காதல் சதிராட்டம் – 17
காதல் சதிராட்டம் – 17
பறவையினங்கள் தன் கூட்டில் இருந்து விடுபட்டு வானில் பறந்துக் கொண்டு இருப்பதை தோட்டத்தில் நின்றபடி கண்களில் சிலிர்ப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான் வினய்.
ஜன்னல் திரையை விலக்கிய ஆதிராவின் முகத்தை செங்கதிரோனின் கதிர்கள் முழுங்கிக் கொண்டு இருந்தது. குளிர்காற்று உடலை மெதுவாக வருட வானத்தைப் பார்த்தாள்.
அங்கே பறவையினங்கள் கூட்டம் கூட்டமாக வானத்தை அலங்கரித்துக் கொண்டது.
புன்னகையுடன் அந்த வானத்தைப் பார்த்தவள் கீழே பார்க்க அங்கே வினய்யும் வானத்தைப் பார்த்தபடி பறவைக்கூட்டங்களை ரசித்துக் கொண்டு இருந்தான்.
கதிரவனின் பொற்கதிர்கள் அவன் முகத்தினில் விழ அமைதியான அவனது முகம் ஜொலித்தது.
அவனது முகத்தை ஒரு கணம் தன்னை மறந்து பார்த்தவளது மனமோ சட்டென எரிச்சலுற்றது.
எந்த கலங்கமும் இல்லாமல் இருக்கும் அவனது இந்த முகத்தைப் பார்த்து நம்பிவிடாதே ஆதிரா. அவனது உள்ளத்தின் கலங்கத்தையும் அழுக்கையும் அறிந்தவள் நீ. இப்படி இந்த முகத்தைப் பார்த்து நம்பிவிடாதே என்று அவள் தன் மனதிற்கு சமாதானம் செய்து கொண்டு இருந்த நேரம் வினய் திடீரென திரும்பி பின்னால் பார்த்தான்.
மேலே மாடியில் ஆதிரா நின்று கொண்டு அவனைப் பார்ப்பதைக் கண்டதும் இதழ்களில் தானாக புன்னகை அரும்பியது.
அவனது புன்னகையைக் கண்டதும் தானாக தன் இதழ்களில் மலர்ந்த புன்னகையை அவனுக்கு தெரியாமல் வேகமாக முழுங்கிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
“ஆதிரா உனக்கு இந்த பறவைக்கூட்டத்தை பார்த்ததும் ஏதாவது நியாபகத்துக்கு வருதா?” என்று ஆர்வமாக அவளைப் பார்த்துக் கேட்டான்.
அவளோ முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் அவனைப் பார்த்தாள்.
” எனக்கு எதுவும் நியாபகம் இல்லை வினய்.. அதெல்லாம் நான் வாழ்க்கையிலே இருந்து அழிச்ச பக்கங்கள்… திரும்ப அதை நினைக்கவோ யோசிக்கவோ எனக்கு விருப்பம் இல்லை… ” என்று வேக வேகமாக சொல்லிவிட்டு ஜன்னல் திரைச்சீலையை வேகமாக மூடிவிட்டு தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
அவளிடம் இருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. எப்போதோ எங்கயோ உட்தங்கிப் போன நினைவுகள் எல்லாம் மீண்டும் எழும்பப் பார்த்தது.
எப்படியாவது அந்த நினைவுகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக தன்னை பரபரப்பாக வைத்துக் கொள்ள முயற்சித்தாள்.
எந்த வேலையும் இல்லாமல் இருந்தால் தான் கண்ட சிந்தனைகள் மனதை குடையும் ஆதலால் ஏதாவது வேலை கிடைக்குமா என்று சுற்றி முற்றி பார்த்தாள்.
