காதல் சதிராட்டம் 25b

காதல் சதிராட்டம் 25b

தொடர்ந்து தட்டப்பட்ட அந்த கதவின் ஒலி வினய்யின் முகத்தில் எரிச்சலை வர வைத்தது.

சிறிது நேரம் தனிமையை கொடுங்களேன் என்று கத்த வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

தலையின் மீது சாய்த்து வைத்து இருந்த கையை எடுத்துவிட்டு கோபமாக வந்து கதவைத் திறந்தான்.

திறந்தவுடன் எதிரில் பார்த்த முகத்தைக் கண்டு அவனுடைய கோப முகத்தில் திடீர் மாற்றம்.

ஆதிரா புன்னகை முகத்துடன் அவனைப் பார்த்தபடி கைக்கட்டி நின்றுக் கொண்டு இருந்தாள்.

அவன் பார்வையில் இருந்த திகைப்பு சற்றும் குறையாமல் அவளைப் பார்த்தபடி அப்படியே சிலையென சமைந்து நின்றான்.

சிவந்துப் போய் இருந்த கண்களையும் உணர்ச்சியற்ற அவன் முகத்தையும் கண்டு  ஆதிராவின் முகம் லேசாக வருத்தத்தைக் காட்டியது.

அவன் முகத்தில் எப்படியாவது புன்னகையை பூசி விட வேண்டும் என்ற எண்ணம் அவளுள் கிளர்ந்து எழுந்தது.

“வினய் எனக்கு வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருக்கிறது ஒரு மாதிரி இருக்கு நாம வெளியே போகலமா?” என்று பல வருடங்களுக்குப் பிறகு ஆதிரா கேட்கும் முதல் ஆசை,  அதை மறுக்க முடியாமல் சரி என்று தலையசைத்தவன் கார் சாவியை  எடுத்துக் கொண்டு அவளுடன் புறப்பட்டான்.

செல்லும் அவர்களையே கண்களில் நிறைவுடன் ப்ரணவ்வும் உத்ராவும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

“அண்ணா இந்த தடவை அறையிலே அடைஞ்சு கிடந்து தன்னைத் தானே காயப்படுத்திக்க மாட்டாங்க உத்ரா. இனி அண்ணி, அண்ணாவை வருத்தப்படவிட மாட்டாங்கணு எனக்குத் தோணுது…” என்று ப்ரணவ் சொல்ல உத்ராவும் ஆமோதித்தாள்.

“ஆமாம் ப்ரணவ் நாம எவ்வளவு வருத்தத்துல இருந்தாலும் நம்மளை சந்தோஷப்படுத்த உண்மையான அன்பால உண்மையான காதலால மட்டும் தான் முடியும்..” என்றவளின் பேச்சுக் கேட்டு ப்ரணவ்வும் ஆமாம் என்று தலையாட்ட போக சட்டென்று ஒரு திகைப்பு.

நான் எவ்வளவு வருத்தத்தில் இருந்தாலும் என் முகத்தில் புன்னகையை கொண்டு வர உத்ராவால் மட்டும் தான் முடியும்.

என் கவலைகளை மறந்து இவள் முன்பு தான் என்னால் உண்மை சிரிப்பை உதிர்க்க முடியும்.

வெளியே பக்குமானவன் என்ற பெயரை எடுத்த நான் இவளிடம் மட்டும் குழந்தையாய் அடங்கிப் போகிறேன்.

யாராலும் குலைக்க முடியாத என் சமநிலையை இவள் மட்டும் தான் அடிவேர் வரை அசைத்துப் பார்க்கிறாள்.

என் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இவள் ஒருத்தி மட்டும் தான் காரணமாகிறாள்.

  அப்படியானால் இவள் தான் என் உண்மையான காதலா? என்று தோன்றிய நொடி அவன் இதயம் ஸ்தம்பித்து நின்றது.

அவனால் இதயத்தின் அந்த கேள்விக்கு  பதில் சொல்ல முடியவில்லை என்பதை விட பதில் சொல்ல திராணி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரே நேரத்தில் எப்படி இரண்டு நபரைக் காதலிக்க முடியும்?

உத்ராவைக் காதலிப்பது உண்மை என்றால் தான் வைஷாலியின் மீதுக் கொண்ட காதல் பொய்யாகிவிடும்.

