கிட்காட்-10

கிட்காட்-10
கிட்காட்-10
சித்தார்த், சித்தாராவின் நிச்சியதார்த்தம் குறிக்கப்பட்ட நாளில் வர, டீல்க்ரீன் பட்டுப்புடவையில் சித்தாரா ஜொலிக்க… சித்தார்த்தும் டீல்நிற பார்மல் சர்ட்டிலும்
அதற்குப் பொருத்தமான க்ரீம் கலர் கால் சட்டையிலும் இன்செய்திருக்க, அவனது
ரோலக்ஸ் வாட்சை அட்ஜஸ்ட் செய்து கொண்டிருந்தான் சித்தார்த்.
லூசாக இருந்த வாட்சை அட்ஜஸ்ட் செய்தவன் கண்ணாடியில் அவனது அறையில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டிலேயே நிச்சியத்தை வைத்துக்கொள்ளலாம் என்று அவன் வற்புறுத்த கோவையிலேயே நிச்சியத்தை
வைத்திருந்தனர்.
கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த ரமணா, “வாவ். என்ன பிகரு மச்சான் நீ.
எனக்கே சைட் அடிக்கலாம்னு இருக்கு” என்று அவன் சொல்ல பின்னே வந்த
அருணும் நவீனும், “ஆமாடா. மூஞ்சிலாம் என்னமா ப்ரெஷா இருக்கு” என்று கேலி
செய்தனர்.
கண்ணாடி முன் நின்று வலதும் இடதும் திரும்பி தன்னைப் பார்த்துக் கொண்டவன், “அவ்வளவு நல்லா இருக்கேனா மச்சி?” என்று மூவரிடமும் வினவ,
“உனக்கென்னபா சின்ன வயசுல ஒரு கல்யாணம். இப்ப ஒண்ணு” என்று நவீன்
கலாய்க்க,
‘சொல்லிட்டியாடா பாவி’ என்று சித்தார்த் ரமணாவை முறைக்க, “அதைவிடு மச்சி. கீழ சித்தாரா சிஸ்டர் வெயிட்டிங்” என்று சித்தார்த்திடம் வந்தவன் அவனது
முதுகில் கையை வைத்துத்தள்ள, “அவ உன் சிஸ்டரா?” சித்தார்த் வினவ,
“நான் உனக்கு மச்சானா… சித்தாரா என் சிஸ்டர் தானே” என்று ரமணா சொல்ல,
“என்ன ஒரு அற்புதமான காம்பினேஷன்” சித்தார்த் வஞ்சப்புகழ்ச்சி அணியாய்
சொல்ல, “நீ கீழ வந்துட்டு. அப்புறம் பேசுடா” என்றான் ரமணா.
கீழே வந்த சித்தார்த் வீட்டிற்கு வந்த இருவீட்டாரையும் வரவேற்க நிச்சியதார்த்தம் ஆரம்பித்தது. சித்தார்த்தையும் சித்தாராவையும் உட்கார வைத்து எல்லா முறைகளையும் செய்ய ஆரம்பித்தனர். சொர்ணாம்பாள் முதலில் பெண்ணிற்கு நலங்கு வைக்க சித்தாராவோ அவரைக் கண்டு புன்னகைத்தாள். சித்தாராவின்
கன்னத்தில் லேசாக சந்தனத்தை இட்டவர் பேரனின் நெற்றியிலும் சந்தனமிட்டு
அடுத்து குங்குமத்தை வைத்து ஆசிர்வதித்தார்.
அடுத்து ஒவ்வொருவராக செய்துமுடிக்க சித்தார்த் சித்தாராவைக் கண்டான்.
சந்தன நிற கன்னத்தில் சந்தனம் போட்டி போட்டுக்கொண்டு அவளது பட்டுக் கன்னத்தில் தங்கமாய் ஜொலிக்க, சித்தார்த்திற்கு எண்ணங்கள் தடம் புரள
ஆரம்பித்தது. அடுத்தவர் கவனிக்கும் முன் தன்னை நிதானித்துக் கொண்டவன்
பார்வையைத் திருப்ப அவனது படையே அவனைப் பார்த்து ஒன்று போல தலையை ஆட்டி, “நாங்க எதுவும் பார்க்கல மச்சான்” என்று அனைவரும் சொல்ல,
சிரிப்பை அடக்கியவனுக்கு அது கண்களில் வழிந்தது.
பெண்ணிற்கு ரேணுகா வந்து மாப்பிள்ளை வீட்டு முறைப்படி ஐந்தரை பவுனில் ஆரத்தை சித்தாராவின் கழுத்தில் அணிய, அவளோ அனைத்தையும் சிரித்த முகத்துடனே ஏற்றுக்கொண்டாள். அடுத்து மாப்பிள்ளைக்கு ஐந்து பவுனில்
செயிணும் ப்ரேஸ்லெட்டும் அணிந்தான் சித்தாராவின் பெரியம்மா மகன் பெண் வீட்டனர் முறைப்படி.