சுவற்றின் ஓரத்தில் நேற்று அவள் கிளம்புவதற்காக எல்லா பொருட்களையும் எடுத்த போட்ட பை இருந்தது. வேகமாக அந்த பையை எடுத்து எல்லா
பொருட்களையும் எடுத்து மீண்டும் தன் அலமாரியில் அடுக்கி வைக்கத் துவங்கினாள்.
அலமாரியில் துணியை வைத்துக் கொண்டு இருக்கும் போது அதன் மூலையில் இருந்து திடீரென்று இருந்து ஏதோ கீழே விழுந்தது… குனிந்துப் பார்த்தாள்…
கையில் கட்டும் ஒரு bracelet தரையின் மீது கிடந்தது. அந்த bracelet ஐ கண்டதும் அதுவரை யோசிக்கக்கூடாது என்று தன் மனதிற்கு விதித்த கட்டுப்பாடுகள் எல்லாம் ஒரு நொடியில் காணாமல் போனது. தன்னையும் அறியாமல் கைகளில் ஒருவித நடுக்கம் பரவியது.
நடுங்கிய விரல்களால் அந்த bracelet ஐ எடுத்தவள்
உள்ளமும் மெதுவாக நடுங்க ஆரம்பித்தது.
காலவோட்டத்தில் கரைந்துப் போன நினைவுகள் எல்லாம் மீண்டும் அவள் மனக்கரையை உடைக்கத் தொடங்கியது.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அந்த கல்லூரியை தன் நிழலால் விழுங்கி இருந்த அந்த பெரிய மரத்தின் கீழே கைகளில் கன்னத்தை தாங்கியபடி அமர்ந்து இருந்தாள் ஆதிரா.
அவளின் எதிரே வினய்
” ஆதிரா இங்கே பாரு… உன்னாலே முடியும்.. எதுக்கு இப்படி தயங்கிற??இந்த தயக்கத்தாலே உனக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பை இழந்துடக்கூடாதுனு தான் நாங்க இவ்வளவு தூரம் பேசிக்கிட்டு இருக்கோம்.. ப்ளீஸ் ஆதிரா நீயும் ஐஸ்வர்யா கூட சேர்ந்து இந்த singing competition ல கலந்துக்கோ… ” என வினய் அவளிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தான்.
“இல்லை வினய்.. இது நல்ல வாய்ப்பு தான் எனக்கு புரியுது… ஆனால் என்னாலே முடியுமானு எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு… ப்ளீஸ் எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்களேன்.. நான் யோசிச்சு சொல்றேன்.. ” என்று ஆதிரா கேட்க வினய்யிற்கு அவள் பயம் புரிந்தது.
இத்தனை நாள் வெறும் கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடிவிட்டு திடீரென்று ரியலிட்டி ஷோக்களில் பாட சொன்னால் கண்டிப்பாக தயக்கமும் பயமும் வரத் தான் செய்யும். இந்த பயத்தில் இருந்து விடுப்பட அவளால் மட்டுமே முடியும். அவள் தன் மனதிற்கு தைரியம் சொல்லி தயார்ப்படுத்த இரண்டு நாட்கள் தேவைப்படுகிறது என்று புரிந்தது அவனுக்கு. ஆதலால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
ஆனால் ஐஸ்வர்யாவோ விடவில்லை.
அவளுக்கு கிடைக்கும் இந்த பெரிய வாய்ப்பை எதற்கு அவள் தவிர்க்கிறாள் என்ற ஆதங்கம் தான் அவளுக்கு இருந்தது.
“ஆதி மா.. இங்கே பாரு… இது நல்ல சான்ஸ்டா.. நீ எதுவும் பயப்படாதே தயங்காதே… நானும் தானே உன் கூட வரப் போறேன்.. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் அந்தப் போட்டியிலே கலந்துக்க போறோம்… அதனாலே பயப்படாம சரினு சொல்லு ஆதிரா… நீ கலந்துக்கலனா அப்புறம் நானும் கலந்துக்க மாட்டேன் சொல்லிட்டேன்…. அதனாலே ப்ளீஸ் ஓகே சொல்லு ஆதிரா… ” என்று அவள் தொடர்ந்து அவளைக் கட்டாயப்படுத்த வினய் இடை மறித்தான்.
