காதல் சதிராட்டம் 29b

காதல் சதிராட்டம் 29b

அந்த கொடைக்கானலின் சில்லென்ற குளிர்ச்சியிலும் அந்த அறை மட்டும்  கோபக் காற்றில் உஷ்ணமாகிக் கொண்டு இருந்தது.

சீறலான முகத்துடன் ஆதிராவை வைபவ் பார்த்துக் கொண்டு இருந்தான்.

திடீரென அவனை அங்கே எதிர்பாராததால் ஆதிரா பட்டென்று எழுந்து நிற்க வினய்யும் உடன் சேர்ந்து எழுந்து நின்றான்.

ஆனால் இருவரும் எதிர்பாராத இந்த அதிர்ச்சியினால் கைகளில் கோர்த்து இருந்த  விரல்களை எடுக்க மறந்துவிட்டனர்.

ஆனால் வைபவ்வின் பார்வை அவர்களது  கோர்த்து இருந்த விரல்களையே ஒரு மாதிரிப் பார்த்தது.

அதை உணர்ந்து வினய் தானாக தன் விரல்களை விலக்கினான்.

  எதுவும் பேசாமல் தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த ஆதிராவைக் கண்டு மேலும் ஆத்திரமடைந்தான்.

“இங்கே என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கலாமா ஆதிரா?” என்று பல்லைக் கடித்தபடி கேட்ட வைபவ்

  “உன்னை நம்பி இங்கே அனுப்புனதுக்கு நீ என்ன பண்ணனுமோ சிறப்பா பண்ணிட்டே.  ஐ ஹேட் யூ ஆதிரா” என்று எதைப் பற்றியும் விளக்கவிடாமலேயே கோபத்துடன் அந்த கடிதத்தை அவள் முகத்தின் மீது வீசி எறிந்தவன் படபடவென படிகளில் இறங்கினான்.

அதுவரை திக்பிரம்மை பிடித்து நின்றவள் வைபவ்வின் அந்த செயலில் ப்ரக்ஞை கலைந்தாள்.

வினய்யை ஒரு முறைத் திரும்பி செயலற்றுப் பார்த்தவள் கண்களால் மன்னிப்பைத் தந்துவிட்டு வேக வேகமாக வைபவ்வின் பின்னால் ஓடினாள்.

“வைபவ் ப்ளீஸ் நில்லு. ” என்று அவள் கத்திக் கொண்டே இருக்க அவன் அந்த வீட்டின் முகப்பு கதவைத் தாண்டி வெளியிலேயே சென்றுவிட்டான்.

அவன் பின்னாலேயே தலைதெறிக்க ஓடியவள் மூச்சு வாங்கியபடி “வைபவ் நீ என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்டே. ப்ளீஸ் நான் சொல்றதைக் கேளு. ” எனக் கெஞ்சிக் கொண்டே இருக்க அவன் நடையை நிறுத்திவிட்டு தீர்க்கமாக திரும்பி அவளைப் பார்த்தான்.

“நான் இப்போ தான் உன்னை சரியா புரிஞ்சுக்கிட்டேன். நீ எனக்கு துரோகம் பண்ணிட்டே. யூ ஆர் சீட்டர் சீட்டர்.”  என சாலை என்று பார்க்காமல்  அவளை நோக்கிக் கத்தினான்.

போவோர் வருவோர் எல்லாம் அவர்களை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டு செல்ல அது ஆதிராவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

மெல்லிய குரலில் ” ப்ளீஸ் வைபவ். இப்படி ரோட்ல கத்த வேண்டாம். ஏற்கெனவே நான் வருத்தத்துல இருக்கேன். ப்ளீஸ் நீயும் என்னை காயப்படுத்தாதே. நான் உனக்கு எல்லாத்தையும் புரிய வைக்கிறேன். ஆனால் இது அதுக்கான இடம் இல்லை. அப்படி ஓரமா போய் பேசலாமே. ரோட்ல போற வர எல்லாரும் ஒரு மாதிரிப் பார்க்கிறாங்க” என்று அவள் அவனை சமாதானப்படுத்த முயன்றாள்.

ஆனால் அவன் இரண்டு மடங்காக வெடித்தான்.

“உன்னை ஒரு மாதிரி லாம் பார்க்கக்கூடாது ஆதிரா. காறித் துப்பிட்டு தான் போகணும்.  உன்னை நம்பி நான் அனுப்புனா நீ அவன் கூட கூத்தடிச்சுட்டு இருக்கீயா ஆதிரா?” என்று அவன் வார்த்தைகளில் அமிலத்தைக் கரைத்தான்.