அடுத்து இருவரையும் மோதிரம் மாற்ற அழைக்க சொர்ணாம்பாள் மோதிரத்தை
எடுத்து முதலில் பேரனின் கையில் தர, சித்தாராவின் விரலில் சித்தார்த் அணிவிக்க, அடுத்து சித்தார்த்தின் விரலிலும் சித்தாரா மோதிரத்தை அணிவித்தாள். சித்தாரா அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ அவளைக் கண்டு புன்னகைத்தான்.
‘சரியான கல்லுளிமங்கன்’ என்று மனதிற்குள் நினைத்தவள், “ஆல் தி பெஸ்ட். என்னோட டார்ச்சரை ஃப்யூச்சர்ல ஹேண்டில் பண்றக்கு” என்றாள் விஷமப்
புன்னகையோடு.
“ஐயம் வெயிட்டிங்” என்று சித்தார்த் தளபதியைப் போலச் சொல்ல,
“அடடே! பிஜிஎம் போட யாரும் இல்லையே… ச்சுச்சு” என்றாள் பாவமாக.
“சீக்கிரம் கல்யாணத் தேதியை குறிங்கப்பா. மாப்பிள்ளை பொண்ணு இப்பவே சுத்தி இருக்கவங்களை மறந்து பேசறாங்க” கூட்டத்தில் ஒருத்தர் பேச எல்லோரும் சிரித்தனர்.
‘இது ஜோக்குன்னு வேற சிரிக்கறாங்களே… ஆண்டவா’ மனதிற்குள் தலையில் அடித்துக்கொண்ட சித்தார்த், சிரித்து வைத்தான்.
நிச்சியம் முடிந்து மதியத்திற்கு மேல் சொந்தங்கள் கிளம்ப எல்லோரும் அந்தப்
பெரிய ஹாலில் கூடியிருந்தனர். “சித்தாரா வா வீட்டை முழுசா இன்னும் நீ
பாக்கலைல… வா பாக்கலாம்” என்று ரேணுகா அழைக்க சித்தாரா வருங்கால
மாமியாருடன் சென்றாள்.
“சித்தாரா. நீ எப்படியும் இங்க இருக்கமாட்டே. இருந்தாலும் உனக்கு எல்லாம் இங்க தெரிஞ்சுக்கிட்டா நல்லதுதான்” என்றார் உடன் வந்த மருமகளிடம். ஏனெனில், சித்தார்த் திருமணம் முடிந்து அவனது டீ ப்ராடக்ட்டிற்காக ஊட்டியிலேயே தங்கும் திட்டமிட்டிருக்க அதை முதலிலேயே சொல்லிவிட்டான்.
“சித்தாரா! சித்தார்த் கொஞ்சம் விளையாட்டுத் தனமா இருப்பான். ஆனா கவனமாதான் இருப்பான் எப்பவும். ஒரு ப்ராமிஸ் செஞ்சு தந்தா அவன் கண்டிப்பா
பண்ணித் தருவான் அடுத்தவங்களுக்கு. அவ்வளவு சீக்கிரம் கோபம் வராது
அவனுக்கு. ஆனா, வந்துட்டா அவனை அடக்கவும் முடியாது” என்று அவர்
சொல்லிக்கொண்டே போக,
“ஸ்டாப் ஸ்டாப். என்ன மாமியாரே ஹீரோ இன்ட்ரோடக்ஷனா தர்றீங்க. எல்லாம்
ஏற்கனவே தெரிஞ்சது தானே எனக்கு” என்றவள் ஒரு பெருமூச்சை விட்டு, “ஹம்ம்… நான்தான் மருமகளா வரணும்னு பாவம் உங்க தலைல எழுதி இருக்குபோல” என்றாள் பாவமாக.
“மாமியாருன்னு ஞாபகம் வச்சுக்க மருகமகளே. என் பையன் மேல ஏறி நின்ன மாதிரி என் மேலேயும் ஏறிடாதே” வேண்டுமென்றே ரேணுகா கிண்டல் செய்ய,
“நீங்க இப்ப பாதி மாமியார் தான்” என்றாள் சித்தாரா.
“பாதி மாமியாரா?” ரேணுகா புரியாமல் கேட்க,
“ஆமாம். இந்த படத்துல எல்லாம் எங்கேஜ்மன்ட் முடிஞ்சுட்டா பாதி புருஷன் பாதி பொண்டாட்டினு டயலாக் அடிப்பாங்கள. அப்ப நீங்களும் பாதி மாமியார் தானே” என்று சித்தாரா விளக்க,
“மருமகளே… பொழச்சுப்ப மா நீ” என்று ரேணுகா சொல்ல சிரிப்பு வந்தது
சித்தாராவிற்கு.
