காதல் தீண்டவே-9

காதல் தீண்டவே-9

சில நேரங்களில் அப்படி தான் ஒரு பதில், பல ஆயிரம் கேள்விகளை உள்ளுக்குள் உருவாக்கிவிடும்.

அதேப் போல தான் ராஜ் அளித்த ஒரே பதில், பல கேள்வித்திரிகளை அவளுள் சுடர விட்டு இருந்தது.

அவன் அனுப்பிய அந்த பதிலை மீண்டும் படித்துப் பார்த்தாள்.

அதில் அவன் வரையவில்லை என்ற செய்தி தெளிவாக படர்ந்துக் கிடந்தது.

அவன் வரையவில்லை என்றால் வேறு யார் வரைந்து இருப்பார்கள் என்ற கேள்வி இப்போது மனதைக் குடையத் தொடங்கியிருந்தது.

அதை அவனிடம் கேட்டும் விட்டாள்.

ஆனால் அவனோ இதைக் கொடுத்தவரிடம் யார் வரைந்தது என சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டதாகவும் ஆதலால் இப்போது தான் கூறும் நிலையினில் இல்லை என்றும் மன்னிப்புத் தெரிவித்துவிட்டான்.

மீண்டும் விடை அறியாத வினாவாக நின்றுவிட்டாள்.

யாராக இருக்குமென்று அவளால் ஊகிக்கவே முடியவில்லை. ஊகிக்க முடியுமா என்றும் தெரியவில்லை.

கேள்விகளோடே படுக்கையில் உருண்டுக் கொண்டு இருந்தவளை உறக்கம் வந்து கடத்தி செல்ல முயன்ற நேரம் அவளது அலைபேசி ஒளிர்ந்து தூக்கத்தைக் கலைத்தது.

எடுத்துப் பார்த்தாள்.

சேமிக்கப்படாத எண்ணில் இருந்து  குறுஞ்செய்தி வந்து இருந்தது.

திறந்து பார்த்தாள்.

“Hai. I’m dheeran” என்ற செய்தி அதில் ஒளிர்ந்தது.

அதைக் கண்டவள் கோபமாக அலைப்பேசியை அணைத்துவிட்டு மீண்டும் படுக்கையில் விழுந்தாள்.

அவளது மனம் முழுக்க தீரனின் மீதான கோபம் ஆக்கிரமித்து இருந்தது.

தன் மீதான நியாயத்தைப் பேசவிடாமலேயே தண்டித்த அவனோடு பேச அவளுக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லை.

அவனை எண்ணியபடியே கட்டிலில் புரண்டவளுக்கோ தூக்கம் கண்களை விட்டு சென்றுவிட்டது. தூக்கம் வராது என்பதும் புரிந்துவிட்டது.

மணியைப் பார்த்தாள்.

இரவு பதினொன்னரையை நெருங்கி இருந்தது.

அவள் விழிகள் அலைப்பேசியின் மீது பாய்ந்தது.

எப்போதும் சோர்வாக இருக்கும் போது ஆதனின் குரலில் சுருண்டுக் கொள்வாள்.

இன்றும் அந்தக் குரல் மீது சாய்ந்துக் கொள்ள ரேடியோவை உயிர்ப்பித்தாள்.

மெல்லக் காற்றை விழுங்கத் தொடங்கி இருந்தது ஆதனின் குரல்.

“ஹாய் மக்களே. இன்னைக்கு நாம எதைப் பத்தி பேசிட்டு இருக்கோம்னா,
ஏதாவது ஒரு பொருள் திடீர்னு கண்ணிலே பட்டு நம்ம கடந்து வந்த பாதைகளை மனக்கண்ணிலே அப்படியே படரவிடும்.

சில சமயம் எதனாலே அந்த பொருள் நம்ம முன்னாடி வந்ததுனு கூட நமக்குத் தெரியாது. ஆனால் நம்ம எதிர்பார்க்கத் தருணத்திலே நம்ம முன்னாடி வந்து நிற்கும்.

அந்த பொருளைத் தேடியோ அது எப்படி வந்ததுனோ தேடி நாம போனா நம்மளோட நிம்மதி தான் போகும்.

அதனாலே நினைவுகளைத் தேடிப் போங்க… அதை நினைவூட்டின பொருட்களைத் தேடிப் போகாதீங்க.

