காதல் சதிராட்டம் 16
காதல் சதிராட்டம் 16
ஆகாயமோ முழுநிலவோ வெயிலோ எதுவும் தன் மீது படாதவாறு அந்த கண்ணாடி குடுவைக்குள் எந்த கவலையும் இல்லாமல் சுற்றிக் கொண்டு இருந்த அந்த மீனையே விழியகலாது பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா.
அவளது நிலையும் இப்போது கிட்டத்தட்ட அந்த மீனின் நிலை தான். வெளியுலகத்திற்கு செல்ல முடியாதபடி வினய் அவளை சிறைப்பிடித்து இந்த வீட்டிற்குள் ஒரு மீனைப் போல அடைத்து வைத்து இருக்கின்றான்.
இந்த சிறையில் இருந்து விடுப்பட அவளுக்கு சாவி கிடைத்தது தான் இருந்தாலும் ஏன் விரும்பியே சிறைப்பட்டுக் கொண்டோம் என்ற கேள்வி தான் அவள் மனதை செல்லாய் அரித்தது.
எந்த மீனாவது துள்ளிக் குதிக்க கடல் கிடைத்தும் சின்ன தொட்டிக்குள் சிறைப்பட்டு கொண்டு இருக்குமா?
பெரிய திமிங்கலத்திடம் இருந்தோ இல்லை வலையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவோ சில மீன்கள் விரும்பியே சிறைப்பட்டுக் கொள்வதுண்டு அதுப் போல தான் நானும் வைபவ்விடம் இருந்து தப்பிப்பதற்காக இந்த வீட்டில் தங்கிவிட்டேனா?
இல்லை இல்லை அப்படி இருக்காது. நான் என்னுடைய சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காக தான் இங்கே தங்கி இருக்கின்றேன்.
அப்படியானால் ஏன் போட்டியில் ஜெயித்தவுடன் நான் இங்கே இருந்து கிளம்ப அப்படி துடித்தேன்.
அப்போது அந்த சத்தியம் பற்றிய நினைவே எனக்கு வரவில்லையே.
எது என்னை எங்கே இருக்க வைத்தது?
வைபவ்வின் பேச்சு மட்டும் தான் என்னை இங்கே இருக்க வைத்தது.
அவனுடைய சுயநலமான முடிவு தானே என்னை இங்கே இருக்க வைத்தது.
வைபவ் ஏன் இப்படி செய்தான்?
காதலால் தான் இப்படி செய்தான் என்று என்னால் இந்த முறையும் சப்பைக்கட்டு கட்ட முடியவில்லையே.
எவ்வளவு தான் அவன் என்னை காதலிப்பதால் தான் இப்படி எல்லாம் செய்கின்றான் என்று மனதை சமாதானம் செய்தாலும் மனம் சமாதானம் ஆகமாட்டேன் என்கின்றதே.
வைபவ் ப்ளீஸ் உன்னைக் காதலிப்பதற்காக நானும் பல காரணங்களைக் கண்டுபிடித்து மனதை இது காதல் தான் என்று நம்ப வைத்துக் கொண்டு இருக்கின்றேன். ஒவ்வொரு முறையும் இது காதல் தான் என்று மனம் நம்பத் துவங்கும் பொழுது எல்லாம் இப்படி மனதை உடைத்து இல்லை என்று ஆக்கிவிடாதே வைபவ் ப்ளீஸ். தயவு செய்து என்னை முழுமையாக காதலிக்கவிடு என்று அவள் மனதினுள் பேசிக் கொண்டு இருந்த நேரம் தொலைபேசி இடையில் புகுந்து அலறியது.
அழைப்பை ஏற்று எடுத்துக் காதில் வைத்தாள். எதிர் முனையில் வைபவ்வின் குரல் கேட்டது.