உத்ரா என் உண்மைக் காதலா?

இல்லை வைஷாலி என் உண்மைக் காதலா? என்ற பெண்டுலத்திற்கு இடையில் சுழன்றுக் கொண்டு இருந்த நேரம் அவனை உலுக்கி நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது உத்ராவின் குரல்.

“டேய் ப்ரணவ் வினய் அண்ணா வருத்தப்படாம இருக்கணும்னு நீ நினைக்கிறா மாதிரி,   நீயும் வருத்தப்படாம இருக்கணும்னு  நான் நினைக்கிறேன். 

நாம இப்படி கஷ்டப்படுறதைப் பார்த்தா ஷிவாணியும் அப்பாவும் கஷ்டப்படுவாங்க.

அதனாலே நீ வா நம்ம வேற ஏதாவது பண்ணி மைண்டை டைவர்ட் பண்ணி ஹேப்பியா இருக்கலாம்..

அப்போ தான் நம்ம ஷிவாணி டார்லிங் ஹேப்பியா இருப்பா… ” என்று உத்ரா பேசிக் கொண்டே அவனது கையைப் பற்றிக் கொண்டு  இழுத்துச் சென்றாள்.

ப்ரணவ்வோ தனது கைய்யின் மீது கிடக்கும் அவளது கையைப் பார்த்தபடியே உதறிக் கொண்டு இருக்கும் தன் மனதை சரி செய்ய திராணியற்று அவள் பின்னே சென்றான்.

💐💐💐💐💐💐💐

பல வர்ண நிறங்களில் செடிகளில் மிளிர்ந்து கொண்டு இருந்தது பூக்கள்.

அந்த இடமே வர்ண விளக்குகளைக் கட்டி வைத்ததுப் போல் பூக்களால் ஒளிர்ந்துக் கொண்டு இருந்தது.

அந்தப் பூக்களை தன் கண்களால் ஆசிர்வதித்தபடி ரசித்துக் கொண்டு இருந்தாள் ஆதிரா.

அவளையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டு இருந்தான் வினய்.

ஏதேச்சையாக திரும்ப அவன் கண்ணின் கூர்மை அவளை ஏதோ செய்து இருக்க வேண்டும்.

பின்னே அதுவரை நிமிர்ந்து இருந்த அவள் கண்கள் சட்டென்று கீழே தாழுமா?

“ஆதிரா உன்னோட திடீர் மாற்றதுக்கு என்ன காரணம்? ப்ரணவ் ஏதாவது உன் கிட்டே உண்மையை சொன்னானா?” என்று கூர்மையாக வந்து விழுந்த கேள்வி அவளை மீண்டும் நிமிரச் செய்தது.

“ப்ரணவ் உன் கிட்டே சத்தியம் செய்த பிறகும்  அந்த விஷயத்தை சொல்லுவானா? அவன் எந்த உண்மையையும் சொல்லல. ஆனால் ப்ரணவ் சொன்ன சில விஷயங்கள் என்னை யோசிக்க வெச்சது.
என் கோவம் தப்பா இல்லை சரியானு எனக்கே இப்போ சந்தேகம் வந்துடுச்சு. ” என்று லேசாக வருந்தியவளை தீர்க்கமாகப்  பார்த்தான்.

“இல்லை ஆதிரா நீ பழசை  எதுவும் நினைக்காதே.. நீ இறந்த காலத்துல நடந்ததை சரியா தப்பானு ஆராய்ச்சி பண்ணி ஒன்னும் ஆகப் போறது இல்லை.. வருத்தம் மட்டும் தான் எஞ்சும்.. பழசைப் பத்தி யோசிச்சு உன்னை வருத்திக்காதே ஆதிரா.. ” என்றவனின் வார்த்தைகளில் அவள் கஷ்டப்பட்டுவிடக் கூடாதே என்ற கவலை தான் தெரிந்தது.

அந்த கவலையை ஆதிராவும் உணர்ந்துக் கொண்டாள்.

ஏதாவது சப்பைக்கட்டு கட்டி தன்னை அவன் நல்லவன் என நிரூபிக்க முயற்சிப்பான் என்று நினைத்த அவள் எண்ணத்தில் இப்போது பெரும் அடி.

