காதல் தீண்டவே-18
காதல் தீண்டவே-18
வெள்ளி நிலவை மூடிய முகில்கள்.
வீசும் தென்றலில் மண்வாசத்தின் சாயல்.
சருகுகள் மிதிப்பட இருவரிடமும் அமைதியான நடை.
அந்த மௌன கண்ணாடியை உடைக்கும் விதமாய் தீரனின் குரல்.
“மிதுரா, ஆர் யூ ஷ்யுர்? இது சரியான வழி தானா?” வந்த பாதையைத் திரும்பி பார்த்தபடி சந்தேகமாய்க் கேட்டான்.
“ஆமாம் தீரன், இந்த பக்கமா தான் நாம வந்தோம்” என்றவளது விழிகளிலோ மெல்லியதாய் ஒரு படபடப்பு.
உண்மையைக் கண்டுபிடித்துவிடுவானோ என்ற பயத்தினால் வந்த படபடப்பு அது.
அவள் மனம் கவர்ந்த ஆதனுடனான இந்த பயணத்தை அத்தனை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதில் அவளுக்கு விருப்பமில்லை.
ஆதலால் ரிஸார்ட் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் அவனை வழிநடத்திக் கொண்டு வந்திருந்தாள்.
வானொலி நிகழ்ச்சியை தவறவிட்டுவிடுவோமோ என்ற பதற்றத்தில் நடந்து வந்த தீரனும் முன்பு வந்த வழியைக் கவனிக்க மறந்துப் போயிருந்தான்.
அந்த மறதி அவளுக்கு இப்போது மிக வசதியாகப் போய்விட்டது.
“தீரன், அதோ அங்கே ஒரு மரம் தெரியுதில்லை. அந்த பக்கமா தான் வந்தோம்” தவறான திசையை சுட்டிக்காட்டியவள் தன் பொய் வழியும் முகத்தை அவனிடமிருந்து மறைக்கும் வண்ணமாய் வேக எட்டு வைத்து மடமடெவென்று நடந்தாள்.
அவளது அவசர நடையைப் பார்த்தவன் “மிதுரா பார்த்து நட… ” என எச்சரித்து முடிப்பதற்குள் கீழே விழுந்து வைத்திருந்தாள்.
பதற்றமாய் அவளருகில் வந்தவன்
“மிதுரா ஆர் யூ ஃபைன்?” என்று கேட்டபடி பக்கத்தில் அமர்ந்து காலை ஆராய முயன்றான்.
“நோ ஐ யம் நாட் ஃபைன்” வலியோடு சொன்னவள் தன் பாதத்தை அவனிடம் காண்பித்தாள்.
நிலவொளியின் வெளிச்சத்தில் அந்த பாதத்தில் சிவப்பு பொட்டுகளாய் பல உதிரத் திட்டுகள்.
காயம்பட்ட பாதத்தைத் தன் கைகளினால் மென்மையாகப் பற்றியவன் “பார்த்து வந்து இருக்கக்கூடாதா?” என்ற கேள்வியை விழிகளில் தாங்கியபடி வருத்தத்தோடு அவளைப் பார்த்தான்.
அவனை மேலும் கவலைப்படுத்தும் விதமாய் வானத்தில் சின்னதாய் ஒரு கீறல் விழுந்தது. அதில் இருந்து கற்றையாய் ஒரு ஒளிசிதறல்.
மின்னலின் ஆதித் தொடக்கம் அது!
பறையோசையோடு இடி வேறு முழங்கி மழை வருகையின் முன்னறிவிப்பை தெரிவித்துவிட தீரனின் நெற்றியில் பல யோசனைகோடுகள்.
ஏற்கெனவே நள்ளிரவைக் கடந்தாயிற்று. இப்போது இவளது காலில் வேறு அடி. அடிப்பட்ட காலோடு இந்த காட்டை கடப்பது சிரமம் என்று புரிந்தவன் கவலையோடு திரும்பி அவளைப் பார்த்தான்.
“மிதுரா இந்த காலை வெச்சுட்டு உன்னாலே நடக்க முடியுமா?” அவன் கேட்க இவள் முடியாதென்று தலையசைத்தாள்.
“மழை வரா மாதிரியிருக்கு மிதுரா. நாம சீக்கிரமா ரிஸார்ட்க்கு போறது தான் நல்லது. பட் அடிப்பட்ட காலோட வேகமா நடக்கிறது சிரமம். சோ வித் யுவர் பெர்மிஷன்… நான் உன்னை தூக்கலமா?” என்றான் அவள் விழிகளைப் பார்த்து.
அவன் கூறியதைக் கேட்டு மிதுராவின் முகத்தினில் பௌர்ணமி பிரகாசம். அவளது பார்வைக் கொடி தீரனின் மீது வேகமாய்ப் படர்ந்தது.