“ஐஸ்வர்யா அவளை இதுக்கு மேலே கட்டாயப்படுத்த வேண்டாம்… அவளே நல்ல முடிவா எடுப்பா.. ” என்று சொல்ல அவளுக்குள் மெல்லியதாக கோபம் தலைக்காட்டியது.
“அவளோட நல்லதுக்கு தானே சொல்றேன்… அதைப் போய் கட்டாயப்படுத்துறேனு சொல்ற… ”
” இல்லை ஐஸ்வர்யா.. சொல்ல வேண்டியது நம்ம கடமை.. இனி முடிவு ஆதிரா கையிலே தான்…
அதனாலே நாம கட்டாயப்படுத்த வேண்டாம்… அவளே இரண்டு நாள் கழிச்சு வந்து முடிவை சொல்லுவா… ” என்று வினய் பேசிவிட்டு “சொல்வாய் தானே” என்ற தொனியில் அவளைப் பார்த்தான்.
“கண்டிப்பா இரண்டு நாளுக்குள்ளே முடிவு சொல்லுவேன்… ப்ளீஸ் ஐஸ்வர்யா நீ உன் பேரை இப்போவே கொடு… நான் இரண்டு நாள் கழிச்சு கொடுக்கலாமா வேண்டாமானு யோசிச்சு சொல்றேன்… ” என்று ஆதிரா சொல்ல ஐஸ்வர்யாவோ மனதே இல்லாமல் சரியென்று பெயருக்கு தலையாட்டிவிட்டு சென்றாள்.
” ஹே ஐஸ் நில்லு டி… என் நோட்புக் உன் பேக்ல தான் இருக்கு… அந்த நோட் இல்லாம போனா அந்த வாத்தியார் என்னை கிழி கிழினு கிழிப்பார்.. ” என்று கத்தியபடி ஐஸ்வர்யாவின் பின்னால் ஓடினான் விமல்.
“அவர் உன்னைக் கிழிக்கிறது என்ன உனக்கு புதுசா??… ” என்று சலித்தபடி தன் கைப்பையினில் இருந்து புத்தகத்தை எடுத்து அவன் கையில் திணித்துவிட்டு மீண்டும் வேக வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
அவளது முகத்தில் வருத்தமும் கோபமும் விமலை மீண்டும் அவள் பின்னால் ஓட வைத்தது.
“ஆமாம் இப்போ எதுக்கு முகத்தை இப்படி தூக்கி வைச்சுக்கிட்டு இருக்க… பேர்ல மட்டும் தான் ஐஸ் இருக்கு ஆனால் எப்போ பார்த்தாலும் சூடாவே சுத்திக்கிட்டு இருக்க… ”
“வினய் பண்றதைப் பார்த்தா எனக்கு ரொம்ப கோவம் வருது விமல்… நான் ஆதிராவோட நல்லதுக்காக தானே சொன்னேன்.. ஆனால் வினய்யோ நான் என்னமோ அவளை வற்புறுத்துறா மாதிரி பேசிக்கிட்டு இருக்கான்…. அவளுக்கு சப்போர்ட் பண்றதுக்காக என்னை எப்போ பார்த்தாலும் வினய் மட்டம் தட்டுறா மாதிரி இருக்கு… எனக்கு ஆதிரா மேலேலாம் கோபம் இல்லை… அந்த வினய் மேலே மட்டும் தான் கோபம்… அவன் இப்போ எல்லாம் ரொம்ப பண்றான் எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை விமல்… நம்ம கிட்டே இப்போ எல்லாம் அவன் சரியாவே பேசுறது இல்லை…”
” ஐயோ ஐஸ் கொஞ்சம் அமைதியாகு…இப்படி பைத்தியம் மாதிரி பேசிக்கிட்டு இருக்காதே… அவன் எப்பவும் போல தான் பேசிக்கிட்டு இருக்கான்… உனக்கு தான் அது புரிய மாட்டேங்குது.. இதே மாதிரி தானே நான் கூட நம்ம band ல சேர மாட்டேன் எனக்கு பயமா இருக்குனு அடம் பிடிச்சுட்டு இருந்தேன்… அப்போ கூட நீ என்னை வர சொல்லி கட்டாயப்படுத்துன.. ஆனால் வினய் என்னை கட்டாயப்படுத்தல.. என் முடிவை என்னையே எடுக்க சொன்னான்… அதேப் போல தான் இப்போ ஆதிரா விஷயத்திலேயும் பண்றான்.. ” என்று விமல் சொல்ல ஐஸ்வர்யாவுக்கும் புரிந்துவிட்டது.