அவன் அதைப் பற்றி பேசி இவளைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்பதே நிஜம் என உணர்ந்தவள் மனதினிலோ லேசாக குற்றவுணர்வு முளைத்தது.

தன்னைக் காயப்படுத்த நினைக்காதவனை தினம் தினம் காயப்படுத்துகிறோமே என்ற வருத்தம் எழுந்தது.

இனி முடிந்தளவு அவனைக் காயப்படுத்தக்கூடாது என்று மனதினில் நினைத்துக் கொண்டாள்.

“ஆதிரா இதோ பாரேன் இந்த பேர்ட் ஆஃப் பாரடைஸ் பூ எவ்வளவு அழகா இருக்கு இல்லை.. இதோ பார்க்கும் போது எல்லாம் நம்ம Early bird music band தான் நியாபகத்துக்கு வரும்.

ஒவ்வொரு வருஷமும் பனிக்காலத்துல நான் கொடைக்கானல்க்கு தவறாம இங்கே வந்துடுவேன்..

இந்த இடத்தில தான் நான் குடும்பத்தோட செலவழிச்ச பல நியாபகங்கள் உறைஞ்சுப் போய் இருக்கு… அந்த நாள்லாம் திரும்ப வராதானு எனக்கு இங்கே வந்துப் பார்க்கும் போதுலாம் ரொம்ப ஏக்கமாவும் கவலையாவும் இருக்கும்..  ஆனால் முதல் முறையா சந்தோஷமா உணருறேன்.. ” என்று கலங்கிய குரலில் சொன்னவன் நிறுத்திவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.

அவன் முடிக்காமல் விட்ட வாக்கியத்தின் பொருள் இவளுக்குப் புரிந்தது.

இம்முறை அவன் சந்தோஷமாக உணர்வதற்கு காரணம் நான் தான் என்பதை சொல்கிறான் என்று புரிந்தவள் முகத்திலோ லேசாக ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டது.

இருவரும் மீண்டும் அந்த மலர்த்தோட்டத்தின் அழகை கண்களால் பருகிக் கொண்டு இருந்த நேரம் அவர்களின் முன்பு ஒரு முன்னால் ஒரு மைக் நீட்டப்பட்டது.

“ஹாய் நாங்க விம் டிவியில இருந்து பேசறோம்.. இந்த கொடைக்கானலோட அழகு உங்களுக்கு பிடிச்சு இருக்கா?” எனக் கேட்க ஆதிரா புன்னகையோடு ஆமாம் என்று தலையாட்டினாள்.

“உங்க ரெண்டு பேரோட ஜோடிப் பொருத்தமும் அருமையா இருக்கு. நீங்க ஹனி மூனுக்காக வந்து இருக்கீங்களா?” என்று கேட்க ஆதிராவும் வினய்யும் அவசர அவசரமாக தலையாட்டி மறுத்தனர்.

“ஐயோ சாரி சாரி… அப்படினா நீங்க ரெண்டு பேரும் யாரு?” என்று அந்த தொகுப்பாளினி கேட்க வினய் எதுவும் சொல்லாமல் கைக்கட்டியபடி ஆதிராவைப் பார்த்தான், நீயே பதில் சொல் என்னும் ரீதியில்.

ஆதிரா திரும்பி ஒரு முறை வினய்யைப் பார்த்தாள்.  பின்பு தீர்க்கமாக திரும்பி  “நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்” என்றாள்.

அவளது பதில் வினய்யைக் குளிர்வித்தது.

பல நாட்கள் கழித்து ஆதிரா தன்னை நண்பனாக ஏற்றுக் கொண்டது அவனை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு தள்ளியது.

அதுவரை ஆதிரா வருத்தப்படக்கூடாதே என்று அவன் வலுக்கட்டாயமாக பொருத்தி இருந்த அந்த செயற்கை சிரிப்பைக் கழட்டி எறிந்துவிட்டு நிஜ சிரிப்பைப் பூசிக் கொண்டான்.

