am26

ஆசை முகம் 26

 

அனுசியா, வேந்தனைக் காணும்போதெல்லாம் கேட்க ஆரம்பித்திருந்தார்.

அனுகூலமாக எதையும் கூற இயலாத நிலை வேந்தனுக்கு.

மீராவை அழைத்துச் சென்று, வாணியைத் தங்களோடு கூட்டிவரும் எண்ணம் தவிடு பொடியாகியிருக்க, அமைதி காத்து, கடந்தான்.

“எங்க இருக்கான்னாவாவது தெரியுமா?” என ஒருநாள் மகனிடம் வினவ

“ம்” தலையைக் கவிழ்ந்தபடியே

“அப்ப, அங்க என்னையக் கூட்டிட்டுப்போ!”

“இல்ல…!”

“ஏன்…! சொல்றேனில்ல!  மொதல்ல கூட்டிட்டுப் போ! அவகிட்ட நான் பேசிக்கறேன்!”

அதற்குமேல் மறுத்துப் பேசாமல், அனுசியா சந்திக்க வேண்டிய ஏற்பாடுகளும் செய்தான்.

அடுத்து வரும் பார்வையாளர் நாள் வரை காத்திருந்து தாயை அழைத்துச் சென்றான்.

பங்களூருக்குள் வண்டி நுழையும்வரை அமைதி காத்தவர், “பரவாயில்லை! ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற அளவுக்குத்தான் ஏதோ பண்ணிருக்க!  பொழச்சே..!  இன்னும் கொஞ்சம் அதிகமா எதாவது பேசிருந்தா, வேற நாட்டுக்கே போயிட்டுருப்பாபோல!” அந்நேரத்திலும் சிரித்தபடியே மகனை கிண்டல்போல கடிந்தார் அனுசியா.

வேந்தன், ‘எல்லாம் என் நேரம்’ என அமைதியாக இருந்தான்.

…………………..

பிரயாணத்தின் சுவடு மிகவும் சோர்வடையச் செய்திருக்க, மகனுக்காக முழங்கால் வலியையும் பொறுத்துக் கொண்டு கிளம்பி வந்திருந்தார் அனுசியா.

தாயின் மொழி உதவிக்கு, தங்களின் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணையும் உடன் அழைத்து வந்திருந்தான்.

அனுசியாவைக் கண்டதும், ஓடி வந்து கட்டிக் கொண்டு சிரித்தபடியே அழுதாள் வாணி.

அனுசியா தன்னை கவனித்துக் கொண்டது அனைத்தும் நினைவில் வந்திட, மனதின் பாரமேறிய உணர்வில் உடைந்து அழத்தான் தோன்றியது வாணிக்கு.

“சாரீ பாட்டீமா!  உங்களையேதான் நினைச்சிட்டே இருந்தேன்.  நீங்களே நேருல வந்துட்டீங்க!”

“பொய் சொல்லாத!”

“நிஜமாத்தான் பாட்டீமா!”

“அப்டிப் பாத்தவளுக்குத்தான் எங்கிட்ட ஒரு வார்த்தை பேசணும்னு தோணலை!  நீ பாட்டுக்கு கிளம்பி வந்திட்ட!  என்னை ஒரு கனமாச்சும் யோசிச்சியா?  எப்டி இந்தக் காலோட இவ்வளவு தூரம் வருவேன்னு! நீ வந்து மாசமே முடியப் போகுது.  ஒரு தடவையாவது பேசவாது செய்தியா?”

அழுது களைத்தாலே தவிர, பதில் பேசவில்லை. அப்போதும் அனுசியாவிற்கு இதமாய் கால் பிடித்து விட்டபடியே பேசினாள்.  அனு எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை.

“வா! எங்கூட கிளம்பு!” அனுசியா

எந்த உணர்வும் காட்டாமல், அப்படியே கண்ணில் நீர் வழிய பேசாமல் இருந்தாள் வாணி.

“உன்னைத்தான் சொல்றேன்.  நீ எங்கூட இப்ப வரப்போறீயா? இல்லையா?”

“வேற என்னனாலும் சொல்லுங்க பாட்டீமா!  ஆனா அங்க நான் வரல!” ஆணித்தரமாய் வந்து விழுந்தது வார்த்தைகள்.

காரணத்தைக் கேட்டாலும், அழுதாலே தவிர அசையவில்லை.