“ஏன் ஆதிரா சட்டுனு போனை வைச்சிட்டே… உடனே கிளம்பி வர தானே.. ” என்று மீண்டும் அவளை திரும்ப வர வைப்பதிலேயே குறியாக இருந்தான் அவன்.
“இல்லை வைபவ் நான் வரலை.. அக்ரிமெண்ட் முடியுற வரை நான் இங்கே தான் இருக்கப் போறேன். என்னாலே வாக்கு தவறி நடக்க முடியாது. “
“என்ன அப்படி பொல்லாத வாக்கு. அந்த வாக்கு சத்தியம்லாம் பெருசா எடுத்துக்காதே ஆதிரா. நான் உன்னை மிஸ் பண்றேன்… ப்ளீஸ் சீக்கிரமா கிளம்பி என் கிட்டே வந்துடு. “
“வைபவ் என்னை இங்கே அனுப்பும் போதே உனக்கு தெரிஞ்சு இருக்க வேண்டாம்மா, இந்த முப்பது நாள் பார்க்காம தான் இருக்கணும்னு. இப்போ ஏன் இவ்வளவு வருத்தப்படுற வைபவ்?”
“தெரியல ஆதிரா.. ஏதோ பயமா இருக்கு. நீ என்னை விட்டு போயிடுவியோனு… ப்ளீஸ் ஆதிரா சீக்கிரமா கிளம்பி என் கிட்டே வந்துடு. “
“எதனாலே வைபவ் திடீர்னு பயம் வந்துடுச்சு… என்னை நம்பிக்கையோட தானே இங்கே அனுப்பி வைச்ச…இப்போ அந்த நம்பிக்கை எங்கே போச்சு வைபவ்? சந்தேகப்படுறீயா என்னை?” வார்த்தைகளில் கூர்தீட்டி கூர்மை கூடி இருந்தது.
“இல்லை இல்லை ஆதிரா.. நான் உன்னை சந்தேகப்படல.. ஆனால் மனசு ஏதோ ஒரு மாதிரி தவிக்குது… ப்ளீஸ் என் கிட்டே வந்துடேன்.. “
“சாரி வைபவ் என்னாலே நான் கொடுத்த வாக்கை மீறி வர முடியாது. “
“அப்போ உனக்கு என்னை விட அந்த பாழாப் போன வாக்கு தானே முக்கியம்.. ” என்றான் பற்களைக் கடித்துக் கொண்டு.
ஆதிரா இதற்கு எதுவும் பதில் சொல்லாமல் அமைதி காத்தாள்.
அவளது மௌனம் அவன் கோபத்தை பல மடங்காக பெருக்கியது.
“அப்போ என்னை விட உனக்கு அந்த வாக்கு தானே முக்கியம்.. நீ அங்கேயே இரு மா… நான் இனிமே உன்னை அங்கே இருந்து வர சொல்லி கட்டாயப்படுத்த மாட்டேன்… ஆனால் நீ அங்கே இருக்கிற வரைக்கும் உனக்கு நான் இனி போனே பண்ண மாட்டேன் ஆதிரா… ” என்று கோபமாக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.
ஆதிரா போன் ரீசிவரை அப்படியே கையில் வைத்தபடியே நின்றுக் கொண்டு இருந்தாள். வைபவ் இனி பேச மாட்டேன் என சொன்னது அவளுக்கு ஒரு புறம் வருத்தம் அளித்தாலும் மறுபுறம் சந்தோஷமாகவே இருந்தது.
அவன் ஒவ்வொரு முறை பேசும் போது சந்தேகப்படும் போது எல்லாம் அவன் மீது இருக்கும் காதல் குறைந்து போவதை அவள் விரும்பவில்லை.
அவன் பேசவில்லை என்றாலே அவள் அவனின் மீதும் அவன் காதலின் மீதும் நம்பிக்கையாக இருப்பாள்.
ஆதலால் அவன் பேசாமல் இருப்பதே அவளுக்கு சரியாகப் பட்டது.