வீட்டை சுற்றிக் காண்பித்தவர் சித்தார்த்தின் அறைக்கு கூட்டிச் சென்றார். “இதுதான் சித்தாரா… சித்தார்த் ரூம்” என்று அறையை அவர் காண்பிக்க,
“பெரியம்மா! உங்களை பெரியப்பா கூப்பிட்டார்” என்று ரேணுகாவின் தங்கை
மகள் வந்தழைக்க, “சரி, நீ அண்ணிக்கு வீட்டைக் காட்டு. நான் போறேன்” என்று
தம்பி மகளிடம் சொன்னவர் கீழே விரைந்தார்.
பதினாறு வயதே இருக்கம் பெண்ணிடம், “உன் பேர் என்ன?” என்று கேட்டாள்
சித்தாரா.
“மித்ரா அண்ணி” என்றாள் அவளோ புன்னகைத்தபடி. பின், இருவரும் பேசியபடியே சித்தார்த்தின் அந்த பெரிய அறையில் நடக்க, அங்கிருந்த டேபிளில்
சித்தாரா இடித்து நின்றாள்.
அந்த மேசையின் மேல் சித்தார்த் வைத்திருந்த புகைப்படம் அவள் கண்களில் சிக்கியது. அதற்குள் சித்தார்த் அறையிலிருந்த குட்டி மீன் தொட்டிக்கு மித்ரா உணவைப் போட, சித்தாரா அந்தப் புகைப்படத்தை கையில் வைத்தபடியே
நின்றிருந்தாள்.
“என்ன பாத்துட்டு இருக்கீங்க சித்தாரா?” என்று வந்த ரமணாவின் குரலில்
திரும்பினாள். “அண்ணி நான் விளையாட போறேன். வர்றீங்களா” என்று மித்ரா
கேட்க,
“நீ போ மித்ரா. நான் அப்புறம் வரேன்” என்று சிறியவளை அனுப்பினாள்.
திரும்பியவளின் கையிலிருந்த புகைப்படத்தைக் கண்ட ரமணா அதிர்ந்தான். ‘இந்த ஃபோட்டோவை இன்னுமாடா வச்சிருக்க’ என்று நண்பனை மனதிற்குள் திட்டிய ரமணா ஒன்றும் பேசாமல் நின்றான்.
“என்ன இது?” சித்தாரா கோபமாகக் கேட்க, ரமணாவிற்கோ என்ன சொல்லுவது
என்றுத் தெரியவில்லை.
“அது வந்துங்க” ரமணா ஆரம்பிக்க,
“என்ன சித்தாரானே கூப்பிடுங்க ப்ரோ” என்றாள்.
“சித்தாரா. இது ஏதோ மிஸ்டேக். ஃபோட்டோவைக் குடு” என்று ரமணா கையை நீட்ட அவளோ ஃபோட்டோவை பின் நகர்த்தி நின்றாள்.
“இப்ப சொல்லப் போறீங்களா இல்லியா?” சித்தாரா கேட்க, “உன் அக்காவை
சித்தார்த் லவ் பண்ணது தெரியும்ல. அதான் சின்ன வயசுல உங்க வீட்டில் இருந்து எடுத்திட்டு வந்திருக்கான் இந்த ஃபோட்டோவை” என்று ரமணா விளக்கும்
போதே சித்தார்த் உள்ளே நுழைந்தான்.
“மச்சி… இந்த வர்ஷிஷி” என்று நண்பன் உள்ளிருப்பதை தங்கை மித்ரா மூலம்
அறிந்து பேசிக்கொண்டே மேலே வந்த சித்தார்த் சித்தாராவைக் கண்டதும் பேச்சை நிறுத்தினான். அதையும் அவளது மனம் குறித்துக்கொண்டது.
அவள் கையிலிருக்கும் புகைப்படத்தைக் கண்டவன் ஒரு ஏளனப் புன்னகையை
வீசிவிட்டு, “என்னவாம் மச்சான்? என்ன பிரச்சினையாம்?” என்று வேண்டுமென்றே கேட்க,
“இதை நீதான் திருடினையா?” சித்தாரா முறைத்தபடிக் கேட்டாள்.
“ஹலோ அது திருட்டு இல்ல. எனக்கு புடிச்ச பொண்ணோட ஃபோட்டோ” என்றவன், “லுக் ஷீ இஸ் வெர்ரி க்யூட்” என்று அவன் ஃபோட்டோவை வாங்க வர,
அவனிடமிருந்து விலகியவள் அந்த புகைப்படத்தை கிழிக்கச் செல்ல,
“ஏய்!” என்று கர்ஜனையோடு அவளது கையைப் பிடித்தவன் அவளிடமிருந்து
புகைப்படத்தை பிடுங்க முயற்சிக்க, அவனது முயற்சிகள் அனைத்தும் தோற்றது. ஆறடிக்கும் ஒரு அடி குறைவாக இருந்தவனிடம் 5.2″இல் இருந்தவள் லாவகமாக கைகளில் சிக்காமல் போக்குக்காட்டினாள்.