“அட ஆமாம் விமல் கரெக்ட் தான்… வினய் மாறவே இல்லை. நான் தான் லைட்டா கொஞ்சம் மாறிட்டேனு நினைக்கிறேன். இப்போலாம் சட்டு சட்டுனு கோபம் வந்துடுது விமல்… ஏனோ தெரியல வினய் ஆதிரா மேலே எடுத்துக்கற அக்கறை பார்த்தா எனக்கு கொஞ்சம் கோபம் வருது… அவன் மட்டும் தான் ஆதிராவைப் பார்த்துக்கணும்னு நினைக்கிறான்…. நாம எல்லாம் கூட அவளை பார்த்துக்க இருக்கோம்னு ஏன் புரியல அவனுக்கு… ” என்றாள் வருத்தம் நிறைந்த குரலில்.
” ஐஸ் என்னா ஐஸ் நீ.. உனக்கு இன்னுமா புரியல… அவன் எப்பவுமே திறமை ஒளிஞ்சு இருக்கிற இடத்துல அவங்களுக்கு துணையா நிற்பான்.. அவங்களுக்குள்ளே இருக்கிற முழுத்திறமையை வெளிக் கொண்டு வர வரைக்கும் அவன் கொஞ்சம் கூட அவங்களை விட்டு நகர மாட்டான்… உன்னையும் என்னையும் அப்படி தானே அவன் பண்ணான்… எனக்கு எல்லாத்தையும் கத்துக் கொடுக்கிற வரைக்கும் உன்னை என் பக்கத்துலயே அவன் நெருங்க விடல… அதே மாதிரி நீ எல்லாத்தையும் கத்துக்கிற வரைக்கும் என்னை உன் பக்கத்துல என்னை நெருங்க விடல… இப்போ அதே மாதிரி தான் ஆதிரா பக்கத்துல நம்மளை நெருங்க விட மாட்டேங்குறான்… ” என விமல் நீண்டதொரு விளக்கம் தர ஐஸ்வர்யாவின் உள்ளம் தெளிந்தது.
அதுவரை முகத்தில் சூழ்ந்து இருந்த குழப்பம் எல்லாம் விலகி முகம் தெளிவானது.
“விமல் ஐயோ நட்பே… நீ என் நண்பனா கிடைக்க நான் கொடுத்து வைச்சு இருக்கணும்டா.. ஒவ்வொரு வாட்டி குழப்பத்துல இருக்கும் போதும் என்னை சரி பண்ணிடுற.. ரொம்ப தேங்க்ஸ் விமல்…
நான் ஏன் எப்பவும் கோவப்பட்டு கத்திட்டு அதுக்கு அப்புறம் தப்பு பண்ணிட்டோம்னு லேட்டா யோசிக்கிறேனு எனக்கு புரியவே மாட்டேங்குதுடா.. “
” உன் டிசைன் அப்படி ஐஸ்… நீ கவலைப்படாதே… உன்னை சரிப்பண்ண இந்த விமல் எப்பவும் உன் கூடவே இருப்பேன்… அப்புறம் மேடம் இப்போ நீங்க உத்தரவு கொடுத்தீங்கனா நான் அப்படியே க்ளாஸ்க்கு போவேன்.. ” என்றான் பாசாங்கான பணிவு காட்டி.
