ பாரு கோபத்துல கொதிச்சுக்கிட்டே இருக்க வேண்டியது…” என்று வினய் கண்ணடித்து சொல்ல
அவளது கோபமான முகத்தினில் மெதுவாக பொன்முறுவல் அரும்பியது.
“இப்படியே கோபமா இருக்கும் போது எதையாவது சொல்லி என்னை சிரிக்க வெச்சுடு… ” என்று ஐஸ்வர்யா அவனது மார்பினில் குத்தினாள்
” பின்ன என்ன ஐஸ்.. இதுக்குலாம் கூடவா கோவப்படுவாங்க… உன் முன்கோபம் எதையும் சரியா யோசிக்கக்கூட விட மாட்டேங்குது.
நான் ஆதிரா நல்லா பாடுனானு தான் சொன்னேனே தவிர நீ நல்லா பாடலைனு நான் சொல்லவே இல்லை.
உன்னோட குரல் ஐஸ்கட்டி வைச்சா மாதிரி குளுமையா கேட்குறவங்களை சப்தம் போட்டு ஆட வைக்கும்… ஆனால் ஆதிராவோட குரல் தெய்வத்தோட குரல்… கேட்குறவங்களோட சிந்தனையை ஸ்தம்பிக்க வெச்சு அப்படியே கட்டிப் போட்டுடும்… உங்க ரெண்டு பேரோட குரலும் ஒன்னா சேர்ந்தா எதிரிலே நிக்குற எல்லாருமே காலி… ஆடனுமானு தெரியாம,,.. மெய் மறந்து நிற்கணுமானு தெரியாமா,,, கேட்கிறவங்களை ஒரு வழி பண்ணிடும்… உங்க ரெண்டு பேரோட குரலும் இந்த early bird குழு வெற்றிகரமா அமைய தேவைப்படுது… ” என்று வினய் நீண்ட விளக்கம் தர
ஐஸ்வர்யாவின் மனதினில் இருந்த சஞ்சலம் முழுமையாக நீங்கியது.
ஐஸ்வர்யா எப்போதும் அப்படி தான் முதலில் கோபப்பட்டு மடமடவென மனதினில் இருப்பதை கொட்டிவிடுவாள். பிறகு தான் அந்த சூழ்நிலையைப் பற்றி நினைத்துப் பார்ப்பாள். அதன் பின்பும் தான் செய்தது தவறு என்பதை அறிந்தால் யோசிக்காமல் மன்னிப்பும் கேட்டுவிடுவாள். அவள் தான் ஐஸ்வர்யா.
இன்றும் அப்படி தான்,,, ஆதிராவின் மீது தான் கொண்ட கோபம் தவறு என்பதை அவள் மனம் முழுமையாக உணர்ந்தது. அவளது முன்கோபம் அவளை எதுவும் யோசிக்கவிடாமல் செய்ததை எண்ணி தலையில் அடித்து கொண்டவள் வேகமாக ஆதிராவிடம் திரும்பினாள்.
“ஐ யம் ரியலி சாரி ஆதிரா… நான் தேவையில்லாம கோபப்பட்டுட்டேன்… உன்னை சரியா என்னாலே வரவேற்க முடியலை… ஆனால் இப்போ மனசார சொல்றேன்,,,, எங்களோட Early bird group க்கு உன்னை அன்புடன் வரவேற்கிறோம். ” என்று சொல்லி மனதார வரவேற்றாள் இம்முறை.
ஆதிரா புன்னகையுடன் அவளது வரவேற்பை ஏற்றுக் கொண்டாள்.
விமல் அவர்கள் இருவரையும் பார்த்து ” ஓய் பொண்ணுங்களா எதிரிங்க மாதிரி இனி அடிச்சுக்க மாட்டிங்களே… ஏன்னா எனக்கு உங்க சண்டையை எல்லாம் பிரிச்சு விட எனக்கு டைம் இல்லை… I am very busy man.. U know.. ” என விமல் சொல்ல அவனை முறைத்த பெண்கள் இருவரும் ஒருவரது தோளின் மீது இன்னொருவர் நெருக்கமாக கையைப் போட்டு நின்று கொண்டனர்.