மலர்ந்த முகத்துடன் ஆதிராவைப் பார்த்தான் அவளும் பதிலுக்கு இவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“ஆதிரா உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு.. எங்களுக்காக ஒரு பாட்டு பாட முடியுமா?” என அந்த தொகுப்பாளினி கேட்க ” கண்டிப்பா என்னோட குரு வினய்யை பக்கத்துல வைச்சுக்கிட்டு பாடாம இருப்பேனா? ” என்றவள் தன் குயில் குரலால் பாடத் துவங்கினாள்.

அங்கே பூந்தோட்டத்தில் பூக்களை ரசித்துக் கொண்டு இருந்த எல்லோரின் கவனமும் இவர்கள் மீது வந்து குவிந்தது.

கால்கள் போகுது
    புது பாதையை நோக்கி. ..
கைகள் நீளுது
    புது விரலைத் தேடி….
எது வரை நீளும்
   இந்த பயணம்….
பாதை முடியும் வரையா??
    பாதம் நோகும் வரையா??
அது வரை போ மனமே….    
நிழல் இல்லாது நீண்ட இந்த
    வெற்றுப் பயணத்தில்
சோகம் தணிக்க கிளை நீண்ட
    மரம் கிடைக்காதா??
இல்லை உன் கைகள் தான்
    அன்பினை விதைக்காதா??….

என்று அவள் பாடிவிட்டு வினய்யைப் பார்க்க வினய் அவள் விட்ட இடத்தில் இருந்து பாடலைத் தொடங்கினான்…

தெரியுதே தெரியுதே
    அழகான உலகம்..
விரியுதே விரியுதே
     எனக்கான பாதை… 
நகருதே நகருதே
     வாழ்க்கை வசந்தத்தை நோக்கி..
எதுவரை நீளும்
    இந்த பயணம்….
பாதை முடியும் வரையா?….
    பாதம் நோகும் வரையா??…
அது வரை போ மனமே….    
நிழல் இல்லாது நீண்ட இந்த
    வெற்றுப் பயணத்தில்
உன் சோகம் தணிக்க கிளை
     நீண்ட  மரம் கிடைக்காதா??….
அதில் நீ கொண்ட
    சோகங்கள் எல்லாம் மறக்காதா??
உன் விதி வீதியில் உன்னோடு
     சேர்ந்து நடக்க ஒரு கை நீளாதா??
அதன் உள்ளங்கை வெப்பத்தில்
     உன் சோகம் எல்லாம் தணியாதா???

என்று வினய் பாடி முடிக்க அங்கே தோட்டத்தில் இவர்களின் பாடலைக் கேட்டு மெய் மறந்து நின்ற எல்லோரும் பாடி முடித்ததும் உரக்கக் கைத்தட்டினர்.

இவர்களுக்கோ கல்லூரியில் early bird early bird என்று உற்சாகமாக உரக்கக்  கத்தும் அந்த கூட்டத்தின் ஓசையை மீண்டும் கேட்டதுப் போல இருந்தது.

இருவரும் திரும்பி அந்த கல்லூரி நாட்களை நினைத்து ஒருவர் முகத்தை ஒருவர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டனர்.

அவர்களது சிரிப்பை சிறைப்பிடித்தது அந்த கேமரா.

“வாவ் வாவ் செமயா பாடுனீங்க.. நீங்க பாடுன இந்த பாட்டு அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை டிவியில வரும்.. பார்த்து என்ஜாய் பண்ணுங்க.. ” என்று சொல்லிவிட்டு அந்த தொகுப்பாளினி கேமராமேனோடு அடுத்த ஜோடியின் பக்கம் திரும்பிவிட இவர்களது விழிகளோ ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு இருந்தது.

“வினய் உனக்கு இந்த ஆராவரத்தைக் கேட்கும் போது Early bird Early bird னு நம்ம காலேஜ் பசங்க ஆர்ப்பரிச்சு கத்துற அந்த மொமெண்ட் நியாபகத்துக்கு வந்துதா?” என்று இவள் கேட்க அவன் ஆமாம் என்று ஆமோதித்து தலையசைத்தான்.

“அந்த நாட்களை லாம் நான் ரொம்ப மிஸ் பண்றேன் ஆதிரா.. ” என்று அவன் சொல்ல ” நானும் தான் வினய் ” என்று இவளும் தலையாட்டிச் சொன்னாள்.

Leave a Reply

error: Content is protected !!