Mazhai – 11

daisy-flower-rain-drops-25113718-3eaabd09

Mazhai – 11

அத்தியாயம் – 11

அவள்  உடையை மாற்றிவிட்டு வெளியே வரும்போது ஹாலில் அமர்ந்திருந்த முகிலனைக் கண்டு அவள் தயங்கி நிற்க,  “நீயாக சொல்லும் வரை நான் உன்னிடம் எதுவும் கேட்க மாட்டேன்” பைக் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான்.

தன்னை நெருங்கி வரும் முகிலன் சிலநொடிகளில் விலகி செல்வது மனதிற்குள் குழப்பத்தைத் தர, படிப்பில் அவளின் கவனம் சிதறியது. இன்று வகுப்பில் ஏதோ நினைவில் பதில் சொல்லாமல் நின்றவளை அத்தனை பேர் முன்னிலையில் மேம் தகாத வார்த்தைகள் சொல்லி திட்டியது மனதை வெகுவாக பாதித்தது.

அதை நினைத்து அவள் மழையில் நனைந்தபடி அழுத நேரத்தில் தான் முகிலன் அவளைப் பார்த்தது. இனிவரும் நாட்களில் இப்படி கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்ற முடிவுடன் படிப்பில் கவனத்தைத் திருப்பினாள்.

முகிலன் ஒவ்வொரு முறையும் இயல்பாக அவளிடம் பேச வரும்போது, கண்டும் காணாதும் போல விலகி செல்ல தொடங்கினாள். இதுவே தொடர்கதையாக மாறிப்போனது. நாட்கள் ரெக்கைகட்டி பறக்க தொடங்கியது.

அன்று வழக்கம்போல எழுந்து சமையல் வேலையை முடித்துவிட்டு குளிக்கலாம் என்று நினைக்கும்போது அவளது அறையில் பைப் ரிப்பேர் ஆகிவிடவே, “ஐயோ இந்த நேரத்தில் இந்த பைப் ரிப்பேர். ச்சே இப்போ என்ன செய்யறது?” என்ற சிந்தனையுடன் தொப்பென்று படுக்கையில் அமர்ந்தாள்.

சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு தன் உடையை கையில் எடுத்துக்கொண்டு மாடிக்கு சென்று முகிலனின் அறையைக் கதவைத் தட்டினாள்.

அவன் வந்து கதவைத் திறக்க, “என் அறையில் இருக்கும் பாத்ரூம் பைப் ரிப்பேர் ஆகிடுச்சு. இன்னைக்கு ஒருநாள் மட்டும் உங்க அறையில் குளிச்சுக்கவா?” தயக்கத்துடன் அவனை ஏறிட்டாள்.

இத்தனை நாளாக விலகி போனவள் தானே வந்து பேசவும், “என்னோட அறைக்குள் ஒரு பெண்ணை அனுமதிக்க மாட்டேன். இன்னைக்கு ஒருநாள் குளிக்காமல் போனால் குடிமுழுகி போகாது. அதனால் நீ தயவுசெய்து கிளம்பு” என்றதும் சுர்ரென்று கோபம் தலைக்கேறியது.

“நான் யாரோ ரோட்டில் போகின்ற பொண்ணு” என்று தொடங்கினாள்.

அதற்குள் அவளை கையமர்த்தி தடுத்து, “இந்த யெல்லோ திரெட் கட்டியதால் நீ எனக்கு பொண்டாட்டி என்று சொல்றீயா?” என்றான் எரிச்சலோடு.

அவள் பதில் சொல்லாமல் அவனை முறைக்க, “இன்னைக்கு உனக்கொரு தேவை என்றதும் தானாக வந்து பேசற. எத்தனை நாள் உன்னிடம் இயல்பாக பேச வந்திருப்பேன். ஒருநாள் முகம் தந்து பேசியிருக்கிற? ஆமா நான் என்ன அப்படி செஞ்சிட்டேன்?” என்று காரணம் புரியாமல் அவளிடம் நேரடியாக கேட்டான்.

அவன் பக்கமிருக்கும் நியாயம் புரிய, “நீங்க எதுவும் செய்யல. அன்னைக்கு கிளாஸில் அம்மா நினைவில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்கவும், கணவன் கூட கனவில் டூயட் பாடும் எண்ணம் இருந்தால் வீட்டிலேயே இருக்க வேண்டியது தானே என்று என்னை மேம் ரொம்ப திட்டிடாங்க.” தலையைக் குனிந்து விளக்கம் கொடுத்தாள்.