அந்த அமிலம் அவள் நெஞ்சை திகுதிகுவென பற்றி எறிய வைத்தது.

“வைபவ் என்ன வார்த்தை சொல்ற நீ? புரிஞ்சு தான் பேசுறீயா?” என்று ஆற்றாமையாகக் கத்தினாள்.

“எல்லாம் பார்த்து புரிஞ்சுக்கிட்டு தான் பேசுறேன். என் முன்னாடியே அவனை கட்டிப்பிடிச்சுக்கிட்டு இருக்கேனா, நான் இல்லாத அப்போ அங்கே என்ன என்னலாம் நடந்து இருக்கும்?” என்று மேலும் மேலும் விஷத்தைக் கக்கியவன் வேகமாக அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்.

“வைபவ் சீ என்ன பேச்சு பேசுற. நீ கட்டாயப்படுத்தினதாலே தானே டா நான் இங்கே வந்தேன். இப்போ நீயே என்னைத் தப்பா பேசுறியே? என்னை இங்கே அனுப்பும் போது இருந்த நம்பிக்கை இப்போ எங்கே போச்சு வைபவ்?” என்று பேசியபடியே அவனை நடைபாதையோரம் பின் தொடர்ந்தவளை வைபவ் சட்டென்று சாலையில் தள்ளினான்.

“நான் இங்கே அனுப்பும் போது நீ என்னோட ஆதிராவா இருந்தே அதனாலே உன்னை நம்புனேன். ஆனால் நீ இப்போ வினய்யோட ஆதிராவா மாறிட்டே.  உன் மேலே எனக்கு  கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. அப்படி நம்பிக்கை வரணும்னா நீ ஒன்னு பண்ணனும். verginity test எடுக்கணும். ” என்று வைபவ் சொல்ல ஆதிரா வழியும் கண்ணீரோடு அவனைப் பார்த்தாள்.

“என்னை சீதை மாதிரி தீக்குளிக்க சொல்றீயா வைபவ்?” என்றாள் கண்ணீர்க்குரலில்.

“சீ… சீதைன்ற புனிதப் பெயரை உன் வார்த்தையாலே சொல்லாதே டீ. நீ சிலப்பதிகாரத்திலே வர மாதவி டி. சே எவ்வளவு நம்பிக்கையோட உன்னை அனுப்புனேன். இப்படி சில்லு சில்லா உடைச்சுட்டியே. என்னை விட திடகாத்திரமானவனைப் பார்த்ததும் அவன் கிட்டே விழுந்துட்ட இல்லை. என் கிட்டே இல்லாதது அப்படி என்னத்தை டி அவன் கிட்டே கண்ட. ” என்று அவளது முடியைப் பற்றி ஆங்கராமாகக் கத்தியவன் கோபத்தில் சட்டென்று அவளை சாலையில் தள்ளிவிட்டுவிட்டு அங்கே கடந்து சென்ற பேருந்தில் வேகமாய் போய் ஏறிக் கொண்டான்.

ஆதிரா அவன் தள்ளிவிட்ட இடத்திலேயே சிலை என சமைந்து நின்றாள்.

அவனது வார்த்தைகள் அவளை செயலற்றுப் போய் நிற்க வைத்து இருந்தது.

ஏற்கெனவே ஏஞ்சலின் இறப்பு அவளை பாதி கொன்று இருக்க இப்போது வைபவ்வின் பேச்சு அவளின் மீது பாதி உயிரைக் கொன்று நடைபிணமாக மாற்றியது.

அந்த உணர்வற்ற உடலை விழுங்குவதற்காக ஒரு லாரி வேகமாக வந்துக் கொண்டு இருந்தது.

ஆனால் அதைக் கவனிக்கும் நிலையில் ஆதிரா இல்லை.

அவளது மூளை வைபவ் சொன்ன வார்த்தைகளிலேயே உறைந்துப் போய் இருந்தது.

அந்த லாரி கொஞ்சம் கொஞ்சமாக அவளை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்க சரியாக அந்த லாரியின் முகப்பு விளக்கு அவளைத் தீண்ட வரும் சமயம் வினய் சட்டென்று அவளை இழுத்துப் பிடித்து சாலையின் மறுபக்கத்திற்கு இழுத்தான்.

அந்த லாரி மின்னல் வேகத்தில் உயிரைக் குடையும் ஹார்ன் ஒலியுடன் அவர்கள் இருவரையும் கடந்துப் போனது.

