காதல் சதிராட்டம் 23a
காதல் சதிராட்டம் 23a
ஆதிராவை அன்று வினய்யின் கண்கள் சுற்றிக் கொண்டு இருந்தது.
அவளின் இதழசைவு குழலைசவு முதற் கொண்டு எல்லா அசைவுகளையும் அவன் இடைவிடாது பார்த்துக் கொண்டு இருந்தான். ஆதிராவும் அதைக் கவனித்துக் கொண்டு இருந்தாள்.
அவன் அவளைப் பார்க்கும் போது எல்லாம் ஏதோ ஒரு படபடப்பை உணர்ந்தாள்.
எங்கே இவனும் நான் வெறுத்துக் கடந்து வந்த ஆண்களில் ஒருவனின் பட்டியலில் சேர்ந்துவிடுவானோ என்று பயந்துப் போனாள்.
ஆனாலும் வினய் அப்படிப்பட்டவனாக இருக்க மாட்டான் என்று அடிமனதில் இருந்து ஒரு குரல் ஒலித்துக் கொண்டே தான் இருந்தது.
அவள் மனதுக்கும் மூளைக்குமான பெண்டுலம் நிற்காமல் சுழன்றுக் கொண்டு இருந்த நேரம் வினய் அவளின் முன்பு வந்து நின்றான்.
“ஆதிரா இன்னைக்கு வேலை எல்லாம் முடிஞ்சுடுச்சு. நாம கிளம்பலாமா? இருட்டிட்டா ரிஸ்க்…” என அவன் கேட்க அவளுக்குள் இருந்த ஒட்டு மொத்த கவலையும் ஒற்றை சிதறலாய் சிதறி ஒன்றுமில்லாமல் போனது போல் உணர்ந்தாள்.
வினய் பேசும் போது அவளுக்குள் கவலையே எட்டிப் பார்க்கவில்லை.
மனதுக்குள் பாதுகாப்பின் ஒரு நிழல் படர்வதை உணர்ந்தவள் முகமோ அதுவரை இருந்த கலக்கமான முகத்தை சந்தோஷமாக மாற்றிக் கொண்டது.
புன்னகையுடன் போகலாம் என்று தலையாட்டினாள்.
அவளின் முன்பு வந்து பைக்கை நிறுத்த அதில் ஏறி அமர்ந்துக் கொண்டாள் அவள்.
அவன் சரியாக பைக்கை கிளப்பிய நேரம் தனிப்பறவை ஒன்று வானில் தனித்து சிறகடித்துக் கொண்டு இருந்தது.
அதைப் பார்த்ததும் வினய்யிற்கு நொடிப் பொழுது ஒரு எண்ணம் தோன்றி மறைய சட்டென்று பைக்கை ஸ்டார்ட் செய்து அந்த பறவையைப் பின் தொடர்ந்தான்.
எப்போதும் செல்லும் பாதையில் இல்லாமல் பைக் வேறு பாதையில் செல்ல ஆதிரா பதறிப் போனாள்.
“வினய் என்ன ஆச்சு? ஏன் வேற வழியிலே போறீங்க… அந்த பாதையிலே ஏதாவது பள்ளம் தோண்டி இருக்காங்களா? இல்லை கட்சி மீட்டிங்கா?”
“அதெல்லாம் இல்லை ஆதிரா. நான் நம்ம போற இடத்தை இப்போ சொல்லப் போறது இல்லை… நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ.”
“ப்ளீஸ் வினய் எங்கே போறோம்னு சொல்லுங்க… ” என்றுக் கேட்டவளை பைக்கை நிறுத்திவிட்டு திரும்பி ஒரேப் பார்வை பார்த்தான்.
“ஆதிரா என்னை நம்புற தானே… ” என அவன் கேட்க மனதில் எவ்வளவு சஞ்சலம் இருந்தாலும் அவள் தலை தன்னையுமறியாமல் தானாக ஆடி ஆம் என்றது.
“அப்போ எந்த கேள்வியும் கேட்காம என் கூட வா… ” என்று சொன்னவன் மீண்டும் வண்டியை எடுத்தான்.