மெதுவாக ரீசிவரை வைத்துவிட்டு ஏஞ்சலின் அருகே சென்றாள்.
தாடையை உள்ளங்கையில் தாங்கியபடி ஏஞ்சல் நீந்துவதையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“ஏஞ்சல் நான் ஒரு உண்மை சொல்லட்டுமா… என்ன தான் நான் வினய் கிட்டே நான் வைபவ்வைக் காதலிக்கிறது உண்மைனு சொல்லி வாதாடுனாலும் சரி இல்லை காரணம் சொல்லி சமாதானப்படுத்தினாலும் சரி நான் காதலிக்க ஆரம்பிச்ச அந்த நேரத்திலேயே எனக்கு இது உண்மையா காதல் தானானு நிறைய வாட்டி எனக்கு நானே கேட்டுப்பேன் ஏஞ்சல்.. சில சமயங்களிலே காதல்னு சொல்லிட்டோமேன்றதுக்காக காதலிக்கிறோமோனு கூட தோணும். ஆனால் இந்த குழப்பத்தை நான் வினய் கிட்டே சொல்லிட்டாலோ இல்லை அவனே கண்டுபிடிச்சாலோ அவன் அதை தனக்கு சாதமாக பயன்படுத்திக்க நினைப்பான்.. அதான் ஏஞ்சல் எதையும் காமிச்சுக்காம இருக்கேன்.. இந்த சீக்ரெட் நமக்குள்ளே இருக்கட்டும்… ” என்று ஆதிரா ஏஞ்சலிடம் சொல்லிக் கொண்டு இருக்க ஆதிராவிடம் சாக்லேட்டைக் கொடுப்பதற்காக வந்த ப்ரணவ் அவள் பேசிய எல்லாவற்றையும் கேட்டுவிட்ட வந்த தடம் தெரியாமல் திரும்பி சென்று விட்டான்.
இங்கோ வைபவ் தன் அலைபேசியையே பார்த்துக் கொண்டு இருந்தான். தான் கோபமாக வைத்தப் பிறகு அவள் தன்னை சமாதனப்படுத்துவதற்காக மீண்டும் அழைப்பாள் என்ற நம்பிக்கையுடன் அலைபேசியையே பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
“ப்ளீஸ் ஆதிரா.. எனக்கு கால் பண்ணு. என் நம்பிக்கையை உடைச்சிடாதே. எனக்கு பயமா இருக்கு ஆதிரா.. நான் உன்னை இழந்திடப் போறோமோன்ற தவிப்பு நெஞ்சை வதைக்குது… ” என்று அவன் அங்கே தவித்துக் கொண்டு இருந்தான்.
அவள் அவனை திரும்ப அழைக்கவே இல்லை என்பதை உணர்ந்ததும் உடைந்துப் போனான்.
தான் அவளை அங்கே அனுப்பியது தவறோ என்று நேரம் கடந்து யோசித்தான்.
ஐயோ இப்படி செய்து இருக்கக்கூடாது தான் இக்கட்டில் இருந்து தப்பிப்பதற்காக அவளை இக்கட்டில் தள்ளி விட்டு இருக்கக்கூடாது. இப்போது இருவரும் இக்கட்டில் மாட்டிக் கொண்டோம்.
இப்படி செய்து தவறு செய்துவிட்டாயே வைபவ் என்று அவன் தன்னைத் தானே கடிந்துக் கொண்டு இருந்த போது அலைபேசியின் தொடுதிரை ஒளிர்ந்தது.
வேகமாக எடுத்து ஆதிராவா என்று பார்த்தான்.
ஆனால் அவன் அலைபேசியில் சேமிக்கப்படாத ஒரு எண்ணில் இருத்து குறுஞ்செய்தி வந்து இருந்தது.
கடந்த இரு நாட்களுக்காக தொடர்ந்து குறுஞ்செய்தி இந்த எண்ணில் இருந்து விடாமல் வந்துக் கொண்டு இருந்தது.
