காதல் சதிராட்டம் 27a

காதல் சதிராட்டம் 27a

அந்த அறையே நிசப்தமாக இருந்தது.
எப்போதும் நிசப்தம் தான் அதிக சப்தத்தை ஏற்படுத்தும்.

இப்போதும் அதே நிசப்தத்தின் சப்தம் தான் ஆதிராவின் காதுகளைக் குடைந்து கொண்டு இருந்தது.

அவளது கண்கள் வினய்யின் முகத்தையே ஊன்றிப் பார்த்தது.

எத்தனை முறை பார்த்தாலும் அவள் உள்ளம் அவன் நல்லவன் என்ற அதே வார்த்தையை சொல்லி  திரும்ப திரும்ப அவளைக் கலங்கடித்துக் கொண்டு இருந்தது.

தவறு செய்யாதவனையா நான் இத்தனை வருடமாக தண்டித்து இருக்கின்றேன்?

இந்த கேள்வி தான் அவளது உள்ளத்தின் சமநிலையை பெரிதளவும் அசைத்துப் பார்த்தது.

‘இப்போது இருக்கும் மூளை அப்போது ஏன் உனக்கு இல்லாமல் போனது? என்ன நடந்தது என்று வினய்யும் சொல்ல மாட்டான். மற்றவர்களையும் சொல்ல விட மாட்டான். வினய்யயைக் கெட்டவனாக்கிய அந்த விஷயத்தை செய்தவர் யார்?’ என எப்படிக் கண்டுபிடிப்பது என்று யோசித்துக் கொண்டு இருந்த சமயம் அந்த அறையின் மௌனத்தைக் கலைக்கும்படி வாயில் அழைப்பு மணியின் ஒசை இடையில் ஒலித்தது.

கதவைத் திறப்பதற்காக எழுந்த ஆதிராவை அமரச் சொல்லிவிட்டு  வினய் கதவைத் திறந்தான்.

எதிரில் விமல்  புன்னகை முகத்துடன் நின்றுக் கொண்டு இருந்தான்.

“டேய் மச்சான். ” என வினய் சொல்ல

“ஹாய் மச்சான்… ” என விமல் அணைத்துக் கொண்டான்.

ஆதிரா விமலைப் பார்த்ததும் சந்தோஷமாக எழுந்து அவனருகே வந்தாள்.

எத்தனை வருடங்கள் ஆயிற்று விமலைப் பார்த்து.

கல்லூரியில் படிக்கும் போது அவனைப் பார்த்தது. அந்த சம்பவத்திற்குப் பிறகு அவனைப் பார்க்கவே இல்லை. இப்போது தான் பார்க்கின்றாள்.

“விமல் எப்படி இருக்க? நல்லா இருக்கியா? என்ன பண்ற? வீட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா? ” என அவள் படபடவென கேள்வி மழை பொழிய விமலின் முகத்திலோ புன்னகை.

“ஆதிரா கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ. எப்பா எத்தனை கேள்வி ஒரே சமயத்திலே.” என்று சொன்னவன் தண்ணீரை அவளிடம் கொடுத்துவிட்டு வரிசையாக அவளது கேள்விகளுக்கு பதிலளிக்க ஆரம்பித்தான்.

” நான் நல்லா இருக்கேன் ஆதிரா. இப்போ வினய்யோட கம்பெனியிலே நானும் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். எங்க வீட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்க. அப்புறம் நீ எப்படி இருக்க?” என்று கேட்டவனது கண்கள் அனிச்சையாக அவளது கைகளை நோக்கிப் பாய்ந்தது.

கையில் ஒரு கட்டு.

“என்ன ஆச்சு?” என்று அதைப் பார்த்து பதற்றமானான்.

“அது லைட்டா தீக்காயம் பட்டுடுச்சு. சரி அதை விடு விமல். ” என்று சொன்ன ஆதிரா ” ஆமாம் ஐஸ்வர்யா எப்படி இருக்கா?” என்றுக் கேட்டாள்…

“அவள் அமெரிக்காவுல இருந்தா ஆதிரா. இரண்டு வாரம் முன்னாடியே அவளுக்கு கோர்ஸ் முடிஞ்சுடுச்சு. இந்தியா வந்துட்டா ஆனால் இன்னும் எங்களை பார்க்க வரல ” என்று சொல்லிய விமல்  ஆதிராவையும் வினய்யையும் மாறி மாறிப் பார்த்தான்.