“ஓய் small boy…. நாங்க ரெண்டு பேரும் தேவா சூர்யா மாதிரி…தளபதி மாதிரி எங்க நட்பு இருக்கும்… ” என்று ஐஸ்வர்யா சொல்ல ” ஆமாம் தளபதி மாதிரி.. ” என்று சொல்லி ஆதிராவும் ஆமோதித்தாள்.
“பார்க்கலாம்… உங்க நட்பு தளபதி படமா இல்லை அண்ணாமலை படமா ?? னு.. ” என்று விமல் சொல்ல அவனை அடிக்கத் துரத்தினாள் ஐஸ்வர்யா.
விமல் அவளிடம் இருந்து வேகமாக தப்பித்து ஓடிக் கொண்டு இருந்தான். அவர்கள் இருவரது விளையாட்டையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா. அவளது பெயர் சொல்லி கவனத்தை தன் பக்கம் திருப்பினான் வினய்.
“சொல்லுங்க வினய்… ”
“ஆதிரா உன் குரல் செமயா இருக்கு… ஆனால் சுருதி மட்டும் சில இடத்துல பிசுறு தட்டுது.. high notes la கொஞ்சம் குரல் ஒட்டல.. இதுல எல்லாம் கொஞ்சம் கவனம் செலுத்தணும்… நான் குறை சொல்றேனு நினைக்க வேண்டாம்… குறையை நிறைவா மாத்தணும்ன்றதுக்காக தான் சொல்றேன்… ஆமாம் உன் குரு யார் ஆதிரா??”
“எனக்கு நான் தான் குரு… ” என்றவளது பதிலில் அவனுக்கு ஆச்சரியம்.
“ஆதிரா அப்போ professional trained இல்லாம தான் நீ பாடுனீயா?” என்று ஆச்சர்யம் கலந்த குரலில் கேட்டான்.
” ஆமாம்… ” என்று தலையசைத்தாள் அவள்.
அவனால் நம்பவே முடியவில்லை. எந்தவொரு பயிற்சியும் எடுக்காமல் யாரிடமும் கற்றுக்கொள்ளாமலே இந்த அளவுக்கு பாடுகிறாள் என்றால் இவள் பயிற்சி மட்டும் பெற்றுவிட்டால் உலக பாடகிகளை எல்லாம் மிஞ்சி விடுவாள் இவள் என்று தோன்ற ஆதிராவை நிமிர்ந்துப் பார்த்தான்.
“ஆதிரா நான் உனக்கு professional training தரேன்… உனக்கு ஓகே வா?” என்று வினய் கேட்க முதலில் தயங்கினாள்.
அவளது தயக்கத்தைக் கண்ட வினய் ” என்ன ஆச்சு ஆதிரா… உனக்கு சம்மதம் இல்லையா?” என்று நேரிடையாக கேட்டான்.
” Training க்கு monthly எவ்வளவு பணம் கொடுக்கணும்… ” என்று தயங்கி தயங்கி வார்த்தைகள் வெளியே வந்தது ஆதிராவிடம்.
“ஆதிரா நீ எந்த பணமும் கொடுக்க தேவையில்லை… கத்துக்கணும்னு ஆசையும் விருப்பமும் மட்டும் இருந்தா போதும்… ” என்றான் சற்றே கோபமாக.
” இல்லை வினய்.. எனக்கு எதுவும் இலவசமா வேண்டாம்… வெளியே கத்துக்கணும்னா 6000 ஆகலாம்… நான் இந்த பணம் கொடுத்துட்டு உங்க கிட்டே பாட்டு கத்துக்க ஆரம்பிக்கிறேன்… ” என்று ஆதிரா சொல்ல அவளது தன்மானத்தை மதித்தான் அவன். அதனால் வேறு காரணம் சொல்லி தவிர்க்க முயன்றான்.