உயிரை ஈர்க்கும் அந்த பார்வையின் வசீகரத்தைத் தாங்க முடியாமல் தீரனின் விழிகளில் ஒரு திணறல்!
அவனின் மோன நிலையைக் கலைக்கும்விதமாய் வானம் மீண்டும் ஒரு மின்னல் கோடு இழுத்தது.
அதில் தன்னிலைக்கு வந்தவன் நெற்றியிலோ இப்போது ஒரு சிந்தனை முடிச்சு. ஏதோ யோசித்து பின்பு ஏதோ முடிவு எடுத்தவன் இப்போது நிமிர்ந்தான்.
இப்போது தீரனிடம் முன்பு இருந்த திணறல் இல்லை. முகம் முழுக்க ஒரு வெறுமை.
மௌனமாய் ஒரு பார்வைப் பார்த்தான் அவளை. அந்த மௌனத்தின் ஆழத்தை நெருங்க முடியாமல் தவிப்போடு அவனைப் பார்த்தவளை நோக்கி
“பர்மிஷன் க்ராண்டட் ஆர் நாட்?” என்றுக் கேட்டான்.
“அடேய் மடையா! உனக்கு மட்டும் தான் அந்த பர்மிஷன் இருக்குடா.” என்று மனதினில் செல்லமாக திட்டியவள் எதுவும் பேசாமல் தன் கையை அவனை நோக்கி நீட்டி தூக்கும்படி சமிக்ஜை செய்தாள்.
அடுத்த நொடி அவனது கரத்திற்குள் அடங்கிப் போயிருந்தாள் அவள்.
எத்தனையோ சினிமாக்களில் பார்த்தது. எத்தனையோ நாவல்களில் படித்தது.
இன்று அதே காட்சி தான் அவளது வாழ்க்கையிலும் நடந்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் மிக வித்தியாசமாக!
நாவல்களில் எழுதியபடி இவன் என்னை பூக்குவியலைப் போல தூக்கிக் கொண்டு போகவில்லை. படத்தில் காட்டுவது போல கண்களில் காதலை தேக்கியபடியும் இவன் என்னை பார்க்கவில்லை.
எடைக்குப் போட போகும் பழைய நோட்டுப் புத்தகத்தைத் தூக்கி கொண்டு போவது போல் என்னை தூக்கிக் கொண்டு செல்கின்றான் இவன்.
அடேய் தீரா! உன் சிஸ்டத்திலே இன்னும் நீ ரொமான்ஸ் சாஃப்ட்வேரை டவுன்லோட் பண்ணலயா? கேள்வியோடு அவனையே உற்றுப் பார்த்தபடி வந்திருந்தவளை நோக்கி “இப்போ எந்த பக்கமா போகணும்” என்றுக் கேட்டான்.
மிதுராவின் முகத்தினில் பதில் சொல்ல முடியாத திருதிருப்பு.
அந்த நேரம் பார்த்து வான மாலையில் இருந்து நீர்முத்துக்கள் மெல்ல சிதறத் தொடங்கியிருந்தது.
இந்த தூறல், மழையாய் மாறுவதற்கு முன்பு ரிஸார்ட்டிற்கு செல்ல வேண்டுமானால் உண்மையை சொல்லியே ஆக வேண்டுமென உணர்ந்தவள் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு எதிர்திசையை சுட்டிக் காட்டினாள்.
தீரன் அதிர்ந்துப் போய் அவளைப் பார்த்தான்.
“அப்போ இவ்வளவு நேரமா நாம தப்பான திசையிலே தான் நடந்துட்டு இருந்தோமா?” அவன் அழுத்தமாய்க் கேட்க இவள் மௌனமாய் தலையாட்டினாள்.
“ஏன் தப்பா வழி சொன்ன மிதுரா?” கோபமாய் கேட்டவனுக்கு ‘உன் கூட கொஞ்சம் நேரம் தனியா இருக்கணும்னு ஆசைப்பட்டேன்ற உண்மையையா சொல்ல முடியும். வேற ஏதாவது காரணம் யோசி மிது’ என்று மனதுக்குள் காரணத்தைத் தேடிக் கொண்டிருந்தவளுக்கு உதவியாய் வானம் தன் கரத்தை நீட்டியது.
மெல்லியதாக ஆரம்பித்திருந்த சாரல் இப்போது வேகம் பிடித்திருந்தது.
இந்த அடைமழையில் பதிலைக் கேட்டு நிற்பதற்கெல்லாம் அவகாசமில்லை என்று உணர்ந்தவன் வேக வேகமாய் அவளை கையில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்திருந்தான்.
இருவரையும் மழைநீர் முற்றிலுமாக நனைத்திருந்தது. காற்றில் வேறு குளிரின் கூட்டல்.