பைக் மின்னல் வேதத்தில் பறந்தது.
பைக் ஹேண்டிலை பிடிமானமாகப் பற்றிக் கொண்டாள்.
எதிர்க்காற்றை தாங்காமல் ஆதிராவின் கண்கள் மூடிக் கொண்டது.
சில நிமிடங்களுக்குப் பின்பு வண்டி தன் இயக்கத்தை நிறுத்திவிட சட்டென்று கண்களைத் திறந்தாள்.
எதிரே ஒரு பன்னீர் மரம்.
தன்னை வளர்த்த நிலத் தாய்க்கு நன்றி சொல்லும் விதமாய் பூக்களை தரையில் பரப்பி வைத்து இருந்தது.
ஆதிராவின் பொற் பாதங்கள் அந்த பூக்களை ஆசிர்வதித்தது.
முகத்தில் குழப்பத்துடன் கண்களில் தேங்கிய கேள்வியுடன் வினய்யைப் பார்த்தாள்.
வினய் மேல் நோக்கி கையைக் காண்பிக்க மேலே ஒரு பறவைக்கூடு இருந்தது.
அதில் ஒரு பறவைக் குடிக் கொண்டு இருந்தது.
ஆச்சர்யத்துடன் திரும்பி வினய்யைப் பார்த்தாள்.
“பறவைக் கூட்டுக்கு போறதை பார்க்கணும்னு ஆசைப்பட்ட இல்லை. அதான் அதோ இருக்குதே, அந்த பறவையை தொடர்ந்துக்கிட்டே வந்தேன். ” என்று சொன்னவனை கண்களில் குளம் போல் தேங்கிய நீரை அடக்கியபடி பார்த்தாள்.
தனக்காக யோசித்து செய்து இருக்கின்றான்.
நானே மறந்துப் போன என் ஆசையை நினைவில் வைத்துக் கொண்டு அதை நிறைவேற்றியும்விட்டான்.
இவன் என் நண்பனாக கிடைத்ததற்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று சந்தோஷப்பட்டாள்.
அவள் வாய்மொழியால் அவனுக்கு நன்றி சொல்லவில்லை முகத்தில் பூத்த புன்னகையுடன் கண்ணீராலேயே அவனுக்கு நன்றி சொல்ல அதைப் புரிந்துக் கொண்டவனோ லேசான புன்னகையோடு அதை ஏற்றுக் கொண்டான்.
“வினய் எனக்கே மறந்து போயிடுச்சு, இப்படி ஒரு ஆசை எனக்கு இருந்ததுனு. ஆனால் நீ நியாபகம் வெச்சு நிறைவேத்தி கொடுத்து இருக்க. எனக்கு பேச்சே வரல… கண்ணிலே கண்ணீர் தான் வருது. நீ எதுக்காக வினய் என்னை இவ்வளவு கேர் எடுத்து பார்த்துக்கிற?” என்றாள் வாஞ்சையாக.
அவளது கேள்விக்கு நீ என் காதலி அதனால் தான் என்று நேரிடையாக அவனால் சொல்ல முடியலில்லை.
அதே சமயம் நீ என் தோழி அதனால் தான் என்று சப்பைக்கட்டு கட்டவும் முயலவில்லை.
ஒரு நிமிடம் தடுமாறிவிட்டான்.
ஆனால் அந்த தடுமாற்றத்தை தன் மனதினுள் குறித்து வைக்க ஆதிரா தவறவில்லை.
எதனால் தடுமாறுகிறான் என்று புரியாமல் அவனைப் பார்த்தாள்?
அவனோ தன் முகத்தை சரி செய்துக் கொண்டு “வா ஆதிரா போகலாம் … ” என்று சொல்ல ஆதிராவும் எதுவும் கேட்காமல் பைக்கில் ஏறி அமர்ந்தாள்.
பைக் கல்லூரியை நோக்கி விரைந்தது.
கல்லூரி வளாகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.
அவள் சிறுப் புன்னகையுடன் அவனிடம் இருந்து விடைப்பெற்று சென்றாள்.