அப்போது  தான் ஆதிராவிற்கு அதுவரை சென்று இருந்த உயிர் மீண்டும் திரும்பி வந்தது.

கண்களில் கண்ணீருடன் வினய்யைப் பார்த்தாள்.

வினய்  எதுவும் பேசாமல் அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

வீட்டிற்குள் நுழைந்த ஆதிரா தன்னறைக்கு சென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.

அவளது இதயம் இறுகிப் போய் இருந்தது.

இறந்த ஏஞ்சலையே அவள் கைகள் வருடிக் கொண்டு இருந்தது.

இதேப் போல இறந்துப் போன தன் மனதை வருட அன்பின் விரல்கள் கிடைக்காதா என மனம் ஏங்கியது.

பல நாள் கழித்துத் தான் ஏன் அனாதையாக இருக்கிறோம் என அவள் உள்ளம் தவித்தது.

எனக்கொரு தங்கை ஸ்தானத்தில் யாராவது இருந்து இருந்தால் இப்படி எல்லாவற்றையும் மனதினுள் பொத்தி வைத்து கஷ்டப்பட்டு இருக்க மாட்டேனே,  அவளது தோள் மீது சாய்ந்து கதறி இருப்பேனே என்று ஏங்கினாள்.

அவளுக்கு இன்று மனதை உடைத்துக் கத்தி அழ வேண்டும் போல் இருந்தது.

ஆனால் தனக்கென ஒரு தோள் இல்லையே என எண்ணி மருகினாள்.

ஒரு தம்பிக் கிடைத்து இருந்து இருக்கக்கூடாதா என ஏங்கினாள்.

தன் அக்காவை இப்படி பேசிய ஒருவனை அவன் புரட்டி எடுத்து இருந்து இருக்க மாட்டானா? என யோசித்துக் கொண்டு இருந்த நேரம்  கதவுத் தட்டப்பட்டது.

சோர்வுடன் எழுந்துக் கதவைத் திறந்தாள்.

எதிரில் உத்ரா கைகளில் உணவுடன் நின்றுக் கொண்டு இருந்தாள்.

அவள் எதிர்பார்த்தது வினய்யின் வரவைத் தான்.

ஆனால் எதிரில் உத்ரா.

அவளுக்கு வினய்யின் இந்த செயல் மனதிற்கு இதமாய் இருந்தது.

வைபவ் சொன்ன வார்த்தைகளை எல்லாம் அவளால் மனது விட்டு வினய்யிடம் சொல்லிக் கத்தி அழ முடியாது. ஆனால் உத்ராவிடம் முடியும்.

தன் தங்கையைப் போல் இருக்கும் உத்ராவிடம் சொல்லி அழ முடியும்.

அழுதாள், அவளைக் கட்டிக் கொண்டு கதறினாள்.

வைபவ் சொன்ன எல்லாவற்றையும் அவளிடம் கொட்டிவிட்டு பாரம் குறைந்த நெஞ்சோடு அவளது தோளின் மீது சாய உத்ரா ஆதுரமாக அவளை வருடிக் கொடுத்தாள்.

“அண்ணி நீங்க வருத்தப்படாதீங்க. அந்த வைபவ் உங்களுக்கு கொஞ்சம் கூட ஏத்தவன் கிடையாது. இப்பவே அவனோட உண்மையான முகம் தெரிஞ்சுதே. அண்ணி அவனுக்கு உங்க மேலேயோ இல்லை இந்த காதல் மேலேயோ சுத்தமா நம்பிக்கை இல்லை. வெறும் நம்புறேனு வாய் வார்த்தை மட்டும் தான் சொல்லிட்டு திரியுறான். அப்படிப்பட்டவனோட காலம் முழுக்க இணைஞ்சு வாழ முடியாது அண்ணி. உங்களோட கண்ணீருக்கு அவன் தகுதியானவன் இல்லை.” என்று உத்ரா அவளது கைகளைப் பற்றிக் கொண்டு சொல்ல வெறுமையான முகத்தோடு உத்ராவைப் பார்த்தாள்.