மழைநீர்ப்பட்டு மிதுராவின் உடல் நடுங்குவதை அவனது கரங்களால் நன்றாக உணர முடிந்தது.
அதுவரை பட்டும் படாமல் தள்ளிப் பிடித்திருந்தவன் இப்போதோ குளிரைப் போக்கும்விதமாய் அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தபடி நடக்கத் துவங்கினான்.
ஆனால் தன் இதயத்தின் வெட்பம் அவளை மேலும் குளிரச் செய்யும் என்பதை இந்த தீரன் உணரவில்லை பாவம்!
💐💐💐💐💐💐💐💐💐
ரிஸார்ட்.
இங்கோ சிற்பியும் அபியும் தங்கள் கலவரமான விழிகளால் அந்த ரிஸார்ட்டையே பார்வையால் அலசிக் கொண்டிருந்தனர்.
ராஜ்ஜின் விழிகளிலோ சொல்ல முடியாத கவலை ஊறியிருந்தது.
தன் உயிருக்குயிரான நண்பனையும் காணவில்லை. பழகிய சில நாட்களிலேயே தன் மீது நேசம் செலுத்திய மிதுராவையும் காணவில்லை.
அவன் இதயத்தை சொல்ல முடியாத பயம் ஆக்கிரமித்திருந்தது.
நள்ளிரவு நேரத்தில் என்ன செய்வது? எங்கு சென்று அவர்களை தேடுவது? இந்த புது இடத்தில் யாருக்கு தகவல் அளிப்பது? என்று மூவருக்குமே புரியவில்லை.
மிதுராவின் அலைப்பேசிக்கு பல முறை அழைப்பு விடுத்தும் எடுக்கப்படாதது அவர்களை கவலையில் தள்ளியிருந்தது.
மழையில் நனைந்து அந்த அலைப்பேசி உயிரிழந்ததை மூவரும் அறியவில்லை பாவம்!
தீரனோ தன் அலைப்பேசியை அறைக்குள்ளேயே வைத்துவிட்டுப் போய் இருந்தான்.
ஒரே நேரத்தில் இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. காண முடியவில்லை.
இருவரும் வெவ்வெறு திசையில் வழித்தவறி போய்விட்டார்களா?
இல்லை ஒரே திசையில் பயணத்து தொலைந்து போய்விட்டார்களா? என்று யூகிக்க முடியாமல் தேடி அலைந்துவிட்டு அந்த ரிஸார்ட்டின் முகப்பிலிருக்கும் தோட்டத்திற்கு பதற்றமாய் வந்து நின்றபோது மூவரின் முகத்தில் சட்டென ஒரு மாற்றம்.
அங்கே தீரன் மிதுராவை தாங்கியபடி ரிஸார்ட்டிற்குள் வந்துக் கொண்டிருந்தான்.
சிற்பிகா ஓடிச் சென்று தன் கைகளில் இருக்கும் குடையை தீரனுக்கும் மிதுராவுக்கும் பிடித்தாள். அபியோ அவன் கைகளில் வைத்திருந்த குடையை சிற்பிக்கும் சேர்த்து பிடித்தான்.
ராஜ்ஜின் கையிலிருந்த குடையோ பிடிமானமின்றி நழுவி கீழே விழுந்தது.
மழையில் நனைந்தபடி இருவரையும் கண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.
தீரனோ ராஜ்ஜின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் ஒருவித தயக்கத்துடன் கீழே குனிந்துக் கொண்டான்.
தீரனுக்குத் தெரியும் ராஜ்ஜிற்கு மிதுராவை அதிகமாகப் பிடிக்குமென்று.
அவன் இத்தனை காலம் கழித்து நெருங்கிப் பழகும் ஒரே பெண் என்றால் அது மிதுரா மட்டும் தான்.
முன்பே ராஜ்ஜுக்கு சொந்தமான காதலை தான் இடையில் புகுந்து தட்டிப் பறித்த குற்றவுணர்வு அவனை சூழ்ந்திருந்தது.
இப்போதும் அதேப் போல அவனுக்கு பிடித்த மிதுராவையும் தான் தட்டிப் பறிக்க முயல்வதாய் தன் நண்பன் நினைத்துவிடுவானோ என்ற பயம் அவன் இதயத்தை கவ்வியிருந்தது.
அந்த கலக்கத்தால் ராஜ்ஜின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் திணறியவனை சிற்பிகாவின் குரல் கலைத்தது.
“தீரன், மிதுராவுக்கு என்ன ஆச்சு?” பதற்றமாய் கேட்டாள் அவள்.
