காதல் யுத்தம்
காதல் யுத்தம்
பகுதி 16
சொல்லடி எந்தன் இதயம் எனதா உனதா
நில்லடி நீ செய்வது சரியா முறையா
உன் தோட்டத்து பூவாய் என் இதயம்
நீ போகின்ற போக்கில் பறித்தாயே…….
ஆகாஷ் அதிகாலை நேரமே கண்விழிக்க, எழ நினைத்தான், முடியவில்லை. ஏன் காலை கூட நகர்த்த முடியவில்லை. நன்றாக முழித்து பார்த்தால், அவன் வயிற்று பகுதியின் அருகே தலையை வைத்து, கைகளை அவன் மேல் போட்டு தலையணை மீது படுப்பது போல படுத்திருந்தாள் சஜு.
கால்களையும் குறுக்கி அவன் கால்களின் மேல் போட்டிருந்தாள். அவன் உடனே சுதாரித்து, மற்றவர்கள் எழும் முன், அவளை விலக்கிப் படுக்க வைக்க நினைத்தான். கஷ்டப்பட்டு அவள் கைகளை எடுத்து விட்டு, அவளைத் தள்ளி, எழுந்து அமர்ந்து, அவள் கால்களையும் தள்ளி போட்டான். நேரத்தை பார்த்தான் மணி மூன்று ஆனது.
இரவு அவள் தூங்கியதும், தன் நெஞ்சத்தில் படுத்திருந்தவளை விலக்கி அவளுடைய தலையணையில் படுக்க வைத்தான். இரவு முழுவதும், சஜுவை எப்படி மாற்ற போகிறோம் என்று எண்ணி கொண்டிருந்தவன் மேல், திடீர் என்று கால்களைப் போட்டாள் சஜு. அவள் கால்களை எடுத்து ஒதுக்கி விட்டு ஒருக்களித்து படுத்தவன், சிறிது கண்ணயர்ந்தான்.
பின் சிறிது நேரத்திலேயே ஏதோ தன் மீது மோதவும் விழித்து விட்டான். பார்த்தால், சஜு தான் அவனை முட்டிக்கொண்டு படுத்திருந்தாள். பின் தான் ஆகாஷிற்கு, அவர்கள் இரவில் பேசியது, அதவாது கீதாவும், மஞ்சுவும் ஏன் இவள் அருகில் படுக்கப் பயந்தார்கள் என்று புரிந்தது.
‘தூக்கத்தில் நன்றாக உருளுவாள் போலயே? போலயே என்ன, நன்றாக உருண்டு அருகில் இருப்பவர்கள் தூக்கத்தைக் கெடுக்கிறாள் பாவி, இருக்கட்டும் காலையில் எந்திரி, அப்போ உன்னைக் கவனிக்கிறேன்’ என்று மனதில் நினைத்து கொண்டு அவன் கஷ்டப்பட்டு உறங்க, அவள் மீண்டும் அவன் உறக்கத்தை கெடுக்க என்று இப்படியே இரவு போனது.
இரவு நடந்ததை சிந்தித்து கொண்டிருந்தவன் மீது, திரும்பவும் அவள் உறக்கத்தில் நகர்ந்து காலைப் போட, இது சரிப்படாது என்று எழுந்து விட்டான். மணி நான்கு ஆயிற்று, அப்படியே கீதா, பின் வெற்றிவேல் எழ, மஞ்சுவும் எழ, பேச்சு சத்தம் கேட்டு சஜுவும் எழுந்து கொண்டாள். அருகில் அவன் இல்லாதது, அவளுக்கு நிம்மதியாக இருந்தது. பின்னே இரவில் அவன் நெஞ்சத்தில் படுத்து விட்டு, இப்பொழுது அவனைப் பார்க்க உள்ளம் வெட்கியது.
அவன் காலைக் கடன்களை முடித்து விட்டு, அந்த அதிகாலை வேளையில், சிறிது நேரம் கோவிலை சுற்றி பார்த்து விட்டு, அந்த அதிகாலை வாசத்தை அனுபவித்து நுகர்ந்தான்.
வெற்றிவேல் வெளியே வரும் போது, பூசாரியிடம் பேசிக் கொண்டிருந்தான். மஞ்சு அவனைப் பார்த்து “அண்ணா, நல்ல தூங்குனீங்களா ணா” என்று சிரித்து விட்டு ஓடிவிட்டாள். அப்பொழுது அங்கு வந்த சஜு அதைக் கேட்டு, தன் பற்களை கீழ் உதட்டில் கடித்து, ‘அய்யயோ தூக்கத்தில், இவன் மீது எப்படி உருண்டோமோ?’ என்று நினைத்து, மஞ்சு பின்னே ஓடிவிட்டாள்.