அந்த நினைவுகளிலே நீங்க ஏதாவது தப்பு செய்திருந்தா இனி அப்படி பண்ணக்கூடாதுனு முடிவு எடுத்துக்கோங்க.

நல்லது பண்ணியிருந்தா இனி அதே மாதிரி செய்யனும்னு உறுதி எடுத்துக்கோங்க சரிங்களா?

இப்போ உங்களோட எல்லாரோட நினைவை விரிக்கிறா மாதிரி ஒரு பாட்டு வரப் போகுது. ஸ்டே டியூன்ட். நீங்க கேட்டுட்டு இருக்கிறது சில்லுனு ஒரு காதல்.” என்று சொல்லி ஆதன் குரல் முடிய இளையராஜாவின் இன்னிசை, வாயு மண்டலத்தை ஆக்கிரமிக்கத் துவங்கியிருந்தது.

நினைவோ ஒரு பறவை
   அது விரிக்கும் தன் சிறகை
பறக்கும் அது கலக்கும்
    தன் உறவை

என்ற பாடல் ஒலிக்க மிதுராவின் இதழ்களில் புன்னகைக் கீற்று.

குழம்பிப் போய் இருந்த மனதினில் புதிதாய் ஒரு வெளிச்ச மின்னல்.

அவளுக்கான எல்லா பிரச்சனைகளுக்கும் ஆதனிடம் தீர்வு எப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது.

அந்த குரல் தந்த நிம்மதியுடன் அவன் சொன்ன வார்த்தைகள் தந்த இதத்துடன் எதைப் பற்றியும் யோசிக்காமல் மீண்டும் படுக்கையில் சாய்ந்தாள்.

இம்முறை அவளை நிம்மதியான ஒரு  உறக்கம் ஆட்கொண்டு இருந்தது.

💐💐💐💐💐💐💐💐

தூக்கம் வராமல் வராண்டாவில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக் கொண்டு இருந்த சீமாவை அறைவாயிலில் நின்றபடி பார்த்துக் கொண்டு இருந்தார் விஸ்வம்.

ஏதோ பார்வைத் தன்னை தீண்டுவது உணர்ந்து சட்டென்று திரும்பிப் பார்த்தது சீமாவின் விழிகள்.

அங்கே அவரைப் பார்த்ததும் சிரிப்பதா? முறைப்பதா? சங்கடப்படுவதா? இல்லை எப்படி முகத்தை வைப்பது என தெரியாமல் தவிப்பைக் காட்டியது சீமாவின் முக பாவனைகள்.

அதைப் பார்த்த விஸ்வத்தின் முகத்தில் மெல்லியதாய் ஒரு புன்னகை.

மெல்ல சீமாவை நோக்கி நகர்த்திச் சென்றது அவருடைய கால்கள்.

சீமா என்று மென்மையாக அழைத்தது உதடுகள்.

சீமாவும் நிமிர்ந்துப் பார்க்க அடுத்து விஸ்வம் கேட்ட  கேள்வி அவரை கண்ணீர்த் திரையிட தலைக் குனிய வைத்தது.

“சீமா,எதுக்காக கிடைக்காத ஒன்னுக்காக ஏங்கி ஏங்கி உன் தூக்கத்தை இப்படி தொலைக்கிற?  உன்னாலே இன்னும் கண்டுபிடிக்க முடியும்னு நினைக்கிறியா?” என்ற விஸ்வத்தின் கேள்விக்கு சீமாவிடம் விடையில்லை.

கிட்டத்தட்ட இருபத்து நான்கு வருடத் தேடல் அல்லவா அது.

அறுதியிட்டு சொல்ல முடியாத தேடல்.

கண்டிப்பாக கிடைத்துவிடும் என்ற உறுதியுடன் தேட முடிந்த தேடல் அல்ல அது. கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்துடன் தேடும் தேடல் அது.

“கண்டுபிடிக்க முடியுமானு தெரியல. ஆனால் எப்படியாவது கண்டுபிடிச்சுடலாம்ன்ற ஒரு நம்பிக்கை தான் என்னை இன்னும் உயிரோட வெச்சு இருக்கு.” என்ற சீமாவின் பதில் மொழிக்கு
தலையசைப்பைத் தவிர்த்து வேற எந்த பதிலும் இல்லை விஸ்வத்திடம்.

எதுவும் பேசாமல் வருத்தம் தோய்ந்த முகத்துடன் சென்று கொண்டு இருந்த விஸ்வத்தைப் பார்த்து சீமாவாலும் வருத்தப்பட மட்டும் தான் முடிந்தது.