“இங்கே பாரு ஆதிரா..நான் எங்கே இலவசமா உனக்கு கத்துத் தரேன்… நான் உனக்கு கத்து தரதாலே எனக்கு தான் பிரதிபலன் இருக்கு… நீ இன்னும் முறையா கத்துக்கிட்டேனா அதனாலே early bird group க்கு தான் profit.. அதனாலே நான் உனக்கு இலவசமா எல்லாம் கத்து தரல… நீ எனக்கு குருதட்சணையா நல்ல குரலையும் இசையையும் நம்ம குழுவுக்கு தரணும்… உனக்கு இந்த குருதட்சணை சம்மதமா ” என கேட்க புன்னகையுடன் தலையாட்டினாள் அவள்.
“ஓகே ஆதிரா அப்போ நாளைக்கு காலையிலே நாலு மணிக்கு chemistry lab க்கு பக்கத்துல இருக்கிற ஆலமரத்தடிக்கு வந்ததுடு.. அங்கே இருந்து நம்ம சாதகத்தை தொடங்குவோம்… ” என சொல்ல சரி என்று தலையசைத்தாள் அவள்.
“காலையிலே சீக்கிரமா எழுந்துடுவ தானே… ” என்று வினய் சந்தேகமாக கேட்க ஒரு நொடி தாமதித்து தான் சரி என்று தலையாட்டினாள் அவள். அதிலேயே அவள் எழுந்துக் கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்தவன்
“ஆதிரா உன்னோட போன் நம்பர் கொடு… ஒரு வேளை நீ எழுந்துக்கலைனா நான் உன்னை எழுப்பிவிடுறேன்.”
“ஆனால் என் கிட்டே போன் இல்லையே… ” என்று இடைமறித்தாள் ஆதிரா.
“அப்போ சரி உன் ஹாஸ்டல் ரூம் மேட்டோட நம்பர் கொடு…நான் அவங்களை எழுப்பி உன்னை எழுப்ப சொல்றேன்… ஆனால் அவங்க தூக்கத்தை கெடுக்கிறா மாதிரி ஆகிடுமே.. ” என்று லேசாக தாடையை சொறிந்தான் வினய்.
“இல்லை..இல்லை அவள் தினமும் மூன்றரை மணிக்கே எழுந்து படிப்பா… அவளே என்னை எழுப்பி விட்டுடுவா.. எதுக்கும் நான் அவளோட நம்பர் தரேன்…. ” என்று எண்ணை கொடுத்துவிட்டு தன் விடுதி அறைக்கு சென்றாள். வினய்யும் அவனது விடுதிக்குள் நுழைய முயன்றான்.
ஆனால் வாசலிலேயே அந்த விடுதியின் வார்டனை நிறுத்தினார். அவரது கண்களில் கோபம் மின்னியது.
“எதுக்கு டா என்னை தூங்குமூஞ்சுனு அத்தனை பேருக்கு முன்னாடி சொன்னே?”
“உண்மையை எத்தனை பேருக்கு முன்னாடி வேணும்னாலும் உரக்க சொல்லலாம் வார்டன்… இன்னும் உங்களைப் பத்தி நிறைய உண்மைகள் இருக்கு… அதையும் சொல்லலாம்னு பார்க்கிறேன்… ” என்று வினய் சொல்ல அவரது முகம் குப்பென்று வியர்த்தது. கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டார்.
“என் கிட்டே எகிற வேலைலாம் வேண்டாம் வார்டன்… உங்களை பத்தின உண்மையை சொல்லி எல்லார் முன்னாடியும் என்னாலே நாறடிச்சு வேலையை விட்டு தூக்க முடியும்.. ஆனால் உங்களை நம்பி இருக்கிற குடும்பம் என்ன பாவம் செஞ்சது அதான் விட்டு வைச்சு இருக்கிறேன்… இனி அந்த மாதிரி தப்பு பண்ணேனு தெரிஞ்சது உடம்புல உயிரே இருக்காது… ” என்று சொல்லிவிட்டு சென்றான் அவன். அவனையே வன்மமாக பார்த்துக் கொண்டு இருந்தார் அவர்.
