காதல் சதிராட்டம் 27b
காதல் சதிராட்டம் 27b
வாகனங்களின் இரைச்சல் சப்தமும் சாலையில் பொருட்களை கூவி கூவி விற்பவர்களின் ஒலியும் எங்கோ தூரத்தில் ஒலித்துக் கொண்டு இருந்த ஆலயமணி ஒலியும் ஆதிராவின் கவனத்தைக் கலைக்கவே இல்லை.
அவளது கவனம் எல்லாம் அந்த ஹாட் சிப்ஸ் கடையின் மீது தான் குவிந்து இருந்தது.
இங்கே வினய்யுடன் நடந்த முதல் சந்திப்பு அவனுடன் சேர்ந்து வேலைப் பார்த்தது என வரிசையாக விழிகள் அவளுக்கு திரைப்படம் காட்டிக் கொண்டு இருக்க, அந்த திரைப்படத்தின் இறுதிக் காட்சியாக அந்த கணேசன் சொல்லிய வக்கிரமான வார்த்தைகள் அவள் காதுகளில் ஒலித்தது.
கீழே தழைய தழைய இருந்த சேலையை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டவள் எதிரில் வைத்து இருந்த துடைப்பக்கட்டையை எடுத்துக் கொண்டு அந்த ஹாட் சிப்ஸ் கடைக்குள் நுழைந்தாள்.
புன்னகை சொருகிய முகத்துடன் எல்லா டேபிள்ளையும் வலம் வந்துக் கொண்டு இருந்த கணேசன் கண்களில் ஆதிராவும் அவளது கைகளில் இருந்த துடைப்பமும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
“வா மா ஆதிரா. ” என சொல்லிய கணேசனின் மீது சராமாரியாய் வீசினாள் அந்த துடைப்பத்தை.
“ஏன் டா பரதேசி. நீ தப்பா நடந்துக்கிட்டது மட்டும் இல்லாம அந்த தப்பைத் தூக்கி வினய் மேலே போட்டியே, உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கணும்? உன் கொழுப்பை இந்த துடைப்பக்கட்டையாலே அடக்கிறேன் டா. ” என்று சுற்றுப்புறத்தை சட்டை செய்யாமல் அவனை விலாசுவதிலேயே குறியாக இருந்தாள்.
மொத்தக் கூட்டமும் அவள் அந்த கணேசனை அடிப்பதைப் பார்க்க அவனுக்கோ அவமானமாய் போய்விட்டது.
இதேப் போல தான் வினய்யும் கடைக்குள் புகுந்து எல்லார் முன்னிலையிலும் அவனை அடி வெளுத்து இருந்தான்.
அந்த கடையின் உரிமையாளர் செல்வம் வரை இவன் பெண்களிடம் தப்பாக நடந்த எல்லா செய்தியையும் கொண்டு சென்று இவனை அவனை அந்த கடையில் இருந்தே தூக்க வைத்தான்.
ஆனால் கணேசனா செல்வத்தின் கை காலில் விழுந்து, அவருக்கு அவனே ஆபத்தை ஏற்படுத்திவிட்டு பின்பு காப்பாற்றுவது போல் நடித்து என பல குட்டிக் கரணம் போட்டு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இழந்த தன் பதவியை மீண்டும் வாங்கி இருந்தான்.
இன்று அதற்கும் ஆப்பு வைப்பது போல் ஆதிரா வந்துவிட்டாளே என்று பொருமியவரின் மீது இன்னும் இன்னும் அடி பலமாக விழுந்தது.
“நாயே நீ எல்லாம் உயிரோட இருக்கணும்னு யாரு டா அழுதது? இந்த கடையிலே வேலை செஞ்ச எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை கெடுத்து இருப்ப. ஒரு நல்லவன் மேலே பழி போட்டிட்டியே டா பாவி. இனி நீ இருக்க வேண்டியது. இங்கே இல்லை, ஜெயிலிலே” என்று அவள் முடிக்கவும் போலீசார் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
“யாரு மேடம் இந்த நாயா? உங்க ப்ரெண்ட் கிட்டே தப்பா நடந்துக்க முயற்சி பண்ணது?” என்று போலீசார் கேட்க அவள் ஆமாம் என்று அழுத்தமாக தலையாட்டினாள்.