“அந்த ஃபோட்டோவைக் குடு” சித்தார்த் சூடான குரலில் கேட்க,
“இப்படி எல்லாம் சத்தமா கேட்டா தரமாட்டேன் பாஸ். உங்க கடை டிசைனர் நான். ஸோ பொறுமையா முதலாளி மாதிரி பேசுங்க பாப்போம்” என்று அவள் சொல்ல சித்தார்த்திற்குப் பல்லைக் கடித்ததில் நெற்றி நரம்புகள் புடைத்தது.
“ச்சு ச்சு. இவ்வளவு கோபம் உடம்புக்கு நல்லது இல்ல” என்றவள், “ஃபோட்டே
வேணுமா வேணாமா?” அவள் போட்டோவை கையில் வைத்து சுழற்றியபடிக் கேட்க,
“மிஸ்.சித்தாரா. அந்த ஃபோட்டோவைக் கொஞ்சம் தர முடியுமா” என்று சித்தார்த்
புன்னகையை முகத்தில் கொண்டு வந்தபடிக் கேட்க அவளோ ஒரு மதர்ப்பான
புன்னகையை உதிர்த்தாள்.
“போனப்போகுது. இந்தா” என்று புகைப்படத்தை அவனிடம் நீட்டினாள்.
அவன் அதை வாங்க வர மீண்டும் கையை மடக்கிப் புகைப்படத்தை தன் பக்கம்
கொண்டு வந்தவள், “இந்த ஃபோட்டோவை நீ எடுத்ததுல தப்பே இல்ல. ஆனா, அக்காக்கும் தங்கச்சிக்கும் வித்தியாசமே தெரியாம எடுத்துட்டு வந்து இவ்வளவு நாள் வச்சு டூயட் பாடியிருக்க பாரு. ‘ம்ச்’, ‘ம்ச்’ இந்தப் பெருமையை எந்த கல்வெட்டுல பதிக்கிறதுனு தெரியல” என்று இடது கையைத் தூக்கி பெருமை
போல சித்தாரா மெச்சிவிட்டு அவன் கையில் புகைப்படத்தை வைத்தாள்.
“வாட்! அது உன் ஃபோட்டோவா?” என்று அவளருகில் வந்து ரமணா சிரிப்பை
வெளியிடத் தயாராகக் கேட்க, அவளோ கைகளைக் கட்டிக்கொண்டு “ம்! ம்!” கண்களைச் சிமிட்டினாள்.
“மச்சாசா” என்று சிரிப்புடன் திரும்பிய ரமணா நண்பனின் முகத்தைக் கண்டு
அப்படியே நின்றான். “ஓகே பாஸ். கீழ தேடுவாங்க பை” என்று நகர்ந்தவள், “பாஸ் இத்தனை நாள் இந்த ஃபோட்டோவை வச்சுத்தான் இதயம் முரளி பீலிங்கா?” என்று கேட்க சித்தார்த்தோ அவளைப் பார்த்தபடியே நின்றிருந்தான்.
“பாஸ் வேற ஏதாவது ஃபோட்டோ இருக்கா. இருந்தா சொல்லுங்க. பாத்து பண்ணிக்கலாம்” என்று சொன்னவள் சித்தார்த் அவளைப் பார்த்தபடி அப்படியே
நிற்பதைக் கண்டு,
“ரமணா ப்ரோ, கொஞ்சம் வேப்பிலை அடிச்சு விடுங்க. அப்படியே நிக்கறான்”
என்றவள் கீழே சென்றுவிட்டாள்.
“மச்சா! சரி விடுடா. உனக்கு இந்த ஃபோட்டோ தானே பெரிய இம்ப்பாக்ட்… அது சித்தாராவா இருக்கிறது நல்லது தானே” என்றான் அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம்,
“என்ன மச்சா… ட்விஸ்டா இருக்கா உனக்கு” என்று கேட்டான் சித்தார்த்
ரமணாவிடம்.
“ஆமாடா! பின்ன இருக்காதா. ஏன் உனக்கு இல்லியா” என்று ரமணா கேட்க அந்தப் புகைப்படத்தை தன் கப்போர்ட்டில் வைத்தான்.
ரமணாவிடம் திரும்பியவன் கப்போர்ட்டில் சாய்ந்து கையைக் கட்டியபடி நின்று,
“ரொம்ப ஷாக்தான் மச்சான். ஆனா, அதைவிட இன்னொரு ட்விஸ்ட் இப்ப உனக்கு என்னனா… எனக்கு முன்னாடியே தெரியும் இது சித்தாரா தான்னு” என்றான் சித்தார்த் மந்தகாசப் புன்னகையோடு.
“வாட்… எப்படா? எப்படிடா?” என்று ரமணா கேட்க, சிறிய சலசலப்பு கேட்க இருவரும் அறையைவிட்டு வெளியே வந்தனர்.