தன் அறைக்கு நுழைந்த ஆதிரா தன் தோழியிடம் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுப்ப சொல்ல அவள் சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தாள்.
“ஆதிரா நீ தானா டி இந்த வார்த்தையை சொன்ன? ஒரு முறை என் கையை கிள்ளிவிடு… ”
“அடியே கயலு உண்மையா தான் சொல்றேன். ஒழுங்கா என்னை மூன்றரை மணிக்கு எழுப்பிவிடு.”
“அடியே கும்பகர்ணி… தூங்குற உன்னை எழுப்புறது அந்த கடவுளாலே கூட முடியாத காரியம்.. ஒரு தடவை தூக்கம் கண்ணை தொட்டுட்டா எங்கேனு கூட பார்க்காம தூங்க ஆரம்பிச்சுடுவ… உன்னை எழுப்புறது எல்லாம் நடக்காத காரியம்… ” என்று வைஷீ அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டு இருக்க ஆதிரா எப்பவோ உறங்க ஆரம்பித்து இருந்தாள். தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் கயல்.
அதிகாலை மூன்றரை மணி.
அதிகாலையில் வரும் தன் கனவுகளை, அலாரமோ குரலோ சற்றும் கலைக்க முடியாதபடி ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்து இருந்தாள் ஆதிரா.
அவளை எழுப்ப முயன்று தோற்றுப் போய் தலையில் பெட்ஷீட்டை போட்டபடி ” எழுந்துடு ஆதிரா.. ப்ளீஸ்… ” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள் கயல்விழி.
நேரம் நான்கை நெருங்கிவிட்டது.
ஆலமரத்தின் கீழ் அமர்ந்தபடி ஆதிராவின் வரவுக்காக காத்துக் கொண்டு இருந்தான் வினய். அவள் வருவதாய் தெரியவில்லை. சட்டைப் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து அவளது தோழிக்கு அழைத்தான் இரண்டே ரிங்கில் போன் எடுக்கப்பட்டது.
” சாரி மா.. காலையிலேயே தொந்தரவு பண்றதுக்கு.. ஆதிரா எழுந்துட்டாளானு தெரிஞ்சுக்க தான் மா போன் பண்ணேன்…”
” இல்லை அண்ணா… அவள் தூங்குறா தூங்குறா தூங்கிக்கிட்டே இருக்கா… எவ்வளவு எழுப்புனாலும் எழுந்துக்க மாட்டேங்குறா… என்னாலே முடியலை அண்ணா…”
“சிஸ்டர் அங்கே பக்கத்துல தண்ணீர் இருந்தா எடுத்து அவள் முகத்துலே ஊத்துங்க… இரண்டே செகண்ட்ல எப்படி எழுந்து உட்காரானு மட்டும் பாருங்க…”
“அச்சோ சூப்பர் அண்ணா… இந்த ஐடியா எப்படி எனக்கு தோணாம போச்சு… ஒரு அஞ்சே நிமிஷம் வெயிட் பண்ணுங்க… ஆதிரா அங்கே வந்து நிற்பா… ” என்று அலைபேசியை துண்டித்தவள் நேராக தண்ணீர் குப்பியின் அருகே சென்றாள்.
ஒரு முறை தண்ணீரை பார்த்தாள். மறுமுறை ஆதிராவைப் பார்த்தாள். பின்பு வேகமாக தண்ணீரை எடுத்து ஊற்ற இரண்டே நொடிகளில் தூக்கத்தில் இருந்து கலைந்து எழுந்து அமர்ந்தாள் ஆதிரா.
“ஏன் டி பன்னி.. என் மேலே தண்ணியை ஊத்துன?”