ஏற்கெனவே வீங்கிப் போய் இருந்த உடம்பை போலீசாரும் வீங்க வைத்து அவனை இழுத்துச் சென்று இருந்தனர் மாமியார் வீட்டிற்கு.
“விமல் அவன் வெளியவே வரக்கூடாது. இந்த கடையிலே வேலை செய்த அத்தனை பொண்ணுங்க டீட்டெய்ல்ஸ்ம் கலெக்ட் பண்ணி அந்த நாய்க்கு எதிரா புகார் கொடுக்க சொல்லி கேஸை இன்னும் ஸ்ட்ராங்க் ஆக்கணும். அவன் ஜெயில் உள்ளேயே செத்துப் போயிடணும்.” என ஆதிரா சொல்லிவிட்டு காரில் சென்று வேகமாக அமர்ந்தாள்.
ஏற்கெனவே அடிப்பட்டு இருந்த கையில் லேசாக வலி எடுக்க ஆரம்பித்து இருக்க அதை சட்டை செய்யாது அந்த ஹாட்சிப்ஸ் கடையை பார்த்தவளுக்கு படபடப்பும் கோபமும் பாதி தான் குறைந்து இருந்தது.
“ஆதிரா அடுத்து காலேஜ் ஹாஸ்டல்க்கு தானே. ” என விமல் ட்ரைவர் சீட்டில் அமரந்தபடிக் கேட்க ஆம் என்று அழுத்தமாக தலையசைத்தது ஆதிராவின் முகம்.
அங்கே அந்த பன்னீர் மரத்துக்கடியில் நாற்காலியைப் போட்டுக் கொண்டு குச்சியால் பல் குத்திக் கொண்டு இருந்தான் அந்த வார்டன்.
ஆதிரா வந்த வேகத்தில் அவன் வாயிலேயே ஒரு குத்துவிட அது அவன் வாயைக் கிழித்துவிட்டு இருந்தது.
“வார்டானா டா நீ. தூ தூ. படிக்கிற பிள்ளைங்களை சரியா பார்த்துக்கிறதுக்காக உன்னை வைச்சா நீ அவங்க வாழ்க்கையையே கெடுக்கப் பார்க்குறீயா? ஏன் டா பரதேசி, அப்படி பண்ணே? ஏன் அந்த லெட்டரை மாத்தி வெச்சே சொல்லு டா வாயைத் திறந்து. ” என அவள் கத்த அவனோ ரத்தம் வந்த வாயின் திணறலுடன் பேசினான்.
“நான் நம்ம காலேஜ் பொண்ணுங்க கிட்டே தப்பா நடந்ததை வினய் கண்டிச்சான். ஒழுங்கா இல்லைனா என்னை ப்ரின்சிபெல் கிட்டே சொல்லிடுவேனு மிரட்டினான். என்னை எப்போ பார்த்தாலும் எங்கே பார்த்தாலும் அசிங்கப்படுத்தினான். அவனைப் பழி வாங்க சந்தர்ப்பம் பார்த்துட்டு இருந்தேன். அன்னைக்கு சர்க்குலர் லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் கிட்டே கொடுக்கிறதுக்காக வந்த அப்போ விமலும் ஐஸ்வர்யாவும் பேசுனதை கேட்டேன். ஐஸ்வர்யா ஒளிச்சு வைச்ச லெட்டரை மாத்தி என் பாக்கெட்ல இருந்த அந்த காண்டம்மை தூக்கி வைச்சேன். ” என்று அவன் பேசிக் கொண்டே இருக்க ஆதிரா மறுபடியும் அவன் வாயினில் ஒரு குத்துவிட்டாள்.
“பாவி பாவி இப்படி பண்ணிட்டியே டா… ” என்று அவள் அவனைப் போட்டு துவைத்து எடுத்தவள் அவனை கிழி கிழி என்றுக் கிழித்தாள்.