ஏனோ இம்முறை அவள் அவனை விட்டு எங்கோ தூரமாக செல்வதைப் போல வினய் உணர்ந்தான். ஏதோ தடுமாற்றம் அவனை ஆட்கொண்டது. இப்போதே காதலை சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தை அடக்கியபடி ஓடிச் சென்று ஆதிராவின் முன்னால் நின்றான்.
“ஆதிரா நான் உன் கிட்டே சில விஷயங்கள் சொல்லணும். அதை நான் நாளைக்கு சொல்றேன். நான் திடீர்னு எல்லாத்தையும் சொல்லவும் நீ திணறிடக்கூடாதுனு தான் முன்னாடியே சொல்றேன். பீ ரெடி. நாளைக்கு தயாரா இரு… ” என்று வேக வேகமாக சொல்லிவிட்டு சென்றவனை குழப்பம் கலந்த முகபாவனையில் பார்த்தபடி நின்றாள்.
“என்ன சொல்ல போகிறான் நாளை?” என்ற கேள்வி மனதைக் கொக்கிப் போட்டு இழுத்தது.
எங்கோ தூரத்தில் கூவிய குயிலோசை அவள் கவனத்தைக் கலைத்துப் போட தன் அறையை நோக்கி நடந்து சென்றாள்.
வினய் ஆதிராவை விட்டுவிட்டு கல்லூரிக்கு அருகிலேயே தான் தனியாய் தங்கி இருக்கும் அறைக்குள் சென்று தாழிட்டவன் செல்போனை எடுக்க பாக்கெட்டில் துழாவினான். ஆனால் அது அங்கே இல்லை.
அப்போது தான் ஹாட் சிப்ஸ் கடையிலேயே சார்ஜ் போடும் இடத்தில் வைத்துவிட்டு வந்தது நியாபகம் வந்தது.
அன்று வேறு ஹாட் சிப்ஸ் கடை பாதி நாள் தான் இயங்கும் எங்கே கடையைப் பூட்டிவிடப் போகிறார்கள் என்று வேக வேகமாக அந்த கடையை சென்று அடைந்தான்.
யாரும் இல்லாமல் அந்த கடையே வெறிச்சோடிப் போய் கிடந்தது.
ஹாட் சிப்ஸ் கடையில் நுழைந்து உள் அறையில் சார்ஜில் போடப்பட்டு இருந்த தன் செல்போனை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் போட்டவன் திரும்ப ஏதோ ஒரு வித்தியாசமான சப்தம் அவன் காதுகளில் விழுந்தது.
என்ன சப்தம் இது என்று யோசித்துக் கொண்டே வெளியே வந்துப் பார்த்தான். ஆனால் எங்கேயும் யாரும் இருந்ததாய் தெரியவில்லை.
யோசனையோட திரும்பிப் பார்த்தான்.
அதில் உட்பக்கமாய் இருந்த கதவு திறந்துக் கிடந்தது. ஓடிச் சென்று பார்த்தான்.
அங்கே பின் வாசல் வழியாக கணேசன் கனியை விடாப்பிடியாக இழுத்துக் கொண்டு சென்று காரை அறைந்து சாத்தினான்.
கனியின் உதடுகள் வேறு ஓசை எழுப்ப முடியாதபடி துப்பட்டாவால் இறுகக் கட்டப்பட்டு இருந்தது.
வினய்யிற்கு ஏதோ தவறாக நடப்பதுப் போல் தெரிந்தது.
சரசரவென மாடிப் படிகளில் இருந்து இறங்கியவன் தன் பைக்கை அசுர வேகத்தில் இயக்கி அந்த காரைப் பின் தொடர்ந்தான்.
அந்த கார் ஆள் அரவமற்ற ஒரு சாலையில் புகுந்து ஒரு வீட்டின் முன்பு போய் நின்றது. வினய்யின் பைக் பெட்ரோல் இல்லாமல் அந்த சாலையின் முகப்பிலேயே நின்றுவிட பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த வீட்டை நோக்கி ஓடினான்.
அதற்குள் அந்த கணேசன் கனியை தரதரவென இழுத்துச் சென்று கதவை உட்பக்கமாக தாழிட்டுவிட்டார்.