“இந்தப் பாட்டீமா உனக்காகத்தான இவ்ளோ தூரம் மெனக்கெட்டு ஓடி வந்தேன்.  இப்ப நீ வரலைங்கறீயே!”, என அனுவும் வாணியோடு அழத் துவங்கிட

மாறி, மாறி அழுதாலும், அனுவோடு கிளம்ப அசைவேனா என்றிருந்தாள் வாணி.

“என்னதான் உம்மனசுல இருக்குன்னு சொல்லு!”

“…”

“பதினெட்டாம் பேரு இன்னிக்கு!  இன்னைக்குத்தான் உங்கிட்ட வேந்தனுக்கும் உனக்கும் கல்யாணத்துக்கு தோது பாத்து நாள் குறிக்கணும்னு நினைச்சிருந்தேன்! இப்டியெல்லாம் நடக்கும்னு தெரியலையே!  தெரிஞ்சிருந்தா ஆனி கடைசியில தேய்பிறைனாலும் பரவாயில்லைனு கல்யாணத்தைப் பண்ணி வச்சிருப்பேனே!” புலம்பித் தீர்த்தார் அனுசியா.

அதிர்ச்சியாய், நம்பியும் நம்பாமல்,  ஆனால் அழுகையோடு நிமிர்ந்து பார்த்தாள்.

மற்றவர்களை நம்பினாலும், வேந்தனை நம்ப மனம் மறுத்தது.

‘அவங்களாவது ஒத்துக்கரதாவது’ என்பதாகத்தான் வாணி வேந்தனைப் பற்றி எண்ணினாள்.

அனுசியா பகிர்ந்து கொண்டதனைத்தும் வாணி அறியாத விசயங்கள்.

ஜோசியரைப் பார்த்து நாள் குறித்துக் கொடுத்திருந்த அந்த முகூர்த்தப் பத்திரிக்கையையும் எடுத்துக் காட்டியிருந்தார் வாணியிடம்.

“நீங்க ஃபோர்ஸ் பண்ணியிருப்பீங்க!”

“இல்லம்மா…! நானா அவங்கிட்ட கேட்டது உண்மைதான்.  எப்போதும் இல்லாம, எந்தத் தயக்கமும் இல்லாம உடனே சம்மதம் சொல்லிட்டான்.  வேணா அவங்கிட்டயே நீ பேசிப் பாரேன்!”

அதற்கும் மறுத்துத் தலையசைத்தாலே அன்றி வேந்தனை சந்திக்க மறுத்தாள்.

ஆனால் தன்னோடு தினசரி ஒருமுறையாவது பேசவேண்டும் என்கிற கட்டளையோடு, “எவ்வீட்டு மகாலெட்சுமி நீ.  ஏதோ நேரங்காலம் இப்டி நடக்குது.  ஆனா உன்னை அந்த வீட்டுல திரும்பப் பாக்கற பாக்யத்தை அந்த ஆண்டவன் எனக்கு சீக்கிரமாத் தரட்டும்” கண்கலங்கிச் சொன்னார் அனுசியா.

அதுவரை துயரத்தில் வழிந்த கண்ணீர், அதன்பின் ஆனந்தக் கண்ணீராக வந்ததே அன்றி உடன் கிளம்பி வரும் எண்ணமில்லை பெண்ணுக்கு.

இன்னும் நம்பிக்கையில்லை அந்த முகத்தில்! வாணியின் முகத்தில் தெரிந்த உணர்வைக் கண்ட அனுசியாவிற்கு உயிரே போனாற் போலிருந்தது.

வாணி தன்னை நம்பாமல் இருக்குமளவிற்கு, தங்களது வீட்டில் ஏதோ நடந்திருக்கிறது,

அது என்ன?

அதற்கு காரணம் யார்?

வேந்தன், தாய் அனுசியாவின் உடல்நிலை கருதியே ஆரம்பத்தில் தவிர்த்திருந்தான்.

ஆனால் தாயே கிளம்ப முன்வந்ததும், மிகுந்த ஆர்வமும், எதிர்பார்ப்புமாய் காத்திருந்தான். வாணி கண்டிப்பாக தாயோடு கிளம்புவாள் என்று.

ஆனால் அனுசியா தனித்து திரும்பி வந்ததும் இன்னும் மனம் ஓய்ந்திருந்தது வேந்தனுக்கு.