கல்லூரியின் முதல்வரின் முன்பு கூட்டிச் சென்று அவனைப் பற்றி சொல்ல அன்றே அவனது வார்டன் பதவி அவனை விட்டுச் சென்றுவிட்டது.
ஆனாலும் அவளுக்கு ஆத்திரம் குறையவில்லை.
இன்னும் இவனை ஏதாவது செய்துவிட வேண்டும் என்று எண்ணியவள் அங்கே கல்லூரி மாணவர்களுக்கு சமைப்பதற்காக விறகு அடுப்பில் மூட்டப்பட்ட தீயில் இருந்து ஒரு கட்டையை உருவியவள் அவன் கைகளிலேயே பழுக்க வைத்தாள்.
“இந்த கை தானே டா,லெட்டரை மாத்தி வெச்சது. நல்லா எரிஞ்சு சாகட்டும். ” என்று அவன் முகத்தைப் பார்த்துக் கத்தியவள் கடைசியாக காறித் துப்பிவிட்டு திரும்பினாள்.
விமல் ஒரு கடிதத்தோடு ஆதிராவின் முன்பு ஓடி வந்தான்.
“ஆதிரா அவன் ரூம் லே வினய் எழுதின லெட்டர் கிடைச்சுடுச்சு. ” என்று விமல் அவளிடம் நீட்ட பல வருடம் கழித்து அவளுக்காக எழுதப்பட்ட கடிதத்தை கைகளில் வாங்கினாள்.
கை மெதுவாக நடுக்கம் கொண்டது.
அவனது காதல் வார்த்தைகள் அவளது உள்ளங்கையின் ரேகைகளை மெல்லியதாய் படர்ந்துக் கொண்டு இருப்பது போல் ஒரு மாயை தோன்ற சட்டென்று அந்த கடிதத்தைத் தன் புடவையின் முந்தானை மீது வைத்துக் கொண்டு காரில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.
விமல் காரை எடுத்தான்.
கார் மீண்டும் கொடைக்கானலை நோக்கிச் செல்ல ஆதிராவின் உள்ளத்திலோ சந்தோஷமும் வருத்தமும் ஒரு சேர வந்து அவளைத் தள்ளாட வைத்தது.
வினய்யை கெட்டவனாக சித்தரித்தவர்களை அவள் தன் மனதார அடித்துவிட்டாள். அவர்களுக்கான தண்டனையைக் கொடுத்துவிட்டாள்.
ஆனால் வினய்யை இத்தனை வருடங்களாக காரணமே இல்லாமல் நான் வருத்தியதற்கான தண்டனையை யார் கொடுப்பார்கள்?
அவளது குற்றவுணர்வு மட்டும் தான் அவளுக்கான தண்டனை. அதுவும் தப்பிக்க முடியாத கொடும் தண்டனை.
சோர்வு மனதை அழுத்த வாடிய முகத்துடன் காரின் கண்ணாடியின் மீது சாய்ந்தாள்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
“ஹே உத்ரா கொஞ்சமாவது சாப்பிடு டி. ப்ளீஸ் இப்படி என்னை சாகடிக்காதே. “
“இல்லை ப்ரணவ், உன் லவ் ப்ரேக் அப் ஆகி இருக்கும் போது என்னாலே எப்படி என்னாலே சாப்பிட முடியும்?”
“ஹே உத்ரா ஓவரா இல்லை. நானே எந்த வருத்தமும் இல்லை ஒரு ப்ளேட் பிரியாணியை முழுசா முழுங்கிட்டு உட்கார்ந்துட்டு இருக்கேன். ஆனால் நீ இப்படி பண்றீயே டி. சாப்பிட்டு தொலை. இல்லைனா இந்த பிரியாணியையும் நானே சாப்பிட்டுடுவேன்.” என ப்ரணவ் சொல்லி முடிக்கவும் அவள் பதறிப் போய் பிரியாணித் தட்டை எடுப்பதற்கும் சரியாக இருந்தது.