மேலிருந்து சித்தார்த் கீழே வர, சின்மயி கிஷோர் தான் வருகை தந்திருந்தனர்.
கேசவன் ஏதோ கோபத்தில் கத்தியிருக்க கீழே வந்த சித்தார்த், “என்ன ஆச்சு?” என்று விசாரித்தான். மாப்பிள்ளை பெண் குடும்பத்தைத் தவிர ரேணுகாவின் தங்கை வீடும், கேசவனின் அக்காள் வீடு மற்றும் தேவியின் அக்காள் வீடும் அண்ணன் வீடு மற்றுமே இருந்தனர்.
“வந்தவங்களை வெளிய போக சொல்றாருடா உன் மாமனார்” என்று அருண் சொல்ல,
“அங்கிள். நான்தான் வரச் சொன்னேன். அவங்க என்னோட கெஸ்ட்” என்றான்
தன்மையாக.
கேசவன் கடும்கோபத்தில் இருந்தார். பெண் காதலை மறந்து நம் பேச்சை
கேட்டிருக்கிறாள் என்று அவர் நம்பியிருந்த வேளையில் மீண்டும் கிஷோர் வந்து பெண் கேட்ட சமயம், அவருக்கு பெற்ற பெண் இத்தனை நாள் ஏமாற்றி இருக்கிறாளே என்ற கோபமும், கிஷோர் வந்து பெண் கேட்கும் அளவிற்கு அவர்கள் காதல் வளர்ந்து நிற்கிறதே என்ற கோபமும் சேர்ந்து கொண்டது.
ஏமாற்றமும் கோபமும் ஒன்றுசேர கிஷோருக்கு மட்டும் பெண்ணைத் தரக்கூடாது என்ற வீம்பு அவருக்கு எழுந்தது. சின்மயி சித்தார்த்துடன் திருமணத்துக்குச் சம்மதித்த போதும் கூட அவர் மகள் மாறிவிட்டாள் என்று மீண்டும் எண்ணினார். ஆனால், அவரின் வீம்பு அவரின் இரத்தத்திற்கும் இருக்கும் என்று அவர் மறந்துவிட்டார். மகள் காணவில்லை என்றவுடனே அவருக்கு கிஷோருடன் அவள் சென்றுவிட்டாள் என்று முடிவானது.
ஏனென்றால், ஒரு லெட்டரையும் தான் ‘கிஷோருடன் தனக்கு திருமணம்’ என்றும்
‘என்னை மன்னித்துவிடுங்கள்’ என்றும் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தாள்
சின்மயி. அதை அவள் காணவில்லை என்று தேவி தேடியபோதே அவருக்குக்
கிடைத்துவிட்டது. அதன்பிறகு தான் வெளியில் வந்து அவர் அனைவரின் முன்
உளறியது.
சின்னமகளின் உறுதி வார்த்தை முடிந்த பின் கணவரை அழைத்து அவர் அதைக் காண்பித்த போதே, “தேவி இனி அவளுக்கும் நமக்கும் சம்மந்தமில்லை. நமக்கு சித்தாரா மட்டும்தான் பொண்ணு” என்று அந்தத் துண்டுக் காகிதத்தை
கிழித்துவிட்டு நிச்சிய ஏற்பாட்டை கவனிக்க ஆரம்பித்தார்.
உள்ளேயே நுழையாமல் வெளியிலேயே நின்றிருந்தவர்களைக் கண்ட ரவிக்குமார், “ரேணுகா! ஆரத்தி கரைச்சு எடுத்திட்டு வா” என்று பணிக்க, ஆரத்தியை எடுத்து வந்தவர் பெரிய மகனிற்கும் மருமகளிற்கும் சுற்றினார்.
ரேணுகாவிற்கும் குடும்ப விவகாரம் தெரியும். சிறிய வயதில் வெளியில் பார்க்கும்போது கிஷோர் ரவிக்குமாரிடம் பேசுபவன்தான். ரேணுகாவிற்கும்
கிஷோரைத் தெரியும். அவன் ஒருமுறை அவர்கள் ஊட்டியில் இருந்தபோது வீட்டிற்குக் கூட வந்திருந்தான். அது தெரிந்து கிஷோருடைய தாத்தா வந்து அவனை சிறிய வயதில் தரதரவென்று இழுத்துச் செல்ல அதிலிருந்து கிஷோரும்
யாரிடமும் பேசவில்லை. காரணம் தாத்தா இவர்களை ஏதாவது திட்டிவிடுவாரோ
என்று பயந்தான் அவன் சிறு வயதில்.
சின்மயி காணாமல் போனபோது கூட, கிஷோருடன் தான் திருமணம் செய்து
கொண்டாள் என்று சித்தார்த் அடுத்து இரு தினத்தில் சொல்லி அனைவருக்கும்
தெரிந்தது.