பூட்டப்பட்ட கதவின் முன்பு வினய் தட்டியது இடியோசைப் போல இடிந்தது.
ஆனால் உட்பக்கத்தில் இருந்து கணேசன் கதவையே திறக்கவில்லை.
உள் செல்ல வழி கிடைக்குமா என்று வினய் சுற்றி முற்றிப் பார்க்க பின்னால் ஒரு ஜன்னல் திறந்து இருந்தது.
சற்றும் யோசியாமல் அந்த ஜன்னல் வழி உள் புகுந்தான்.
உள் அறையில் கனியை சின்னா பின்னமாக்கிக் கொண்டு இருந்தான் அந்த கணேசன்.
பாய்ந்து சென்று சட்டையைப் பிடித்தவன் கணேசனை புரட்டி எடுக்க முயன்ற போது வினய்யைக் கீழே தள்ளிவிட்டு வீட்டை விட்டே ஓடி சென்றுவிட்டான் அவன்.
“பரதேசி நாயே நாளைக்கு எப்படி இருந்தாலும் கையிலே மாட்டுவல டா.. அப்போ வெச்சு இருக்கேன் உன்னை. ” என்று கர்ஜித்தவன் திரும்பி கனியைப் பார்த்தான்.
புயலில் சிதைந்த மலர் போல பக்கத்துக்கு ஒன்றாக உடைகள் கிழிப்பட்டு கீழேக் கிடந்தாள்.
வினய் ஓடிச் சென்று அவன் அணிந்து இருந்த சட்டையைக் கழற்றி அவளுக்கு கொடுத்துவிட்டு மேஜை மேல் கிடந்த கார் சாவியை எடுத்துக் கொண்டு திரும்பி அவளைப் பார்த்தான்.
நேற்று வரை ஆண்கள் என்றாலே தவறானவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்த கனியின் எண்ணம் சுக்கு நூறாய் நொறுங்கிப் போய் இருந்தது.
இன்று காலையில் அவனையும் கூட அந்த தவறானவர்களின் பட்டியலில் சேர்த்துவிட்டோமே என்று மனம் வாடினாள்.
அவள் கைகள் கூப்பி அவனை நோக்கி தன் மன்னிப்பையும் நன்றியையும் ஒரு சேர வெளிப்படுத்தினாள்.
“வினய் ப்ளீஸ் இங்கே நடந்ததை யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க… ஆதிரா உட்பட யாருக்கும் தெரிய வேண்டாம்… ” என்று அவள் கெஞ்சும் குரலில் கேட்க ” சத்தியமா சொல்ல மாட்டேன், என்றான் தீர்க்கமாக.
“ப்ளீஸ் என்னை வேற இடத்துக்கு கூட்டிட்டு போறீங்களா? இதே ட்ரஸ்ஸோட போனா ஹாஸ்டலிலே எல்லாரும் என்னை தப்பா நினைப்பாங்க… ” என்று அவள் கேட்க வினய் சரி என்று தலையாட்டிவிட்டு மேஜையின் மீது வைக்கப்பட்டு இருந்த கார் சாவியையும் கனியின் மொபலையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
கணேசனின் காரை எடுத்துக் கொண்டு தன் அறையை நோக்கி வண்டியைக் கிளப்பினான்.
இடையில் வண்டியை நிறுத்திவிட்டு அவளுக்கு சுடிதாரை வாங்கிவிட்டு தன் அறையை அடைந்தான்.
உள் அறையில் கனி அவன் வாங்கி வந்த உடைகளை மாற்றிக் கொண்டு இருக்க இவன் தான் அணிய சட்டை எடுப்பதற்காக கப்போர்டை திறந்தான். வெளியே காலிங் பெல் ஓசைக் கேட்டது.
யார் என்ற கேள்வியுடன் வினய் கதவைத் திறக்க அங்கே பதிலாக ஐஸ்வர்யா நின்றுக் கொண்டு இருந்தாள்.
” விமல் ரெக்கார்ட் நோட்டை வாங்கிட்டுப் போறதுக்காக வந்தேன் வினய்.. ” என்று அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே கதவைத் திறந்து பேசியபடி கனி வந்து நின்றாள்.