மஞ்சு “ஏய் என்னடி சஜு, அண்ணன பழி வாங்கிட்டீயா?” எனவும் சஜு முழித்தாள், ‘தான் இவன் மீது கோபம் கொண்டுள்ளோம் என்பது தெரிந்து விட்டதோ’ என்று யோசித்தாள்.
அவள் விழிப்பதைப் பார்த்து மஞ்சு கண்ணடித்து “முந்தாநேற்று நைட் அண்ணா, உன்ன தூங்க விட்டிருக்க மாட்டார், நேற்று நைட் நீ பழிக்கு பழி வாங்கி அண்ணன தூங்க விடாம பண்ணிட்ட போல?” எனவும்.
சஜு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று அர்த்தம் புரிந்து, அவளை அடிக்க கை ஓங்கி கொண்டே “அடி கழுதை, படிக்கிற வயசுல பேச்ச பார்? இரு அம்மாட்ட சொல்றேன் “
மஞ்சு “உண்மைய சொன்னா, எப்போவுமே இந்த உலகம் இப்படி தான் பேசும்” என்று அவளிடம் இருந்து தப்பி ஓடிக் கொண்டே பதில் அளித்தாள்.
சஜு அவளைத் துரத்த, மஞ்சு கோவில் உள்ளே இருக்கும் தோப்பை சுற்றி பார்த்து கொண்டிருந்த ஆகாஷ் பின்னே ஒளிந்து கொள்ள, சஜு ‘என்ன பேச்சு பேசுகிறாள் இவளை எப்படியும் அடிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தில் அவன் இருப்பதைக் கூட பொருட்டுப் படுத்தாமல், அவன் இடது புறமும் வலது புறமும் மாறி மாறி அவளை பிடிக்க முயல, ஆகாஷோ குணா கமல் போல “அபிராமி அபிராமி” என அவர் அசைந்து கொண்டு, மெய் மறந்து லட்டு வாங்க ஆடிக் கொண்டே நிற்பதை போல, இவனும் மெதுவாக வலதும் இடதும் ஆடிக்கொண்டே அவளைப் பார்த்து கொண்டு நிற்க, இருவரும் எதிர் பார்க்காத நேரத்தில், மஞ்சு ஆகாஷை அவன் முதுகில் கை வைத்து தள்ளி விட்டாள்.
ஆகாஷ் தடுமாறி நிலைப்பாட்டிற்காக, அவள் தோளை பற்ற, அவளும் இதை எதிர்ப்பார்க்காததால், அவன் வேகமாக வந்து விழுந்து பற்றிய வேகத்தில், அவள் பின்னே சரிய, ஆகாஷும் அவள் மேல் சரிந்தான்.
அவர்கள் விழுந்த இடம் சமயலறையில் இருந்து சிறிது தள்ளி மரங்களின் மத்தியில் இருந்ததால், கீதாவுக்கும் வெற்றிவேலுக்கும் தெரியவில்லை. மஞ்சு இவர்களைப் பார்த்து சிரித்து கொண்டிருந்தாள். சஜுவும் ஆகாஷும் ஒருவரை ஒருவர் அதே நிலையில் பார்த்து கொண்டு, விட்டால் இருவரும் ஒருவர் கண்ணுக்குள் மற்றவர்கள் புகுந்து விடுவார்கள் போல, அப்படி ஒரு பார்வை பரிமாற்றம் செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் எழாமல் அதே நிலையில் இருக்கவும் மஞ்சு “நம் தன நம் தன நம் தன புது ராகம் வரும்………” என பின்னணி பாட்டு பாடவும் தான் சஜு சுயநினைவு அடைந்தாள். ஆனால் ஆகாஷோ இன்னும் வேறு லோகத்தில் இருந்தான்.
அந்த அதிகாலை வேளை, தன் காதலியாய்… இப்பொழுது மனைவியாகிருக்கும் அவளின் அழகு நிலா முகம், அதுவும் அவன் முகத்துக்கருகில் காணவும், அவன் காதல் உலகத்திற்கு சென்று விட்டான். சஜு எழ முடியாமல் திணற, அதே சமயம் ஆகாஷ் அவளை நோக்கி குனிய, அவன் முகம் தன் முகத்தருகே நெருங்க நெருங்க, அவன் செய்யப் போகும் செயலை உணர்ந்து “ஆகாஷ் “என்று பல்லை கடித்தாள்.