💐💐💐💐💐💐💐💐💐💐

காலை நேர இளங்காற்று சிற்பிகாவை ஆதூரமாக வருடிச் சென்றது.

அந்த வருடலை ரசித்தப்படி மென்னடை போட்டு நடந்துக் கொண்டு இருந்தவளின்  முன்னால் வேக நடைப் போட்டு அவசர அவசரமாக சென்றுக் கொண்டு இருந்தான் அபினவ்.

எப்போதும் அவளருகே அமர்பவன் இன்று வேறொரு இருக்கையில் அமர்ந்து பயணித்து இருந்தான். எப்போதும் அவளுடன் இறங்குபவன் இன்று மட்டும் வேகமாக இறங்கி அவளுக்கு முன்பே வேகநடைப் போட்டு நடந்துக் கொண்டு இருந்தான்.

அவனுடைய செயல்களையே விசித்திரமாகப் பார்த்தபடி நடந்து வந்த சிற்பிகாவுக்கு அடுத்து நடந்த காட்சியும் மிக விசித்திரமாகவே அமைந்தது.

அரக்கப் பறக்க சென்றுக் கொண்டு இருந்தவன் சட்டென்று தடுமாறி கீழே விழுந்துவிட்டான். நல்ல வேளை அது புல் தரை இருக்கும் பகுதி என்பதால் பலமாக அடிப்பட வாய்ப்பில்லை.

எனவே மனதினில் தோன்றிய பதற்றத்தை மறைத்துக் கொண்டு அவனை தூக்கப் போகும் போது தான் அவன் செய்த செயலைக் கண்டு மிரண்டுப் போய் நின்றுவிட்டாள்.

கீழே விழுந்தவனுக்கு அசிங்கமாக இருந்து இருக்கும் போல. அதனால் விழுந்த வலியை மறைத்து இயல்பான முகத்தை வைத்துக் கொண்டவன் அப்படியே அந்த புல்தரையின் சாவகாசமாக உருண்டு “Push ups ” எடுப்பதுப் போல் சமாளித்துக் கொண்டு இருந்தான்.

அதைக் கண்டு தூக்கிவிட அவனருகே ஓடிப் போனவளின் கைகள் அப்படியே தடைப்பட்டு நின்றது.

முகத்தில் அதுவரை படர்ந்திருந்த பதற்றம் பட்டென மறைந்துப்  போக பெருஞ்சிரிப்பு ஒட்டிக் கொண்டது. அவனைக் கண்டு அடக்கமாட்டாமல் சிரித்தாள்.

ஆனால் அவனோ இவளைத் திரும்பிக் கூட பார்க்காமல் வேகமாய் ஓடிப் போய் இருந்தான்.

“ஐயையோ என் மானம் போச்சே. மருவாதை போச்சே. இனி மேல் அவள் முன்னாடி கெத்தா இருக்கணும்னு காலையிலே எடுத்த முடிவு நாசமா போச்சே. அவள் முன்னாடியே இப்படி விழுந்து வாரி வெச்சு இருக்கனே.” என்று புலம்பியபடியே உள்ளே நுழைந்த அவனை அங்கே இருந்தவர்களின் விசித்திரமான பார்வை தான் வரவேற்றது.

அதை எல்லாம் தவிர்த்துவிட்டு வேக வேகமாய் சென்று தன் இருக்கையில் வந்து அமர்ந்தான். அவனையே உற்றுப் பார்த்தபடி மிதுரா நின்றுக் கொண்டு இருந்தாள்.

“என்ன ஆச்சு அபி சார்? ஏன் ஷர்ட்டெல்லாம் ஒரே கறையா இருக்கு?” என்ற மிதுராவின் கேள்விக்கு பதில் சிற்பிகாவிடம் இருந்து பதில் வந்தது.

“அது புல் தரையிலே push ups எடுத்தா இந்த மாதிரி கறைப்படும்னு கேள்விப்பட்டு இருக்கேன் மிதுரா. “

“எந்த மடையனாவது புல் தரையிலே push up எடுப்பானா? அதுவும் ஃபார்மல் ட்ரெஸ்ஸோட… ஏன் சம்பந்தமே இல்லாத பதிலை சொல்ற சிற்பி?”