அவள் சொல்வதைக் காதில் வாங்காதது போன்ற பாவனையில், “இந்த விளக்கம் எனக்கு தேவையில்ல. நாளைக்கே நீ இந்த அறையில் குளிச்சிட்டு உடைமாற்றும் போது நான் வந்தால் அதுக்கும் என்னை குத்தம் சொல்லுவே” அவன்விட்ட இடத்தில் இருந்து தொடங்க கையெடுத்து கும்பிட்டாள்.

“மனுநீதி சோழா உன் ஸ்பீச்சை இத்தோடு நிப்பாட்டு. நான் இன்னைக்கு காலேஜ் போகாமல் இருந்தால் ஒண்ணும் குடிமுழுகி போகாது. நான் தெரியாதனமாக உதவிகேட்டு வந்துட்டேன் என்னை மன்னிச்சுக்கோ” என்றவள் விறுவிறுவென்று படியிறங்கி சென்றாள்.

வெகுநாட்களுக்கு பிறகு அவளை இயல்பாக பேச வைத்த சந்தோஷத்தில், “ஹே இதை சாக்காக வைத்து காலேஜிற்கு லீவ் போடாதே. அப்புறம் அதுக்கும் உன் மேம் எக்குத்தப்பா நினைச்சுக்க போறாங்க” என்றான் சத்தமாகவே.

அவளது அறைக்கு சென்று மறைய, இரண்டு படிகளாக வேகமாக இறங்கிய முகிலன், “ஹே இம்சை முதலில் குளிச்சிட்டு கிளம்பு. நானே உன்னை காலேஜ் கொண்டுபோய் விடுறேன்” என்று அறையின் வாசலில் நின்றபடியே கூறினான்.

அவள் துணியைத் எடுத்து வைத்துவிட்டு, “இல்ல இன்னைக்கு நான் காலேஜ் போகல. இதை சரி செய்ய யாராவது கிடைப்பாங்களா என்று விசாரிக்க போறேன்” சிற்பிகா அறையைவிட்டு வெளியே வர அவளின் வழியை மறித்து நின்றான்.

“இப்போ உங்களுக்கு என்னதாங்க பிரச்சனை?”  என்றாள் சலிப்புடன்.

அவளை இழுத்து சுவற்றின் மீது சாய்த்து நகர விடாமல் இரு கரங்களால் அரண் அமைத்தான். ஏற்கனவே ஒரு முறை அவன் செய்த செயல் கண்முன்னே வந்து போக, கணவனின் பார்வை கண்டு உள்ளங்கை சில்லிட்டுப் போனது.

“நீங்க முதலில் நகருங்க”முடிந்தளவு தன் தடுமாற்றத்தை உள்ளுக்குள் மறைத்துகொண்டே எச்சரித்தாள்.

அவளின் பளிங்கு முகத்தில் பார்வையைப் பதித்து, “நான் பார்த்த பெண்களில் நீ ரொம்பவே வித்தியாசமாக இருக்கிற சிபி. அதுதான் என்னை உன்பக்கம் ஈர்க்கிறது. அன்னைக்கு மழையில் நனைந்த அன்று உன் கண்ணில் கண்ணீரைப் பார்த்து எந்தளவுக்கு மனசு வலிச்சுது தெரியுமா?” அவளின் கண்களை பார்த்தபடி கிசுகிசுக்க, அவளுக்குள் ஏதோ தடம் புரண்டது.

இருவருக்கும் இடையே இடைவெளி வெகுவாக குறைந்திருக்க, “உன்னைவிட்டு நிரந்தரமாக பிரியும் நாள் வந்தால் என் நிலையை யோசிக்கவே முடியல. அந்தளவுக்கு இந்த இம்சையை எனக்கு பிடிச்சிருக்கு” என்றபடி அவளின் இதழை நோக்கி குனிந்தான்.

அவனது காதலை நாடகம் என்று நினைத்த சிற்பிகா, “இந்த சினிமா வசனம் பேசி என்னை நெருங்கும் வேலையெல்லாம் வேண்டாம். இன்னும் ஆறுமாதம் அப்புறம் உங்களுக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு நான் விலகி போயிட்டே இருப்பேன்” முகத்தில் அடித்தாற்போல பேசிட, சட்டென்று அவளைவிட்டு  விலகினான்.