“போய்த் தொலைடா… ” என்று புன்னகையுடன் அனுமதி கொடுத்தாள் ஐஸ்வர்யா.
அவனும் சிரிப்புடன் அவளிடம் இருந்து விடைப்பெற்று தன் வகுப்பறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
கைகளில் கன்னத்தை தாங்கியபடி வானத்தை பத்து நிமிடத்திற்கும் மேலாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா.
(பின்குறிப்பு: பலத்த யோசனையில் இருக்கிறாளாம்…) வினய்யோ ஆதிராவின் முகத்தையே குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஆனால் அவளது நிலையில் சிறிதளவும் மாற்றம் இல்லாமல் வானத்தையே பார்த்துக் கொண்டு இருப்பதைக் கண்டதும் அவனது பொறுமை இழந்தது.
“ஐயோ ஆதிரா.. போதும்.. இப்படியே வானத்தையே வெறிச்சு பார்த்துக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்… நீ தீவிரமா யோசிக்கிறேனு எனக்குப் புரியுது… ஆனால் இப்படி ஒரே நாளிலே எல்லாத்தையும் யோசிச்சு முடிக்கணும்னு அவசியம் இல்லை.. டைம் எடுத்து யோசி மா..” என்று அவன் சொன்னது காதிலேயே விழாதபடி அமர்ந்துக் கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தவளின் முகத்திலோ சிறியதாக மாற்றம்.
அவள் உதட்டோடு சேர்த்து கண்களும் சேர்ந்து புன்னகைத்துக் கொண்டு இருந்தது.
அதைக் கண்ட வினய்யின் கண்களும் சட்டென்று வானத்தை நோக்க அங்கே நீர்ப் பறவைக் கூட்டம் வானத்தில் தன் சிறகுகளைப் பரப்பி வானவெளியை அலங்கரித்துக் கொண்டு இருந்தது.
ஒரு சமயம் பார்க்கும் போது புலி வடிவில் பறந்த அந்த பறவைக்கூட்டம் இன்னொரு சமயத்தில் வேடன் எய்த வில்லில் இருந்த புறப்பட்ட அம்பின் வடிவில் பறந்துக் கொண்டு இருந்தது.
“வினய் அந்த பறவைக்கூட்டம் எவ்வளவு அழகா இருக்கு இல்லை.. ” என்று ஆதிரா புன்னகையுடன் கேட்க வினய்யும் முகத்தில் பூத்த புன்னகையோடு ஆமோதித்தான்.
“எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை வினய்… இந்த பறவைக்கூட்டத்திற்கு பின்னாடியே போய் அது எங்கே போய் கூடு அடையுதுனு பார்க்கணும்… ” என்று ஆதிரா சொல்ல அதைக் கேட்ட வினய்யோ சட்டென்று அவள் கையை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு வேக வேகமா இழுத்துச் சென்றான்.
ஆதிராவோ எதுவும் புரியாமல் ” என்ன ஆச்சு வினய்… எங்கே என்னை கூட்டிட்டு போறீங்க.. ” என்று கேட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் வினய் அவளை அவன் பைக் இருக்கும் இடத்திற்கு கூட்டி வந்துவிட்டான்.
” ஆதிரா டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரமா ஏறி உட்காரு.. ” என்றான் பரபரப்பாக.
“நாம எங்கே போகப் போகிறோம்.. ” என்றாள் அவள் கேள்வியாக.
“உன் ஆசையை நிறைவேத்த போறோம்.. ” என்று அவன் சொல்லிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்ய ஆதிரா மறுக்காமல் ஏறி அமர்ந்தாள்.