அப்போது எல்லாம் அதை கண்டு கொள்ளாமல் தவிர்த்தவனுக்கு இப்போது ஏனோ அந்த குறுஞ்செய்தி கோபத்தைக் கொடுத்தது.
இருக்கும் ப்ரச்சனை போதாது என்று இதுவேறு யார் புதியதாக பிரச்சனை கொடுக்கிறார்கள் என்ற கோபத்துடன் அந்த அலைபேசியை எடுத்து கோபமாக பதில் குறுஞ்செய்தியை அனுப்பினான்.
“நீ யாருனு எனக்கு தெரியாது… ஆனால் கையிலே மட்டும் மாட்டுனே காலி ஆகிடுவே.. எதுக்கு விடாம மெசேஜ் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கீங்க.. இதுக்கு மேலே மெசேஜ் பண்ணா வர கோவத்துக்கு என்ன பண்ணுவேன்னு தெரியாது… ” என்று கோபமாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மீண்டும் வானத்தைப் பார்க்க அலைபேசியின் தொடுதிரை மீண்டும் ஒளிர்ந்தது.
“ப்ளீஸ் கோபப்படாதீங்க வைபவ்.. நான் யாருனு தெரிஞ்சா நீங்க இவ்வளவு கோவப்பட மாட்டிங்க… ” என்ற குறுஞ்செய்தியைப் பார்த்ததும் வைபவ்வின் நெற்றியில் சிந்தனை முடிச்சுக்கள்.
யாராக இருக்கும் என்ற கேள்வி அவன் மனதை கொக்கிப் போட்டு இழுத்தது.
“யாருங்க நீங்க?” என்று இந்த முறை பொறுமையாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்துக் கொண்டு இருந்தான்.
“நீங்களே கண்டுபிடிங்க.. ” என்ற பதிலைக் கண்டதும் அவன் மூக்கு பெருமூச்சுவிட்டது.
இருக்கும் ப்ரச்சனை போதாது என்று புதியதாக இந்த தொல்லை வேறு என்று சலிப்புடன் அலைபேசியை அணைத்துவிட்டு நிலவைப் பார்க்க மீண்டும் துவங்கினான்.
அலைபேசி மீண்டும் ஒளிர்ந்தது. எடுத்துப் பார்த்தான்.
தேடாமல் கிடைத்த நினைவுகளை
எல்லாம் தேடத் துவங்கிவிடு மனமே…
தேடலின் முடிவில் நான் இருப்பேன்
உயிராக உன் உணர்வாக உன் கனவாக…
என்ற அந்த கவிதையைப் பார்த்ததும் அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது.
யாரோ என் கிட்டே நல்லா விளையாடுறீங்க. யாருனு கண்டுபிடிக்கின்றேன் சீக்கிரமா. அப்படி கண்டுபிடிக்கல நான் வைபவ் இல்லை என்று புன்னகைத்துக் கொண்டே தன் அறைக்கு சென்று படுக்க சென்றான்.
ப்ரணவ் ஆதிரா சொன்ன அந்த வார்த்தைகளையே திரும்ப திரும்ப யோசித்துக் கொண்டு இருந்தான்.
ஆதிரா குழப்பத்தில் இருப்பது அவனுக்கு தெளிவாக தெரிந்தது.
ஆக அண்ணி வைபவ்வை இன்னும் முழுசா காதலிக்க தொடங்கல. நல்ல வேளை வினய் அண்ணா சரியான முடிவு எடுத்து அண்ணியை இங்கே கூட்டிட்டு வந்துட்டாங்க. அண்ணியாலே இப்போ எந்த இடையூறும் இல்லாமல் யோசிக்க முடியும்.. யார் அவங்களுக்கு சரியானவங்கனு புரிஞ்சுப்பாங்க… என்று ப்ரணவ் யோசித்துக் கொண்டு இருந்த நேரம் உத்ரா அலைபேசியில் எதையோ பார்த்து சிரித்தபடி அந்த வழியில் நடந்துக் கொண்டு இருந்தாள்.