“உனக்கு எப்படி சித்து தெரியும்” என்று ரேணுகா சந்தேகமாக வினவ, “எங்க ஸ்கூல் சீனியர் எனக்கு கால் பண்ணாரு ம்மீ. அவர் கிஷோர் க்ளாஸ் மேட்தான். அவருதான் சொன்னாரு” என்று சமாளித்தான்.
“உள்ள வாங்க” என்று ரவிக்குமார் அழைக்க இருவரும் உள்ளே நுழைய இருவரையும் உட்கார வைத்தார் ரவிக்குமார்.
அங்கே ஐந்து நிமிடங்கள் அமைதியே நிலவியது. இரண்டு குடும்பம் மட்டும் அங்கிருக்க மற்றவர் எல்லோரும் மேலே சென்றனர். “கிஷோரைத் தான் விரும்பறதா இருந்தா முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல சின்மயி. நாங்களே உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருப்போம்ல” ரேணுகா பேச்சை ஆரம்பிக்க, சின்மயோ தந்தையைப் பார்த்தாள். அவர் மகளின் முகத்தைக் கூடப் பார்க்க விரும்பவில்லை.
“பதில் பேசுங்க கிஷோர். ஏன் இப்படிப் பண்ணிங்க?”, “தாத்தா இருந்தப்ப நீ
எங்ககிட்ட பேசலைன்னா அவரு பயம்னு சொல்லலாம். ஆனா, அவரு போன
அப்புறமாவது எங்ககிட்ட வந்திருக்கலாம்ல. நாங்க எல்லாம் இல்லியா உனக்கு” என்று ரவிக்குமார் கிஷோரிடம் கேட்க, கேசவனிற்கு தான் அவனை ‘அனாதை’ என்று சொன்னது நினைவு வந்தது.
“இல்ல சித்தப்பா. தாத்தா மேல இருந்த பயத்துல தான் பேசல சின்ன வயசுல.
பெரியவன் ஆன அப்புறம் தாத்தா வேற படிக்கும்போதே இறந்துட்டாரு. படிப்பு
அப்புறம் எஸ்டேட் தொழில்னு ஓடிட்டே இருந்துட்டேன். மத்தபடி உங்ககிட்ட
எல்லாம் பேசக்கூடாதுனு நினைக்கல” என்றான்.
“சரி. சின்மயி அப்பாக்கிட்டயாவது சொல்லி இருக்கலாம்ல” என்று ரவிக்குமார் கேட்க,
“பேசுனேன் சித்தப்பா. அவருக்கு புடிக்கல” என்று நிறுத்திக்கொண்டான். அவர்
பேசியதை அவன் வெளியே சொல்ல விரும்பவில்லை.
“அவன் சின்னப்பையன். உங்ககிட்ட இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்.
அவசரப்பட்டுட்டான். நாம கொஞ்சம் பெரியவங்க அதனால அவங்களை மன்னிச்சு ஏத்துக்கலாமே” என்று ரவிக்குமார் கேசவனிடம் பேச அவருக்கு ‘சுருக்’, ‘சுருக்’ என்றது. காரணம், கிஷோர் அவசரப்படவில்லை. அவரது பேச்சும்
பிடிவாதமும் தான் இருவரையும் அவசரப்பட வைத்துவிட்டது. இருந்தாலும் அவரது ஈகோ அவரை இறங்கவிடவில்லை. தன் பெண்ணை தன்னிடமிருந்து பிரித்துவிட்டான் என்ற கோபம் அவரை இறங்கவிடவில்லை. பெண்ணின் மேலும் கோபம் குறையவில்லை.
“என் வீட்டுக்கு வரட்டும் போகட்டும். என் மனைவி பேசுவா, பொண்ணு பேசுவா.
ஆனா, எனக்கு எப்பத் தோணுதோ அப்ப பேசிக்கறேன்” என்று அவர் முடிக்க,
“மச்சி, இந்த ஆளு லூசாடா” என்று ரமணா சித்தார்த்தின் காதைக் கடிக்க,
“பின்ன, இவளைப் பெத்தா லூசா தான் இருக்கும்” என்று அருகிலிருந்த சித்தாராவைப் பார்த்து சித்தார்த் சொல்ல, அது அவளுக்குக் கேட்டுவிட வெடுக்கெனத் திரும்பி அவனை ஒற்றைப் புருவத்தைத் தூக்கி முறைத்தாள்.
“அக்கா யாரு தங்கச்சி யாருனு வித்தியாசம் தெரியாத அறிவாளி சொல்றான். கேட்டுக்கங்க” சொல்லியவளை சித்தார்த்த முறைக்க,
“ஆமா, அதை மறந்துட்டேன் பார். உனக்கு எப்படி மச்சான் ஃபோட்டோல இருக்கிறது சித்தாரானு முன்னாடியே தெரியும்” என்று ரமணா சித்தார்த் காதில் கிசுகிசுக்க,
“சித்தார்த்! இங்கவா” என்று ரவிக்குமார் அழைக்க, “அட, சஸ்பெண்ஸ் ஓப்பன்
பண்ண விடமாட்டீறாங்களே” ரமணா முணுமுணுத்தான்.