தன்னை அவள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கும் போது நெஞ்சம் எங்கும் வலி பரவியது. அதே நேரத்தில் தான் காயப்படுத்தி பேசியதற்கு நேரம் கிடைக்கும்போது தாக்குகிறாள் என்று உணர்ந்து கண்களில் வலியுடன் அவளை ஏறிட்டான்.

சட்டென்று முகபாவனையை மாற்றி, “ஆமா அதைதான் நானும் எதிர்பார்க்கிறேன். உன்னிடம் இப்படி காதல் வசனம் பேசி பொய்யாக நடிக்க வேண்டிய அவசியம் வராது இல்ல. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதற்குள் டைவர்ஸ் பேப்பரில் சைன் பண்ணி கொடுத்துவிட்டு கிளம்பும் வழியைப் பாரு” இரண்டிரண்டு படிகளாக தாவி மாடியேறிச் சென்றான்.

அவள் சிலைபோல சமைந்து நின்றிருக்க, சிறிதுநேரத்தில் தயாராகி வந்த முகிலன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். இங்கே சிற்பிகாவிடம் சண்டையிட்டு முகிலனுக்கு வேலைக்கு செல்ல விருப்பம் இல்லை. ஆனால் வேண்டாவெறுப்பாக அலுவலகம் சென்றான்.

அவன் வீட்டில் இருந்து கிளம்பியதும், “இன்னைக்கு கிளாசிற்கு லீவ் சொல்லிட்டு வீட்டுக்கு வா” புவனாவிடம் காரணத்தைச் சொல்லாமல் அழைப்பை துண்டித்தாள்.

திடீரென்று அவள் வீட்டிற்கு அழைக்கவும் மனம் படபடக்க, ‘இன்னைக்கு இவளுக்கு என்னாச்சு?’ என்ற குழப்பத்துடன் சிறிதுநேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

அவளை அழைத்துக்கொண்டு ஒரு முக்கியமான இடத்திற்கு சென்றவள் வெற்றிகரமாக வேலையை முடித்துவிட்டு கிளம்ப, “ஏய் இது விளையாட்டு இல்ல. ஒருமுறை செய்யும் செயலை சரி செய்ய நமக்கு இன்றொரு வாய்ப்பு கிடைக்காது சிற்பிகா எதுவாக இருந்தாலும் நன்றாக யோசித்து முடிவெடு” என்று அவளை எச்சரித்தாள் புவனா.

“இல்லடி என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வேண்டாம். இந்த முடிவை நான் ரொம்ப நன்றாக யோசித்து தான் எடுத்து இருக்கேன். ஒவ்வொரு நாளும் என்னால் அவருக்கு ஏதோவொரு கஷ்டம். நான் விலகி போயிட்டாலே எல்லாம் சரியாகிடும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு” என்று அவளின் வாயை அடைத்துவிட்டாள்.

அவனின் திறமையைக் கண்டு அவர்கள் அடுத்து செய்ய போகும் ப்ராஜெக்ட் ஒன்றில் முடிக்க அவனை வெளிநாடு அனுப்புவதாக முடிவு செய்யபட்டது. அவனைவிட திறமையான நபர்கள் அதிகப்பேர் இருந்தபோது அவனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது நினைத்து சந்தோசப்பட அவனால் முடியவில்லை.

ஆயிரம் சண்டை போட்டாலும் அவளது அருகாமைகாக உள்ளம் எங்கும்போது அவளை பிரிந்து அவ்வளவு தூரம் செல்லவே முடியாது என்ற நிலையில் இருந்தது அவனது மனம். இந்த விஷயம் அறிந்த முகிலன் மனம் நிலையில்லாமல் தவிக்க, “ஸார் எனக்கு பதிலாக மற்றவர்களை அனுப்ப முடியுமா?” என்றான்.

அவனது தவிப்பை உணர்ந்து சிரித்தவர்,“இல்ல முகிலன் நீங்க தான் இதற்கு சரியான நபர். உங்களோட திறமையைப் பார்த்துதானே உங்களைத் தேர்ந்தெடுத்தே.. சரி நீங்க நன்றாக யோசித்துவிட்டு நாளைக்கு முடிவை சொல்லுங்க” என்று அவனை அனுப்பினர்.