இம்ஹும் அவன் சுயநினைவில் இருந்தால் தானே, அவன் காதுகளை அடையும். பக்கத்தில் மஞ்சு வேறு நிற்பதைப் பார்த்து, உடல் நடுங்க பயங்கொண்டு, அவனைத் தடுப்பதற்கு, சமயத்தில் யோசித்து, அவன் நெருங்கி அருகே வரவும், பட்டென்று அவன் நெற்றியில் தன் நெற்றியால் எழும்பி முட்டினாள்.
ஆகாஷ் “ஸ் ஸ் ஸ்” என்று நெற்றியைப் பிடித்து கொண்டான். சஜுவும் தலையின் வலியைப் பொறுத்துக் கொண்டு, உடனே “எரும, எந்திரிச்சு தொல” எனச் சொல்லவும், நினைவுலகிற்கு வந்தவன், சட்டென்று அவள் மீது இருந்து எழுந்தான்.
சஜு எழுந்து தன் மீது ஒட்டி கொண்ட சருகுகளை தட்டி விட்டாள். மஞ்சு அருகே வந்து “வாட் எ ரொமாண்டிக் பெர்பார்மன்ஸ்?” என்று சொல்ல, ஆகாஷ் வாய்க்குள்ளே சிரித்து கொண்டு, சஜுவைப் பார்க்காமல் வேறு பக்கம் பார்த்தான்.
சஜு “ஏய் ஒழுங்கா ஓடி போய்டு, வர கோவத்துக்கு, கைல சிக்குன கொன்னுடுவேன்” என்றாள். மஞ்சு அதற்கும் கண்ணடித்து, “ஏன் திரும்பவும் பெர்பார்மன்ஸ் பண்ணப் போறீங்களா?” என்று சொல்ல, சஜு சுற்றும் முற்றும் பார்த்து ஒரு கல்லை கையில் எடுத்தாள்.
அதைப் பார்த்த மஞ்சு ஓடி விட்டாள். ஆகாஷ் அமைதியாக இருந்திருக்கலாம், அவன் சிரித்து தொலைக்க, அவளுடைய கோபம் இவன் மேல் திரும்ப, அந்தக் கல்லை அப்படியே கீழே போடாமல், ஆகாஷ் மேல் எரிந்தாள்.
அவன் கல்லைத் தடுக்க, கையை மடக்க, அந்தக் கல் அவன் கை முட்டியைப் பதம் பார்த்தது. அவள் காலை தரையில் உதைத்து, அவனை முறைத்து கொண்டு சென்று விட்டாள். ஆகாஷ் கை முட்டியை கல் சிராய்க்க, ஊசி குட்டியது போல் வலிக்க, “ராட்சசி, காதல் ராட்சசி” என்று முனுமுனுத்து, சற்று முன் நடந்ததை நினைத்து சிரித்து கொண்டிருந்தான்.
அதற்குள் கீதாவும், வெற்றிவேலும் குளித்து முடித்திருந்தனர். மஞ்சு சஜு ஒருவர் பின் ஒருவர் வர அவர்களைக் கீதா குளிக்க சொல்லி, அவர்களும் அங்கு இருந்த இரண்டு குளியலறையில், சென்று குளித்தனர். சஜு குளித்து முடித்து சதாரணமான புடவை அணிந்து வந்தாள்.
அதைப் பார்த்த கீதா “நினைச்சேன், நீ இப்படி தான் எதாவது செய்வன்னு நினைச்சேன், ஏன்மா பொங்கல் வைக்க முதன் முதலில் வந்திருக்க, பட்டு புடவைக் கட்டக் கூடாதா ?”
சஜு “ஐயோ அம்மா எந்த புடவைனா என்னமா ?”
கீதா “நீ இப்படி செய்வன்னு தான் வீட்டிலிருக்கும் உன் பட்டு புடவையை எடுத்து வந்தேன்” என்று கையோடு அவளை அந்த சமயலறைக்கு அழைத்து சென்று தன் பையில் இருந்த பட்டுச் சேலையை எடுத்து கொடுத்தார்.
