காதல் சதிராட்டம் 24b
காதல் சதிராட்டம் 24b
வையிரத் தொங்கல்களைப் போல தூரமாய் அருவிக் கொட்டிக் கொண்டு இருப்பதையும் அதன் மேல் தங்கக்கட்டிகளைப் போல பறவைகள் பறந்துக் கொண்டு இருப்பதையும் தன் விழிகளால் ரசித்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா.
அவள் பின்னே ஏதோ நிழலுருவம் தெரிய அவள் கவனம் கலைந்து திரும்பிப் பார்த்தாள்.
ப்ரணவ் தான் நின்றுக் கொண்டு இருந்தான். என்ன என்று கண்களால் கேட்டாள் அவனை.
” என் அண்ணா மேலே நீங்க கோவப்பட்டதுக்கான காரணம் எனக்கு இப்போ தான் தெரிஞ்சது அண்ணி. எனக்கு உங்க கிட்டே ஒரே ஒரு கேள்வி தான். அண்ணா கண்டிப்பா அப்படி பண்ணி இருப்பாங்கனு நீங்க நம்புறீங்களா?” என்ற ப்ரணவ்வின் கேள்வி அவள் உதடுகளில் வெற்றுச் சிரிப்பை வர வைத்து இருந்தது.
“அதை முழுசா நம்ப முடியாம தானே.. நான் மறுபடியும் அந்த லெட்டரை நீ தான் எழுதுனீயானு வினய் கிட்டே கேட்டேன்.. அப்போவும் ஆமாம்னு சொல்லி தானே உன் அண்ணா என் மனசை உடைச்சுப் போட்டான்.. “
“அண்ணி நீங்க அண்ணா பக்கத்துலே இருந்து யோசிக்கவே இல்லை..
அண்ணாவும் எந்த உண்மையும் சொல்லக்கூடாதுனு சொல்லிட்டாங்க. இல்லைனா நானே எல்லா உண்மையும் சொல்லி என் அண்ணா எந்த தப்பும் பண்ணலனு என்னாலே நிரூபிக்க முடியும். பட் நான் செய்த சத்தியம் என்னை எதுவும் சொல்ல விடாம தடுக்குது. ” என்று வேகமாக சொல்லியவன் பின்பு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு ஆதிராவை கெஞ்சலாகப் பார்த்தான்.
“ப்ளீஸ் அண்ணி நீங்களே அண்ணாவைப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்களேன். இல்லைனா நீங்களே காரணத்தை தேடுங்களேன்.. என் அண்ணா இப்படி எந்த தப்பும் செய்யாம இப்படி தண்டனை அனுபவிக்கிறது என்னாலே சகிச்சுக்கவே முடியல. நீங்க அண்ணா மேலே இருக்கிற வெறுப்பை எல்லாம் ஒதுக்கி வெச்சுட்டு அண்ணாவை புதுசா பார்க்கிறா மாதிரி பாருங்க அண்ணி.. மறுபடியும் முதலிலே இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க.” என்று ப்ரணல் சொல்ல ஆதிராவின் முகத்தினில் யோசனையுடன் கூடிய ஒரு மறுப்பு. அதை உணர்ந்தவனாக ப்ரணவ் மீண்டும் பேச ஆரம்பித்தான்.
“எனக்கு உங்க பயம் புரியுது. அண்ணாவை ஏன் உங்க கிட்டே நெருங்கவிட மாட்டேங்குறீங்கனு என்னாலே உணர முடியுது. மறுபடியும் அதே தப்பு நடந்துடுமோனு பயப்படுறீங்க… நானும் உத்ராவும் உங்க கூடவே தான் இருக்கோம். அதனாலே பயப்படாம அண்ணா கூட ஒரு தடவை பழகிப் பாருங்க. அண்ணாவுக்கு ப்ளீஸ் ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க. உங்க அடி மனசுல அண்ணா மேலே இன்னும் நம்பிக்கை இருக்கு அண்ணி. இல்லைனா இங்கே வரவே ஒத்து இருந்துக்க மாட்டீங்க. ப்ளீஸ் உங்க மூளை சொல்றதை விட்டுட்டு உங்க அடி மனசு சொல்றதை ஒரே ஒரு முறைக் கேட்டுப் பாருங்க. என் அண்ணாவுக்கு ப்ளீஸ் ஒரே ஒரு வாய்ப்பு கொடுக்க முயற்சி பண்ணுங்க அண்ணி. நான் உங்களைக் கட்டாயப்படுத்தல.. முடிவு உங்க கையிலே யோசிச்சு முடிவு பண்ணுங்க.. ” என ப்ரணவ் கண்ணீர்க் குரலில் படபடவென்று சொல்லிவிட்டு பதிலக்கு கூட காத்திராமல் சென்றுவிட அவனது வார்த்தைதளும் அந்த கண்ணீரும் அவள் மனதை அசைத்தது.