அவளைப் பார்த்ததும் உத்ரா என்று அழைத்தான். அவளும் திரும்பிப் பார்த்தாள்.
“எதைப் பார்த்து இப்படி தனியா சிரிச்சுட்டு கிடக்கிற… உன் கிட்டே முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும் இங்கே வா.. ” என்று அருகில் அழைத்தான்.
“ம்ம்ம்ம் என் ஆள் கிட்டே பேசிக்கிட்டு இருந்தேன்.. ” என்றாள் நக்கலான முக பாவனையில்.
“என்னது உனக்குலாம் ஆள் இருக்காங்களா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். ” என அவன் நக்கலாக சொல்ல இவள் கோபமாக முறைத்து ஏதோ பேச வாயெடுத்தாள்.
“அம்மா தாயே நீ சண்டை போட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நான் முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லிடுறேன்… ஆதிரா அண்ணி இன்னும் வைபவ்வை முழுசா காதலிக்கல… அவங்களே இன்னும் இது காதல் தானானு குழப்பத்துல தான் இருக்காங்க உத்ரா… ” என ப்ரணவ் சொல்ல உத்ராவின் முகத்திலோ மின் விளக்குப் போட்டது போல பிராகசம்.
” ஐயோ ப்ரணவ்.. நீ எவ்வளவு சந்தோஷமான விஷயத்தை என் கிட்டே சொல்லி இருக்க தெரியுமா.. ஐயோ எனக்கு சந்தோஷ சந்தேஷமா வருதே.. இனி நான் என் ஆள் கூட எந்த தடையும் இல்லாம ஜாலியா பேசுவேனே… ” என்று உத்ரா சொல்லிவிட்டு வெட்கப்பட ப்ரணவ்வின் முகத்திலோ ஏகப்பட்ட அதிர்ச்சி.
“அடியே உத்ரா.. அப்போ நீ உண்மையை தான் சொன்னீயா? உனக்கு உண்மையாவே ஆள் இருக்காங்களா? அந்த ஆள் வைபவ் தானா? அப்போ என் ஆள் கூட நீ பேசுறேனு சொன்னது அந்த வைபவ் கூட தானே… ” என அவன் நம்ப முடியாமல் வரிசை வரிசையாக கேட்க உத்ராவின் முகத்திலோ பெரிய புன்னகை ஒட்டிக் கொண்டது.
“ஏன் ப்ரணவ் தீஞ்சி போன உன் மூஞ்சுக்கே ஆள் இருக்கும் போது எனக்கு ஆள் இருக்கக்கூடாதா? அந்த ஆள் வைபவ்வா இருக்கக்கூடாதா? இப்போ தான் வைபவ்க்கு ஒரு பெரிய கொக்கி போட்டு இருக்கிறேன் சீக்கிரமா அந்த மீன் என் வலையிலே விழுந்துடும்… ” என உத்ரா சொல்லிவிட்டுப் போக ப்ரணவ்வின் முகம் அதிர்ச்சியை சுமந்தது.
” ஐயையோ அப்போ உண்மையா அவள் வைபவ் கூட பேசிக்கிட்டு தான் இருக்காளா? நான் கூட விளையாட்டுக்கு பேசுறானு தானே நினைச்சேன்.இது எல்லாம் நல்லதுக்கே இல்லை ” என்ற எண்ணம் தோன்ற வேக வேகமாக நடந்து உத்ராவின் முன்பு இடைமறித்து நின்றான்.
” உத்ரா இதெல்லாம் சரியில்லை.. இனி வைபவ் கிட்டே பேசாதே… இது நல்லதுக்கே இல்லை.. ” என்று கண்டிப்பான குரலில் சொன்னான். ஆனால் அவளது முகத்திலோ கேலிப் புன்னகை ஒட்டிக் கொண்டது.