கீதா “இந்தா மாற்றிட்டு வா” எனக் கதவைச் சாற்றி விட்டு வெளியே சென்றார்.
அப்பொழுது குளித்து முடித்து இடுப்பில் ஒரு துண்டை சுற்றி கொண்டும், தோளில் ஒரு துண்டை போர்த்திக் கொண்டும், குளியலறை விட்டு வெளியே வந்தான் ஆகாஷ்.
வெற்றிவேல் “போங்க மாப்பிள்ளை, உள்ளே சஜு தான் இருக்கா, போய் டிரஸ்ஸ போட்டு சீக்கிரம் வாங்க” என்றார். பாவம் அவருக்கு உள்ளே சஜு உடை மாற்றுகிறாள் என்று தெரியாது, அம்மாவும் பெண்ணும் உள்ளே சென்றார்கள், பெண் உள்ளே இருக்க அம்மா வெளியே வந்தது வரை மட்டும் தான் தெரியும்.
ஆகாஷ் “சரி மாமா” என்று சொல்லி விட்டு, கதவை திறந்து உள்ளே நுழைந்தான். அப்பொழுது தான் பட்டு சேலையை உடுத்த ஆரம்பித்திருந்தாள் சஜு. சட்டென்று கதவு திறந்து அவன் வரவும், அதிர்ந்த சஜு, படக்கென்று சேலையில் தன்னை மறைத்து கொண்டு “ஏய் அறிவிருக்கா?” என்று திட்டவும், அவளையே பார்த்து கொண்டிருந்த ஆகாஷ், அவள் திட்டவும் , அவளுக்கு முதுகை காட்டி திரும்பி நின்று கொண்டு “சாரி சாரி” என்றான்.
ஆகாஷ் “மாமா தான், உள்ள போகச் சொன்னார், ஆனா நீ ட்ரெஸ் மாத்துறன்னு அவர் சொல்லல”
சஜு இவன் செய்வதைச் செய்து விட்டு தன் தந்தையைக் குறை கூறுகிறான் என்ற கோபத்தில் “ஏன் கதவைத் தட்டிட்டு வரனும்கிற மேனர்ஸ் கூட தெரியலையா?”
ஆகாஷும் தன் மீது குற்றம் இருப்பதால், பொறுமையோடு “மறந்துட்டேன் சஜு” என்றான்.
சஜு “சரி வெளில போ” என அவளும் சற்று இரங்கினாள்.
ஆகாஷ் “நான் எப்படி, இப்படியேவா போறது, நான் டிரஸ் மாத்திட்டு போறேனே “
சஜு “என்னது??? எங்க மாற்ற போற? என் கூடவேவா டிரஸ் மாற்ற போற? கொன்னுடுவேன்”
ஆகாஷ் “ஆமாம்” என்று திரும்பி அவளை நோக்கி நடந்தான். சஜு அவன் வருவதைப் பார்த்து பயத்தில் “வேண்டாம் அஷு, கிட்ட வராதே” என்று பின்னே நகர்ந்தாள். அவனைக் காதலித்த போது செல்லமாக அவனை அஷு என்பாள், இன்று காலையில் இருந்து அவன் அருகே இருக்கவும் சிறிது இளகியவள், தன்னை மறந்து அந்தப் பெயரால் அழைத்து விட்டாள்.
அவள் தன்னை அஷு என்று அழைத்த சந்தோசத்தில், இன்னும் ஆவலுடன் அவளை நோக்கி நகர்ந்தான். அவள் அருகே வந்த ஆகாஷ், குனிந்து, அவள் சற்று முன் கலைந்த சாதாரணப் புடவையை எடுத்து அங்கிருந்த மூங்கில் தட்டியில் முடிச்சிட்டு திரை போல அமைத்தான். அதன் பின் தான் சஜு நன்றாக மூச்சு விட்டாள், சிறிது படப்படப்புடன் இருந்தாள்.
அவள் அப்படியே நிற்க, மூங்கில் தட்டியின் அந்தப் பக்கம் அவர்கள் இரவு படுத்து உறங்கிய இடத்தில் நின்று, “நான் இங்கே ட்ரெஸ் மாத்துறேன், நீ அந்தப் பக்கம் மாத்து” என்று சொல்லிவிட்டு, அவர்கள் கொண்டு வந்த பையில் இருந்து உடைகளை எடுத்து மாற்ற தொடங்கியவன் “சஜு” என்று மெல்ல கத்தினான்.
யுத்தம் தொடரும்…