ப்ரணவ்வின் வார்த்தைகளில் பொய் இல்லை அதே போல் அவள் மனதினுள் வினய் மேல் ஏற்பட்ட வெறுப்பின் காரணத்திலும் பொய் இல்லை.
இதில் எதை நம்புவது? என்று திண்டாடிப் போனாள்.
ஒரு வேளை தான் தான் தவறாக எண்ணிவிட்டாமோ என்ற எண்ணம் பல வருடங்கள் கழித்து அவள் மூளைக்குள் உதித்தது.
மீண்டும் நினைத்தேப் பார்க்கக்கூடாது என்று மனதுக்குள் அவள் போட்டு இருந்த கட்டுப்பாடுகளை எல்லாம் தளர்த்தி பழைய நினைவுகளை எல்லாம் மீண்டும் கிளறினாள்.
அன்று நடந்ததெல்லாம் அவள் கண் முன்னே காட்சியாக விரிந்தது.
அன்றைய ஒரே ஒரு நாள் வினய் செய்த அந்த காரியத்தைத் தவிர இதற்கு முன்பு வேறு எந்த காரியமும் தவறாக செய்யவில்லையே.. எனக்கும் எதுவும் தோன்றவில்லையே…
அந்த ஒரே ஒரு நாளில் தானே ஒட்டு மொத்தமாய் பழகிய அவள் அறிந்த வினய் மொத்தமாய் கெட்டவனாக உருமாறிப் போனான். அவன் மீது சஞ்சலம் கொண்ட அந்த நாளை நினைத்துப் பார்த்தாள்.
கனியின் வார்த்தைகள் தான் முதன் முதலில் வினய்யைப் பற்றிய தவறான எண்ணம் விதைய காரணமாய் இருந்தது.
கனி வினய்யைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை.
அவள் பொதுவாக ஆண் வர்க்கத்தை தான் எதிர்த்துப் பேசினாள். நான் மறுத்துப் பேசவும் தான் வினய்யை அந்த பேச்சின் ஊடே இழுக்க முயன்று தன் வாதம் சரி தான் என நிரூபிக்க பார்த்தாள். ஆக அவள் வினய்யை யோசித்து சொல்லவில்லை.
ஒரு வேளை வேறு ஒருவரின் மீதான கோபத்தை வினய்யின் மீது காட்டிவிட்டாளா? ஒரு வேளை இப்படியும் இருக்குமோ? என்ற யூகங்கள் அவள் மனதை குழம்ப செய்தது.
இதுவரை தெளிவாக இருந்த மனதினில் ப்ரணவ் ஒரு கல் எறிந்து சென்றுவிட்டான்.
அது பல அதிர்வலைகளை எழுப்பி அவளை கலங்கடித்துக் கொண்டு இருந்தது.
ஒரு வேளை வினய் நல்லவனாக இருந்தால்?
ப்ரணவ் சொன்னதுப் போல் இந்த வெறுப்பு கோபம் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு வினய்யை மீண்டும் புதிய ஒருவனாக பார்க்கலாமா? என்ற எண்ணம் அவள் மனதினில் தோன்றி மறைந்தது.
ஆனால் கைகளில் அன்று தொட்ட அந்த அட்டையின் எரிச்சல் இன்னும் அடங்கவில்லையே. இந்த எரிச்சலையும் மீறி அவனை முன்புப் போல் பார்க்க முடியுமா?
விடை தெரியவில்லை.
ஆனாலும் முயற்சித்துப் பார்க்கலாம் என்ற முடிவோடு எழுந்தாள்
இங்கே வீட்டிற்குள்.
“டேய் ப்ரணவ் இதைக் கொஞ்சம் பிடி டா.. ” என்று உத்ரா சொல்ல அப்போது தான் அலைபேசியில் இருந்து கவனத்தைக் கலைத்து திரும்பிப் பார்த்தான்.
அவள் கைகளில் கொசு வலை இருந்தது.
ஆச்சர்யமாய் அவளை நோக்கி புருவத்தை மேலேற்றினான்.
“இது எப்போ உத்ரா வாங்குன நீ??”