ஏற்கனவே சிற்பிகா தன்னைவிட்டு விலகி செல்வதை தடுக்க முடியவில்லை என்ற கவலையோடு இருக்கின்ற நேரத்தில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையவே அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் வீடு வந்து சேர்ந்தான்.

மாலை வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய சிற்பிகா, “என்ன இன்னைக்கு வேலைக்கு போகவில்லையா?” என்று விசாரித்தாள்.

அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல், “உன்னோடு கொஞ்சம் பேசணும்” என்றவுடன் சிறிதுநேர யோசனைக்குப் பிறகு அறைக்கு சென்று உடையை மாற்றி, முகம் அலம்பிவிட்டு அவன் எதிரே வந்து அமர்ந்தாள்.

அதுவரை வெளிநாடு செல்வதைப் பற்றி யோசிக்காதவன், “நான் வெளிநாடு போவதாக முடிவெடுத்து இருக்கேன். நீ என்ன நினைக்கிற என்று சொல்லு” விஷயத்தை போட்டு உடைத்தான்.

அதில் இருந்தே தான் எடுத்திருக்கும் முடிவு சரியென்று தோன்றிவிட, பிடிக்காத திருமணத்தில் அவனைக் கட்டிவைத்து வேடிக்கை பார்ப்பது சரியில்லை என்று உணர்ந்து எழுந்து அறைக்குச் சென்றாள்.

கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து, “உங்க சுதந்திரத்தில் தலையிட எனக்கு எந்த உரிமையும் இல்ல. அது மட்டுமின்றி என்றாவது ஒருநாள் பிரியபோகும் நமக்கு இது ஒரு வாய்ப்பு என்று சொல்லலாம்”  கையெழுத்து போட்ட டைவர்ஸ் பேப்பரை அவனிடம் நீட்டினாள்.

விவாகரத்து பத்திரம் அவன் நினைத்து போலவே கையில் இருக்க அவனால் சந்தோசப்பட முடியவில்லை. தன்னைவிட்டு நிரந்தரமாக விலக நினைக்கும் அவளை மனம் பாரமான போதும், அதை தன்னுள் மறைந்துகொண்டு நிமிர்ந்தான்.

அவனது முகம் உணர்ச்சிகள் துணிகொண்டு துடைதார்போல இருக்க, “நானாக பேசும் முன்பே நீயாக புரிந்து கொண்டது மனசுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு” எழுந்து அறைக்கு செல்ல நினைக்க, “ஒரு நிமிஷம்” அவனைத் தடுத்தாள் சிற்பிகா.

அவன் திரும்பாமல் நின்றிருக்க, “நான் தனியாக தங்குவதற்கு வீடு வாடகைக்கு எடுத்து இருக்கேன். நீங்க கிளம்புவதற்கு முன்பு என்னோட பொருள் எல்லாம் சிப்ட் பண்ணிருவேன்” என்றாள்.

அனைத்து முடிவுகளும் முன்னரே எடுக்கபட்டு இருப்பதை நினைத்து பெருமூச்சுடன், “வீடு எந்த ஏரியா?” என்று மட்டும் விசாரித்தான்.

அவள் காலணியின் பெயரைச் சொல்லவே, “நல்ல ஏரியா தான்” என்று சொல்லிவிட்டு மாடியேறிச் சென்றான்.

மறுநாள் அவன் வெளிநாடு போவதாக ஒப்புக்கொள்ள அடுத்தடுத்து அதற்கு தேவையான ஏற்பாடுகளை அவனொரு பக்கம் கவனிக்க, முடிந்தளவு கல்லூரிக்கு விடுமுறை எடுக்காமல் பொருட்களை இடம் மாற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தாள் சிற்பிகா.

இருவருக்கும் நடுவே பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக குறைந்து போனது. அவன் வெளிநாடு செல்லும் விஷயம் அறிந்து சதாசிவம் – மகேஸ்வரி, நிரஞ்சன் – மிருதுளா நால்வரும் முதல்நாளே வந்திருந்ததால் வேறு வழியின்றி முகிலனின் அறையில் தங்கினாள்.

அவனை வெளிநாடு அனுப்புவதில் யாருக்கும் விருப்பம் இல்லை என்றபோது, கணவன் – மனைவி இடையே நடக்கும் பனிப்போர் தானாக முடிவிற்கு வரும் என்ற நம்பிக்கையுடன் விலகி நின்றனர். அன்றிரவு உணவை முடித்துவிட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தனர்.