உண்மைநிலை அறிந்தவனுக்கு உள்ளமே கொதித்திருந்தது.

அனுசியா வந்து வேந்தனின் மீது பழிபோட, பழி ஓரிடம் பாவம் வேறிடம் என்பதான நிலையில் வேந்தன் வாயைத் திறக்காமல் தாயின் வசவுகளை பொறுத்துக் கொண்டான்.

‘அப்படி என்ன செய்துட்டேன் அவளுக்கு!’, என்பதாகத்தான் இருந்தது வேந்தனின் நிலை.

“ஒரு வேளை நீ போனா உங்கூட வருவாளா இருக்கும் வேந்தா.  நீ ஒரு தடவை நேருல போயி அவளைப் பாருவேன்!”, என்ற தாயின் கெஞ்சலான வார்த்தையில், வெறுத்துப் போனது வேந்தனுக்கு.

“ம்மா விடுங்க! நீங்க கூப்பிட்டே வரலையாம்.  நாங்கூப்டதும் உடனே கிளம்பி எம்பின்ன வந்திருவாளாக்கும்! போனா போகட்டும்!” சலிப்போடு கூறியவன்

“இதுக்குமேல நாம்போயி என்ன பேச!  அவ விருப்பம் அதுனா இருந்துட்டுப் போகட்டும்! நீங்க வாங்க!” தாயை கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

வரும் வழி நெடுக அனுசிய மகனைச் சமாதானம் செய்து கொண்டே வந்தார்.

“இதுக்கா கஷ்டப்பட்டு, கல்யாணம் வரை பேசினேன்!” வருத்தமாக அனுசியா கேட்க

“வேற என்ன செய்யச் சொல்றீங்க!  நாம கெஞ்சக் கெஞ்ச அவ மிஞ்சுறா!  ரொம்ப பண்ணா போகட்டும் விடுங்க!”

“அது உன்னோட உதடுதான் அப்டிச் சொல்லுது வேந்தா!  உம்மனசு அப்டிச் சொல்லலை. இதுக்கு மேலயும் உன்னை நீயே ஏமாத்திக்காதப்பா.  அவ யாரோவா!  உன்னோட சரிபாதி.  அவகிட்ட எதுக்கு வீம்பு புடிக்கிற.  நீ போயி அவகிட்ட பேசினா கண்டிப்பா உங்கூட கிளம்பி வருவா!” தாயின் தீர்க்கமான வார்த்தையில், வாணியை சந்திக்க முடிவெடுத்தான் வேந்தன்.

அன்றைய தினத்தின் பார்வையாளர் நேரம் முடிந்திருக்க, அடுத்து வரும் நாள்களில் அதற்கான வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.

ஆனால் விடுதிக்குச் செல்ல இயலாது.

அவளை வெளியே அழைக்க எண்ணினாலும், குறிப்பிட்ட அலைபேசி எண்களிலிலிருந்து வரும் அழைப்புகளை மட்டும் முடக்கியிருந்தாள்.

அவளது வெளி நடவடிக்கை அறிக்கை வரும்வரை செயல்படுத்தக் காத்திருந்தான் வேந்தன்.

அனுசியாவுடன் மட்டும் பேசத் துவங்கியிருந்தாள் வாணி.

ஆரம்பத்தில் கடனே என பேச்சைத் துவங்கி, அதன்பின் இலகுவாக உரையாடல் தொடர்ந்தது. 

அனுசியாவிற்கு நம்பிக்கை வந்திருந்தது.

வாணிக்குமே மனதில் சற்று மாற்றங்கள் தோன்றத் துவங்கியிருந்தது.

ஏதோ மூலையில், ‘விரைவில் இந்நிலை மாறி, எல்லாம் சரியாகும்’ வாணியின் உள்ளுணர்வு கூறியது.

………………………..

வாணிக்கு அந்த சீதோஷ்ண நிலை பழகவே சிரமப்பட்டாள்.

அதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிய ஆடைகளை வாங்க மட்டும் வெளியே சென்று வந்தாள் ஒரு முறை.

மொழி பிரச்சனை வேறு இருந்தது.

விடுதியில் தமிழ், ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் குறைவே.

பெரும்பாலும் பெண்கள் கன்னடம், இந்தி பேசினார்கள்.

ஊமை பாஷையையே பெரும்பாலும் அவர்களிடம் கையாளும் நிலை.

ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமிக்கு ஒரு நாள் சென்று தனது ரெசியூம்மை கொடுத்துவிட்டு வந்திருந்தாள்.

அவர்கள் தேவையெனில் அழைப்பதாகக் கூறினார்கள்.

வெளியே சென்று வரும்போதுதான் கவனித்தாள். விடுதியைப்போல அந்நகர மக்கள் இல்லை என்பதுதான் அது.  நகரத்தில் பெரும்பாலும் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுகு என அனைத்தையும் கலந்து பேசக்கூடியவர்களாகவே இருந்தனர்.

வெளியே சென்றாலாவது நன்றாக இருக்கும் என்பது போலிருந்தது வாணிக்கு

பெரும்பாலும் வெப்பமான இடங்களில் வளர்ந்தவளுக்கு, எப்போதும் குளிரும், சிறு தூரலுமாக இருந்த சீதோஷ்ண நிலை தனக்கு ஒவ்வாது என, விடுதியை விட்டு வெளிவரவே பயந்தாள்.

ஒரே இடத்தில் அடைந்து கிடக்க, எப்போதும் மாமூவின் நினைவுகள் மட்டுமே.  அது இன்னும் அதிகமானதே அன்றி, குறையவில்லை.

கனவுகளில்கூட வராமல் வஞ்சனை செய்தவனை, வசைபாடினாள்.  பிறகு தனது வசவு அவனைத் தாக்கி அதனால் ஏதும் துன்பம் வந்துவிடக்கூடாதே என எண்ணித் தன்னையே கடிந்து கொண்டாள்.

கனவில் இதுவரை வந்தவன், வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் கனவில்கூட வராமல் வஞ்சித்ததை எண்ணிக் குமுறித் தீர்த்தாள்.

‘அவங்க வீட்ல இருக்கும் போதெல்லாம் கனவுல வந்துட்டு, இப்ப கனவுலகூட என்னையக் கண்டுக்கறதே இல்லை!’ என அழுது, மனதை சமன் செய்ய முயன்றாள்.

காதல் ஒவ்வொருவரையும் மனநலம் பிறழாமலேயே பைத்தியமாக்கிப் பார்க்கிறது.  அதே நிலைதான் வாணிக்கும்.

தன் மாமூவின் நினைவு, குளிரான பிரதேசத்தில் அவளை வாட்ட, அந்த நினைவில் அவளது வாட்டம் மாறி, ஊட்டம் பெற்று நிதானமாகத் தெளியத் துவங்கினாள்.

கடந்து போன நாள்களைப்போல இல்லாமல், சற்றே பகலவனின் கதிர்கள் பூமியில் விழுந்திடவே, துணிச்சலாக வெளியே சென்றுவர முடிவு செய்தாள்.

விடுதி மேற்பார்வையாளர் மட்டுமே ஆங்கிலத்தில் பேசுவதால், அவரிடம் தனக்கு வேண்டிய விசயங்களை கேட்டு அறிந்து கொண்டிருந்தாள்.

அதன்படி, அன்று அருகே இருக்கும் பூங்காவிற்கு செல்ல முடிவெடுத்து வெளியே வந்திருந்தாள்.

………………………..

ஆவணி மாதமும் பிறந்துவிட்டது.  அது முடியும்முன் வாணியை அழைத்து வர முடியமா அல்லது திருமணத்தடை இன்னும் நீளுமா என்கிற கவலை அனுசியாவிற்கு.

இன்னும் அதிக வேண்டுதல்கள் என இறைவனைத் தஞ்சமடைந்திருந்தார்.

வேந்தனுக்கு பெரும்பாலும் பங்களூர் வாசம் என்றாகியிருந்தது.

இன்று வருவாளா, நாளை வருவாளா எனக் காத்திருப்புகள் நீண்டிருந்தது.

வேந்தனுக்கு கடந்துபோன ஒன்றரை மாதங்களும் நிதர்சனத்தைப் புரிய நேரங்களைக் கொடுத்திருந்தது.

அவசியம் என்றால் மட்டும் சென்னைக்குச் சென்று வந்தான்.

சென்னையில் இருக்கும்போது தோன்றும் அபஸ்வரம் இங்கு வந்ததும் சரியாவதைக் கண்டு ஆரம்பத்தில் புரியாமல் இருந்தான்.