உறுமிக் கொண்டு கிளம்பியது வினய்யின் பைக்.
வானத்தில் பறந்துக் கொண்டு இருந்த பறவையை இவர்கள் தரையினில் தொடர்ந்துக் கொண்டு இருந்தனர்.
ஆதிராவிற்கோ அந்த பறவைக்கூட்டங்களோடு சேர்ந்து தானும் பறப்பதைப் போல ஒரு உணர்வு.
ஆளரவமற்ற அந்த சாலையில் எந்த பயமும் இல்லாமல் கைகளை சிறகுப் போல் விரித்து அவளும் பறவைக்கூட்டத்தோடு பறப்பதைப் போல கற்பனை செய்துக் கொண்டாள்.
அந்த பறவைக்கூட்டங்கள் சில சில கூட்டங்களாக பிரிந்து இறுதியில் ஒரு சிறிய கூட்டம் மட்டும் கடைசியாக ஒரு குளத்திற்கு வந்து இளைப்பாற ஒதுங்கியது.
வினய் பைக்கை நிறுத்த ஆதிரா வேகமாக இறங்கி வந்து அந்த பறவைக்கூட்டங்களை அருகினில் சென்று ரசித்தாள்.
தண்ணீரில் படகைப் போல தத்தளித்தபடி இருக்கும் அந்த பறவைக்கூட்டத்தை விழியகலாது பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அந்த பறவைக்கூட்டங்களையே சந்தோஷமாக பார்த்துக் கொண்டு இருந்த அவளது முகம்
திடீரென்று சுணங்கியது.
அவளது திடீர் சோகத்தை வினய் கவனித்து கொண்டு தான் இருந்தான். அருகில் வந்து அவள் முகத்தை கூர்மையாகப் பார்த்தபடி
” என்ன ஆச்சு ஆதிரா? ஏன் திடீர்னு சோகமாகிட்டே?” என்று கேட்டான்.
“இல்லை வினய் இந்த பறவைங்க எங்க போய் கூடு அடையுதுனு பார்க்கணும்னு தான் ஆசைப்பட்டேன்.. ஆனால் இந்த பறவைங்க என்னை போல அம்மா அப்பா இல்லாத அனாதைங்க போல… அதான் இந்த பறவைங்களுக்கு கூடுனு ஒன்னு தனியா இல்லாம பொதுவான இந்த நீர்நிலைக்கு வந்து இருக்குங்க… ” என்று ஆதிரா அந்த பறவைக்கூட்டங்களைப் பார்த்தபடி பேசிக் கொண்டு இருக்க வினய் அவளுக்கு யாரும் இல்லை என்ற உண்மையை உணர்ந்து அதிர்ந்துப் போய் அவளை இமைக்க மறந்து பார்த்தான்.
உதட்டில் புன்னகையும் கண்களில் கனிவும் கொண்டு இருக்கும் இவளது உள்ளத்தினில் யாரும் அறியாத இப்படி ஒரு சோகமா?
யார் மனதையும் காயப்படுத்தாத இவள் மனதினில் இப்படி ஒரு காயமா?.
இவள் மனதை சந்தோஷப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்வேன் இனி..
ஏற்கனவே சோகத்தை சுமந்து இருக்கும் அவள் மீது இனி யாரையும் சோகத்தை சுமக்க அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி எடுத்தபடி அவளைப் பார்த்தான்.
பறவைக்கூட்டங்களையே பார்த்துக் கொண்டு இருந்தவள் திரும்பி வினய்யைப் பார்க்க அவன் நான் இருக்கின்றேன் என்று கண்களால் ஆறுதல் சொன்னான்.
அதைக் கண்டு இவள் உதடுகளில் புன்னகை அரும்ப அவன் கண்களும் சிரித்தது.
இவர்கள் இருவரையும் பார்த்து அந்த பறவைக்கூட்டமும் சிரித்தது.