விதி ஆடிய சதிராட்டத்தில் இப்படி இவர்கள் இரண்டு பேரும் சிதறிப் போய் விட்டார்களே என்று வருத்தமாக இருந்தது அவனுக்கு.. காதல் சதிராட்டம் இவர்கள் வாழ்வில் தொடங்குமா? என்று ஏக்கமாக பார்த்தான்.

“டேய் மச்சான் என்னடா இப்படி சிலையாட்டம் நின்னுட்டு இருக்க? அங்கே பிஸினஸ் எப்படி போகுது எதுவும் ப்ரச்சனை இல்லையே”

“அதெல்லாம் நல்லாவே போகுது டா. இங்கே நம்ம எஸ்டேட்டோட கணக்கு பார்க்க வந்தேன். ” என சொல்ல வினய் ஓகே ஓகே டா என்றான் கிண்டல் பார்வையில்.

ஆதிரா இவர்கள் இருவரது பார்வையையும் மனதினில் குறித்துக் கொண்டாள்.

“சரி மச்சான் நான் கிளம்பி எஸ்டேட்க்கு போயிட்டு வரேன். ” என்று விமல் கிளம்ப ஆதிரா ” நானும் உன் கூட வரேன் விமல்.. ” என்று இடையில் புகுந்து சொன்னாள்.

“வேண்டாம் ஆதிரா. இந்த கையோட நீ போக வேண்டாம்.” என்று வினய் அழுத்தமாக மறுத்தான்.

“இல்லை வினய் எனக்கு கை அவ்வளவா வலிக்கல. நான் விமல் கூட போறேன்.” என்று விடாப்பிடியாக நின்றாள்.

“அப்போ சரி ஆதிரா நானும் உங்க கூட வரேன். “என வினய் கிளம்ப ஆதிராவோ மறுத்தாள்.

“இல்லை வினய் நாங்க இரண்டு பேர் தனியா பேசி ரொம்ப நாள் ஆச்சு. அப்படியே பேசிட்டு எஸ்டேட்டை சுத்திப் பார்த்துட்டு வரோமே. ” என்று ஆதிரா சொல்லியதை வினய்யால் மறுக்க முடியவில்லை.  தடுக்க வழியற்று அவளைப் பார்த்தான்.

அவன் முகத்தினுள் கவலையின் தழும்புகள் ஒட்டி இருந்தது.

அங்கே சென்றால் அவளுக்கு உண்மைகள் தெரிந்துவிடுமோ என்று உள்மனம் பயந்தது.

அனுப்ப விருப்பம் இல்லாமலேயே அவளை விமலுடன் அனுப்பி வைத்தான்.

காரில் ஏறி அமர்ந்ததும் அவள் வினய்யிடம் கேட்ட முதல் கேள்வி இது தான்.

“விமல் அந்த லெட்டரை எழுதுனது வினய் இல்லைனு எனக்கு இப்போ புரியுது. அந்த கேடு கெட்ட வேலையைப் பண்ணது யார்?” என்று ஆதிரா கேட்க விமலிடம் மௌனம்.

“சொல்லு விமல்” என்ற அவளது கேள்வி விமலை உலுக்கி நிமிர வைத்தது.

“அது ஆதிரா. நான் உன் கிட்டே அந்த லெட்டர் சம்பந்தப்பட்ட எந்த உண்மையும் சொல்ல மாட்டேனு வினய் கிட்டே சத்தியம் பண்ணி இருக்கேன். ” என்று விமல் சொல்ல ஆதிராவுக்கோ தலை சுற்றிக் கொண்டு வந்தது.

“ஆக எதையும் யாரும் என் கிட்டே சொல்ல மாட்டீங்க இல்லை. நான் இப்படியே உண்மை தெரியாம தலை வெடிச்சு சாகணும் அப்படி தானே. ” என்று ஆற்றாமையில் கத்தியவள் பின்னர் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு விமலைப் பார்த்தாள்.