யோசித்தவனுக்குள், தனது சுவாசத்தின் மூலம் இங்கிருப்பதே காரணம் என்பதும் புரிய வந்தது.

ஒரு பெண் இத்தனை மாற்றங்களை தனக்குள் விதைக்க இயலுமா?  பேசவில்லை. ஏசவில்லை, பார்வையில்லை, பழக்கமுமில்லை. எதுவுமில்லாமலேயே தன்னை ஆட்டுவிக்க ஆண்டவன் அனுப்பிய தனது ஆசை முகத்தை எண்ணியவனுக்கு நகை எழுந்ததே அன்றி கோபம் எழவில்லை.

சுகமான இம்சைகளைத் தாங்கிக் கொள்ள வலுவான இதயம் கொண்டிருந்தான்.

பெண்ணை நேரில் சந்திக்க எண்ணியிருப்பதால், அவள் வெளி வரும் நேரம் தகுந்த இடம் பார்த்துக் காத்திருக்கும் நிலைக்கு வந்திருந்தான்.

வீட்டிலிருக்கும்போது அவளைக் காணாது கடந்து சென்ற நிமிடங்கள் வந்து கேலி செய்து சிரித்தது.

வாகனங்களில் வெளியிடங்களுக்குச் செல்லும்போது இடையில் குறுக்கிடுவதை வேந்தன் விரும்பவில்லை.

பெண் எதாவது பொருள்கள் வாங்கச் செல்லும் தருணத்தை பயன்படுத்தக் காத்திருந்தான்.

மாலை நேரம்!

விடுதிக்கு அருகே இருந்த பூங்காவிற்கு வாணி வந்த செய்தி அறிந்து சந்திக்கக் கிளம்பினான் வேந்தன்.

தங்கியிருந்த இடத்திலிருந்து தனது காரில் கிளம்பி வந்தவன், பூங்காவைக் கண்டுபிடித்து வண்டியை நிறுத்தி ஓரங்கட்டிவிட்டு இறங்கினான்.

சுற்றிலும் பார்வையை ஓடவிட்டபடியே பூங்காவை நோக்கி வேந்தன் வரவும், பெண் பூங்காவை விட்டு வெளிவரவும் சரியாக இருந்தது.

வேந்தனை வாணி கண்டுகொண்டாளா? தவிர்த்தாளா?

………………………..

தேவைகள்

இருக்குமிடத்து

தேடல்கள் இருக்கும்!

அவசியம்

இருக்குமிடத்து

அணுசரணை இருக்கும்!

காவல்கள்

இருக்குமிடத்து

மீறல்கள் இருக்கும்!

நிராகரிப்பு

இருக்குமிடத்து

அலட்சியம் இருக்கும்!

வேதனை

இருக்குமிடத்து

வேண்டல்கள் இருக்கும்!

சோதனை

இருக்குமிடத்து

சோகங்கள் இருக்கும்!

வெறுப்பு

இருக்குமிடத்து

பரிகாசம் இருக்கும்!

பொறுப்பு

இருக்குமிடத்து

கவனிப்பு இருக்கும்!

வஞ்சினம்

இருக்குமிடத்து

பழிவாங்கல்கள் இருக்கும்!

அன்பு

இருக்குமிடத்து

ஆதரவு இருக்கும்!

காதல்

இருக்குமிடத்து

கனவுகள் இருக்கும்!

ஏக்கங்கள்

இருக்குமிடத்து

எதிர்பார்ப்புகள் இருக்கும்!

நோக்கம்

இருக்குமிடத்து

கடின உழைப்பு இருக்கும்!

உழைப்பு

இருக்குமிடத்து

வெற்றிமேல் வெற்றி இருக்கும்!

உணர்வுகள்

இருக்குமிடத்து

உத்வேகம் இருக்கும்!

உணர்ச்சிகள்

இருக்குமிடத்து

கொந்தளிப்பு இருக்கும்!

அசதி

இருக்குமிடத்து

ஆழ்ந்த உறக்கம் இருக்கும்!

நல் உறக்கம்

இருக்குமிடத்து

நற் சிந்தனைகள் இருக்கும்!

நிறைவு

இருக்குமிடத்து

நிம்மதி இருக்கும்!

ரசனைகள்

இருக்குமிடத்து

நற்கவிதைகள் பிறக்கும்!

……………………………………….