வாயில் பிரியாணியை அரைத்துக் கொண்டே ” டேய் ப்ரணவ். இந்த டீவியிலே லாம் காமிப்பாங்களே… லவ் ஃபெயிலியர் ஆனா தாடி வைக்கிறது, தண்ணி அடிக்கிறது,அப்புறம் சாப்பிடாம வருத்திக்கிறது. எதையோ இழந்தா மாதிரி வானத்தையே வெறிச்சுட்டு இருக்கிறது, இது எதையுமே நீ பண்ணவே இல்லையே டா. “
“முட்டாள்ங்க தான் அதெல்லாம் பண்ணுவாங்க உத்ரா. தெளிவானவங்களை அந்த பிரிவு ஒன்னும் பண்ணாது. வாழ்க்கையிலே என்ன சாதிக்கணும் எப்படி அவங்க முன்னாடி வாழ்ந்துக் காட்டணும்னு தான் யோசிப்பாங்க. ” என்று ப்ரணவ் சொல்ல உத்ராவோ ” அப்போ நீ நான் போனா கூட ஹேப்பியா தான் இருப்பியாடா?” எனக் கேட்டாள்.
சட்டென்று ப்ரணவ்விடம் இருந்து பதில் வந்தது, அதுவும் அழுத்தமாக.
“நீ என்னை விட்டுப் போன செத்துடுவேன் உத்ரா.” என்றவனைத் திகைத்துப் பார்த்தாள். அவனும் தன்னை மீறி வந்த பதிலில் திகைத்துப் போனான்.
வைஷாலியால் ஏற்படுத்த முடியாத வெறுமையை உத்ரா ஏற்படுத்திவிடுகிறாள்.
உத்ராவின் பிரிவு அவனை வதைக்கிறது. அவளை இழக்கக்கூடாது என மனது அடித்துக் கொள்கிறது.
என் உயிர்க்காதல் வைஷாலி அல்ல உத்ரா தானா? என அவன் திகைத்துப் போய் யோசித்துக் கொண்டு இருந்த நேரம் வினய் ப்ரணவ்வை தன் அறைக்கு அழைத்தான்.
ப்ரணவ் வேகமாக எழுந்துச் செல்ல உத்ராவோ இமைக்க மறந்து அவனையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“ப்ரணவ் நான் உன்னை எதுக்காக ஊட்டிக்கு அனுப்புனேன்ற காரணத்தைப் புரிஞ்சுட்டு இருப்பேனு நினைக்கிறேன். நீ வைஷாலியைக் காதலிக்கிறது எனக்குத் தெரியும்.” என்று வினய் சொல்ல ப்ரணவ் முகத்தில் அதிர்வு. அதைக் கண்டு கொண்டவன் மெல்லியதாக சிரித்தபடி மேலும் தொடர்ந்தான்.
“ஆனால் அந்த பொண்ணு உன் கிட்டே பேசுன விதத்துல உனக்கு சரியானவள் இல்லைனு எனக்குத் தோணுச்சு. அதனாலே தான் என் பி.ஏ கிட்டே சொல்லி அந்த பொண்ணைக் கண்காணிக்க சொன்னேன். அப்போ தான் அவள் வேற ஒருவனைக் காதலிக்கிறது எனக்குத் தெரிஞ்சது. நீ கலலைப்படாதே ப்ரணவ். அவள் உனக்கு ஏத்தவள் இல்லை. “என்று வினய் சொல்ல ப்ரணவ் வருத்த முறுவலுடன் சொன்னான்.
“ஆமாம் அண்ணா அவள் எனக்கு ஏத்தவள் கிடையாது. நீங்க ஏற்கெனவே இவ்வளவு மனக்கஷ்டத்துல இருந்தும் மனசு உடைஞ்சுப் போய் இருக்கிற இந்த நிலைமையிலேயும் எங்களுக்காக எங்களைப் பத்தி யோசிக்கிறீங்களே அண்ணா. எனக்கு இப்படி ஒரு அண்ணா கிடைக்க நான் ஏதோ புண்ணியம் பண்ணி இருக்கணும்… ” என்று ப்ரணவ் சொல்ல வினய் அவனை இறுகக் கட்டிக் கொண்டான்.