” யாரும் சொல்ல வேண்டாம். நானே கண்டுபிடிச்சுக்கிறேன். வினய்யை தப்பா காட்டுனவனை நானே உண்டு இல்லாம பண்றேன். ” என்று ஆதிரா கோபப்பட விமலின் மனதினிலோ சந்தோஷம்.

‘நீ கண்டுபிடிக்கணும்ன்றதுக்காக தான் நான் உன்னை எஸ்டேட்க்கு கூட்டிட்டு போறேன் ஆதிரா. அங்கே உன்னோட கேள்விக்கான பதில் இருக்கு. ” என்று விமல் மனதினுள் பேசிக் கொண்டு ஆதிராவின் முகத்தைப் பார்த்தான்.

எள்ளும் கொள்ளும் மாறி மாறி வெடித்துக் கொண்டு இருந்தது அவளது முகத்தினில்.

அவளுக்கு என்ன நடந்தது என்று தெரியாவிட்டால் மூளை வெடித்துவிடும்.

ஆனால் எதையும் தெரிய விடாதபடி வினய் எல்லா இடத்திலும் முட்டுக்கட்டையை போட்டு இருந்தான்.

என்ன செய்து எப்படிக் கண்டுபிடிப்பது? என்று அவள் யோசித்துக் கொண்டு இருந்த நேரம் கார் எஸ்டேட்டை அடைந்தது.

இயலாமையுடன் இறங்கி ஆதிரா நிற்க விமலோ அவளை நோக்கி எதிர் திசையில் கைக்காட்டினான்.

அங்கே கனி நின்றுக் கொண்டு இருந்தாள். அதைப் பார்த்ததும் உள்மனதினில் நம்பிக்கை வெளிச்சம்.

வினய்யின் மீது தான் கொண்ட முதல் சந்தேகத்திற்கு வித்தாய் அமைந்தது கனியின் பேச்சு தான்.

இவளிடம் கேட்டால் உண்மை தெரிய வரும் என்று நினைத்தவள் இரண்டு அடியாகப் பாய்ந்து கனியை நோக்கி சென்றாள்.

“ஆதிரா எப்படி இருக்க. நல்லா இருக்கியா? எப்போ நீ கொடைக்கானல் வந்த.” என்ற கனியின் கேள்விகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு

“கனி நீ அன்னைக்கு ஆம்பளைங்கனாலே தப்பானவங்கனு சொன்னியே, அது வினய்யை நினைச்சு சொன்னியா? என்று மனதினுள் உறுத்திக் கொண்டு இருந்த அந்த கேள்வியைக் கேட்டுவிட்டாள்.

“என்ன ஆதிரா லூசு மாதிரி உளருற. நான் அன்னைக்கு சொன்னது கணேசனைப் பத்தி. அந்த நாய் என் கிட்டே தப்பா நடந்துக்க வந்த அப்போ வினய் தான் என்னைக் காப்பாத்தி என் குடும்பத்தையே பார்த்துக்கிட்டாரு.  அவரைப் போய் நான் எப்படி தப்பானவன்னு சொல்லுவேன். ” என்று கனி சொல்ல ஆதிராவின் கால்களோ நடுக்கம் கொண்டது.

கனி சொல்வது வைத்துப் பார்த்தால் வினய் தான் கனியை கணேசனிடம் இருந்து காப்பாற்றி இருக்கின்றான்.

ஆனால் அந்த கணேசன் நாயோ வினய்யின் மீதே பழியைத் திருப்பி விட்டு இருக்கின்றான்.

ஐயோ ஆரம்பத்திலேயே வினய் சொன்னானே.

கணேசனை நம்பாதே நம்பாதே என்று வினய் சிறுகுழந்தைக்கு சொல்வதுப் போல் சொன்னானே.

நான் கேட்டானா?

தேவையே இல்லாமல் வினய்யின் மீது கோபப்பட்டு இருக்கின்றேனே என்று கண்ணீர்த் துளி அவள் கருவிழியில் இருந்து கன்னத்தை தொட முயன்ற நேரம் அதை இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.