“கீழே விழுந்துட்டா சிற்பி, பாதத்துலே அடிப்பட்டிருக்கு” சுருக்கமாக சொல்லியவன் அவர்களது அறையில் கொண்டு சென்று நாற்காலியில் அமர வைத்துவிட்டு தன்னறைக்குள் சென்று மருந்தை கொண்டு வர வெளியே செல்ல முயன்ற நேரம் ராஜ் மருந்தோடு உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தான்.
மிதுராவின் பாதங்களை குழந்தையைக் கையாளும் லாவகத்தோடு பற்றிய ராஜ்
மெல்ல காயத்திற்கு மருந்திட துவங்கினான்.
ராஜ் மிதுராவிற்கு போட்ட மருந்து இங்கே தீரனின் மனதினில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
மௌனமாய் அங்கிருந்து நகர்ந்து வெளியே வந்தவன் வெளியே பலமாக பெய்த மழையைப் பார்த்தபடி அப்படியே நின்றான்.
ஏற்கெனவே மழையில் நனைந்துப் போய் இருந்தவனின் மீது ஈரக்காற்று மோதி மேலும் குளிர்விக்க முயன்றுக் கொண்டிருந்தது. ஆனால் அதை எல்லாம் உணரும் நிலையில் தீரன் இல்லை.
அவன் உள்ளம் முழுக்க ஒரே யோசனை. ஒரே கேள்வி. ஒரே வருத்தம் தான்.
‘ஏன் ராஜ், நம்ம ரெண்டு பேருக்கும் எப்பவும் ஒரே பொண்ணை பிடிச்சுப் போகுது ‘ வலியுடன் நினைத்த நேரம் வெளியே ஒரு இடி விழுந்தது. அவன் மனதினில் விழுந்த அதே இடியைப் போல.
உணர்ச்சியற்ற பார்வையோடு மழையை வெறித்துக் கொண்டு இருந்தவனின் தோளில் விழுந்தது ஒரு கரம். திரும்பிப் பார்க்காமலே “ராஜ்” என்றான்.
ராஜ்ஜோ தீரனின் முன்பு வந்து நின்று முறைத்தான்.
“இப்படி தான் எதுவும் சொல்லாம போவீயா?” என்று கேட்டான் கோபமாய்.
தீரன் பதிலின்றி ராஜ்ஜை வெறித்தான்.
“தீரா, மிதுரா வந்த அப்புறம் நான் மாறலை… நீ தான் மாறிட்ட. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் எப்பவும் வெளியே போவோம். ஆனால் நீ இன்னைக்கு என்னை தனியாவிட்டுட்டு போயிட்டே இல்லை.” என்று சொல்லிய ராஜ், தீரன் முன்பொரு நாள் முகத்தை வைத்துக் கொண்டு சிணுங்கியதைப் போல இவனும் சிணுங்கி கொண்டு நின்றான்.
அவனது கன்னத்தை செல்லமாக பிடித்து கொஞ்சிய தீரன், அலைப்பேசியை எடுக்க காட்டிற்குள்ளே போய் வழிமாறி மீண்டு வந்த கதையை ராஜ்ஜுக்கு சொல்ல எத்தனித்த நேரம், ராஜ் அவனைத் தள்ளிக் கொண்டு அறைக்குள் வந்தான்.
“என்னை விட்டுப் போய் இருக்கேனா அதுக்கு தவிர்க்க முடியாத ஒரு காரணம் இருக்கும்னு எனக்கு தெரியும் தீரா, எனக்கு எந்த எக்ஸ்ப்ளனேஷனும் வேண்டாம். சும்மா நீ சொன்ன டயலாக்கை நானும் சொல்லிப் பார்த்து உன்னை வெறுப்பேத்தினேன். ” என்ற ராஜ்ஜின் உதட்டசைவைப் படித்தவனோ, நண்பனின் நம்பிக்கையை கண்டு நெகிழ்வில் அப்படியே நின்றான்.
“மரம் மாதிரி நிற்காம போ போய் முதலிலே சட்டையை மாத்திட்டு ஃப்ரெஷ் ஆகிட்டு வா. உடம்புக்கு ஏதாவது வந்துட போகுது. ” என்று சொல்லியபடி வெளியே சென்ற ராஜ்ஜையே கவலையாக தொடர்ந்தது தீரனின் விழிகள்.
“ராஜ், முதல் தடவை பண்ண அதே தப்பை நான் இந்த முறை பண்ண மாட்டேன். உன் சந்தோஷத்தை பறிக்கமாட்டேன்டா. இனி மிதுராவை விட்டு ஓரடி விலகியே இருப்பேன் ” என்று தீரன் மனதிற்குள் முடிவெடுத்து நிமிர்ந்த நேரம்,
தீரன் மனதிற்குள் எப்படி நெருங்கலாம்? என்று மிதுரா யோசிக்க துவங்கியிருந்தாள்.
பார்க்கலாம் யார் யாரை நெருங்குகிறார்கள் என்று.