“அது சம்பந்தப்பட்டவங்களுக்கு புரியும் மிது.  ஆனாலும் நீ மடையன்னு லாம் சொல்லி  இருக்க வேண்டாம். பாவம்… அ…” என்று அவள் அவன் பெயரை சொல்லாமல்  இழுத்தபடி அவனைப் பார்க்க அபியோ,

“போதும் போதும்… இங்கே நின்னு அரட்டை அடிச்சது . எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்று  கணிணித்திரையை ஆன் செய்யாமலேயே உற்றுப் பார்த்து விரட்டியவனை குழப்பத்துடன் மிதுராவும் புன்னகையுடன் சிற்பிகாவும் கடந்து சென்றனர்.

“சிற்பி இன்னைக்கு அபி வித்தியாசமா நடந்துக்குறா மாதிரி உனக்குத் தோணலை?” என்று சொல்லியபடி தன் சிஸ்டத்தை ஆன் செய்யவும் பக்கத்தில் ராஜ் வந்து அமரவும் சரியாக இருந்தது.

அவனைப் பார்த்து புன்னகையுடன் இருவரும் “குட் மார்னிங். ” என்று சைகை பாஷையில் சொல்ல அவனும் செய்கை மொழியில் அதை ஆமோதித்தபடி அமர்ந்தான்.

இருவரையும் பார்த்து மெயில் செக் செய்தீர்களா என்று கேட்க அவர்களோ இல்லை என்று தலையசைத்தபடி தங்களது மெயிலை திறந்துப் பார்த்தனர்.

அதில் கண்ட செய்தியைக் கண்டதும் இமயமலையில் வைத்த ஐஸ் போல இருவரது மனமும் குளிர்ந்துப் போனது.

“ராஜ் சார், team tour க்கு போகப் போறாமா?  நாங்களும் இந்த டூர்க்கு eligible ஆ? ” என்றுக் கேட்க அவன் புன்னகையுடன் ஆமாம் என்று தலையசைத்து “இப்போ வொர்க் அப்புறமா டாக்” என்றவன் சொல்லி  அவர்களுடைய அரட்டைப் பேச்சு தொடங்குவதற்கு முன்பே முற்றுப்புள்ளி வைத்துவிட்டான்.

அதன் பிறகு கணினியில் விழுந்த  இருவரது தலையும் அக்கம் பக்கம் திருப்பி பார்க்கவேயில்லை.

வெகுநேரம் வேலை செய்துக் கொண்டு இருந்தவர்களுடைய வயிறு கடாமுடா என்கவும் அபி வந்து சாப்பிட போலமா? என்றுக் கேட்கவும் சரியாக இருந்தது.

இருவரும் மலர்ந்த முகத்துடன் திரும்பிய நேரம் அடுத்து வந்த அபியின் “கணேஷ் அண்ணா கடைக்குப் போலாமா?” என்ற கேள்வியைக்  கேட்டு வாடிப்  போனது.

“அவ்வளவு நடந்த அப்புறமும் எப்படி அந்த கணேஷ் அண்ணா கடைக்கு போகலாம்னு சொல்லுவீங்க. ” என்று கோபத்தில் சிவந்தாள், சிற்பிகா.

அபி அவளுக்கு பதில் சொல்லும் முன்பு ராஜ் ஜிடம் இருந்து பதில் வந்தது.

“மிதுரா யூ ஹேவ் டூ ஃபேஸ் திஸ். ” என்ற ராஜ்ஜின் வார்த்தைகளுக்கு மிதுரா, உணர்ச்சித் துடைத்த  முகத்துடன் சரியென்று தலையாட்ட நால்வரும் அந்த கடைக்குள் நுழைந்தனர்.

உள்ளே நுழைந்த மிதுராவின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.

அந்த கடை முழுக்க சாரி மிதுரா என்ற நிறைய பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தது. நிறைய குழந்தைகள் பூங்கொத்தைக் கையில் பிடித்தப்படி நின்றுக் கொண்டு இருந்தனர்.

எல்லாரிடமும் அவளை வரவேற்பதற்கான மனம் நிறைந்த சிரிப்பு இருந்தது.

ஆனால் அது மிதுராவின் மனதை நிறைக்கவில்லை.

கடைக்காரரைத் திரும்பி வெறுமையாகப் பார்த்தாள்..