“அன்னைக்கு நீ கொசுவை பிடிக்க முடியாம மொக்கை வாங்குன இல்லை அப்போ தான் உன் கையிலே கொசு கடிச்சு தட்டை தட்டையா வீங்கிப் போய் இருக்கிறதை பார்த்தேன். அதான் கொசு வலை வாங்கப் போய் இருந்தேன். ஆனால் திரும்ப வரும் போது வீடே கண்ணாடி உடைஞ்சு ரணகலமா இருந்தது.. இப்போ தான் கொசு வலை ரெடி பண்ண டைம் கிடைச்சது. வா வந்து ஹெல்ப் பண்ணு .. ” என்று அவள் அழைக்க அவனுக்கோ அவள் தன் மீது காட்டிய அக்கறையை எண்ணி மனம் சிலிர்த்தது.
சிறிது நேரத்திற்கு முன்பு வைஷாலியின் குறுஞ்செய்தியை எதிர்பார்த்து அமர்ந்து இருந்தவனுக்கு எதிர்பாராமல் உத்ரா காட்டும் இந்த அன்பு மனதை நெகிழச் செய்தது.
அந்த அலைபேசியை அப்படியே போட்டுவிட்டு உத்ராவின் அருகே வந்தான்.
அவள் கொசு வலையின் ஒரு முனையைக் கொடுக்க அதை பிடித்துக் கொண்டான்.
மறுமுனையை உத்ரா பற்றிக் கொண்டு அந்த கட்டிலின் மீது ஏறினாள்.
அவள் அந்த கட்டிலின் மேற் பகுதியில் நின்றுக் கட்டிக் கொண்டு இருக்க கீழே அவள் கால் பதித்து இருந்த தலையணை லேசாக தடுமாறிவிட்டது. அவளும் தடுமாறி கட்டிலின் மீது கொசு வலையோடு விழ மறுமுனையைப் பிடித்து இருந்த ப்ரணவ்வும் தடுமாறி அவள் மீது விழுந்தான்.
இரு புஜங்களையும் கட்டிலில் தாங்கிக் கொண்டு அவள் மீது சாயாமல் அடியில் இருந்த அவளைப் பார்த்தான்.
அந்த வலையின் நடுவே தெரிந்த அவளது முகம் அவனது இதயத்தை அதி வேகமாக துடிக்கச் செய்வதாய்.
இதுவரை அவன் பார்த்த உத்ராவிற்கும் இந்த உத்ராவிற்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது.
தன்னை மறந்து அவளைப் பார்த்துக் கொண்டு இருக்க அவளும் வைத்தக்கண் வாங்காமல் இவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள், இடையில் அந்த அலைபேசி சப்தம் குறுக்கிடும் வரை.
அந்த ஒலியைக் கேட்டதும் இருவரும் திடுக்கிட்டு எழுந்தனர்.
அவனும் அவள் முகத்தைப் பார்க்க தடுமாறினான். அவளும் தடுமாறினாள்…
அந்த அலைபேசி ஓயாமல் அடிக்க அதை உத்ரா ப்ரணவ்விற்கு எடுத்துக் கொடுக்க முயன்ற போது அதில் வைஷாலி என்ற பெயர் ஒளிர்ந்துக் கொண்டு இருந்தது.
உத்ரா அவன் கைகளில் அந்த அலைபேசியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.
செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் அந்த அலைபேசியின் அலறல் தாங்காமல் எடுத்துக் காதில் வைத்தான்.
“சொல்லு வைஷாலி… ” என்ற போது அவன் குரல் கரகரத்தது.
“ப்ரணவ் நீ என்ன முடிவு பண்ணி இருக்க? கடைசியா கேட்கிறேன்.. உனக்கு ஃபாரின் வர்றதுக்கு விருப்பமா இல்லையா?” என்றாள் விடாப்பிடியாக.
சில மணி நேரங்களுக்கு முன்பு வினய் ஆதிராவின் மீது கொண்ட காதலின் ஆழத்தைக் கண்டவன் இதயமோ லேசாக பெண்டுலம் ஆடியது.
தன் அண்ணன் தன் காதலுக்காக எவ்வளவு தியாகங்கள் செய்கிறான்.
ஆனால் நான் என் காதலுக்காக என்ன செய்து இருக்கிறேன் என்ற எண்ணம் அவனுக்குள் கிளர்ந்து எழுந்தது.
அவன் தன் காதலுக்காக தன் விருப்பங்களை தியாகம் செய்ய துணிந்துவிட்டான்.