“வினய் என் ட்ரெஸ்ஸை மாத்திக்கிட்டேன்… இந்தாங்க உங்களோட ட்ரெஸ்” என்று கனி தன் உடையை சரி செய்தபடியே அவனது டீஷர்ட்டை நீட்ட அப்போது தான் ஐஸ்வர்யா அங்கே இருப்பதை கவனித்தாள்.
கனி அடுத்து என்ன பேசுவது என்று நெளிந்தபடி நிற்க ஐஸ்வர்யா அப்போது தான் வினய்யையும் ஊன்றிப் பார்த்தாள்.
அவன் மேல் சட்டை இல்லாமல் நின்றுக் கொண்டு இருந்தான்.
அவளுக்கு எல்லாமே தவறாகப்பட்டது. அப்போது பார்த்து அவளது செல்போன் ஒலித்தது.
எடுத்துப் பார்த்தாள் ஆதிரா தான் அழைத்து இருந்தாள் கயல்விழி மொபைலில் இருந்து.
வேகமாக எடுத்துக் காதில் வைத்தவள் அதற்கு மேல் அங்கே நிற்கப் பிடிக்காமல் சரசரவென அங்கிருந்து வந்துவிட்டாள்.
வினய் எதையும் விளக்க முடியாமல் விக்கித்துப் போய் நின்றான்.
ஆனால் அவனுக்குள் ஒரு குருட்டு நம்பிக்கை தன் தோழி கண்டிப்பாக தன்னை தவறாக நினைத்துவிட மாட்டாள் என்று.
கனியின் முகத்தினில் லேசான கலக்கம்.
“சாரி வினய் என்னாலே தான் ஐஸ்வர்யா உங்களைத் தப்பா நினைச்சுட்டாங்க… ஐ யம் ரியலி சாரி.” என்றாள் மனதார.
“ஐயோ அதெல்லாம் ஒன்னுமில்லை கனி.. என் ப்ரெண்ட் என்னைத் தப்பா நினைக்க மாட்டா. நீயே எதுவும் ஃபீல் பண்ணாதே… ” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கனியின் செல்போன் அலறியது.
எடுத்துக் காதில் வைத்தவள் அதை விட பன்மடங்கு அலறினாள்.
வினய் திகைத்துப் போய் அவளருகில் சென்று என்னவென்று கேட்க விக்கலும் விம்மலுமாய் சொன்னாள்.
“அப்பா இறந்துட்டாங்க வினய். இன்னைக்கு ஆப்பரேஷன் இருந்தது. ஆனால் பணம் என்னாலே ரெடி பண்ண முடியல. கணேசன் கிட்டே கேட்டேன் அவன் தப்பா பேசவும் இனி இங்கே வொர்க் பண்ணக்கூடாதுன்ற முடிவோட ஓனர் கிட்டே வேலையை விட்டுட்டு போறேனு சொல்லிட்டேன்.இன்னும் ரெண்டு நாளிலே முழு மாச சம்பளத்தையும் வாங்கிட்டு அப்பாவைப் போய் பார்க்கலாம்னு நினைச்சேன். ஆனால் இப்போ செத்துப் போன என் அப்பாவைத் தான் போய் பார்க்க போறேன்… ” என்று அழுதவளைத் தேற்ற வழியற்றுப் பார்த்தான்..
“ஏன் கனி இந்த விஷயத்தை நீ முன்னாடியே என் கிட்டே சொல்லல. என் தங்கச்சி மாதிரி தான் நீயும். நீ வா நான் உன்னை ஊருக்கு கொண்டு போய் விடுறேன். ” என்று அவளை அழைத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பி விட்டான்.
இங்கே ஐஸ்வர்யாவும் ஆதிராவும் மரத்துக்கடியில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தனர்.
பின்பு இருவருமே ஒரே நேரத்தில் ஒரு சேர ” எனக்கு என்னமோ இப்போ எல்லாம் வினய் வேற மாதிரி தெரியுறான்… ” என்றனர் இருவரும் ஒரே தொனியில் ஒரே குழப்பத்தில்.