“நிறைய தமிழ் சினிமா பார்ப்பிங்களோ அண்ணா.. செஞ்ச தப்புக்கான, குற்றவுணர்வுல இருந்து தப்பிக்கிறதுக்கு எதிராளியை சந்தோஷத்துல திக்குமுக்காட வெச்சிட்டா போதும்ல. ஈஸியா தப்பிச்சுக்கலாம்ல” என அவள் கேட்க அவரிடம் பதில் சொல்ல முடியாத அளவு பெரும் மௌனம்.

“அண்ணா நான் உங்களை எந்த கேள்வியும் கேட்கப் போறது இல்லை. எதுவும் திட்டப் போறது இல்லை. அது தான் உங்களுக்கான தண்டனை. எனக்கான நிம்மதியும் கூட.” என்று சொன்னவள் நேராக சென்று உணவருந்த அமர்ந்தாள்.

அவளைத் தொடர்ந்து எல்லாரும் வந்து அமர்ந்தனர். அவர்கள் எல்லார் இடத்திலும் ஒரு பெயரற்ற மௌனம் குடியேறி இருந்தது. அதைக் கலைக்கும் பொருட்டு அபியின் குரல் ஒலித்தது.

“தீரன் இல்லாம லைட்டா போர் அடிக்குது இல்லை ராஜ்.. ” என்று அபிக் கேட்க  ஆமாம் என்று தலையசைத்தவன் திரும்பி மிதுராவைப் பார்த்தான்.

தீரன் என்ற பெயரைக் கேட்டதும் மிதுராவின் முகம்  இறுகிப் போய்விட்டது.

அதைக் கவனித்த சிற்பிகா மெல்ல சீண்டி “எப்படி தீரன் சாரை ஃபேஸ் பண்ணப் போறோம்னு கவலைப்படறீயா?” என்றுக் கேட்டாள்.

“அவர் தான் என்னை ஃபேஸ் பண்றதுக்கு கவலைப்படணும் சிற்பி.. நான் இல்லை.
எனக்கு மேலதிகாரியா இருந்தாலும் என்னாலே அவர் பண்ணதை மன்னிக்க முடியாது.” என்ற மிதுராவின் குரலைக் கேட்டு ராஜ் முகத்தினில்  விளக்கம் சொல்ல முடியாத புன்னகை.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

உள்ளே நுழைந்த விஸ்வத்தின் முகம் முழுக்க பதற்றம். உடல் முழுக்க ஓடி வந்ததன் விளைவாய் வியர்வைத் துளி. எதையோ தேடும் பாவனையில் மேய்ந்துக் கொண்டு இருந்தது அவரது விழிகள்.

அந்த விழிகளை உணர்ந்தாற்ப் போல சீமா அவரின் முன்பு வந்து நின்றார்.

“என்னத் தேடுறீங்க?” என்றக் குரலோடு.

“உன்னோட பழைய சூட் கேஸ் எங்கே?” என்றபடி அந்த அறையையே ஆராய்ந்தது அவருடைய விழிகள்.

“அது இங்கே வெச்சு இருக்கேன். ஆனால் எதுக்காக கேட்குறீங்க?” என்றுக் கேட்டபடியே அந்த சூட்கேஸை எடுத்து வந்து அவரின் முன்பு வைத்தார்.

அந்த கேள்விக்குப் பதில் சொல்லாமல் சூட்கேஸை ஆராய்ந்துக் கொண்டு இருந்த விஸ்வத்தின் கண்களில் பட்டது அந்தப் புகைப்படம்.

“நீ தேடினதை நான் கண்டுபிடிச்சுட்டேன் சீமா. ” என்றக் குரலில் வருத்தமும் மகிழ்ச்சியும் ஒரே விகிதத்தில் கலந்து இருந்தது.

“என்ன கண்டுபிடிச்சீங்க?” என்ற சீமாவின் கேள்விக்கு விஸ்வம் அளித்த பதில் அவரது சர்வ நாடியையும் ஒரு முறை அசைத்துப் பார்த்தது.

அதிர்வுடன் நின்றுக் கொண்டு இருந்தவரை உலுக்கியது மீண்டும் விஸ்வத்தின் குரல்.

“நான் அஷோக்கை கண்டுபிடிச்சுட்டேன் சீமா. ” என்ற வார்த்தை மீண்டும் செவிப்பறையை மோதியதும் பட்டென்று உடைந்தது சீமாவின் கருவிழி முத்துக்கள்.

Leave a Reply

error: Content is protected !!