“மணி நாலு ஆகி பத்து நிமிஷம் ஆச்சு.. ஒழுங்கா சீக்கிரம் தயார் ஆகி ஆலமரத்து கிட்டே போ…அங்கே வினய் அண்ணா ரொம்ப நேரமா கத்துக்கிட்டு இருக்காங்க…” என்று தலையணையால் தன் முகத்தை மூடிக் கொண்டு படபடவென பேசினாள், எங்கே மீதம் இருக்கும் தண்ணீரை எடுத்து ஆதிரா ஊற்றிவிடுவாளோ என்ற பயத்தினில்.
“
மவளே உன்னை வந்து வெச்சுக்கிறேன்.” என்று கடுப்பாக சொல்லிவிட்டு வேகமாக தயாராகி ஆதிரா வெளியே செல்ல எத்தனித்தவளை தடுத்தது கயல்விழியின் குரல்.
“ஓய் ஆதிரா.. வெளியே பனியா இருக்கு… சால்வை இல்லைனா ஸ்வெட்டர் போட்டுக்கிட்டு போ… ”
“அதெல்லாம் யார் கிட்டே இருக்கு… ” என்று ஆதிரா சொல்ல கயலின் முகம் வாடியது.
“சே நேத்து தான் ஆதிரா என் ஸ்வெட்டர் துவைக்க போட்டேன்…. அதிகாலை பனி அதிகமா இருக்கு. ஏதாவது கனமான துணியாவது மேலே போட்டுக்கிட்டே போ..” என்று கயல் சொல்லிக் கொண்டு இருந்த நேரம் செருப்பை மாட்டிக் கொண்டு இருந்த ஆதிரா,
” இந்த குளிர்லாம் என்னை எதுவும் பண்ணிடாது கயல் மா… ” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சிட்டாக பறந்துவிட்டாள்.
அந்த ஆலமரத்திற்கு அடியில் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு கல்லாய் இலக்கில்லாமல் எங்கேயோ வீசிக் கொண்டு இருந்த வினய் சருகுகள் மிதிப்படும் ஓசைக் கேட்டுத் திரும்பினான். ஆதிரா தான் வந்து கொண்டு இருந்தாள்.
“சாரி வினய்..கொஞ்சம் லேட் ஆகிடுச்சு… நான் சரியா மூன்றரை மணிக்குலாம் எழுந்துட்டேன்.. ஆனால் என் ப்ரெண்ட் தான் கிளம்புற நேரம் பார்த்து சப்ஜெக்ட்ல டவுட் கேட்டாலா,,, அதை சொல்லித் தந்துட்டு வரதுக்கு லேட் ஆகிடுச்சு… “என்று ஆதிரா சொல்லிய சமாளிப்பைக் கேட்டு புன்னையை கட்டுப்படுத்த முடியாமல் வேறுப் பக்கம் திரும்பி கொண்டான்.
“அடிப்பாவி கும்பகர்ணி மாதிரி தூங்குனது மட்டும் இல்லாமல் எப்படி எல்லாம் சாமாளிக்குறா பாரு… ” என்று மனதுக்குள் நினைத்தவன் தனக்கு எதுவும் தெரியாதபடி காட்டிக் கொண்டான்.
“அதுல என்ன இருக்கு ஆதிரா.. படிப்புல எந்த நேரம் சந்தேகம் வந்தாலும் அதை தான் முதலிலே பார்க்கணும்… அப்புறம் தான் பாட்டு பூட்டு எல்லாம்… ” என்று சொன்னவன் தன் அருகினில் இருந்த சால்வையை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
“ஆதிரா குளிரும் போர்த்திக்கோ… ” என்று சொல்ல முதலில் தயங்கினாள்… பிறகு குளிர் அவளது உடலை மெதுமெதுவாக துளைக்க ஆரம்பிக்க மறுக்காமல் அந்த சால்வையை வாங்கிப் போர்த்திக் கொண்டாள்.
அருகினில் இருந்த ப்ளாஸ்கில் இருந்து தேநீரை ஊற்றி அவளிடம் கொடுக்க சின்ன தலையசைப்புடன் வாங்கிக் கொண்டாள். அதிகாலை குளிருக்கு தேநீர் சூடும் அதன் சுவையும் இதமாக இருந்தது. ரசித்துக் குடித்தாள்.