” ப்ரணவ் நீ வைஷாலி கிட்டே பேசும் போது நான் இப்படி நடுவுல புகுந்து பேசாதேனு தடுத்தேனா? நான் எப்படி உன் தனிப்பட்ட விஷயத்திலே தலையிடலையோ அதே மாதிரி நீயும் என் தனிப்பட்ட விஷயத்திலே தலையிடாதே… “
” ஐயோ உத்ரா வைஷாலி விஷயம் வேற.. வைபவ் விஷயம் வேற.. அதை முதலிலே புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ் உத்ரா இனி தனிப்பட்ட விஷயம் னு பிரிச்சு பிரிச்சு பேசாதே.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… “
“தனிப்பட்ட விஷயம்னு சொல்லும் போதே உனக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே… என்னை நீ தனிச்சு விடும் போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்து இருக்கும் ப்ரணவ்? “
“ஐ யம் சாரி உத்ரா.. இனி நான் அப்படி உன்னை தனியா விட மாட்டேன்.. ப்ளீஸ் இனி வைபவ் கூட பேசாதே டி.. உன்னை கெஞ்சிக் கேட்டுக்கிறேன்… “
“முடியாது டா.. இப்போ வைஷாலி உன் கிட்டே சண்டை போட்டு பேசாம இருக்கிறதாலே என் கூட ஜாலியா பேசுறே.. ஆனால் கூடிய சீக்கிரமே நீயும் வைஷாலியும் சமாதானம் ஆகிடுவீங்க.. அப்போ இந்த உத்ரா உன் கண்ணுக்கு தெரியவே மாட்டா.. வைஷாலி மட்டும் தான் தெரிவா உனக்கு… நான் மறுபடியும் அப்போ தனியாகிடுவேன் ப்ரணவ்… ப்ளீஸ் நீ இதுல தலையிடாதே.. உனக்கு ஒரு ஆள் இருக்கா மாதிரி எனக்கும் ஒரு ஆள் இருந்தா எனக்கும் எந்த தனிமையும் தெரியாது.. நான் நிம்மதியா இருப்பேன்.. அதனாலே நான் இனி வைபவ் கிட்டே பேசுவேன்.. நீ தடுக்கக்கூடாது.. ” என்றாள் உறுதியாக.
“ஐயோ உத்ரா ப்ளீஸ் இப்படி சின்ன பிள்ளை மாதிரி அடம்பிடிக்காதே… வைபவ்வை நீ காதலிக்கவேக்கூடாது… ” என்றான் இவனும் அவளைவிட உறுதியாக
“நான் ஏன் வைபவ்வைக் காதலிக்கக்கூடாது..? என்று இவள் எதிர்க் கேள்வி கேட்டாள்.
சில கணம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறியவன் பிறகு நேராக உத்ராவைப் பார்த்தான்.
“வைபவ் ஆதிராவை காதலிக்கிறான்.. அப்புறம் எப்படி உன்னை காதலிப்பான்.. உனக்கு கடைசியிலே ஏமாற்றம் தான் மிஞ்சும்.. “
“ஆனால் ஆதிரா தான் வைபவ்வை இன்னும் முழுசா காதலிக்கலயே… எனக்கு வினய் அண்ணா மேலே நம்பிக்கை இருக்கு.. அவங்க கண்டிப்பா ஆதிரா அண்ணிக்கு தன்னோட காதலை புரிய வைச்சுடுவாங்க.. கடைசியிலே வைபவ் தான் ஏமாந்து நிப்பாங்க… நான் அவங்களுக்கு ஒரு ஆறுதலா இருக்கப் போறேன்.. ” என்று சொல்லிவிட்டு உத்ரா செல்ல அவளையே கையறு நிலையில் பார்த்துக் கொண்டு இருந்தான் ப்ரணவ்.