அழ மாட்டேன்.

எதை சொன்னால் நான் உடைந்துப் போய்விடுவேன் என்று வினய் இத்தனை நாள் மறைத்து வைத்தானே அதைக் கேட்டு நான் இன்று அழ மாட்டேன்.

அப்படி அழுதால் அவன் பட்ட காயத்திற்கு எல்லாம் மதிப்பு இல்லாமல் போய்விடும் என நினைத்தவள் மனதைக் கல்லாக்கிக் கொண்டாள்.

நடுங்கும் தன் கால்களை சரி செய்துக் கொண்டாள்

அவளுக்கு பாதி விடை தான் தெரிந்து இருந்தது. இன்னும் மீதி விடை தெரியவில்லை.

அந்த கடிதத்தை எழுதியது யார்?

வினாவுடன் விமலைப் பார்த்தாள்.

அவளது கண்களைப் பார்த்தே புரிந்துக் கொண்டவன் யாருக்கோ கால் செய்து அவளிடம் கொடுத்தான்.

எதிர் முனையில் ஐஸ்வர்யாவின் குரல் கேட்டது.

“சொல்லு விமல்.. என்ன விஷயம்? மறுபடியும் எப்போ இங்கே வரேனு கேட்காதே. அடுத்த வாரம் நான் அங்கே வந்துடுவேன்.” என்று ஐஸ்வர்யா பேசிக் கொண்டே இருக்க ஆதிரா இடைமறித்து “நான் ஆதிரா பேசுறேன் ஐஸ்வர்யா.. ” என்றாள்.

ஆதிராவின் குரலைக் கேட்ட பிறகு ஐஸ்வர்யாவின் குரல் ஒலிக்கவே இல்லை. எதிர் பார்த்து இருந்து இருக்க மாட்டாள் போல.

பின்பு அவளே தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வேகமாக பேச ஆரம்பித்தாள்.

“ஹே ஆதிரா எப்படி டி இருக்க?” என்றுக் கேட்க ” நல்லா இருக்கேன் ஐஸ்வர்யா. எனக்கு ஒரு உண்மை தெரியணும். யார் அந்த லெட்டரை எழுதுனது?” என்ற ஆதிராவின் கேள்விக்கு  எதிர் முனையில் பலத்த மௌனம்.

பின்பு மெதுவான குரலில் ஐஸ்வர்யாவிடம் இருந்து பதில் மொழி வந்தது ” வார்டன். ” என்று

அதைக் கேட்டு ஆதிரா திகைத்துப் போனாள்.

“யார் நம்ம பாய்ஸ் ஹாஸ்டல் வார்டனா.. ” என ஆதிராக் கேட்க ஐஸ்வர்யா ஆம் என ஆமோதித்தாள்.

ஆதிராவுக்கு தலையே சுற்றிக் கொண்டு வந்தது.

வினய்யிற்கும் அந்த வார்டனுக்கும் இடையில் ஏதோ ப்ரச்சனை என்று தெரியும். ஆனால் அந்த ப்ரச்சனை வினய்யின் வாழ்க்கையையே திருப்பிப் போடும் அளவுக்கு அத்தனை வீரியம்மிக்கது என்று ஆதிராவுக்கு தெரியாது.

பல சூழ்ச்சிப் பின்னல்களை  வினய்யை சுற்றிப் பின்னி இருக்கின்றார்கள்.

இது தெரியாமல் நான் அவனை இத்தனை வருடம் வதைத்து இருக்கின்றேன்.

எப்படி வருந்தி இருப்பான் அவன்?

நினைக்கும் போதே மனம் எரிந்தது.

அதற்கு முன்பு அந்த இருவரையும் எரித்துவிட வேண்டும் என்ற வேகம் அவளுள் எழுந்தது.

“விமல் ப்ளீஸ். என்னை முதலிலே ஹாட் சிப்ஸ் கடைக்கும் அடுத்து காலேஜ் ஹாஸ்டலுக்கும் கூட்டிட்டு போக முடியுமா?” என்று ஆதிரா கேட்க விமல் புன்னகையுடன் தலையசைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!