ஏனோ மனம் முழுவதும் பாரமாக உணர்ந்த சிற்பிகா பால்கனியில் நின்று இருண்ட வானத்தை வெறித்தாள். அவளின் அருகே போடபட்டிருந்த சோபாவில் அமர்ந்த முகிலன் சிகரெட்டை கையில் எடுத்தான். இத்தனை நாளாக இல்லாமல் மனம் அவளையே அதிகம் தேடியது.

அதைத் தடுக்கும் வழி தெரியாமல் ஆழ மூச்சு இழுத்து சிகரெட்டை புகைத்தான். அந்த அறையெங்கும் அமைதி நிலவியது. வெகுநேரம் சென்று அறைக்குள் நுழைந்த சிற்பிகாவின் பார்வை அவனின் மீது படிந்து மீண்டது. அதை உணர்ந்த முகிலன் எழுந்து சென்று படுக்கையில் படுக்க தனக்கொரு தலையணையை எடுத்து தரையில் போட்டு படுத்தாள்.

சிறிதுநேரத்தில் அவள் உறங்கிவிடவே, சரியாக உறக்கம் வராத காரணத்தால் பால்கனியில் நின்றிருந்தான். அவன் தூங்கலாம் என்று அறைக்குள் நுழைய திடீரென்று கண்ட கனவின் தாக்கத்தில் முகம் குப்பென்று வியர்த்துவிட பதறியடித்து கண்விழித்து எழுந்து அமர்ந்தாள்.

அவளது பதட்டம் உணர்ந்து, “இந்த தண்ணீரைக் கொஞ்சம் குடி” என்றவன் வாட்டர் கேனை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அதை வாங்கி பருகிய சிற்பிகா கடிகாரத்தை பார்த்தவள், “இன்னும் தூங்காமல் என்ன செய்யறீங்க?” என்றாள்.

“நீ அதையெல்லாம் கேட்காதே” அவன் அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு படுக்கையில் படுத்து உறங்கிவிட, இப்போது உறக்கத்தை தொலைத்து விழித்து இருப்பது அவளது முறையானது.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிய ஒரு பரபரப்புடன் கிளம்பி அனைவரும் ஹாலில் காத்திருந்தனர். முகிலன் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்க, புடவையில் தயாராகி வந்தாள் சிற்பிகா.

நிரஞ்சன் வந்து பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேற, “உங்களோட பிரச்சனைகள் எல்லாமே இன்றோடு முடியுது. இனிமேல் நீங்க சந்தோஷமாக இருக்கணும்” என்று அவனிடம் ஒரு கிப்ட்டை கொடுத்து விலகிசெல்ல நினைத்தாள்.

அதற்குள் அவளின் கைப்பிடித்து தடுத்தவனை அவள் கேள்வியாக நோக்கினாள். சட்டென்று அவளை இழுத்து இறுக்கியணைத்து முகமெங்கும் இதழ்பதித்து, இறுதியாக அவளின் இதழில் வந்து இளைபாறினான்.

சட்டென்று தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்து விலகி முகிலன், “இந்த செயலுக்கு உன்னிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்” அவனை திகைப்புடன் ஏறிட்ட சிற்பிகாவை கண்டுகொள்ளாமல் அறையைவிட்டு வெளியேறினான்.

அனைவரும் சேர்ந்து அவனைக் கண்ணீரோடு வழியனுப்ப, ஏதோ கடமை முடிந்தது என்ற நிலையில் விறைப்பாக நின்றவளின் மீது கோபம் வந்தது.

அதே நேரத்தில் அவளருகே வந்து, “எந்தவொரு காரணத்திற்காகவும் படிப்பை பாதியில் நிறுத்தாதே. உனக்கு பக்கபலமாக இருக்க போவது அது மட்டும்தான்” என்றவன் விலகிச் செல்ல, அவனது உருவம் கண்ணைவிட்டு மறையும் வரை கற்சிலைபோல நின்றிருந்தாள் சிற்பிகா.

அதற்குமேல் தாக்குபிடிக்க முடியாமல் அழுகையை அடக்கியபடி ஏர்போர்ட் விட்டு வெளியே வர சடசடவென்று மழை பொழிய, அவனை நினைத்து கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. யார் சொல்வதையும் காதில் வாங்காமல் கொட்டும் மழையில் நனைந்தபடி வீடு நோக்கி நடந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!