“நான் அவனை நினைச்சு அழல உத்ரா. என் காதலை நினைச்சு அழறேன். என் காதல் மேலே நான் வைச்ச நம்பிக்கை எல்லாமே சிதைஞ்சுப் போச்சு. அதை சிதைச்சவனை என்னாலே ஒன்னும் பணண் முடியல. அவனோட வார்த்தை என்னை நிலை குலைய நிற்க வைச்சுடுச்சு. அவனை ஒரு அறைக் கூட அறையலேயேனு எனக்கு இப்போ என் மேலேயே கோபம் வருது.” என்றவள் கோபத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போதே ப்ரணவ்வின் குரல் இடைமறித்து ஒலித்தது.

“அண்ணி அவனை ஒரு அறை மட்டும் அறையல. அவன் பல்லையே உடைச்சு அவன் கையிலே கொடுத்துட்டு வந்து இருக்கேன்.” என்று ப்ரணவ் சொல்ல ஆதிரா திகைத்துப் போய் பார்த்தாள்.

“உண்மை தான் அண்ணி. நானும் உத்ராவும் வெளியிலே போயிட்டு திரும்புற சமயத்திலே உங்களை ஒருத்தன் தள்ளி விட்டுட்டு பஸ் ஏறுனதைப் பார்த்துட்டு அவனை குமுறு குமுறுனு குமுறி எடுத்துட்டேன். ஆனால் வீட்டுக்கு வந்த அப்புறம் தான் தெரிஞ்சது. அவன் அந்த பரதேசி வைபவ்னு” என்று சீறலாய் பேசியவன் ” அண்ணி அந்த பரசேசி பத்தி கவலைப்பட்டீங்க எனக்கு கெட்ட கோபம் வரும். ஒழுங்கா சிரிங்க. ” என்றான் கோபமாக.

அவனது கோபமும் அதில் ஒளிந்துக் கிடந்த பாசமும் அவளது முகத்தில் புன்னகையைக் கொண்டு வந்தது.

“சரி அழ மாட்டேன்… ” என்றாள் கண்ணீரைத் துடைத்தபடி.

“என் செல்ல அண்ணி… ” என ப்ரணவ்வும் உத்ராவும் அவர்களைக் கட்டி கொண்ட நேரம் வினய் கைகளில் ஒரு கவரோடு வந்தான்.

மீன் தொட்டியில் இருந்த ஏஞ்சலை அவன் குவளையில் வைத்து இருந்த தண்ணீரில் மாற்றிவிட்டு அவன் கவரில் கொண்டு வந்து இருந்த புதிய மீனை மீன் தொட்டியில் இடம் மாற்றினான்.

அச்சு அசலாய் ஏஞ்சலைப் போலவே இன்னொரு மீனை வாங்கி வந்து இருந்தான்.

ஆதிரா அவனை ஆச்சர்யாமாய்ப் பார்த்தாள்.

அவளைப் பார்த்து லேசாக முறுவலித்தவன்,

“என்ன தான் இரண்டு மீனும் ஒரே மாதிரி இருந்தாலும், இந்த மீனாலே ஏஞ்சலோட இடத்தை ரீப்ளேஸ் பண்ண முடியாது. ஆனால் அந்த வெற்றிடத்தைப் போக்க முடியும். ” என்று வினய் சொல்ல ஆதிரா ஆமாம் என்று ஆமோதித்து ” வெல்கம் டூ மை வெர்ல்ட் என் செல்ல ஏஞ்சலே.. ” என்று அந்த மீனை வெளியில் இருந்து முத்தமிட்டாள்.

“தேங்க்ஸ் வினய்.. ” என்று  சொல்ல புன்னகையால் அதை மறுத்தவன் ” உன் கிட்டே பேசணும் ஆதிரா. ” என்றான் அழுத்தமாக.

அந்த குரலிலேயே ஏதோ முக்கியமான விஷயத்தைப் பேச போகிறான் என்பதை உணர்ந்த உத்ராவும் ப்ரண்வ்வும் வெளியில் வந்தனர்.

வெளியில் வந்தவளின் கைகளைப் பற்றிக் கொண்ட ப்ரணவ் ” ஓகே உத்ரா நீ சொன்னா மாதிரி நாம ரெண்டு பேரும் பிரிஞ்சுடலாமா?” என்றுக் கேட்க  “பிரிஞ்சுடலாமே.” என்று அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டவள் அப்படியே அவனது தோளின் மீது சாய்ந்து கொண்டு

“எனக்கு என்னமோ அண்ணி அண்ணா கூட சேர்ந்துடுவாங்கனு மனசு சொல்லுது ப்ரணவ். அது வரை நாம இப்படியே பிரிஞ்சு இருக்கலாம்.” என்றபடி அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“ஹ்ம்ம்ம் அம்மு இதே மாதிரியே நாம ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்கலாம்.” என்று அவனை மேலும் இறுக்கிக் கொண்டான் அவன்.