“ஓகே வைஷீ உனக்காக… உனக்காக மட்டும் வெளிநாட்டுக்கு வர சம்மதிக்கிறேன். ஆனால் நான் என் குடும்பத்துக் கிட்டே பேசி புரிய வைக்கணும்.. எனக்கு டைம் வேணும்… “
“ஓகே ஒத்துக்கிறேன். பட் உனக்கு ஒரு மாசம் தான் டைம் ” என்று சொல்லிவிட்டு அவள் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
ஒளியிழந்த அந்த அலைபேசியையே ஒளிர்வில்லாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் ப்ரணவ்.
ஏதோ ஆர்வக்கோளாறில் சொல்லிவிட்டானே தவிர எப்படி தன் குடும்பத்தை விட்டு தனியாக செல்வது என்ற குழப்பத்தில் அமர்ந்து இருந்தவனின் முன்பு உத்ரா வந்து நின்றாள்.
அவள் கைகளில் இரண்டு உடை இருந்தது. ஒரு கையில் சிவப்பு உடை. இன்னொரு கையில் நீல உடை.
அவன் கேள்வியாக நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“இந்த ரெண்டு ட்ரெஸ்ல எது நல்லா இருக்கு?” என அவள் கேட்க அவன் நீல நிற உடையைச் சுட்டிக் காட்டினான்.
“அப்போ ஓகே நான் ப்ளூ கலர் ட்ரெஸ் போட்டு வைபவ்க்கு போட்டா அனுப்புறேன்.. தேங்க்ஸ் டா ப்ரணவ்… ” என்று அவள் சொல்ல அவனுக்கு ஒரு நொடி எதுவும் புரியவில்லை, புரிந்த பின்னால் அவனால் அப்படியே உட்கார்ந்து இருக்க முடியவில்லை.
“ஹே இந்தாடி. இங்கே பாரு. வைபவ்க்கு உன் போட்டாவை அனுப்புன உன்னை காலி பண்ணிடுவேன்… ” என்று அவளின் பின்னால் தலை தெறிக்க ஓடினான்.
அவள் அவன் கைகளுக்கு அகப்படாமல் மாய மீனாய் நழுவி சென்று விட்டு இருந்தாள்.
எதையோ இழந்த உணர்வு ஆக்கிரமிக்க அவள் இல்லாத சென்ற திசையையே வலியோடுப் பார்த்துக் கொண்டு இருந்தான் ப்ரணவ்.
அங்கே தோட்டத்தில் வினய் செடிகளை நட்டுக் கொண்டு இருக்க திடீரென்று விக்கல் எடுக்க தன் அழுக்கான கைகளைப் பார்த்தான்.
இன்னும் இரண்டு நிமிடத்தில் வேலை முடிந்துவிடும். மொத்தமாக செடி நட்டுவிட்டு பின்னே சென்று தண்ணீர் குடிக்கலாம் என விக்கலோடு அந்த செடியை நடப் போக அவனை நோக்கி ஒரு கரம் நீண்டது.
திரும்பிப் பார்த்தான்.
ஆதிரா தான் நின்றுக் கொண்டு இருந்தாள். அவள் கைகளில் தண்ணீர்க் குவளை. அவனது விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது.
“தண்ணியைக் குடிச்சுட்டு அடுத்த வேலையைப் பாரு வினய்.. ” என்ற அவளது அந்த வார்த்தை அவனுடைய அத்தனை கால வறட்சியின் தாகத்தைத் தீர்த்தது.
புன்னகையுடன் கைகளை அவள் முன் நீட்டினான்.
அவள் தண்ணீரை உற்ற கைகளைக் கழுவிக் கொண்டவன் அவள் கைகளில் இருந்து நீர்க்குவளையை வாங்கி தன் தொண்டையின் தாகத்தைத் தீர்த்தான்.
காலி குவளையை அருகே வைத்துவிட்டு ஆதிராவைப் பார்த்து கண்களால் நன்றி சொல்ல அவள் மெல்லிய புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டாள்.
“ஆதிரா நான் எல்லாத்தையும் தயார் பண்ணிட்டேன். நீ உன் கையாலே செடி நடுறீயா?” என்று ஆர்வமாக அவளைப் பார்த்துக் கேட்டான்.
புன்னகையுடன் தலையாட்ட கைகளில் இருந்த செடியை அவளிடம் தந்தான்.
அவள் அந்த செடியை நட வினய் மண் போட்டு அந்த செடிக்கு பிடிமானம் கொடுக்க அந்த செடி நிலத்தில் வேரூன்றியது.
பார்க்கலாம் அந்த செடி துளிர்விடுமா என்று…