“டீ ரொம்ப நல்லா இருக்கு… இவ்வளவு காலையிலே எந்த கடையிலே வாங்குனீங்க? ”
“வாங்கல ஆதிரா.. நானே போட்டேன்.. ” என்று சொல்ல அவளது புருவம் உயர்ந்தது.
“பரவாயில்லையே நல்லா டீ போடுறீங்க.” என்று அவனை பாராட்டினாள்.
“கொஞ்சம் சமைக்க தெரியும் ஆதிரா அதான்… ”
” எனக்கு சுத்தமா சமைக்க தெரியாது.. ” என்று சொல்ல ” ஏன் உங்க அம்மா உனக்கு சமைக்க சொல்லி தரலையா??” என்று பதில் கேள்ழி கேட்டான்.
“இருந்தா தானே சொல்லி தர முடியும்… ” என்று வருத்தமாக ஒலித்தது ஆதிராவின் குரல்.
அந்த கேள்வியைக் கேட்ட பின்பு தான் கேட்டு இருக்கக்கூடாதோ என்ற கேள்வியும் குற்றவுணர்வும் உதித்தது வினய்யிற்குள். நொடிப் பொழுதில் வாடிப் போன அவளை உற்சாகப்படுத்தும்விதமாக பேச்சை மாற்றினான்.
“பரவாயில்லை அதனாலே என்ன? நான் உனக்கு சமைக்க சொல்லி தரேன். அப்புறம் எத்தனை பேரு உன் கிட்டே ரெசிபி கேட்க போறாங்க பாரு. உன்னை World famous cook ஆ நான் மாத்தி காட்டுறேன்… அதுக்கு முன்னாடி நீ world famous singer ஆகணும்… அதுக்கான பயிற்சியை ஆரம்பிக்கலாமா?” என்று அவன் கேட்க புன்னகையுடன் தலையசைத்தாள் அவள்.
“ஓகே ஆதிரா.. உனக்கு தெரிஞ்ச ரெண்டு ராகம் பேரு சொல்லு… ”
” கருநாடக, இந்துஸ்தாணி”
“வெரி குட்… நான் எதிர்பார்த்த இரண்டு பதிலையும் சொல்லிட்டே… ” என்று சொன்னவன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ராகங்களை பற்றி விலக்கி சொல்லிவிட்டு அவளது கையில் ஒரு காகிதத்தைக் கொடுத்தான்.
“இதுல நான் எழுதுன பாடல் வரி இருக்கு… இந்த பாடல் வரிக்கு எந்த ராகம் பொருத்தமா இருக்குமோ அதையே அடிநாதமா வெச்சு பாடு ஆதிரா… ” என்று வினய் சொல்ல அந்த காகிதத்தை வாங்கிப் படித்தவள் அதன் வரிகளை உட்கிரகித்து மெதுவாக தன் குரலில் பாடத் துவங்கினாள். மெல்ல அவளது குரல் சுற்றி இருந்த காற்றை தேனிசையால் வருடத் துவங்கி இருந்தது.
ஏ தேசம் சுற்றும்
சூறக்காற்றே…
விரலைத் தீண்டும்
அலையின் கீற்றே…
உன்னை காண
ஒருத்தி வந்தாள் பார்..
பூநிலாவும் மஞ்சள் வெளியிலும்
கொஞ்சும் குயிலும் துஞ்சும் தளிரும்
ஒன்றாய் சேர்ந்து கண்ணில்
காண்போம் வா…
நேரம் போகுது தன்னில்
காலம் மாறுது உன்னில்
பாதை நீளுது கண்ணில்
ஒன்றாய் சேர்ந்து போவோம் வா…
விரிப்போம் மனதின் சிறகை
அளப்போம் உலகின் அளவை
பறப்போம் சிறு இறகாய் மாறி வா…