உள்ளே வெறுமைக் கண்களோடு நின்று இருந்த ஆதிராவையே  சோகமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான் வினய்.

அவளை உடைக்கக்கூடாது என்பதற்காக அவன் மனதினுள்  புதைத்து வைத்து இருந்த பல சொல்லப்படாத உண்மைகளால் இன்று இவள் இப்படி துண்டுத் துண்டாய் சிதறிவிட்டது அவனை வருத்தத்திற்குள்ளாக்கி இருந்தது.

இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டேன்? என்று அவன் கண்களில் ஆற்றாமையின் விளைவால் கண்ணீர் ஊறத் தொடங்கியது.

அவளது கலங்கிய கண்களைக் கண்டு கலங்கிப் போய் இருந்த அவளே மனது தாங்காமல் அவனை சமாதானம் செய்ய முற்பட்டாள்.

“வினய் ப்ளீஸ் நீ வருத்தப்படாதே. என் காதல் பொய்.  அதனாலே தான் எனக்கு இவ்வளவு வலி. இந்த வலி எல்லாத்துக்கும் நீ காரணம் இல்லை. நான் பண்ண முட்டாள்தனமான காதல் தான் காரணம்.” என்று சொல்ல வினய் அவளை மேலும் பேசாமல் கைகளை நீட்டி இடை நிறுத்தியவன்  அவளது முகத்தைப் பார்த்துக் கூர்மையாகக் கேட்டான்.

“Do you still வைபவ்? அப்படி இருந்தா சொல்லு ஆதிரா நான் அவன் கிட்டே பேசுறேன்.  இந்த குழப்பத்திற்கு எல்லாம் நான் தான் காரணம்.  நானே சரி பண்ணிடுறேன்” என்றவனது வார்த்தை உடைபடாமல் இருந்தாலும் அவனது குரலில் வருத்தம் ஒட்டி இருந்தது.

அவள் இன்னும் அந்த வைபவ்வை காதலிக்கிறாளா என்று இறுதியாக அறிந்துக் கொள்ள முற்பட்டான்.

ஆனால் ஆதிராவிடம் இருந்து உறுதியான இல்லை என்ற தலையசைப்பு வந்தது.

“நான் அவனை மனசார வெறுக்கிறேன் வினய்.. என்னை என் பெண்மையை கேள்விக்குறியாக்குனவன் கூட என்னாலே வாழ முடியாது. உனக்கு நான் முக்கியமா நன்றி சொல்லணும். நீ மட்டும் அந்த நிபந்தனையை போடலனா அந்த வைபவ்வோட உண்மையான நிறம் எனக்குத் தெரிஞ்சு இருக்காது.” என்று நிறுத்தியவள் ஒரு வருத்தப்புன்னகையுடன் ” இந்த காதல் பொய் வினய். நான் மனசார நம்புன இந்த காதல் என்னைப் பொய்யாக்கிடுச்சு. எனக்கு துரோகம் பண்ணிடுச்சு. ” என்றாள் கண்ணீர் குரலில்.

“இல்லை ஆதிரா உன் காதல் உண்மையானது. ” என்றான் வினய் மனப்பூர்வமாக.

“என்ன சொல்ற வினய்.. நான் வைபவ் மேலே வைச்ச அந்த காதல் தான் என்னை இப்படி சிதைச்சுப் போட்டு இருக்கு.அது எப்படி உண்மையானதாகும்?”என்றாள் புரியாமல்.

“உன் காதல் உண்மையானது.. ஆனால் நீ அதை வைபவ் மேலே வைச்ச பார்த்தீயா அது தான் தப்பு. நீ காதலிச்சது என்னை தான்.” என்றான் ஆணித்தரமாக.

“வாட்” என்றாள் இவள் அதிர்ச்சியாக.

“ஆதிரா நான் இந்த வாட்டி கேட்கிற கேள்விக்கு உண்மையா பதில் சொல்லணும். முதல் வாட்டி மாதிரி பாதி பதிலை மட்டும் சொல்லிட்டு மீதிக் கதையை சொல்லாம போகக்கூடாது. சரி சொல்லு, நீ வைபவ்வை காதலிக்க உண்மையான காரணம் என்ன?” என்று வினய்க் கேட்க ஆதிரா தயங்கி தயங்கி உண்மையை சொல்ல ஆரம்பித்தாள் அவள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!