நின்றிருந்த சித்தாராவிற்கோ உறுதி வார்த்தையின் போது சித்தார்த்திற்கும் தனக்கும் நடந்த உரையாடல் நினைவு வந்தது.
அவனைத் தள்ளிவிட்டவள், “உன் மேல சந்தேகமா இருக்கு எனக்கு. அக்கா எங்க?” என்று கேட்டாள்.
“உன் இல்லாத மூளையைக் குழப்பிக்காத” என்றவன் தனது கைகடிகாரத்தைப் ஒருமுறை பார்த்துவிட்டு, “இந்நேரம் கல்யாணம் முடிஞ்சிருக்கும்” என்றான்.
“உண்மையாவா?” என்று குதித்தவள், “உன்ன மாதிரி ஒருத்தன் என் அக்காக்கு
வரல. ஷீ இஸ் லக்கி” என்று அவள் தன்னை மறந்து பேச,
“பட், ஐ மேட் யூ அன்லக்கி” என்றான் புன்னகை மாறாமல்.
“நானும் இன்னொரு பையனை லவ் பண்றேனு சொன்னா” என்று சித்தாரா கேட்க அதிர்ந்து திரும்பினான் சித்தார்த். அவளின் முகம் கேலியில் இருக்க விளையாடுகிறாள் என்று புரிந்தவனுக்கு அப்போதுதான் நெஞ்சம் சமாதானம்
ஆனது.
“இவ்வளவு ஜெர்க் ஆகிறவனுக்கு எதுக்குடா வில்லன் டயலாக்லாம்”என்று அவள் கேலியாகக் கேட்க, “போடி இம்சை” என்று முணுமுணுத்தான்.
“ஆல் தி பெஸ்ட்” என்றாள் மொட்டையாக.
“இந்த ஆல் தி பெஸ்ட் எதுக்கு?” சித்தார்த் கையைக் கட்டிக்கொண்டு கேட்க,
“இந்த இம்சை அரசியை கல்யாணத்துக்கு அப்புறம் மேனேஜ் பண்ண” என்று
நக்கலாகக் கூறியவள், “வரட்டா பாஸ்” என்று அவனின் தோளில் கை வைத்து
ஆறுதல் போலத் தட்டியவள் தனது இடது புருவத்தைத் தூக்கிவிட்டு நகர்ந்தாள்.
சகோதரி கிஷோரையே கைப்பிடித்ததில் அவ்வளவு ஆனந்தம் அவளுக்கு.
சிறிதுதூரம் சென்றவள் திரும்ப சித்தார்த் இவளைப் பார்த்தபடி நிற்பதைக்
கண்டாள். ‘தேங்க்ஸ்’ என்று சைகை மொழியில் சொன்னவள் திரும்பி ஆனந்தமாக வீட்டை நோக்கிச் சென்றாள்.
அவள் தன் அக்காவிடம் கேட்ட கேள்வியும் ஞாபகம் வந்தது சித்தார்த்தைப் பற்றி
குறை கூறியபோது. “எப்படி நீ கிஷோர் மாமாவை லவ் பண்ணிட்டு அவனை
கல்யாணம் பண்ற” வெடுக்கென்று கேட்டவளிடம் தான், ‘நீ இதில் தலையிட
வேண்டாம்’ என்று சின்மயி சொன்னது. அதுவும் யாரிடமும் சித்தார்த் சொல்ல
வேண்டாம் என்று சொன்னதால்.
கடந்த ஒருவாரத்தில் சித்தார்த் தனது டீ தூளிற்காக பேக்டரியை லீஸிற்கு எடுத்து அடுத்த வேலைகளை கவனிக்கத் தொடங்கிவிட்டான் என்பதும் சித்தாராவின் காதிற்கு வந்தது. வேலைக்கு வர இருந்த சின்மயையும், “நீ அடிக்கடி வந்து கஷ்டப்பட வேண்டாம் ம்மா. டிசைன் ரெடி பண்ணிட்டு வா. இல்லைனாலும் இவன்கிட்ட குடுத்து விட்ரு” என்று ரவிக்குமார் சொல்லிவிட்டார்.
அனைத்து யோசனைகளிலும் இருந்து வெளியே வந்த சித்தாரா சகோதரி அருகில் இருப்பதைக் கவனித்தாள். “என்னடி என்ன கனவுல இருக்க?” என்று சின்மயி கேட்க,
“ஒண்ணுமில்லை க்கா” என்றவள், “அன்னிக்கு பேசுனதுக்கு ஸாரிக்கா” என்றாள். “தெரியாமா தானே பேசுன விடு” என்று தங்கையை அவள் செல்லம் கொஞ்சினாள்.
“சரிசரி விடு விடு… ஆனா இந்த மாமா எங்க… என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல
கல்யாணம் பண்ணும் போதும் சரி. இப்ப வரும்போதும் சரி” என்று சித்தாரா
குறைபட, “சித்துதான் டி வேணாம்னு சொல்லிட்டான்” என்றாள் சின்மயி.
“அவன் சொன்னா என்கிட்டையே மறைப்பியா நீ?” அவள் குறைபட, “சித்தார்த் எல்லாமே பக்காவா ப்ளான் பண்ணிதான் எங்களை அனுப்சது. இன்பாக்ட் இப்ப நாங்க வந்தது கூட சித்துனால தான். சித்துனால தான் எல்லாம் ஈசியா முடிஞ்சு நாம ஒண்ணு சேந்திருக்கோம். நீயே சொல்லு இங்க சித்து அப்பா எல்லாம் எதுவும்
பேசலைன்னா நம்ம அப்பா இவ்வளவு இறங்கி வந்திருப்பாருனு நினைக்கறியா.
அதுதான் சித்து எங்களை இங்க வரச் சொன்னானோனு தோணுது” என்று சின்மயி சொல்ல சித்தாராவின் பார்வை சித்தார்த்திடம் சென்றது. டீல்நிற பச்சை சட்டையில் க்ரீம் கலர் பாண்ட்டோடு இன் செய்து ட்ரிம் செய்த தாடி மீசையுடன்
எடுப்பாக இருந்த முகவாயுடன் கம்பீரமாக, அதே சமயம் இறுக்கமாக இல்லாமல்
அனைவரிடமும் ஜோவியலாக இருக்கும் அவனைக் கண்டு ஒருநொடி இதயம்
விட்டுத் துடித்தது தான் அவளிற்கு.
தன்னை யாரும் காணும் முன் அதை அவள் சரி செய்துகொள்ள வர்ஷினி அதைக் கண்டாள். அவள் முகமோ கூம்பியது வாட்டத்தில்.
சொந்தங்கள் கீழே வர இளவட்டங்கள் தனியே பேச மேலே சென்றனர். நவீன்,
நந்திதா, வர்ஷினி, ரமணா, சித்தார்த், சித்தாரா, அருண், அகல்யா, கிஷோர்,
சின்மயி எல்லோரும் மேலே கூடியிருந்தனர்.
“ஏன் ஒரு மாதிரி இருக்கு” சின்மயைப் பார்த்து கிஷோரிடம் சித்தார்த் கேட்க,
“அவங்க அப்பா பேசலைல. அதான் ஒருமாதிரி இருக்கா” என்றான். கிஷோர்
சொல்ல அவனின் சங்கடமும் சித்தார்த்திற்குப் புரிந்தது.
“ஒரு ட்ரிப் போகலாமா?” என்று வினவினான் சித்தார்த். அவன் ‘ட்ரிப்’ என்றதும் அந்தப் படையே குஷியாக நிமிர்ந்தது.
“எப்போ?” ,”எங்கே?”, “எப்படி?” என்று ஒவ்வொருவராகக் கேட்க, “வெயிட் வெயிட்” என்றவன்,
“நெக்ஸ்ட் வீக். ஊட்டி” என்றான் சித்தார்த்.
“ஆமாமா… ஊட்டி போகாத இடம் தானே. நான்லாம் மேப்ல மட்டும்தான் பாத்திருக்கேன்” என்று ரமணா நக்கலடிக்க,
“டேய். நான் சொல்றது ட்ரக்கிங்” என்றான் சித்தார்த். சித்தார்த் பத்து வயதில்
இருந்தே தெரிந்த டூரிஸ்ட் கைடுடன் உள்ளே சென்றிருக்கிறான். ரமணாவை
அழைத்துக் கொண்டும் நான்கு வருடத்திற்கு முன் அவனும் ரமணாவும் மட்டும் சென்று வந்திருந்தனர்.
“வாவ். அந்த ஸ்பாட்டா. ஹே காய்ஸ் இனி சித்தார்த்தே ப்ளான் சேன்ஞ் பண்ணாலும் நான் பண்ணமாட்டேன்” என்று கையைத் தூக்க அனைவரும் தலையை ஆட்டினர்.
“அவ்வளவு நல்ல ப்ளேஸா?” சித்தாரா வினவ,
“அது மெஸ்மரைஸிங் ப்ளேஸ். அங்க போன திரும்பி வரவே மனசு இருக்காது”
ரமணா அந்த இடத்தின் ஞாபகத்தில் சொல்ல, “அப்போ டன்” என்றாள் குஷியாக.
அப்போது அவள் அறியவில்லை, அங்கே நடக்கப்போவதை அவள் வாழ்நாள் முழுதும் மறக்கப்போவதில்லை என்று.